Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை உயர்நீதிமன்றம், பெண் வழக்கறிஞர் வழக்கு, அந்தரங்க வீடியோ வெளியாவை தடுக்கும் வழிகள்

பட மூலாதாரம், GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • விஜயானந்த் ஆறுமுகம்

  • பிபிசி தமிழ்

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இணையதளத்தில் தங்களின் அந்தரங்க புகைப்படம் அல்லது வீடியோ காட்சிகள் வெளியானால், அதை பாதிக்கப்பட்டவர்களே நீக்கும் வகையில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய அரசு வகுத்து வருவதாக, ஜூலை 22 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது அந்தரங்க படங்களை சுமார் 70க்கும் மேற்பட்ட இணையதளங்களில் முன்னாள் காதலர் பரப்பியதாக பெண் வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணையின்போது மத்திய அரசின் வழக்கறிஞர் மேற்கண்ட தகவலைக் கூறியிருந்தார்.

சுய விருப்பமின்றி இணையதளங்களில் அந்தரங்கப் படங்கள் வெளியாகும்போது என்ன செய்ய வேண்டும்? அதை நீக்கும் வழிகள் என்ன?

பெண் வழக்கறிஞரின் புகார்

சென்னையைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் ஒருவர், கடந்த ஜனவரி மாதம் இணைய குற்றப் பிரிவில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.

அந்த மனுவில், "கல்லூரியில் படித்தபோது ஒருவரைக் காதலித்தேன். அவருடன் தனிமையில் இருந்தபோது வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்துள்ளார். தற்போது அவருடன் எந்தவித தொடர்பும் இல்லை. ஆனால், தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை சுமார் 70க்கும் மேற்பட்ட இணையதளங்களில் அவர் பரப்பிவிட்டுள்ளார்" எனக் கூறியிருந்தார்.

அந்தரங்க வீடியோ பரவினால் என்ன செய்ய வேண்டும்? பெண் வழக்கறிஞர் வழக்கு உணர்த்துவது என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும், தனது அந்தரங்க வீடியோ காட்சிகளை இணையதளங்களில் இருந்து உடனே அகற்றுமாறும் அவர் கோரிக்கை வைத்திருந்தார்.

"இணைய குற்றப் பிரிவில் பாதிக்கப்பட்ட பெண் புகார் மனுவை அளித்துள்ளார். அதன் பேரில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர். ஆனால், வீடியோ காட்சிகளை நீக்குவதற்கு காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" எனக் கூறுகிறார், பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக வாதாடிய மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார்.

"இந்தப் படங்களை என்சிஐஐ (Non consensual intimate images) என்று சொல்வார்கள். இவற்றை நீக்குவதற்கு மத்திய அரசுக்கு உத்தரவிடுமாறு கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம்" எனவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

பெண் வழக்கறிஞர் வழக்கில் என்ன நடந்தது?

ஜூலை 9 அன்று இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, பெண் வழக்கறிஞரின் அந்தரங்க வீடியோவை 48 மணிநேரத்தில் நீக்குமாறு மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இதுபோன்ற வழக்குகளில் காவல் துறைக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மனுதாரர் வழக்கறிஞராக இருப்பதால் உதவ முடிந்ததாகக் கூறிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், "இவ்வாறு போராட முடியாத நபர்களின் நிலையை யோசிக்கவே முடியவில்லை" எனக் கூறினார்.

மேலும், "தனிநபரின் அடிப்படை உரிமையான கண்ணியத்தை உறுதி செய்து அரசு மற்றும் நீதிமன்றங்களின் கடமை" எனவும் அவர் குறிப்பிட்டதோடு, இதுதொடர்பான அறிக்கையை ஜூலை 14 அன்று மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

சென்னை உயர்நீதிமன்றம், பெண் வழக்கறிஞர் வழக்கு, அந்தரங்க வீடியோ வெளியாவை தடுக்கும் வழிகள்

பட மூலாதாரம், GETTY IMAGES

வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வீடியோ இடம்பெற்றுள்ள அனைத்து இணையதளங்களையும் முடக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக இந்திய அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் குமரகுரு கூறினார்.

இதை ஏற்க மறுத்த மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார், "39 இணையதளங்களில் அந்த வீடியோ பரவி வருகிறது. அதைத் தடுப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வாதிட்டார்.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், "தனிப்பட்ட வீடியோவை அகற்றுவதற்கு எங்கு புகார் அளிக்க வேண்டும், அவ்வாறு புகார் அளித்தால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தொடர்பாக மத்திய அரசு விரிவாக மனு தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டார்.

ஜூலை 22ஆம் தேதி மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்கறிஞர் அபுடுகுமார் வாதிடும்போது, "தற்போது ஆறு இணையதளங்களில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தனிப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளதால் அதை நீக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறினார்.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமரகுரு, "இணைய குற்றங்களுக்கு ஆளாகும் பெண்கள் நேரடியாக தங்கள் தனிப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்களை அகற்றுவதற்கு எளிதாக அணுகும் வகையில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை" மத்திய அரசு வகுத்து வருவதாகக் கூறினார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வழிகாட்டு நெறிமுறைகளைத் தாக்கல் செய்யும் வகையில் ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

அந்தரங்க வீடியோ வெளியானால் என்ன செய்ய வேண்டும்?

