Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கதை - 185 / "தாத்தா கந்தையா தில்லையுடன் பேரன் இசை, சொர்க்கத்திற்கு ஒரு கோடை விடுமுறை" / பாகம் 01

விடுமுறை நாட்களில் தாத்தாவும், பேரனும் ஒன்றாக பொழுதைக் கழிப்பது உண்மையில் மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கும். அதற்காக நான் மூத்த மகளிடம் விடுதலைக்கு வருவது வழக்கம். ஒன்றாக விளையாடுவது, கதை சொல்வது மற்றும் பல சின்ன சின்ன செயல்களில் பேரப்பிள்ளைகளுடன் ஈடுபடுவேன். என் பாடசாலை மற்றும் பல்கலைக்கழகப் படிப்பு இலங்கை என்பதால், இங்கு பாடமுறை வித்தியாசம் என்பதால், அதை பெற்றோர்களே பார்த்துக்கொள்வார்கள்

அப்படி ஒரு விடுமுறையில், கனடா, ஒட்டாவாவில் ஒரு சூடான ஆகஸ்ட் முன் இரவுப் பொழுது, மகளுக்கும் பேரனுக்கும் பெரிய வாக்குவாதம் வந்து விட்டது. மகள் தொலைபேசியில் முக்கிய வேலை விடயமாக கதைக்கும் பொழுது, பேரன் பெரிய சத்தம் போடும் ஒரு விளையாட்டு சிங்கத்தை, தாயின் பக்கத்தில் இருந்து விளையாடிக் கொண்டு இருந்தான். மகள் கொஞ்சம் தள்ளிப்போய் விளையாடு என்று பலமுறை சொல்லிப் பார்த்தாள். பேரன் 'இசை' கேட்பதாக இல்லை. கோபம் கொண்ட மகள், அதை இழுத்துப்பறித்துச் சென்று எங்கோ ஒளித்துவைத்தாள். ஆனால் பேரன் இன்னும் பெரிதாக சத்தம் போட்டு அழுது புரண்டான்.

உடனே நான் ஓடிச் சென்று அவனைத் தூக்கி கண்ணீரைத் துடைத்து, கொஞ்சம் ஆறுதல் படுத்தினேன். சும்மா அவனுக்காக எனது மகளைக் கடிந்தேன். அதனால் கொஞ்சம் அழுகையை நிறுத்திய இசை, 'தாத்தா, அம்மாவை ஹெல் [நரகம் Hell] இல் கொண்டு போய் போடுங்க என்று பிடிவாதமாக நின்றான். ஒருவாறு அவனுக்கு பிடித்தமான சில சிற்றுண்டிகளைக் கொடுத்து சமாதானம் ஆக்க முயற்சித்தேன். பின் ஆசைவார்த்தை கூறி, அவனை என் அறைக்குள் தூக்கிச் சென்று, சாய்வு நாற்காலியில், என் மடியில் இருத்தி, அவனுக்கு பிடித்த பெப்பா பன்றி [peppa pig] கதை விடியோவை சத்தம் இல்லாமல் போட்டேன். பின் கொஞ்ச நேரத்தால் அவனுக்கு பிடித்த "தாலாட்டு" ஒன்று மெதுவாகப் பாடினேன்.

"சின்ன பூவே சிங்காரப் பூவே

சிஞ்சிதம் காதில் தேனாய் விழ

சித்திரம் பேசும் கண்ணும் ஓய

சிந்தை நிறுத்தி இமைகள் மூடாயோ?"

"வடந்தை உன்னை தழுவாது இருக்க

வண்ண மலர்களால் தூளி கட்டி

வஞ்சகர் கண் படாது இருக்க

வட்ட பொட்டிட்டு விழிகள் மூடாயோ ?"

"பச்சை இலுப்பை அளவாய் வெட்டி

பவளக்கால் தொட்டில் அழகாய் கட்டி

படுக்க இதமாய் கம்பளி விரித்து

பல்லாண்டு வாழ்வாய் நீ உறங்காயோ ?"

"யாழ் எடுத்து ராவணன் மீட்க

யாவரும் ஒன்றுகூடிக் கானம் கேட்க

யானை துதிக்கையால் ஏணை ஆட்ட

யாழ் மொழியானே கண் உறங்காயோ?"

இசை பின் மடியை விட்டு இறங்கி, ஆனால், சாய்வு நாற்காலியிலேயே அருகில் இருந்து தாலாட்டை ரசித்துக்க்கொண்டு இருந்தான். அவனுக்கு இப்ப நான்கு அகவை. முந்தைய நாள், என் அறையில் அவன் விட்டுச்சென்ற பொம்மை ரயில்களால் அறை நிறைந்திருந்தது. ஆனால் இருள் வானத்தில் பரவியபோது, ஏதோ ஒரு மாயாஜாலம் கிளர்ந்தெழுந்தது.

நான் சோர்வாலும், இன்று நேரத்துடன் இரவு உணவு எடுத்து, பசி நீங்கியதால் நாற்காலியில் தாராளமாக இளைப்பாறிக்கொண்டு இருந்தேன். இசை அந்த ரயில்களை பொறுக்கி எடுத்து, அதை விளையாடிக்கொண்டு, அமைதியாக படுத்துக்கொண்டு இருந்தான். திடீரென ஒரு தங்க ஒளி எங்கள் இருவரையும் சூழ்ந்து கொண்டது. நிலவொளியின் இறகுகளுடன் கூடிய அன்னப்பறவைகளால் இழுக்கப்பட்ட, மேகங்களின் தேர் வானத்திலிருந்து இறங்கியது. ஒரு மென்மையான குரல் எதிரொலித்தது, "வாங்க 'கந்தையா தில்லை', வாங்க 'இசை', வேறு எதிலும் இல்லாத ஒரு கோடை விடுமுறை உங்களுக்கு காத்திருக்கிறது." என்று மெதுவாகக் கூறியது.

