Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'நிறுத்தி' பந்து வீசும் பாகிஸ்தான் வீரர் பற்றி விவாதம் - இந்தியாவுக்கு எதிராக துருப்புச் சீட்டாக இருப்பாரா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'நிறுத்தி' பந்து வீசும் பாகிஸ்தான் வீரர் பற்றி விவாதம் - இந்தியாவுக்கு எதிராக துருப்புச் சீட்டாக இருப்பாரா?

அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் உஸ்மான் தாரிக் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி நான்கு ஓவர்களில் 27 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,உஸ்மான் தாரிக்

2 மணி நேரங்களுக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

'அவர் என்ன செய்தார் என்பதை இந்தியாவால் கூட புரிந்துகொள்ள முடியாது.'

'இது இந்தியாவுக்கு எதிரான துருப்புச் சீட்டாக இருக்கும்.'

பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா இடையிலான டி20 உலகக் கோப்பை போட்டியின் போது, இந்தியத் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் போட்டி குறித்த நிகழ்ச்சியில் இப்படி பேசப்பட்டது. இந்த விவாதம், பாகிஸ்தான் பந்துவீச்சாளர் உஸ்மான் தாரிக்கை பற்றியது. இவருடைய தனித்துவமான பந்துவீச்சு முறை இதற்கு முன்பே விவாதத்திற்குள்ளாகியுள்ளது.

கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற போட்டியில் அமெரிக்காவை 32 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி தோற்கடித்தது. இந்தப் போட்டியில் உஸ்மான் தாரிக் நான்கு ஓவர்களில் 27 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அந்தப் போட்டியின் காட்சிகள் இந்தியாவில் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவின.

அதனைத் தொடர்ந்து, உஸ்மான் தாரிக்கின் பந்துவீச்சு முறை குறித்து சில சமூக ஊடகப் பயனர்கள் கேள்வி எழுப்பினர்.

உஸ்மான் ஓடிவந்து நிறுத்தி பின்பு பந்து வீசும் விதம், விதிகளின்படி ஏற்றுக்கொள்ளத்தக்கதா என்றும் மற்றவர்கள் கேள்வி எழுப்பினர்.

இருப்பினும் இந்த முழு விவாதத்திற்கும் மத்தியில், இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், உஸ்மான் தாரிக்குக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.

அஸ்வின், உஸ்மான் தாரிக்கை ஆதரித்துள்ளார்.

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,அஸ்வின், உஸ்மான் தாரிக்கை ஆதரித்துள்ளார்.

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் என்ன சொல்கிறார்கள்?

ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி என்ற சமூக வலைதள பயனர், உஸ்மானின் பந்துவீச்சில் அமெரிக்க பேட்ஸ்மேன் ஒருவர் ஆட்டமிழக்கும் வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில், உஸ்மான் பந்தை வீசுவதற்கு முன்பு ஒரு கணம் நிற்பது காணப்படுகிறது.

''ஆக்ஷன் ஒகே. ஆனால் நிறுத்துவது? அதுவும் பந்தை வீச வேண்டிய தருணத்தில் அவ்வாறு செய்வதா? இதை தொடரக்கூடாது'' என்று அந்த வீடியோ குறித்து ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி பதிவிட்டுள்ளார்.

ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமியின் பதிவை மறுப்பதிவிட்டு எழுதிய அஸ்வின்,'' ''ஒரு பேட்ஸ்மேன் எந்த பக்கத்தில் வேண்டுமானாலும் நின்று அடிக்கலாம். இப்படி செய்வதற்கு முன்பு அம்பையரிடமோ, பந்துவீச்சாளரிடமோ சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், ஒரு பந்துவீச்சாளர் விஷயத்தில் மட்டும் விதி கடுமையாக இருக்கிறது. அம்பையரிடம் சொல்லாமல் நடுவில் கையை மாற்றி பந்து வீசக் கூடாது. இந்த விதிதான் முதலில் மாற்றப்பட வேண்டும்," என்று எழுதியுள்ளார்.

