Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தீர்வுக்கு வழி ? கடந்த ஞாயிற்றுக்கிழமை டில்கோவில் நடந்த ஒரு நிகழ்வு - நிலாந்தன்

1002543278-1024x576.jpg

கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் டில்கோ விருந்தினர் விடுதியில் ஒரு நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டது. கலாநிதி குருபரனை பணிப்பாளராகக் கொண்ட சட்டத்துக்கும் கொள்கைகளுக்குமான யாழ்ப்பாண கற்கை நிலை யத்தால் அந்த நிகழ்வு ஒழுங்குசெய்யப்பட்டது. இலங்கையில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் நிதி அனுசரணையோடு நடத்தப்பட்ட அந்த நிகழ்வில் 230க்கும் குறையாதவர்கள் பங்குபற்றினார்கள். பொதுவாக அது போன்ற நிகழ்வுகளில் அவ்வளவு தொகையினர் பங்குபற்றுவது குறைவு. ஆனால் அன்று மண்டபம் நிறைந்திருந்தது.

மூன்றரை மணித்தியாலங்களுக்கு மேல் நடந்த அந்த நிகழ்வில், நான்கு அம்சங்கள் இருந்தன. முதலாவது மேற்சொன்ன  சட்டத்துக்கும் கொள்கைகளுக்குமான கற்கை நிலையத்தை அறிமுகப்படுத்துவது. இரண்டாவது, இனப்பிரச்சினை தொடர்பில் இலங்கைத் தீவில் இதுவரையிலும் இரண்டு சமூகங்களுக்கு இடையில் எழுதிக் கொள்ளப்பட்ட உடன்படிக்கைகள் சம்பந்தப்பட்ட ஆவணங்களைச் சேகரிக்கும் டிஜிட்டல் தளத்தை அங்கு அறிமுகப்படுத்தியது. மூன்றாவது, மூத்த சட்டச் செயற்பாட்டாளர்,சட்டத்தரணி  ரட்ணவேல் அவர்களுடைய உரை. நான்காவது,நான்கு தமிழ்த் தேசிய கட்சிகளின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்ட ஒரு நிகழ்வு.

நிகழ்வுக்கு தலைமை தாங்கிய குருபரன் அங்கு கூறியதுபோல தமிழ்த் தேசியப் பரப்பில் அவ்வாறான ஒரு சட்டச் செயற்பாட்டு  நிறுவனம் உருவாக்கப்படுவது என்பது முக்கியமானது. தேச  நிர்மாணத்தின் ஒரு பகுதி அது. தேசத்தை நிர்மாணிக்கத் தேவையான நிறுவனங்களை உருவாக்குவது. எவ்வளவுக்கு எவ்வளவு நிறுவன உருவாக்கிகள் ஒரு சமூகத்தில் தோன்றுகிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு அந்த சமூகம் திரட்சியுறும்;நொதிக்கும்; கூர்ப்படையும்.

அங்கு அறிமுகப்படுத்தப்பட்ட டிஜிற்றல் ஆவணக் காப்பகத்தில் இரண்டு பகுதிகள் உண்டு. முதலாவது இனப்பிரச்சினை தொடர்பில் இதுவரை தமிழ்த் தரப்பால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளின் தொகுப்பு.இரண்டாவது பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் என்பவற்றோடு தொடர்புடைய வழக்கு ஏடுகளை ஆவணப்படுத்துவது.

சட்டத்துக்கும் கொள்கைகளுக்குமான கற்கை நிலையமும் “நூலகம்” நிறுவனமும் இணைந்து மேற்படி ஆவணங்களைச் சேகரித்து ஆவணப்படுத்தியுள்ள்ளன. இதுவும் தேச நிர்மாணத்தில் ஒரு பகுதிதான். அந்த நிகழ்வில் நூலகம் நிறுவனத்தின் பிரதிநிதியும் உரை நிகழ்த்தினார். அது ஒரு முழுமையான தொகுப்பு இல்லை என்றும் அதில் ஈடுபாடு கொண்டவர்கள் தமது பங்களிபின்மூலம் அதை முழுமைப்படுத்த  வேண்டும் என்றும்  அங்கு கூறப்பட்டது.