வரம் கொடுக்கும் தேவதைகள்

வந்த போது குழப்பினேன்

வந்த போது அவசரப்பட்டு

வாழ்க்கையெல்லாம் ஏங்கினேன்!

கரம் பிடிக்க ஆசைகொண்டு

கள்ளமாக அவளைத் தொட்டேன்

கருத்த விழிகளால் சுட்டுஎரித்து

பருத்த மார்பாள் பறந்துசென்றாள்!

நான் அண்மையில் எழுதிய பாடல் வரிகளை முணுமுணுத்துக்கொண்டு , அவசரம் அவசரமாக, ஒரு அகல விளிம்பு கொண்ட தொப்பி (குல்லாய்) ஒன்றை எடுத்து, தலையில் அணிந்து, கண்ணாடியை பார்த்து அதைச் சரிபண்ணிவிட்டு, பேரனின் ஒன்று இரண்டு விளையாட்டு பொம்மைகளையும் எடுத்துக் கொண்டு சில வினாடியில் அதில் இருவரும் ஏறினோம். என்ன வேகம்! ஒரு நொடியில், அவை நட்சத்திரங்களைத் தாண்டி பறந்து கொண்டிருந்தன. சப்தரிசி மண்டலத்தின் ஒரு பகுதியான விண்மீன் குழுவான, வசிட்டரும் அருந்ததியும் (Mizar and Alcor) என் கண்ணில் தென்பட்டது. புராதன காலத்தில் பூமியில் வாழ்ந்ததாக கூறப்படும் மிகச் சிறந்த பிரம்மரிசிகள் (முனிவர்கள்) ஏழு பேரும் (சப்த ஏழு) வானில் நட்சத்திரங்களாக ஒளி வீசினார்கள். அவர்களின் அருகில் தான் இந்த இருவரையும் கண்டேன். அவர்கள் எப்போதும் அங்கே, இத்தனை ஆண்டுகள் ஆகியும் இணைந்து இருப்பதைக் கண்டு ஆச்சரியப் பட்டேன். கொஞ்சம் அருந்ததியுடன், 'ஏன் என் திருமணத்தின் போது, உன்னைக் காணமுடியவில்லை என்று கேட்ப்போம் எனறால்', அது முடியவில்லை!. எமது வானூர்த்தி வேகமாகப் பறந்துவிட்டது!

பிரகாசிக்கும் ஒரு தலையுடன் துடைப்பம் போல ஒரு நீண்ட வாலுமாக வானில் வலம் வரும், கண்ணுக்கு விருந்தளிக்கும் சில வால் நட்சத்திரங்கள்களைத் தாண்டி சென்றோம். இசை அவ்வாற்றின் ஒன்றின் வாலை சிறிது நேரம் பிடித்து விளையாடினான். ஆனால் அது நழுவிப் போய்விட்டது. நாம் தரையிறங்கியபோது, அங்கு எல்லாம் மின்னும் ஒளியால் பிரகாசித்துக் கொண்டு இருந்தது. பூக்கும் தாமரைகளின் தோட்டங்கள், தேன் மற்றும் பால் ஆறுகள், மூடுபனி போல மிதந்து வரும் காதுக்கினிய சங்கீதம் எம்மை வரவேற்றது.

அந்த விண்ணுலகத்தில், நாம் எம் பாதங்களை தரையில் வைக்கும் பொழுது, என் வாய் என்னை அறியாமலே;

மண்ணுலகும் விண்ணுலகும் உம்மதே ஆட்சி

மலையரையன் பொற்பாவை சிறுவனையும் தேறேன்

எண்ணிலி உண் பெருவயிறன் கணபதி ஒன்று

அறியான் எம்பெருமான் இது தகவோ இயம்பி அருள் செய்யீர்

திண்ணென என்னுடல் விருத்தி தாரீரே ஆகில்

திருமேனி வருந்தவே வளைக்கின்றேன் நாளைக்

கண்ணறையன் கொடும்பாடன் என்று உரைக்க

வேண்டா கடல் நாகைக் காரோணம் மேவி இருந்தீரே

என்ற தேவாரத்தை தானாகப் பாடியது. கணவனின் கருத்துக்கு எதிராக செயல்படாத மனைவி உமையம்மை, சிறுவன் குமரன், உண்பதே தனது பிரதான வேலையாக கொண்டுள்ள கணபதி இவர்கள் வேண்டாம். விண்ணும் மண்ணும் ஆட்சி செய்து அனைத்து செல்வங்களும் உடையவராக விளங்கும் பெருமானே நீயே வேண்டும் என்று நான் பாட, அதற்கு ஏற்றவாறு இசை, தாளம் போட்டு ஆடி ஆடி வந்தான். அவனின் ஆட்டம், சிவபெருமானை வாசலுக்கே கொண்டு வந்தது. அவரது இமயமலை முடியில் இருந்து கங்கை பாய்ந்தது, அவரது கண்கள் அமைதியாலும் சக்தியாலும் பிரகாசித்தன. அவருக்கு அருகில் பார்வதி தேவி, அரவணைப்பு, அன்பு மற்றும் தாய்மை பாசத்தால் பிரகாசித்தார். அவர்களிடமிருந்து வெகு தொலைவில், ஒரு பெரிய போதி மரத்தின் நிழலில், கௌதம புத்தர் அமைதியாகவும் புன்னகையுடனும் அமர்ந்திருந்தார்.

கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்

பாகம் 02 தொடரும்

துளி/DROP: 1832 [கதை - 185 / "தாத்தா கந்தையா தில்லையுடன் பேரன் இசை, சொர்க்கத்திற்கு ஒரு கோடை விடுமுறை" / பாகம் 01

https://www.facebook.com/groups/978753388866632/posts/30751677411147503/?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதை - 185 / "தாத்தா கந்தையா தில்லையுடன் பேரன் இசை, சொர்க்கத்திற்கு ஒரு கோடை விடுமுறை" / பாகம் 02

"ஆ, கந்தையா தில்லை! நீங்கள் உங்கள் குட்டிப் பேரன் இசையுடன் வந்திருக்கிறீர்கள்," என்று சிவன் கூறினார். "வா, வா - காலை உணவு தயாராக உள்ளது", என அன்பாக வரவேற்றார்.