உஸ்மான் தாரிக்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,உஸ்மான் தாரிக்

இதற்கிடையில், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா ஒரு வீடியோவில், பாகிஸ்தானின் சுழற்பந்து வீச்சு வலிமையானது என்று விவரித்ததுடன், உஸ்மான் தாரிக்கின் பந்துவீச்சு முறை சுவாரஸ்யமானது என்று கூறியுள்ளார்.

"உஸ்மானின் பந்துவீச்சு முறை சுவாரஸ்யமானது. நீங்கள் டிவி பார்த்துக் கொண்டிருக்கும்போது திடீரென்று யாரோ ஒருவர் நிறுத்துவது போல் இது உணர்வைத் தருகிறது. அவர் நிறுத்திவிட்டு பின்னர் பந்து வீசுகிறார். அதேபோல் மெதுவாகப் பந்து வீசுகிறார். இதில் எந்தப் பிரச்னையும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. இது சரியானதுதான். நீங்கள் நிறுத்தி பந்து வீசலாம். அதைப் பற்றி எந்த விதியும் இல்லை. மேலும் அவர் வீசும் மெதுவான பந்துகளில் கூட, முழங்கை மடங்குவது இல்லை," என்றார்.

ஆனால், கையை வளைக்காமல் பந்தின் வேகத்தை 20 முதல் 25 கிலோமீட்டர் வரை அதிகரிக்க முடியுமா என்ற கேள்வியையும் ஆகாஷ் சோப்ரா எழுப்பினார்.

இந்த விவாதம் தீவிரமடைந்த நிலையில், அஸ்வின் எக்ஸ் தளத்தில் மற்றொரு நீண்ட கருத்தைப் பதிவிட்டார்.

அதில் அவர், "முதலில், பந்துவீச்சு முறை சரியா இல்லையா என்பதை ஐசிசி பந்துவீச்சு சோதனை மையத்தில் மட்டுமே சோதிக்க முடியும்," என்று கூறினார்.

"இரண்டாவதாக, 15-டிகிரி விதி உள்ளது. அதன்படி, பந்துவீச்சாளர் தனது முழங்கையை 15 டிகிரி வரை நேராக்கலாம். மேலும், பந்துவீச்சாளர் 15 டிகிரியில் பந்து வீசுகிறாரா இல்லையா என்பதை மைதானத்தில் இருக்கும் நடுவர் தீர்மானிப்பது சாத்தியமற்றது."

மேலும், "இதற்கு ஒரே தீர்வு, போட்டி நடக்கும் நேரத்திலேயே சோதனை கருவியை அறிமுகப்படுத்துவதுதான். இது ஒரு தெளிவற்ற விஷயம், இந்தத் தெளிவற்ற விஷயத்தைப் பயன்படுத்தி யாரோ ஒருவர் ஆதாயம் அடைகிறார்கள் என்று குற்றம் சாட்டுவது தவறு.

கிரீஸுக்குள் பந்து வீசும்போது நிறுத்துவது சட்டப்பூர்வமானதா இல்லையா என்ற கேள்வியைப் பொறுத்தவரை, அது அவருடைய வழக்கமான பந்துவீச்சு முறை என்பதால் அது முற்றிலும் சட்டப்பூர்வமானது என்றே நான் நம்புகிறேன்," என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உஸ்மானின் இந்த பந்து வீச்சு பாகிஸ்தானுக்கு மிகவும் முக்கியமானது என்று மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இயன் பிஷப் வர்ணித்துள்ளார்.

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,இயன் பிஷப்

உஸ்மான் தாரிக் தனது பந்துவீச்சு பற்றி கூறியது என்ன?

சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு, உஸ்மான் தாரிக் அளித்த பேட்டி ஒன்றில், தனது பந்துவீச்சு முறை சாதாரணமாகத் தெரிவதில்லை, ஏனெனில் தனக்கு 'இரண்டு முழங்கைகள்' உள்ளன என்று கூறியிருந்தார்.

தனது பந்துவீச்சு முறை குறித்து ஆட்சேபனைகள் எழுப்பப்பட்டபோது, தான் மருத்துவரிடம் சென்று தனது இரு கைகளையும் பரிசோதித்ததாக அவர் கூறினார்.

