Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

பட மூலாதாரம், Win McNamee/Getty Images

படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் ஒப்புதலுடன் காஸாவில் அமைதிக்காக 20 அம்சத் திட்டத்தை முன்வைத்துள்ளார்.

கட்டுரை தகவல்

  • தில்நவாஸ் பாஷா

  • பிபிசி செய்தியாளர்

  • 1 அக்டோபர் 2025, 12:25 GMT

    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

திங்கட்கிழமை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முன்னிலையில் காஸாவில் அமைதிக்கான ஒரு திட்டத்தை முன்வைத்தார்.

20 அம்சங்களை கொண்ட இந்தச் சமாதானத் திட்டத்தின் கீழ், காஸாவில் சண்டை நிறுத்தப்படும், இஸ்ரேலியப் பணயக் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள், மேலும் காஸாவின் நிர்வாகத்திற்காக ஒரு சர்வதேச 'அமைதி வாரியம்' (Board of Peace) அமைக்கப்படும். இதில் பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேரும் இடம் பெறுவார்.

அதிபர் டிரம்ப், வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இந்த அமைதித் திட்டத்தை அறிவித்து, இது ஒரு வரலாற்று நடவடிக்கை என்று வர்ணித்தார்.

அப்போது பிரதமர் நெதன்யாகு, இந்தத் திட்டத்தை ஆதரிப்பதாகவும், இது இஸ்ரேலின் போர்க் குறிக்கோள்களை நிறைவேற்றும் என்றும் கூறினார்.

எனினும், ஹமாஸ் இன்னும் இந்த அமைதித் திட்டத்தை ஆய்வு செய்து வருவதால், இது குறித்து எந்தப் பதிலையும் அளிக்கவில்லை.

இந்தச் சமாதானத் திட்டத்தின் கீழ், அனைத்து நிபந்தனைகளும் பூர்த்தி செய்யப்பட்டால், எதிர்காலத்தில் பாலத்தீன தேசம் உருவாவதற்கான வழியும் திறக்கப்படலாம்.

இருப்பினும், இந்தத் திட்டம் பாலத்தீன தேசத்தை உருவாக்குவதைக் குறிக்கவில்லை என்றும், இஸ்ரேல் இந்த யோசனையை முழு பலத்துடன் எதிர்க்கும் என்றும் இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு வலியுறுத்தினார்.

ஹமாஸ் இந்தத் திட்டத்தை ஏற்க மறுத்தால், ஹமாஸை அழிப்பதில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா முழு ஆதரவையும் அளிக்கும் என்றும் அதிபர் டிரம்ப் கூறினார்.

பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர்

பட மூலாதாரம், PA

படக்குறிப்பு, இந்தத் திட்டத்தின் கீழ், பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், டிரம்ப் தலைமையிலான "அமைதி வாரியத்தில்" இணைவார்.

காஸாவுக்கான அமைதித் திட்டத்தை அறிவிப்பதற்கு முன், இஸ்ரேலியப் பிரதமர் வெள்ளை மாளிகையில் இருந்தபடியே கத்தார் பிரதமர் (மற்றும் வெளியுறவு அமைச்சர்) ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானியை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டார். இந்த அழைப்பில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் பங்கேற்றார்.

இந்தத் தொலைபேசி உரையாடலின் போது, செப்டம்பர் 9 அன்று கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் அமைப்பினரை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலுக்காக நெதன்யாகு மன்னிப்பு கேட்டார். மேலும், இந்தத் தாக்குதலில் ஒரு கத்தார் குடிமகன் உயிரிழந்ததற்காகவும் வருத்தம் தெரிவித்தார்.

ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே அமைதிப் பேச்சுவார்த்தையில் கத்தார் மத்தியஸ்தராக இருந்து வருகிறது. அமைதிப் பேச்சுவார்த்தையில் மீண்டும் பங்கேற்க, இஸ்ரேல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கத்தார் நிபந்தனை விதித்திருந்தது.

ஊடக செய்திகளின்படி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வலியுறுத்தலின் பேரில் இஸ்ரேல் கத்தாரிடம் மன்னிப்பு கேட்டது.

எதிர்காலத்தில் இஸ்ரேல் கத்தார் நாட்டின் இறையாண்மையை மீறாது என்றும் நெதன்யாகு கத்தாரிடம் உறுதியளித்தார்.

