Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கதை - 187 / 'இலங்கை கடற்கரை “நெடுஞ்சாலை” யில் தாத்தா, கந்தையா தில்லையுடன் பேரப்பிள்ளைகள்' / பகுதி: 01

பகுதி: 01 - ஒட்டாவாவில் இருந்து யாழ்ப்பாணம் வரை

முதன் முதலில் “கடற்கரை அலைந்து திரிந்தோர்” (Beachcombers) ஆப்பிரிக்காவில் தோன்றிய மனிதர்களே ஆகும். கடற்கரைகளைக் கடந்து, கடலின் வளங்களை உணவாகக் கொண்டு அவர்கள் மெதுவாக ஆப்பிரிக்காவிலிருந்து ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் பின்னர் உலகின் பல பகுதிகளுக்குப் பரவினர் என்பது வரலாறு ஆகும். இதனால், மனித வரலாற்றின் முதல் “நெடுஞ்சாலை”யாக கடற்கரை அமைந்து இருந்தது. அதனாலோ என்னவோ, தாத்தாவும் தன் வெளிநாட்டில் பிறந்து வளரும் பேரப்பிள்ளைகளுக்கு அந்த பெருமை பெற்ற “நெடுஞ்சாலை” வழியாக இலங்கை சுற்றிலாவை ஆகஸ்ட் 2025 இல் ஆரம்பிக்க முடிவு செய்தார்.

ஆகஸ்ட் 11, 2025 அன்று, மூன்று சிறிய ஆய்வாளர்கள், தாத்தா கந்தையா தில்லையின் பேரப்பிள்ளைகள் - ஜெயா, கலை, மற்றும் இசை - கனடாவின் ஒட்டாவாவில் இருந்து விமானத்தில் தங்கள் தாத்தாவுடன், ஜெர்மனியின் ஊடாக, பறந்து சென்று, இலங்கையில் தரையிறங்கினர்.

“ஆஹா, இங்கே மிகவும் சூடாக இருக்கிறது, தாத்தா!” அவர்கள் பண்டாரநாயக்க பன்னாட்டு வானூர்தி நிலையத்திலிருந்து வெளியே வந்ததும் ஜெயா முகத்தை விசிறிக் கொண்டாள். “ஏனென்றால் இது வெப்ப மண்டலப் பகுதி, என் அன்பே. கனடாவை விட இங்கு சூரிய ஒளி சற்று குறும்புத்தனமானது,” தாத்தா சிரித்தார்.

உலகில் கண்களைக் கவரும் இடங்களில் கடற்கரையும் ஒன்று எனலாம். கடற்கரையைப் பற்றி அறியாதவர் யாவரும் இருக்க மாட்டார்கள். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கடற்கரைக்கு செல்வ தென்றால் மிகவும் பிடிக்கும். எனவே, ஒரு வாடகை வேனில் [Van] ஒரு நட்பு ஓட்டுநருடன், முதலில் கடற்கரை நகரமும் மற்றும் தலைநகரமான கொழும்புக்கு சென்று இருநாள் ஓய்வு எடுக்க முடிவு செய்தனர். எனவே பிரித்தானிய ஆளுநர் சேர் என்றி சியார்ச் வார்டு [ Governor of British Ceylon, Sir Henry George Ward (1797–1860)] என்பவரின் முயற்சியின் பலனாக 1859 ஆம் ஆண்டு உருவான காலிமுகத் திடலுக்கு (Galle Face Green) முன்னால் அமைந்த ஹோட்டல் ஒன்றில் தங்க முடிவு செய்தனர்.

சில்லென்ற கடல் நீர், இதமான தென்றல் காற்று, கடல் அலையின் ஓசை, கொஞ்சி விளையாடும் பறவைகள் என யாவும் தமக்கு மன உளைச்சலையும் மன அழுத்தத்தையும், பயணக் களைப்பையும் போக்கும் என்பதாலும் மற்றும் குழந்தைகளுடன் சந்தோஷமாக களிக்கலாம் என்பதாலும், தாத்தா அந்த ஹோட்டலை தெரிந்து எடுத்தார்.

ஆகஸ்ட் 13 ஆம் தேதி, அதே வாடகை வேனில் தம்புள்ளை [Dambulla] வழியாகச் யாழ் நகரை நோக்கிச் செல்லும் போது, தங்கச் சிலைகளால் மின்னும் குகைக் கோயில்களைப் பார்த்து வியந்தது, "இது ஒரு கதைப்புத்தகக் குகை போல நான் உணர்கிறேன்!" என்று கலை மூச்சுத் திணறினான். தம்புள்ளையை தாண்டும் பொழுது தாத்தாவின் முகம் கொஞ்சம் வாடியிருந்தது. அதைக் கவனித்த ஜெயா, தாத்தாவைத் தட்டி என்ன நடந்தது என்றாள்? யாழ்ப்பாணம் - கண்டி ஏ9 நெடுஞ்சாலையில் அன்று பல ஆண்டுகளாக அமைந்து இருந்த ஒரேயொரு தமிழ் இந்து ஆலயமான தம்புள்ளை பத்திரகாளி அம்மன் கோயில், புத்த பிக்குவின் தலைமையில் பல முறைதாக்குதல் நடத்தப்பட்டு, இறுதியாக அக்டோபர் 28, 2013-ம் நாள் ஆலயம் முற்றாக இடித்து தரைமட்டமாக்கப் பட்டுள்ளது எதையம்மா காட்டுகிறது ?. ஆனால், இந்த முன்னைய தம்புள்ளை பொற்கோவிலில் தெய்வங்களுக்குரிய 4 சிலைகள் காணப்படுகின்றன. இதில் இரண்டு இந்துக் கடவுள்களான விஷ்ணு மற்றும் விநாயகர் சிலைகளாகும் என்பது வரலாற்று உண்மையாகும் என்று தாத்தா ஜெயாவுக்கு ஒரு சரித்திரமே கூறினார். அவள் அதைக் கவனமாகக் கேட்டாள். இது ஆரம்பகாலத்தில் தம்பலை என அழைக்கப்பட்டது. இராச இராச சோழன், இராசேந்திர சோழன் ஆகியோர் 10ஆம் 11 ஆம் நூற்றாண்டுகளில் இப்பகுதியை ஆண்டார்கள் என தன் உரையாடலை முடித்தார். அன்று இரவு, அவர்கள் இறுதியாக தாத்தாவின் குழந்தை மற்றும் வாலிப பருவத்தின் வாழ்விடமான கரையோர நகரமான யாழ்ப்பாணத்தை அடைந்தனர். அங்கே, தாத்தாவின் பிறப்பு இடமான அத்தியடிக்கு அருகில் உள்ள ஒரு ஹோட்டலில், ஒரு சிலநாட்கள் தங்க முடிவெடுத்தனர். அந்த ஹோட்டலை பார்த்து கொண்டு யாழ் ரயில் நிலையம் அமைந்திருந்தது. அந்த யாழ் ரயில் நிலையத்தின் பின்பக்கம் தான் தாத்தா, தாத்தாவின் அம்மா, சகோதரங்கள் எல்லோரும் பிறந்து வளர்ந்த பெருமைமிக்க அத்தியடி அமைந்துள்ளது.

"நாம் "ஊர்விட்டு ஊர் சென்று வாழ்ந்தாலும்

யாழ் மண் வாசம் மனம் விட்டு போகாதே,

யாழ் தேவி ரெயில் ஏறுவோம்,

எங்கள் இதயத்தின் மொழி பேசுவோம்"

என்று "கவிஞர் சதீஸ்" எழுதிய பாடல் வரிகளை நினைவூட்டியது. ஒவ்வொரு யாழ்ப்பாண மக்களினதும் வாழ்க்கையுடன் நெஞ்சில் பின்னிப் பிணைந்த யாழ்தேவியின் சத்தத்தையும் ஆரவாரத்தையும் கேட்காத நாட்களே அன்று இல்லை.

"ஆறுமுக நாவலன் அடியிணை பரவுதும் தேறு முகவின்பந் திகழ்தரற் பொருட்டே" என "நாவலர் சற்குருமணிமாலை" போற்றும், தமிழும் சைவமும் தந்த நல்லை நகர் ஆறுமுக நாவலர் வீடு, இன்றைய நாவலர் மண்டபம், ஹோட்டலில் இருந்து, அரை மையிலுக்கும் குறைவான தூரத்தில், தாத்தா குடும்பத்தாரின் முன்னைய வீட்டின் பின்பக்கத்தில் தான் அமைந்திருந்தது. அங்கு தான் தாத்தா இளம் வயதில் பந்தடித்து விளையாடினார்.

பொதுவாக யாழ்ப்பாண நகர், யாழ் கோட்டை , சந்தை பகுதியையும் வைத்திய சாலை, பேருந்து, புகையிரத, நிலையத்தையும் முதன்மை வீதிகளையும் உள்ளடக்கியுள்ளது. வட அமெரிக்கரின் பேச்சுப்பாங்கில் இதை "downtown."எனவும் கூறலாம். யாழ்ப்பாணத்திற்கே அணித்தான நெடிந்துயர்ந்த பனை மரங்கள், உயர்ந்த கட்டிடங்கள் மத்தியிலும் ஆங்ககாங்கே இருந்தது. ஜெயாவும் கலையும், முதல் முதல், அந்த முன் இரவிலும் யாழ் நகரைப் பார்த்து ரசித்து ஆச்சரியப்பட்டனர். இசை தாத்தாவின் மடியில் தூங்கிவிட்டான்.

ஜெயாவையும் கலையையும் தன் அருகில் அழைத்த தாத்தா, 'பனை மரம் புயலுக்கு பயங்கரமாக ஆடி அசைந்தாலும், நாணல் போல வளைந்து தப்பிக் கொள்ளாதது. அது வளைவதை விட, வளையாமல் உடைவதையே விரும்புவது. இன்னல், துன்பம் வரும் போது, யாழ்ப்பான மக்கள், பனை மரத்தின் இந்த சிறப்பான தன்மையை உதாரணமாக எடுத்து, தாமும் அது போல் உற்சாகத்துடன் தைரியம் மற்றும் துணிச்சலுடன் தளர்வுறாத, விடாப்பிடியாய் எதிர்க்கின்ற ஒரு இயல்புக் குணத்தை கொண்டிருந்தனர்' என ஒரு பெரும் விளக்கம் கூறினார்.

