Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திசை ஒன்பது - எனது வாசிப்பு - பா. ரவீந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திசை ஒன்பது - எனது வாசிப்பு

பா. ரவீந்திரன்

thisai-onbathu.jpg?w=464

சயந்தனின் “திசை ஒன்பது” நாவல் கவனத்தை சிதறவிடாதபடி வாசித்துத் தீர்க்க வேண்டியிருந்த நாவலாக எனக்கு இருந்தது. ஒரு செறிவான ‘நேர்கோட்டின்மை’ (non-linear) கதைசொல்லல்தான் அதற்குக் காரணம். வாசிப்பை குழப்பத்தில் நிறுத்தி, வாசகர் புத்தகத்தை மூடிவைத்துவிடாதபடி, அந்தக் கதைசொல்லல் முறையை கட்டியமைப்பதில் எழுத்தாளர் அதிக சிரத்தை எடுத்திருப்பதாகத் தோன்றுகிறது. அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். அதனாலோ என்னவோ நூலின் ஆரம்ப அத்தியாயங்களில் எழுத்தாளரது எழுத்துக்குள் எள்ளல்கள் கிண்டல்கள் காணாமல் போய், பின்னர் அவை அவருக்கேயுரிய இயல்பான நடையாக வெளிப்படத் தொடங்கியிருப்பதாக எனது வாசிப்பில் தோன்றியது. அது அப்படியில்லை என இன்னொரு வாசகருக்குத் தோன்றலாம் என்பதையும் ஏற்றுக்கொண்டே எனது இந்த அவதானிப்பைச் சொல்கிறேன்.

எழுத்தாளனில்லாத ஓர் எழுத்தாளனாக கதையின் நாயகன் இளங்கோ வருகிறான். சிறுவயதில் அவன் எழுதிய கதை முயற்சிகள் கற்பனையோடு சேர்ந்து வளர்ச்சியடைந்து, இந்த நாவலுக்குள் ஒரு கிளைக் கதையாக அல்லது குறுநாவலாக இமையாவின் கதையை எழுதுவதில் ஊற்றெடுக்கிறது. இமையாவை சுவிசிலுள்ள சித்திரம் என்பவர் திருமணம் முடிக்க அழைத்துவிட்டு காத்திருப்பவர். அவளை எல்லைகள் தடுத்து நிறுத்துகின்றன. அலைக்கழிக்கின்றன. அச்சமூட்டுகின்றன.

இமையாவை இளங்கோ உக்ரைனில் சந்திக்கிறான். இமையாவின் கதையைத் தொடங்குகிறான். இளங்கோவின் காதலி அமுதி யாழ்ப்பாணத்தில் அவனுக்காகக் காத்திருக்கிறாள். காதலன் சுவிசிலிருந்து தன்னைக் கூப்பிடுவான் என்ற கனவு அவளுக்கு. அவனையும் எல்லைகள் தொடர்ந்து ஏமாற்றுகின்றன. எல்லை கடத்தல்காரனாக தேவாரம் இருக்கிறார். இளங்கோவுக்கும் உக்ரைன்காரி ஹன்னாவுக்கும் இடையில் என்ன உறவு இருக்கிறது, அது எதுவாக மலர்ந்தது, இளங்கோ எங்கு போய்ச் சேர்ந்தான் என்பதெல்லாம் நாவலை வாசித்து அறியவேண்டியவை.

மேற்குலகுப் புகலிட இலக்கியத்தில் எழுதப்பட்ட பல நாவல்களும் கவிதைகளும் கதைகளும் ஆரம்பகாலங்களில் மண்ணின் மீதான வாழ்வின் நினைவுகளையும் ஏக்கங்களையும் கொண்டிருந்ததற்கு ஒரு நியாயம் உண்டு. ஆனால் முப்பது நாற்பது வருடங்களாக தமது இளமைக் காலத்தையே புகலிடத்தில் ஒப்புக்கொடுத்து வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் அந்த வாழ்க்கையை எழுதியது குறைவானது என்றே சொல்ல முடியும். அதற்கான காரணங்கள் விரிவான கட்டுரை ஆக்கத்துக்கு உரியன.

“திசை ஒன்பது” இந்த புகலிட வாழ்வை எல்லை கடத்தலிலிருந்து தொடங்கி, அந்தந்த நாடுகளில் எதிர்கொண்டவைகளையும், அலைக்கழிப்புகளையும், மனவுளைச்சல்களையும், அச் சூழல்களோடான தற்காலிகத் தகவமைதல்களையும் முன்வைக்கிறது. அகதிகள் எதிர்கொண்ட உண்மைகளை விட்டுவிலகி ஓடாத புனைவுகளால் எழுதிச் செல்கிறது. ஆப்கானிஸ்தான், எரித்திரியா, குர்திஸ்தான், ‘பலுசிஸ்தான்’, சிரியா என வேறு நாட்டு அகதிகளையும் அந்த வாழ்வு குறுக்கிட்டு கடக்க வைக்கிறது.

