Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி அநுரவின்  கச்சதீவு விஜயம்

September 7, 2025

ஜனாதிபதி அநுரவின்  கச்சதீவு விஜயம்

— வீரகத்தி தனபாலசிங்கம் — 

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் தகராறுக்குரிய ஒரு பிராந்தியமாக கச்சதீவு இருந்திருந்தால் கடந்த வாரம் (செப்டெம்பர் 1) ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க தரிசு நிலமாகக் கிடக்கும் அந்த தீவுக்கு மேற்கொண்ட முன்கூட்டியே அறிவிக்கப்படாத விஜயம் சர்ச்சை ஒன்று மூளுவதற்கு காரணமாக இருந்திருக்க முடியும்.  ஆனால்,  இலங்கைக்கு சொந்தமான  ஒரு  நிலப்பரப்புக்கு  அதன் ஜனாதிபதி செய்த விஜயம் அரசியல் மற்றும் இராஜதந்திர உரையாடல்களில் ஒரு பேசுபொருளாக கச்சதீவை மாற்றியிருக்கிறது. 

இந்திய அரசாங்கம் திசநாயக்கவின் கச்சதீவு விஜயம் குறித்து இதுவரையில் எந்தவிதமான பிரதிபலிப்பையும் வெளிக்காட்டவில்லை. ஆனால்,  இந்திய அரசியல் அரங்கிலும் ஊடகப்பரப்பிலும் பெருமளவில் விமர்சனரீதியான கருத்துக்கள்  முன்வைக்கப்படுகின்றன.  அந்த விஜயத்தின் மூலமாக இலங்கை ஜனாதிபதி எத்தகைய செய்தியை, யாருக்கு  கூறுவதற்கு முயன்றார் என்ற கேள்வியைச் சுற்றியவையாகவே அந்த கருத்துக்கள் அமைந்திருக்கின்றன. 

இந்தியாவின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரும்  அரசியல் அவதானியுமான  நிருபமா சுப்பிரமணியன் “இலங்கையின் ஒரு  தீவிடமிருந்து சமிக்கை” ( Signal From a Lankan island) என்ற தலைப்பில்  எழுதிய கட்டுரையில் ‘சீனாவில் ஜனாதிபதிகள் சி ஜின்பிங்குடனும் விளாடிமிர் புட்டினுடனும் கமராக்களுக்கு முன்னால் நின்று பிரதமர் நரேந்திர மோடி தோழமை  பாராட்டியபோது  இந்தியா வடக்கு நோக்கி கவனத்தைச் செலுத்திக் கொண்டிருந்த அதேவேளை, இந்தியாவின் தென்திசை அயல்நாடு புதுடில்லிக்கும் தமிழ்நாட்டுக்கும் ஆரவாரமின்றி  ஒரு செய்தியை அனுப்பியிருக்கிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் மிகுந்த நல்லுறவு நிலவுகின்ற ஒரு நேரத்தில், அதுவும் கச்சதீவு தொடர்பில் புதுடில்லி எந்தப் பிரச்சினையையும் கிளப்பியிராத  வேளையில், புதுடில்லிக்கு ஒரு செய்தியை அனுப்ப வேண்டிய தேவை ஜனாதிபதி திசநாயக்கவுக்கு இருந்திருக்குமா என்ற கேள்வி எழுகிறது. 

ஆனால், தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் இன்னமும் ஆறு மாதங்களில் சட்டசபை தேர்தல்கள் நடைபெறவிருக்கும் பின்புலத்தில் மாநில அரசியல்வாதிகள் கச்சதீவை இலங்கையிடமிருந்து மீட்கவேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் முனைப்புடன் முன்வைக்கத் தொடங்கியிருப்பதால்  அவர்களுக்கு ஒரு செய்தியைக் கூறுவதற்காக திசநாயக்க அந்த தீவுக்கு விஜயம் செய்திருக்கக்கூடும் என்ற ஒரு கருத்து இருக்கிறது. 