மஞ்சள் வெயில் பூத்த வானமும்

பனை மரங்களின் இனிய தாலாட்டும்

பச்சை கிளிகளின் கொஞ்சும் சங்கீதமும்

யாழ் தொட்டால் காதுகளுக்கு எட்டிவிடும்

எல்லோர் மன தோடும் ஒட்டிவிடும்

அன்பும் பண்பும் துளிர் விடும்!

வீட்டை விட்டு எட்டி நடந்தால்

வானம் பாடிகளின் ஆட்டமும்

வீதியோர பசுக்களின் கூட்டமும்

காதுகளில் ஒலிக்கும் செந்தமிழும்

வானுயர நிமிர்ந்த பனைமரமும்

மனதைத் தொடும் நினைவுகளே!

நன்றி

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

பகுதி: 02 தொடரும்

சிறு கதை - 187 / 'இலங்கை கடற்கரை “நெடுஞ்சாலை” யில் தாத்தா, கந்தையா தில்லையுடன் பேரப்பிள்ளைகள்' / பகுதி: 01

https://www.facebook.com/groups/978753388866632/posts/31646004468381455/?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதை - 187 / 'இலங்கை கடற்கரை “நெடுஞ்சாலை” யில் தாத்தா, கந்தையா தில்லையுடன் பேரப்பிள்ளைகள்' / பகுதி: 02





பகுதி: 02 - நல்லூர் திருவிழா




'யாழ்ப்பாணம் எங்கும் சேவல் கூவுகிறது. பொழுது விடிகிறது. சூரியன் சுடுகிறது. குயில்கள் பாடுகின்றன. வெள்ளை மல்லிகையின் நறுமணம் எங்கும் பரவுகிறது. இந்த சொர்க்கத்தில் நித்திரை செய்து எழும் போது என்னவொரு சுகம்! மாலையில் சூரியன் மேற்கு திசையில் மறைவதை பனை மரங்களின் "நிழல் படம்" [நிழல்வடிவம்] வழியாக பார்ப்பதில் என்ன பேரின்பம்!! அதன் பின் மங்கும் அந்தியொளியில் பனை தந்த அமிர்தத்தை அவசரமாக விழுங்குவதில் காணும் இன்பமோ- சொல்லில் அடங்கா மகிழ்ச்சி!!!' தாத்தா காலை எழும்பியதும் சாளரத்தின் ஊடாக வெளியே பார்த்து முணுமுணுத்தார்.





இது நல்லூர் முருகன் கோயில் திருவிழா காலம் என்பதால், யாழ்ப்பாணம் - விளக்குகள், மணி ஓசைகள், மேள தாளங்கள் மற்றும் தூப வாசனையால் நிறைந்திருந்தன. அதே நேரத்தில் காவி நிறக் கொடிகள் [saffron flags] அந்தி வானத்தில் நெருப்பு நாக்குகளைப் போல பறந்தன. 15 / 08 / 2025, நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 19ம் திருவிழாவான கார்த்திகை திருவிழாவாகும். தாத்தாவும் மூன்று பேரப்பிள்ளைகளும் பாரம்பரியமான உடைகளுடன் அங்கு சென்றனர். அன்று முருக பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் பூஞ்சப்பரத்தில் ஊர்வலம் வந்தார்.




பண்பாடு கலாசாரம் காட்டும் உடை
பலராலும் உடுத்த வெள்ளை வேட்டி!
காலம் மாற கோலம் மாறினாலும்
திருவிழாக் காலத்தில் தோன்றும் வேட்டி!




படித்தவரும் கட்டினர் பாமரரும் கட்டினர்
உடுத்த வேட்டியில் மகிழ்ச்சி கொண்டனர்
மடித்தகரை சால்வையை தோளில் போட்டு
எழுந்து நடந்தனர் மனதில் கம்பீரம்பொங்க!




குழந்தைகள் ஜெயா, கலை மற்றும் இசை ஆகியோருக்கு, அவர்களின் மூதாதையர் நிலத்தில் இவ்வளவு வண்ணமயமான மற்றும் ஆன்மீக விழாவை அனுபவிப்பது இதுவே முதல் முறையாகும்.




ஊர்வலத்திற்கு சற்று முன்பு, மூன்று குழந்தைகளும் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினர். அவர்கள் காவடி எடுக்க விரும்பினர்!




“தாத்தா, நாங்களும் காவடி எடுத்துச் செல்லலாமா?” ஜெயா ஒளிரும் கண்களுடன் கேட்டார். “நீ இன்னும் சிறியவள், கண்ணா. காவடி கனமானது,” என்று தாத்தா கொஞ்சம் தயங்கினார்.




ஆனால் விரைவில், பூசாரிகளும் உதவியாளர்களும் மயில் இறகுகள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட சிறிய குழந்தைகளின் காவடியைக் கொண்டு வந்தனர். கூட்டம் கைதட்டியது, குழந்தைகளின் முகங்கள் பிரகாசித்தன.




கலை காவடியைத் தோளில் வைத்துக்கொண்டு கத்தினான்:
“முருகனுக்கு அரோகரா! .. கந்தனுக்கு அரோகரா!”




மூவரிலும் இளையவரான 'இசை', தனது சகோதரனைப் பின்பற்றி, இரண்டு கைகளாலும் காவடியை சமநிலைப்படுத்த முயன்றான். சிறுவனின் கால்கள் நடுங்க, அனைவரும் அன்பாக பார்த்து மகிழ்ந்தனர், ஆனாலும் அவனது மனம் தாளத்துடன் நடனமாடியது.




மூத்தவள் ஜெயா, கோயில் மேளங்களின் தாளத்தில் அழகாக, "கைவழி நயனஞ் செல்லக், கண்வழி மனமும் செல்ல, மனம் வழி பாவமும், பாவ வழி ரசமும் சேர" என, பொன்னால் செய்த பூங்கொடி ஒன்று வந்திருந்து நடனமாடியது போலவே அபிநய பாவங்கள் அழகுறக் கடைப் பிடித்து நடனமாடினாள், அவளுடைய கணுக்கால்கள் (Ankle) சத்தமிட்டன. அவள் முருகனின் சிறிய தேவதாசி போல இருந்தாள், அதே நேரத்தில், மலர்ந்த நெய்தல் மலர் போன்ற கண்களைக் கொண்ட - கலை, புன்முறுவலுடன் அமர்ந்தும், குதித்தும், சுழன்றும் தன்னை ஒரு தவில் வித்வான் போல நடித்து வட்டமாக சுழன்று சுழன்று ஆடினான்.




காவடி தூக்கி ஆடு - அவன்
காலடி பணிந்து பாடு - நம்
பாவங்கள் தீர்க்கும் குமரன் - அவன்
திருவடி நாடு தினம்!



ஆறுபடை வீடு பாரு - அது
ஆறுதலைத் தரும் கேளு - ஓம்
சரவணபவ எனும் - மந்திரம்
வினைகள் தீர்க்கும் புரிந்திடு!




நூற்றுக்கணக்கான பக்தர்களால் இழுக்கப்பட்ட தங்க வேல் சப்பரம் கோவிலிலிருந்து வெளியே வந்த போது, வளிமண்டலம் மின் ஒளி மயமானது. வெப்பமண்டல மாலையில் காற்றோடு கலந்த மல்லிகை, கற்பூரம் மற்றும் தூப வாசனை எங்கும் பரவியது.




ஜெயா: “நான் இங்கேயே என்றென்றும் இருக்க விரும்புகிறேன், தாத்தா. முருகன் நம்மைப் பார்த்து சிரிப்பது போல் இருக்கிறது.” என்றாள். கலை: “நான் பெரியவனானதும், பெரியவர்களுடன் சேர்ந்து சப்பரம் இழுப்பேன்.” என்றான். இசை: (சிரித்துக்கொண்டே) “அம்மா... ஐஸ்கிரீம்!” என்று துள்ளினான்.




அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர். தெய்வீக பக்தியின் நடுவிலும், ஒரு குழந்தையின் இதயம் இன்னும் ஐஸ்கிரீமுக்காக ஏங்கியது இயல்பான உண்மை நிலையைக் காட்டியது. அதனால்த்தான் அங்கு சனக் கூட்டம்!




அலங்கரிக்கப்பட்ட தெய்வத்தை சுட்டிக்காட்டி, “பிரகாசிக்கும் கடவுள்!” என்று கத்தினான் குட்டி 'இசை'. “இது முழு அலங்காரத்தில் இருக்கும், தமிழ்க் கடவுள் எனக் கருதப்படும் முருகன், அலங்காரக் கந்தன்.” என்று கூற, கலை, 'தாத்தா தாத்தா .. முருகன் கதை ஒன்று சொல்லுங்க' என்று பிடிவாதமாக வெள்ளை மண்ணில் உருண்டான்.




👴 தாத்தா : நல்லூரான், முருகப்பெருமான் கதை கேட்டுக்கொள்ள விரும்புகிறாயா, குட்டி?


👦 பேரன் : ஆமாம் தாத்தா! முருகன் கதை சொல்றீங்களா? என்று கேட்டபடி, மணலில் இருந்து எழும்பினான்.


👴 தாத்தா : சரி. ஒருநாள் நாரத முனிவர், சிவபெருமானிடம் ஒரு பொன் மாம்பழம் கொண்டு வந்தாராம். அந்த மாம்பழம் யாருக்குக் கிடைக்கும்னு போட்டி ஒன்று போட்டாராம்.


👦 பேரன் : யாரெல்லாம் போட்டில கலந்துகிட்டாங்க?