“ஆக்கிரமிக்கப்பட்ட எல்லா நிலங்களுக்கும் ஒரு மொழிதானே” என்ற கதைசொல்லியின் கூற்றுக்கான ஊற்று இங்கிருந்துதான் பிறக்கிறது.

சிரிய அகதி கூறியதுபோல “ அறிவுதான் வெளிச்சம். அந்த வெளிச்சத்துக்குப் பயந்தவர்கள் அவரை (தந்தையை) கொன்றனர்” என்பதையும் மேற்சொன்னதுடன் பொருத்திப் பார்க்க முடியும். அத்தோடு, இலங்கையிலிருந்து துரத்திய போரும் இந்த மற்ற நாட்டு அகதிகளைத் துரத்திய போர்களும், இளங்கோவை திரும்பவும் துரத்திய உக்ரைன் போரும் ஒரே மொழியைத்தான் பேசுகின்றன. மனித விழுமியங்களின் தளத்தில் இந்த எடுத்துரைப்புகள் இலக்கிய அழகியலாக இந் நாவலில் வந்தமர்கின்றன.

எல்லை கடத்தல் என்பது ஒப்பீட்டு ரீதியில் எண்பதுகளைப் போல் தொண்ணூறுகளில் சுலபமாக இருக்கவில்லை. தொண்ணூறுகளைப் போல் மிலேனியத்துக்குப் பிறகான காலங்களில் சுலபமாக இருக்கவில்லை. இதுவும் உலக அகதிகளுக்கு பொதுவான ஒன்றுதான். நாடே அகதிகளாக பெருக்கெடுத்ததுபோல் சிரிய அகதிகள் கிரேக்கம், துருக்கி என எல்லைகளை தாண்டப் புறப்பட்டு மாதக் கணக்கில் நடந்த கொடுந் துயரமெல்லாம் ஐரோப்பிய தொலைக்காட்சிகளை நிரப்பி பெருக்கெடுத்த செய்திகள். ஆபிரிக்க அகதிகள் பாலைவனப் பயணத்தில் மட்டுமல்ல, இத்தாலியை நோக்கி காலாவதியான படகுகளிலும் கப்பல்களிலும் கடல்தாண்டப் பறப்பட்டு, கவிழ்ந்து கொட்டுண்டு நூற்றுக் கணக்கில் ஒரே நேரத்தில் செத்துமடிந்த துயரங்கள் சொல்லி மாளாதவை. இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தளவில் குளிர் தின்று ஆறுகளில் பலியானோர், எல்லை தாண்ட அவர்களைக் கடத்திவந்த பவுசர்களுக்குள் அதன் மூடி மூடுண்டு மூச்சுத் திணறிப் பலியானோர், கைதாகி திருப்பி அனுப்பப்பட்டோர், கைதாகி சிறைசென்றோர், இடைத்தங்கல் நாடுகளில் நிரந்தரமாக தங்கவேண்டி வந்தோர், மாதக் கணக்காக, வருடக் கணக்காக என காலங்களைத் தின்று தீர்த்த இடைத்தங்கல்கள் என எல்லை கடப்பில் பல வாழ்க்கைச் சிதைப்புகள் நடந்திருக்கின்றன. இதில் சிலவற்றையாவது சொல்ல எத்தனித்திருக்கும் “திசை ஒன்பது” முக்கியமான நாவல்தான்.

சூழல்தான் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது என்பதன் ஒரு சாட்சியாக “திசை ஒன்பது” நாவலின் பாத்திரங்கள் இருக்கின்றன. அதை ஆசிரியர் காலமும் தூரமும் தீர்மானிக்கின்றன என இன்னொரு பரிணாமத்தில் சொல்கிறார். இளங்கோவினூடாக ஆசிரியர் பேசும் கொசுறுத் தத்துவத்தைவிட, அவர் உருவாக்கியிருக்கும் பாத்திரக் கட்டமைப்புகள் ஒரு சமூகவியல் மற்றும் உளவியல் தளங்களில் நன்றாகவே பேசியிருக்கின்றன. எல்லை கடத்தும் வேலையில் பழம் தின்று கொட்டை போடத் தொடங்கிய தமிழர்களின் ஏமாற்று மொழிகளும் குழைவும் பசப்புகளும் தேவாரத்தினூடாக வெளிப்படுகிறது.