கச்சதீவுக்கு செல்வதற்கு முன்னதாக யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள்  மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி  திசநாயக்க அந்தத் தீவு இலங்கை மக்களுக்குச் சொந்தமானது என்றும் பலவந்தமாக அதை பறிக்க எவரையும் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்றும் கூறினார். 

எது எவ்வாறிருந்தாலும், திசநாயக்கவின் கச்சதீவு விஜயம் அடையாளபூர்வமான கனதியொன்றைக் கொண்டிருக்கிறது. இந்தியாவுடன் உடன்படிக்கையை கைச்சாத்திட்டதன் மூலம்  கச்சதீவை இலங்கைக்கு சொந்தமாக்கிய முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க கூட கச்சதீவை பார்வையிட வேண்டும் என்று அக்கறை காட்டவில்லை. அவருக்கு பிறகு பதவிக்கு வந்த எந்தவொரு பிரதமரோ அல்லது ஜனாதிபதியோ கச்சதீவுக்கு விஜயம் செய்ததில்லை. இந்தியாவுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்க்கூடாது என்பதற்காகத்தான் அவர்கள் 285 சதுரகிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்ட அந்தத்தீவுக்கு விஜயம் செய்வதற்கு  அக்கறை காட்டாமல் இருந்தார்களோ  தெரியவில்லை.  அந்தத் தீவில் காலடிவைத்த முதல் இலங்கை அரச தலைவராக ஜனாதிபதி திசநாயக்க “வரலாற்றுப் பெருமையை” தனதாக்கிக் கொண்டிருக்கிறார்.

அவரின் அந்த விஜயம் குறித்து  அறிக்கையொன்றை வெளியிட்ட ஜனாதிபதி ஊடகப்பிரிவு “யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியான பல அங்குரார்ப்பண நிகழ்வுகள் மற்றும் அபிவிருத்தி செயற்திட்டங்களில் இன்று (01) பங்கேற்றதை தொடர்ந்து ஜனாதிபதி அநுரா குமார திசநாயக்க  கச்சதீவுக்கு ஒரு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டார்.  கடற்தொழில், நீரியல்வள மற்றும் சமுத்திர வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, வடபகுதி கடற்படைத் தளபதி றியர் அட்மிறல் புத்திக்க லியனகமகே ஆகியோரும் ஜனாதிபதியுடன் அந்த விஜயத்தில் இணைந்து கொண்டனர்” என்று மாத்திரம் குறிப்பிட்டது.

பாக்குநீரிணையில் தமிழ்நாட்டு மீனவர்களின் அத்துமீறல்களினால்  படுமோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கையின் வடபகுதி மீனவர்களுக்கு  தனது ஒருமைப்பாட்டை வெளிக்காட்டும் ஒரு “துணிச்சலான சமிக்கையாக” ஜனாதிபதி கச்சதீவுக்கு சென்றிருக்கக்கூடும் என்று  இன்னொரு கருத்து இருக்கிறது. ஆனால், வடபகுதி மீனவர்கள் தங்களது கரையோரங்களுக்கு தமிழ்நாட்டு மீனவர்கள்  நெருக்கமாக வந்து கடல் வளங்களைச் சூறையாடுவது குறித்து கவலைப்படுகிறார்களே தவிர, கச்சதீவைப் பற்றி அவர்களுக்கு அக்கறை இருப்பதாக  கூறமுடியாது. 

தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் கூறுவது போன்று கச்சதீவை மீண்டும் இந்தியா தனதாக்கிக் கொள்வதன்  மூலம் மாநில மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காணமுடியும் என்றால், யாழ்ப்பாணக் குடாநாட்டின் கரையோரங்களுக்கு மாத்திரமல்ல, கிழக்கிலங்கை கரையோரத்துக்கும் நெருக்கமாக இந்திய மீனவர்கள் எதற்காக வருகிறார்கள் என்ற கேள்வி எழுகிறது. 

இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள்  குறித்து நிருபமா சுப்பிரமணியன் தனது கட்டுரையில் முன்வைத்திருக்கும் கருத்து மிகுந்த கவனத்துக்குரியது. 