👴 தாத்தா : முருகப்பெருமான், மற்றும் கணேசப்பெருமான் மட்டுமே


இசை சிரித்தான், 👴'தொப்பை வயிருடன், மோதகம் சாப்பிடுபவரா ?'


தாத்தா தொடர்ந்தார், 👴ஆமாம் , சிவபெருமான் சொன்னாராம் – “யாரு மூன்று தடவை உலகத்தைச் சுற்றிகிட்டு வருகிறாரோ, அவங்கத்தான் மாம்பழம் சாப்பிடலாம்.” என்று


👦 பேரன்: அப்போ முருகன் என்ன பண்ணாரு?


👴 தாத்தா: அவன் தன் மயிலின் மேல் ஏறிக்கிட்டு – “வீய்ய்… வீய்ய்…”ன்னு உலகத்தையே சுற்றிப்பார்த்துட்டாராம்.


👦 பேரன்: ஹா ஹா! எவ்வளவு வேகமா பறந்திருக்கும் அந்த மயில்!, எலியில் கணேசப்பெருமான் பாடு ... பாவம் ... பாவம்


👴 தாத்தா: ஆமாம். ஆனா கணேசர் என்ன பண்ணினாரு தெரியுமா?


👦 பேரன் [ஆச்சரியத்துடன்] : என்ன பண்ணினாரு தாத்தா?


👴 தாத்தா: “அவன் யோசிச்சான் – என் அம்மா அப்பா தான் எனக்கு உலகமே. அவர்களைச் சுற்றினால் போதும்.” ன்னு. அவன் மூன்று தடவை சிவபெருமான் – பார்வதியம்மா இருவரையும் சுற்றினாராம்.


👦 பேரன்: ஐய்யோ! அதான் பெரிய புத்திசாலித்தனம்!


👴 தாத்தா: சரியாக சொன்னாய் குட்டி. அதனாலே சிவபெருமான் மகிழ்ந்து அந்த மாம்பழம் கணேசருக்கே கொடுத்தார்.


👦 பேரன்: அப்போ முருகன் கோவம் பண்ணினாரா?


👴 தாத்தா: ஆமாம்!


😄 அவன் மயிலோட கோபத்துல பறந்துட்டு பழனி மலையிலே போய்ச் சேர்ந்தான். “இனிமேல் நான் இங்குதான் இருப்பேன்” ன்னு சொல்லிக்கிட்டான்.


👦 பேரன்: ஹா ஹா! முருகனுக்கு கூட - என்னை மாதிரியே சின்னச் சின்ன விஷயத்துக்கே கோவம் வந்துடுது ?


👴 தாத்தா : 😄 சரியாகச் சொன்னாய்! ஆனா, அந்தக் கோபத்துக்குள்ளேயும் பாசம் தான் இருந்தது. அதனால் தான் முருகன் எப்போதுமே குட்டிகளுக்கு பிடித்த தெய்வம் என்று கதையை முடித்தார்.




நல்லுரைச் சுற்றி எல்லா இடங்களிலும் இனிப்புகளும் சிற்றுண்டிகளும் நிரம்பி வழிந்தன. "இனி என்னால் லட்டு சாப்பிட முடியாது!" என்று கலை முனகினான், அவனது கன்னங்கள் டிரம் [drum] போல இருந்தது, அனைவருக்கும் சிரிப்பைக் கொடுத்தது.




ஆகஸ்ட் 18, 2025 அன்று, யாழ் நகரின் குறிப்பாக நல்லூரின் மற்றும் இடைக்காடு, தொண்டைமானாறு, பண்ணைக்கடல், புங்குடுதீவு என .... யாழ் நகருக்கு வெளியே உள்ள இடங்களும் - நினைவுகளில் இன்னும் இதயங்களில் இருக்க, அவர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து கிழக்கு கடற்கரைக்குப் புறப்பட்டனர்.




நன்றி




[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]



பகுதி: 03 தொடரும்



கதை - 187 / 'இலங்கை கடற்கரை “நெடுஞ்சாலை” யில் தாத்தா, கந்தையா தில்லையுடன் பேரப்பிள்ளைகள்' / பகுதி: 02
https://www.facebook.com/groups/978753388866632/posts/31682603474721554/?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறு கதை - 187 / 'இலங்கை கடற்கரை “நெடுஞ்சாலை” யில் தாத்தா, கந்தையா தில்லையுடன் பேரப்பிள்ளைகள்'

பகுதி: 03 - திருகோணமலை

திருகோணமலையை நாம் அண்மித்ததும், “தாத்தா! தாத்தா! நாம் இன்னும் வந்துட்டோமா?” என மூத்த பேரன் ஒரு 'சிள்வண்டு' போல துள்ளிக் குதித்தான். அவனது தம்பி, அண்ணாவின் கையை பிடித்து இழுத்து, தனது சிறிய கைகளைத் தட்டிக்கொண்டு: “அண்ணா, கடற்கரை! கடற்கரை! மீன்!” என்றான்.

மூத்தவள், தன் சூரிய தொப்பியை சரிசெய்து, ஒரு ராணியைப் போல, “பாய்ஸ் [Boys], அமைதியாக இருங்கள். டால்பின்கள் உங்களுக்காக அல்ல, எனக்காகக் காத்திருக்கின்றன.” என்று குறும்பாகச் சொன்னாள். எல்லோரும் வெளியே ஒன்றாக நடந்தார்கள். திருகோணமலையின் உப்புக் காற்று அவர்களை அணைத்துக் கொண்டது. கடலின் நீல நிறம், உருகிய நீலக்கல் [sapphire.] போல பிரகாசித்தது.

கடற்கரையில், குழந்தைகள் ஓடினர். இசை வெள்ளை மணலில் ஒரு நண்டைத் துரத்தினான், ஆனால் கடல் அலையால் ஈரமான மணலை அணுகிய பொழுது, அங்கே வழுக்கி தண்ணீரையும் சிதறச் செய்து விழுந்தான். அனைவரும் சிரித்தனர்.

"பாருங்கள், பாருங்கள்!" என்று ஜெயா அடிவானத்தை சுட்டிக் காட்டினாள். டால்பின்களின் [Dolphin] ஒரு குவியல் தண்ணீரிலிருந்து குதித்தது, காலை சூரியனின் கீழ், அவை பார்ப்பதற்கு வெள்ளி வளைவுகள் [silver arcs] போல் நடனமாடின. "ஆஹா! அவை சிலிர்க்க வைக்கின்றன," என்று கலை கத்தினான்.

நீல வானத்தில் நிலவு ஒளிர

நீண்ட கடலில் அலைகள் தோன்ற

வெள்ளை மணலில் நண்டு ஓட

துள்ளிக் குதிக்குது டால்பின் கூட்டம்!

காற்று வெளியில் பட்டம் பறக்க

காந்த மொழியில் கலை பாட

சலங்கை ஒலிக்க ஜெயா ஆட

சங்கு பொருக்கி இசை மகிழ்ந்தான்!

"இல்லை, இல்லை ," என்று ஜெயா பதிலளித்து, "அவர்கள் என்னை வரவேற்கிறார்கள். ஏனென்றால் நான் டால்பின் இளவரசி, கடல் இராணி ." என்று கர்வமாகச் சொன்னாள். சின்னஞ்சிறு இசை, "நான் இளவரச மீன்!" என்று கத்தி என் மடியில் துள்ளிக் குதித்தான். நான் சிரித்தேன், ஆனால் எனக்குள் மற்றொரு அலை எழுந்தது.

தாத்தா, "திருகோணமலை என்பது வெறும் டால்பின்களும் கோவில்களுமல்ல. எனக்கு நினைவுக்கு வருகிறது – 1960கள். அப்போது அரசாங்கங்கள் வரைந்த வரைபடங்கள் கடல்களின் வரைபடமல்ல, மக்களின் வரைபடம்.

“வளர்ச்சி” என்ற பெயரில், மகாவலி திட்டங்கள் போன்ற சிங்களக் குடியேற்றத் திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. தெற்கிலிருந்து சிங்களக் குடும்பங்கள் இங்கே குடியேற்றப் பட்டார்கள். ஆனால் அதற்காக தமிழர் விவசாயிகள் தங்கள் வயல்களை இழந்து வெளியேற்றப் பட்டார்கள். அரசாங்கம் இதை “வளர்ச்சி” என்று கூறியது. ஆனால் எங்கள் மக்களுக்கு அது உயிர்வாழ்வின் நிலம் அழிந்தது என்பதே உண்மை." இலங்கை வரலாற்றை சுருக்கமாக கூறினார்.

அப்பொழுது பேத்தி, தாத்தாவின் கையை இழுத்தாள்: “தாத்தா, சாலையில் துப்பாக்கிகளுடன் இவ்வளவு வீரர்கள் ஏன் இருக்கிறார்கள்? டால்பின்களுக்கு அவர்கள் பயப்படுகிறார்களா?” அவள் கண்கள் அவளுடைய வயதிற்கு மிகவும் கூர்மையாக இருந்தது. கடல் காற்று அமைதியாக வீசிக்கொண்டு இருந்தது.

தாத்தா சற்று மென்மையான சத்தத்தில், “இல்லை கண்ணா. துப்பாக்கி ஏந்துவது அமைதியைப் பாதுகாக்கும் என்று சில அரச அதிகாரிகள் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையான அமைதி ... மக்கள் ஒருவரையொருவர் நம்பும்போது, யாரையும் தங்கள் சொந்த நிலத்தில் இருந்து வெளியேற்றாத போது வரும்.” என்றார்.

அவள் ஒரு கணம் யோசித்து, பின்னர் தலையசைத்தாள்.“பிறகு, நான் வளர்ந்ததும், எப்படி ஒருவரையொருவர் நம்புவது என்று அவர்களுக்குக் கற்றுக்கொடுப்பேன்.” என்று உறுதியாகக் கூறினாள்.