அவரது உடல் அமைப்பு ஒரு சாதாரண மனிதரிடமிருந்து வேறுபட்டது என்கிறார் உஸ்மான் தாரிக்.

மேலும், "இது பிறப்பிலிருந்தே இருக்கிறது, இரண்டு முழங்கைகள் இருப்பதால், என்னால் என் கைகளை நேராக்க முடியாது," என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், கடந்த ஆண்டு மே 7-ம் தேதி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிக்கையில், உஸ்மான் தாரிக் லாகூரில் உள்ள பயோமெக்கானிக்ஸ் ஆய்வகத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார் என்றும், அங்கு அவரது பந்துவீச்சு முறை அங்கீகரிக்கப்பட்டது என்றும் தெரிவித்தது.

தாரிக் பந்து வீச்சு தொடர்பான அடுத்தடுத்த சோதனைகளில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,தாரிக் பந்து வீச்சு தொடர்பான அடுத்தடுத்த சோதனைகளில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

பேட்ஸ்மேன்களுக்கு இந்த ஆட்டம் எவ்வளவு ஆபத்தானது?

அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்ற பிறகு ஈஎஸ்பிஎன் (ESPN) தளத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது, மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான இயன் பிஷப், உஸ்மான் தாரிக்கின் பந்துவீச்சு முறை குறித்து பேசினார்.

"அவர் வெவ்வேறு கோணங்களில் பந்து வீசுகிறார். அவர் ரவுண்ட் ஆர்ம் முறையிலும், பின்னர் ஓவர் தி டாப் முறையிலும் வீசுகிறார். இது உங்களுக்கு வெவ்வேறு அளவிலான பவுன்ஸ்களை வழங்குகிறது. ஆனால் அதைவிட முக்கியமாக, அவர் பந்து வீசுவதற்கு முன்பு நிறுத்தி, பேட்ஸ்மேன் எங்கே நகரக்கூடும் அல்லது அவர் என்ன ஷாட் ஆடக்கூடும் என்பதைப் பார்க்க அவருடைய கால்களைக் கவனிக்கிறார். பின்னர் அவர் பந்தை வீசும்போது, அது பேட்ஸ்மேனின் செயல்பாட்டைத் தடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது," என்றார்.

அந்தச் சிறிய நிறுத்தம் தான் பந்துவீச்சாளருக்கு பேட்ஸ்மேனை விட முன்னிலை கொடுக்கிறது என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சபா கரீம் அதே விவாதத்தில் கூறினார்.

"ஏனெனில், இது அவருக்கு வெவ்வேறு மாற்றங்களை முயற்சிப்பதற்கான சுதந்திரத்தை அளிக்கிறது. கடந்த சில போட்டிகளில் நாம் பார்த்தது என்னவென்றால், அவர் (உஸ்மான்) சிறந்த மற்றும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களைக் கூட ஆட்டமிழக்கச் செய்வதில் வெற்றி பெற்றுள்ளார். இந்த உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு அவரது தனித்துவமான பந்துவீச்சு முறை மிகவும் முக்கியமானதாக அமையலாம்," என்றார்.

விதிகள் என்ன?

இதுகுறித்த அம்சங்களைப் புரிந்துகொள்வதற்காக, லாகூர் மேலாண்மை அறிவியல் பல்கலைக்கழகத்தின் பயோமெக்கானிக்ஸ் நிபுணர் பேராசிரியர் முகமது ஓவைஸுடன் பிபிசி உருது பேசியது.

கடந்த காலங்களில், பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு முறையைச் சோதிப்பதற்காகப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பேராசிரியர் ஓவைஸைப் பணியமர்த்தியுள்ளது.

"பந்து வீசும்போது நிறுத்துவதைப் பொறுத்தவரை, அதில் எந்தப் பிரச்னையும் இல்லை, பந்து வீசும்போது முழங்கை கோணத்தின் மாற்றம் 15 டிகிரிக்கு மேல் இருக்கக்கூடாது. முழங்கையில் ஏற்படும் மாற்றம் 15 டிகிரி அல்லது அதற்குக் குறைவாக இருந்தால், அந்தப் பந்து செல்லுபடியாகும் எனக் கருதப்படும்," என்றார்.

