Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா – இலங்கை உறவுகள் உலகளாவிய கூட்டுறவுக்கான முன்மாதிரி – குடியரசு தின உரையில் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா

26 Jan, 2026 | 10:07 PM

image

இந்தியா - இலங்கையின் நம்பகமான மற்றும் நெருங்கிய பங்காளி என்பதுடன் அபிவிருத்தி, ஒத்துழைப்பு, மின்சாரம், போக்குவரத்து, டிஜிட்டல் மயமாக்கல், பேரிடர் மீட்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் இந்தியாவின் தொடர்ந்த ஆதரவு எப்போதும் இருக்கும். இந்தியா – இலங்கை உறவுகள் இரு நாட்டு மக்களுக்கிடையிலான நட்பு, பொருளாதார மற்றும் பாதுகாப்பு கூட்டுறவுகளின் அடிப்படையில் மேலும் வலுப்பெறுகின்றன எனவும் இந்தியா–இலங்கை உறவுகள் உலகளாவிய கூட்டுறவுக்கான முன்மாதிரி எனவும் இந்திய  உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் இன்று 26 ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்ற 77வது இந்திய குடியரசு தின விழாவில், தலைமையேற்று உரையாற்றுகையிலேயே இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

வணக்கத்துக்குரிய மதகுருமார்களே,

இன்றைய தினம் எமது நிகழ்வுகளில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருக்கும் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ அவர்களே,

பெருமதிப்புக்குரிய இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளே,

இலங்கை அரசாங்கத்தின் அமைச்சர்களே, ஆளுநர்களே,

பாராளுமன்ற உறுப்பினர்களே மற்றும் நீதித்துறை சார்ந்த அதிகாரிகளே,

இராஜதந்திர துறையினைச் சேர்ந்த சக அதிகாரிகளே,

இலங்கை அரசாங்கத்தின் உயரதிகாரிகளே,

வர்த்தக நிறுவனங்களின் தலைவர்களே,

ஊடகவியலாளர்களே,

இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள் உட்பட இந்திய சமூகத்தை சேர்ந்த உறுப்பினர்களே,

மதிப்புக்குரிய விருந்தினர்களே,

சீமாட்டிகளே கனவான்களே,

இனிய மாலை வணக்கம், நமஸ்கார், ஆயுபோவன்,

77 ஆவது குடியரசு தின கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்காக இந்திய இல்லத்துக்கு வருகை தந்திருக்கும் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றேன்.

 

இன்றைய தினம் எம்முடன் இணைந்து கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான நன்றி. உங்களது பிரசன்னம் மற்றும் உங்களது ஆதரவு ஆகியவையே எமது பலத்திற்கான மூலாதாரங்கள் ஆகும். ஓர் ஆழமான பங்குடமையை நோக்கி பணியாற்றுவதற்கு ஏனைய பிறகாரணிகளைக் காட்டிலும் இதுவே எமக்கு தைரியமூட்டுகின்றது. 1.4 பில்லியன் இந்தியர்கள் சார்பாக உங்களது நட்புறவுக்கும் பங்களிப்புக்கும் நான் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன்.

76 வருடங்களுக்கு முன்னர் இன்றைய தினத்திலேயே இந்திய மக்கள் எமது அரசியலமைப்பை அங்கீகரித்திருந்தனர். அன்று முதல் நாம் பாரிய ஜனநாயக நாடாக வளர்ந்திருக்கும் அதேசமயம், உலக அளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் பாரிய பொருளாதாரமாகவும் உள்ளோம்.

இந்த வருடத்தின் குடியரசு தினத்தின் இரு தொனிப்பொருட்களாக வந்தே மாதரம் மற்றும் ஆத்ம நிர்பார் பாரத் ஆகியவை காணப்படுகின்றன. வந்தே மாதரம் சுதந்திரத்தின் சிந்தனைகளை கொண்டாடுகின்றது. ஆத்ம நிர்பார் பாரத் சுபிட்சத்துக்கான எங்களின் அபிலாசைகளை முன்கொண்டு செல்கின்றது.

வந்தே மாதரம் இந்தியாவின் தேசிய பாடலாகும். இந்த பாடல் உருவாக்கப்பட்டமையின் 150 ஆண்டுகளை நாம் நினைவு கூறுகின்றோம். இந்தியாவின் சுதந்திர போராட்டத்தின் போதான சுதந்திரப் போராட்ட வீரர்களின் ஒருமித்த கோஷமாக அது அமைகின்றது. இந்திய தாய் பற்றிய எமது பெருமிதத்தின் வெளிப்பாடாகவும் இது காணப்படுவதுடன் இன்று கூட ஓர் உத்வேகத்தின் காரணியாகவும் உள்ளது.