நாங்கள் கோணேஸ்வரம் கோயிலுக்கு ஏறினோம், அங்கு யாத்ரீகர்களை விட குரங்குகள் அதிகமாக இருந்தன. “அடடா! இந்தக் குரங்கு என் பிஸ்கட்டைத் திருடிவிட்டதே!” என்று சிறுவன் இசை கத்தினான். அப்பொழுது, ஜெயா, தன் கைகளை மடக்கி, “பாருங்கள் தாத்தா , குரங்குகள் கூட ஆண்களை மதிப்பதில்லை.” என்றாள் கேலியாக, தன் கையில் பிஸ்கட்டை பிடித்தபடி.

தாத்தா பாறைக்குக் கீழே உள்ள புனிதக் கடலை உற்றுப் பார்த்தார். ஒருமுறை, போர்த்துகீசிய வீரர்கள், 1622 ஆண்டு கோயில் சிலைகளை கடலுக்குள் தள்ளினர். பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, 1981 இல், சிங்கள அரச கும்பல்கள் யாழ்ப்பாண நூலகத்தை எரித்தனர். தீ, இழப்பு, அமைதியிமை - மீண்டும் மீண்டும் நிகழ்ந்த வரலாறு அவர் கண் முன் வந்தது.

யாழ் நூலகத்தின் படியில்

புத்தரின் சடலம் குருதியில்

சிவில்உடை அணிந்த காவலர்

நூலகத்துடன் சத்தியமும் எரித்தனர்

இரவுஇருளில் அமைச்சர்கள் வந்தனர்.

எங்கள் பட்டியலில் இவர் இல்லையே

இவரைச் சுடாமல் எரிக்க முடியாதே

சத்தியம் மறந்தே மனிதம் எரித்தோம்!

ஆனால் மூன்று பிஞ்சு கைகளைப் பிடித்துக் கொண்டு நின்ற தாத்தாவுக்கு, அவர்களின் கள்ளங் கபடமற்ற புன்னகை ஒரு தெம்பை, நம்பிக்கையை கொடுத்தது.

நன்றி

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

பகுதி: 04 தொடரும்

சிறு கதை - 187 / 'இலங்கை கடற்கரை “நெடுஞ்சாலை” யில் தாத்தா, கந்தையா தில்லையுடன் பேரப்பிள்ளைகள்' / பகுதி: 03

https://www.facebook.com/groups/978753388866632/posts/31791210493860851/?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் நன்றிகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதை - 187 / 'இலங்கை கடற்கரை “நெடுஞ்சாலை” யில் தாத்தா, கந்தையா தில்லையுடன் பேரப்பிள்ளைகள்' / பகுதி: 04

பகுதி: 04 - பாசிக்குடா & அருகம் விரிகுடா (Arugam Bay)

பாசிக்குடா (Pasikudah) என்பது மட்டக்களப்பிலிருந்து 35 கி.மி. தொலைவில் வட மேற்கில் அமைந்துள்ள ஓர் கரையோரப் பிரதேசமாகும். வாழைச்சேனை பிரதேசத்திற்கு உட்பட்ட இவ்விடம் இலங்கையின் மிகவும் அழகான கடற்கரைகளுள் ஒன்றும் ஆகும். மேலும் அலைகளின் அகோரமில்லாத, ஆழமில்லாத விசாலமான கடற்பரப்பு, அதாவது, கரையிலிருந்து நெடுந்தொலைவு வரைக்கும் படிப்படியாக ஆழம் அதிகரித்துச் செல்லும் சிறப்புடன் எழில் மிக்க இயற்கை கடற்கரையாக விளங்குகிறது. முருகைக் கற்பாறைகள், கடற் தாவரங்கள், கடல் வாழ் உயிரினங்கள் ஆகியவற்றின் இயற்கை வனப்பும், உல்லாச விடுதிகளும், கிடுகுகளால் அழகுற, நேர்த்தியாக வேயப்பட்ட “கபாணா” [Cabana] என்றழைக்கப்படும் உல்லாச விடுதிகளும், படகுச் சவாரிக்கு ஏற்ற கடலும், பாசிக்குடாவின் சிறப்புகளாகும்.

இந்த சிறப்புமிக்க பாசிக்குடாவிற்கு பயணம் குறுகியதாக இருந்தது, மேலும் கடற்காயல் அல்லது வாவி [lagoon] ஒரு பெரிய கண்ணாடியைப் போல நீண்டிருந்தது. குழந்தைகள் ஆழமற்ற நீரில் ஓடி, அலைகள் தங்கள் கணுக்கால்களை முத்தமிட சிரித்தனர்.

“தாத்தா, பார், நான் தண்ணீரில் நடக்க முடியும்!” என்று கலை முழங்கால் ஆழத்தில் நின்று கத்தினான். இசை தனது காற்சட்டை நனைந்து நீர் சொட்டும் மட்டும் கடல்நீரை அள்ளித் தெளித்து விளையாடினான். ஒரு விஞ்ஞானி போல் தீவிரமாக இருந்த ஜெயா, கடற் சிப்பிகளை சேகரித்தாள். “நான் ஒரு அருங்காட்சியகத்தை உருவாக்குகிறேன்,” என்று அவள் தன் இரண்டு தம்பிக்கும் அறிவித்தாள்.

தீரா அலைகளின் ஓயா ஓசையினால்

தீண்டித் தீண்டிச் செல்லும் அலைகளால்

குளிர்ந்து நடுங்கி சிலிர்த்து நடக்கிறான்

வெள்ளை மணலில் கோட்டை கட்டுகிறான்!

நிமிர்ந்து எழும் கடலலை அருகே

பிரிய மனமின்றி கடலில் நீந்துகிறாள்

சிப்பிகள் சோகிகள் தேடி எடுத்து

மாலை ஒன்று செய்து மகிழ்கிறாள்!

ஆனால் பாசிக்குடாவின் மணல் ஒரு காலத்தில் இரத்தத்தால் நனைந்திருந்தது. 1983 முதல் 2009 வரை, போர் இந்த சொர்க்கத்தை ஒரு போர்க்களமாக மாற்றியது. 2009 க்குப் பிறகு, சுற்றுலா வளர்ந்தது. ஹோட்டல்கள் காளான்களாகப் பெருகின, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வந்தார்கள். ஆனால் உள்ளூர்வாசிகள் பலர் இன்னும் உடைந்த குடிசைகளில் வசித்து வருகின்றனர் என்பது இன்றைய நிலையாகும்.

“தாத்தா, ஏன் பெரிய ஹோட்டல்களில் விளக்குகள் ஏராளம் உள்ளன, ஆனால் அந்த சிறிய வீடுகள் இருட்டாக இருக்கின்றன?” என்று ஜெயா கேட்டாள். தாத்தா பெருமூச்சு விட்டார். “ஏனென்றால் சில நேரங்களில் பணம் [உறவுப்] பாலங்களுக்குப் பதிலாக, சுவர்களைக் கட்டுகிறது. [“Because sometimes money builds walls, not bridges.”]” என்றார். ஆனால் அலைகள் பழைய துயரங்களை மறைத்து, பல இன மக்களை ஒன்றிணைக்கும் உறவுப்பாலமாகத், தங்கள் சிரிப்பைத் தொடர்ந்து கொண்டிருந்தன.

சுமார் 1600 கிலோமீட்டருக்கும் அதிகமான நீளமுள்ள பிரமிக்க வைக்கும் கடற்கரையைக் கொண்டுள்ள அருகம் விரிகுடா எங்களை அலைமிதவைப் பலகையுடனும் [surfboards] சிரிப்புடனும் வரவேற்றது. இது ஆசியாவிலுள்ள சிறந்த 10 சுற்றுலா இடங்களில் ஒன்றாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. அருகம் விரிகுடா குரங்குகள், யானைகள் மற்றும் முதலைகள் போன்ற ஏராளமான வனவிலங்குகளால் சூழப்பட்டிருப்பது இன்னும் ஒரு அதிர்ஷ்டம் ஆகும். இங்கு “சர்பிங்” [Surfing] எனப்படும் கடலில் சறுக்கு விளையாட்டு பெறும்பாலும் விளையாடப்படுகிறது. அருகம் விரிகுடாவிற்கு வருகை தருவதற்கு சிறந்த நேரமாக ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலப்பகுதி அறிவிக்கபட்டுள்ளது.

அருகம் பகுதியில் பல பெரிய விரிகுடாக்கள் உள்ளன அதில் ஒன்று தான் “எலிபன்ட் பாயிண்ட்” [Elephant point] ஆகும். இந்த வளைகுடாவின் முடிவிலுள்ள இந்த பாறை தமிழில் “யானைப்பாறை“ என்பார்கள். குடாவின் முழுப் பகுதியையும் இங்கு நின்று பார்க்கலாம். இரண்டு மணி நேர தடாகத்தில் சபாரி (Safari) செல்வது அருகம் விரிகுடாவில் செய்ய வேண்டிய பிரபலமான விடயங்களில் ஒன்றாகும். இங்கு யால தேசியப் பூங்கா அருகம் விரிகுடாவிற்கு மிக அருகில் இருப்பதால் சிறுத்தை போன்ற வனவிலங்குகளைக் அங்கு காணக்கூடியதாகவும் இருக்கிறது.

கலை ஒரு அலைமிதவைப் பலகையை நோக்கி கைகாட்டி, “தாத்தா! அவன் கடலில் பறக்கிறான்!” என்று கத்தினான். “அது அலைச்சறுக்கு" அல்லது "கடல்சறுக்கல்", அது பறப்பதற்கு அல்ல, அங்கு சமநிலை வேண்டும் சறுக்குவதற்கு ” என்று சரிசெய்தாள் ஜெயா. இசை, “நானும் கடல்சறுக்கல் செய்கிறேன்!” என்று அறிவித்து, நீரினால் கழுவப்பட்ட ஒரு பலகையில் அமர்ந்தது இருந்தான்.

