Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய இந்திய அணி - பேட்டிங், பந்து வீச்சு இரண்டிலும் ஜொலித்த ஜடேஜா

இந்தியா, டெஸ்ட் கிரிக்கெட், வெஸ்ட் இண்டீஸ் அணி, ஜடேஜா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, முதல் இன்னிங்ஸில் 104 ரன்களும், 2வது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும் எடுத்த ஜடேஜா ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஆமதாபாத்தில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ரோஸ்டன் சேஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

ஆமதாபாத்தின் நரேந்திர மோதி மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி கடந்த வியாழக்கிழமை (அக்டோபர் 2) தொடங்கியது.

முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 44.1 ஓவரில் 162 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 448 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. 286 ரன்கள் பின்தங்கிய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் 2-வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 146 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது.

இதன்மூலம் இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளும் சிராஜ் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் இந்த டெஸ்ட் தொடரில் 0 - 1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி

இந்தியா, டெஸ்ட் கிரிக்கெட், வெஸ்ட் இண்டீஸ் அணி, ஜடேஜா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ரோஸ்டன் சேஸ்

இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக, ஜான் கேம்பல் மற்றும் டேகனரின் சந்தர்பால் களமிறங்கினர்.

சந்தர்பால் 3வது ஓவரில், ரன்கள் ஏதும் எடுக்காமல் சிராஜ் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்ததாக 6வது ஓவரில், 8 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஜான் கேம்பல், பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு சீரான இடைவெளியில், விக்கெட்டுகள் சரியத் தொடங்கின. கேப்டன் ரோஸ்டனும் 24 ரன்கள் மட்டுமே எடுத்து, சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார். 44.1 ஓவர்களில் 162 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, முதல் இன்னிங்ஸை நிறைவு செய்தது வெஸ்ட் இண்டீஸ் அணி.

இந்திய பந்துவீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சு, வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களைத் திணறடித்தது.

குறிப்பாக, முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் யாருமே 50 பந்துகளுக்கு மேல் எதிர்கொள்ளவில்லை. ஜஸ்டின் கிரீவ்ஸ் மட்டுமே 32 ரன்கள் எடுத்திருந்தார், மற்ற அனைத்து வெஸ்ட் இண்டீஸ் வீரர்களும் 30 ரன்களை தாண்டவில்லை.

இந்திய அணியில், முகமது சிராஜ் 14 ஓவர்களில் 40 ரன்கள் கொடுத்து, 4 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். பும்ரா 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டையும் எடுத்திருந்தனர்.

இந்தியாவின் முதல் இன்னிங்ஸ்

இந்தியா, டெஸ்ட் கிரிக்கெட், வெஸ்ட் இண்டீஸ் அணி, ஜடேஜா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவில் நடக்கும் ஒரு டெஸ்ட் போட்டியில் ராகுல் சதமடிப்பது இது இரண்டாவது முறை.

இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல்.ராகுல் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

சிறப்பான முறையில் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடிய இந்த ஜோடி, முதல் விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்தது. பின்னர் வெஸ்ட் இண்டீஸ் வீரர் சீல்ஸ் பந்தில், 36 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார் ஜெய்ஸ்வால்.

அதன்பிறகு களமிறங்கிய சாய் சுதர்சன், 7 ரன்கள் மட்டுமே எடுத்து வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோஸ்டன் சேஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.

மறுபுறம், சிறப்பாக விளையாடிய கே.எல்.ராகுல் சதத்தை பூர்த்தி செய்தார். இந்தியாவில் நடக்கும் ஒரு டெஸ்ட் போட்டியில் ராகுல் சதமடிப்பது இது இரண்டாவது முறை. இதற்கு முன்னர், 2016இல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், அவர் 199 ரன்கள் எடுத்திருந்தார்.

197 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து, வாரிக்கன் பந்தில் ஆட்டமிழந்தார் கே.எல்.ராகுல்.

இந்தியா, டெஸ்ட் கிரிக்கெட், வெஸ்ட் இண்டீஸ் அணி, ஜடேஜா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, துருவ் ஜூரெல் தனது முதல் டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்தார்.

ராகுல் மட்டுமல்லாது, துருவ் ஜூரெல் (125 ரன்கள்), ரவீந்திர ஜடேஜா (104 ரன்கள்) ஆகியோரும் சதமடித்தனர். குறிப்பாக துருவ் ஜூரெல் தனது முதல் டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்தார். இதனால் இந்தியாவின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 128 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 448 ரன்கள் எடுத்தநிலையில் இந்திய அணி டிக்ளேர் செய்தது.

ஜடேஜா 104 ரன்களுடனும், வாஷிங்டன் சுந்தர் 9 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சில் ரோஸ்டன் சேஸ் இரண்டு விக்கெட்டுகளையும், ஜேடன் சீல்ஸ், ஜோமல் வாரிக்கன், காரி பியர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இந்திய அணியின் வெற்றி

இந்தியா, டெஸ்ட் கிரிக்கெட், வெஸ்ட் இண்டீஸ் அணி, ஜடேஜா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டெஸ்ட் தொடரில் 1 - 0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.

