Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முட்டையில் ஆபத்தான ஆன்டிபயாடிக் உள்ளதா? - உணவுப் பாதுகாப்புத் துறையின் விளக்கம்

'முட்டைகளில் ஆன்டிபயாடிக் மருந்து' - சென்னை, நாமக்கலில் சோதனை -  உணவுப் பாதுகாப்புத் துறை கூறுவது என்ன?

பட மூலாதாரம்,Getty Images

கட்டுரை தகவல்

  • விஜயானந்த் ஆறுமுகம்

  • பிபிசி தமிழ்

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

முட்டைகளில் தடை செய்யப்பட்ட நைட்ரோஃபுரான் (Nitrofuran) ஆன்டிபயாடிக் மருந்து உள்ளதாக சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து, சென்னை, நாமக்கலில் முட்டை மாதிரிகளை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.

"கடந்த 10 ஆண்டுகளாகத் தடை செய்யப்பட்ட ஆன்டிபயாடிக் மருந்துகளைப் பயன்படுத்தும் வழக்கம் இல்லை," என்று நாமக்கல் மாவட்ட முட்டை ஏற்றுமதியாளர்கள் பிபிசி தமிழிடம் கூறினர்.

புற்றுநோயைப் பரப்பும் காரணிகளில் ஒன்றாகப் பார்க்கப்படும் நைட்ரோஃபுரான் மருந்தை, இந்திய அரசு தடை செய்துள்ளது.

இந்தியாவில் எக்கோஸ் (Eggoz) என்ற தனியார் நிறுவனம் முட்டை விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் முட்டைகளில் தடை செய்யப்பட்ட நைட்ரோஃபுரான் கலவை இருப்பதாக சர்ச்சை எழுந்தது.

உணவுத் தர சோதனைகள் தொடர்பான காணொளிகளை வெளியிடும் யூடியூப் சேனல் ஒன்றில் இதுதொடர்பான விவரங்கள் வெளியாகியிருந்தன. எக்கோஸ் நிறுவன முட்டையை ஆய்வுக்கு உட்படுத்தியபோது ஒரு கிலோவுக்கு 0.74 மைக்ரோகிராம் அளவுக்கு ஏஓஇசட் (a metabolite of nitrofuran antibiotics) கலவை உள்ளதாக காணொளியில் கூறப்பட்டிருந்தது.

இந்தியாவில் ஏஓஇசட் கலவையை உணவு உற்பத்தி செய்யும் விலங்குகளில் பயன்படுத்துவதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.

'முட்டைகளில் ஆன்டிபயாடிக் மருந்து' - சென்னை, நாமக்கலில் சோதனை -  உணவுப் பாதுகாப்புத் துறை கூறுவது என்ன?

'ஆபத்தை விளைவிக்கும்' - இந்திய அரசின் எச்சரிக்கை கடிதம்

இந்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மருந்து கட்டுப்பாட்டுத் துறை இயக்குநர் ஜெனரல் அலுவலகம் கடந்த ஏப்ரல் மாதம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

அதில், "குளோராம்பெனிகால் (Chloramphenicol), நைட்ரோஃபுரான்ஸ் (Nitrofurans) ஆகிய மருந்துகளை இறக்குமதி செய்தல், உற்பத்தி செய்தல், விற்பனை செய்தல், விநியோகித்தல் மற்றும் உணவு உற்பத்தி செய்யும் விலங்குகள் வளர்ப்பில் பயன்படுத்துதல் ஆகியவை தடை செய்யப்பட்டது குறித்த கடிதம்' என கூறப்பட்டுள்ளது.

அதோடு, "உணவு உற்பத்தி செய்யும் விலங்குகள் வளர்ப்பு மையங்களில் இந்த மருந்துகளைப் பயன்படுத்துவது ஆபத்தை விளைவிக்கும். இவற்றின் விற்பனை மற்றும் விநியோகத்தின் மீது கடுமையான கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும்" எனவும் இந்திய அரசு தெரிவித்துள்ளது.

உணவு உற்பத்தி செய்யக்கூடிய விலங்குகளில் நைட்ரோஃபுரான் மருந்தைப் பயன்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியமும் தடை விதித்துள்ளது. இந்த நிலையில், தங்கள் நிறுவனத்தின் முட்டைகளில் தடை செய்யப்பட்ட ஆன்டிபயாடிக் மருந்து உள்ளதாகக் கூறப்படும் தகவலை எக்கோஸ் நிறுவனம் மறுத்துள்ளது.

'முட்டைகளில் ஆன்டிபயாடிக் மருந்து' - சென்னை, நாமக்கலில் சோதனை -  உணவுப் பாதுகாப்புத் துறை கூறுவது என்ன?

