Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் பகுதியில் அமைய உள்ள கிவுல் ஓயா நீர்த்தேக்க திட்டத்துக்கு தமிழர்கள் எதிர்ப்பு ஏன்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் பகுதியில் அமைய உள்ள நீர்த்தேக்க திட்டத்துக்கு தமிழர்கள் எதிர்ப்பு ஏன்?

தமிழர் பகுதியில் கொண்டு வரும் நீர்த்தேக்க திட்டத்திற்கு தமிழர்கள் எதிர்ப்பு ஏன்?

கட்டுரை தகவல்

  • ரஞ்சன் அருண் பிரசாத்

  • பிபிசி தமிழுக்காக

  • 6 பிப்ரவரி 2026

வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் அமைக்கப்படவுள்ள உத்தேச கிவுல் ஓயா நீர்பாசனத் திட்டத்திற்கு தமிழர்கள் பாரிய எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

கிவுல் ஓயா நீர்த்தேக்க திட்டத்தை கைவிடுமாறு கோரி, வவுனியாவில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றும் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், தொடர்ச்சியாக பல்வேறு வகையிலும் தமது எதிர்ப்புக்களை தமிழர்கள் வெளியிட்டு வருகின்றனர்.

வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பாலான தமிழ் கட்சிகள் இந்த திட்டத்திற்கு தமது எதிர்ப்புக்களை பதிவு செய்து வருவதை அவதானிக்க முடிகின்றது.

தமிழர் பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த திட்டத்திற்கு தமிழர்களே ஏன் எதிர்ப்பை வெளியிடுகின்றனர்?

கிவுல் ஓயா திட்டம்

கிவுல் ஓயா திட்டம்

வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலுள்ள காணிகளில் 1983ம் ஆண்டு குடியமர்த்தப்பட்ட சிங்கள மக்களுக்கான நீர் தேவையை பூர்த்தி செய்வதற்கு உருவாக்கப்பட்ட திட்டமே இந்த கிவுல் ஓயா திட்டம் என தமிழர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.

குறித்த பகுதிகளில் வாழும் சிங்கள மக்களினால் செய்கை செய்யப்பட்டுள்ள விவசாய நிலங்களுக்கும், அவர்களின் அன்றாட நடவடிக்கைகளுக்கும் தேவையான நீர் இந்த திட்டத்தின் ஊடாக வழங்கப்படவுள்ளது என தமிழர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.

2011ம் ஆண்டு கிவுல் ஓயா திட்டத்திற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்ட போதிலும், பல்வேறு காரணங்களினால் இந்த திட்டத்தின் பணியை முன்னெடுக்க முடியவில்லை.

இந்த நிலையிலேயே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், இந்த திட்டத்தை அமலுக்கு கொண்டு வர தீர்மானித்துள்ளது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

இதன்படி, 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் 19ம் தேதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த திட்டத்திற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முன்மொழியப்பட்ட இந்தத் திட்டம், வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள மா ஓயாவின் முக்கிய துணை நதியான கிவுல் ஓயாவை குறுக்காக அணை அமைத்து கிவுல் ஓயா நீர்த்தேக்கத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம், 1,700 ஹெக்டேர் புதிய நிலங்களில் விவசாயம் செய்ய நீர் வழங்கப்படுவதுடன், ஏற்கனவே உள்ள 700 ஹெக்டேர் நிலங்களின் பயிர்செய்கை திறனையும் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கிவுல் ஓயா தொடர்பான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம்

படக்குறிப்பு,இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம்

எதிர்ப்பில் ஈடுபடுவோர் என்ன சொல்கின்றார்கள்?

பாரம்பரியமாக வாழ்ந்த தமிழர்களுக்கு விடுவிக்க முடியாத காணிகளை, சிங்கள மக்களின் நீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அமைக்கப்படுகின்ற கிவுல் ஓயா திட்டத்திற்கு விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம் பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றார்.