286 ரன்கள் பின்தங்கிய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் 2-வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

100 ரன்களைக் கடப்பதற்கு முன்பாகவே 8 விக்கெட்டுகளை இழந்திருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, இறுதியில், 45.1 ஓவர்களில் 146 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது.

வெஸ்ட் இண்டீஸ் வீரர்களில் அலிக் அதனேஸ் மட்டுமே 38 ரன்கள் எடுத்திருந்தார். மற்ற அனைவருமே 30 ரன்களுக்கும் குறைவாகவே எடுத்திருந்தனர். இதன்மூலம் இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்திய அணி தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளும் சிராஜ் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். முதல் இன்னிங்ஸில் 104 ரன்களும், 2வது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும் எடுத்த ஜடேஜா ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.

இந்தியா, டெஸ்ட் கிரிக்கெட், வெஸ்ட் இண்டீஸ் அணி, ஜடேஜா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வெஸ்ட் இண்டீஸ் அணி

இந்த வெற்றியின் மூலம் இந்த டெஸ்ட் தொடரில் 1 - 0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.

இந்திய மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடிய கடைசி 5 டெஸ்ட் போட்டிகளில், இந்திய அணியிடம் தோல்வியடைந்தது மட்டுமல்லாமல், இந்த ஐந்து டெஸ்ட் போட்டிகளில் எதுவும் மூன்றாம் நாளைத் தாண்டி நீடிக்கவில்லை.

அதேபோல, 2002க்குப் பிறகு இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையே நடந்த அனைத்து டெஸ்ட் தொடர்களிலும் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நடப்பு டெஸ்ட் தொடரின் 2வது போட்டி அக்டோபர் 10 - 14 தேதிகளில் டெல்லியில் நடைபெறுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cvg40xj07k2o

  • கருத்துக்கள உறவுகள்

அன்மைக் கால‌மாய் வெஸ்சின்டீஸ் அணியின் டெஸ்ட் விளையாட்டு பாராட்டும் ப‌டி இல்லை ,

ப‌ழை வெஸ்சுன்டீஸ் ஜாம்பவாங்க‌ள் இப்ப‌ இருக்கும் அணிய‌ பார்த்து வேத‌னை ப‌ட‌க் கூடும்.............

ட‌ர‌ன் சாமி க‌ப்ட‌னாய் இருந்த‌ போது அணிய‌ ச‌ரியா வ‌ழி ந‌ட‌த்தினார்..................இந்தியா இர‌ண்டாவ‌து இனிங் ஆடாம‌லே வென்று விட்டின‌ம்..........................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட்: வெற்றியை நெருங்கினாலும் விமர்சிக்கப்படும் கேப்டன் சுப்மன் கில்

இந்திய அணி நான்காவது நாள் ஆட்டம் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் எடுத்திருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய அணி நான்காவது நாள் ஆட்டம் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் எடுத்திருக்கிறது.

கட்டுரை தகவல்

  • பிரதீப் கிருஷ்ணா

  • பிபிசி தமிழ்

  • 52 நிமிடங்களுக்கு முன்னர்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றியை எட்டிப் பிடிக்கும் தூரத்தில் இருக்கிறது இந்திய அணி. 121 ரன்களை இலக்காகக் கொண்டு இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி நான்காவது நாள் ஆட்டம் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் எடுத்திருக்கிறது. 9 விக்கெட்டுகள் கையில் இருக்கும் நிலையில் இன்னும் 58 ரன்கள் எடுத்தால், சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி முதல் தொடர் வெற்றியைப் பதிவு செய்யும்.

டெல்லியில் நடந்துவரும் இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 518 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. தொடக்க வீரர் யஷஷ்வி ஜெய்ஸ்வால் சிறப்பாக பேட்டிங் செய்து 175 ரன்கள் விளாசினார். மறுபக்கம் தன்னுடைய சிறந்த ஃபார்மைத் தொடர்ந்த கேப்டன் சுப்மன் கில் ஆட்டமிழக்காமல் 129 ரன்கள் எடுத்தார். இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ஆன பிறகு 12 இன்னிங்ஸ்களில் அவர் அடிக்கும் ஐந்தாவது சதம் இது! சிறப்பாக விளையாடிய தமிழ்நாட்டு வீரர் சாய் சுதர்ஷனும் தன் பங்குக்கு 87 ரன்கள் எடுத்தார்.

ஜடேஜாவும் தன் பங்கிற்கு 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜடேஜாவும் தன் பங்கிற்கு 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

134 ஓவர்கள் ஃபீல்டிங் செய்த களைப்புடன் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்டிங் மீண்டும் ஏமாற்றமே கொடுத்தது. குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா இருவரின் ஜாலத்திலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க 248 ரன்களுக்கே ஆல் அவுட் ஆனது வெஸ்ட் இண்டீஸ்.