“இழுவைப்படகுகள் போன்ற நீண்டகாலத்துக்கு பயன்படுத்த முடியாத மீன்பிடி முறைகளை தமிழ்நாட்டு மீனவர்கள் கடைப்பிடித்து வந்ததால், பாக்குநீரிணையின் இந்தியப் பக்கத்தில் இருந்த கடல் வளங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. மூன்று தசாப்தகால உள்நாட்டுப் போரின்போது கண்டிப்பான பாதுகாப்புக் கட்டுப்பாடுகளின் விளைவாக யாழ்ப்பாண மீனவர்கள் கடலுக்கு செல்லாத காரணத்தால் பெருமளவு வளங்களை  கொண்டதாக இருந்த பாக்குநீரிணையின் இலங்கைப் பக்கம் இந்திய மீனவர்களை கவர்ந்திழுக்கிறது.

“அனேகமாக தினமும் இலங்கைக் கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் செய்கின்ற ஊடுருவல்கள் அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதிலும் படகுகளையும் வலைகளையும் பறிமுதல் செய்வதிலும் வந்து முடிகிறது. ஆனால், மாற்று வாழ்வாதாரங்களை உருவாக்குவதில் அல்லது மீன்பிடித்துறையை பல்வகைப்படுத்துவதில் உள்ள பிரதான சவால்களை கையாளுவதற்கு பதிலாக, தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள தலைவர்கள் மீனவர்களின் சகல பிரச்சினைகளுக்கும் கச்சதீவே பதில் என்ற மாயையை ஊக்குவிக்கிறார்கள்.” என்று அவர் எழுதியிருக்கிறார்.

கச்சதீவை இந்தியா மீண்டும் சொந்தமாக்க  வேண்டும் என்று இரு பிரதான திராவிட இயக்கக் கட்சிகளின் அரசாங்கங்கள் இதுவரையில் நான்கு தீர்மானங்களை தமிழ்நாடு சட்டசபையில்  நிறைவேற்றியிருக்கின்றன. கச்சதீவு தொடர்பில் இலங்கையுடன் இந்தியா  செய்த உடன்படிக்கைக்கு எதிராக  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2008 ஆம் ஆண்டில்  உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கம் தற்போது அந்த வழக்கை தொடர்ந்து முன்னெடுக்கிறது. அந்த வழக்கு மீண்டும் செப்டெம்பர் 15 ஆம் விசாரணைக்கு வருகிறது.

இத்தகைய பின்புலத்தில்  சினிமா நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் ஆகஸ்ட் 21 ஆம் திகதி மதுரையில்  தனது கட்சியின் மகாநாட்டில் கச்சதீவை  இலங்கையிடம் இருந்து மீட்டெடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் வேண்டுகோள் விடுத்தார்.

“இலங்கை கடற்படையின் தாக்குதல்களினால் இதுவரையில் சுமார் 800 தமிழ்நாட்டு மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதைக் கண்டிப்பதற்கு பெரிதாக எதையும் செய்யுமாறு நான் பிரதமர் மோடியைக் கேட்கவில்லை. மிகவும் சிறிய ஒரு விடயத்தை செய்யுமாறுதான் கேட்கிறேன். எமது மீனவர்களின் பாதுகாப்புக்காக இப்போதாவது கச்சதீவை இலங்கையிடமிருந்து பிரதமர் மீட்டெடுக்க வேண்டும்” என்று விஜய் கூறினார். 

இது தொடர்பாக கொழும்பில் செய்தியாளர்கள் மகாநாட்டில் கருத்து தெரிவித்த வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் “தேர்தல்காலப் பேச்சு” என்று அதை  அலட்சியம் செய்தார். “தென்னிந்தியாவில் தேர்தல்கள் நடத்தப்படவிருக்கின்றன. வாக்குகளை பெறுவதற்காக தேர்தல் மேடைகளில் அரசியல்வாதிகள் பல்வேறு விடயங்களைக் கூறுவார்கள். இது முதற்தடவை அல்ல. முன்னரும் கூட கச்சதீவை இலங்கையிடமிருந்து மீட்கவேண்டும் என்ற கோரிக்கைகள் தேர்தல் பிரசாரங்களின்போது முன்வைக்கப்பட்டன” என்று அவர்  கூறினார். 