"ஒரு பந்துவீச்சாளர் நிறுத்தி பந்து வீசினால், அப்போதும் அதே விதிகள் பொருந்தும் என்பது உறுதி. ஐ.சி.சி விதிகளில் நிறுத்தி பந்து வீசுவது குறித்து எந்த விதிமுறையும் இல்லை, 15 டிகிரி சாய்வு பற்றி மட்டுமே பேசுகிறது," என்றார்.

"சில நேரங்களில் ஒரு பந்துவீச்சாளரின் கை அமைப்பு இயற்கையாகவே அதிக நெகிழ்வுத்தன்மையைக் கொண்டிருக்கும். எனவே, வெறும் கண்ணால் பார்க்கும்போது, பந்துவீச்சாளர் பந்தை எறிகிறார் , அதாவது தவறான முறையில் பந்து வீசுகிறார் என்று தோன்றலாம். இருப்பினும், ஐ.சி.சி கேமராக்கள் மூலம் அளவிடப்பட்டு ஆய்வு செய்யப்படும்போது, அது 'சக்கிங்' வகையின் கீழ் வராது. அந்தச் சோதனையில் பந்துவீச்சாளர் தவறாக வீசுவது நிரூபிக்கப்படாமல் போக முற்றிலும் வாய்ப்புள்ளது," என்றார்.

உஸ்மான் தாரிக்கின் பின்னணி

ஈஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ தகவலின்படி, உஸ்மான் தாரிக் நவம்பர் 2023-இல் பாகிஸ்தான் தேசிய டி20 கோப்பை போட்டியில் அறிமுகமானார். அவர் 2024-இல் பிஎஸ்எல் தொடரிலும் பங்கேற்றார், ஆனால் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

ஆனால், 2024-25 காலப்பகுதியில், அவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பான முறையில் மீண்டும் விளையாடத் தொடங்கி, 15 போட்டிகளில் 22 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இருப்பினும், இந்தக் காலக்கட்டத்தில் அவரது பந்துவீச்சு முறை குறித்து இரண்டு புகார்கள் வந்தன. முதல் முறை 2024 பிஎஸ்எல் தொடரின் போது புகார் எழுந்தது.

ஆனால், லாகூர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் நடத்தப்பட்ட சோதனைக்குப் பிறகு, அவர் தேர்ச்சி பெற்றார் மற்றும் அவரது பந்துவீச்சு தொடர்ந்தது.

அடுத்த பிஎஸ்எல் தொடரிலும் அவர் மீது மீண்டும் ஒரு புகார் அளிக்கப்பட்டது, ஆனால் அதைத் தொடர்ந்து நடந்த விசாரணையிலும் அவர் தேர்ச்சி பெற்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c626jnllrn5o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் வீரர் உஸ்மான் தாரிக்கை சமாளிக்க இந்தியா செய்ய வேண்டிய 'ஒரு விஷயம்' என்ன?

பாகிஸ்தான் வீரர் உஸ்மான் தாரிக்கை சமாளிக்க இந்தியா செய்ய வேண்டிய 'ஒரு விஷயம்' என்ன?

பட மூலாதாரம்,Getty Images

கட்டுரை தகவல்

  • வித்யுத் சிவராமகிருஷ்ணன்

  • முன்னாள் கிரிக்கெட் வீரர்

  • 14 பிப்ரவரி 2026, 12:17 GMT

    புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த 2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடக்கப்போகிறது.

இரண்டு அணிகளும் தங்களது முதல் இரு போட்டிகளையும் வென்று நம்பிக்கையோடு களமிறங்குவதால் நிச்சயம் ஒரு பரபரப்பான போட்டியை இவ்விரு அணிகளும் அரங்கேற்றலாம்.

எந்தவொரு இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலும் இரு அணிகளுக்குமே நிச்சயம் மிகப் பெரிய நெருக்கடி இருக்கும்.

உலகக் கோப்பை அரங்கில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியிருக்கிறது. இம்முறையும் இந்திய அணியின் கையே ஓங்கியிருக்கும் என்று நான் நினைக்கிறேன். இந்திய அணிக்கு அனைத்து ஏரியாவுமே முழுமையாக இருக்கிறது.

