Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஹச்-1பி விசா, அமெரிக்கா, டிரம்ப் உத்தரவு, அமெரிக்கா விசா கட்டுப்பாடு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஹச்-1பி விசா கட்டணத்தை 1 லட்சம் டாலர் அளவிற்கு உயர்த்தும் உத்தரவில் கையெழுத்திட்டார் டிரம்ப்.

கட்டுரை தகவல்

  • பெர்ன்ட் டெபுஸ்மான் ஜூனியர்

  • வெள்ளை மாளிகை

  • டேனியல் கேய்

  • வணிக செய்தியாளர்

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திறன் வாய்ந்த வெளிநாட்டு பணியாளர்களுக்கான ஹெச்-1பி விசாவுக்கான கட்டணத்தை 1,00,000 அமெரிக்க டாலர் (சுமார் 88 லட்சம் இந்திய ரூபாய்) அளவிற்கு உயர்த்தி புதிய உத்தரவை வெளியிட்டுள்ளார்.

அந்த உத்தரவில், ஹெச்-1பி திட்டம் தவறாகப் பயன்படுத்துவது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இனி புதிய கட்டணத்தை செலுத்தவில்லையென்றால் அமெரிக்காவிற்குள் நுழைய முடியாது.

ஹெச்-1பி திட்டம் அமெரிக்க பணியாளர்களுக்கு பாதகமாக இருப்பதாக அதன் எதிர்ப்பாளர்கள் கூறி வருகின்ற நிலையில் ஈலோன் மஸ்க் உள்ளிட்ட அத்திட்டத்தின் ஆதரவாளர்கள் இந்தத் திட்டம் உலகம் முழுவதுமிருந்து திறமைசாலிகளை அமெரிக்காவிற்குள் அழைத்து வர அனுமதிப்பதாக வாதிடுகின்றனர்.

டிரம்ப் புதிய "கோல்ட் கார்ட்" (Gold card) உருவாக்குவதற்கான உத்தரவையும் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் 1 மில்லியன் பவுண்ட் (சுமார் 11.8 கோடி இந்திய ரூபாய்) கட்டணம் செலுத்தினால் விரைவாக விசா பெற முடியும்.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் டிரம்புடன் வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக்கும் உடனிருந்தார்.

"ஹெச்-1பி விசாக்களுக்கு வருடத்திற்கு 1 லட்சம் டாலர்கள் கட்டணம் விதிக்கும் திட்டத்திற்கு அனைத்து பெரிய நிறுவனங்களும் ஒப்புதல் தெரிவித்துள்ளன. நாங்கள் அவர்களிடம் பேசியுள்ளோம்," என்றார் லுட்னிக்.

நம்முடைய வேலையை எடுத்துக் கொள்ள வெளியிலிருந்து ஆட்களை அழைத்து வருவதை நிறுத்துங்கள் என்று கூறும் லுட்னிக், "நீங்கள் யாருக்காவது பயிற்சி அளிக்க வேண்டுமென்றால் நமது நாட்டிலுள்ள சிறப்பான பல்கலைக்கழகங்களிலிருந்து வரும் பட்டதாரிகளுக்கு பயிற்சியளிக்க வேண்டும். அமெரிக்கர்களுக்குப் பயிற்சியளிக்க வேண்டும்." என்றார்.

ஹச்-1பி விசா, அமெரிக்கா, டிரம்ப் உத்தரவு, அமெரிக்கா விசா கட்டுப்பாடு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டிரம்பின் புதிய கோல்ட் கார்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தி பேசுகிறார் அமெரிக்காவின் வர்த்தக செயலாளரான ஹோவர்ட் லுட்னிக்.

2004-இல் இருந்து ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் அதிகபட்ச ஹெச்-1பி விசாக்களின் எண்ணிக்கை 85,000 ஆக உள்ளது.

தற்போது வரை ஹெச்-1பி விசாக்களுக்கு நிர்வாக கட்டணமாக 1,500 டாலர் வசூலிக்கப்படுகிறது.

அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் தரவுகளின்படி ஹெச்-1பி விசாக்களுக்கான விண்ணப்பங்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத வகையில் 3,59,000 ஆக குறைந்துள்ளது.