பேரப்பிள்ளைகளுக்கு இது வெறும் கடற்கரை மட்டுமல்ல. இது ஒரு சாகச விளையாட்டு மைதானம் ஆகும். எனவே அவர்கள் தாத்தாவின் உதவியுடன், பயிற்றுனர்கள் ஊடாக சிறிய சர்ஃப்போர்டுகளை [surfboards] பெற்றுக் கொண்டனர்.

“சரி, சிறிய சர்ஃப்பர்களே [surfers], பலகையில் படுத்துக் கொள்ளுங்கள், உங்கள் கைகளால் துடுப்பு போடுங்கள், பின்னர் அலை வரும் போது எழுந்து நிற்கவும்,” என்று பயிற்றுவிப்பாளர் விளக்கினார். ஜெயா தீவிரமாக தலையசைத்தார். கலை, “அலைகள் கடிக்குமா?” என்று கேட்டான். கடற்கரை முழுவதும் சிரிப்பில் மூழ்கியது.

ஜெயா முதலில் சென்றாள். அவள் மூன்று வினாடிகள் எழுந்து நின்று, ஒரு பெரிய நீர் தெறிப்புடன் [splash] தண்ணீரில் விழுந்தாள்.

“தாத்தா, பார்த்தீர்களா? மூன்று வினாடிகள்!” என்று பெருமையுடன் கத்தினாள்.

கலை அவளைப் பின்பற்றினான், ஆனால் நிற்காமல், அவன் படுத்துக் கொண்டே ஒரு சூப்பர் ஹீரோ போஸ் [superhero pose] கொடுத்தான்.

“பாருங்க, நான் சர்ஃபிங் சூப்பர்மேன் [Surfing Superman!]” என்று கத்திவிட்டு, நேராக ஆழமற்ற நீரில் சறுக்கி விழுந்தான்.

குட்டி இசை ஒரு சிறிய லைஃப் ஜாக்கெட்டை [life jacket] அணிந்து கொண்டு, பலகையில் ஏறினான் - ஆனால் சர்ஃபிங்கிற்குப் [surfing] பதிலாக, அவர் ஒரு குழந்தை புத்தரைப் போல கால்களை மடித்து உட்கார்ந்து, அலை அவனை உலுக்கும் ஒவ்வொரு முறையும் கைதட்டினான். இதை பார்த்து சிரிப்புடன், கரையில் இருந்த கூட்டத்தினர் ரசித்தனர்.

பிறகு, குழந்தைகள் சிரித்துக் கொண்டே கத்தினார்கள்: “தாத்தா, இனி உங்கள் முறை!” ஆனால், தாத்தா மறுப்பு தெரிவித்தார், “ஐயோ, என் சர்ஃபிங் [surfing] நாட்கள் என்றோ முடிந்துவிட்டன.” ஆனால் பயிற்றுவிப்பாளர் எப்படியோ அவருக்கு ஒரு பெரிய பலகையைக் கொடுத்தார். அவர் படுத்து, துடுப்பு போட முயன்றார், நிற்க முயற்சித்த போது - கடலில், தண்ணீரைச் சிதறி விழுந்தார்! ஜெயா சிரித்தார். கலை கைகளைத் தட்டி, “தாத்தா இலங்கையின் வேகமான டைவர் [diver]!” என்று கத்தினான். இசையும் மகிழ்ச்சியுடன் கத்தினான், ஒவ்வொரு முறை விழும்போதும் “தாத்தா பூம்! [boom] தாத்தா பூம்! [boom]” என்று திரும்பத் திரும்பச் சொன்னான்.

அலை சறுக்கு ஆனந்தம் ஆனந்தமே

கடலில் பறக்கும் பறவை அதுவோ

மேகத்தின் மேல் மிதப்பது போல

பூரிப்பு ஒன்று ஆட்கொள்கிறது தாயே!

இன்ப ஊற்று உள்ளத்தில் பாய

சக்தி பாய்ந்து ஆன்மாவை நனைக்க

உப்புச் சுவை நாவில் கரைய

ஆழி சொர்க்கம் இன்பம் இன்பமே!

அருகம் விரிகுடா உலகப் புகழ் பெற்றது, ஆனால் அதன் அடியில் வடுக்கள் உள்ளன. ஒரு காலத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் குடும்பங்கள் அருகருகே அங்கு நெருங்கி வாழ்ந்தன. போர் பலரைத் தள்ளிவிட்டன, அரசியல் அவர்களுக்கு இடையில் எல்லைகளை வரைந்தது. இன்று சுற்றுலா திரும்பியது என்றாலும், அங்கு அனைவரும் மீண்டும் வரவேற்கப்படவில்லை என்பது கவலைக்கு உரியது.

அன்று இரவு, கடற்கரை நெருப்பின் அருகே அமர்ந்திருந்த தாத்தா அவர்களிடம் மெதுவாகச், “குழந்தைகளே, இங்குள்ள அலைகள் இனிய இசையையும் அல்லது சங்கீதத்தையும் (music), அதே நேரம் துப்பாக்கிச் சூட்டையும் அன்று கேட்டுள்ளன. ஆனால் இன்று, அவை தாலாட்டுப் பாடல்களாக மட்டுமே ஒலிக்கின்றன. அது இப்படியே இருக்கட்டும், தொடரட்டும்.” என்றார். அவர்கள் மிகவும் களைப்பில் இருந்ததால், தாத்தாவின் மடியில் தூங்கிவிட்டார்கள், கடல் அவர்களை கனவுகளில் ஆழ்த்தியது.

நன்றி

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

பகுதி: 05 தொடரும்

கதை - 187 / 'இலங்கை கடற்கரை “நெடுஞ்சாலை” யில் தாத்தா, கந்தையா தில்லையுடன் பேரப்பிள்ளைகள்' / பகுதி: 04

https://www.facebook.com/groups/978753388866632/posts/31848062914842275/?

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் எழுத்துக்கு நன்றிகள்.நேரம் கிடைக்கும் போது வாசிக்கலாம் என்று உள்ளேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதை - 187 / 'இலங்கை கடற்கரை “நெடுஞ்சாலை” யில் தாத்தா, கந்தையா தில்லையுடன் பேரப்பிள்ளைகள்' / பகுதி: 05

பகுதி: 05 - குமண தேசிய பூங்கா (Kumana National Park) & வெலிகம மற்றும் மிரிஸ்ஸா

அருகம் விரிகுடாவிலிருந்து தெற்கே முப்பத்தைந்து கிலோமீட்டர் தொலைவில், காட்டுக்குள் அமைதியாக குமனா தேசிய பூங்கா இருந்தது. இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள இந்த பாதுகாக்கப்பட்ட வனவிலங்குப் பகுதி, சிறுத்தைகள் மற்றும் பறவைகளுக்கு பெயர் பெற்றது. இப்பூங்கா, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் பரந்து விரிந்து மற்றும் யால தேசிய பூங்காவிலிருந்து கும்புக்கன் ஓயாவால் [Kumbukkan Oya] பிரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

"யானை! யானை!" என்று இசை கத்தினான், ஆனால் எதுவும் எங்கும் கண்ணில் படவில்லை. "யானை அல்ல. அது பறவைகள்!" என்று தன் சகோதரனைத் ஜெயா திருத்தினாள். ஜெயா தன் குறிப்பேட்டை [notebook] நேராக்கினாள், "நான் அறிவியல் தரவுகளைப் இங்கு பதிவு செய்வேன்." என்றாள். பெலிகன்கள் [கூழைக்கடா / pelicans], வர்ணம் பூசப்பட்ட நாரைகள், மயில்கள் மற்றும் சாம்பல் நிற நிழல்கள் போல நகரும் யானைக் குடும்பத்துடன் அங்கு இருந்தது.

ஆனால் இந்தக் காடும் வரலாற்றுடன் எரிந்து கொண்டிருந்தது. 1985 முதல் 2003 வரை போரினால் மூடப்பட்டது. பின்னர் 2004 சுனாமியில் மூழ்கியது செங்கால் நாரை [ஃபிளமிங்கோக்கள் / Flamingos] இன்று மறைந்துவிட்டன, மக்கள் ஓடிவிட்டனர். ஜெயா கேட்டாள், “தாத்தா... மனிதர்கள் ஏன் சண்டையிடுகிறார்கள், ஆனால் விலங்குகள் ஒன்றாக வாழ்கின்றன?”

தாத்தா கிசுகிசுத்தார், “ஏனென்றால் விலங்குகள் பேராசையால் வாழ்வதல்ல, சமநிலையால் வாழ்பவை.” தூரத்தில் ஒரு மயில் நடனமாடியது, அதன் இறகுகள் ரத்தினங்களைப் போல மின்னின. குழந்தைகள் சிரித்தனர். ஒரு கணம், காடு கூட சிரித்தது. தாத்தா மெல்ல சிரித்தார். மூன்று பேரப்பிள்ளைகளும் அது என்ன செங்கால் நாரை என்று கேட்டனர். தாத்தாவுக்கு சத்தி முத்திப் புலவர் ஞாபகம் வந்தது. அது மட்டும் அல்ல, அந்த பாடல் பாடும் பொழுது, அவரினதும் அவரின் மனைவியின் நிலையும், அங்கு வாழ்ந்த மக்களையும் காட்டுவது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது.

நாராய்! நாராய்! செங்கால் நாராய்

பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன

பவளக் கூர்வாய் செங்கால் நாராய் !

நீயுநின் மனைவியும் தென்றிசை குமரியாடி

வடதிசைக் கேகுவீ ராயின்

எம்மூர்ச் சத்திமுத்த வாவியுள் தங்கி

நனைசுவர்க் கூரைக் கனைகுரற் பல்லி

பாடு பார்த்திருக்குமென் மனைவியைக் கண்டு

எங்கோன் மாறன் வழுதிக் கூடலில்

ஆடை யின்றி வாடையின் மெலிந்து

கையது கொண்டு மெய்யது பொத்திக்

காலது கொண்டு மேலது தழீஇப்

பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்

ஏழை யாளனைக் கண்டனம் எனுமே.