அந்த அணியின் ஒரு பேட்டரால் கூட அரைசதம் கடக்க முடியவில்லை. அதிகபட்சமாக அலீக் அதனேஸ் 41 ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். சிறப்பாகப் பந்துவீசிய ஜடேஜாவும் தன் பங்கிற்கு 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்ஸின் சிறப்பம்சம் என்றால் அது ஜான் கேம்பெல் கேட்சை சாய் சுதர்ஷன் பிடித்ததுதான். ஜடேஜா பந்தை கேம்பெல் வேகமாக ஸ்வீப் செய்ய, ஷார்ட் லெக் திசையில் நின்றிருந்த சாய் சுதர்ஷன் கழுத்தை நோக்கிப் பாய்ந்தது பந்து.

மிகவும் ஆபத்தான அந்தப் பந்து அவரது ஹெல்மெட் கிரில்லில் பட்டு இறங்க, அதை அப்படியே லாவகமாக மார்போடு அனைத்துப் பிடித்தார் சாய். அவரது வலது கை விரலில் பலமாகப் பட்டிருந்தாலும், அவர் அதை கெட்டியாகப் பிடித்திருந்தார். மிகவும் ஆபத்தான இடத்தில் நின்று அவர் பிடித்த அந்த அசாத்திய கேட்ச் அனைவராலும் வெகுவாகப் பாராட்டப்பட்டது.

அபாரமான கேட்ச் ஒன்றை பிடித்த சாய் சுதர்சன் காயமடைந்து வெளியேறுகிறார்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அபாரமான கேட்ச் ஒன்றை பிடித்த சாய் சுதர்சன் காயமடைந்து வெளியேறுகிறார்

இந்திய அணி தொடர்ந்து பேட்டிங் செய்து வெஸ்ட் இண்டீஸுக்கு பெரிய இலக்கை நிர்ணயிக்கும் என்று கருதப்பட்டது. ஆனால், அதிரடியாக முடிவெடுத்து வெஸ்ட் இண்டீஸை ஃபாலோ ஆன் செய்யச்சொல்லி நிர்பந்தித்தது இந்தியா.

வெஸ்ட் இண்டீஸ் மறுபடியும் பேட்டிங் செய்ததால் முந்தைய போட்டியைப் போல் இந்தப் போட்டியும் சீக்கிரம் முடிந்துவிடும், இந்தியா இன்னொரு இன்னிங்ஸ் வெற்றி பெற்றுவிடும் என்று பரவலாகப் பேசப்பட்டது. ஆனால், அதையெல்லாம் பொய்யாக்கும் விதமாக இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்தது வெஸ்ட் இண்டீஸ்.

குறிப்பாக மூன்றாவது விக்கெட்டுக்கு இணைந்த ஜான் கேம்பல், ஷாய் ஹோப் இருவரும் தங்களின் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினார்கள். அதனால் மூன்றாவது நாள் முடிவில் 173/2 என நல்ல நிலையில் இருந்தது வெஸ்ட் இண்டீஸ்.

பும்ராவை தொடக்கத்திலேயே கில்லால் பயன்படுத்த முடியவில்லை.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பும்ராவை தொடக்கத்திலேயே கில்லால் பயன்படுத்த முடியவில்லை.

அதே தீர்க்கமான ஆட்டத்தை அவர்கள் ஆட்டத்தின் நான்காவது நாளும் கொண்டுவந்தார்கள். கவனத்துடனும் நிதானத்துடனும் விளையாடியிருந்தாலும், இந்திய பௌலர்களின் கைகள் முழுமையாக ஓங்காமலும் பார்த்துக்கொண்டார்கள்.

நிறைய மெய்டன் ஓவர்கள் ஆடியிருந்தாலும், அடிப்பதற்கு ஏற்ற பந்துகள் கிடைத்தபோது ஒன்று, இரண்டு என எடுத்தார்கள். பௌலர்கள் தவறான பந்துகளை வீசும்போது அதை பௌண்டரிகளாக்கினார்கள். எந்தவொரு ரிஸ்க்கும் இல்லாமல் ஒரு பெரிய பார்ட்னர்ஷிப்பை அவர்களால் உருவாக்க முடிந்தது.

ஜடேஜா தன்னுடைய விரைவான பந்துவீச்சால் நெருக்கடி கொடுப்பார் என்பதால், அவரைப் பெரும்பாலும் சீண்டாமலேயே ஆடினார்கள். இப்படி உறுதியான திட்டம் வகுத்து, அதை சிறப்பாகவும் அரங்கேற்றியதால் அவர்களால் பெரிய இன்னிங்ஸ் ஆட முடிந்தது.