ஒரு தற்சார்பு இந்தியாவை கட்டி எழுப்புவதற்கான எங்களது எதிர்கால முயற்சிகளை குறிக்கும் ஒரு முன்னெடுப்பு ஆத்ம நிர்பார் பாரத் என்பதாகும். இது தனிமைப்படுத்தலை முக்கியத்துவப் படுத்தவில்லை பதிலாக துரிதமானதும் முழுமையான வளர்ச்சிக்கான ஓர் அபிலாசையாகும். உலகளாவிய ரீதியில் ஓர் நம்பத் தகுந்த பங்காளராவதற்கான திறன்களை உள்ளூரில் கட்டி எழுப்புவதையே இது குறித்து நிற்கின்றது. 2025 ஆம் ஆண்டில் இந்த இலக்கினை அடைவதற்காக,  வரிகள் முதல் தொழில்துறை வரையிலும்; விண்வெளி முதல் பாதுகாப்பு மற்றும் அணு துறைகள் வரையிலும்; உட்கட்டமைப்பு முதல் உற்பத்தி துறை வரையிலும் மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீடு முதல் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் வரையிலும் நாங்கள் பல்வேறு மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தோம். அது மட்டுமல்லாமல் இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகளில், இந்தியாவில் வர்த்தக நடவடிக்கைகளை இலகுவாக மேற்கொள்வதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்தல் மற்றும் அதற்குரிய தேவைகளை குறைத்தல் போன்ற தொடர்ச்சியான முயற்சிகளும் உள்ளடங்குகின்றன. ஸ்திரமான வளர்ச்சி, குறைவடைந்து வரும் வேலைவாய்ப்பின்மை மற்றும் குறைவடைந்து வரும் பண வீக்கம் ஆகியவற்றுடன் இந்தியா மிகச்சிறந்த தருணத்தில் இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்நிலையில் 2025 ஆம் ஆண்டில் இந்தியா நான்காவது பொருளாதார நாடாக வருவதில் எந்தவிதமான அதிசயமும் இல்லை. அத்துடன் இந்த தசாப்தத்தின் நிறைவுக்கு முன்னதாக மூன்றாவது பாரிய பொருளாதார நாடாக வருவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.

 

உலகளாவிய ரீதியில் நம்பகமான ஒரு பங்காளராக வருவதற்கான பொறுப்புணர்வின் மேம்பட்ட கடப்பாட்டுடன் இந்தியாவின் எழுச்சி இணைந்திருக்கின்றது. உலகளாவிய ரீதியில் ஒரு நம்பகமான பங்காளராக வருவதற்கான பொறுப்புணர்வின் மேம்பட்ட உணர்வினையும் கொண்டிணைந்ததாக இந்திய எழுச்சி காணப்படுகின்றது. விக்சித் பாரத் அல்லது வளர்ந்த இந்தியா என்ற இலக்கானது உலகுக்கான ஒரு நண்பன் அல்லது ஒரு விஸ்வ மித்ரா என்பவற்றுக்கான எங்களது நோக்குடன் ஒன்றிணைந்ததாகவே காணப்படுகின்றது. எங்கள் அயலுறவுக் கொள்கைகளை எடுத்துக் கொள்ளும் போது மகாசாகர் மற்றும் அயலுறவுக்கு முதலிடம் ஆகிய கொள்கைகளில் இந்த அணுகுமுறையானது பிரதிபலிக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

இந்த வெளியுறவு கொள்கை நோக்கில் இலங்கைக்கு ஒரு விசேட இடம் உள்ளது. இந்த பிரிக்க முடியாத எங்களது பிணைப்பானது எங்களின் நாகரீக தொடர்புகள் மற்றும் புவியியல் ரீதியான அமைவிடம் ஆகியவற்றினால் மேலும் வலுவூட்டப்படுகின்றது.  நாம் இன்று நம்பிக்கை நல்லெண்ணம் மற்றும் நட்புறவு ஆகியவற்றின் அபரிமிதமான மட்டங்களை அனுபவிக்கின்றோம். இது வெறுமனே எமது தலைவர்கள் இடையில் மட்டுமல்ல எங்களது மக்களிடையிலும் அவை அனுபவிக்கப்படுகின்றமையை காண முடிகின்றது. இந்தியா இலங்கை இடையிலான உறவுகள் அயலவர்கள் இடையிலான கூட்டுறவு பங்குடமைக்கான ஒரு உலகளாவிய மாதிரியாக

