Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக இடைக்கால பட்ஜெட் 2026: முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக இடைக்கால பட்ஜெட் 2026: முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?

hindutamil-prod%2F2026-02-17%2F4wa3u9ds%

சென்னை: தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை இன்று (பிப்.17) காலை 9.30 மணியளவில் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.

பட்ஜெட் உரையில் அவர், மகளிர் உரிமைத் தொகையோடு, ரூ.2000 கோடை கால சிறப்புத் தொகை வழங்கப்பட்டதால் ‘தமிழகமே இன்ப அதிர்ச்சியில் உள்ளது’ என்று பெருமிதத்தை வெளிப்படுத்தினார்.

இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து தங்கம் தென்னரசு ஆற்றிய உரை: பெண்களின் வளர்ச்சியை மையப்படுத்தி தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. விடியல் பேருந்து பயணத்தின் மூலம் பெண்கள் மாதத்துக்கு சராசரியாக ரூ.888 சேமிக்கிறார்கள்.

மகளிர் உரிமைத் தொகை திட்டம் இந்தியாவுக்கே முன்னோடியாக உள்ளது. ரூ.5000 வழங்கப்பட்டதால் தமிழகமே இன்ப அதிர்ச்சியில் உள்ளது.

மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு 10,469 புதிய வீடுகள் கட்ட ரூ.630 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவற்றில், 6,010 வீடுகள் கட்டப்பட்ட நிலையில், மற்ற வீடுகளின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவியர்கள் கல்லூரிகளில் பயிலும் போது மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கி ஊக்கப்படுத்தும் ‘புதுமைப் பெண்’ திட்டத்தின் கீழ் இதுவரை 6,95,296 மாணவியர் பயன்பெற்றுள்ளனர்.

பெற்றோரை இழந்த குழந்தைகள் பள்ளிப்படிப்பினைத் தொடர, மாதம் ரூ.2,000 வழங்கும் 'அன்புக் கரங்கள் திட்டத்தின் கீழ், இதுவரை 10,637 குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 23,56,623 நபர்களுக்கு. வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆட்சேபணையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில், சென்னை மற்றும் இதர நகர்ப்புரப் பகுதிகளில் இதுவரை 77,800 வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

2025 ஆம் ஆண்டு குடிமைப்பணித் தேர்வில் வென்ற தமிழ்நாட்டைச் சார்ந்த 59 நபர்களில் 52 நபர்கள், ‘நான் முதல்வன்’ திட்டப் பயனாளிகள் ஆவர்.

தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் பதக்கம் வென்று தமிழ்நாட்டுக்குப் பெருமை தேடித் தந்த 5,403 விளையாட்டு வீரர் / வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகையாக ரூ.176 கோடி இதுவரை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஐந்தாண்டுகளில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் முன்னெடுக்கப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.101 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு ஊக்கமளிக்க பல்வேறு மாநகராட்சிகளிலும், நகராட்சிகளிலும் 199 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 101 நூலகம் மற்றும் அறிவுசார் மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

மாணவர்களும், தொழில் முனைவோரும் பயன்படுத்தும் வகையில் 104 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 30 முதல்வர் படைப்பகங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1.41 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. 19 தோழி விடுதிகள் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறது.

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2030ஆம் ஆண்டுக்குள் 8 லட்சம் வீடுகள் கட்டப்படும். இதுவரை 1.71 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன, மேலும் ஒரு லட்சம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 6 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணிகள் வழங்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் 38 கலை, அறிவியல் கல்லூரிகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறைக்கு ரூ.718 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .

கிராம சாலைகள் திட்டத்துக்கு ரூ.8,911 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

உயர் கல்வித் துறைக்கு ரூ.8,505 கோடியும், சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறைக்கு ரூ.17,088 கோடியும், ஊரக வளர்ச்சித் துறைக்கு ரூ.28,687 கோடியும், மாற்றுத் திறனாளிகள் நலத்துறைக்கு ரூ.1,400 கோடியும், மருத்துவத் துறைக்கு ரூ.22,090 கோடியும், தொழிலாளர் நலத் துறைக்கு ரூ.1,996 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 2.55 கோடி பேர் பயனடைந்துள்ளனர். 25 இடங்களில் அன்புச் சோலைகள் அமைக்கப்பட்டுள்ளன. நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் மூலம் 17 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

மின்னணு துறை உற்பத்தியில் 41 சதவீத பங்களிப்புடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. செமி கண்டக்டர் திட்டத்துக்கு 5 ஆண்டு செயல் திட்டமாக ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

11.19% வளர்ச்சியை எட்டி நாட்டிலேயே தமிழகம் பொருளாதார வளர்ச்சியில் முதலிடம் வகிக்கிறது.