சென்னை உயர்நீதிமன்றம், பெண் வழக்கறிஞர் வழக்கு, அந்தரங்க வீடியோ வெளியாவை தடுக்கும் வழிகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பெண் வழக்கறிஞரின் வீடியோவை நீக்குவதற்கு மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் முயற்சிகளை மேற்கொண்டது.

"ஆனால், அவை மீண்டும் பரவிக் கொண்டே இருந்தன" என்று கூறிய மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார், "நீக்கப்பட்டுவிட்டதாகக் கூறப்பட்ட பிறகும் சுமார் 30க்கும் மேற்பட்ட இணையதளங்களில் அவை பரவியிருந்தன" என்றார்.

இந்த நிலையில், இணையதளங்களில் ஆபாசமான படங்கள் வெளியாகிவிட்டால் உடனே மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சைபர் தொழில்நுட்ப வல்லுநரும் வழக்கறிஞருமான கார்த்திகேயனிடம் பிபிசி தமிழ் பேசியது.

"ஆடையின்றி இருக்கும் படங்களை இயல்பாகவே சமூக ஊடகங்கள் நிராகரித்துவிடுகின்றன. இதுபோன்ற தளங்களில் குறைதீர் மையம் செயல்படுகிறது. அங்கு புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால், நேரடியாக போன் மூலமாகத் தொடர்பு கொண்டு புகார் அளிக்கும் வாய்ப்புகள் இல்லை" எனக் கூறுகிறார்.

சமூக ஊடகங்களுக்கு 2021ஆம் ஆண்டில் இருந்து இந்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை (Intermediary Guidelines and Digital Media Ethics Code Rules, 2021) வகுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000, பிரிவு 87 (1)(2)இல் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, விதிகள் வகுக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

"இதன்படி ஒவ்வொரு சமூக ஊடக தளத்திலும் குறைதீர் மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு சென்று அதன் உள்ளடக்கம் மற்றும் தவறான படங்கள் குறித்துப் புகார் அளித்தால் உடனே நீக்கப்பட்டுவிடுகிறது" என்று விளக்கினார், கார்த்திகேயன்.

"அது மட்டுமின்றி, தனது தனிப்பட்ட படங்கள் வெளியாகி யாரேனும் பாதிக்கப்பட்டால் https://cybercrime.gov.in/ என்ற தளத்தில் புகார் அளிக்கலாம். அங்கு பெயரைக் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. அந்தரகப் படங்கள் வெளியிடப்பட்ட இணையதள முகவரியைப் பதிவிட்டுப் புகார் தெரிவித்தால் போதும்" எனத் தெரிவித்தார்.

சென்னை உயர்நீதிமன்றம், பெண் வழக்கறிஞர் வழக்கு, அந்தரங்க வீடியோ வெளியாவை தடுக்கும் வழிகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இவற்றோடு, இணையவழி குற்றங்களுக்கான 1930 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு புகார் அளிக்கும் வசதியை இந்திய அரசு ஏற்படுத்தியுள்ளது.

"இணைய வழியில் நடக்கும் குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் கூறினால் தொடர்புடைய இணையதளங்களிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பார்கள்" எனவும் கார்த்திகேயன் குறிப்பிட்டார்.

அதோடு, ஆபாச இணையதளங்களில் வீடியோ வெளியானால், அந்தத் தளங்களின் ஈமெயில் முகவரிக்கு புகார் அனுப்பினால் உடனே அதை நீக்கிவிடுவதாகக் கூறும் கார்த்திகேயன், "அத்தகைய நிறுவனங்களில் சில, வழிகாட்டு நெறிமுறைகளுடன் இயங்கி வருவதால் தனிநபர்களின் கோரிக்கைகளை ஏற்று நீக்கிவிடுகின்றன" என்றார்.

தாமதம் ஆவதைத் தவிர்க்க முடியுமா?

"பெண்கள் தொடர்பான தவறான படங்கள் வெளியானதாக புகார் வந்தால் 24 மணிநேரத்திற்குள் அவற்றை நீக்க வேண்டும் என 2021ஆம் ஆண்டு வெளியான இந்திய அரசின் வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டது. ஆனால், அவ்வாறு நீக்கப்படுவதில்லை" எனக் கூறுகிறார் கார்த்திகேயன்.

"இணைய குற்றப் பிரிவில் புகார் அளிக்கும்போது அது தேசிய குற்ற ஆவணக் காப்பகத்திற்குச் செல்கிறது. அவர்கள் தொடர்புடைய தளங்களுக்கு இமெயில் மூலம் தெரிவிக்கின்றனர். இதற்கு சில நாட்கள் தேவைப்படுவதால், பாதிக்கப்பட்டவருக்கு அதிக பாதிப்புகள் ஏற்படுகின்றன."

ஒருவேளை, ஈமெயில் மூலம் புகார் தெரிவித்தும் இணையதளங்களில் இருந்து படங்களை நீக்காவிட்டால் காவல்துறையைத் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். "அதன் பேரில் தொடர்புடைய இணையதளங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்."