ஜனாதிபதி திசநாயக்கவின் கச்சதீவு விஜயத்துக்கு பிறகு கடந்த வியாழக்கிழமை (4) அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்கள் மகாநாட்டில் உரையாற்றிய அரசாங்க பேச்சாளரான சுகாதார அமைச்சர் நாலிந்த ஜயதிஸ்ஸ தென்னிந்திய அரசியல்வாதிகளுக்காக கூச்சல்களுக்காக  ஜனாதிபதி கச்சதீவுக்கு செல்லவில்லை என்றும் இலங்கைக்கு சொந்தமான அந்த தீவு குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவசியமில்லை  என்றும் குறிப்பிட்டார். 

தமிழ்நாட்டு அரசியலைப் பொறுத்தவரை மக்களின் உணர்ச்சிகளை கிளறக்கூடிய கோரிக்கைகளை சிறிய உதிரிக்கட்சிகள் மாத்திரமல்ல, பிரதான  கட்சிகளும் கூட தேர்தல் காலங்களில் முன்வைக்கத் தவறுவதில்லை. இலங்கை தமிழர் பிரச்சினை மற்றும் தமிழ்நாட்டு மீனவர் பிரச்சினை போன்றவை அவற்றில் முக்கியமானவை. தேர்தல்கள் முடிவடைந்ததும்  அந்த கோரிக்கைகளின் உக்கிரம் தணிந்து விடுவதும் வழமை.

கடந்த வருடம் புதிதாக கட்சியை தொடங்கி அரசியலில் குதித்திருக்கும் நடிகர் விஜயை பொறுத்தவரை,  மற்றைய அரசியல்வாதிகளை விடவும் முற்றிலும் வேறுபட்டவராக தன்னை காண்பிக்க வேண்டிய அவசியம்  இருக்கிறது.  கச்சதீவு விவகாரத்தில் இந்திய மத்திய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக பல தடவைகள் அறிவித்திருக்கின்ற போதிலும் கூட,  மீனவர் சமூகத்தின் வாக்குகளைப் பெறுவதற்கான போட்டியில்  அந்தத் தீவை மீட்கவேண்டும் என்ற கோரிக்கையை  தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தொடர்ந்து முன்வைத்துக் கொண்டேயிருக்கிறார்கள். 

திராவிட இயக்கத்துக்கு எதிரான தீவிரமான தமிழ்த் தேசியவாதியாக தன்னைக் காட்டிக் கொள்ளும் நாம் தமிழர் கட்சியின் தலைவரான சீமான் தனது வழமையான  தான்தோன்றித்தனமான பாணியில் கச்சதீவை இந்தியாவிடமிருந்து மீட்காவிட்டால் தமிழ்நாடு மாநிலம் இந்தியாவில் இருந்து பிரிந்துசெல்ல நேரிடும் என்று எச்சரிக்கை  விடுத்திருக்கிறார். விஜயின் அரசியல் பிரவேசத்தின் விளைவாக தனது கட்சியின் மக்கள் ஆதரவில் வீழ்ச்சி ஏற்படக்கூடும் என்று அஞ்சும் சீமானுக்கு இனத்துவ தேசியவாத  உணர்ச்சிகளை தூண்டிவிட  வேண்டிய அரசியல் நிர்ப்பந்தம்  இருப்பதாக தெரிகிறது. 

வழமையாக தமிழ்நாட்டு மாநிலக் கட்சிகளே கச்சதீவுப் பிரச்சினையை தேர்தல் காலங்களில் கிளறுவதை வழக்கமாகக் கொண்டிருந்த ஒரு போக்கில்  2024 லோக்சபா தேர்தல் பிரசாரங்கள் ஒரு குறிப்பிடத்தக்க  மாற்றத்தைக் கண்டன. இந்திய  பிரதமர் நரேந்திர  மோடியும் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் கூட பாரதிய ஜனதாவுக்கு மாநில மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக  கச்சதீவுப் பிரச்சினை பயனபடுத்துவதில் அக்கறை காட்டினர். 

