Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இது போர்க்களமல்ல; அரசியற் களமே!

September 29, 2025

இது போர்க்களமல்ல; அரசியற் களமே!

— கருணாகரன் —

மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும். மாகாணசபைகளுக்கான அதிகாரங்களை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும். மாகாணசபைகளுக்கு மேலான (13+) அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்றெல்லாம் இதுவரையிலும் வலியுறுத்திக் கொண்டிருந்தன தமிழ்த்தேசியக் கட்சிகள். இதற்காக இலங்கை அரசை மட்டுமல்ல, இந்திய அரசையும் கோரிக் கொண்டிருந்தன. இந்தக் கோரிக்கையோடு கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவரலாயத்துக்கும் யாழ்ப்பாணத்திலுள்ள துணைத்தூதரகத்துக்கும் பல தடவை சென்று முறையிட்டும் பேசியும் வந்திருக்கிறார்கள். 23.09.2025 அன்று கூட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் எம்.பிக்கள் இதற்காக இந்தியத் தூதரைச் சந்தித்திருக்கின்றனர்.

ஆனால், மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துமாறு தென்னிலங்கைச் சிங்களக் கட்சிகள் எல்லாம் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்தச் சூழலில் தமிழ்க் கட்சிகள் அதை ஒரு நல்வாய்ப்பாகப் பயன்படுத்துவதற்கு முயற்சிக்காமல், வழமையைப்போல “தனித்தவில்” வாசிக்கின்றன. இது ஏன்? குறைந்த பட்சம் தமிழ்பேசும் கட்சிகளாகக் கூட ஒருங்கிணைந்த கூட்டுக் கோரிக்கையாக இதனை மாற்ற முடியாமல் இருப்பது ஏன்? 

மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு தென்னிலங்கைக் கட்சிகள் எல்லாம் இலங்கை அரசை (NPP அரசாங்கத்தை) மட்டும் கேட்கவில்லை. இந்திய அரசையும் கேட்டுள்ளன. இதற்கான சந்திப்பு ஒன்றுகூட கடந்த வாரம் ஐக்கிய மக்கள் சந்தியின் எம்பிக்களுக்கும் இந்தியத்தூதுவருக்குமிடையில் நடந்துள்ளது. அப்பொழுது எல்லாக் கட்சிகளும் கூடி ஒன்றாக வாருங்கள். அப்போதுதான் இந்தக் கோரிக்கைக்கு வலுக் கூடும் என்று சொல்லியிருக்கிறார் இந்தியத் தூதர். 

இவ்வளவு காலமும் மாகாணசபைகளுக்கான அதிகாரத்தைப் பகிர்வதில் பின்னடித்த கட்சிகள் (சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, பொதுஜன பெரமுன உள்ளிட்டவை) எல்லாம் மாகாணசபைகளைப் பற்றியே பேசுகின்ற – பேச வேண்டிய ஒரு காலம் வந்துள்ளது.  அப்படியான ஒரு அரசியல் நிலைமை இலங்கையில் உருவாகியுள்ளது. 

இதற்குக் காரணம், ஜனாதிபதி, பாராளுமன்றம், உள்ளுராட்சி மன்றம் போன்ற அதிகார மையங்களை NPP கையகப்படுத்தி வைத்திருக்கிறது. ஏனைய கட்சிகள் வரலாற்றில் முதற்தடவையாக அதிகாரமற்ற தரப்புகளாக மாறியுள்ளன. இதனால்  மாகாணசபைகளிலாவது அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்பதற்காக அதற்கான தேர்தலைக் கோருகின்றன. தேர்தலை  நடத்தினால் எப்படியாவது மாகாணசபைகளைக் கைப்பற்றலாம் என்ற நம்பிக்கையோடிருக்கின்றன. 

அப்படித் தேர்தலை நடத்தி மாகாணசபைகளைக் கைப்பற்றினால், பிறகு இந்தக் கட்சிகளால் அடுத்த கட்டப்போராட்டம் மாகாணசபைகளுக்கான அதிகாரத்துக்காக  நடத்தப்படும். ஏனென்றால், அதிகாரமற்ற மாகாணசபைகளை வைத்துக் கொண்டிருப்பதால் இவற்றுக்கு என்ன பயன்? எனவே சிங்களக் கட்சிகளே மாகாண அதிகாரத்தைக் கோருகின்ற, அதற்காகப் போராடுகின்ற ஒரு காலம் கனிந்துள்ளது. 

இவ்வாறு கனிந்துள்ள நல்வாய்ப்புச் சூழலைப் பயன்படுத்திக் கொள்வதைப் பற்றித் தமிழ்த்தேசியக் கட்சிகளிடத்திலும் சரி, தமிழ்த்தேசியம் என்ற அடையாளத்தைக் கொண்டிருக்காத ஏனைய தமிழ்க்கட்சிகளும் (ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி, கிழக்குத் தமிழர் ஒன்றியம், புதிய ஜனநாயக மாக்ஸிஸ லெனினிஸக் கட்சி போன்றவை) சரி அக்கறையற்றே உள்ளன. அல்லது இதைக் கையாளத் தெரியாமல் தடுமாறுகின்றன. 