வளர்ந்துள்ளது. 2025 ஏப்ரலில் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி அவர்கள் இலங்கைக்கு மேற்கொண்டிருந்த விஜயம் மற்றும் அதற்கு முன்னதாக 2024 டிசம்பரில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் இந்தியாவுக்கு மேற்கொண்டிருந்த விஜயம் ஆகியவை இந்த பங்குடமைக்கான இலட்சிய வழித்தடத்தை உருவாக்கியிருந்தன.  பௌதீக, டிஜிட்டல் மற்றும் சக்தி இணைப்புகள் எங்களது பங்குடமையின் முக்கிய காரணிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.அபிவிருத்திக்கான பகிரப்பட்ட அபிலாசைகள் மற்றும் பாதுகாப்புக்கான பொதுவான அர்ப்பணிப்பு ஆகியவை முக்கிய இலக்குகளாக வளர்ந்துள்ளன.

 

இந்த பகிரப்பட்ட இலக்குகளை அடைவதற்காக கடந்த வருடம் நாம் மிகவும் கடுமையாக உழைத்துள்ளோம்.  மின் சக்தி வலையமைப்பு ஒருங்கிணைப்பு திட்டத்தில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சம்பூர் சூரிய மின்சக்தி திட்டத்தின் கட்டுமானம் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல திருகோணமலையை ஒரு எரிசக்தி கேந்திர நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கான பேச்சுகள் இந்தியா இலங்கை மற்றும் ஐக்கிய அரபு ராஜ்ஜியம் இடையில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

 

பௌதிக உட்கட்டமைப்பினை நவீன மயப்படுத்துவதற்கு இந்தியா ஆதரவு வழங்கி வருகின்றது. மாஹோ -  ஓமந்தை புகையிரத பாதையினை நவீன சமிக்ஞை முறைமையுடன் மேம்படுத்தும் திட்டம் தற்போது அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. கடந்த தசாபத்தத்திலும் அதற்கு அப்பாலும் கவனத்தில் கொள்ளும்போது 500 கிலோமீட்டர் ரயில் பாதையினை மீளமைப்பதற்கு அல்லது புனரமைப்பதற்கு இந்தியா ஆதரவு வழங்கியுள்ளது. அத்துடன் 400 கிலோமீட்டர் ரயில் பாதைகளின் சமிக்கை தொகுதிகள் பொருத்தப்பட்டுள்ளன. காங்கேசன்துறை துறைமுகத்தை மேம்படுத்தும் திட்டம் வெகு விரைவில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. அதேவேளை காங்கேசன்துறை நாகபட்டினம் இடையிலான கப்பல் சேவை தற்போது கிரமமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இராமேஸ்வரத்திற்கும் தலைமன்னாருக்கும் இடையிலான கப்பல் சேவையினை மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை நாம் தற்போது மேற்கொண்டு வருகின்றோம். விமான சேவைகளை நோக்கும்போது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கிட்டத்தட்ட 180 வாராந்த விமான சேவைகள் நடைபெறுகின்றன. யாழ்ப்பாணம் மற்றும் சென்னை இடையிலான விமான சேவைகள் நடைபெற்று வரும் நிலையில், கடந்த வருடம் முதல் யாழ்ப்பாணத்துடனான இரண்டாவது பயண இடமாக திருச்சி இணைக்கப்பட்டது. 

எமது பங்குடமையில் டிஜிட்டல் மயமாக்கலுக்கு முக்கிய இடம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையின் பிரத்தியேக டிஜிட்டல் அடையாள அட்டை திட்டம் அமுல்படுத்தலுடன் இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கல் பயணம் ஆரம்பமாக உள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு இலங்கையின் டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பின் ஒட்டுமொத்த செயற்பாடுகளை டிஜிட்டல் முறைமையூடாக ஆரம்பிக்க உதவும். நாட்டில் ரொக்கப்பணமற்ற கொடுக்கல் வாங்கல் முறைமைகளை கட்டி எழுப்புவதற்கான இலங்கையின் அபிலாசையானது இலங்கையில் UPI கொடுப்பனவு முறைமை அறிமுகம் செய்யப்பட்டதன் மூலம் ஆதரவளிக்கப்படுகின்றது.