இந்தத் தொலைபேசி அழைப்புக்குப் பிறகு வெளியிடப்பட்ட அறிக்கையில், காஸாவில் அமைதியை நிலைநாட்டுவதற்காக மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாக கத்தார் கூறியது.

'இஸ்ரேல் உங்களைத் தேடி அழிக்கும்'

ஐ.நா பொதுச் சபையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

பட மூலாதாரம், Michael M. Santiago/Getty Images

படக்குறிப்பு, ஐ.நா. பொதுச் சபையில் செப்டம்பர் 26 அன்று நெதன்யாகு, "உடனடியாகப் பணயக் கைதிகளை விடுவியுங்கள், அவ்வாறு செய்தால் நீங்கள் உயிர் பிழைப்பீர்கள். இல்லையென்றால், இஸ்ரேல் உங்களைத் தேடி அழிக்கும்" என்று கூறியிருந்தார்.

இந்த நிகழ்வுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, செப்டம்பர் 26 அன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஆற்றிய உரையில், "ஹமாஸ் எங்கள் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால், போர் இப்போதே முடிவுக்கு வரும், காஸாவில் இருந்து ராணுவம் அகற்றப்படும், இஸ்ரேல் தனது பாதுகாப்புக் கட்டுப்பாட்டை வைத்திருக்கும், மேலும் எங்கள் பணயக் கைதிகள் திரும்புவார்கள்" என்று நெதன்யாகு கூறியிருந்தார்.

காஸாவில் பெரிய ஒலிபெருக்கிகள் அமைத்து நெதன்யாகுவின் பேச்சு நேரடியாக ஒலிபரப்பப்பட்டது.

"உடனடியாகப் பணயக் கைதிகளை விடுவியுங்கள், அவ்வாறு செய்தால் நீங்கள் உயிர் பிழைப்பீர்கள். நீங்கள் அவ்வாறு செய்யவில்லை என்றால், இஸ்ரேல் உங்களைத் தேடி அழிக்கும்" என்று நெதன்யாகு ஹமாஸை வலியுறுத்தியிருந்தார்.

அதே நேரம், டிரம்ப்புடன் இணைந்து அமைதித் திட்டத்தை அறிவித்தபோது, ஹமாஸ் இந்தத் திட்டத்தை நிராகரித்தால், காஸாவில் இஸ்ரேல் தனது பணியை முடிக்கும் என்றும் நெதன்யாகு கூறினார்.

அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது, ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்ரேலிய குடிமக்களைக் கொன்றதுடன், 250-க்கும் மேற்பட்டவர்களைப் பணயக் கைதிகளாகப் பிடித்தது.

ஹமாஸுடனான போர் நிறுத்த ஒப்பந்தங்கள் மற்றும் இஸ்ரேலின் பாதுகாப்பு படைகளின் முயற்சிகள் மூலம் இதுவரை 207 பணயக் கைதிகள் இஸ்ரேலுக்குத் திரும்பியுள்ளனர். காஸாவில் இன்னும் 48 பணயக் கைதிகள் உள்ளனர், அவர்களில் இருபது பேர் உயிருடன் உள்ளனர்.

அக்டோபர் 7 தாக்குதலுக்குப் பிறகு, ஹமாஸை ஒழிக்கும் நோக்குடன் இஸ்ரேல் காஸாவில் பதிலடி ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. இந்த நடவடிக்கையில் இதுவரை 66 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலத்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்டோர் குழந்தைகளும் பெண்களும் ஆவர். மேலும், 1 லட்சத்து 68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலத்தீனர்கள் காயமடைந்துள்ளனர்.

நெதன்யாகு ஏன் கத்தாரிடம் மன்னிப்பு கேட்டார்?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

பட மூலாதாரம், EPA/Shutterstock

படக்குறிப்பு, டிரம்ப்பைச் சந்திப்பதற்கு முன் நெதன்யாகு கத்தாரிடம் மன்னிப்பு கோரினார்.

தொலைபேசி அழைப்பில் நெதன்யாகு கத்தாரிடம் மன்னிப்பு கேட்டார். இஸ்ரேலோ, நெதன்யாகுவோ ஒரு மத்திய கிழக்கு நாட்டிடம் மன்னிப்பு கோருவது ஒரு அரிதான நிகழ்வு. இதற்கு முன் 2010-ல் காஸாவுக்கு உதவிப் பொருட்கள் ஏற்றிச் சென்ற துருக்கியின் மாவி மர்மாரா கப்பல் மீது தாக்குதல் நடத்தியதற்காக இஸ்ரேல் துருக்கியிடம் மன்னிப்பு கேட்டிருந்தது.