எக்கோஸ் நிறுவனம் கூறியது என்ன?

"தங்கள் நிறுவனம் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயத்தின் விதிகளுக்கு உட்பட்டு இயங்குகிறது. தீவனம் முதல் விநியோகம் வரை முறையான செயல்முறைகளைப் பின்பற்றுகிறோம்," என்று அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான ஆய்வக அறிக்கைகளை தங்கள் இணையதளத்தில் பொதுவெளியில் வைத்துள்ளதாக, எக்கோஸ் நிறுவனம் கூறியுள்ளது.

அதோடு, "எக்கோஸ் நிறுவன முட்டை மாதிரிகளின் ஆய்வக அறிக்கைகளை அனைவரின் பார்வைக்காக பொதுவெளியில் பகிர்ந்துள்ளோம். நுகர்வோரின் பாதுகாப்பும் நம்பிக்கையுமே எங்களுக்கு அவசியம். பண்ணைகளில் எப்போதும் உயர்ந்த தரத்தைப் பின்பற்றி வருகிறோம்." எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இந்தியா முழுவதும் முட்டைகளின் மாதிரிகளை ஆய்வங்களுக்கு அனுப்பும் பணியில் உணவுக் கட்டுப்பாடு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) ஈடுபட்டு வருகிறது.

சென்னை, நாமக்கலில் ஆய்வு

சென்னையில் சுமார் 15 முட்டைகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு இருப்பதாக, இந்திய உணவுக் கட்டுப்பாடு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் தென்மண்டல இயக்குநர் வி.கே.பஞ்சாம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் விற்பனையில் இருந்த பிராண்டட் முட்டைகளின் மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பியுள்ளதாக செய்தியாளர்களிடம் கூறிய அவர், "அடுத்த வாரம் ஆய்வக முடிவுகள் வந்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், புதன்கிழமையன்று (டிசம்பர் 17) நாமக்கலில் முட்டை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களிடம் இருந்து உணவுக் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் மாதிரிகளைச் சேகரித்துள்ளனர்.

'முட்டைகளில் ஆன்டிபயாடிக் மருந்து' - சென்னை, நாமக்கலில் சோதனை -  உணவுப் பாதுகாப்புத் துறை கூறுவது என்ன?

தமிழ்நாட்டில் முட்டை ஏற்றுமதி மையமாக நாமக்கல் உள்ளது. இந்த மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முட்டை உற்பத்தி நிறுவனங்கள் செயல்படுகின்றன. அவை தினந்தோறும் சுமார் ஆறு கோடிக்கும் அதிகமான முட்டைகளை உற்பத்தி செய்வதாகக் கூறுகிறார், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல தலைவர் சிங்கராஜ்.

நாமக்கலில் இருந்து பிரிட்டன், ஜப்பான் உள்படப் பல்வேறு நாடுகளுக்கு முட்டைகளை ஏற்றுமதி செய்து வருவதாகவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

'ஆன்டிபயாடிக் புகார்கள் இதுவரை இல்லை'

"முட்டைகள் அவ்வப்போது ஆய்வகங்களுக்குத் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகின்றன. இருப்பினும் தடை செய்யப்பட்ட மருந்தைப் பயன்படுத்தவில்லை என்பதை நிரூபிக்க வேண்டிய அவசியம் உள்ளது" என்கிறார், நாமக்கல் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் மருத்துவர் தங்க விக்னேஷ்.

"இதுவரை முட்டைகளில் ஆன்டிபயாடிக் இருந்ததாக ஆய்வு முடிவுகள் எதுவும் இல்லை" எனக் கூறிய அவர், "மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டியது அவசியம்." என செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.

'முட்டைகளில் ஆன்டிபயாடிக் மருந்து' - சென்னை, நாமக்கலில் சோதனை -  உணவுப் பாதுகாப்புத் துறை கூறுவது என்ன?

பட மூலாதாரம்,Getty Images

இதுதொடர்பாக முட்டை உற்பத்தியாளர் சங்கங்களுடன் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விரிவான ஆலோசனை ஒன்றையும் நடத்தியுள்ளனர். ஆய்வின்போது சேகரிக்கப்பட்ட முட்டைகளை இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட உள்ளதாகவும் மருத்துவர் தங்க விக்னேஷ் தெரிவித்தார்.

இந்தியாவில் தடை செய்யப்பட்ட நைட்ரோஃபுரானை கோழிப் பண்ணைகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்துவதில்லை எனக் கூறுகிறார், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல தலைவர் சிங்கராஜ்.