ரூ.285 கோடியில் தமிழகத்தில் சோழர், நொய்யல், வெண்கல அருங்காட்சியங்கள் அமைக்கப்படுகின்றன.

நாட்டிலேயே தொழிற்சாலைகளில் அதிகம் பெண்கள் பணிபுரியும் மாநிலமாக தமிழகம் உள்ளது. பெண்கள் பெயரில் பதிவு செய்யப்படும் சொத்துக்களுக்கான கட்டணம் 1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு திட்டங்களை பிற மாநிலங்கள் பின்பற்றுகின்றன.

ரூ.10 கோடியில் அயலக தமிழர்களுக்கு தமிழ் கற்பிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 8 பிற மாநிலங்கள் மற்றும் அயல் நாடுகளில் தமிழ் படிப்பதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பாரதியின் கனவை நிறைவேற்றும் அரசாக திமுக உள்ளது.

19.34 லட்சம் மாணவர்கள் தமிழக அரசின் காலை உணவு திட்டத்தால் பயன் பெறுகின்றனர்.

தூய்மைப் பணியாளர்களுக்கு மேலும் 30 ஆயிரம் வீடுகள் கட்டித் தரப்படும் ,

தமிழகத்தில் உள்ள 1048 கோயில்களுக்கு சொந்தமான ரூ.8,363 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ரூ.8,100 கோடி செலவில் திருக்கோயில்களுக்கு திருப்பணிகள் நடைபெற்றுள்ளன.

சுற்றுலா துறையில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது. சுற்றுலாத் துறைக்கு ரூ.1394 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நதிக்கரை மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.374 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பழங்குடியினர் வீடுகள் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள ரூ.755 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

‘வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், குடியிருப்பு வசதிகள் ஏற்படுத்துதல், குடிநீர் வழங்கல், கடற்கரைகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு பணிகள் ரூ.6,045 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த அரசு பொறுப்பேற்ற பின்னர் 36 லட்சத்திற்கும் மேலான வேலைவாய்ப்புகள் உருவாகும் வகையில், ரூ.1,237 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளுக்கான 1,179 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.

கப்பல் கட்டுமானம் மற்றும் கப்பல் இயந்திர உற்பத்தித் துறைகளில் முதலீடுகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட 'தமிழ்நாடு கப்பல் கட்டும் கொள்கை விரைவில் வெளியிடப்படும். அப்போது. கப்பல் கட்டும் தொழிலில் உலகளாவிய ஒரு மையமாக தமிழ்நாடு உருவெடுக்கும்.

தமிழ்நாட்டில் உள்ள 12,525 கிராமப் பஞ்சாயத்துகளுக்கும் அதிவேக அலைக்கற்றை வழங்கும் திட்டப் பணிகள், தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனத்தின் (TANFINET) மூலம், தற்போது 11,953 கிராம ஊராட்சிகளில் 95% முடிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தின் மூலம், நெய்தல் மீட்சி இயக்கம் மற்றும் தொடர்புடைய திட்டங்களின் கீழ் 3,733 ஹெக்டேர் பரப்பளவில் அலையாத்திக் காடுகள் மீள்உருவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சென்னையில் மூன்று வழித்தடங்களில், 63,246 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 118.9 கி.மீ. தூரத்திற்கான சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

14.6 கி.மீ. நீளமுள்ள 11 மெட்ரோ நிலையங்களைக் கொண்ட பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் போரூர் வரையிலான மெட்ரோ ரயில் வழித்தடம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.

திறமையான மாணவர்கள் உலகப்புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களில் கல்வி கற்கும் வாய்ப்பை வழங்க தொடங்கப்பட்ட, அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்தின் கீழ், இதுவரை ரூ.160 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 385 மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர்.

அண்ணல் அம்பேத்கர் தொழில்கள் முன்னோடிகள் திட்டத்தின் கீழ், 4,948 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில்முனைவோருக்கு 420 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது.

சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக ரூ. 16 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்களின் புனரமைப்பிற்காக ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு அரசின் பல்வேறு திட்டங்களையும் பட்டியலிட்டுப் பேசினார்.

https://www.hindutamil.in/news/tamilnadu/tamil-nadu-government-interim-budget-2026-highlights

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இடைக்கால பட்ஜெட்: ‘காதுகுத்து விழா’ அழைப்பிதழுடன் பேரவைக்கு வந்த அதிமுக உறுப்பினர்கள்

hindutamil-prod%2F2026-02-17%2F5gnrjv7n%

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இந்நிலையில், இந்த இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடருக்கு ‘காதுகுத்து விழா’ அழைப்பிதழுடன் பேரவைக்கு வருகை தந்து கவனம் ஈர்த்தனர் அதிமுக உறுப்பினர்கள்.