இந்தக் கதைசொல்லலுக்குள் சமூக ஊடகங்களின் தாக்கமும் இருக்கிறது. அது தீண்டாமைக்கு உரியதல்ல. மாறாக அது நவீன வாழ்வோடு பிணைந்தது. உலகத்தை நொடிகளில் வைத்து, இற்றைப்படுத்துகிற தகவல்களையும் அறிவு உருவாக்கத்தையும் செழுமைப்படுத்தலையும், அதேநேரம் அதை பகுத்துணர வேண்டிய சவாலையும் மூளைக்கு எடுத்துச் செல்லும் நிகழ்த்துதலை அவை செய்கின்றன. அது நம்மை, நமது வாழ்வை பின்தொடர்கிறது. உக்ரைன் போர் இளங்கோவை நிலக்கீழ் பாதுகாப்பு அறைக்குள் துரத்திவிடுகிறபோது, ஒரு மூடுண்ட உலகம் உருவாகிறது. அந்த உலகத்தை துளைபோட்டு வருகின்றன தமிழ்யூரியூப் செய்திகள். கிசே துரையின் விண்ணாணச் செய்திகள் மூன்று நாளில் உக்ரைன் ரசியாவிடம் வீழ்ந்துவிடும் என அரசியல் ஆடையை அவிழ்த்துப் போட்டுவிட்டு உள்ளே வருகிறபோதும், அது சில தகவல்களையாவது அந்த குகைக்குள் வெளிச்சமாகத் தரவே செய்கிறது. அதை ஆசிரியர் எள்ளலாகச் சொல்லியிருப்பது இந்த முரண்களில் நன்றாக பொருந்திப் போகிறது.

அதேபோல் இன்னொரு இடத்தில் “பன்றிக் குட்டிகள் போல் ஒவ்வொரு தை மாதமும் நாவல் எழுத முடியாது” என்ற எள்ளலும் இலக்கியத் தளத்தில் வைத்து ஒரு செய்தியை சொல்லவே செய்கிறது. “சுவிஸ் அண்ணை கட்டிய பதினாறு கோடி மாளிகை” என்பதும் பவுசின் மீதான எள்ளலாக இருக்கிறபோதும்கூட, ஒரு மாயைநிலை வாழ்வின் மீதான செய்தியை ஒவ்வாமையை சொல்லவே செய்கிறது.

சயந்தனின் எள்ளலுடன் கூடிய மொழியாளுகையை குறிப்பிடாமல் செல்ல முடியாது. ஒரு ‘நேர்கோட்டின்மைக்’ கதையை செறிவாக பாத்திரங்களினூடாகக் கட்டமைப்பதில் கொண்டிருந்த அவதானத்தையும் குறிப்பிடாமல் இருக்க முடியாது. புகலிட இலக்கியத்தின் பேசப்பட வேண்டிய இன்னொரு களத்துள் (அதாவது எல்லை கடப்பதின் துயரக் களத்துள்) இந்தக் கதைசொல்லலை தேர்வுசெய்தது குறித்து குறிப்பிடாமல் இருக்க முடியாது.

அதேநேரம் சில கொசுறு அரசியல் கருத்துகளும், வாழ்க்கைத் தத்தவங்களும், தலைவரின் மரணம் பற்றிய வலிந்த கதையாடலும், “வேசைப் பொம்பிளை” என்ற ஆணாதிக்கச் சொல்லாடலும் எனது வாசிப்பில் இடறவே செய்தன. அதேபோல் அத்தியாயங்களுக்கான (ஆங்கில எழுத்து) தலைப்புகள் இன்னும் எனது அறிதல் எல்லைக்குள் பிடிபடாதவையாக இப்போதும் இருக்கின்றன. அந்த புரியாமையானது அவற்றை கவனிக்காமல் கடக்கும் மனநிலையோடு வாசிப்பை நிகழ்த்தவே செய்தன என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும்.

இந்த நாவலின் எந்தப் பாத்திரத்தோடும் ஒன்றித்துச் செல்லும் மனநிலையோ அனுபவமோ எனக்கு வாய்க்கவில்லை. (மற்றவர்களுக்கும் அப்படி இருக்கும் என்பதல்ல அதன் அர்த்தம்). அதனால் எனது வாசிப்பு “தூரப்படுத்தல்” என்ற கலைக் கோட்பாட்டு நிலையில் நின்றே நிகழ்ந்தது. அதாவது மூன்றாவது மனிதனாக வெளியில் நின்று அவதானிப்பது, புரிந்துகொள்வது என்பது பொருளாகும். ஒரு கருத்து நிலைக்குள் அல்லது உணர்ச்சிசார் நிலைக்குள் அல்லது அமைப்புசார் நிலைக்குள் வைத்து அகநிலையாக புரிந்துகொள்ள முயற்சிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல், “தூரப்படுத்தல்” என்ற புறநிலையிலும் நின்று அவதானிக்கிறபோது, பல பரிமாணங்கள் உருவாகும். நியாயப்படுத்தல் அல்லது சார்புநிலை தகரும். கட்டுடைப்பு நிகழும். புதிய வெளிச்சங்களை அறிவு தரிசிக்கும். இந்த நாவல் வாசிப்பு என்னளவில் இவ்வாறே நிகழ்ந்தது. “திசை ஒன்பது” புகலிட இலக்கியத்தில் ஒரு முக்கியமான நாவல்தான் என்பதை சொல்ல எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.

https://sudumanal.com/2026/02/13/திசை-ஒன்பது/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.