கத்தார் மீதான தாக்குதலுக்குப் பிறகு நெதன்யாகு சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்தப்பட்டதாலேயே அவர் மன்னிப்பு கேட்டார் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஐக்கிய நாடுகள் சபையில் நெதன்யாகு தனது உரையைத் தொடங்கியபோது பெரும்பாலான நாடுகளின் பிரதிநிதிகள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் வெளிநடப்புச் செய்தனர்.

"கத்தார் மீது தாக்குதல் நடத்தி இஸ்ரேல் அனைத்து சர்வதேச ராஜீய விதிகளையும் மீறிவிட்டது. கத்தார் மத்திய கிழக்கில் பல மோதல்களில் மத்தியஸ்தராகப் பணியாற்றியுள்ளது, ஹமாஸுடனான மத்தியஸ்தத்திலும் அதன் பங்கு முக்கியமானது. கத்தார் மீதான தாக்குதல் இஸ்ரேலின் தன்னிச்சையான போக்காகப் பார்க்கப்பட்டது, மேலும் ஐரோப்பிய கூட்டாளிகள் உட்பட பல நாடுகள் இஸ்ரேலிடமிருந்து விலகிச் சென்றன. கத்தாரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய அழுத்தம் நெதன்யாகு மீது இருந்தது என்பது வெளிப்படையானது," என சர்வதேச விவகார நிபுணர் பேராசிரியர் ஃபஸ்ஸுர் ரஹ்மான் சொல்கிறார்.

ஆனால் இஸ்ரேல் அல்லது நெதன்யாகு மீது சர்வதேச அழுத்தம் ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதே கேள்வி.

"நடைமுறையில் பார்த்தால், இஸ்ரேல் அதன் சொந்த வழியில், அதன் சொந்தத் திட்டத்தின்படி முன்னேறி வருகிறது, அதன் சொந்தப் பாதுகாப்புக் குறிக்கோள்கள் சர்வதேச விமர்சனங்களை விட முக்கியம். ஆனால் கத்தாரிடம் மன்னிப்புக் கேட்டதன் மூலம் காஸாவில் அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக இஸ்ரேல் சமிக்ஞை கொடுத்துள்ளது" என்று கூறுகிறார் பேராசிரியர் ஃபஸ்ஸுர் ரஹ்மான்.

"நெதன்யாகு ஹமாஸுடனான பேச்சுவார்த்தைக்கு எதிராகவே இருந்தார். காஸாவில் இப்போது இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தலையீடு மட்டுமே இருப்பதாகவும், மற்ற நாடுகள் அனைத்தும் பின்வாங்கிவிட்டதாகவும் அவர் நினைத்தார். இந்தச் சூழ்நிலையில், அவர் கத்தாரில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் மீது தாக்குதல் நடத்த முடிவெடுத்தார்.

இப்போது நெதன்யாகு மன்னிப்பு கேட்டுள்ளார், இதற்கு முன் அவர் ஒன்றரை தசாப்தங்களுக்கு முன்புதான் மன்னிப்பு கேட்டிருந்தார். அதாவது, டிரம்ப்பின் அழுத்தத்தாலோ அல்லது ஐ.நா.வில் ஏற்பட்ட எதிர்ப்பாலோ நெதன்யாகு கத்தாரிடம் மன்னிப்பு கேட்டார். அவர் சர்வதேச சமூகத்தில் நம்பிக்கை வைத்துள்ளார் என்பதற்கான சமிக்ஞையையும் அளித்துள்ளார்," என ஃபஸ்ஸுர் ரஹ்மான் கூறினார்.

பின்வாங்குகிறாரா நெதன்யாகு?

குதிரை வண்டியில் பொருட்களை ஏற்றிக்கொண்டு செல்லும் மக்கள்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, டிரம்ப்பின் திட்டத்தில் பாலத்தீன தேசம் குறித்து உறுதியான எதுவும் கூறப்படவில்லை.