கடந்த நிதியாண்டில் இந்தத் திட்டம் மூலம் அதிக பலன் பெற்ற நிறுவனமாக அமேசானும் அதனைத் தொடர்ந்து டாடா, மைக்ரோசாப்ட், மெட்டா, ஆப்பிள் மற்றும் கூகுள் ஆகிய நிறுவனங்கள் இருப்பதாக அமெரிக்க அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன.

வாட்சன் இம்மிக்ரேஷன் லாவின் நிறுவனரான வழக்கறிஞர் தாஹ்மினா வாட்சன் பிபிசியிடம் பேசுகையில், இந்த புதிய உத்தரவு தனது வாடிக்கையாளர்களான சிறு வணிக நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப்களுக்கு "சவப்பெட்டியில் அடித்த ஆணி" போன்றது எனத் தெரிவித்தார்.

மேலும் அவர், "அனைவருக்கும் செலவு அதிகரிக்கப் போகிறது. அமெரிக்காவிற்குள் நுழைவதற்கே 1 லட்சம் டாலர் கட்டணம் என்பது நாசகரமான விளைவுகளை ஏற்படுத்தும். பல சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பணி செய்வதற்கான ஊழியர்கள் கிடைப்பதில்லை எனக் கூறுவார்கள்." என்றார்.

பணியிடங்களை நிரப்ப முடியாததால்தான் நிறுவனங்கள் பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து ஆட்களை தேர்வு செய்கின்றன என்கிறார் வாட்சன்.

ஹச்-1பி விசா, அமெரிக்கா, டிரம்ப் உத்தரவு, அமெரிக்கா விசா கட்டுப்பாடு

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்காவைச் சேர்ந்த வேலைவாய்ப்பு நிறுவனமான லிட்லர் மெண்டெல்சன் பிசியின் தலைவரான ஜோர்ஜ் லோபஸ் 1 லட்சம் டாலர் கட்டணம் என்பது "உலகளாவிய அளவில் தொழில்நுட்பம் மற்றும் இதர துறைகளில் அமெரிக்கா போட்டியிடுவதன் மீது தடை விதித்ததைப் போல ஆகிவிடும்" என்கிறார்.

"சில நிறுவனங்கள் அமெரிக்காவிற்கு வெளியே தங்களின் உற்பத்தியை மாற்றலாம், ஆனால் அது நடைமுறையில் மிகவும் சவாலானதாக இருக்கும்" என்று தெரிவித்தார் லோபஸ்.

ஹெச்-1பி விசா தொடர்பான விவாதங்கள் முன்னர் டிரம்பின் குழு மற்றும் அவரின் ஆதரவாளர்கள் இடையே பிளவை உண்டாக்கியது.

ஹெச்-1பி மீதான இருதரப்பு வாதங்களையும் தான் புரிந்து கொள்வதாக டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் தெரிவித்திருந்தார்.

அதற்கு முந்தைய வருடம் அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது தொழில்நுட்ப துறையின் ஆதரவைப் பெறுவதற்காக முயற்சித்த டிரம்ப், திறமைசாலிகளை ஈர்க்கும் நடைமுறையை எளிமையாக்குவதாகவும் கல்லூரி பட்டதாரிகளுக்கு க்ரீன் கார்ட் வழங்குவதாகவும் கூட தெரிவித்தார்.

"நிறுவனங்களில் வேலை செய்ய உங்களுக்கு நிறைய பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். உங்களால் அவர்களை பணியில் சேர்த்து தக்கவைத்துக் கொள்ள முடிய வேண்டும்." என ஆல்-இன் பாட்காஸ்டில் கூறியிருந்தார் டிரம்ப்.

2017-ஆம் ஆண்டு டிரம்பின் முதலாவது ஆட்சிக் காலத்தில் ஹெச்-1பி விசாக்களில் ஏற்படும் முறைகேடுகளைக் கண்டறியும் வழிமுறையை மேம்படுத்த விண்ணப்பங்களை தீவிரமாக ஆராய நிர்வாக உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார்.

2018-ஆம் நிதியாண்டில் ஹெச்-1பி விண்ணப்பங்களில் நிராகரிப்பு விகிதம் 24% ஆக உயர்ந்தது. இது பராக் ஓபாமாவின் ஆட்சி காலத்தில் 5-8% ஆகவும் ஜோ பைடனின் ஆட்சி காலத்தில் 2-4% ஆகவும் இருந்தது.