“கடந்த நாலரை ஆண்டுகளாக பட்ஜெட் என்னும் பெயரில் தமிழ்நாடு மக்களுக்கு நடத்தப்படும் மாபெரும் காது குத்தும் விழா இந்த வருடமும் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. நாள்: பிப்ரவரி 17, 2026, இடம்: தமிழக சட்டமன்றம், நேரம்: காலை 10 மணி முதல். இவ்விழாவிற்கு தலைமை தாங்குபவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். நிதியமைச்சர் தங்கம் தென்னரசு முன்னின்று காது குத்துவார்.

மேற்படி விழாவில் கூவம் சுத்திகரிப்பிற்கு நிதி, சென்னை மழைநீர் வடிகால் திட்டத்திற்கு நிதி, சிங்காரச் சென்னை திட்டத்திற்கு நிதி என்று விதவிதமாக காது குத்தப்படும் என்று மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறோம்.

பி.கு: சொத்து வரி, வீட்டு வரி, குடிநீர் வரி, மின் கட்டணம் என பல்வேறு முறைகளில் 'மொய்' வைக்கலாம்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அழைப்பிதழுடன் சட்டப்பேரவைக்கு வருகை தந்த அதிமுக எம்எல்ஏ-க்கள், அதை அனைவரும் பார்க்கும்படி கைகளில் ஏந்தி வந்தனர்.

https://www.hindutamil.in/news/tamilnadu/aiadmk-assembly-members-mocks-tn-interim-budget-with-kathukuthu-vizha-invitation

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வருவாய்ப் பற்றாக்குறை ரூ.48,696.32 கோடி, கடன் சுமை ரூ.10.71 லட்சம் கோடி - தமிழக இடைக்கால பட்ஜெட்டில் தகவல்

hindutamil%2Fimport%2Fhindu%2Fuploads%2F

சென்னை: “2026-27 ஆம் ஆண்டு இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் வருவாய்ப் பற்றாக்குறை 48,696.32 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 2026-27 ஆம் ஆண்டில் மாநில அரசு 178,308.05 கோடி ரூபாய் அளவிற்கு மொத்தக் கடன் பெற திட்டமிட்டுள்ளது. 60,418,42 கோடி ரூபாய் மதிப்பிலான பொதுக் கடனை அரசு திருப்பிச் செலுத்தும். இதன் விளைவாக, 31.03.2027 அன்று நிலுவையில் உள்ள கடன் 10,71,770.34 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது” என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

இது குறித்து இடைக்கால பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பின் விவரம் வருமாறு: 2026-27 ஆம் ஆண்டு இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் வருவாய்ப் பற்றாக்குறை 48,696.32 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.

வரி வசூலை மேம்படுத்துதல், வரி வசூல் நிர்வாகத்திறனை மேம்படுத்துதல் உள்ளிட்ட வருவாயைப் பெருக்கும் நடவடிக்கைகளைக் கருத்திற்கொண்டு, வருவாய்ப் பற்றாக்குறை 2027-28 ஆம் ஆண்டில் 42964.61 கோடி ரூபாயாக குறையும் எனவும், அதன் தொடர்ச்சியாக 2028-29 ஆம் ஆண்டில் 35,115.33 கோடி ரூபாயாக குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இது கூடுதல் மூலதனச் செலவினத்திற்கு வழிவகை செய்யும்.

2026-27 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி (GSDP) மதிப்பில் நிதிப்பற்றாக்குறையின் விகிதம் 200 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது, பொருளாதாரம் மற்றும் நிதிநிலையில் பல்வேறு சவால்களை சந்தித்து வரும் நிலையிலும், நிதிநிலையை மேம்படுத்துவதில் அரசிற்கு உள்ள உறுதிப்பாட்டை வெளிக்காட்டுகிறது.

2027-28 மற்றும் 2028-29 ஆம் ஆண்டுகளில், இது முறையே, 288 சதவீதம் மற்றும் 230 சதவீதமாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இது, தமிழ்நாடு நிதிநிலை நிருவாகப் பொறுப்புடைமைச் சட்டம், 2003 இல் குறிப்பிடப்பட்டுள்ள இலக்கிற்குள் உள்ளது.

ஒன்றிய அரசு நிர்ணயிக்கும் ஒட்டுமொத்தக் கடன் வரம்பின் அடிப்படையில், கடன் பெறுதலும் திரும்பச் செலுத்துதலும் மதிப்பிடப்பட்டுள்ளன. 2026-27 ஆம் ஆண்டில் மாநில அரசு 178,308.05 கோடி ரூபாய் அளவிற்கு மொத்தக் கடன் பெற திட்டமிட்டுள்ளது. மேலும், 60,418,42 கோடி ரூபாய் மதிப்பிலான பொதுக் கடனை அரசு திருப்பிச் செலுத்தும்.

இதன் விளைவாக, 31.03.2027 அன்று நிலுவையில் உள்ள கடன் 10,71,770.34 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. 2020-27 ஆம் ஆண்டில் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் இது 20:35 சதவீதம் ஆகும்.