1921ஆம் ஆண்டில் இருந்து இன்றுவரையிலுமான சுமார் 104ஆண்டு காலப்பகுதியில்  தமிழ்த் தரப்பால் முன் வைக்கப்பட்ட அரசியலமைப்பு யோசனைகளும் இனப்பிரச்சினையோடு தொடர்புடைய உடன்படிக்கைகளும்,ஆவணங்களும்   அங்கே எண்ணிம வடிவத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. ஒரு நூற்றாண்டுக்கு மேலான காலப்பகுதிக்குரிய அந்த ஆவணங்களைத் தொகுத்துப் பார்க்கும்போது ஓர் அடிப்படைக் கேள்வி எழுகிறது. தமிழ் மக்கள் ஏன் ஒரு நூற்றாண்டுக்கு மேலாக தமது அபிலாசைகளை அடைய முடியாமல் இருக்கிறார்கள்?

கடந்த ஒரு நூற்றாண்டுக்கு மேலாக தமிழ் தலைவர்கள் சரியாகவோ பிழையாகவோ பொருத்தமாகவோ,பொருத்தம் இன்றியோ ஏதோ ஒரு தீர்வு முன்மொழிவை முன்வைத்து சிங்களத் தலைவர்களோடு பேசியிருக்கிறார்கள். ஏதோ ஒர் இணக்கத்துக்கு வந்திருக்கிறார்கள். ஆவணங்களில் கையெழுத்திட்டு இருக்கிறார்கள். அதன்மூலம்,தமிழ்மக்கள் இந்தச் சிறிய தீவுக்குள் எப்பொழுதும் ஒரு தேசிய இனமாக ஏனைய இனங்களுடன் இணைந்து வாழ்வதற்குத் தயாராக இருந்திருக்கிறார்கள் என்பது அந்த ஆவணங்களைத் தொகுத்து பார்க்கும் பொழுது தோன்றுகிறது. தமிழ்த் தரப்பு தீர்வுக்குத் தயாரில்லை;அது பகல் கனவுகளை தீர்வு மேசையில் வைக்கின்றது; அந்தப் பகல் கனவுகளை அடைவதற்காக முயற்சிக்கின்றது; யதார்த்தமாகச் சிந்திப்பதில்லை; அதைவிட முக்கியமாக தமிழ்த் தரப்பு ஒன்றாக இணைந்து தீர்வு முன்மொழிவுகளை மேசையில் வைப்பதில்லை…போன்ற பல்வேறு விதமான குற்றச்சாட்டுகளுக்கும் அந்த ஆவணத் தொகுப்பில் பதில் உண்டு.

தமிழ்மக்கள் ஒரு நூற்றாண்டுக்கு மேலாக இலங்கைத் தீவில் இணைந்து வாழும் விருப்பத்தை வெளிப்படுத்தும் விதத்தில் தீர்வு முன்மொழிவுகளை முன் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆயுதப் போராட்ட காலகட்டத்திலும்கூட திம்பு கோட்பாட்டில் தொடங்கி இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை வரையிலும் தமிழ்மக்கள் தீர்வு முன்மொழிவுகளை வைத்திருக்கிறார்கள். ஆனால் கடந்த ஒரு நூற்றாண்டுக்கு மேலான காலப்பகுதியில் அந்தத் தீர்வு முன்மொழிவுகளில் பெரும்பாலானவற்றை நிராகரித்தது அல்லது உடன்படிக்கைகளை முறித்துக் கொண்டது அல்லது வாக்குறுதிகளை முறித்துக் கொண்டது சிங்களத் தலைவர்கள்தான். ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் சில யுத்த நிறுத்தங்களை முறித்ததற்காக தமிழ்த் தரப்பின் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்படலாம். ஆனால் தமிழ்மக்கள் தீர்வுக்குத் தயாரில்லை அல்லது தமிழ் மக்கள் பேச்சுவார்த்தைகளில் விசுவாசமாக இல்லை அல்லது தமிழ் மக்கள் பகல் கனவுகளை பேச்சுவார்த்தை மேசையில் வைக்கின்றார்கள் என்ற குற்றச்சாட்டுக்கள் முழுவதும் உண்மையானவை அல்ல என்பதனை அந்த ஆவணத் தொகுப்பு எடுத்துக்கூறுகிறது.