பின் சிவா, 'இசை'யை பார்த்து என்னை ஒருவன் பதினாறு அகவையில், 'பித்தா பிறைசூடி பெருமானே' என்று பித்தனே, பிறையைக் கண்ணியாகச் சூடியவனே என்று திட்டினான், நியோ அவனின் வர்க்கமூல அகவையில் தாளம் காட்டும் நடையுடன் புகழ்ந்து வருகிறாய்' என்று மெச்சினார்.

நாம் இருவரும் ஒரு தெய்வீக கொற்றக் குடையின் கீழ் அமர்ந்தோம். தட்டுகள் தங்க நிறத்தில் இருந்தன, உணவு வானளாவியதாக இருந்தது - மேகங்களைப் போல மென்மையான இட்லிகள், நெய் சொட்டும் பொங்கல், பூமியில் உள்ளதை விட இனிமையான தெய்வீக மாம்பழங்கள் அங்கு எமக்கு இருந்தன. தியானத்தை முடித்துக் கொண்டு அங்கு வந்த புத்தர் எமக்கு மல்லிகை தேநீர் வழங்கினார். பார்வதி இசைக்கு ஒரு பிரகாசமான இனிப்பு லட்டுவை வழங்கினார். அது 'இசை'யை மகிழ்ச்சியுடன் சிரிக்க வைத்தது.

காலை உணவுக்குப் பிறகு, நான் , "சுவாமி, நாங்கள் சில முக்கிய கேள்விகளுடன் வந்துள்ளோம். எங்கள் அன்பான நிலமான இலங்கையில் என்ன நடக்கிறது?" என்று ஆரம்பித்தேன்.

சிவன் பெருமூச்சு விட்டார், அவரது மூன்றாவது கண் மெதுவாக மினுமினுத்தது. "கந்தையா தில்லை, மண் நினைவால் அழுகிறது. போரின் வலி, அதிகார பேராசை, உண்மையின் மௌனம் - அது இன்னும் எதிரொலிக்கிறது." சுருக்கமாக கூறினார்! ஆனால் எனக்கு, அந்த விளக்கம் சற்றும் திருப்தி அளிக்கவில்லை, என் வாய் 'வாடா வாடா, சுடலை மாடா, அங்கிட்டும் இங்கிட்டும் பார்க்காம எங்கிட்டும் நிற்காம, என் கவலை தீர்க்க உடனே நீ ஓடி வாடா' என்று முணுமுணுத்துக்கொண்டு இருந்தது.

சிவனுக்கு அது கேட்டிருக்க வேண்டும். சிவன் தொடர்ந்தார் 'செம்மணியில் செய்யப்பட்டது வெறும் கொலை அல்ல - அது வாழ்க்கையை, தர்மத்தையே அவமதிப்பதாகும். பெண்கள், குழந்தைகள், மண்ணின் மைந்தர்கள் பாதுகாப்பதாக சத்தியம் செய்தவர்களால் சாம்பலாக மாற்றப்பட்டனர். ஆனாலும் நிலம் நினைவில் கொள்கிறது - சாட்சியமளிக்க மண் இன்று செம்மணியில் எழுகிறது.' என்றார்!

'யாழ்ப்பாண நூலகத்தைப் பற்றியும் நான் கூறவேண்டும். சரஸ்வதி வீணையுடன் முன்னுக்கு இருந்தாள், ஆனால் கண்மூடி இருந்துவிட்டாளே?' ஒரு பெருமூச்சு விட்டார். 'அறிவுக் கோயில் எரிமலையாக மாறியது - காலத்தால் அல்ல, வெறுப்பால். அந்த நெருப்பு புத்தகங்களை மட்டுமல்ல, ஒரு மக்களின் ஆன்மாவையும் எரித்தது. புத்தகங்களை எரிப்பவர்கள் நாகரிகங்களை எரிக்கிறார்கள்.' என்று கோபத்துடன் கூறினார்.

வானரத்தின் வழிவந்த வன்முறையாளர்

வளந்தரு நூலகத்தை தீமூட்டி எரித்தார்!

கானகத்தின் அமைதியில் தியானித்தவன்

கருத்தபுகையில் சத்தியம் இழந்தான்!

போதிமரமும் கொதித்து எழ, புத்தனும்

போதனையைக் கைவிட்டு சிலையானான்!

என்னை ஏறிட்டு பார்த்தார். பின் இசையை கட்டித் தழுவியபடி,

'தமிழ் கண்ணீரில் நனைந்த நிலத்தில் என் சகோதரன் புத்தரின் சிலையை வலுக்கட்டாயமாக எழுப்புவது வழிபாடு அல்ல - அது அவமானம். சிவன் என்ற நான், மதம் என்ற போர்வையில் வெற்றியை ஆசீர்வதிப்பதில்லை. கீழே புதைக்கப்பட்ட எலும்புகளிலிருந்து நீதி முளைக்கும் வரை, இரத்தம் தோய்ந்த மண்ணில் தர்மம் மலர முடியாது. அதுவரை, இந்த நிலம் தூங்காது.' என்று அமைதியாக கூறினார்.

பின் 'லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவை உண்மை கூற விரைவில் அனுப்புவார் என் நண்பர் புத்தர்' என்றார்.

பார்வதி கருணையுடன் கூறினார், "ஆனால் நம்பிக்கை சிறிய இதயங்களில் வாழ்கிறது. இசை போன்ற குழந்தைகள் இரக்கத்தின் ஜோதியை சுமப்பார்கள்." என்றார்.