மாகாணசபைகளைப் பலப்படுத்த வேண்டும். அதன் மூலம் முதற்கட்ட அனுகூலங்களைச் சாத்தியப்படுத்த வேண்டும் என்று மெய்யாகவே இந்தக் கட்சிகள் நம்பினால், இப்பொழுது உருவாகியிருக்கின்ற மாகாணசபைகளின் மீதான அனைத்துத் தரப்பின் கரிசனைச்  சூழலைக் கையாளக் கூடிய கட்டமைப்பையும் பொறிமுறையையும் உருவாக்க முயற்சித்திருக்கும். அதற்கான சந்திப்புகளையும் உரையாடல்களையும் வடக்குக் கிழக்கு தெற்கு மேற்கு மத்தி என அனைத்துப் பரப்பிலுமுள்ள சக்திகளுடன் நடத்துவதற்கான தயாரிப்புகள் நடந்திருக்கும். மாகாணசபைகளைப் பற்றிச் சிந்திக்கின்ற அனைத்து தரப்பையும் ஒருங்கிணைந்த ஒரு Net Work இல் கொண்டு வந்திருக்கும்.

இதில் அரசியற் கட்சிகள் மட்டுமல்லாமல், அனைத்துச் சூழலிலும் உள்ள ஊடகவியலாளர்கள், ஜனநாயக விரும்பிகள், மாகாணசபைகளைப் பற்றியும் அதிகாரப் பகிர்வு பற்றியும்  சாதகமாகப் பேசி வரும் புத்திஜீவிகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் எனப் பலரையும் ஒருங்கிணைத்து ஒரு கூட்டு முன்னணியாக மாற்ற வேண்டும். இதைச் சாத்தியமாக்குவது ஒன்றும் கடினமே இல்லை. ஏனென்றால், இந்தக் கட்டுரையின் தொடக்கத்திலேயே சொல்லப்பட்டுள்ளதைப்போல, எல்லாத் தரப்பும் மாகாணசபைகளைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கும்போது அதற்கான கட்டமைப்பை உருவாக்குவது எளிதல்லவா! 

முதற்கட்டமாக கொழும்பில் இதற்கென ஒரு தொடர்பாடல் மையத்தையும் தொடர்பாடற் குழுவையும் உருவாக்க வேண்டும். அதிலிருந்தே விடயங்களைக் கையாளலாம். 

இதில் கவனிக்க வேண்டியது, இந்த விடயத்தில் படிப்படியாகவே விடயங்களை நகர்த்த வேண்டும். முதலில் மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்துமாறு அரசிடம் கூட்டாகக் கேட்பது, அழுத்தம் கொடுப்பது. குறிப்பாக கால எல்லையை நிர்ணயிக்குமாறு வலியுறுத்துவது. இதற்கு அரசாங்கம் சரியான பதிலளிக்கவில்லை என்றால், போராட்டங்களை நடத்துவதைப் பற்றிச் சிந்திப்பது. இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்துவது என்பது, ஜனாநாயக அடிப்படையிலான கோரிக்கையாகும். அதை வலியுறுத்துவது ஜனநாயக அடிப்படையிலானது. எந்த நிலையிலும் எதன் பொருட்டும் அரசாங்கம் ஜனநாயக மறுப்பைச் செய்யக் கூடாது என்பதாக இந்தப் போராட்டங்களும் கோரிக்கைகளும் அமைய  வேண்டும். 

அரசாங்கம் இணங்கியோ உடன்பட்டோ மாகாணசபைகளுக்கான தேர்தல் நடத்தப்படுமாக இருந்தால், அதை எதிர்கொள்ளும் விதத்தைப் பற்றி ஆராயலாம். இது ஒன்றும் முக்கியமானதல்ல. ஏனென்றால், மாகாணசபைகளுக்கான தேர்தல் வெவ்வேறு சூழலைக் கொண்ட பிராந்தியங்களின் தேர்தலாக இருப்பதால், அந்தந்தச் சூழலுக்கு ஏற்றவாறே தேர்தலை எதிர்கொள்ளும் நடைமுறைகளும் இருக்கும். ஆனாலும் அதைக் குறித்தும் சிந்திக்கலாம். 

அடுத்தது முக்கியமானது. அதுதான் அதிகாரங்களை வலுப்படுத்துவதாகும். மாகாணசபைகளுக்கான முழுமையான அதிகாரங்களைக் கோருவதும் அவற்றை நடைமுறைப்படுத்துவதுமாகும். இதற்கான கலந்துரையாடல்களு பொறிமுறையும் வேணும். ஆனால், அதை இப்பொழுது எக்காரணம் கொண்டு செய்யவே கூடாது. அப்படி அவரசப்பட்டு அதிகாரப் பகிர்வைப் பற்றிப் பேச முற்பட்டால், மாகாணசபைகளுக்கான தேர்தல் கோரிக்கையே விடுபட்டுப் போகக் கூடிய சூழல் உருவாகி விடும். மட்டுமல்ல, தொடக்கத்திலேயே தேவையற்ற விவாதங்கள் உருவாகி எல்லாமே பாழாகி விடும். அது அரசாங்கத்துக்கே நல்வாய்ப்பை அளிக்கும். 