அப்போது டிரம்ப் நிர்வாகத்தின் ஹெச்-1பி உத்தரவை விமர்சித்த தொழில்நுட்ப நிறுவனங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தன.

ஹெச்-1பி திட்டத்தின் மீது கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது இந்தியா போன்ற நாடுகளில் குறிப்பிடத்தகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவுக்கு ஹெச்-1பி விசா கேட்டு விண்ணப்பங்கள் அதிகம் வரும் நாடுகளில் இந்தியா முன்னணி வகிக்கிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/ckg3jeyeklzo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எச்1பி விசா: அமெரிக்க அரசின் புதிய விளக்கம் - இந்தியர்கள் அறிய வேண்டியது என்ன?

ஹெச்1பி விசா என எழுதப்பட்டு புகைப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, விசா பற்றிய டிரம்ப்பின் புதிய உத்தரவு அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது

கட்டுரை தகவல்

  • இஷாத்ரிதா

  • செய்தியாளர், பிபிசி நியூஸ்

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

செப்டம்பர் 20 அன்று, ரோகன் மேத்தா, எட்டு மணி நேரத்தில் 8,000 டாலருக்கும் அதிகமாகச் செலவழித்து, இந்தியாவில் உள்ள நாக்பூரிலிருந்து அமெரிக்காவிற்குப் பறக்க, பல விமானப் பயணங்களை முன்பதிவு செய்து, ரத்து செய்து, மீண்டும் முன்பதிவு செய்தார். விரல்விட்டு எண்ணக்கூடிய சில வழிகள் மட்டுமே இருந்த நிலையில், அவர் செப்டம்பர் 21, அதிகாலை 12:01 EDT (Eastern Daylight Time)மணிக்கு முன் வந்து சேர வேண்டும் என்ற காலக்கெடுவை எப்படியாவது முடித்துவிடவேண்டும் என போராடினார்.

மும்பையிலிருந்து ஜான் எஃப். கென்னடி விமான நிலையத்திற்கு விர்ஜின் அட்லாண்டிக் விமானத்தில் ஏறியவுடன், மேத்தாவுடன் (அவரது வேண்டுகோளின்படி பெயர் மாற்றப்பட்டுள்ளது) பிபிசியின் இஷாத்ரிதா பேசினார்.

"நான் பல வழிகளை முன்பதிவு செய்தேன், ஏனென்றால் பெரும்பாலான வழிகள் காலக்கெடுவுக்கு மிக அருகில் வந்தன. ஒரு சிறிய தாமதம் ஏற்பட்டாலும், நான் காலக்கெடுவைத் தவறவிட்டிருப்பேன்" என்று அவர் கூறுகிறார்.

ஒரு மென்பொருள் நிபுணரான அவர், தனது குடும்பத்துடன் 11 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருகிறார். இந்த மாத தொடக்கத்தில் தனது தந்தையின் நினைவு தினத்திற்காக நாக்பூருக்கு வந்திருந்தார். அவர், தங்கள் முதலாளிகளால் நிதியுதவி செய்யப்படும் H-1B எனப்படும் பணி விசா மூலம் அமெரிக்காவில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான இந்தியர்களில் ஒருவர்.

செப்டம்பர் 19 அன்று, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். அதில், புதிய H-1B விசா ஊழியர்களுக்கு ஒரு முதலாளி 100,000 டாலர் கூடுதல் கட்டணமாகச் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய விதி செப்டம்பர் 21, அதிகாலை 12:01 EDT-லிருந்து நடைமுறைக்கு வரும்.

H-1B விசா என்பது, அமெரிக்காவில் சிறப்புத் துறைகள் மற்றும் பணிகளில் பணிபுரிய விரும்பும் வெளிநாட்டவர்களுக்கான ஒரு பணி விசா திட்டமாகும். கடந்த ஆண்டு, அமெரிக்கா ஒவ்வொரு ஆண்டும் வழங்கும் 85,000 H-1B விசாக்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமான விசாக்களை இந்தியர்கள் பெற்றனர். இந்த உத்தரவு இந்திய H-1B விசா வைத்திருப்போருக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

"என் மனைவியும் மகளும் என்னுடன் வராதது மகிழ்ச்சி அளிக்கிறது. இது ஒரு அதிர்ச்சியூட்டும் அனுபவமாக உள்ளது. நான் வாழ்க்கையில் எடுத்த முடிவுகளுக்காக வருந்துகிறேன். இந்த நாட்டிற்காக உழைக்க எனது இளமைக்காலத்தின் முக்கிய பகுதியை நான் கொடுத்தேன். இப்போது நான் விரும்பத்தகாதவனாக உணர்கிறேன்" என்று மேத்தா கூறுகிறார்.