 

எதிர்காலத்துக்கு தயாரான ஒரு பங்குடமையை உருவாக்குவதற்காக நாங்கள் பணியாற்றுகின்றோம். செயற்கை நுண்ணறிவு உட்பட தொழில்நுட்பத்தின் புதிய வடிவங்களுக்கான வாய்ப்புகளை கடந்த வருடத்தில் நாம் உருவாக்கி இருக்கின்றோம். எங்களது புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் பெரு மூலதன நிறுவனங்கள் இலங்கையில் ஒரு நவீன புத்தாக்க கட்டமைப்பினை உருவாக்குவதற்கு ஆதரவு வழங்கி வருகின்றன.

 

அது மட்டுமல்லாமல் எங்களது சிறந்த பொருளாதார ஒத்துழைப்பு தொடர்ந்து செழிப்படைந்து வருகின்றது. 2025 ஆம் ஆண்டில் இலங்கைக்கு அதிகளவான சுற்றுலா பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்திருக்கும் நிலையில் சுற்றுலா துறைக்கான பாரிய ஆதாரமாக தொடர்ந்து இந்தியா உள்ளது. அதேபோல கடந்த வருடம் இலங்கையின் ஏற்றுமதிக்கான இரண்டாவது பாரிய இடமாக இந்தியா பதிவாகியுள்ளது. இலங்கையின் பாரிய வர்த்தக பங்காளராகவும் நாம் தொடர்ந்து இருந்து வருகின்றோம். இந்திய முதலீடுகள் ஓர் அதிகரித்த செல்நெறியினை கொண்டிருக்கும் நிலையில் 2025 இல் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட மொத்த முதலீடுகளில் கிட்டத்தட்ட ஐம்பது வீதம் இந்தியாவிலிருந்து மேற்கொள்ளப்பட்டதாகும். 

அபிலாசைகளை கொண்டிருக்கும் சமூகங்களாக முழுமையானதும் சுபிட்சம் நிறைந்ததுமான ஓர் எதிர்காலத்தினை உருவாக்குவதில் ஏற்பட்டிருக்கும் எமது வெற்றியில் அபிவிருத்தி ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானதாகும். இலங்கைக்கான எமது அபிவிருத்தி ஒத்துழைப்பு 7.5  பில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்படும் நிலையில் இதில் 850 மில்லியன் பெறுமதியானவை நன்கொடை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டவையாகும். எங்கள் அபிவிருத்தி ஒத்துழைப்பு இலங்கையில் உள்ள 25 மாவட்டங்களுக்கும் விரிவடைகிறது. தேவைப்படும் தரப்பினருக்கு நலன்களை பெற்றுக் கொள்ளும் நோக்குடன் மக்களை இலக்காகக் கொண்ட திட்டங்களிலேயே நாம் பணியாற்றி வருகின்றோம். கடந்த வருடத்திற்கு மேலாக பல்வேறு துறைகளையும் சேர்ந்த இலங்கையர்களுக்காக நாம் எமது பயிற்சி மற்றும் ஆளுமை விருத்தி திட்டங்களை விஸ்தரித்துள்ளோம். பாராளுமன்ற உறுப்பினர்கள் முதல் உள்ளூராட்சி  சபைகளின் பிரதிநிதிகள் வரையிலும் சிரேஷ்ட அதிகாரிகள் முதல் கணக்காய்வாளர்கள் மற்றும் நீதித்துறை சார்ந்த அதிகாரிகள் வரையிலும், ஊடகவியலாளர்கள் முதல் கைவினைஞர்கள் மற்றும் விவசாயிகள் வரையிலும் இவ்வாறான திட்டங்கள் விஸ்தரிக்கப்பட்டிருக்கும் நிலையில் அதன் மூலம் ஒவ்வொரு துறையையும் சேர்ந்த நிபுணர்கள் நன்மையடைந்து வருகின்றனர்.

 

இந்தியா, இலங்கையின் நம்பிக்கைக்குரியதும் நம்பகமானதுமான பங்காளி என நான் அடிக்கடி கூறி வருகின்றேன். டித்வா புயல் தாக்கிய போது மீண்டும் ஒருமுறை முதற்கண் உதவி வழங்கியவர்களாக நாம் இருந்துள்ளோம். இலங்கையை புயல் தாக்க ஆரம்பித்த அதே நாளில் நாம் சாகர் பந்து நடவடிக்கையை ஆரம்பித்திருந்தோம். கொழும்புக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த ஐ என் எஸ் விக்ராந்த் மற்றும் ஐ என் எஸ் உதயகிரி ஆகிய எங்களது கடற்படை கப்பல்கள் உடனடியாகவே நிவாரண உதவிகளை வழங்கியதுடன் மீட்பு நடவடிக்கைகளுக்கும் ஆதரவளித்திருந்தன.

