Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மக்களின் எதிர்பார்ப்பும் அரசின் பொறுப்பும்

October 4, 2025

மக்களின் எதிர்பார்ப்பும் அரசின் பொறுப்பும்

— கருணாகரன் —

‘மக்களின் எதிர்பார்ப்பும் அரசின்பொறுப்பும்‘ ஒன்றுடன் ஒன்றாகக்கலந்தவை. எதிர்ப்பார்ப்புகளின் அடிப்படையில்தான் ஒவ்வொரு தரப்பையும் மக்கள் ஆட்சியில் அமர்த்துகிறார்கள். அந்த எதிர்பார்ப்புகள் மக்களிடம் சில அடிப்படைகளில் உருவாகின்றன.

1.   அவர்களுடைய தேவைகள் நீண்ட காலமாக பூர்த்தி செய்யப்படாமல் இருந்ததன் காரணமாக. 

2.   அவர்களுடைய நீண்டகால – குறுகிய காலப் பிரச்சினைகளுக்கான தீர்வு கிடைக்காமல் இருப்பதனால்.

3.   ஜனநாயக விழுமியங்கள், மக்களின் அடிப்படை உரிமைகள், சுயாதீனத்துக்கான வெளி போன்றவற்றை அனுபவிப்பதற்காக.

4.   அனைத்துத் துறைகளிலும் அனைத்து நிலைகளிலும் நாடும் மக்களும் வளர்ச்சியைப் பெறுவதற்காக. குறிப்பாகச் சர்வதேசத் தன்மையைக் கொண்டதாக தாமும் நாடும் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக. 

இதையெல்லாம் கடந்த கால ஆட்சியாளர்கள் நிறைவேற்றாத காரணத்தினால், புதிய தரப்பொன்றின் மூலமாக அல்லது மாற்றுத் தரப்பின் மூலமாக இவற்றைப் பெற முடியும் என்று கருதுகிறார்கள். 

ஆனால், இவை அனைத்தும் மக்களுக்குரியவை. மக்களுக்குக் கிடைக்க வேண்டியவை. மக்களுக்காக நிறைவேற்றப்பட வேண்டியவை. இவற்றைச் செய்வது – நிறைவேற்றுவது ஆட்சியாளர்களின் கடமை. அரசின் பொறுப்பு. 

சரியாகச் சொன்னால்,  இவற்றை நிறைவேற்றுவதற்குத்தானே அரசும் ஆட்சியும். 

ஆனால், ஏற்கனவே ஆட்சியிலிருந்த தரப்புகள் (ஆளும் வர்க்கம்) தமக்கிருந்த அதிகாரத்தின் மூலம் நாட்டின் வளங்களையும் வாய்ப்புகளையும் தாமே அளவுக்கு அதிகமாக அனுபவித்தன; கொள்ளையிட்டன. 

மக்களின் பேரால் அதிகாரத்திலிருந்து கொண்டே மக்களுடையவற்றை எல்லாம் தாம் எடுத்துக் கொண்டு – அபகரித்துக் கொண்டு – மக்களுக்கு விரோதமாகச் செயற்பட்டன. 

இதனால் மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையில் மாபெரும் இடைவெளியும் ஏற்ற இறக்கமும் ஏற்பட்டது. இதுதான் அவர்களைத் தூக்கித் தூர வீச வேண்டியதாகியது. 

இந்த நிலையில்தான் மக்களுடைய எதிர்பார்ப்புகளை (அவர்களுடைய தேவைகளையும் விருப்பங்களையும்) நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தே புதிய தரப்பானது ஆட்சிப் பொறுப்பை (அதிகாரத்தை) எடுக்கிறது அல்லது ஏற்கிறது. 

அப்படித்தான் தங்களுடைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றக்கூடிய ஒரு ‘மாற்றுச்சக்தி‘ என்ற அடிப்படையில் NPP யை மக்கள் ஆட்சியில் அமர்த்தியிருக்கிறார்கள். ‘மாற்றங்களை – திருத்தங்களை- ச் செய்வோம்‘, ‘பிரச்சினைகளைத் தீர்ப்போம்‘, ‘நாட்டை முன்னேற்றுவோம்‘ என்று சொல்லியே, உத்தரவாதம் அளித்தே ஆட்சிப் பொறுப்பை ஏற்றது NPP யும். 

NPP ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு கடந்து விட்டது. மிஞ்சியிருப்பது நான்கு ஆண்டுகளே. 