"என் மகள் தன் முழு வாழ்க்கையையும் அமெரிக்காவில் கழித்துவிட்டாள். நான் எப்படி என் வாழ்க்கையை அங்கிருந்து பிடுங்கி, இந்தியாவில் மீண்டும் புதிதாகத் தொடங்குவேன் என்று எனக்குத் தெரியவில்லை."

இந்தியர்கள் பயணங்களை ரத்து செய்து, விடுமுறைத் திட்டங்களை கைவிட்டனர்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டிரம்பின் புதிய உத்தரவை குடிவரவு வழக்கறிஞர்கள் முழுமையாக புரிந்துகொள்ள முயன்று வருகின்றனர்

பிபிசி இந்தியாவைச் சேர்ந்த பல H-1B விசா வைத்திருப்போரிடம் பேசியது. அவர்களில் பலர் பல தசாப்தங்களாக அமெரிக்காவில் பணிபுரிந்து வருகின்றனர்.

தங்கள் முதலாளிகளால் அங்கீகரிக்கப்படாததால், அவர்களில் யாரும் தங்கள் பெயரை வெளியிட விரும்பவில்லை.

பலர் "கண்காணிப்பு" என்ற காரணத்தைக் குறிப்பிட்டு எங்களுடன் பேச முற்றிலும் மறுத்துவிட்டனர்.

நாங்கள் பேசிய அனைவரும் இந்த உத்தரவு குறித்துக் கவலை கொண்டவர்களாகத் தோன்றினர். ஆனால், ஏற்கனவே H-1B விசா வைத்திருப்பவர்களுக்கு அது என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பது குறித்து அவர்களுக்கும் உறுதியாகத் தெரியவில்லை.

ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அமெரிக்காவில் உள்ளவர்கள் வெளிநாடு செல்ல வேண்டாம் என்றும், வெளிநாடுகளுக்குப் பயணிப்பவர்கள் காலக்கெடுவுக்கு முன் திரும்பி வருமாறும் குடிவரவு வழக்கறிஞர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஐரோப்பாவில் விடுமுறையில் இருந்த H-1B விசா வைத்திருந்த இந்தியர் ஒருவர் பிபிசியிடம் பேசுகையில், "இப்போது நிலைமை மிகவும் தெளிவாக இல்லை. முதலாளிகள் எப்படிச் சிந்திக்கிறார்கள், இது எப்படி அமல்படுத்தப்படும் என்பதை நாம் இன்னும் பார்க்க வேண்டும். நான் புரிந்துகொண்டவரை, இந்த உத்தரவு புதிய H-1B விசாக்களுக்கு மட்டுமே பொருந்தும். குடிவரவு வழக்கறிஞர்கள் இன்னும் அதை புரிந்துகொள்ள முயன்று வருகிறார்கள். மேலும், எங்களை திரும்பி வரும்படி அறிவுறுத்தியுள்ளனர்" என்று கூறினார்.

அமெரிக்க அரசின் விளக்கம்

அமெரிக்க அதிபரின் உதவியாளர் கரோலின் லேவிட் செய்தித் தொடர்பாளர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, புதிய விதிகள் புதிதாக வழங்கப்படவுள்ள H-1B விசாக்களுக்கு மட்டுமே பொருந்தும் என அமெரிக்க அதிபரின் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லேவிட் விளக்கமளித்துள்ளார்

புதிய விசா விதிகள் பற்றிய குழப்பத்தை தொடர்ந்து அமெரிக்க அரசு விதிகள் பற்றிய விளக்கத்தை அறிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பு செயலாளர் கரோலின் லேவிட் இது குறித்து எக்ஸ் தளத்தில் ஒரு விளக்கத்தை தெரிவித்துள்ளார்.