பின்னர் 1100 தொன்கள் அத்தியாவசிய நிவாரண பொருட்கள் எங்களால் விநியோகிக்கப்பட்டன. 14.5 தொன்கள் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உங்களால் வழங்கப்பட்டது. அத்துடன் 60 தொன்கள் சாதனங்களும் விநியோகிக்கப்பட்டன. போக்குவரத்து தொடர்புகளை மீளமைப்பதற்காக 228 தொன்கள் பெய்லி பாலங்கள் வான் மார்க்கமாக கொண்டுவரப்பட்டன. இந்திய விமான படையின் எம்ஐ 17 உலங்கு வானூர்திகள் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படை அணியினர் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டனர். கண்டியருகில் இந்திய ராணுவத்தால் அமைக்கப்பட்ட களமருத்துவனை மூலமாக கிட்டத்தட்ட 8,000 பேர் அவசர சிகிச்சை வசதிகளை பெற்றுக் கொண்டிருந்தனர். வான்மார்க்கமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்டிருந்த இரண்டு BHISHM  அவசர மருத்துவ பராமரிப்பு அலகுகள் மிக மோசமான பாதிப்புகளை எதிர்கொண்டிருந்த மாவட்டங்களில் பயன்படுத்தப்பட்டன. ஒட்டுமொத்தமாக நோக்கும் போது எமது பதிலானது துரிதமாகவும் உடனடியாகவும் பரந்தளவிலும் வழங்கப்பட்டிருந்தது. ஒரு பொறுப்புணர்வு மற்றும் சிறந்த அயலுறவின் உள்ளுணர்வு ஆகியவற்றின் வழிகாட்டலில் எந்தவித நிபந்தனைகளுமின்றி இவை முன்னெடுக்கப்பட்டன.

 

டித்வா புயலின் பின்னர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் சு. ஜெய்சங்கர் அவர்கள் பிரதமர் அவர்களின் விசேட தூதுவராக இலங்கைக்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்தார். எங்களின் கூட்டொருமைப்பாட்டினை வெளிப்படுத்துவதற்காகவும் 450 மில்லியன் அமெரிக்க டொலர் உதவி பொதியினை அறிவிப்பதற்காகவும் அந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டது. டித்வா புயலுக்கு பின்னரான காலப்பகுதியில் இலங்கையின் மீள கட்டியெழுப்புதல் முயற்சிகளுக்கு ஆதரவினை வழங்கும் வகையில் இந்த பொதி அறிவிக்கப்பட்டது. இதன்கீழ் பின்வரும் ஐந்து பரந்த துறைகள் உள்ளடங்குகின்றன.

 

·        வீதிகள்,  ரயில் பாதைகள் மற்றும் பாலங்கள் ஆகியவற்றின் மீள் நிர்மாணம் மற்றும் புனரமைப்பு.

·        வீடுகள் நிர்மாணம் மற்றும் குடிநீர் விநியோகம்

·        சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளுக்கான ஆதரவு

·        விவசாயம் மற்றும் கால்நடைகள் துறைக்கான ஆதரவு; மற்றும்

·        சிறந்த பேரிடர் மீட்பு மற்றும் தயார் நிலையினை நோக்கி செயற்படுதல்

 

இந்தப் பொதியின் பயன்பாடானது அதனை நிறைவேற்றுதல் மற்றும் அதன் தாக்கங்களில் தங்கி உள்ளது என்பதனை நாங்கள் நன்கறிவோம். இத்திட்டங்களை உரிய காலப் பகுதியில் அமல்படுத்துவதனை உறுதிப்படுத்துவதற்காக நாம் இலங்கை அரசாங்கத்துடன் மிகவும் நெருக்கமாக பணியாற்றி வருகின்றோம். இத்திட்டங்களின் அமுலாக்க பணிகள் ஏற்கனவே ஆரம்பித்திருப்பதனை நான் மகிழ்ச்சியுடன் அறிய தருகின்றேன். குறிப்பாக மிகவும் அவசர தேவைகளாக காணப்பட்ட பாலங்கள் மற்றும் புகையிரத மார்க்கங்களை மீளமைத்தல், வீடுகள் மற்றும் மருத்துவமனைகளை வேறு இடங்களில் அமைத்தல் ஆகியவை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட பணிகளாகும். எதிர்கால இயற்கை பேரிடர்களை தயார் நிலையுடன் எதிர்கொள்வதற்கான இலங்கையின் செயற்பாடுகளை மேம்படுத்தும் திட்டங்கள் குறித்த கலந்துரையாடல்கள் ஏற்கனவே நடைபெற்றுள்ளன.