மேலும் அந்த ஆவணத் தொகுப்புக்கூடாக ஒரு விடயம் துலக்கமாக வெளித் தெரிகிறது. அந்த விடயத்தை அங்கு பேசிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரக்குமாரும் சுட்டிக்காட்டினார்.”இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கத்தை இணங்க வைப்பதில் கணிசமான தூரத்துக்கு எடுத்துச்சென்ற ஓர் ஆவணம் இந்திய-இலங்கை  உடன்படிக்கை” என்று கஜன் சொன்னார். இதுவரையிலுமான இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளில், சிங்கள பௌத்த அரசு கட்டமைப்புக்குள் இணைக்கப்பட்ட ஒரே தீர்வு முயற்சி என்பது இந்திய இலங்கை உடன்படிக்கையின் கீழான பதின்மூன்றாவது திருத்தம்தான். சிங்கள பௌத்த அரச கட்டமைப்பின் ஒற்றை ஆட்சி பண்பை அது உடைக்கவில்லை என்ற காரணத்தால்தான் அந்த 13ஆவது திருத்தம் அங்கே இணைக்கப்பட்டது என்றும் கஜன் சுட்டிக்காட்டினார். அதாவது சிங்களபௌத்த அரசுக் கட்டமைப்புக்குள், யாப்புக்குள் இணைக்கப்பட்ட ஒரே தீர்வு முயற்சி அதுதான். ஆனால் அதுவும் கூட்டாட்சி பண்புடையது அல்ல.

1002543308.jpg

1002543302.jpg

இங்கு முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால்,அந்தத் தீர்வு முயற்சி அதாவது இந்திய-இலங்கை உடன்படிக்கைக்கு கீழான 13ஆவது திருத்தம் என்பது எத்தகைய ஓர் அரசியல் சூழலில் யாப்புக்குள் இணைக்கப்பட்டது என்பதுதான். ஒருபுறம் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம். இன்னொரு புறம் இந்தியப் பேரரசின் ராணுவ அழுத்தம்.

13வது திருத்தம் எனப்படுவது ஈழத் தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தின் விளைவு. அதேசமயம் இந்திய-இலங்கை உடன்படிக்கையின் கீழ் இந்திய அமைதி காக்கும் படையின் பிரசன்னத்தின் பின்னணியில்தான் அதுவும் சாத்தியமாகியது. அதுமட்டுமல்ல அந்தத் தீர்வில் தமிழ்மக்கள் கையெழுத்திடவில்லை. இலங்கையும் இந்தியாவும்தான் கையெழுத்திட்டன.

அதாவது கடந்த ஒரு நூற்றாண்டுக்கு மேலான காலப்பகுதியில் இனப்பிரச்சினை தொடர்பில் உருவாக்கப்பட்ட தீர்வுகளில் சிங்களபௌத்த அரசுக் கட்டமைப்பின் யாப்புக்குள் உள்வாங்கப்பட்ட ஒரே தீர்வு அதுதான். ஆனால் அதையும் 38ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக வந்த இலங்கை அரசாங்கங்கள் அமுல்படுத்தவில்லை மட்டுமல்ல, அந்தத் தீர்வை எப்படி மேலும் தோலிருக்கச் சுளை பிடுங்கலாம் என்றுதான் சிந்தித்துச் செயல்பட்டிருக்கின்றன.

அதை இன்னும் கூர்மையான வார்த்தைகளில் சொன்னால் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையின் கீழ் கடந்த நான்கு தசாப்த காலத்துக்குள் உருவாக்கப்பட்ட ஒரு தீர்வு அது. ஆனால் அந்தத் தீர்வை அதாவது யாப்பின் அந்தப் பகுதியை நிறைவேற்றாமல் விடுவதற்குத்தான் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதுதான் கடந்த சுமார் நான்கு தசாப்த கால வரலாறு.

கடந்த ஒரு நூற்றாண்டுக்கு மேலான காலப்பகுதியில் இலங்கைத் தீவில் இனப் பிரச்சினைக்காக எழுதிக் கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளில் இரண்டே இரண்டு உடன்படிக்கைகள்தான் ஒப்பீட்டளவில் நீண்டகாலம் நின்று நிலைத்தன.

ஒன்று,இந்திய-இலங்கை உடன்படிக்கை.மற்றது, பிரபாகரன்-ரணில் உடன்படிக்கை. இரண்டு உடன்படிக்கைகளிலும் மூன்றாவது தரப்பின் பிரசன்னம் இருந்தது. இந்திய-இலங்கை உடன்படிக்கையின் பின்னணியில் இந்திய அமைதிகாக்கும் படை நாட்டுக்குள் இறக்கப்பட்டது. நோர்வேயின் அனுசரணையுடனான சமாதான முயற்சிகளில் ஸ்கண்டிநேவிய யுத்த நிறுத்தக் கண்காணிப்பு குழு நாட்டுக்குள் நின்றது.