அதன்படி

  • இது ஒருமுறை மட்டும் செலுத்த வேண்டிய கட்டணம். ஒவ்வொரு ஆண்டும் செலுத்த வேண்டிய கட்டணம் அல்ல. இது புதிய விண்ணப்பங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

  • ஏற்கனவே H-1B விசா வைத்திருந்து தற்போது நாட்டுக்கு வெளியே இருப்பவர்கள் நாட்டுக்குள் மீண்டும் நுழைய 100000 டாலர் கட்டணம் விதிக்கப்படாது. வழக்கமாக அவர்கள் செல்லக் கூடிய அதே அளவில் நாட்டிலிருந்து வெளியேறவும் மீண்டும் நுழையவும் முடியும், நேற்று வெளியிடப்பட்ட அறிவிப்பால் அவர்களுக்கு இருக்கும் இந்த உரிமை பாதிக்கப்படாது.

  • இது புதிய விசாக்களுக்கு மட்டுமே பொருந்தும், விசா புதுப்பித்தல் அல்லது ஏற்கனவே விசா வைத்திருப்பவர்களுக்கு இது பொருந்தாது. இந்த விதி, அடுத்த வரவிருக்கும் லாட்டரி சுழற்சியில் தேர்வாவோருக்கு பொருந்தும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c99ggg2gvrko

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹெச்1பி விசா கட்டண உயர்வு: இந்தியாவை விட அமெரிக்காவையே அதிகம் பாதிக்கும் என்று கருதப்படுவது ஏன்?

ஹெச்1பி விசா, இந்தியா - அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஹெச்1பி விசா கட்டணத்தை பன்மடங்கு வரை உயர்த்துவதாக அறிவித்ததன் மூலம் டிரம்ப் தொழில்நுட்ப உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார்.

கட்டுரை தகவல்

  • சௌதிக் பிஸ்வாஸ் மற்றும் நிகில் இனாம்தார்

  • 6 மணி நேரங்களுக்கு முன்னர்

பயம், குழப்பம், பின்னர் வெள்ளை மாளிகையின் விளக்கம் என ஹெச் 1-பி விசாவின் கீழ் உள்ள லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு இது ஒரு அதிர்ச்சிகரமான வார இறுதியாக இருந்தது.

வெள்ளிக்கிழமை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திறன்மிகு தொழிலாளர்களுக்கான விசா கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தி 100,000 டாலராக அறிவித்தார். இது தொழில்நுட்ப உலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

சிலிகான் பள்ளத்தாக்கில் செயல்படும் நிறுவனங்கள் ஊழியர்களை வெளிநாடு பயணம் செய்ய வேண்டாம் என்று எச்சரித்தன, ஹெச்1பி விசா வைத்திருந்த வெளிநாட்டு ஊழியர்கள் விமான டிக்கெட் தேடி அலைந்தனர், உத்தரவை புரிந்துகொள்ள குடியேற்ற வழக்கறிஞர்கள் இரவு பகலாக வேலை செய்தனர்.

சனிக்கிழமை, வெள்ளை மாளிகை இந்தக் குழப்பத்தைத் தணிக்க முயன்று, கட்டணம் புதிய விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே பொருந்தும், அதுவும் ஒரு முறை மட்டுமே வசூலிக்கப்படும் என்று தெளிவுபடுத்தியது. ஆனால், நீண்ட காலமாக இருந்த ஹெச் - 1பி திட்டத்தின் எதிர்காலம் இன்னும் தெளிவில்லாமல் உள்ளது.

இந்தத் திட்டம் அமெரிக்கத் தொழிலாளர்களுக்கு எதிராக உள்ளது என்று விமர்சிக்கப்பட்டாலும், உலகளாவிய திறமைகளை ஈர்க்கும் ஒன்றாக கருதப்பட்டது.

இந்த மாற்றங்களுடனும், மூன்று தசாப்தங்களாக இந்தியர்களின் "அமெரிக்க கனவை" நனவாக்கி, அமெரிக்க தொழில்களுக்கு திறமையான ஊழியர்களை வழங்கிய ஹெச்1பி திட்டத்தை இந்தக் கொள்கை பெருமளவு தடுக்கிறது.

இந்த ஹெச் - 1பி திட்டம் இந்தியாவையும் அமெரிக்காவையும் மாற்றியமைத்தது.

ஹெச்1பி விசா, இந்தியா - அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

இந்தியர்களுக்கு, இது ஒரு கனவு பயணமாக மாறியது.