அதேசமயம் 'இழப்பதற்கு ஒன்றும் இல்லை' என்ற மனநிலையில் பாகிஸ்தான் அணி ஆடும்பட்சத்தில் அவர்களுக்கும் ஒரு நல்ல வாய்ப்பு அமையக்கூடும். அந்த அணியிலும் இளமையான, பயமற்ற வீரர்கள் இருக்கிறார்கள்.

பொதுவாக இலங்கை ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமாக இருக்கும். இதுவுமே இந்தப் போட்டியின் முடிவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

இந்தியா கவனம் செலுத்தவேண்டிய இடங்கள்

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணி இரண்டு போட்டிகளையும் வென்று இந்தத் தொடரைத் தொடங்கியிருக்கிறது. இருந்தாலும், ஒருசில விஷயங்களில் அவர்கள் கவனம் செலுத்தவேண்டும்.

இந்திய அணி மிகவும் அதிரடியாக ஆட நினைக்கிறது. அது அவர்களுக்கு சற்று பிரச்னைக்குரிய விஷயமாக மாறலாம். கடந்த இரண்டு போட்டிகளிலும் சில தருணங்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இந்திய அணி இழந்திருந்தது. அதனால், அவர்கள் சற்று கவனமாக இந்தப் போட்டியைக் கையாளவேண்டும்.

அதேபோல், ஃபினிஷிங்கில் அவர்கள் சற்று கவனம் செலுத்தவேண்டும். அங்கு பிரச்னை இருப்பதாகச் சொல்லமாட்டேன். அதேசமயம், அவர்கள் முழுமையன ஒரு செயல்பாட்டைக் கொடுக்கவில்லை.

ஷிவம் துபே, அக்‌ஷர் பட்டேல், ரிங்கு சிங் ஆகியோர் கடைசி கட்டத்தில் என்ன செய்வார்கள் என்பது தெரியும். ஆனால், இந்த இரு போட்டிகளில் அவர்கள் அதை இன்னும் செய்யவில்லை.

ஒருவகையில் இது நல்லது தான் என்று நினைக்கிறேன். ஏனெனில், போகப் போக தொடரின் முக்கியமான தருணத்தில் அவர்கள் தங்களின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடும்.

கடைசி 5-6 ஓவர்களில் நெருக்கடியை சமாளித்து விளையாடுவது என்பது ஒரு கலை. அதை கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணி சிறப்பாகச் செய்திருக்கிறது. இந்த உலகக் கோப்பையிலும் அதை அவர்கள் செய்யத் தொடங்கவேண்டும்.

பொதுவாக இந்திய வீரர்கள் பந்தின் வேகத்தை நன்கு பயன்படுத்திக்கொண்டு ஆடும் திறன் பெற்றவர்கள். ஆனால், நமீபிய வேகப் பந்துவீச்சாளர்கள் மெதுவாகப் பந்துவீசி சவால் கொடுத்திருந்தனர்.

இந்திய பேட்டர்கள் அதற்குத் தகவமைத்துக்கொள்ளத் தவறவிட்டார்கள். பாகிஸ்தானுக்கு எதிராக இது நிகழாமல் பார்த்துக்கொள்வது அவசியம்.

இந்த உலகக் கோப்பையில் 20 பந்துகளை சந்தித்திருக்கும் ரிங்கு சிங் 7 ரன்கள் மட்டுமே அடித்திருக்கிறார்.

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ரிங்கு சிங்

அபிஷேக் இல்லாவிட்டால்..

இந்திய அதிரடி தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா உடல்நிலை பாதிப்பு காரணமாக நமீபியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடவில்லை. அவர் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா என்பது இன்னும் சந்தேகமாகவே உள்ளது.

ஒருவேளை இந்தப் போட்டியிலும் அபிஷேக் ஷர்மா ஆடவில்லை என்றால் இந்திய அணிக்கு அது மிகப் பெரிய இழப்பாக இருக்கும்.