இந்த இரண்டையும் தவிர மூன்றாவதாகக் கூறக்கூடியது ஐநாவின் பொறுப்புக் கூறலுக்கான தீர்மானம். ஆனால் இதில் ஐநா,அழுத்தத்தைப் பிரயோகிக்கின்ற அல்லது கண்காணிக்கின்ற ஒரு தரப்பாகச் செயற்படவில்லை. அதனால்தான் நிலைமாறு கால நீதியானது சுமந்திரன் கூறுவதுபோல”தோற்றுப்போன பரிசோதனையாக” முடிந்தது. அதைத் தோற்கடித்தது தமிழர்கள் அல்ல, சிங்களத் தரப்புத்தான்.

எனவே இப்பொழுது ஒரு தெளிவான சித்திரம் கிடைக்கிறது. தமிழ் மக்கள் போராடியதால்தான், பிராந்தியப் பேரரசாகிய இந்தியாவின் தலையீட்டினால்தான் பதின்மூன்றாவது திருத்தம்கூட சாத்தியமாகியது. தமிழ் மக்கள் போராடவில்லை என்றால் அதுவும் கிடைத்திருக்காது.

thumb_large_8-cccc.jpg

கடந்த ஞாயிற்றுக்கிழமை டில்கோ விருந்தினர் விடுதியில் நடந்த சந்திப்பில் உரை நிகழ்த்திய சித்தார்த்தன் ஒரு விடயத்தைத் தெளிவாகச் சொன்னார். அனுரவும் உட்பட எந்த ஒரு சிங்களத் தலைவரும் தமிழ் மக்களுக்குத்  தீர்வைத் தர மாட்டார்கள் என்று. குறிப்பாக பிராந்தியங்களின் ஒன்றியம் என்ற தீர்வை முன்வைத்த சந்திரிக்கா 2009க்குப்பின் இந்திய ஊடகம் ஒன்றினால் நேர்காணப்பட்டபோது, என்ன சொன்னார் என்பதனை அவர் சுட்டிக்காட்டினார். பேட்டி கண்டவர் கேட்கின்றார், ”இப்பொழுது உங்களுக்குச்  சந்தர்ப்பம் தரப்பட்டால் நீங்கள் முன்பு முன்வைத்த அந்த முன்மொழிவை நிறைவேறுவீர்களா?” என்று. அதற்குச் சந்திரிக்கா கூருகிறார் “Perhaps less”-“பெரும்பாலும் இல்லை”என்ற பொருள்பட.ஏனென்றால் இப்பொழுது விடுதலைப்புலிகள் இயக்கம் இல்லை என்பதால் என்றும்  கூறியுள்ளார்.

மேலும் சித்தார்த்தன் ஒரு விடயத்தைச் சொன்னார். நிலைமாறு கால நீதியின் கீழ், புதிய யாப்பு ஒன்றை உருவாக்குவதற்காக உழைத்தபோது, உருவாக்கப்பட்ட குழுக்களில் ஒன்றில் அவரும் அங்கம் வகித்தார். அக்காலகட்டத்தில் சம்பந்தர் அடிக்கடி தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வாக்குறுதிகளை வழங்குவார். “அடுத்த தீபாவளிக்குத் தீர்வு அடுத்த வருஷப்பிறப்புக்குத் தீர்வு” என்று சம்பந்தர் அடிக்கடி நம்பிக்கையூட்டும் வாக்குறுதிகளை தமிழ் மக்களுக்கு வழங்கி வந்தார். ஒருமுறை சித்தார்த்தன் இதுதொடர்பாக சம்பந்தரிடம் கேட்டிருக்கிறார். எதற்காக அப்படிக் கூறுகிறீர்கள்? இதில் நாங்களும் சம்பந்தப்பட்டிருப்பதனால் மக்கள் எங்களிடமும் கேட்கிறார்கள், என்று. அதற்கு சம்பந்தர் சொன்னாராம், “இந்த யாப்புருவாக்க முயற்சியில் தமிழ்த் தரப்பின் பிரதிநிதியாக நான் ஈடுபட்டு வருகிறேன். இந்த முயற்சி வெற்றி பெறாது என்று நானே  சொன்னால், பிறகு எதற்கு  அதில் நான் ஈடுபடுகிறேன் என்று மக்கள் கேட்பார்கள். எனவே நான் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வாக்குறுதிகளை வழங்க வேண்டியுள்ளது” என்ற பொருள்பட.

இதைச் சொன்ன சித்தார்த்தன் மேலும் ஒரு விடயத்தைச் சொன்னார், அந்த முயற்சி வெற்றி பெறாது என்பது சம்பந்தருக்கும் தெரியும் என்று. அதாவது சம்பந்தர் தமிழ் மக்களுக்குத் தொடர்ச்சியாகப்  பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வந்திருக்கிறார். இதை இன்னும் கூர்மையான வார்த்தைகளில் சொன்னால், சம்பந்தர் தனது மக்களுக்கு உண்மையைச் சொல்லவில்லை.