இந்த நடவடிக்கைகளில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு குறித்தும் விளக்கினார் கார்த்திகேயன்.

"ஆபாசப் படங்களைப் பதிவேற்றுவதைத் தடுக்கும் முயற்சியில் செயற்கை நுண்ணறிவை பெரும்பாலான நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. அதுவும் ஆடையின்றி இருப்பது போன்ற படங்கள் மற்றும் காணொளிகளை மட்டுமே நீக்கும் வகையில் அவை வடிவமைக்கப்பட்டுள்ளன."

சென்னை உயர்நீதிமன்றம், பெண் வழக்கறிஞர் வழக்கு, அந்தரங்க வீடியோ வெளியாவை தடுக்கும் வழிகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதுதொடர்பாக பிபிசி தமிழிடம் அடையாளத்தை வெளிப்படுத்தக் கூடாது என்ற நிபந்தனையுடன் காவல்துறை பெண் அதிகாரி ஒருவர் பேசினார். அவர், "இணைய குற்றங்களுக்கான 1930 என்ற எண்ணில் புகார் அளித்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஒரு சில காணொளிகளோ, படங்களோ இருந்தால் அதை நீக்குவதில் சிரமம் ஏற்படுவதில்லை" என்று தெரிவித்தார்.

அவரது கூற்றுப்படி, "அதிக எண்ணிக்கையில் படங்கள் இருந்தால் அவை எங்கிருந்து வருகின்றன என்பதைக் கண்டறிவதில் சிரமம் ஏற்படுகிறது. அதற்கான நிபுணர்கள் காவல் துறையில் போதிய அளவுக்கு இல்லை."

இந்தக் காரணத்தால் பல நேரங்களில் தனியார் சைபர் நிபுணர்களை நாட வேண்டிய நிலை உள்ளதாகக் கூறும் அந்தப் பெண் அதிகாரி, "ஒருவேளை தனிப்பட்ட படங்களால் யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு இணைய குற்றப் பிரிவு மூலமாக போதிய உதவிகள் வழங்கப்படுகின்றன" எனவும் தெரிவித்தார்.

இதுபோன்ற புகார்களை எதிர்காலத்தில் எவ்வாறு கையாள்வது, ஒருவரின் சம்மதமின்றி படங்கள், வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டால் பாதிக்கப்பட்டவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வகுத்து வருவதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"தனிப்பட்ட படங்களால் பாதிக்கப்படுவோருக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்படும்போது, தாமதமின்றி தீர்வுகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன" என்கிறார் மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார்.

சென்னை பெண் வழக்கறிஞர் அளித்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் அவரது பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தது.

வழக்கு விசாரணையின்போது இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், "பெயரைக் குறிப்பிட்டது மட்டுமின்றி, குற்றம் சுமத்தப்பட்ட நபரை அடையாளம் காட்டுவதற்காக ஏழு ஆண் போலீசார் முன்னிலையில் விசாரணை நடத்தியது கண்டனத்துக்குரியது" என்று தெரிவித்தார்.

"இதுபோன்ற சம்பவங்கள் ஏற்கெனவே உடல்ரீதியாக நடந்த பாதிப்பைவிட மனரீதியான கூடுதல் பாதிப்பையே பாதிக்கப்பட்ட பெண்ணுக்குத் தரும்" எனவும் நீதிபதி தெரிவித்தார். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை ஆவணங்களில் இருந்து நீக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

பெண்ணின் விவரங்கள் வெளியானது தொடர்பாக, நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா சில தகவல்களைத் தெரிவித்தார்.

அவர் வாதிடும்போது, "பாலியல் வன்கொடுமை, போக்சோ ஆகிய வழக்குகள் மட்டுமின்றி பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான வழக்குகளிலும் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை மறைத்து ஆவணங்களைத் தாக்கல் செய்வதற்கு உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்டவரின் பெயரை ஆவணங்களில் கூறலாமா?

பெண் வழக்கறிஞரின் பெயர் வழக்கின் அனைத்து ஆவணங்களில் இருந்தும் நீக்கப்பட்டுவிட்டதாக அசன் முகமது ஜின்னா கூறினார். இந்த வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்துள்ளார்.

"குழந்தைகள், பெண்கள் வன்கொடுமை தொடர்பான வழக்குகளில்தான் முதல் தகவல் அறிக்கையில் பெயர் போடக்கூடாது என காவல்துறை நினைக்கிறது. ஆனால், இதுபோன்ற சம்பவங்களிலும் பாதிக்கப்பட்டவர்களின் பெயரை கூறக்கூடாது என நீதிமன்றம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது" என்கிறார், மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார்.

பெண் வழக்கறிஞர் அளித்த புகாரின்பேரில் குற்றம் சுமத்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறும் அபுடுகுமார், "ஒருவரின் விருப்பமின்றி அவரது அந்தரங்க படங்களை பதிவேற்றினால் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின்படி 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்புகள் உள்ளன" எனவும் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c0m8mvplx94o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.