பக்கத்தில் இந்திரன் [Sakka, king of gods], விஸ்ணு [Upulvan / උපුල්වන් ‍දෙවියෝ] சூழ நின்ற புத்தர் புன்னகைத்தார், "துன்பம் இருக்கிறது, ஆனால் அதை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பாதையும் இருக்கிறது. இப்போதும் கூட, சாம்பலுக்கு மத்தியில், கருணையின் விதைகள் வளர்ந்து வருகின்றன." புத்தர் தொடர்ந்தார்,

"நான் அஹிம்சையைக் கற்றுக் கொடுத்தேன் - வெறும் செயலில் அல்ல, சிந்தனையிலும். செம்மணியில், இறந்தவர்களின் மௌனம், பேச்சை விட சத்தமாக அழுகிறது. அப்பாவிகள் படுகொலை செய்யப்பட்டு ரகசியமாக புதைக்கப்படும்போது, தேசம் பூமியை மட்டுமல்ல, அதன் சொந்த மனசாட்சியையும் தோண்டி எடுக்கிறது." என்று ஒரு பெருமூச்சு விட்டார்.

"என்னை சிலையாகி எங்கும் திணிக்கிறார்களே தவிர, வேறு ஒன்றையும் நான் காணவில்லை?" ஏக்கத்துடன் என்னைப் பார்த்தார். 'இசை'யை வாரி எடுத்து கொஞ்சினார். 'யாழ்ப்பாண நூலகத்தின் அழிவு வெறும் புத்தகங்களின் இழப்பு அல்ல - அது ஞானம், கலாச்சாரம், நினைவாற்றல் ஆகியவற்றின் மீதான தாக்குதல். தீயை மூட்டியது மாறன் ( Mara / இவன் ஒரு அசுரன், தனது அழகிய பெண்களை அனுப்பி முனிவர்கள், தேவர்கள், அரக்கர்கள் மற்றும் மனிதர்களின் கடுமையான தவத்தை கலைக்கும் ஆற்றல் படைத்தவன் ஆவான். ) அல்ல, மாறாக வெறுப்பால் மேகமூட்டப்பட்ட கொடிய மனிதர்கள்!'.

'அன்பு அல்லது சம்மதம் இல்லாமல் தமிழ் நிலங்களில் எனது உருவத்தை வலுக்கட்டாயமாக வைப்பது தம்மம் அல்ல - அது ஒரு துறவியின் உடையில் அரசியல் நாடகம். அடக்குமுறையின் மூலம் பிறந்த ஒரு கோயில், அமைதிக்கான இடம் அல்ல, மாறாக பாசாங்குத்தனத்தின் நினைவுச்சின்னம். நான் உண்மையிலேயே அந்த சிலைகளில் இருந்தால், நான் கட்டாயம் அழுவேன்.' என்றார்

"ஒன்றை நினைவில் வையுங்கள் 'என்னைப் பின்பற்றுபவர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்பவர்களுக்கு: ஆழமாக சிந்தித்துப் பாருங்கள். எலும்புகள் மற்றும் முள்வேலி மீது நான் எப்போதாவது அமைதியைக் கட்டினேனா??" புத்தர் துக்கம் தாளாமல் அழுதார்.

செம்மணியில் புதைக்கப்பட்டவர்களே துயிலாத சடலங்களே

கண்மணி மழலைகளும் கதறாத மௌனங்களே

செம்மண்ணும் அவர்களைத் தழுவ மறுக்குதே

காடையர்கூட்டம் அதன்மேல் கும்மாளம் அடிக்குதே!

பாடசாலை சிறுமி சிதறிக் கிடக்கிறாளே

பக்கத்தில் இன்னும் அவளின் புத்தகப்பையே

புத்தர் போதித்தது மண்ணோடு மண்ணாகிற்றே

அப்பாவி உடல்கள்மேல் வழிபாடு நடக்குதே!

விலங்குக்கும் சில பண்பாடு உண்டே

விபரம் அறிந்தால் நன்மை கிடைக்குமே

விளக்கம் இல்லாத மதபோதனை எனோ

களங்கப் படுத்துதே புண்ணியப் பூமியை!

வரிசையில் எலும்புகள் அவலத்தைச் சொல்லுதே

இடையில் சின்னஞ்சிறுசுகள் பாதகத்தைக் காட்டுதே

பாவத்தை அழிக்கத் தோன்றிய கௌதமபுத்தனே

சிலைசிலையாய் மண்ணைக் கவர்வது எதற்க்கோ!

கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்

பாகம் 03 தொடரும்

https://www.facebook.com/share/p/16puxtSJ2X/?mibextid=wwXIfr

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதை - 185 / "தாத்தா கந்தையா தில்லையுடன் பேரன் இசை, சொர்க்கத்திற்கு ஒரு கோடை விடுமுறை" / பாகம் 03

திடீரென்று, இசை ஆர்வமாக சிரித்தபடி புத்தர் இடம் கேட்டான். “சுவாமி, புத்தரே, நாடு கடத்தப்பட்டு, இலங்கையில் வந்தேறு குடியாக தஞ்சம் அடைந்த, சிங்க மிருகத்தின் வாரிசு, கெட்ட விஜயனும், தந்தைக்கு பிறக்காத, இறந்த புத்த குருவின் மறுபிறப்பான துட்டகாமினியும், எப்படி நேரடியாகச் சொர்க்கம் போனார்கள்?, ஆனால் அதற்கு முதல் புத்தர் மீண்டும் போதி மரத்தின் கீழ் மௌனமாகி விட்டார். இசை கொஞ்சம் முணுமுணுத்தபடி, என்னை பார்த்து கேட்டான், 'தாத்தா, நரகம் மிகவும் பயங்கரமானதா, அங்கு போகாமல் தப்பிக்க, கொலைகள் கொள்ளைகள் செய்பவனும், தன் ஒரு பங்காக ஆலையங்கள் கட்டி அன்னதானம் செய்தால் போதுமா ?”

அன்பால் ஆள்வோம் அனைவரையும் இணைப்போம்

பண்பால் கூடி மனிதம் வளர்ப்போம்!

இன்பம் துன்பம் சமமாக மதித்து

கண்ணியம் கட்டுப்பாடு காத்து வாழ்வோம்!