சத்திமுத்தம் என்ற ஊரில் வாழ்ந்து வரும் புலவர், பாண்டி நாட்டை அடையும் போது பெருமழையில் மாட்டிக் கொண்டார். உடம்பை மூடி போர்வையின்றிக் குளிரால் வாடினார். தம் விதியை நொந்து, தம் மனைவி பிள்ளைகளை எண்ணி வருந்தினார். அப்போது வானில் செல்லும் நாரையைப் பார்த்துத் தம் நிலையைப் பாடலாகப் பாடினார்.

இங்கே, பனங்கிழங்கைப் பிளந்தது போல பவளம் போன்று செந்நிறமுள்ள கூர்மையான வாயையும், சிவந்த காலையும் உடைய நாரையே என்று கூறி, மழையினால் நனைதற்குரிய சுவரோடு கூடிய கூரை வீட்டில், கனைகுரல் பல்லி நற்சகுனமாக ஒலிப்பதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற என் மனைவியைப் பார்த்து, என் நிலையைக் கூறுவாயாக! என்று விட்டு நிலைமையைச் சொல்லி, பெட்டிக்குள் அடங்கியிருக்கும் பாம்பு போல பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கின்ற வறுமையுடைய உனது கணவனைப் பார்த்தோம் என்று சொல்லுங்கள் என்று முடிக்கிறார்.

தெற்கே, வெலிகமை அல்லது வெலிகாமம் (Weligama) கடற்கரை மிகவும் பிரபலமான சர்ஃபிங் [surfing] இடங்களில் ஒன்றாகும், அங்கு நாள் முழுவதும் அலைகளைப் பிடிக்கலாம். அதேநேரம், அதிக அனுபவம் வாய்ந்த சர்ஃபராகளுக்கு [surfer], மிடிகம கடற்கரையின் அலைகள் மிகவும் சவாலானதாக இருக்கும்.

தாத்தாவும் குழந்தைகளும் அங்கு சென்ற பொழுது, வெலிகமவின் ஸ்டில்ட் மீனவர்கள் [கோல் மீன்பிடித்தல் / stilt fishermen] கடலில் சிலைகள் போல அமர்ந்திருந்தனர். இது, இலங்கையின் கடலோரத் தமிழர் மற்றும் சிங்கள மீனவர்கள் பயன்படுத்திய பழைய சுவாரஸ்யமான பாரம்பரிய மீன்பிடி முறைகளில் ஒன்று ஆகும். இது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நடைமுறைக்கு வந்ததாகப் பதிவுகள் குறிப்பிடுகின்றன. இங்கு மீனவர்கள் கடற்கரைக்குள் சிறிது தொலைவில், கடல்நீரில் உறுதியாகப் பதித்துக் கட்டப்பட்ட நீண்ட மரக்கம்பம் மீது ஏறிச் சின்ன மேடையில் உட்கார்ந்து, அங்கிருந்து தூண்டில் மூலம் சிறிய மீன்கள் பிடிப்பதாகும்

கலை, “தாத்தா! அவை பறவைகள் போல குச்சிகளில் அமர்ந்திருக்கின்றனர்!” என்று கத்தினான். “குச்சி மனிதர்களே!” என்று இசை அவர்களைக் கூப்பிட்டான் அவர்கள் எப்படி அந்த குச்சியில் தங்களை சமநிலைப் படுத்துகிறார்கள்? நான் என்றாள் விழுந்து விடுவேன்” என்று ஜெயா முகம் சுளித்தாள்.

மிரிஸ்ஸாவில் மேலும், திமிங்கலங்களைப் பார்க்க பயணம் செய்த அவர்கள், அங்கு, ராட்சத நீல நிற திமிங்கலம் பின்புறம் மேலெழுந்த போது, குழந்தைகள் மூச்சுத் திணறினர். “தத்தா, இது எங்கள் வீட்டை விடப் பெரியது!” என்றான் கலை. இசை கைதட்டினார், “பெரிய மீன்! பெரிய மீன்!”

ஆனால் இந்த மீனவர்களின் வறுமை, தாத்தாவுக்கு நன்றாக நினைவிருந்தது, அவர்களின் வாழ்க்கை சுற்றுலாப் பயணிகளுக்காக கற்பனையான தோற்றம் ஒன்றால் இங்கு உருவாக்ப் பட்டுள்ளது [Romanticized] என்பது தான் அது. ஆனால் அவர்கள் பசியால் நிறைந்தவர்கள் என்பது பார்வையாளர் பலருக்குப் புரியாது.

“கடலில் திமிங்கலங்கள் சுதந்திரமாக உள்ளன,” தாத்தா தன் பேத்தியிடம் கூறினார், “ஆனால் இங்குள்ள மக்கள் அனைவரும் இன்னும் சுதந்திரமாக இல்லை.” ஜெயா தாத்தாவின் முகத்தை பார்த்தபடி, அவரின் கையை இறுக்கமாகப் பிடித்தாள்.

நன்றி

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

பகுதி: 06 தொடரும்

கதை - 187 / 'இலங்கை கடற்கரை “நெடுஞ்சாலை” யில் தாத்தா, கந்தையா தில்லையுடன் பேரப்பிள்ளைகள்' / பகுதி: 05

https://www.facebook.com/groups/978753388866632/posts/31905432382438661/?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரு பாடல்கள் பகுதி 5 இல் தவறிவிட்டன. அவை இங்கே இணைக்கப்படுகிறது கீழே

[1] ஜெயா கேட்டாள், “தாத்தா... மனிதர்கள் ஏன் சண்டையிடுகிறார்கள், ஆனால் விலங்குகள் ஒன்றாக வாழ்கின்றன?

விலங்குகளுக்கு விலங்கிட்டு கூண்டில் அடைத்து

மனித விலங்குகளை சுதந்திரமாய் விட்டோம்

விலங்குகளை ஒவ் வொன்றாக அடக்கிஅடக்கி

குப்பை மனிதர்கள் செழிக்கசெழிக்க விட்டோம்!

ஆசையில் மூழ்கி அசிங்கத்தை பூசி

புண்ணிம் கண்ணியம் புதையுண்டு போக

பாதை தவறி அழுக்கை சுமந்து

மனிதன் வாழ்கிறான் மனிதம் இல்லாமலே!

தாத்தா கிசுகிசுத்தார், “ஏனென்றால் விலங்குகள் பேராசையால் வாழ்வதல்ல, சமநிலையால் வாழ்பவை.”

[2] ஆனால் இந்த மீனவர்களின் வறுமை, தாத்தாவுக்கு நன்றாக நினைவிருந்தது, அவர்களின் வாழ்க்கை சுற்றுலாப் பயணிகளுக்காக கற்பனையான தோற்றம் ஒன்றால் இங்கு உருவாக்ப் பட்டுள்ளது [Romanticized] என்பது தான் அது. ஆனால் அவர்கள் பசியால் நிறைந்தவர்கள் என்பது பார்வையாளர் பலருக்குப் புரியாது.

மரக் கம்பம் விடிவெள்ளி நமக்கு

விரி கடலே பள்ளிக்கூடம் - ஐலசா

குட்டி மீன்கள் நம்தோழன் - ஐலசா

கொக்காய் ஒற்றைக்காலில் - ஐலசா

அருமைமேகம் நமதுகுடை - ஐலசா

பாயும் புயல் நம்ஊஞ்சல் - ஐலசா

பனிமூட்டம் உடல்போர்வை - ஐலசா

பிடிக்கும் மீன்கள் நம்உணவு - ஐலசா

“கடலில் திமிங்கலங்கள் சுதந்திரமாக உள்ளன,” தாத்தா தன் பேத்தியிடம் கூறினார், “ஆனால் இங்குள்ள மக்கள் அனைவரும் இன்னும் சுதந்திரமாக இல்லை.”

Edited by kandiah Thillaivinayagalingam

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதை - 187 / 'இலங்கை கடற்கரை “நெடுஞ்சாலை” யில் தாத்தா, கந்தையா தில்லையுடன் பேரப்பிள்ளைகள்' / பகுதி: 06

பகுதி: 06 - மிடிகம உணவுப் பண்ணை & காலி

மிடிகம உணவுப் பண்ணைக்கு சென்றதும் குழந்தைகள் மகிழ்ச்சியில் துள்ளினர். அங்கே பச்சை தேங்காயில் இருந்து குடித்த இளநீர் அவர்களின் தாடையால் வழிந்தது, என்றாலும் அவர்கள் சிரித்தபடி மாமரம், வாழைமரம், பப்பாளி மரங்களைச் சுற்றி ஓடி விளையாடினர். அவர்களுக்கு அங்கே முதலில், உடனடியாக மரத்தில் இருந்து பிடுங்கி செய்த பப்பாளிப் பழச்சாறு பருக கொடுக்கப்பட்டது. குழந்தைகள் துள்ளிக் குதித்தனர். தாத்தா கல்யாண சாப்பாடுபோல் மகிழ்ந்தார்.

கல்யாண சமையல் சாதம்

காய் கறிகளும் ப்ரமாதம் - அந்த

கௌரவப்ரசாதம்

இதுவே எனக்குப் போதும்

அந்தார பஜ்ஜி அங்கே

சுந்தார சொஜ்ஜி இங்கே

சந்தோஷ மீறிப் பொங்க

ஜோரான சேனி லட்டு

சுவையான சீனி புட்டு

ஏராளமான தட்டு

இதுவே எனக்குப் போதும்


பண்ணையில் மரங்களுக்குப்பின் ஒழித்து விளையாடிக்கொண்டு இருந்த கலை கேட்டான்: “தாத்தா, நீங்களும் இப்படித்தான் முன்பு விளையாடினீர்களா?” தாத்தா சற்றே அமைதியுடன் சிரித்தார். “ஆம்… ஆனால் போரின் காலத்தில் பல பண்ணைகள் அழிந்தன. அரச சிப்பாய்கள், இளைஞர்கள், சிறுவர்கள் விளையாட வேண்டிய இடங்களில் எல்லாம் ஆக்கிரமிதார்கள். அதனால்த் தான் சாதாரண மக்கள் அமைதியை, சமாதானத்தை ஒரு பொக்கிஷமாக மதிக்கிறார்கள், அதற்காக ஏங்குகிறார்கள்.” என்றார்.