''நாங்கள் இலங்கையின் உலர் வலயத்தில் வாழ்கின்ற மக்கள். வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் நீர்த்தேவை என்பது விவசாய தேவைக்கும், அன்றாட ஜீவனோபத்திற்கும் முக்கியமானது. இந்த நீர்த்தேவை தனியே குடியேற்றப்பட்ட மக்களுக்கு மாத்திரம் இல்லை. அந்த குடியேற்றப்பட்ட மக்கள் என்பது இந்த வன்னி தேர்தல் மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் சிறிய மக்கள். அவர்களுக்கு இருக்கின்ற அதே தேவை, மகாவலி எல் வலயத்திற்கு வெளியிலுள்ள மக்களுக்கும் இருக்கின்றது.'' என்றார் பத்மநாதன் சத்தியலிங்கம்

''அந்த குறிப்பிட்ட மக்களுக்கு மாத்திரம் இந்த திட்டத்தை செய்கின்றார்கள். ஏனைய மக்கள் கைவிடப்பட்ட மக்களாகவே இப்போதும் இருக்கின்றார்கள். யுத்தம் இடம்பெற்ற பகுதியில் பலர் மீள்குடியேறியுள்ளனர். அவர்கள் வாழ்ந்த பாரம்பரிய பூமி இன்று காடாகியிருக்கின்றது. 2014ம் ஆண்டு இருந்த அரசாங்கம் கூகுள் வரைப்படத்தில் எங்கேங்கெல்லாம் பச்சை நிறமாக இருந்ததோ, அந்த நிலங்களை வனவல திணைக்களத்திற்கு சொந்தமானது என விசேட வர்த்தமானியூடாக அறிவித்திருந்தது.'' என்றார் அவர்

''அப்படி அறிவித்த அந்த பிரதேசத்திற்குள் தமிழ் மக்கள் வாழ்ந்த கிராமங்கள், அவர்கள் பயிர் செய்த நீர்பாசன குளங்கள், வயல்கள் எல்லாம் அதற்குள் உள்ளடங்கப்பட்டுள்ளது. இந்த பிரதேசத்திற்குள் மீள்குடியேற வந்த மக்களை அந்த வர்த்தமானியை காட்டி இன்று வரை அவர்களுக்கு அனுமதி வழங்கவில்லை.

இந்த இடத்தை விடுவிக்க நாங்கள் அரசாங்கத்திடம் பல தடவைகள் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தோம். அதை விடுவிக்க மறுப்பு தெரிவிக்கவில்லை. விடுவிப்போம் என்று சொல்கின்றார்கள். ஆனால் குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் அறிக்கை தருகின்றார்கள்.''

''பாரம்பரியமாக வாழ்ந்த தமிழ் மக்களை குடியேற விடாத அரசாங்கம், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காட்டை கிவுல் ஒயா திட்டத்திற்காக விடுவித்திருக்கின்றார்கள்'' என பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவிக்கின்றார்.

தமிழர் பகுதியில் கொண்டு வரும் நீர்த்தேக்க திட்டத்திற்கு தமிழர்கள் எதிர்ப்பு ஏன்?

சிங்கள குடியேற்றமா?

புதிய சிங்கள குடியேற்றங்களை மீண்டும் கொண்டு வந்து, தமிழர் பகுதிகளில் குடியமர்த்தும் திட்டத்தை இந்த அரசாங்கமும் முன்னெடுக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம் குறிப்பிடுகின்றார்.

''1983ம் ஆண்டு செய்ததை போல அல்லது மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சி காலத்தில் வேறு மாகாணங்களிலிருந்து பெருந்தொகையான சிங்கள மக்களை கொண்டு வந்து குடியேற்றியதை போல இந்த அரசாங்கமும் பெரும்பான்மை சிங்கள மக்களை குடியேற்ற போகின்றார்களா? என்ற சந்தேகம் வருகின்றது'' என்றார் அவர்.

வவுனியா வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் கிருஸ்ணவேணி திருநாவுகரசு

படக்குறிப்பு,வவுனியா வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் கிருஸ்ணவேணி திருநாவுகரசு

கிவுல் ஓயா திட்டத்தின் ஊடாக தமிழர் பிரதேசத்தின் இனப்பரம்பலை மாற்றியமைக்கும் முயற்சியை அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டும் என வவுனியா வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் கிருஸ்ணவேணி திருநாவுகரசு கோரிக்கை விடுக்கின்றார்.