உரிமை உள்ள மனிதனாக

பெருமை கொள்ளும் இனமாக

வறுமை அற்ற குடியாக

சிறுமை போக்கி நகருவோம்!

ஆராய்ந்து எடுக்கும் நீதிவானும்

ஆக்கம் கொண்ட சமூகமும்

ஈவிரக்கம் காட்டும் அரசும்

தரமான உலகைத் தரும்!

பாசம் உலாவும் கண்களாய்

மோசம் செய்யா இதயமாய்

எங்களை நாங்கள் ஆக்கினால்

தேசம் ஓங்கிச் சிறக்கும்!

பக்கத்தில் இன்னும் நின்ற சிவன் சிரித்தார். அவர் கண்கள் மறுமொழி கொடுத்துக்கொண்டு இருந்தன. பின் “நீங்களே ஏன் போய் நேராக பார்க்கக்கூடாது?” என்று கேட்டார். இசையும் நானும் சம்மதம் தெரிவிக்க, சிவனின் ஏற்பாட்டில், ஒரு கண் சிமிட்டலில், நாம் பாதாள உலகத்திற்குள் இறங்கினோம். ஆனால் இது பண்டைய நூல்களில் இருந்தது போல் அல்லது கற்பனை செய்த பயங்கரமான இடம் அல்ல. இது உண்மையில் தண்டனை அல்ல, கற்றலின் ஒரு பகுதி போல் இருந்தது. அதன் இதயத்தில், மத்தியில் சத்ய சாய் பாபா அமர்ந்திருந்தார், அவரைச் சுற்றி மரியாதைக்குரிய ஓஷோ (பகவான் ரஜ்னீஷ் சந்திர மோகன்), ஸ்ரீ மாதாஜி நிர்மலா தேவி [நிர்மலா ஸ்ரீவஸ்தவா] அமர்ந்திருந்தனர் மற்றும் சில இடங்கள் நித்யானந்தா, ஆசாரம் பாபு, குர்மீட் ராம் ரஹிம் சிங், ராதே மா போன்றோருக்கு ஒதுக்கப்பட்டு இருந்தன. - சிலர் மனிதர்களால் கடவுள்களாக தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டனர், சிலர் தாங்களே தங்களை தவறாக கடவுளாக காட்டியவர்கள், ஆனால் அனைவரும் பணிவுடன் இங்கு பிரகாசித்தனர்.

சாய்பாபா எங்களை வரவேற்றார். "கந்தையா தில்லை, இதோ, இங்கே மீண்டும் நரகலோகம் வந்த மக்களுக்கு அவர்களின் தவறுகளைக் சுட்டிக் காட்டி மீண்டும் எழுச்சி பெற வழிவகுக்கிறோம்." என்றார். இசை 'இவரின் படத்தை தானே, அம்மம்மா சாகும் பொழுது கையில் வைத்திருந்தார்? பாவம் அம்மம்மா, தப்பிவிட்டார்!' என எனக்கு காதில் முணுமுணுத்தான்.

இங்கே மதிய உணவு அடக்கமாக இருந்தது - சப்பாத்தி, எலுமிச்சை சாதம், மசாலா பருப்பு, ஆனாலும் அது வெறும் சாப்பாடாக இல்லாமல், அந்த உணவில் அவர்களின் மன்னிப்பும் ஞானமும் கலந்து இருந்தது. அது மட்டும் அல்ல, இந்த உணவு ஆடம்பரமானதாகவோ அல்லது பிரமாண்டமாகவோ இல்லை என்றாலும், ஊட்டமளிக்கக் கூடியதாகவும் ஆறுதலளிக்கக் கூடியதாகவும் இருந்தது. பணிவு, சிக்கனம் மற்றும் விருந்தோம்பல் அங்கு தெரிந்தது.

இந்த கடவுள்கள் என்று அழைக்கப்படுபவர்கள் தங்கள் பூமிக்குரிய காலங்கள், பாராட்டுகள் மற்றும் தவறுகள், அவர்கள் பெற்ற அன்பு மற்றும் அவர்களை சிக்க வைத்த சம்பவங்கள் பற்றி எங்களுடன் பேசினர். ஆனால், தாம் மீண்டும் அதே பாணியில் இங்கு வாழ்வதால், பிரச்சனை இல்லை என்று மகிழ்வாகக் கூறினர்.

இலங்கை பற்றிய கதைகளைப் பகிர்ந்து கொண்டபோது, அரசியலால் திரிக்கப்பட்ட நம்பிக்கை எவ்வாறு அற்புதங்களையும் துயரங்களையும் ஏற்படுத்தியது என்பதையும் மற்றும் அவர்களின் உரையாடலையும் இசை, விளங்குதோ விளங்கவில்லையா கண்களை விரித்து ஆச்சரியமாகக் கேட்டான், சாய்பாபா, எதோ கையை மேலே உயர்த்தினார். ஒரு தங்கச் சங்கிலி எடுத்து, 'இசை'யின் கழுத்தில் போட முயன்றார். ஆனால் இசை அதை தட்டி விட்டான். அவன் பார்த்த பார்வை, இன்னும் உங்க புத்தி மாறவில்லையா' என்று கேட்காமல் கேட்டது?

சூரிய அஸ்தமனத்திற்கு சற்று முன், நானும் இசையும் சொர்க்கத்திற்குத் மீண்டும் திரும்பினோம். உண்மையில் இங்கு இரவோ பகலோ கிடையாது. நான் என் ஆப்பிள் மணிக்கூடு சொல்லுவதை வைத்து கூறுகிறேன். இங்கே வானம் அந்தி நீல நிறங்கள் மற்றும் தங்கக் கோடுகளின் திரைச்சீலை போல் மாறியது. சந்தன மரத்தின் நறுமணம் காற்றில் எங்கும் பரவியது. அன்று முழுவதும் நான் காபி குடிக்கவில்லை, நா வறண்டது. மாலை காபியாவது குடிப்போம் என்று தேடினேன். அப்போது தேவலோகத்தில் ஒரு தேவர்களும் தேவதைகளும் காப்பி குடிப்பதில்லை என்று தெரியவந்தது. அப்பொழுது காமதேனுவை அங்கு கண்டேன். அது வந்து "ஐயனே, என்ன வேண்டும்?" என்று கேட்டது. ஒரு நல்லா ஸ்ட்ராங்கா காபி கொண்டுவா என்றேன். ஆனால் அதுவும் தன்னால் அது இயலாது என்று சொல்லிவிட்டது.