தாத்தா சொன்ன வார்த்தைகளின் கனத்தை உணர்ந்த குழந்தைகள் ஒரு கணம் அமைதியாகிவிட்டனர். பின்னர் ஜெயா குறும்புத்தனமாக கலையின் தலையில் சிறிது இளநீரை ஊற்றி, "பார் தாத்தா, இப்போது கலை ஒரு தென்னை மரம்!" என்று சிரித்தாள். எல்லோரும் அவளுடன் சேர்ந்து சிரித்தனர். பின் அவர்கள் மூவரும் குரங்குகள் போல நடித்து வாழைத் தோப்பின் வழியாக, வாழைக்குலையில் இருந்து வாழைப்பழம் பிடுங்க, எட்டி எட்டிப் பார்த்தனர்.

காலி கோட்டை

காலியில், அவர்கள் பழைய போர்த்துக்கேயர்களால் கட்டப்பட்டு, டச்சுக்காரர்களால் விரிவு படுத்தப்பட்டு, பின்னர் ஆங்கிலேயர்களால் கைப்பற்றப் பட்ட, கோட்டையின் வழியாக நடந்து சென்றனர், அலைகள் பண்டைய சுவர்களில் மோதி, வெளிநாட்டு ஆட்சியாளர்கள் மற்றும் மறக்கப்பட்ட போர்களின், காலனித்துவக் கதைகளை கிசுகிசுத்தன. அலைகள் வெகுதூரம் கீழே மோதிய போது உப்புக் காற்று அவர்களின் முகங்களைத் துடைத்தது. இலங்கை எவ்வாறு வெளிநாட்டு ஆட்சியாளர்களை மட்டுமல்ல, சுதந்திரத்திற்குப் பிறகு அதன் சொந்தப் போராட்டங்களையும் எதிர்கொண்டது என்பதை தாத்தா விளக்கினார்.

ஜெயா சுவற்றை தொட்டு கேட்டாள்: “இது எத்தனை வயதான சுவர் தாத்தா?” தாத்தா சிரித்து :“16 ஆம் நூற்றாண்டளவில் முதலில் கட்டப்பட்டது. ஆனால் உங்களுக்குத் தெரியுமா? காலி என்பது வெளிநாட்டினரைப் பற்றியது மட்டுமல்ல. அது உள்நாட்டினரின் சோகத்தையும் கண்டது. 1950கள் மற்றும் 1960களில், தமிழர்களுக்கு எதிராக இங்கு கலவரங்கள் வெடித்தன. கடைகள் சூறையாடப்பட்டன, குடும்பங்கள் இடம்பெயர்ந்தன. பல தமிழர்கள் ஒன்றுமில்லாமல் தங்கள் வாழ்க்கையை மீண்டும் பாதுகாப்பான இடங்களில் தொடங்க வேண்டியிருந்தது.”

குழந்தைகள் சற்று கவலையுடன் காணப்பட்டனர். பின்னர் தாத்தா அவர்களின் மனநிலையை பிரகாசமாக்கினார்: “ஆனால் வரலாறு என்பது துக்கம் மட்டுமல்ல. வாருங்கள், நான் உங்களுக்கு ஒரு மகிழ்வான ஒன்றைக் காட்டுகிறேன்.” என்றார்.

“இங்கே காலி மும்மொழிக் கல்வெட்டு (Galle Trilingual Inscription) இருக்கிறது. 1409-ல் சீனக் கடற்படைத்தளபதி செங் கே இத்தீவிற்கு இரண்டாம் முறை வந்ததின் நினைவாக சீன, தமிழ், பாரசீகம் ஆகிய மூன்று மொழிகளில் எழுதப்பட்ட கற்றூண் கல்வெட்டு இது ஆகும்” என்றார். உடனே ஜெயா ஆச்சரியமாகக் கேட்டாள்: “ஆனால் தாத்தா, அப்போது சிங்கள மொழியில் எழுதலையா? சிங்களர்கள் இங்கே இல்லையா?” என்று.

தாத்தா (சிரித்தபடி): “கண்ணா, சிங்கள மக்கள் இருந்தார்கள். ஆனால் அட்மிரல் ஜெங் ஹீ மாத்தறைக்கு அருகிலுள்ள பழைய சிவன் கோவிலில் பிரார்த்தனை செய்தார், அங்கு தமிழ் வழிபாட்டு மொழியாக இருந்தது. கடல் தாண்டிய வர்த்தக மொழியாகவும் தமிழ் இருந்தது. ஆமாம், 15 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், தமிழ் முக்கிய கடலோர மற்றும் வணிக மொழியாக இன்னும் இருந்தது. வணிகர்கள், ஆட்சியாளர்கள் மற்றும் கோயில்கள் கல்வெட்டுகளுக்கு தமிழைப் பயன்படுத்தினர். குறிப்பாக தெற்கு மற்றும் கிழக்கில். அதனால்தான் ஜெங் ஹீயின் கல்வெட்டு சீன மற்றும் பாரசீக மொழிகளுடன் தமிழில் எழுதப்பட்டது. இலங்கை பரந்த உலகத்துடன் எவ்வாறு இணைக்கப்பட்டிருந்தது என்பதை இது காட்டுகிறது.” என்றார். குழந்தைகள் அதிசயத்தோடு அந்தக் கல்வெட்டைக் கண்டு களித்தனர்.

கலை கிசுகிசுத்தான்: (கண்களை விரித்து): “அப்போ தெற்கிலும் தமிழ் முக்கியமானதா?” “அப்போ தமிழ் ஆங்கிலம் மாதிரியா இருந்தது? எல்லாரும் அதைப் பயன்படுத்தினாங்களா?” தாத்தா தலையசைத்தார்: “ஆம். சிங்கள மன்னர்கள் கூட சில சமயங்களில் தமிழைப் பயன்படுத்தினர். நமது தீவு ஒரு காலத்தில் சீனர்கள், பாரசீகர்கள், தமிழர்கள் மற்றும் சிங்களவர்கள் அனைவரும் சந்தித்து வாழ்க்கையைப் பகிர்ந்து கொண்ட இடமாக இருந்தது என்றார்.

கலை (சிரித்துக்கொண்டே): “அப்போ அந்தக் கல் மூன்று மொழிகள் கொண்ட பள்ளிப் புத்தகம் மாதிரி!” தாத்தா (சிரித்துக்கொண்டே அவனை அணைத்துக் கொண்டு): “சரியாக சொன்னாய் , கண்ணா. இது இன்றும் நமக்குக் கற்பிக்கும் ஒரு வரலாற்றுப் பள்ளிப் புத்தகம்.”

குழந்தைகள் கண்ணுக்குத் தெரியாத உளிகளால் தங்கள் பெயர்களை காற்றில் செதுக்குவது போல் நடித்துக் ஓடி விளையாடினர். பின் அவர்கள் நடந்து செல்லும்போது, தாத்தா அவர்களுக்கு கடலை நோக்கிச் சுட்டிக்காட்டி: "இலங்கையின் கடற்கரையோரங்களில் உள்ள ஐந்து பழங்கால ஈஸ்வர கோயில்களைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? யாழ்ப்பாணத்தில் நாகுலேஸ்வரம், மன்னாரில் திருக்கேதீஸ்வரம், திருகோணமலையில் கோணேஸ்வரம், சிலாபத்தில் முன்னேஸ்வரம், மற்றும் "இங்கே, தேவேந்திரமுனை அல்லது தேவந்துறை [Dondra] அருகே, ஒரு காலத்தில் ஐந்து பெரிய ஈஸ்வர சிவாலயங்களில் ஒன்றான தொண்டேஸ்வரம் இருந்தது. ஆனால் அது 16 ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்களால் அழிக்கப்பட்டது. இப்போது கடலுக்கு அடியில் கற்கள் மட்டுமே உள்ளன." என்றார். இவற்றில் ஏழாம் எட்டாம் நூற்றாண்டிலேயே தமிழ் தேவாரம் பாடப்பெற்ற தலமாக மாதோட்டம் - திருக்கேதீஸ்வரமும் திருக்கோணமலை - கோணேஸ்வரமும் இருப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியமே என்றார் தாத்தா. ஏன் என்றால் இலங்கை பௌத்தரின் வரலாறு கூறும் புராண நூலான மகாவம்சம், அந்த காலப் பகுதியில், கி.பி 5 அல்லது 6 ஆம் நூற்றாண்டில் தான் முதல் முதல் அதுவும் பாளி மொழியில் தான் எழுதப்பட்டது. அந்த நேரம் வளர்ச்சிக்கால முதற்படியைச் சார்ந்த சிங்களம் [Proto-Sinhala] மட்டுமே புழக்கத்தில் இருந்தது வரலாற்று உண்மை என்று விளக்கம் கொடுத்தார்.

மூவர் என இருவர் என

முக் கண்ணுடை மூர்த்தி

மாவின் கனி தூங்கும் பொழில்

மாதோட்ட நன் னகரில்

பாவம் வினை அறுப்பார் பயில்

பாலாவியின் கரை மேல்

தேவன் எனை ஆள்வான் திருக்

கேதீச்சரத் தானே!

[சுந்தரமூர்த்தி நாயனார்]

குற்றம் இலாதார் குரை கடல் சூழ்ந்த

கோணமாமலை அமர்ந்தாரை,

கற்று உணர் கேள்விக் காழியர் பெருமான்

கருத்து உடை ஞானசம்பந்தன்

உற்ற செந்தமிழ் ஆர் மாலைஈர்

ஐந்தும் உரைப்பவர், கேட்பவர், உயர்ந்தோர்

சுற்றமும் ஆகித் தொல்வினை

அடையார்; தோன்றுவர், வான்இடைப் பொலிந்தே.