''வவுனியா வடக்கு பிரதேசமானது, தமிழர்களின் பூர்வீக பிரதேசமாக காணப்படுகின்றது. எங்களுடைய இந்த பூர்வீக பிரதேசத்தில் சிங்கள மயமாக்குவதற்கான, அதாவது எங்களுடைய பிரதேசத்தில் இன பரம்பலை மாற்றியமைப்பதற்கான அந்த வேலைத்திட்டங்களை இந்த அரசாங்கம் செய்கின்றது என்பது எங்களுக்கு தெட்ட தெளிவாக தெரிகின்றது.'' என்றார் அவர்

''இவ்வாறான திட்டங்களை இந்த அரசாங்கம் நிறுத்த வேண்டும்.'' என அவர் குறிப்பிடுகின்றார்.

முல்லைத்தீவு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன்

படக்குறிப்பு,முல்லைத்தீவு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன்

அபிவிருத்தி என்ற அரசாங்கத்தின் செயற்பாடுகளை ஏற்றுக்கொள்கின்ற போதிலும், அபிவிருத்தி என்ற பெயரில் தமிழர்களின் இருப்பில் கை வைக்க முயற்சிப்பார்களாயின் அதற்கு தாம் எதிர்ப்பை வெளியிடுவதாக முல்லைத்தீவு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தெரிவிக்கின்றார்.

''சிங்கள மக்களுக்கு நாங்கள் எதிர் அல்ல. சிங்கள குடியேற்றங்களை இனவாதிகள் கொண்டுவர முயற்சிப்பதற்குதான் நாங்கள் எதிர்க்கின்றோம். வவுனியா வடக்கில் அரைவாசிக்கு மேல் சிங்கள குடியேற்றங்கள் வந்து விட்டன. அபிவிருத்தி திட்டமா? சிங்கள குடியேற்றமா?'' என கேள்வி எழுப்புகிறார் அவர்.

சமூக செயற்பாட்டாளர் மாணிக்கம் ஜெகன்

படக்குறிப்பு,சமூக செயற்பாட்டாளர் மாணிக்கம் ஜெகன்

யானை மனித மோதல்

காடுகள் அழிக்கப்பட்டு இந்த திட்டம் அமல்படுத்தப்படும் பட்சத்தில், யானை மனித மோதல் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக செயற்பாட்டாளர் மாணிக்கம் ஜெகன் குறிப்பிடுகின்றார்.

''எங்களுடைய காடுகள் அழிக்கப்படுகின்றன. இந்த காடுகள் அழிக்கப்படுகின்றமையினால் மனித யானை மோதல்கள் இன்னும் அதிகமான இருக்கும். இன்றும் கூட அடிக்கடி யானைகளினால் மனிதர்களின் உயிர்கள் வன்னி பகுதிகளில் இழக்கப்படுகின்றன. இது இன்னும் அதிகரித்து செல்லும் என்ற பயம் இருக்கின்றது.'' என அவர் குறிப்பிடுகின்றார்.

அரசாங்கம் என்ன கூறுகின்றது?

''கிவுல் ஓயா திட்டமானது, இன மற்றும் மத அடிப்படையிலான நோக்கங்களை கொண்டது என கூறப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது'' என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவிக்கின்றார்.

தமிழ் மக்களின் நில உரிமைகளும், சமூக உரிமைகளும் முழுமையாகப் பாதுகாக்கப்படும். எந்த ஒரு சமூகமும் அநீதிக்குள்ளாக்கப்பட அனுமதிக்கப்படமாட்டாது. சட்டத்துக்கு முரணான நில கையகப்படுத்தல்கள் எதுவும் இடம்பெறாது, திட்டம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் உரிய சட்ட நடைமுறைகளின் கீழே மேற்கொள்ளப்படும்'' அவர் தெரிவித்தார்.

மேலும், கிவுல் ஓயா திட்டத்தின் மூலம் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாய உற்பத்தி அதிகரிக்கப்படுவதோடு, ஆயிரக்கணக்கான விவசாயக் குடும்பங்களுக்கு நிலையான நீர்ப்பாசன வசதி கிடைக்கும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த திட்டத்தை இன அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்காமல், நாட்டின் நீண்டகால அபிவிருத்தித் தேவையாகக் கருதி அணுக வேண்டும் என்று அவர் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cqxyxwlplrxo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.