எதோ சப்தம் கேட்டு, திரும்பி பார்த்தேன். அங்கே தேவர்கள் ஆண்-பெண் ஜோடி ஜோடியாக ஆங்காங்கே மிதந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் பாதம் நிலத்தில் பதியவில்லை. அவர்கள் கண்களும் இமைக்கவில்லை. ஆண்கள் தலையில் தங்க கிரீடம் வைத்துக் கொண்டு கழுத்திலும் கைகளிலும் பல தங்க ஆபரணங்களை அணிந்து கொண்டிருந்தார்கள். பெண்கள் தலையில் கிரீடமில்லை. அவர்கள் கழுத்து. கை, கால் இடுப்பு, தலை என்று எல்லா இடங்களிலும் தங்க நகைகளை அணிந்திருந்தார்கள். தங்க மோகம் இங்கு அதிகம் போல் எனக்குத் தெரிந்தது. அப்பத்தான் நல்லூர் ஞாபகம் வந்தது , அங்கே வாசலில் அலங்கார நல்லூரானின் பொருள் இப்ப விளங்கியது!

எங்கள் இருவரையும் ஒரு தெய்வீக மண்டபத்திற்கு அழைத்துச் செல்ல, அங்கு தெய்வீக நடனக் கலை பார்க்க அன்று இரவு ஏற்பாடு செய்தனர். இந்த மண்டபம் உலகின் மாபெரும் கட்டிடக் கலைஞன் மயன் என்பவரால் நிர்மாணிக்கப்பட்டது என்று ஒரு விளக்கமும் தந்தனர். இசை அவர்கள் சொல்லி முடிப்பதுக்குள் மண்டபத்துக்குள் ஓடிவிட்டான். எமக்கு துணையாக நாரதரும் வந்தார். ஒரு மூலையில் யமன் ஓய்வு எடுத்துக்கொண்டு இருப்பதைக்கண்டேன். நல்லவேளை இசை அந்த பக்கம் போகவில்லை!

சொர்க்கம் போக ஆசைப் பட்டேன்

சொர்ண சுந்தரியை அன்று மறந்தேன்

பார்ப்பனன் இடம் மண்டி இட்டேன்

வேர்த்து ஒழுக பிரதட்டை செய்தேன் !

சொர்க்கத்தில் இன்று இசையுடன் நான்

தூர்ந்த கனவை தூசு தட்டுகிறேன்

பார்த்து ரசித்து பூசை செய்கிறேன்

நேர்த்திக் கடனாய் காவடி ஆடுகிறேன் !"

"மர்ம சாமியார்கள் புடை சூழ

ஊர் வலம் சென்றேன் நரகத்தில்

நேர்மை பற்றி பிரசங்கம் செய்து

சர்ச்சை இல்லாமல் திரும்பி வந்தேன் !"

"ஊர்வசி திலோத்தமை ஆட்டம் காண

பார்வதி துணைவனுடன் சொந்தம் கொள்ள

சொர்க்க லோகத்தில் குடி கொள்ள

அர்த்த ராத்திரியிலும் பஜனை செய்கிறேன் !

கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்

பாகம் 04 தொடரும்

https://www.facebook.com/share/p/1CepkKK4Zb/?mibextid=wwXIfr

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதை - 185 / "தாத்தா கந்தையா தில்லையுடன் பேரன் இசை, சொர்க்கத்திற்கு ஒரு கோடை விடுமுறை" / பாகம் 04

ரம்பா, ஊர்வசி, திலோத்தமை, மேனகா பற்றி பல கதைகள் வாசித்த நாளில் இருந்து, எப்படியும் அவர்களை பார்க்கவேண்டும் என்ற ஆசை மனதில் இருந்தது. நாட்டியத்தில் சிறந்து விளங்கும், அழகான ஊர்வசி, ஹிமாலயத்தின் மகள் மற்றும் சக்திவாய்ந்த, மயக்கும் மேனகா, இந்து தொன்மவியலில், அழகின் அடையாளமாக கருதப்படும், தெய்வீக ரம்பா மற்றும் பிரம்மனால் உருவாக்கப்பட்ட, திகைப்பூட்டும் திலோத்தமா என்ற ஒரு எண்ணம் தான் என் மனதில் இருந்தது. அது சரியா பிழையா, இன்றுதான் அதை முடிவு செய்யப் போகிறேன். நான் என் மனையாளை, நேரத்துக்கு தகுந்தவாறு ' ரம்பா, ஊர்வசி, திலோத்தமை, மேனகா' என்று கூப்பிட்டது இன்னும் ஞாபகம் இருக்கிறது.

இந்த அரம்பையர்களுக்கு அப்சரஸ் என்ற பெயரும் உண்டு. அப்ஜம் என்றால் தாமரை. சரஸ் என்றால் தடாகம், குளம் என்று பொருள். அப்சரஸ் என்றால் தடாகத்தில் தோன்றிய தாமரை எவ்வளவு அழகாகவும், மனதுக்கு மகிழ்ச்சியாகவும் இருக்குமோ அவ்வளவு அழகு நிரம்பியவர்கள் அரம்பையர்கள் ஆவர். ரம்பை தான் இவர்களின் தலைவியாக கூறப்படுகிறாள். இவர்கள் தங்களுக்கென்று ஓர் இடம் வேண்டும் எனவும், தாங்கள் என்றும் இளமை மாறாமல் இருக்க வேண்டும் எனவும் சிவனிடம் வரம் வேண்ட, அவரும் அவ்வரங்களை அளித்து, அவர்களுக்காக "அப்சரஸ்' எனும் லோகத்தையும் உருவாக்கி கொடுத்தார் என்று யாழ் மத்திய கல்லூரியில் படித்தது ஞாபகம் வந்தது.