இந்த நான்கு ஆண்டுகளுக்குள் NPP மக்களுக்கு உத்தரவாதப்படுத்தியவற்றை நிறைவேற்ற வேண்டும். அதைப்போல மக்கள் எதிர்பார்த்தவைகளும் நிறைவேற்றப்பட வேண்டும். 

கவனிக்கவும்: ஒன்று, அரசாங்கம் தானாகவே பொறுப்பெடுத்தவையும் ஏற்றுக் கொண்டவையும் பகிரங்கமாகப் பிரகடனப்படுத்தியவையும் நிறைவேற்ற வேண்டும் என்பது. இரண்டாவது, மக்கள் எதிர்பார்க்கின்றவைகளும் அவர்கள் நம்பியிருப்பவையும் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது. 

இரண்டும் பொறுப்பு ஏற்றல், பொறுப்புக் கூறல் ஆகியவற்றின் அடிப்படையிலானவை. 

ஆனால், இவற்றை எழுந்தமானமாகச் செய்ய முடியாது. செய்யவும் கூடாது. ஏனென்றால், மக்களுடைய எதிர்பார்ப்புகள் என்பது பல வகையானவை. அவற்றை பொதுமைப்படுத்த முடியாது. அப்படிச் செய்தால், அது எதிர்விளைவுகளையும் உண்டாக்கும். இதுவே கடந்த காலத்திலும் நடந்தது. 

குறிப்பாகத் தமிழ் மொழிபேசும் மக்களுடைய பிரச்சினைகளும் அவர்களுடைய எதிர்பார்ப்புகளும்வேறு. தமிழ் பேசும் மக்களிலும்கூட முஸ்லிம்களுடைய பிரச்சினைகளும் தேவைகளும் ஒரு விதமானவை. மலையக மக்களுடைய பிரச்சினைகளும் தேவைகளும் இன்னொரு வகைப்பட்டன. தமிழர்களுடைய பிரச்சினைகளும் தேவைகளும் வேறானவை. 

இதேவேளை இன்னொரு நிலையில் தமிழ்மொழிச் சமூகங்கள் என்ற வகையில் அவர்கள் எதிர்கொள்கின்ற பொதுப் பிரச்சினைகளும் உண்டு. அது அந்தச் சமூகங்களின் மொழி, பாதுகாப்பு, அபிவிருத்தி, அரசியல் உரிமை (அதிகாரப் பகிர்வு) போன்றன. அப்படித்தான் அனைவரும் இலங்கையின் குடிமக்கள் என்ற அடிப்படையில் பொதுப் பிரச்சினைகளும் உள்ளன. உதாரணமாகப் பொருளாதாரப் பிரச்சினை அவற்றில் ஒன்று. 

ஆகவே ஒவ்வொன்றையும் அதனதன் தன்மை, அவற்றின் முக்கியத்துவம் என உணரப்பட்டு, அவற்றுக்கான தீர்வுப் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும். பொருத்தமான நடைமுறைகள் மேற்கொள்ளப்படுவது அவசியம். 

அதாவது ‘பொதுப்பிரச்சினைகள், பிரத்தியேகப் பிரச்சினைகள்‘ என  வகைப்படுத்தி, அவற்றைத் தீர்ப்பதற்கு முயற்சிக்க வேண்டும். ஆனால், NPP யும் இந்த அடிப்படைகளைப் புரிந்து கொண்டு அல்லது ஏற்றுக் கொண்டு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முயற்சிப்பதாகத் தெரியவில்லை. பதிலாக கடந்த ஆட்சியாளர்களைப் போலவே சிந்திக்கிறது; செயற்பட விளைகிறது. 

‘அப்படி அல்ல‘ என்று யாரும் இதை மறுத்துரைத்தால், அவர்கள் அதை ஆதாரங்களோடு நிரூபிக்க வேண்டும். வெளிப்பார்வையில் NPP பல அதிரடி மாற்றங்களை உருவாக்குகிறது. புதியனவற்றைச் செய்கிறது. பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது போலவே தோன்றும். ஆனால், நிஜமாக அப்படியல்ல. ஆழ்ந்து நோக்கினால் இந்த உண்மை தெரியவரும். 

சில நடவடிக்கைகளை NPP எடுத்துள்ளது என்பது உண்மை. அவை மேலோட்டமானவை. உதாரணமாக, ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டுச் சிறை வைக்கப்பட்டார். ரணிலின் மீதான குற்றச்சாட்டு, அரச பணத்தைத் தனிப்பட்ட தேவைகளுக்காக விரயமாக்கினார் என்பதாகும். அந்தப் பணத்தின் அளவு (தொகை) மிகச் சொற்பம். 