இந்திரா காந்தி இந்தியாவின் பிரதமராகவும் கருணாநிதி தமிழ்நாட்டு முதலமைச்சராகவும் இருந்த காலப்பகுதியிலேயே தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதிக்காமல்  கச்சதீவை இலங்கைக்கு விட்டுக் கொடுக்கும் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது என்பதை சுட்டிக்காட்டிய மோடியும்  ஜெய்சங்கரும் தமிழ்நாட்டு மீனவர்கள் பாக்குநீரிணையில் அனுபவிக்கும் துன்பங்களுக்கு காங்கிரஸும் திராவிட முன்னேற்றக் கழகமுமே முக்கிய காரணம் என்று தேர்தல் மேடைகளில் பேசினர்.

கச்சதீவை இலங்கைக்கு விட்டுக்கொடுத்த பிறகு கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் உடன்படிக்கை தொடர்பில் தேர்தல் பிரசாரங்களின்போது பிரச்சினை கிளப்பிய  முதல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியே என்பது குறிப்பிடத்தக்கது. லோக்சபா தேர்தல் முடிந்த பிறகு அவர் கச்சதீவைப் பற்றி பேசியதாக செய்தி எதுவும் வந்ததாக இல்லை.

காங்கிரஸுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிரான பிரசாரத்துக்காக  கச்சதீவு உடன்படிக்கை பற்றி  மோடியும் ஜெய்சங்கரும் பேசினார்களே தவிர, அந்தத் தீவை மீட்டெடுப்பது  குறித்து எதுவும் பேசவில்லை. அடுத்த வருடம் ஏப்ரில் — மே மாதங்களில் நடைபெறவிருப்பதாக எதிர்பார்க்கப்படும் தமிழ்நாட்டு சட்டசபை தேர்தலில் மீண்டும் மோடி  கச்சதீவு விவகாரத்தை  மற்றைய கட்சிகளும் ஏட்டிக்குப் போட்டியாக பிரசாரங்களில்  பெருமளவுக்கு பயன்படுத்தக்கூடிய  சாத்தியம் இருக்கிறது. அதன் அறிகுறிகளை தற்போது இருந்தே காணக்கூடியதாக இருக்கிறது.

ஜனாதிபதி திசநாயக்கவின் கச்சதீவு விஜயம் மீண்டும் இலங்கை கடற்படையின் தாக்குதல்கள் தீவிரமடையக்கூடும் என்ற அச்சத்தை தமிழ்நாட்டின் இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் நாகபட்டினம் மாவட்டங்களின் மீனவர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருப்பதாக சில இந்தியப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. ஜனாதிபதியின்  விஜயத்தை இலங்கை கடற்படையினர் கச்சதீவுக்கு அண்மையாக  மீன்பிடிக்கும்  இந்திய மீனவர்களை தாக்குவதற்கு கிடைத்திருக்கும் “இலவச அனுமதியாக” கருதாமல் இருப்பதை உறுதிசெய்து கொள்வதற்கு கொழும்புடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று மீனவர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் இந்திய அரசாங்கத்தைக் கேட்டிருப்பதாக டெக்கான் ஹெரால்டசெய்தி வெளியிட்டிருந்தது.

திசநாயக்கவின் விஜயம் கச்சதீவை மீட்கவேண்டும் என்ற தமிழ்நாட்டின் கோரிக்கைக்கு நேரடியான  ஒரு சவாலே தவிர வேறு ஒன்றுமில்லை என்று தமிழ்நாடு படகு  மீனவர்கள் சங்கத்தின் தலைவர்  என்.ஜே. போஸ் கூறியதாக அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது.

ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் இந்திய அரசாங்கம் எத்தகைய வியாக்கியானத்தை செய்யும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். 

https://arangamnews.com/?p=12304

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.