ஆரம்பம் முதலே எதிரணி பந்துவீச்சாளர்கள் மீதும், எதிரணி மீதும் அவர் நெருக்கடியை ஏற்படுத்துவார். அந்த அதிரடியைப் பவர்பிளேவுக்குப் பின்பும் தொடர்கிறார். மிகவும் எளிதாக சிக்ஸர்கள் அடிக்கிறார். அவர் ஆடாமல் போனால் அது நிச்சயம் இந்திய அணிக்குப் பின்னடைவாக அமையும்.

மேலும், அது பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கும் சற்று நம்பிக்கையைக் கொடுக்கும். ஏனெனில் அவர் ஓப்பன்னிங்கில் ஆடும்போது 6 ஓவர்களில் 70-80 ரன்கள் வரை வந்துவிடும். அதனால், அவர் இல்லையெனில் அது பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

ஆசிய கோப்பை போட்டிகளில் அபிஷேக்கின் அதிரடி பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு பெரும் தலைவலியாக இருந்தது.

அதேசமயம் நமீபியாவுக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடி 8 பந்துகளில் 22 ரன்கள் அடித்தார் சஞ்சு சாம்சன். அவர், அபிஷேக் இடத்தை அவர் ஓரளவு நிரப்புவார் என்றாலும், இடது கை வீரர் அபிஷேக் ஏற்படுத்தக்கூடிய உளவியல் தாக்கத்தை இந்தியா தவறவிடும்.

நமீபியாவுக்கு எதிரான போட்டியில் அபிஷேக் ஷர்மா விளையாடவில்லை

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,நமீபியாவுக்கு எதிரான போட்டியில் அபிஷேக் ஷர்மா விளையாடவில்லை

பாகிஸ்தான் ஆச்சர்யம் ஏற்படுத்தலாம்

பாகிஸ்தான் ஒரு நல்ல அணி. அவர்களைக் குறைத்து மதிப்பிடவே முடியாது. முதல் போட்டியில் சேஸிங்கின்போது சற்று தடுமாறியிருந்தாலும், அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் அவர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள்.

கடந்த 10 ஆண்டுகளில் அவர்கள் கணிக்க முடியாத ஒரு அணியாக இருந்திருக்கிறார்கள். எப்போது சிறப்பாக ஆடுவார்கள், எப்போது சொதப்புவார்கள் என்று சொல்ல முடியாது. அதனால் அந்த ஆச்சரியமளிக்கும் தன்மை ('surprise element') அந்த அணியிடம் எப்போதுமே இருக்கும்.

சாஹிப்சாதா ஃபரான் மிகச் சிறந்த ஃபார்மில் இருக்கிறார். பவர்பிளேவில் அதிரடியாக ரன் குவிக்கிறார். ஆரம்பத்தில் எதிரணி பந்துவீச்சாளர்கள் மீது அவர் நெருக்கடியை ஏற்படுத்துகிறார். அதை ஆசிய கோப்பையின்போதும் பார்த்தோம். அது அந்த அணிக்கு மிகவும் சாதகமான விஷயம்.

அதேசமயம் முதலில் பேட்டிங் செய்யும் அணி அதிக ரன்கள் எடுத்துவிட்டால், சேஸ் செய்வது பாகிஸ்தானுக்கு எளிதாக இருப்பதில்லை. இந்த இடத்தில் தான் பாபர் ஆசம் முக்கியத்துவம் பெறுவார். அவர் சமீபத்தில் அவ்வளவு சிறப்பான ஃபார்மில் இல்லை. அவர் அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதுவும் அவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும்.

அமெரிக்காவுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் உஸ்மான் தாரிக் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,அமெரிக்காவுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் உஸ்மான் தாரிக் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்

உஸ்மான் தாரிக் இந்தியாவுக்கு சவாலா?

இந்த உலகக் கோப்பை தொடங்கப்பட்டதில் இருந்தே பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் உஸ்மான் தாரிக் பெரும் பேசுபொருளாக இருந்து வருகிறார். அவரது 'பௌலிங் ஆக்‌ஷன்' பற்றி நிறைய கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கின்றன. நிறைய விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

என்னைப் பொறுத்தவரை உஸ்மான் தாரிக்கின் 'பௌலிங் ஆக்‌ஷன்' சரியாகத்தான் இருக்கிறது. அவர் 'த்ரோ' செய்யவில்லை. அது 'சக்கிங்' கிடையாது.