சிறு நகரங்களைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர்கள் டாலர்களில் சம்பாதிக்க ஆரம்பித்தனர், குடும்பங்கள் நடுத்தர வர்க்கத்துக்கு உயர்ந்தன, விமான நிறுவனங்கள் முதல் ரியல் எஸ்டேட் வரை பல துறைகள் உலகம் சுற்றும் இந்தியர்களுக்காக உருவாயின.

இந்தத் திட்டம் ஆய்வகங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், புதிய நிறுவனங்களை நிரப்பும் திறமையான பணியாளர்களை அமெரிக்காவுக்குக் கொடுத்தது. இன்று, இந்திய வம்சாவளியினர் கூகுள், மைக்ரோசாப்ட், ஐபிஎம் போன்ற நிறுவனங்களை வழிநடத்துகிறார்கள். அமெரிக்க மருத்துவர்களில் சுமார் 6% இந்தியர்கள்.

ஹெச் -1பி திட்டத்தில் இந்தியர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள், சமீப ஆண்டுகளில் 70% க்கும் மேல் விசாக்கள் இந்தியர்களுக்கு கிடைத்தன. (சீனா இரண்டாவது இடத்தில், சுமார் 12%)

தொழில்நுட்பத் துறையில், இந்தியர்களின் பங்கு இன்னும் பெரியது. 2015-ல் கிடைத்த தகவலின்படி, 80% க்கும் மேற்பட்ட "கணினி" வேலைகள் இந்தியர்களுக்கு சென்றன. அந்த நிலை இப்போதும் பெரிதாக மாறவில்லை என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

மருத்துவத் துறையிலும் இது தெளிவாகிறது. 2023-ல், 8,200-க்கும் மேற்பட்ட ஹெச்-1பி விசா பெற்றவர்கள் மருத்துவமனைகளில் பணியாற்ற அனுமதிக்கப்பட்டனர்.

இந்தியா, சர்வதேச மருத்துவ பட்டதாரிகளின் மிகப்பெரிய மூலாதாரமாக உள்ளது. (பொதுவாக ஹெச் - 1பி விசாக்களில் அமெரிக்காவில் இருப்பவர்கள்) அவர்களில் 22% இந்தியர்கள். அமெரிக்காவில் உள்ள மருத்துவர்களில் கால் பங்கு வெளிநாட்டவர்கள் என்ற நிலையில், ஹெச் - 1பி விசா வைத்துள்ள இந்தியர்கள் மொத்தத்தில் 5-6% இருக்கலாம்.

டிரம்பின் புதிய 100,000 டாலர் கட்டணம் நடைமுறையில் முற்றிலும் செயல்படுத்த முடியாதது. 2023-ல் புதிய ஹெச்-1பி ஊழியர்களின் சராசரி சம்பளம் 94,000 டாலர் மட்டுமே. ஏற்கனவே பணியில் இருப்பவர்களுக்கு 129,000 டாலர். இந்தக் கட்டணம் புதிதாக நியமிக்கப்படுபவர்களுக்கே மட்டுமே பொருந்துவதால், பலர் இதை செலுத்த முடியாது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

"புதிதாக ஹெச் -1பி விசா பெறுபவர்களுக்கு மட்டுமே இந்த கட்டணம் பொருந்தும் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இதனால், உடனடி பாதிப்பு இல்லாமல், நடுத்தர மற்றும் நீண்டகால தொழிலாளர் பற்றாக்குறை ஏற்படலாம்," என்று நிஸ்கனென் மையத்தின் குடியேற்றக் கொள்கை ஆய்வாளர் கில் குவேரா பிபிசியிடம் கூறினார்.

இந்தியா முதலில் பாதிக்கப்படலாம், ஆனால் அமெரிக்காவிலும் இதன் தாக்கம் ஆழமாக இருக்கலாம். டிசிஎஸ், இன்ஃபோசிஸ் போன்ற இந்திய நிறுவனங்கள் முன்பிருந்தே இதற்கு தயாராகி வருகின்றன.

புள்ளிவிவரங்கள் இதுகுறித்த புரிதலை தருகின்றன.