உள்நாட்டு அளவில் நெதன்யாகு விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிடும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

"இது நெதன்யாகுவின் கூட்டாளிகள் அறிவித்த நிலைப்பாட்டுக்கு எதிரானது. இதற்காக நெதன்யாகு உள்நாட்டில் விமர்சனத்தைச் சந்திக்க நேரிடும்" என்கிறார் சர்வதேச விவகார நிபுணர் மஞ்சரி சிங்.

தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள அமைதித் திட்டத்தின் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால், காஸா மக்கள் கட்டாயப்படுத்தி வெளியேற்றப்பட மாட்டார்கள்.

காஸா மக்கள் தாமாக விரும்பிப் பகுதியைக் காலி செய்வதற்கோ அல்லது திரும்புவதற்கோ சுதந்திரம் இருக்கும் என்று நெதன்யாகு செவ்வாயன்று கூறியிருந்தார்.

மேலும், காஸாவின் பாதுகாப்பிற்காக சர்வதேசப் படைகளை நிலைநிறுத்துவதற்கான முன்மொழிவும் இதில் அடங்கும். நெதன்யாகு தனது பழைய மற்றும் கடுமையான நிலைப்பாட்டிலிருந்து சற்றுப் பின்வாங்குவதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

சர்வதேச விவகார நிபுணர் மஞ்சரி சிங், "நெதன்யாகு கடுமையான போக்கை பின்பற்றும் திட்டத்திலிருந்து பின்வாங்குவது போல் தெரிகிறது. கத்தார் மீதான தாக்குதலுக்குப் பிறகு நெதன்யாகுவும் இஸ்ரேலிய அரசாங்கமும் தங்கள் நாட்டின் பாதுகாப்பே முதன்மையானது என்று கூறியிருந்தன. இப்போது நெதன்யாகு கத்தார் விவகாரத்தில் தனது தவறை ஒப்புக்கொண்டுள்ளார், மேலும் அமைதித் திட்டத்திற்குச் சம்மதம் தெரிவித்துள்ளார், ஒரு வகையில் அவர் சமரசம் செய்து கொள்வது போல் தெரிகிறது" என்று கூறுகிறார்.

"இஸ்ரேல் உருவாவதில் முக்கியப் பங்காற்றிய பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளும் இஸ்ரேலைத் தவிர்க்க முயன்றன, இந்தச் சூழ்நிலையில் தான் முழுமையாக தனிமைப்படுத்தப்படக் கூடாது என்று நெதன்யாகு நினைத்திருக்கலாம்" என்கிறார் ஃபஸ்ஸுர் ரஹ்மான்.

சிக்கலில் மாட்டினாரா நெதன்யாகு?

கடும் அழிவுகளை சந்தித்து வரும் காஸா

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, அக்டோபர் 2023-க்குப் பிறகு காஸாவில் நடந்த இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது 66,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த அமைதி ஒப்பந்தத்தை நெதன்யாகு முழுமையாக ஏற்றுக்கொண்டு அது நடைமுறைப்படுத்தப்பட்டால், அவர் உள்நாட்டில் சிக்கலில் சிக்குவார் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

உண்மையில், நெதன்யாகுவின் லிகுட் கட்சி பல தீவிர வலதுசாரி கட்சிகளுடன் சேர்ந்து அரசாங்கத்தை நடத்தி வருகிறது. இந்தக் கட்சிகள் காஸாவிலிருந்து எந்தச் சூழ்நிலையிலும் பின்வாங்க விரும்பவில்லை.

இந்தக் கட்சிகளில் நிதி அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச்சின் கட்சியும் அடங்கும்.

டிரம்ப்பின் அமைதித் திட்டத்தின் மையத்தில் காஸாவை ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிப்பது உள்ளது. ஸ்மோட்ரிச் போன்ற தலைவர்களுக்கு இது ஒரு அபாயக்கோடு ஆகும்.