சிறப்பாக ஆடிய ஜான் கேம்பெல் 174 பந்துகளில் தன் முதல் டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்தார். கடந்த 7 ஆண்டுகளில் இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் சதமடித்த முதல் வெஸ்ட் இண்டீஸ் வீரர் இவர்தான். இவர்கள் இருவருமே சதமடித்து நங்கூரம் போல் நிலைத்து நிற்க, இந்திய பௌலர்கள் மீது நெருக்கடி திரும்பியது. குறிப்பாக கில்லின் முடிவுகள் விமர்சனம் செய்யப்பட்டன.

ஆல்ரவுண்டர் நித்திஷ் குமார் ரெட்டியை அணியில் வைத்திருந்தும், கில் அவரைப் பந்துவீசவே அழைக்கவில்லை. யஷஷ்வி ஜெய்ஸ்வாலுக்குக் கூட ஒரு ஓவர் கொடுத்தார். ஆனால், நித்திஷை அவர் பயன்படுத்தவில்லை. அதை அனைத்து வல்லுநர்களுமே கேள்விக்குள்ளாக்கினார்கள்.

போக, இந்திய பௌலர்கள் தொடர்ச்சியாகப் பந்துவீசிக்கொண்டே இருந்ததால், ஃபாலோ ஆன் கொடுத்த முடிவுமே தவறோ என்ற விவாதம் தொடங்கியது. ஏனெனில் தொடர்ந்து பந்துவீசிய காரணத்தால் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ராவை தொடக்கத்திலேயே கில்லால் பயன்படுத்த முடியவில்லை.

பும்ராவின் வேலைப்பளுவை சரியாகப் பராமரிக்கவேண்டும் என்பதால் அவருக்கு ஆரம்பத்தில் ஓவர் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இரண்டாவது இன்னிங்ஸில் பும்ரா முதல் முறையாகப் பந்துவீசியதே 33வது ஓவரில் தான். அதற்குள்ளாகவே கேம்பெல் - ஹோப் இணை கிட்டத்தட்ட 17 ஓவர்கள் நிலைத்து ஆடியிருந்தது.

இந்த சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டதால் ஃபாலோ ஆன் முடிவும், இப்படியொரு சூழ்நிலை இருந்தும், நித்திஷ் ரெட்டியை இரண்டாவது வேகப்பந்துவீச்சாளராகப் பயன்படுத்தாத முடிவும் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. இந்தப் போட்டியில் இந்திய அணி 200.4 ஓவர்கள் பந்துவீசிய நிலையில், நித்திஷ் ஒரு பந்துகூட வீசவில்லை!

ஷாய் ஹோப்பை போல்டாக்கினார் சிராஜ்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஷாய் ஹோப்பை போல்டாக்கினார் சிராஜ்.

ஆனால் அதற்கெல்லாம் பதிலாக வந்தார் முதல் போட்டியின் ஆட்ட நாயகன் ரவீந்திர ஜடேஜா. ரிவர்ஸ் ஸ்வீப் ஆட ஆசைப்பட்டு, ஜடேஜாவின் சுழலில் சிக்கினார் கேம்பெல். 199 பந்துகளில் 115 ரன்கள் எடுத்து எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார் அவர். இதன்மூலம் 49 ஓவர்கள் நிலைத்த அந்த பார்ட்னர்ஷிப் 177 ரன்களில் முடிவுக்கு வந்தது.

கேம்பெல் சென்ற பின் கேப்டன் ராஸ்டன் சேஸ் ஹோப்புடன் இணைந்து இன்னொரு பார்ட்னர்ஷிப்பை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார். அதற்கு ஓரளவு நல்ல பலனும் கிடைத்தது.

தொடர்ந்து சீரான ஆட்டத்தை ஆடிய ஹோப், தன்னுடைய சதத்தை நிறைவு செய்தார். 8 ஆண்டுகள் கழித்து அவர் அடிக்கும் முதல் டெஸ்ட் சதம் இது. 59 இன்னிங்ஸ்களாக சதமடிக்காமல் இருந்த அவரது சுமையை இந்த இன்னிங்ஸ் குறைத்துவைத்தது. ஆனால், அவரால் அந்த சதத்தை இன்னும் பெரிதாக்க முடியவில்லை. தன் டிரேட் மார்க் 'வாபில் சீம்' பந்தை வீசி ஷாய் ஹோப்பை போல்டாக்கினார் மொஹம்மது சிராஜ். 214 பந்துகள் தாக்குப்பிடித்த ஹோப், 103 ரன்களுக்கு வெளியேறினார். அந்த விக்கெட்டோடு வெஸ்ட் இண்டீஸின் 'ஹோப்' முடிவுக்கு வந்தது.

311 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது வெஸ்ட் இண்டீஸ்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 311 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது வெஸ்ட் இண்டீஸ்.

அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்களை குல்தீப், பும்ரா இருவரும் கட்டம் கட்டி வெளியேற்றினார்கள். ஜஸ்டின் கிரீவ்ஸ் ஒருபக்கம் போராடினாலும், மற்ற பேட்டர்களால் அவருக்கு உதவமுடியவில்லை. 311 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது வெஸ்ட் இண்டீஸ். அவர்கள் இன்னிங்ஸ் முடிந்துவிடும் என்று நினைத்திருக்க, கடைசி விக்கெட்டுக்குக் களமிறங்கிய ஜேடன் சீல்ஸ், கிரீவ்ஸுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.

இந்தக் கடைசி விக்கெட் பார்ட்னர்ஷிப் இந்திய பௌலர்களை 22 ஓவர்கள் திக்குமுக்காடச் செய்து 79 ரன்களும் சேர்த்தது. ஒருவழியாக சீல்ஸை பும்ரா வெளியேற்ற 390 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது வெஸ்ட் இண்டீஸ். கடைசி வரை போராடிய ஜஸ்டின் கிரீவ்ஸ் ஆட்டமிழக்காமல் 50 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் அந்த அணி 120 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்திய அணி தரப்பில் குல்தீப், பும்ரா இருவரும் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

121 என்ற இலக்கை சேஸ் செய்த இந்திய அணி, இரண்டாவது ஓவரிலேயே ஜெய்ஸ்வால் விக்கெட்டை இழந்தது. நான்காவது நாளிலேயே போட்டியை முடிக்கவேண்டும் என்ற நோக்கில் அதீத அதிரடியை வெளிப்படுத்த நினைத்த ஜெய்ஸ்வால், வாரிகன் பந்துவீச்சில் லாங் ஆன் திசையில் கேட்ச்சாகி 8 ரன்களுடன் வெளியேறினார்.

நாளை வெல்லும்பட்சத்தில், ஏற்கெனவே முதல் டெஸ்ட் போட்டியை வென்றிருக்கும் இந்திய அணி 2-0 என இத்தொடரைக் கைப்பற்றும்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நாளை வெல்லும்பட்சத்தில், ஏற்கெனவே முதல் டெஸ்ட் போட்டியை வென்றிருக்கும் இந்திய அணி 2-0 என இத்தொடரைக் கைப்பற்றும்.

அடுத்து ஜோடி சேர்ந்த கே.எல்.ராகுல், சாய் சுதர்ஷன் இருவரும் எவ்வித அவசரமும் காட்டாமல் பந்துக்கு ஏற்ப மட்டுமே விளையாடினார்கள். அதனால் நான்காவது நாள் ஆட்டம் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் எடுத்திருக்கிறது. இன்னும் 58 ரன்களே தேவை என்பதால் இந்திய அணி எப்படியும் இந்த இலக்கை ஐந்தாவது நாளின் முதல் ஒரு மணி நேரத்துக்குள்ளாகவே எட்டிவிடும்.

நாளை வெல்லும்பட்சத்தில், ஏற்கெனவே முதல் டெஸ்ட் போட்டியை வென்றிருக்கும் இந்திய அணி 2-0 என இத்தொடரைக் கைப்பற்றும். புதிய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி பெறும் முதல் தொடர் வெற்றியாக இது அமையும். அக்டோபர் 14 பிறந்த நாள் கொண்டாடும் பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கான பரிசாகவும் இந்த வெற்றி அமையும்!

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c1j8ln36dg8o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இந்தியா வெற்றி, ஆனால் தவறவிட்ட முக்கிய வாய்ப்புகள் என்ன?

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் வெற்றி, ஆனால் இந்தியா தவறவிட்ட முக்கிய வாய்ப்புகள் என்ன?

பட மூலாதாரம், Getty Images

கட்டுரை தகவல்

  • பிரதீப் கிருஷ்ணா

  • பிபிசி தமிழ்

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியிருக்கிறது இந்திய அணி. டெல்லியில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியை 7 விக்கெட்டுகள் வித்தியாத்தில் வெற்றி பெற்று, ஷுப்மன் கில் தலைமையில் முதல் தொடர் வெற்றியையும் பதிவு செய்திருக்கிறது இந்த இளம் அணி.

ஆனால், இந்த இரு போட்டிகளில் இந்திய அணி நிர்வாகம் எடுத்த பல முடிவுகள் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கின்றன.

இந்த இரண்டு போட்டிகளில் இந்தியாவுக்கு நன்றாக அமைந்த விஷயமெனில் பேட்ஸ்மேன்கள் அனைவருமே சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

குறிப்பாக சாய் சுதர்ஷனின் செயல்பாடு. இங்கிலாந்தில் தடுமாறிய அவர், இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 87, 39 என்று ஸ்கோர் எடுத்தார்.

ஸ்கோரைத் தாண்டி களத்தில் இருந்த 281 நிமிடங்களும் உறுதியுடனும் நிலைத்தன்மையுடனும் விளையாடினார். இந்தியாவின் நம்பர் 3 இடத்தை அவரால் நிரப்ப முடியும் என்ற நம்பிக்கையை இந்த இன்னிங்ஸ் மூலம் கொடுத்திருக்கிறார்.