ஹெச்-1பி விசா பெறுபவர்களில் 70% இந்தியர்கள். ஆனால், 2023-ல் முதல் 10 ஹெச்-1பி வேலை அளிக்கும் நிறுவனங்களில் மூன்று மட்டுமே இந்தியாவுடன் தொடர்புடையவை, 2016-ல் இது ஆறாக இருந்தது என்று பியூ ஆய்வு கூறுகிறது.

இருந்தாலும், 283 பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்திய ஐடி துறை, தனது வருவாயில் பாதிக்கு மேல் அமெரிக்காவுக்கு திறமையான ஊழியர்களை அனுப்புவதை நம்பியுள்ளதால், பெரிய சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

விசா கட்டண உயர்வு அமெரிக்காவிலுள்ள சில "திட்டங்களின் வணிகத் தொடர்ச்சியை பாதிக்கலாம்" என்று ஐடி துறை அமைப்பான நாஸ்காம் எச்சரிக்கிறது. இந்த சட்டம் குறித்த தெளிவு கிடைக்கும் வரை, வாடிக்கையாளர்கள் திட்டங்களுக்கு புதிய தொகை நிர்ணயம் செய்யவோ அல்லது தாமதிக்கவோ வலியுறுத்தலாம். நிறுவனங்கள் தங்கள் பணியாளர் முறையை மாற்றலாம், அதாவது வேலையை வெளிநாடுகளுக்கு மாற்றுதல், அமெரிக்காவில் உள்ள வேலை வாய்ப்புகளை குறைத்தல், ஸ்பான்சர்ஷிப் வழங்கும் போது மிகவும் தேர்வு செய்து செயல்படுதல் போன்றவை.

இந்திய நிறுவனங்கள் கூடுதல் விசா செலவுகளை அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு மாற்றிவிடும் வாய்ப்பும் உள்ளது என்று முன்னணி பணியாளர் நிறுவனம் CIEL HR-இன் ஆதித்ய நாராயண் மிஸ்ரா கூறுகிறார்.

"முதலாளிகள் அதிக செலவு தேவைப்படும் விசா ஸ்பான்சர்ஷிப்பை ஏற்க தயங்குவதால், தொலைதூர ஒப்பந்தங்கள், வெளிநாட்டு சேவைகள், தற்காலிக பணியாளர்களை அதிகம் நம்பலாம்," என்று அவர் விளக்குகிறார்.

அமெரிக்காவுக்கு இதன் தாக்கம் கடுமையாக இருக்கலாம்.

மருத்துவர்கள் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் மருத்துவமனைகள், ஸ்டெம் (STEM-அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத்தை ஒருங்கிணைக்கும் துறை) மாணவர்களை ஈர்க்க முடியாமல் தவிக்கும் பல்கலைக்கழகங்கள், கூகுள் அல்லது அமேசான் போன்ற பெரிய செல்வாக்கு இல்லாத புதிய நிறுவனங்கள் மிகவும் பாதிக்கப்படலாம்.

"இந்த விசா கட்டண உயர்வு அமெரிக்க நிறுவனங்களை தங்கள் வேலைவாய்ப்பு முறைகளை மாற்றவும், பல வேலைகளை வெளிநாடுகளுக்கு மாற்றவும் கட்டாயப்படுத்தும். அமெரிக்காவில் நிறுவனங்களை நடத்த வரும் தொழில்முனைவோர் மற்றும் தலைமை நிர்வாகிகளையும் தடுக்கும். இது அமெரிக்காவின் புதுமை படைத்தல் மற்றும் போட்டித்திறனுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்," என்று கேட்டோ இன்ஸ்டிட்யூட்டின் குடியேற்ற ஆய்வு இயக்குநர் டேவிட் பியர் பிபிசியிடம் கூறினார்.

ஹெச்1பி விசா, இந்தியா - அமெரிக்கா

பட மூலாதாரம், San Francisco Chronicle via Getty Images

படக்குறிப்பு, ஹெச் - 1பி திட்டத்தில் இந்தியர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர், அதில் பயன் பெறுபவர்களில் 70% க்கும் அதிகமானோர் உள்ளனர்.