அது போகட்டும், முதலில் எங்கே இசை எங்கே ஓடி விட்டான் என்று பார்க்க வேண்டும் என்று துடித்தேன். உடனடியாக தேடிப்பார்க்க ஒரு டாக்ஸி தேடினேன், அங்கு அப்படி ஒன்றும் நான் காணவில்லை. அப்பத்தான் எனக்கு தெரிந்தது, தேவலோகத்தில் வாகனங்கள் இல்லை. தேவேந்திரனிடம் மட்டும்தான் ஒரு புஷ்பக விமானம் இருக்கிறது. தவிர அவரிடம் ஒரு யானையும் இருக்கிறது என்று. நான் யானையை வரவழைத்து, என்னுடன் நாரதரையும் அழைத்துக் கொண்டு அங்கு இசையைத் தேடத் தொடங்கினோம்.

கொஞ்ச தூரத்தில் விநாயகர் எலிகள் புடைசூழ, வயிறை தடவி, தடவி, மோதகம் சாப்பிட்டுக் கொண்டு இருந்தார். ஒரு மூலையில் முருகன் மயிலில் இருந்து இறங்கி, வள்ளியுடன் உலாவிக் கொண்டு இருந்தார். நாம் கிட்ட போனோம். இசை ஒரு எலியை கையில் பிடித்து வைத்துக் கொண்டு ரட் [Rat] ரட் என்று துள்ளி துள்ளி சொல்லியபடி, மயிலின் ஒரு இறகை பிடுங்கிக் கொண்டு இருந்தான். எங்களை கண்டதும், கையில் இருந்த எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு, எலிபான்ட் [elephant] எலிபான்ட் என்று ஓடி வந்தான்.

நான் பின் இசையுடன் மண்டபத்துக்குள் நுழைந்தேன். வாசலில் நின்ற காவலாளி, நாரதர் கலகம் செய்வார் என்று உள்ளே விடவில்லை. அங்கு அழகான ஊர்வசி, மயக்கும் மேனகா, தெய்வீக ரம்பா மற்றும் திகைப்பூட்டும் திலோத்தமா என நால்வரும் இந்திரன், பிரேமா விஸ்ணுவுடன் நின்றனர். சிவனும் பார்வதியும் தங்கள் முழு குடும்பத்துடன் வந்ததும் இரவு நடனம் ஆரம்பிக்கும் என்று அறிவித்தனர்.

அரம்பையர்கள் தேவலோகத்தில் மொத்தம் 60,000 பேர் இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. என்றாலும் இது ஒரு தனிப்பட்ட ஒழுங்கு என்பதால், தேர்ந்து எடுக்கப்பட்ட சிலரை மட்டும் அங்கு உள்ளே வர அனுமதித்தனர். அவர்களில் கிருகத்தலை, சிகத்தலை, சகசந்திசை ஆகிய மூவரும் எங்களை வரவேற்று, முன் வரிசைக்கு அழைத்து சென்றனர். இசைக்கு கொஞ்சம் உயர்ந்த இருக்கை கொடுக்கப்பட்டது.

நால்வரின் அசைவுகள் பண்டைய கதைகளைச் சொன்னது - அன்பு மற்றும் ஏக்கம், தைரியம் மற்றும் தியாகம். "கைவழி நயனஞ் செல்லக், கண்வழி மனமும் செல்ல, மனம் வழி பாவமும், பாவ வழி ரசமும் சேர", என்ற விதியின் படி அப்படியே இருந்தது. அதுமட்டும் அல்ல, 'பண்வழி நடக்கும் பாட்டின் போக்கும், பாட்டின் வழியே தாளம் பயிலும், தாள வழியே காலடி தட்டும்' பண்ணின் சிறப்பினைப் பாடலும், பாடலின் போக்கைத் தாளமும், தாளத்தின் அமைப்பில் ஆடலும் இணைந்து சிறந்து அங்கு விளங்கியது. கை, கால், உடலசைவுகளுக்கு மட்டுமின்றி மன உணர்ச்சிக்கும் அங்கு வேளை இருந்தது. "பொன்னியல் பூங்கொடி புரிந்துடன் வகுத்தென, நாட்டிய நன்னூல் நன்கு கடைப்பிடித்துக் காட்டினள் " என்பது போல, பொன்னால் செய்த பூங்கொடி ஒன்று வந்திருந்து நடனமாடியது போலவே அபிநய பாவங்கள் அழகுறக் கடைப்பிடித்து நாட்டிய நூல்கள் சொல்லி வைத்த முறையது தவறிடாது அனைவரும் கண்டு இன் புற்றிட நாட்டிய அரங்கினில் ஆடினார் நால்வரும்! ‘அகம் உயிர் ஆகச் சுவை உளம் ஆக இழை உடல் ஆக இயல்வது கூத்து’, என்பதை நான் முற்றிலும் அங்கு கண்டேன் !

நீரானவா நிலமானவா விண்ணானவா

காற்றானவா ஒளியானவா உயிரினவா

பிரபஞ்சத்தை ஆளும் முழுமுதற்க் கடவுளே!

நீயே உயிர்கெல்லாம் முதலானவன்

எல்லா உலகத்துக்கும் உறவானவன்

உயிர்கள் கூடி தாளம்போடும் இசையானவன்

எம்மை எந்நாளும் தொடர்கின்ற நிழலானவன்

நதியில் நீராகி நிலவெல்லாம் ஒளியாகி

பனியில் துளியாகும் இறையானவா

புவியில் திறனாகி உயிரெல்லாம் கருவாகி

காற்றில் அசைந்தாடும் நிறைவானவா

வரம் வேண்டியே உனைப் பாடினோம்

சத்தியம் வாழவே நாம் மகிழ்ந்தாடினோம் !