மூன்றாவது தரப்பின் அழுத்தம் இல்லாமல் சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பு ஒரு தீர்வை நோக்கி வளையாது என்பதனை புதிய யாப்பை உருவாக்கும் முயற்சிகள் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில், 2016இல், மன்னாரில், ஆயர் இல்லத்துக்கு அருகே நடந்த,”தடம் மாறும்  தமிழ்த்தேசியம்?”என்ற கருத்தரங்கில், நான் சம்பந்தருக்குச் சுட்டிக்காட்டினேன். அப்பொழுது சம்பந்தர் என்னை நோக்கி, தலையைச் சாய்த்து, மண்டைக்கண்ணால் பார்த்துக்கொண்டு அழுத்தம் திருத்தமான குரலில் சொன்னார் “சிங்களத் தலைவர்கள் ஒரு தீர்வைத் தர மாட்டார்கள் என்று கூறுவது வரண்ட வாதம்; வறட்டு வாதம்” என்று. ஆனால் எது வறண்ட வாதம் என்பதனை வரலாறு நிரூபித்தது. தந்தை செல்வா கலையரங்கின் கூரை பதிந்த அறைக்குள் சம்பந்தரின் உடல் தனித்துவிடப்பட்ட இரவில் வரலாறு தான்  ஒரு கண்டிப்பான கிழவி என்பதை நிரூபித்தது.

எனவே ஒரு நூற்றாண்டுக்கு மேலாகக் கற்றுக்கொண்ட பாடம் என்னவென்றால், சித்தார்த்தன் கூறுவதுபோல, இப்போதுள்ள அனுரவும் உட்பட எந்த ஒரு சிங்கள தலைவரும் தமிழ் மக்களுக்குத் தாமாக முன்வந்து தீர்வைத் தர மாட்டார்கள் என்பதுதான். கஜேந்திரக்குமார் அங்கே சுட்டிக்காட்டியதுபோல,சிங்கள பௌத்த ஒற்றையாட்சி அரசுக் கட்டமைப்புக்குள் இணைக்கப்பட்ட ஒரே ஒரு தீர்வு 13ஆ வது திருத்தம்தான். அதுகூட தமிழ்மக்களின் இரத்தத்தால் வரையப்பட்டது; இந்திய பேரரசின் அழுத்தம் இருந்தது.

எனவே தமிழ் மக்கள் போராடவில்லை என்றால்,மூன்றாவது தரப்பு ஒன்றின் அழுத்தம் இல்லையென்றால் தமிழ் மக்களுக்கு இனியும் தீர்வு கிடைக்காது.

இந்த இடத்தில்,கடந்த ஞாயிற்றுக்கிழமை டில்கோவில் கூடிய கட்சிகளும் உட்பட எல்லாத் தமிழ்த் தேசியக் கட்சிகளும் அரசியல் செயற்பாட்டாளர்களும் இரண்டு முக்கிய கேள்விகளுக்குப் பதில் கூற வேண்டும். முதலாவது கேள்வி, சமஸ்ரியை அடைவதற்கு தமிழ்க் கட்சிகளின் வழி வரைபடம் என்ன? இந்தக் கேள்வியை சில ஆண்டுகளுக்கு முன் விக்னேஸ்வரன் அப்பாவித்தனமாக கேட்டிருந்தார். அவரிடம் அதற்குப் பதில் இல்லை என்பதனால் அப்படிக் கேட்டிருந்தார்.

இரண்டாவது கேள்வி. மூன்றாவது தரப்பு ஒன்றின் அழுத்தம் இல்லாமல் இனப்பிரச்சினைக்குத் தீர்வு இல்லை என்பதே ஒரு நூற்றாண்டு காலமாக  கற்றுக்கொண்ட பாடம். அப்படியென்றால் அந்த மூன்றாவது தரப்பை அணைத்து எடுப்பதற்கு தமிழ் மக்களிடம் உள்ள வழிவரைபடம் என்ன?

https://www.nillanthan.com/7931/

  • கருத்துக்கள உறவுகள்

தீர்வுக்கு வழி என்னவென்றால், டில்கோவின் நாலு பெக் ஒடர் பண்ணி அடிசிட்டு படுக்கிறது மட்டும் தான். இதில் கலந்து கொண்டவர்களில் பலர் அதைத் தான் செய்திருப்பர். தீர்வு கிடைத்த மகிழ்ச்சியுடன் மாலையில் வீட்டுக்கு சென்றிருப்பர்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.