ராஜித சேனாரத்ன தொடக்கம் மகிந்தானந்த அழுத்கம வரை நான்காம் ஐந்தாம் நிலையாளர்களும் கைது செய்யப்பட்டுச் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். ஆட்சித் தவறுகளுக்கு அனுசரணையாக இருந்தவர்கள் என்ற அடிப்படையில் கடற்படை, பொலிஸ், பாதுகாப்புப் பிரிவு போன்றவற்றின் உயர் அதிகாரிகளில் சிலரும் கைது செய்யப்பட்டுச் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். இவை முக்கியமானவைதான்.

ஆனால், நாட்டைக் கொள்ளையிட்ட பலர், பல கோடிகளைச் சாப்பிட்டு விட்டு இன்னும் பாதுகாப்பாகவே உள்ளனர். குறிப்பாக ராஜபக்ஸக்கள். அவர்களில் கை வைப்பதற்கு அரசாங்கம் தயங்குகிறது. 

இதுவரையில் கைது செய்யப்பட்டவர்களும் விசாரணை செய்யப்பட்டவர்களும் பலிக்கடா நிலையில் உள்ளோர். உண்மையான பெருச்சாளிகள் வெளியேதான் உள்ளனர். 

பாதாள உலகக் குழுக்களை அரசாங்கம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான – இல்லாதொழிப்பதற்கான – நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்தப் பாதாள உலகக் குழுக்களே கடந்த ஆட்சியாளர்களின் கவசமாகவும் போதைப்பொருள் மாஃபியாக்களாகவும் இருந்தன.

ஆகவே அவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதே கடந்த கால ஆட்சியாளர்களின் (குற்றவாளிகளின்) வேர்களை அறுப்பதற்கான முதல் நடவடிக்கையாகும். இதைப் பாராட்ட வேண்டும். 

ஆனால், அரசியற் கொலைகளோடும் போர்க்குற்றங்களோடும் தொடர்புபட்டவர்களின் மீது எந்த விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை. அதைப் பற்றிய பேச்சே இல்லை. மீளிணக்க நடவடிக்கைகள் உறங்கு நிலையிலேயே உள்ளன. அரசியற் கைதிகளின் விடுதலை பற்றிய பேச்சே இல்லை. மிக இலகுவாகச் செய்யக் கூடிய – அவசரமாகச் செய்ய வேண்டிய மாகாண சபைகளுக்கான தேர்தலைக் கூட நடத்துவதற்கு அரசாங்கம் சாட்டுப் போக்குகளைச் சொல்கிறது. 

அவசரகாலச் சட்டத்தை நீக்குவதைப்பற்றி அரசாங்கம் சிந்திக்கவே இல்லை. இன்னொரு புதிய சட்டம் வந்ததற்குப் பிறகுதான் அவசரகாலச் சட்டம் நீக்கப்படும் என்று அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்திருக்கிறார். இதைச் சொல்வதற்கு சந்திரசேகரனும் NPP யும் வெட்கப்பட வேண்டும். இதுதான் மாற்றம் பற்றிய NPP யின் சித்தாந்தமும் நடைமுறையுமா?

பொருளாதாரக் கொள்கையளிலும் NPP ஒன்றும் புதிய சிந்தனையைக் கொண்டுள்ளதாகத் தெரியவில்லை. அதே பழைய பாதையில் வண்டியை ஓட்டுவதே NPP யின் இலக்கு. ஏன் அதனால் புதிதாகச்சிந்திக்க முடியாமல் உள்ளது? அறிவுக் குழப்பமா? உள அச்சமா? இயலாமையா? அப்படியென்றால் முறைமை மாற்றம் (System Change) என்று ஏன் மக்களுக்குச் சொல்லப்பட்டது; படம் காட்டப்பட்டது?

இதே அளவுக்கு தமிழ்பேசும் சிறுபான்மைச் சமூகங்களின் (தேசிய இனங்களின்) அரசியல் உரிமை – அதிகாரப் பகிர்வு தொடக்கம் அவர்களுடைய பிரதேசங்களின் அபிவிருத்தி வரையில் தனிக் கவனத்துக்குரிய கொதிநிலைப் பிரச்சினைகள் பல உண்டு. இது தனியே வடக்குக் கிழக்குக்குரிய பிரச்சினை மட்டுமல்ல, மலையகத்துக்குமான பிரச்சினையுமாகும். 

இவற்றைப் பற்றி அரசாங்கம் (NPP) இதுவரையில் சிந்தித்ததாக எந்தச் சிறு அடையாளமும் இல்லை. பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்த்து விட்டால் ஏனைய அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்து விடும் என்ற முந்திய ஆட்சியாளர்களின் பழைய, மூட நம்பிக்கையோடுதான் NPP யும் உள்ளது. 