"இந்த மருந்தை கால்நடை மருத்துவர்களும் பரிந்துரைப்பதில்லை. ஆய்வுக்கு முட்டைகளை அனுப்பும்போது தடை செய்யப்பட்ட மருந்து இருந்ததாக எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை," எனவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

நாமக்கலில் ஒரு முட்டையின் விலை 6.25 ரூபாயாக உள்ளது. வெளிச் சந்தையில் 7.50 ரூபாய் முதல் 8 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதைக் குறிப்பிட்டுப் பேசும் சிங்கராஜ், "விலை அதிகமானதால் முட்டை குறித்து தவறான தகவல் பரப்பப்படுவதாகவே நாங்கள் இதைப் பார்க்கிறோம்" என்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், "குளிர்காலங்களில் முட்டை விற்பனையில் வரக்கூடிய வருமானத்தை வைத்து இழப்பு ஏற்படும் காலங்களில் அதை ஈடு செய்துகொள்கிறோம். மற்ற உணவுப் பொருட்களுடன் ஒப்பிடும்போது இதைச் சாதாரண விலையாகவே பார்க்கிறோம்." என்றார்.

'முட்டைகளில் ஆன்டிபயாடிக் மருந்து' - சென்னை, நாமக்கலில் சோதனை -  உணவுப் பாதுகாப்புத் துறை கூறுவது என்ன?

பட மூலாதாரம்,Getty Images

'21 நாட்களுக்கு ஒருமுறை ஆய்வு'

நாமக்கல் மாவட்டத்தில் 21 நாட்களுக்கு ஒருமுறை முட்டைகளை ஆய்வகங்களில் பரிசோதிப்பதாகக் கூறுகிறார், நாமக்கல் கால்நடை அறிவியல் கல்லூரியில் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியர் சந்திரசேகர். இவர் கால்நடை உணவியல் துறையில் பணிபுரிந்தவர்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "நாமக்கலில் தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத் துறை ஆய்வகம் உள்ளது. அங்கு முட்டைகள் பரிசோதிக்கப்பட்டு சான்று வழங்கப்படுகிறது. இங்கு முட்டைகளில் வைரஸ் மற்றும் பாக்டீரியா தாக்கம் உள்ளதா என சோதனைகள் நடத்தப்படுகின்றன." என்றார்.

கோழிகளுக்கு வைட்டமின், தாது சத்து, லிவர் டானிக் போன்றவை கொடுக்கப்படுவதாகக் கூறும் அவர், "நைட்ரோஃபுரான் மூலமாக புற்றுநோய் பரவுவதாக சந்தேகம் உள்ளது. ஆகையால் இந்த மருந்து எந்த வகையிலும் கோழிகளுக்குக் கொடுக்கப்படுவதில்லை." எனக் கூறுகிறார்.

மனித உயிருக்கு ஆபத்தா?

நைட்ரோஃபுரான்களை தொடர்ந்து பயன்படுத்துவது மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என, அமெரிக்க அரசின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது.

இந்த மருந்தை நீண்டகாலம் பயன்படுத்தும்போது புற்றுநோய், மரபணு பாதிப்பு, ஒவ்வாமை, சிறுநீரகம், கல்லீரல் பாதிப்பு போன்றவை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாகக் கூறுகிறார், சூழலியலுக்கான மருத்துவர்கள் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர் புகழேந்தி.

"கோழி, மீன் மற்றும் கால்நடைத் தீவனங்களில் இதைப் பயன்படுத்துவதை அரசு தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்," எனவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

அதேநேரம், "முட்டையை சாப்பிடுவதற்குத் தயக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை" என்கிறார், சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவமனையின் குடல் இரைப்பை அறுவை சிகிச்சை மருத்துவர் கேசவன்.

"குழந்தைகளுக்கு தினசரி ஒரு முட்டை' வழங்க வேண்டும் என்பதை யுனிசெஃப் வலியுறுத்துகிறது. தமிழ்நாட்டில் மதிய உணவுத் திட்டத்தில் தினசரி ஒரு முட்டை என்பதைச் செயல்படுத்தி வருகின்றனர்" என அவர் குறிப்பிட்டார்.

"தினமும் குறைந்தது ஒரு முட்டையைச் சாப்பிடும்போது முழு புரதச்சத்து கிடைக்கிறது. குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவாக இது உள்ளது" எனக் கூறும் மருத்துவர் கேசவன், "அரசின் ஆய்வக முடிவுகள் வெளியாகும்போது கோழி தீவனத்தில் நைட்ரோஃபுரான் கலக்கப்பட்டதா என்பது தெரிய வரும்" என்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c1kprz17444o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.