ஆகவே இந்த விடயத்தை மிக நுட்பமாகவும் நிதானமாகவும் கையாள வேண்டிய கூடுதல் பொறுப்பு தமிழ்க்கட்சிகளுக்கு உள்ளது. தமிழ்த்தரப்பு அல்லது தமிழ் பேசும் சமூகங்கள்தான் இதனால் (மாகாணசபைகள் முடக்கப்பட்டதால்) கூடுதலாகப் பாதிக்கப்படுகின்றன. 

எனவே கூடிய கரிசனையை எடுக்க வேண்டியது தமிழ் பேசும் தரப்பினரே. இந்தச் சந்தர்ப்பத்தில் முஸ்லிம்களிடமிருந்து இன்னும் அழுத்தம் திருத்தமான ஒரு அபிப்பிராயத்தையும் அல்லது நிலைப்பாட்டையும் காண முடியவில்லை. எனவே தமிழ்தரப்பு முக்கியமாக முஸ்லிம் கட்சிகளோடு பிரத்தியேகமாகப் பேச வேண்டும். 

தேர்தல் கூட்டுகளை வைப்பதற்கு ஆலாய்ப் பறந்து இரவு பகலாகச் சிந்திக்கின்ற – சந்திப்புகளை நடத்துகின்ற, கூட்டுகளை உருவாக்குகின்ற அரசியற் கட்சிகள், அதை விட முக்கியமான மாகாணசபை விடயத்தில் ஆர்வமற்றிருப்பது ஏன்?

மாகாணசபைகளைப் பற்றித் தொடர்ச்சியாகப் பேசி வருகிறோம். அப்படியிருக்கும்போது அதைப்பற்றிச் சிந்திக்கவில்லை என்று எப்படிக் குற்றம் சாட்ட முடியும் என்று சில கட்சியினர் கேட்கலாம். எதையும் பேசுவது வேறு. அவற்றைச் செயலாக்கமாக வெற்றியடையச் செய்வது வேறு. இப்பொழுது பேசுவதை விட செயற்படுவதற்கான சூழல் தானாகவே வந்திருப்பதால், அதை வாய்ப்பாகப் பயன்படுத்த வேண்டும் என்றே இங்கே வலியுறுத்தப்படுகிறது. மாறாக எவரையும் குற்றப்படுத்தி நிந்திப்பதற்காக அல்ல. ஆனால், மந்த கதியில் எதையும் செய்ய  முயற்சித்தால், அது எதிர்விளைவுகயே – பின்னடைவுகளையே தரக் கூடிய சாத்தியமுண்டு. அரசியலில் அபூர்வமாகவே வாய்ப்புகள ஏற்படுவது. அதைக் கச்சிதமாகப் பிடித்துக் கொள்வதே நிபுணத்துவமும் சாணக்கியமுமாகும். 

இப்போது உருவாகியிருக்கும் மாகாணசபைகளுக்கான தேர்தல் குறித்த பல தரப்பின் குரல்களுக்காக அரசாங்கம் அடுத்த ஆண்டு தேர்தலை நடத்துவதாகப் பொத்தாம் பொதுவாகச் சொல்லியுள்ளது. ஆனால், அதற்கான கால எல்லையை அது சொல்லவில்லை. மந்த கதியில் அல்லது தனித்த நிலையில் இந்தக் கோரிக்கை இருக்குமாக இருந்தால், அரசாங்கம் இதை இழுத்தடித்து, வேறொரு சூழ்நிலைக்குத் தள்ளி விடவும் வாய்ப்புண்டு. அப்பொழுது இந்தக் கோரிக்கையைக் கை விட்டுத் தென்னிலங்கைக் கட்சிகள் வேறு பிரச்சினையில் தாவி விடவும் கூடும். 

ஆகவேதான் தாமதிக்காமல் விரைவில் இது தொடர்பாக முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. இது மாகாண சபைகளை இயங்க வைப்பதற்காக வேலை செய்வதற்கு வாய்ப்பான சூழல். இதில் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் தவணை முறையில் மரணமே!

தமிழ்த் தேசியக் கட்சிகள் தொடக்கம் அனைத்துத் தமிழ் பேசும் தரப்பினரும் தங்களுடைய அடையாளத்துக்கு ஏற்பவும் மாகாணசபைகளைக் கொண்டு வருவதற்கு முன்னின்றவர்கள் என்ற அடிப்படிக் காரணத்துக்காகவும் விரைந்து களத்தில் இறங்க வேண்டும். இது ஒன்றும் போர்க்களமல்ல. அரசியற் களமே!

https://arangamnews.com/?p=12343

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.