இந்த கவலை மற்ற நிபுணர்களாலும் பகிரப்படுகிறது. "அமெரிக்காவில் தொழில்நுட்பம், மருத்துவம் போன்ற துறைகளில் பணியாளர்களுக்கான தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் துறைகள் மிகவும் முக்கியமானவை என்பதால், சில ஆண்டுகள் நீடிக்கும் பணியாளர் பற்றாக்குறை அமெரிக்க பொருளாதாரத்தையும் நாட்டின் நலனையும் கடுமையாக பாதிக்கலாம்," என்று குவேரா கூறுகிறார்.

"இது திறமையான இந்தியர்களை வேறு நாடுகளில் கல்வி கற்கத் தூண்டலாம். இதனால் அமெரிக்க பல்கலைக்கழகங்களும் பாதிக்கப்படலாம்."

உண்மையில், இதன் தாக்கத்தை மிகவும் நேரடியாக உணரப் போகிறவர்கள் இந்திய மாணவர்கள் தான். அமெரிக்காவில் உள்ள சர்வதேச மாணவர்களில் நால்வரில் ஒருவர் இந்தியர்.

120 பல்கலைக்கழகங்களில் 25,000 மாணவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வட அமெரிக்க இந்திய மாணவர் சங்கத்தின் நிறுவனர் சுதான்ஷு கௌஷிக், செப்டம்பர் மாத சேர்க்கைக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்ததால் புதிய மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர் என்கிறார்.

"இது நேரடி தாக்குதல் போல் உணரப்பட்டது. மாணவர்கள் ஏற்கனவே 50,000 டாலர் முதல் 100,000 டாலர் வரை செலவு செய்துவிட்டனர். ஆனால் அமெரிக்க வேலைவாய்ப்புக்கான முக்கிய பாதை இப்போது மூடப்பட்டுவிட்டது," என்று கௌஷிக் பிபிசியிடம் கூறினார்.

பல இந்திய மாணவர்கள் நிரந்தரமாக குடியேறக்கூடிய நாடுகளைத் தேர்ந்தெடுப்பார்கள் என்பதால், அடுத்த ஆண்டு அமெரிக்க பல்கலைக்கழக சேர்க்கைகள் பாதிக்கப்படலாம் என்று அவர் கணிக்கிறார்.

இந்த கட்டண உயர்வின் முழு தாக்கம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

டிரம்பின் இந்த நடவடிக்கை விரைவில் சட்ட சவால்களை எதிர்கொள்ளும் என்று குடியேற்ற வழக்கறிஞர்கள் கருதுகின்றனர். "புதிய ஹெச்1பி கொள்கை அமெரிக்காவுக்கு பல எதிர்மறை விளைவுகளைத் தரலாம். ஆனால் அவை எப்படி இருக்கும் என்பது தெரிய சிறிது காலம் ஆகும்," என்று குவேரா குறிப்பிடுகிறார்.

"உதாரணமாக, நிர்வாக உத்தரவு சில நிறுவனங்களுக்கு விலக்கு வழங்க அனுமதிக்கிறது. அதனால் அமேசான், ஆப்பிள், கூகுள், மெட்டா போன்ற அதிக அளவில் ஹெச்1பி பயன்படுத்தும் நிறுவனங்கள் இந்தக் கட்டணத்திலிருந்து விலக்கு பெறக்கூடும். ஆனால் அவர்கள் அனைவரும் விலக்கு பெற்றால், அந்தக் கட்டணத்தின் நோக்கமே வீணாகிவிடும்."

இந்த ஹெச்1பி மாற்றம் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வரி போல் இல்லாமல், அமெரிக்க நிறுவனங்களுக்கும் பொருளாதாரத்திற்கும் ஒரு சவாலாக தோன்றுகிறது. ஹெச்1பி விசா வைத்திருப்பவர்களும் அவர்களது குடும்பங்களும் ஆண்டுக்கு சுமார் $86 பில்லியன் பங்களிக்கின்றனர், இதில் $24 பில்லியன் பெடரல் வரிகளாகவும், $11 பில்லியன் மாநில மற்றும் உள்ளூர் வரிகளாகவும் செல்கின்றன.

நிறுவனங்கள் எவ்வாறு எதிர்வினையாற்றுகின்றன என்பதைப் பொறுத்து, அமெரிக்கா புதுமையிலும் திறமையிலும் முன்னிலை வகிக்குமா அல்லது மற்ற நாடுகளுக்கு வாய்ப்பளிக்குமா என்பது தீர்மானிக்கப்படும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cj6xndpl65ro

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.