புவியியல் ரீதியாக மிகவும் நெருக்கமான அமைவிடத்தினை நாம் கொண்டிருக்கும் நிலையில் பாதுகாப்பு மற்றும் பாதுகாவல் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தினை நாம் மிகைப்படுத்த முடியாது. எங்கள் அயல்பிராந்தியங்களில் பல்தேசிய குற்றவாளி அமைப்புகள் மற்றும் சட்ட விரோதமான செயல்பாடுகளை மேற்கொள்பவர்கள் மீதான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது காணப்படும் ஒத்துழைப்புகளில் இது வெளிப்படையாக உள்ளது. அதேபோல கடல் ரீதியான பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் எங்களது கூட்டு நடவடிக்கைகளிலும் இது வெளிப்பட்டுள்ளது. டித்வா புயலின் போது நாம் எதிர்கொண்டிருந்த சவால்கள் சாட்சியங்களாக காணப்படும் நிலையில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட அல்லது இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளும்போது அந்த தேவை அதிக அளவில் உணரப்பட்டது. இந்நிலையில் அவற்றுக்கான களங்கள், பயிற்சிகள் மற்றும் கூட்டு நடவடிக்கைகள் ஊடாக இலங்கையின் பாதுகாப்பினை வலுவாக்குவதிலும் இது மிக முக்கியமானதாகும். குறிப்பாக பேரிடர் தணிப்பு மற்றும் நிவாரணமும் புனர்வாழ்வும் ஆகியவற்றில் இலங்கையின்   திறன்களை கட்டி எழுப்புதல் போன்றவையும் இதில் உள்ளடங்குகின்றன.

 

எனது உரையை நான் நிறைவு செய்வதற்கு முன்னர் உங்களது இயல்பான  மக்கள் மக்கள் தொடர்புகள் குறித்து நான் கட்டாயம் குறிப்பிட்டே ஆக வேண்டும். என்னை பொறுத்தவரையில் எங்களிடையிலான உறவுகளில் இது மிகவும் விசேடமான அம்சமாகும். எங்களின் வரலாறு, மொழி, கலாச்சாரம் மற்றும் நம்பிக்கைகள் ஆகியவற்றை போலவே, கிரிக்கெட் மற்றும் உணவுகள், யோகா மற்றும் ஆயுர்வேதம், நடனம் மற்றும் இசை போன்றவற்றுக்கான எமது ஆர்வமானது பகிரப்பட்ட ஒன்றாகும். இராமாயண சுவடாக இருந்தாலும் சரி, பௌத்த மத தடங்களாக இருந்தாலும் சரி, அது நவீன காலத்தில் ஆழமடைந்து வரும் நமது புராதன தொடர்பைப் பற்றிப் பேசுகின்றது. அடுத்த மாத ஆரம்பத்தில், கங்காராமை விகாரையில் புத்த பெருமானின் தேவ்னி மோரி சின்னங்கள் தரிசனத்துக்காக காட்சிப்படுத்தப்படும்போது, பல நூற்றாண்டுகளாகப் பரிமாற்றங்கள் மற்றும் தொடர்புகள் மூலம் கட்டமைக்கப்பட்ட நமது உறவின் இந்த தனித்துவமான தன்மையை அது மீள உறுதிப்படுத்தும். இது நமது உறவுகளை ஏனையவற்றைப் போலல்லாமல் பிரத்தியேகமான ஒன்றாக உருவாகின்றது. பொதுவான சுபீட்சம் மற்றும் நல்வாழ்வின் எதிர்காலத்தை உருவாக்க நமது வரலாற்றின் இந்த செல்நெறியுடன் இணைந்து பணியாற்ற ஒப்புக்கொள்வோம். இந்த கூட்டு முயற்சியில் உங்கள் ஆதரவையும் ஒத்துழைப்பையும் நான் எதிர்பார்க்கிறேன்.

 

ஜெய்ஹிந்த். ஜெய் இந்தியா இலங்கை மைத்ரி!

நன்றி. பஹுத் பஹுத் தன்யாவத். நன்றி . போஹமஸ் துதி இவ்வாறு
மேலும் உரையாற்றினார்.

https://www.virakesari.lk/article/237088

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.