"நெதன்யாகு இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார், ஆனால் இது நடைமுறைக்கு வந்தால், நெதன்யாகு தொடர்ந்து பிரதமராக இருப்பது கடினம். ஏனெனில் அவருக்கு ஆதரவளிக்கும் யூதக் கட்சிகள் காஸா மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பைக் கைவிட ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

நெதன்யாகு அமெரிக்கா செல்வதற்கு முன், அவரது அரசாங்கத்தில் உள்ள ஸ்மோட்ரிச் போன்ற வலதுசாரி அமைச்சர்கள் சில விஷயங்களில் சமரசம் செய்யக் கூடாது என்று கூறியிருந்தனர். இதில் காஸாவிலிருந்து இஸ்ரேலியப் படைகள் பின்வாங்குவது அடங்கும். இந்தக் கட்சிகள் நெதன்யாகுவின் இந்த நடவடிக்கையை எளிதில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்" என்று பேராசிரியர் ஃபஸ்ஸுர் ரஹ்மான் கூறுகிறார்.

நெதன்யாகு மீது பணயக் கைதிகளின் குடும்பங்களின் அழுத்தமும் உள்ளது. ஐ.நா.வில் உரையாற்றும்போதும் அவர் பணயக் கைதிகளின் குடும்பங்களை நோக்கியே உரையாற்றத் தொடங்கினார்.

"பணயக் கைதிகளை விடுவிக்க நெதன்யாகு மீது கடுமையான அழுத்தம் உள்ளது. இந்த அழுத்தம் அவரது பேச்சிலும் தெரிந்தது. மீண்டும் மீண்டும் அவர் பணயக் கைதிகள் பற்றி பேசி, 'நீங்கள் எங்கள் நினைவில் இருக்கிறீர்கள்' என்று கூறினார்" என்கிறார் பேராசிரியர் ஃபஸ்ஸுர் ரஹ்மான்,

ஹமாஸை நம்பினாரா நெதன்யாகு?

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க அதிபர் டிரம்புடன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தத் திட்டம் பாலத்தீன தேசத்தை உருவாக்குவதைக் குறிக்கவில்லை என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வலியுறுத்தினார்.

இந்தத் திட்டத்திற்கு ஹமாஸ் இன்னும் பதிலளிக்கவில்லை. இருப்பினும், ஹமாஸ் இந்தத் திட்டத்தை நிராகரிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

உண்மையில், ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே ஒருபோதும் நம்பிக்கை இருந்ததில்லை. ஹமாஸ் இஸ்ரேலை நம்புவதும் இல்லை, இஸ்ரேல் ஹமாஸை நம்புவதும் இல்லை.

இதற்கு முன்னர் போர் நிறுத்த ஒப்பந்தங்கள் ஏற்பட்டபோதும், அவை அதிகம் பலனளிக்கவில்லை.

"ஹமாஸ் இன்னும் பதிலளிக்கவில்லை. ஹமாஸ் இதை ஏற்றுக்கொண்டால், அது ஆயுதங்களைக் கைவிட்டு தனது கட்டமைப்பை கலைக்க வேண்டும். ஹமாஸ் இந்தத் திட்டத்தை ஏற்காது என்று நெதன்யாகு கருதுகிறார். அப்படிப்பட்ட சூழ்நிலையில், அவர் வாய்ப்பளித்தும் ஹமாஸ் அமைதியை விரும்பவில்லை என்று கூறி, மேலும் தீவிர நடவடிக்கையை நியாயப்படுத்த முடியும்" என்று கூறுகிறார் ஃபஸ்ஸுர் ரஹ்மான்,

கார்னகி எண்டோவ்மென்ட் ஃபார் இன்டர்நேஷனல் பீஸின் (Carnegie Endowment for International Peace) மூத்த ஆய்வாளரான ஆரோன் டேவிட் மில்லர், இதே கருத்தை ஒரு பகுப்பாய்வில் வெளிப்படுத்தியுள்ளார்.

"ஹமாஸ் திட்டத்தை நிராகரிப்பதை நெதன்யாகு நம்பியிருப்பது போல் தெரிகிறது. ஹமாஸ் இந்தத் திட்டத்தை நிராகரித்தால், அதிபர் டிரம்ப் கூறியது போல, இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் முழு ஆதரவும் கிடைக்கும்."

இதற்கிடையில், "நெதன்யாகுவுக்கு உள்ள சிக்கல் என்னவென்றால், இந்தச் சமாதானத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், அவருக்கு உள்நாட்டில் அரசாங்கத்தை நடத்துவது மிகவும் கடினம். அவரது கூட்டாளிகள் இதற்குச் சம்மதிக்க மாட்டார்கள், ஆதரவை விலக்கிக் கொள்வார்கள்" என்று மஞ்சரி சிங் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/cdxqp55wdx9o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.