அதாவது அனைத்துக்குமான நோய் நிவாரணி பொருளாதாரப் பிரச்சினையே. அதைத் தீர்த்து விட்டால், அனைத்தும் குணமடைந்துவிடும்; தீர்ந்து விடும் என்று. 

இந்த முட்டாள்தனத்தின் விளைவாகத்தான் பொருளாதார நெருக்கடியே உருவானது. அது ஏதோ ஊழல் செய்ததால் மட்டும் ஏற்பட்ட நெருக்கடி அல்ல. ஆனால், அப்படித்தான் NPP யும் சிங்கள மக்களில் ஒரு தொகுதியினரும் நம்புவதாகத் தெரிகிறது. 

இதுதான் சரியென அவர்கள் மேலும் முட்டாள்தனமாக நம்பினால், நாடு இன்னும் நெருக்கடியைத்தான் சந்திக்கும். படிப்பினைகளைச் சரியாக எடுத்துக் கொள்ளாத தனி மனிதர்களும் சரி, குடும்பமும் சரி, நாடும் சரி, முன்னேற்றத்தை எட்டவும் முடியாது. தவறுளைத் திருத்திக் கொள்ளவும் முடியாது.  

பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்கான அரசாங்கத்தின் முயற்சி கூட பலவீனமாகவும் தவறாகவுமே உள்ளது. எளிய உதாரணம், வடக்குக் கிழக்குக்கான விமான நிலையங்களையும் துறைமுகங்களையும் அபிவிருத்தி செய்வதில் அரசாங்கம் காட்டும் பாரபட்சமும் தவிர்ப்பு முறைகளும் இதற்கு வலுவான சான்று. 

காங்கேசன்துறைத் துறைமுக அபிவிருத்தியைப் புறம் தள்ளி விட்டு யாழ்ப்பாணத்தில் கிரிக்கெட் மைதானத்தை அரசாங்கம் அமர்க்களமாக உருவாக்க முயற்சிக்கிறது. அப்படித்தான் வடக்கிற்கான விமான நிலைய அபிவிருத்திப் பணிகளை இழுத்தடிப்பதுமாகும். இவை இரண்டுக்குமான நிதி அனுசரணை இந்திய அரசு வழங்குகிறது. இருந்தும் இழுத்தடிப்பதற்கான காரணம் என்ன? 

இப்படிப் பலவற்றைச் சொல்லிக் கொண்டே போகலாம். அந்தளவுக்குத்தான் NPP யின் ஆட்சித் தவறுகள் பெருகிக் கொண்டுள்ளன. மக்கள் NPP க்கு அதிகாரத்தை – ஆணையை வழங்கியது மாற்றங்களைச் செய்வதற்கே. அதாவது பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் தமது நியாயமான தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும். 

ஆனால், அதைச் செய்யாமல், கடந்த கால ஆட்சித் தவறுகளைத் தொடருவதும் கடந்த கால ஆட்சியாளர்கள் காட்டிய தயக்கத்தையும் – விட்ட தவறுகளையும் (ஊழலைத் தவிர) தொடருவதும் நல்லதல்ல. அது ஆட்சித் திறனுமல்ல. 

NPP யைக் கைவிட்டால், அதல்லது அதனை அதிகாரத்திலிருந்து அகற்றினால் அந்த இடத்தில் ராஜபக்ஸக்களோ ஐ.தே.க, ஐக்கிய மக்கள் சக்தி அல்லது, சு. க போன்ற பழைய – மோசமான தரப்புகள்தானே அதிகாரத்தைக் கைப்பற்றும். அது சரியானதா? என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.

ஏனைய தரப்புகளை விட NPP பரவாயில்லைத்தான். ஆனால், இப்படி ஒரு நியாயத்தை முன்வைத்து NPP யின் தவறுகளையும் ஆட்சித் திறனின்மையையும் அதனுடைய இரகசிய இனவாத – இன ஒதுக்கல் நிகழ்ச்சி நிரலையும் ஏற்றுக் கொள்ளவும் கூடாது. அனுமதிக்கவும் முடியாது.  அது நாட்டுக்கும் மக்களுக்கும் செய்யும் அநீதி, துரோகமாகும். இன்னொரு வகையில் சொன்னால், இன்னொரு தவறான தரப்பை நியாயப்படுத்தி நம்மை நாமே தண்டனைக்குள்ளாகுவதாகும். 

https://arangamnews.com/?p=12362

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.