Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புயல் அனுராசங்கத்தைப் பலப்படுத்தியிருக்கிறதா ? - நிலாந்தன்

facebook_1765176004288_74036847754923904

புயல் அனுராசங்கத்தைப் பலப்படுத்தியிருக்கிறது. அனைத்துலக அளவிலும் உள்நாட்டிலும் அரசாங்கத்தைப் பலப்படுத்தத் தேவையான ஒரு மனிதாபிமானச் சூழல் உருவாகியிருக்கிறது. இந்த மனிதாபிமான அரசியல் சூழல் அல்லது நிவாரண அரசியல் சூழல் எனப்படுவது அதன் தர்க்கபூர்வ விளைவாக அரசாங்கத்தைப் பலப்படுத்தும்.

அனைத்துலக அளவில் பெரும்பாலான நாடுகள் வரிசைகட்டி நின்று உதவி செய்கின்றன. குறிப்பாக முதலில் உதவியதும் இந்தியா. அதிகம் உதவியதும் இந்தியாதான். தவிர வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களும் உதவுகிறார்கள். சில புலம்பெயர்ந்த தமிழர்களும் அரசாங்கத்துக்கு நிதி சேர்த்துக் கொடுக்கிறார்கள். அல்லது தாம் சேர்த்த நிதியை தாம் வாழும் நாட்டின் அரசாங்கத்துக்கு ஊடாகக் கொடுக்கிறார்கள்.

உள்நாட்டில் செழிப்பான ஒரு மனிதாபிமானச் சூழல் மேலெழுந்துள்ளது. தொண்டு நிறுவனங்கள்,மத நிறுவனங்கள், சிறிய சமூக அமைப்புக்கள் என்று பல்வேறு வகைப்பட்ட அமைப்புகளும் தனி நபர்களும் தன்னார்வமாக முன்வந்து உதவிகளைச் சேகரித்து, தேவைப்படும் மக்களுக்குத் கொண்டு சென்று கொடுக்கிறார்கள். நிவாரணத்தைச் சேகரிக்கும்பொழுது உள்ளூர் வணிகர்களும் காசு உள்ளவர்களும் தங்களால் இயன்ற அளவுக்கு அள்ளிக் கொடுக்கிறார்கள். சிங்களப் பகுதி ஒன்றில் ஒரு முதிய பெண் தன்னுடைய பங்குக்கு தன்னிடம் இருந்த இரண்டு பனடோல் மாத்திரை அட்டைகளை அன்பளிப்பாகக் கொடுத்தது ஒரு நிகழ்ச்சியான சம்பவமாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது.

அதேசமயம் தமிழ்ப் பகுதிகளில் தன்னார்வமாக இளையவர்களும் தொண்டு நிறுவனங்களும் நிவாரணங்களை சேகரித்துக் கொண்டு மலையகத்தை நோக்கிச் செல்கிறார்கள். புயல் ஓய்ந்த அடுத்தடுத்த நாட்களில் ஒரு பகுதியினர் தனித்துவிடப்பட்டிருக்கும் முல்லைத்தீவை நோக்கியும் வன்னியின் எனைய பகுதிகளை நோக்கியும் சென்றார்கள். அங்கே தங்களால் முடிந்த உதவிகளைச் செய்த பின் மலையையகத்தை நோக்கித் திரும்பினார்கள். வடக்கிலிருந்தும் கிழக்கிலிருந்தும் மலையகத்தை நோக்கி உதவிகள் செல்கின்றன. புயலுக்குப் பின்னரான மனிதாபிமானச் சூழலானது தமிழ் சகோதரத்துவத்தை மேலும் பலப்படுத்தியிருக்கிறது.