இதுபோன்ற பந்துவீச்சாளர்களை, குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் அடிப்பது சற்று கடினமாக இருக்கும். 'அண்டர் தி பால் எலிவேஷன்' கிடைப்பது பேட்டர்களுக்கு சற்று சிரமமாக இருக்கும்.

பொதுவாக இந்த ஃபார்மட்டில் பேட்டர்கள் பந்துக்கு கீழே சென்று ஆடவிரும்புவார்கள். ஆனால், இவர் பந்துவீச்சில் அது மிகவும் கடினம். அதிலும் பௌன்ஸ் குறைவான ஆடுகளம் என்றால் அவர் பெரும் தாக்கம் ஏற்படுத்தக்கூடும். ஆனால், இந்திய அணி இவருக்கு ஏற்ற திட்டங்கள் வகுத்துக் களமிறங்குவார்கள் என்று நம்புகிறேன்.

அவருக்கு எதிராக முற்றிலும் 'டிஃபன்ஸிவாக' ஆடுவார்கள் என்று எண்ணவில்லை. அவர் பந்துவீச்சில் எப்படி ஸ்கோர் செய்யலாம் என்று நன்கு திட்டமிட வேண்டும்.

உஸ்மான் தாரிக் மீது நெருக்கடியை ஏற்படுத்த நல்ல பவர்பிளே தேவை. பவர்பிளேவில் இந்திய அணி 2 அல்லது 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டால், அதன்பிறகு தாரிக் போன்ற ஒரு பந்துவீச்சாளர் வந்து ஆதிக்கம் செலுத்தக்கூடும்.

அப்படியில்லாமல் பவர்பிளேவில் 55/0, 60/0 என்பதுபோன்ற ஸ்கோர் எடுத்தால், உஸ்மான் தாரிக் பந்துவீச வரும்போதே அவருக்கு நெருக்கடி ஏற்பட்டுவிடும்.

இதனால்தான், அபிஷேக் ஷர்மா இல்லாதது பின்னடைவு என்று நான் கருதுகிறேன்.

இருந்தாலும், நிச்சயம் இந்திய வீரர்கள் தாரிக்கின் வீடியோக்களைப் பார்த்திருப்பார்கள். அதனால் நல்ல திட்டத்தோடு வருவார்கள்.

சாதகம் யாருக்கு?

பெரிய போட்டிகளில் மிகச் சிறப்பாக செயல்பட்ட வரலாறு இந்திய அணியிடம் இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில், மிகமுக்கியமான போட்டிகளில் அவர்கள் மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அதைச் சீராகச் செய்திருக்கிறார்கள். ஆசிய கோப்பையில் துபை போன்ற மெதுவான ஆடுகளத்திலும் கூட இந்த இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது.

ஒருவேளை அபிஷேக் ஷர்மா ஆடாவிட்டால், ஃபரான் போன்ற பேட்டரும், உஸ்மான் தாரிக் போன்ற பந்துவீச்சாளரும் தங்களின் ஆகச்சிறந்த செயல்பாட்டைக் கொடுத்தால் இந்தப் போட்டியில் பாகிஸ்தான் பலம் கூடும்.

இலங்கையில் ஆடுவது ஒருவேளை சற்று சவால் கொடுக்கலாம். ஆஸ்திரேலியா - ஜிம்பாப்வே ஆட்டத்தில் ஆடுகளம் மெதுவாக இருந்தது.

அதனால், இந்திய அணி ஆடுகளத்தின் தன்மையை அறிந்து அதற்கேற்ப எவ்வாறு தங்களைத் தகவமைத்துக்கொள்கிறார்கள் என்பதைப் பார்க்கவேண்டும்.

(இந்தக் கட்டுரையை எழுதிய வித்யுத் சிவராமகிருஷ்ணன், தமிழ்நாடு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்காக விளையாடியிருக்கிறார். 2000-ல் அண்டர் 19 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இவர் இடம்பெற்றிருந்தார். தற்போது வர்ணனையாளராக இருக்கிறார்.)

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c1w5q2gw9n1o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.