அதேபோல் ரிஷப் பந்த் இடத்தில் ஆடிய துருவ் ஜுரெல் பேட்டிங், கீப்பிங் இரண்டிலுமே அசத்தினார். பந்த் வந்த பிறகு இவரை பேட்டராக மட்டுமே கூடப் பயன்படுத்தலாம் என்று வல்லுநர்கள் சொல்லும் அளவுக்கு இருந்தது அவர் செயல்பாடு.

ஆனால், பல்வேறு விஷயங்களை அடைவதற்கான வாய்ப்புகள் இருந்தும் இந்தியா தவற விட்டிருக்கிறது.

சாய் சுதர்ஷன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்த இரண்டு போட்டிகளில் இந்தியாவுக்கு நடந்திருக்கும் சாதகமான விஷயமெனில் சாய் சுதர்ஷனின் செயல்பாடு

நித்திஷ் எதற்காக ஆடினார்?

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நம்பர் 6 இடத்தில் நித்திஷுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அவரை ஒரு முக்கிய டெஸ்ட் பிளேயராக உருவாக்க இந்தத் தொடர் ஒரு நல்ல வாய்ப்பாக கருதப்பட்டது. 2 முழுநேர வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டுமே பிளேயிங் லெவனில் இருப்பதால், அவரது வேகப்பந்துவீச்சை நன்கு பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை.

இந்த இரண்டு போட்டிகளிலும் சேர்த்து இந்தியா மொத்தம் 290 ஓவர்கள் பந்துவீசியது. அதில் நித்திஷ் வீசியது வெறும் நான்கே ஓவர்கள். வெறும் 1.4 சதவிகித ஓவர்களுக்கே அவர் பயன்படுத்தப்பட்டார். அதுவும் அந்த 4 ஓவர்களையும் முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸிலேயே வீசியிருந்தார். அடுத்த 3 இன்னிங்ஸிலும் ஒரு பந்துகூட வீசவில்லை. அதுவும் இரண்டாவது டெஸ்ட்டில் இந்திய அணி தொடர்ச்சியாக 200.4 ஓவர்கள் பந்துவீசியபோது கூட நித்திஷ் குமார் ரெட்டியின் கையில் பந்தைக் கொடுக்கவில்லை.

இத்தனைக்கும் "வெளிநாட்டு போட்டிகளில் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் தேவை என்பதால் நித்திஷ் குமார் ரெட்டியை ஆடவைத்தோம்" என்று தொடர் முடிந்த பிறகு கில்லே கூறியிருந்தார்.

பந்துவீச்சில் தான் இப்படியே என்றால், பேட்டிங்கிலும் அதே நிலை தான். இந்தத் தொடரில் அவர் ஒரேயொரு இன்னிங்ஸ் தான் பேட்டிங் செய்தார்.

அஹமதாபாத் டெஸ்ட்டில் ஜடேஜா, வாஷிங்டன் இருவரையும் அவருக்கு முன் களமிறக்கினார்கள். மேலும், இரண்டாவது நாள் ஸ்கோருடனேயே (448/5) இன்னிங்ஸை டிக்ளேரும் செய்தார்கள்.

நித்திஷ் போன்ற வீரர் அதிக நேரம் களத்தில் இருக்க வழிவகை செய்திருக்கலாம். ஆனால், அதையும் செய்யவில்லை.

நித்திஷ் குமார் ரெட்டி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நித்திஷ் போன்ற வீரர் அதிக நேரம் களத்தில் இருக்க வழிவகை செய்திருக்கலாம். ஆனால், அதையும் செய்யவில்லை.

பரிசோதனை முயற்சிகள் எங்கே?

இந்தத் தொடருக்கான அணி அறிவிக்கப்பட்டதில் இருந்தே கேள்விகளும் குழப்பங்களும் எழுந்துகொண்டேதான் இருந்தன.

பல வீரர்களுக்கு வாய்ப்பாக அமைந்திருக்க வேண்டிய இந்தத் தொடரை, கம்பீரின் குழு அணுகிய விதம் ஆரம்பத்தில் இருந்தே கேள்விக்குறியாகத்தான் இருந்தது.

வெஸ்ட் இண்டீஸ் - ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 8வது இடத்தில் இருக்கும் அணி.

சர்வதேச அரங்கில் ஒட்டுமொத்தமாகவே வீழ்ச்சியை சந்தித்திருந்தாலும் டெஸ்ட் போட்டிகளில் ரொம்பவே தடுமாறுகிறார்கள். அப்படியிருக்கும் ஒரு அணிக்கெதிராக சொந்த மண்ணில் விளையாடும்போது எந்த அணியுமே சில பரிட்சார்த்த முயற்சிகளை மேற்கொள்ளும்.

அதுவும் இந்தியா போல் சொந்த மண்ணில் பேராதிக்கம் செலுத்தும் ஒரு அணி, நிச்சயம் இதுபோன்ற ஒரு தொடரை புதிய விஷயங்களைப் பரிசோதித்துப் பார்க்க நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டிருக்க வேண்டும்.