முஸ்லிம்கள் தங்களுடைய மதக் கட்டமைப்புகளுக்கு ஊடாகவும் தொண்டு நிறுவனங்களுக்கு ஊடாகவும் பொருட்களை சேகரித்து பாதிக்கப்பட்ட மக்களை நோக்கிச் செல்கிறார்கள். உதாரணத்துக்கு,”கெலி ஓயா அபிவிருத்தி நிதியம்” என்ற அமைப்பு கண்டி மாவட்டத்தில்,உடுநுவர பிரதேச செயலர் பிரிவில்,பள்ளிவாசலை மையமாக கொண்டு இயங்குகிறது. டித்வா புயல் அழிவுகளின் பின் உருவாக்கப்படட அமைப்பு இது.

தென்னிலங்கையில் பாதிக்கப்படாத பகுதிகளை சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை நோக்கி தன்னார்வமாகத் திரண்டு செல்கிறார்கள். அரச கட்டமைப்புகள் உதவிக்கு வரும் அதேவேளை, மக்கள் தாங்களாக முன்வந்து தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து வருகிறார்கள். வெள்ளம் கட்டுக்கடங்காது ஓடிய பகுதிகளில் வீதிகள்,வீடுகள்,பொது இடங்கள் போன்றவற்றில் சேறு கழி போல மூடிக்கிடக்கின்றது. சில இடங்களில் கால் புதையக் கூடிய அளவுக்கு சேறு. அதனை அரச உதவி வரும் வரை பார்த்துக் கொண்டிருக்காமல், அயலில் உள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள் தாங்களாக முன்வந்து அகற்றுகிறார்கள். தெருக்களிலும் வீடுகளிலும் பொது இடங்களிலும் உள்ள சேற்றைக் கழுவி அகற்றுகிறார்கள். முறிந்து விழுந்த மரங்களையும் குப்பைகளையும் சேகரித்து ஓரிடத்தில் குவிக்கிறார்கள்.

இதுவிடயத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒரே சமயத்தில் அரச கட்டமைப்புகள், அரசுசாரா கட்டமைப்புகள்,தன்னார்வலர்கள்,இவர்களோடு உதவிக்கு வந்த நாடுகளின் தொண்டர்கள்,படையினர் மற்றும் வெளிநாட்டவர்கள் என்று எல்லாத் தரப்பும் இணைந்து அந்தப் பகுதியை துப்புரவாக்கும் காட்சி அற்புதமானது. சில இடங்களில் உல்லாசப் பயணிகளாக வந்த வெள்ளைக்காரர்களும் காணப்பட்டார்கள்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களே மக்களுக்கு உதவும் தன்னார்வ தொண்டுச் செயற்பாடுகளில் ஜேவிபியின் அடிமட்ட வலைப்பின்னல் பலமாகச் செயல்படுகின்றது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அடித்தளமாக இருப்பது ஜேவிபி. அது அடிப்படையில் ஓர் இயக்கம். அடிமட்ட கிராமிய வலைப் பின்னலைக் கொண்ட ஓர் இயக்கம். எனவே அவர்களிடம் உள்ள அடிமட்ட வலையமைப்பு புயலுக்குப் பின்னரான மனிதாபிமானச் சூழலை அரசாங்கத்துக்குச் சாதகமாகக் கட்டமைத்து வருகிறது.

594534022_26570693365864908_637093762434

இவ்வாறாக டித்வா புயலுக்குப் பின்னரான மனிதாபிமானச் சூழல் என்பது ஒரு விதத்தில் அனுரவுக்குச் சாதகமானதாகவே காணப்படுகிறது. ஒருபுறம் நாட்டை நோக்கி உதவிகள் குவிக்கின்றன. இன்னொருபுறம்,ஒரு பேரிடருக்குப் பின்னரான மனிதாபிமானச் சூழல் அதிகம் நெகிழ்ச்சியானதாகவும் உணர்வுபூர்வமானதாகவும் காணப்படுகிறது.