சலங்கை ஒலியாக சரிந்தாடும் மயிலாக

தாளத்தின் உயிராக நாம் நடமாடினோம்

சபையில் இனிதாக இதம்தேடும் முகமாக

இதயம் கலந்தோரை நாம் புகழ்ந்தாடினோம்!

இசை தனது மகிழ்ச்சியில் தனது சிறிய கைகளைத் தட்டினார். என்னுடைய இதயமும் மீண்டும் இளமையாக மாறியது போல உணர்ந்தேன். என் கால்கள் என்னை அறியாமலே தாளங்களுக்கு ஒத்ததாக கால்களைத் தட்டியது.

நடனத்திற்குப் பிறகு, நாங்கள் நான்கு அப்சரஸ்களுடன் இறுதி இரவு உணவைப் பகிர்ந்து கொண்டோம் - அமிர்தத்தில் தோய்த்த பழங்கள், மணம் கொண்ட பிரியாணி மற்றும் முத்துக்கள் போல ஒளிரும் பால்.

ரம்பா மிக அருகில் வந்து, சிரித்துக்கொண்டே, “கந்தையா தில்லை, நீ இனி பூமி போக வேண்டும். வரலாற்றில் மறைந்திருக்கும் உண்மைகளைப் பேச பூமிக்கு உன்னைப் போன்ற எழுத்தாளர் தேவை” என்றாள்.

ஊர்வசி இசையிடம் சாய்ந்து, “மழலையே , உன் புன்னகையால் அன்பு மற்றும் உறவு பாலங்களைக் கட்டுவாய்” என்று கிசுகிசுத்தாள். திலோத்தமா அடி மேல் அடி எடுத்து வந்து இசைக்கு திகைப்பூட்டி விளையாட தொடங்கினாள். அந்த இடைவெளியில், தன் அழகு, கவர்ச்சி, இளமை மூன்றையும் கலந்து எடுத்து, மேனகா எனக்கு ஒரு மயக்கம் தந்தாள்!. நல்ல காலம், அங்கே திடீரென புத்தர் வந்தார். அவர் கொஞ்சம் சத்தமாக ' ஒரு மனிதன் பெண்களிடம் கொள்ளும் காம ஆசை இருக்கும் வரை, அவன் மனம் வாழ்க்கையை பற்றிக் கொண்டிருக்கும். அவாவின் விலங்குகளில் கட்டுண்டு மக்கள் நெடுங்காலம் துயரத்தை அனுபவிக்கிறார்கள்' என்று கூறிக் கொண்டு என்னிடம் வந்தார். நானும் மயக்கத்தில் இருந்து விழித்து என்னை அறிந்தேன். அப்சரஸ் நால்வரும் உடனடியாக மிதந்து மெதுவாக மறைந்தனர். அவர்களுடன் சேர்ந்து மேகங்களும் மறைந்தன.

தங்க ஒளி மங்கியது. காலை சூரிய ஒளி படுக்கையறைக்குள் பாய்ந்தது.

கதவில் யாரோ தட்டும் ஒலி காதில் கேட்டது. ஒருவேளை மேனகா திரும்பி வந்தாளா என்ற ஒரு நற்பாசையில், மெல்ல எழுந்து போய் கதவைத் திறந்தேன்.

"அப்பா, எழுந்திரு! வேலைக்குப் போறதுக்கு முன்னாடி இசையை டேகேர்ல [Daycare] விடணும்" மூத்த மகளின் குரல் கேட்டது.

நான் கண்டும் காணாதது போல் மௌனமாக இருந்தேன். இசை இன்னும் மடியில் சுருண்டு, தூக்கத்தில் சிரித்துக் கொண்டிருந்தார்.

எனக்குள் இன்னும் எதோ ஒரு குழப்பம், "அது ஒரு கனவா? அல்லது மறுபக்கத்திலிருந்து வந்த ஒரு நினைவா?"

இசை விழித்தெழுந்ததும், மேலே பார்த்து மெதுவாகச் சொன்னான், "தாத்தா, அடுத்த கோடையிலும் நாம் சொர்க்கத்திற்கு போகலாமா?"

நான் சிரித்து, அவனது நெற்றியில் முத்தமிட்டு, "நிச்சயமாக, என் குட்டி நட்சத்திரமே. ஆனால் இன்று நீங்கள் உங்கள் காலை உணவை மிச்சம் விடாமல் முடித்துவிட்டால் மட்டுமே" என்றேன்.

வானத்திற்கு அப்பால் ஒரு அசாதாரண விடுமுறைக்குப் பிறகு, ஒட்டாவாவில் மீண்டும் மற்றொரு சாதாரண நாள் தொடங்கியது!

புளுகிவிட்டான் சொர்க்கம் நரகம் என்று

புராண கதையும் ஏமாற்ற இயற்றிவிட்டான்

புற்றுநோய் போல் அது பரவி

புரியாத எம்மை வலைக்குள் வீழ்த்திவிட்டது!

நீச செயல்களை என்றும் செய்யாது

நீதி செய்தால் உலகம் வரவேற்கும்

நீங்காமல் உன்புகழ் இங்கு நிலைக்கும்

நீர்க்குமிழி வாழ்க்கைக்கும் பெருமை சேர்க்கும்!

புண்ணியம் பாவம் இரண்டும் பூமியிலே

சொர்க்கம் நரகம் கற்பனை மட்டுமே

முற்பிறவியில் எவனோ செய்த கர்மாவுக்கு

இப்பிறவியில் உனக்கு தண்டனை வேடிக்கையே!

மனம் நற்குணங்களுடன் கூடும் பொழுது

மதிக்கப் படுகிறாய் போற்றப் படுகிறாய்

மகிழ்ச்சியும் இன்பமும் அங்கே பிறக்கிறது

மனிதா இதுதான் உண்மையில் புண்ணியம்!

கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்

முடிவுற்றது

https://www.facebook.com/share/p/17BGSH5dok/?mibextid=wwXIfr

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.