இந்தியா

பட மூலாதாரம், Getty Images

முன்பெல்லாம் இந்திய அணியே இதைப் பலமுறை செய்திருக்கிறது. யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு 2023ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராகத்தான் அறிமுக வாய்ப்பு கொடுத்தார்கள்.

அதே தொடரில் தான் ஷுப்மன் கில்லை நம்பர் 3 இடத்தில் இறக்கி பரிசோதித்துப் பார்த்தார்கள். ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு ஓய்வும் கொடுத்தார்கள். இத்தனைக்கும் இந்தத் தொடர் நடந்தது இந்தியாவில் கூட இல்லை. இருந்தாலும் வெஸ்ட் இண்டீஸ் என்பதால் எந்த யோசனையும் இல்லாமல், அனைத்து முயற்சிகளையும் துணிந்து எடுத்தது இந்தியா.

இதற்கு முன் 2018ல் கூட வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தான் பிரித்வி ஷாவையும் அறிமுகப்படுத்தினார்கள். இது மட்டுமல்ல, மொஹம்மது ஷமி, முகேஷ் குமார் போன்றவர்கள் அறிமுகம் ஆனதும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராகத்தான்.

ஜெய்ஸ்வால் அறிமுகமான போட்டியை வென்றதும், அடுத்த போட்டியில் முகேஷுக்கும் அறிமுக வாய்ப்புகள் கொடுத்தார்கள். குல்தீப் யாதவை ஒருநாள் அரங்கில் பரிசோதித்துப் பார்த்ததும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராகவே.

இப்படி வெஸ்ட் இண்டீஸ் அணியை தங்களின் சோதனைகளுக்கான ஒரு களமாகவே இந்திய அணி பயன்படுத்தி வந்திருக்கிறது.

யஷஸ்வி ஜெய்ஸ்வால்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராகத்தான் அறிமுக வாய்ப்பு கொடுத்தார்கள்.

ராகுல், பும்ராவுக்கு ஓய்வு?

அப்படியொரு அணி பல முன்னணி வீரர்கள் இல்லாமல் இன்னும் பலவீனமாக வரும்போது எவ்வித யோசனையும் இல்லாமல் சிலபல வீரர்களுக்கு வாய்ப்புகள் கொடுத்திருக்கலாம்.

முதல்தர கிரிக்கெட்டில் சுமார் 8,000 ரன்கள் விளாசி தேசிய அணிக்காக ஆடும் வாய்ப்புக்காக காத்திருக்கும் அபிமன்யூ ஈஸ்வரனுக்கு இந்தத் தொடரில் ஒரு அறிமுகம் கொடுத்திருக்கலாம்.

எப்படியும் கே.எல்.ராகுல் 19ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் களமிறங்கப்போகிறார். அப்படியிருக்கும்போது இரண்டாவது டெஸ்ட்டில் அவருக்கு ஓய்வு கொடுத்து அவருக்குப் பதில் ஈஸ்வரனைக் களமிறக்கியிருக்கலாம்.

வேலைப்பளுவைக் காரணம் காட்டி பும்ராவுக்கு ஆஸ்திரேலிய தொடருக்கு ஓய்வு கொடுத்துவிட்டு இந்த டெஸ்ட் தொடரின் இரண்டு போட்டிகளையும் ஆடவைத்ததும் தவறாக அமைந்தது.

அப்படி ஆடியிருந்தாலும் ராகுலுக்குச் சொன்னதுபோல் ஒரு போட்டியில் ஆடவைத்து இரண்டாவது போட்டியில் ஓய்வு கொடுத்திருக்கலாம். பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரை விட இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவருடைய தேவை அதிகமாக இருந்துவிடப் போகிறதா?

இதை பும்ராவின் பக்கமிருந்து மட்டும் பார்க்க வேண்டியதில்லை. பும்ராவுக்கு இந்த டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு கொடுக்கப்பட்டிருந்தால், பிரசித் கிருஷ்ணாவுக்கு கூடுதல் வாய்ப்பு கொடுத்து பரிசோதித்துப் பார்த்திருக்கலாம்.

இதுவரை அவர் இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளில் ஆடியதே இல்லை. இந்திய ஆடுகளங்களில் அவரால் அதே பௌன்ஸை உருவாகக் முடியுமா என்று பார்த்திருக்கலாம். இதைவிட முக்கியமாக அர்ஷ்தீப்பை களமிறக்கி, ஒரு இடது கை பௌலருக்கான தேடலில் ஒரு பரிசோதனை முயற்சி செய்திருக்கலாம். ஆனால், தேர்வுக்குழு அர்ஷ்தீப்பை ஸ்குவாடில் கூட சேர்க்கவில்லை.

பும்ராவுக்கு இந்தத் தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டிருந்தால் இவர்கள் இருவருக்கும் வாய்ப்பு கொடுத்திருக்கலாம்.