” (நாட்டில் நிலவும் )மிகவும் பலமான ஒரு சகோதரத்துவத்துக்கு நாங்கள் உயர் முக்கியத்துவம் கொடுக்க விரும்புகிறோம். என்னைப் பொறுத்தவரை இது அசாதாரணமானது. நாடு முழுவதும் மக்களும் மக்கள் அமைப்புகளும் ஒன்றாக திரண்டு ஒருவர் மற்றவருக்கு உதவ முன்வருகிறார்கள். இதுபோன்ற  சகோதரத்துவத்தை என்னுடைய நாட்டில் காண முடியுமா என்பதை என்னால் உறுதியாக கூறமுடியாது என்பதனை நான் இங்கே கூறவேண்டும். சிறீலங்கர்கள் காட்டும் இந்த வகையான  சகோதரத்துவம் அசாதாரணமானது.” இவ்வாறு இலங்கைக்கான ஐநாவின் வதிவிடப் பிரதிநிதி அண்மையில் தெரிவித்துள்ளார்.

இது இயற்கைப் பேரிடர் ஒன்றுக்குப் பின்னரான மனிதாபிமானச் சூழல். ஆனால் இங்கு இயற்கை மட்டும் பேரிடரை ஏற்படுத்தவில்லை. மனிதத் தவறுகளும் இதற்குக் காரணம் என்று எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தைக் குற்றம் சாட்டுகின்றன. ரணில் விக்கிரமசிங்க இந்த அரசாங்கம் பதவியேற்ற புதிதில் இது ஓர் “எல்போர்ட்” அரசாங்கம் என்று நக்கலடித்திருந்தார். அனர்த்த காலமொன்றை முகாமை செய்ய இந்த அரசாங்கத்தால் முடியவில்லை என்று நிரூபிப்பதற்கு எதிர்க் கட்சிகள் முயற்சிக்கின்றன.

நுகேகொட பேரணிக்குப் பின் டித்வா புயலானது எதிர்க் கட்சிகள் அரசாங்கத்தை விமர்சிப்பதற்கு அதிகரித்த வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுத்துள்ளது வழமைபோல எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை எதிர்ப்பதனை ஒரு மரபாகப் பேணுகின்றன என்று அரசுக்கு ஆதரவான அறிவுஜீவிகள் நியாயம் கற்பிக்கின்றார்கள். ஆனால் அது உண்மை அல்ல. எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் சிலவற்றை ஆழமாகப் பரிசீலிக்க வேண்டும். ஏற்கனவே முன்னெச்சரிக்கைகள் கிடைத்த போதிலும் அரசாங்கம் வருமுன் காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்ற குற்றச்சாட்டு உண்மையானதுபோல தெரிகிறது.

இந்திய வானிலை ஆய்வு மையம் புயல் தொடர்பாக நொவம்பர் 13ஆம் திகதியே எச்சரித்திருந்தது. நவம்பர் 26வரை அனைத்துத் தகவல்களும் இலங்கையுடன் பரிமாறப்பட்டுள்ளன என்று “இந்தியன் எக்ஸ்பிரஸ்” இணையத்தளம் கூறுகிறது. அதுபோலவே தமிழக வானிலை முன்னறிவிப்பாளர்களில் ஒருவராகிய செல்வக்குமார், தன்னுடைய யூடியூப் தளத்தில் இதுதொடர்பாக இலங்கையை 24ஆம் திகதி எச்சரித்திருந்தார். குறிப்பாக முன்னெப்பொழுதும் ஏற்பட்டிராத வெள்ளப்பெருக்கும் மண்சரிவும் ஏற்படும் என்றும் அவர் எச்சரித்திருந்தார். அதைவிடக்குறிப்பாக,இந்தப் பேரிடரின் காரணமாக இலங்கை அரசாங்கம் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்த வேண்டி வரலாம் என்றும் செல்வக்குமார் மிகத்துல்லியமாக எதிர்வு கூறியிருந்தார். அது மட்டுமல்ல தன்னுடைய முன்னெச்சரிக்கையை அரசாங்கத்திடம் கொண்டு சென்று சேர்ப்பிக்குமாறு கேட்டிருந்தார். அவருடைய முன்னெச்சரிக்கை அடங்கிய காணொளி 24 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இலங்கை வானிலை என்ற தலைப்பில் அது வெளியிடப்பட்டது

அதேபோல,யாழ்ப்பாணத்தில் வசிக்கும்,யாழ் பல்கலைக்கழக,புவியியல் துறையின் தலைவராகிய பேராசிரியர் பிரதீபராஜா ஒரு புயலைக் குறித்து ஏற்கனவே எச்சரித்திருந்தார். கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு முன்பு அதாவது செப்டம்பர் மாதத்தின் தொடக்கத்தில் அவர் அந்த எச்சரிக்கையை விட்டிருந்தார். அவர் வழமையாக தன்னுடைய முகநூல் தளத்தில் வானிலை அறிவிப்புகளை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார்.