[திருஞானசம்பந்த நாயனார்]

அப்பொழுது குழந்தைகள் முடிவில்லாமல் உருளும் கடல் அலைகளைப் பார்த்தார்கள். "அப்போ கடல் ஒரு கோயிலை மறைத்து வைத்திருக்கிறதா?" கலை கிசுகிசுத்தாள். "ஆம்," தாத்தா கூறினார். "ஆனால் நினைவுகள் ஒருபோதும் மூழ்காது. அவை இது போன்ற கதைகளில் வாழ்கின்றன." என்றார். குழந்தைகள் அதை, தங்கள் கண்களை விரித்து கேட்டார்கள்.

ஜெயா சிரிப்புடன், கிண்டலாகக் கேட்டாள்: “தாத்தா, அவர்கள் கோவில்களை அழித்துவிட்டதால், நாம் அவற்றை லெகோ கோவில்களாகக் [Lego temples] கட்டலாமே?” தாத்தா சிரித்தபடி சொன்னார்: “ஆமாம், ஒருவேளை லெகோ தான் வரலாறு காப்பாற்ற முடியாததை காப்பாற்றும்!” என்றார்.

பின்னர், ஐஸ்கிரீம் வாங்கும்போது, தாத்தாவின் முகம் சிந்தனையில் ஆழ்ந்து இருந்தது , “ ஒரு காலத்தில் இங்கே அருகருகே வாழ்ந்த தமிழ் சிங்கள மக்கள் பிரிந்து போனது இன்னும் நினைவில் இருக்கிறது” என்றார்.

குழந்தைகள் அவரது கைகளை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டனர். “ஆனால் இப்போது நாம் இங்கே ஒன்றாக நடக்கிறோம், தாத்தா. அமைதிதான் சிறந்தது, இல்லையா?”

தாத்தா சிரித்தார். “ஆமாம், என் குழந்தைகளே. அதனால்த் தான் நீங்கள் இதே தெருக்களில் சுதந்திரமாக ஓடுவதைப் பார்த்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.” என்றார்.

நன்றி

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

பகுதி: 07 தொடரும்

கதை - 187 / 'இலங்கை கடற்கரை “நெடுஞ்சாலை” யில் தாத்தா, கந்தையா தில்லையுடன் பேரப்பிள்ளைகள்' / பகுதி: 06

https://www.facebook.com/groups/978753388866632/posts/32019348474380384/?

Edited by kandiah Thillaivinayagalingam

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதை - 187 / 'இலங்கை கடற்கரை “நெடுஞ்சாலை” யில் தாத்தா, கந்தையா தில்லையுடன் பேரப்பிள்ளைகள்' / பகுதி: 07

பகுதி: 07 - பின்னவலை யானைகள் புகலகம் (Pinnawala Elephant Orphanage) & கொழும்பு

இலங்கை பயணத்தின் கடைசி சுற்றுலாவாக பின்னவலை யானைகள் புகலகம் இருந்தது. அவர்கள் ஆற்றங்கரையில் நின்று, பெரிய யானைகள் தண்ணீரில் குளிப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஜெயா சத்தமிட்டார்: “பெரிய குட்டிகள் குளிக்கின்றன!” கலை ஒரு தண்ணீர் பாட்டிலை [bottle] எடுத்து, தண்ணீர் தெளிக்கும் யானையைப் போல நடித்து, தனது குட்டி சகோதரன் மீது தெளித்தார். குழந்தைகள் சிரித்தபடி உருண்டு உருண்டு சிரித்தனர்.

ஒரு யானைப் பாகன் (mahout) அவர்களை அணுகிச் சொன்னான்: “சில யானைகள் தங்கள் குடும்பத்தை இழந்துவிட்டன. ஆனால் இங்கே நாம் அவற்றைப் பாதுகாக்கிறோம். அன்பைக் கொடுக்கிறோம்.” என்றார். அப்பொழுது தாத்தா கண்களில் நெகிழ்ச்சி பொங்க, பேரன்களை நோக்கிச் சொன்னார்: “இது தான் இலங்கையின் பாடம். துன்பத்திற்குப் பிறகும், போருக்குப் பிறகும் கூட நாமும் ஒருவருக்கொருவர் அன்புடன் காப்பாற்ற வேண்டும். ஒரு குடும்பம்போல.” என்றார். உடனே இசை தன்னுடைய சிறிய குரலில் சொன்னான்: “அப்படியென்றால் தாத்தா நீங்கள்தான் எங்களுடைய யானைப் பாகன். நாங்க எல்லாம் உங்க யானைகள்!” அனைவரும் சிரித்தார்கள். தாத்தா அவனைத் தழுவிக்கொண்டார்.

பெரிய தோற்றத்தில் நடக்கும் யானையே

உன் அறிவும் உனக்குப் பெரிதோ?

சிலவேளை மதம் பிடித்து அலைந்தாலும்

உன்னிடம் மதம் [சமயம்] இல்லாதது எனோ?

பரிவாக உன்னைக் கவனிக்கும் பாகன்

உன் நிழலிலேயே இளைப்பாறுவது தெரியாதோ?

வேடிக்கைப் பார்க்கும் மக்களை எல்லாம்

தள்ளி நிற்க பயப்படுத்துவது எனோ?

பாசத்தின் அருமை உனக்குத் தெரியுது

வேசமிடும் மனிதனுக்கு அன்பு தெரியாதோ?

மோசமான இலங்கை அரசியல் உலகில்

மனிதம் வளராது இறந்தது எனோ?

குழந்தைகள் அமைதியாகி தாத்தாவின் கைகளை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டனர். அப்பொழுது ஜெயா கூறினார்: “தாத்தா, ஒரு நாள் இந்தக் கதையை மற்றவர்களுக்குச் சொல்வோம். கடற்கரைகள், யானைகள் மற்றும் நம்பிக்கை பற்றி.” என்றாள். தாத்தா அன்புடன் சிரித்தார். “ஆம், என் சிறிய ஆய்வாளர்களே. நீங்கள்தான் இந்தத் தீவின் எதிர்காலம்.” என்று முதுகில் தட்டிக்கொடுத்தார்.

மீண்டும் கொழும்பு

கொழும்பில் சத்தமாய் ஓடும் பஸ்கள், பளபளக்கும் கடைகள், கடற் காற்றின் வாசம்—அனைத்தும் கலந்த ஒரு பரபரப்பு காணப்பட்டது. அவர்கள் கால்ஃபேஸ் கிரீன் [Gall Face Green] சென்றனர். குழந்தைகள் வண்ணமயமான பட்டங்களை பறக்க விட்டனர். சுவை மிக்க இறால் வடை [Isso Vadai], ஐஸ்கிரீம் - எதையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை.

ஜெயா சிரித்தபடி சொன்னாள்: “தாத்தா, கொழும்பு தினமும் திருவிழாவைப் போல இருக்கிறது!” தாத்தா சிரித்தார். அவரின் உள்ளம் பழைய காயங்களை நினைத்தது. 1983 கறுப்பு ஜூலை - வீதிகள் எரிந்தன, தமிழர்கள் வேட்டையாடப்பட்டார்கள், நூலகம் சாம்பலானது. சில நிமிடங்கள் அமைதியாகக் கண்ணீர் வழிந்தது.

ஜெயா கவனித்தாள்: “தாத்தா, ஏன் அழுகிறீர்கள்?” தாத்தா அவள் நெற்றியில் முத்தமிட்டு சொன்னார்: “சில நினைவுகள் ஒருபோதும் மறையாது. ஆனால் நீங்கள்… நீங்கள் என் புதிய நினைவுகள். பழையதைவிட பிரகாசமாக.”

ஜெயா விரைவாகச் சொன்னார், “அப்படியானால், தாத்தா, உங்களுக்காக இன்னும் மகிழ்ச்சியான நினைவுகளை நாம் உருவாக்குவோம். இனி சோகமான நினைவுகள் உங்களுக்கு வேண்டாம்!” என்றாள்.

தாத்தாவின் கண்கள் பெருமையால் பிரகாசித்தன. “ஆம், என் குட்டி நட்சத்திரங்கள். அதனால் தான் நான் உங்களை இங்கு அழைத்து வந்தேன். இந்த இலங்கை நிலத்தை அறியவும், அதை நேசிக்கவும், அதன் கதையை முன்னோக்கி அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவும்.” என்றார்.

காலி முகத்திடலில் அலைகள் முழங்கியது, சத்தமிட்டபடி அடித்தன, ஆனால் அந்தக் கணத்திலும் தாத்தாவின் உள்ளம் அமைதியாக இருந்தது. அவருக்கு கடந்த காலத்தின் காயங்கள் இருந்தாலும், அவரது பேரக்குழந்தைகள் அந்தக் காயங்களுக்கு மருந்தாக இருந்தனர்.

யாழின் தென்றலில் நல்லூர் வளாகத்தில்

நடந்து சென்றோம் கைகள் கோர்த்தே!

புனித நிலத்தில் ஞானம் சேர

மனம் நிறைந்து ஆனந்தம் பெருகியதே!

நல்லூர் மேளமும் கடல் ஓசையும்

மனதில் நிலைத்து என்றும் வாழுமே!

கடல் சறுக்கல் டால்பின் பாய்தல்

ஈழ சுற்றுலாவை பறை சாற்றுமே!

தெற்கும் மேற்கும் மனிதம் நிலைத்தால்

வடக்கும் கிழக்கும் மீண்டும் தளிருமே!

ஒற்றுமை கீதம் உள்ளத்தில் பாடினால்

வேற்றுமை நீங்கி சொர்க்கம் ஆகுமே!

நன்றி

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

முற்றிற்று

கதை - 187 / 'இலங்கை கடற்கரை “நெடுஞ்சாலை” யில் தாத்தா, கந்தையா தில்லையுடன் பேரப்பிள்ளைகள்' / பகுதி: 07

https://www.facebook.com/groups/978753388866632/posts/32130663769915520/?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.