கௌதம் கம்பீர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கௌதம் கம்பீர்

புரியாத புதிர்!

ஒரு அணி பரிசோதனை முயற்சிகள் செய்துபார்க்க வேண்டிய அவசியம் இல்லைதான். ஆனால், கம்பீர் பயிற்சியாளராக இருக்கும் இந்த அணிக்கு எதிராக இவ்வளவு கேள்விகள் எழுப்பப்படுவதற்குக் காரணம், ஒருநாள், டி20 போட்டிகளில் எக்கச்சக்க பரிசோதனை முயற்சிகளை கம்பீரின் அணி செய்வதுதான்.

ஒருநாள் சூர்ய குமார் 11வது வீரராகக் களமிறங்குகிறார், இன்னொரு நாள் ஷிவம் தூபே முதல் ஓவர் பந்துவீசுகிறார்.

இப்போது தைரியாமாக கில்லை ஒருநாள் அணியின் கேப்டனாகவும் ஆக்கியிருக்கிறார். இப்படி வெள்ளைப் பந்து போட்டிகளில் பல விஷயங்களை முயற்சி செய்பவர், டெஸ்ட் போட்டிகளில் அதற்குத் தயங்குவது தெரிகிறது.

முன்பு நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா வைட்வாஷ் ஆனது குறிப்பிடத்தக்கது. அதற்காகத்தான் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக முழு பலம் பொருந்திய இந்திய அணியைக் களமிறக்கியிருக்கிறார்கள் என சில விமர்சகர்கள் கூறுகிறார்கள்

ஆனால், கம்பீர் அணியின் அடையாளமே தைரியமான கிரிக்கெட் என்று கூறப்படுவதுண்டு.

கம்பீரின் அணி

பட மூலாதாரம், Getty Images

கம்பீரின் அணி இப்படி பின்வாங்குவதற்கு இன்னொரு உதாரணம், இரண்டாவது டெஸ்ட்டில் இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸ்.

121 என்ற இலக்கை சேஸ் செய்ய நான்காவது நாள் முடிவில் குறைவான ஓவர்களே இருந்தது. அன்றே போட்டியை முடிக்கும் நோக்கில் முதல் பந்தில் இருந்தே பேட்டை சுழற்றினார் ஜெய்ஸ்வால்.

ஆனால், அவர் இரண்டாவது ஓவரிலேயே அவுட் ஆனதும், இந்திய அணி முழுக்க டிஃபன்ஸிவ் அணுகுமுறைக்கு மாறியது. ஐந்தாவது நாளே ஆட்டத்தை முடித்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்து அரை மணி நேர நீட்டிப்பைக் கூட வேண்டாம் என்றார்கள்.

இதுபற்றி தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பேசிய இந்திய முன்னாள் கிரிக்கெட்டர் ஶ்ரீதரன் ஶ்ரீராம், "ஒரு விக்கெட் போனவுடனேயே ஏன் இந்தியா அணுகுமுறையை மாற்ற வேண்டும்? ஒரு அணுகுமுறையைக் கையில் எடுத்ததும் குறைந்தது 15 ஓவர்களாவது அதற்கு அவகாசம் தர வேண்டும். இதன்மூலம் அணியில் இருக்கும் வீரர்களுக்கு என்ன செய்தியை உணர்த்துகிறீர்கள்? இல்லை பொறுமை காப்பதுதான் அணுகுமுறையெனில் அது ஏன் ஜெய்ஸ்வாலிடம் அறிவுறுத்தப்படாமல் போனது?" என்று கேள்விகள் எழுப்பினார்.

இவ்வளவு விமர்சனங்கள் வைக்கும், கேள்விகள் கேட்கும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களும், ஆர்வலர்களும் இந்தியாவின் இந்த சிறப்பான வெற்றியை பாராட்டாமலும் இல்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/ce9dz94dej5o

  • கருத்துக்கள உறவுகள்

இர‌ண்டாவ‌து டெஸ்ட் மைச்சை ச‌ம‌ நிலையில் முடித்து இருக்க‌லாம்...............முன்ன‌னி வீர‌ர்க‌ள் முத‌லாவ‌து இனிங்சில் பெரிய‌ ஸ்கோர் அடிக்க‌ வில்லை

இர‌ண்டாவ‌து இனிங்சில் ஆடும் போது சிறு ந‌ம்பிக்கை இருந்த‌து ச‌ம‌ நிலையில் முடிப்பின‌ம் என‌

பும்ரா குல்டிப் ப‌ந்தில் சில‌ ஓவ‌ருக்கை 6விக்கேட்டை ப‌றி கொடுத்த‌ ப‌டியால் வெற்றி இந்தியா ப‌க்க‌ம் போய் விட்ட‌து

வெஸ்சின்டிஸ் அணியில் அனுப‌வ‌ வீர‌ர்க‌ள் என்று யாரும் இல்லை........................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.