அவர் ஒரு புவியியல் துறை பேராசிரியர். இயற்கை அனர்த்தங்களைக் குறித்து எச்சரிப்பது அவருடைய உத்தியோகபூர்வ கடமை அல்ல. அதைச் செய்ய வேண்டியது வளி மண்டலவியல் திணைக்களம்,அனர்த்த முகாமைத்துவ நிலையம் போன்றனதான். ஆனால் பிரதீபராஜா அதைத் தன்னார்வமாகச் செய்கிறார். இம்முறை பருவ மழையை முன்னிட்டு அவர் முகநூலில் பதிந்த நீண்ட முன்னெச்சரிக்கைகள் அடங்கிய பதிவு ஒன்றில் மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது. அதன்பின் மடமாகாண ஆளுநர் வேதநாயகன் அவரை தன்னுடைய அலுவலகத்துக்கு அழைத்து துறைசார் திணைக்களங்களின் பொறுப்பாளர்களையும் அழைத்து ஒரு கலந்தாலோசனை செய்தார்.

எனவே ஒரு பேரிடரைக் குறித்து முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருக்கவில்லை என்று அரசாங்கம் கூறமுடியாது. இந்த முன்னெச்சரிக்கைகளை அரசாங்கம் உரிய பாரதூரத் தன்மையோடு உள்வாங்கியிருக்கவில்லை என்பதைத்தான் அது காட்டுகிறது. மேலும் ரவூப் ஹக்கீம் நாடாளுமன்றத்தில் கூறியதுபோல திணைக்களங்களுக்கு இடையில் போதிய ஒருங்கிணைப்பு இருக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் அரசாங்கம் அனர்த்தமொன்றை வினைத்திறனுடன் முகாமை செய்யவில்லை என்று பொருள் கொள்ளத்தக்கது.

எதிர்க்கட்சிகள் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றன. எனினும், பேரிடருக்குப் பின்னரான மனிதாபிமான உதவிகளுக்கான சூழலானது,எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை கூர்மையிழக்கச் செய்கின்றது. அதோடு அரசாங்கம் அறிவித்திருக்கும் இழப்பீட்டுத் தொகையும் மிகப்பெரியது. இதுவரையிலும் இருந்த அரசாங்கங்கள் இதுபோன்ற அனர்த்தங்களின் போது அறிவித்திராத பெரிய தொகை இழப்பீடு அது. இந்த இழப்பீட்டின்மூலம் அரசாங்கம் தன்னை ஏழைகளின் நண்பனாக மீண்டும் ஒரு தடவை நிரூபிக்க முயற்சிக்கின்றது. அரசாங்கம் அறிவித்திருக்கும் பெரிய அளவிலான இழப்பீட்டுத் தொகையானது மக்கள் அபிமானத்தை வென்றெடுப்பதற்கு உதவும். இதனாலும் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்துக்கு எதிராக குற்றச்சாட்டுகளை அடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன.

எனவே புயலுக்கு பின்னரான அரசியல் சூழலைத் தொகுத்துப் பார்க்கும்போது, அது மனிதாபிமானத் தேவைகளை முன்னிறுத்தும் சூழலாக மேலெழுகிறது. இதனால் அனுர அரசாங்கம் எதிர்க்கட்சிகள் எதிர்பார்த்ததைப் போல பலவீனம் அடையவில்லை, மாறாக பலமடைந்திருக்கிறது என்றுதான் தோன்றுகிறது.

https://www.nillanthan.com/7999/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.