எனினும், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் ஒன்றிய அரசின் திட்டமாக ஒப்பளிக்கப்பட்ட பின்னர் ஒன்றிய அரசின் கணக்குகளில் இடம்பெறவேண்டிய 9,522.65 கோடி ரூபாயும் மொத்த நிலுவைக் கடன்களில் உள்ளடங்கும்.

இக்கடன் தொகையை தவிர்த்து மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் நிலுவையிலுள்ள மொத்த கடன் விகிதம் 20:12 ஆகவும், மேலும், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கான கடன் தவிர்த்து மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் நிலுவையிலுள்ள மொத்த கடன், 2027-28 ஆம் ஆண்டில் 25.30 சதவீதமாகவும், 2028-29 ஆம் ஆண்டில் 25.43 சதவீதமாகவும் மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு, சீரிய நிதி மேலாண்மையின் ஒரு பகுதியாக கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான திறனை தக்கவைக்க அரசு திட்டமிட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது.

https://www.hindutamil.in/news/tamilnadu/revenue-deficit-in-the-interim-budget-is-rs-48696-crore

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

“ஒவ்வொருவர் பெயரிலும் ரூ.1.27 லட்சம் கடன் சுமை” - தமிழக இடைக்கால பட்ஜெட் மீது அன்புமணி விமர்சனம்

hindutamil-prod%2F2026-02-17%2Fz7tayx7i%

சென்னை: “ஒரே ஆண்டில் ரூ.1.84 லட்சம் கோடி கடனை திமுக அரசு வாங்கியுள்ளது. இதன் மூலம் ஒவ்வொருவரின் தலையிலும் ரூ.1.27 லட்சம் கடன் சுமை சுமத்தப்பட்டுள்ளது” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டை கடந்த ஐந்தாண்டுகளாக ஆட்சி செய்து வரும் திமுக அரசு, தமிழ்நாட்டை எந்த அளவுக்கு கடன்கார மாநிலமாக மாற்றி வைத்திருக்கிறது என்பதற்கு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கை தான் சான்று ஆகும்.

சொந்த வரி வருவாயாக ரூ.2.06 லட்சம் கோடியை மட்டுமே ஈட்டியிருக்கும் திமுக அரசு, அதில் 90 விழுக்காட்டை, அதாவது 1.84 லட்சம் கோடியை கடனாக வாங்கிக் குவித்துள்ளது. இதன் மூலம் ஒவ்வொருவரின் தலையிலும் ரூ. 1.27 லட்சம் கடன் சுமை சுமத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2026-27ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். இடைக்கால நிதிநிலை அறிக்கை என்பதால் இதில் புதிய திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை. ஆனால், 2025-26ஆம் ஆண்டிற்கான திமுக அரசின் நிதிச் செயல்பாடுகள் தமிழ்நாட்டை சீரழித்து, கடன் வலையில் வீழ்த்துவதாக அமைந்திருக்கின்றன. திமுக அரசின் மிக மோசமான செயல்பாடுகள் காரணமாக நடப்பாண்டில் மட்டும் கணிக்கப்பட்டதை விட 21% அதிகமாக ரூ.1 லட்சத்து 84,551 கோடியை கடனாக மு.க.ஸ்டாலின் அரசு வாங்கிக் குவித்திருக்கிறது.

ஒரு மாநில அரசு மூலதனச் செலவுகளுக்காக மட்டும் தான் கடன் வாங்க வேண்டும். அதன்படி பார்த்தால், 2025-26ஆம் ஆண்டில் மூலதனச் செலவாக ரூ.51,443 கோடியை மட்டுமே செலவழித்திருக்கிறது. இது 2025&26ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்த ரூ.57,231 கோடியை விட ரூ.6788 கோடி குறைவாகும். ரூ.51,443 கோடிக்கு மூலதனச் செலவுகளை செய்துள்ள திமுக அரசு, அந்த அளவுக்கு மட்டும் தான் கடன் வாங்கியிருக்க வேண்டும். ஆனால், அதை விட மூன்றரை மடங்கு அதிகமாக ரூ.1.84 லட்சம் கோடியை கடனாக வாங்கியுள்ளது. இதை விட மோசமான நிதி மேலாண்மை இருக்க முடியாது.

வாங்கிய கடனில் மூலதன செலவுகளை செய்தது போக மீதமுள்ள சுமார் ரூ.1.33 லட்சம் கோடியை திமுக அரசு என்ன செய்தது? கடந்த காலங்களில் வாங்கிய கடன்களில் ரூ.55,844 கோடி கடன் நடப்பாண்டில் திருப்பி செலுத்தப்பட்டு உள்ளது. இந்தத் தொகையை நடப்பாண்டில் கடனாக வாங்கிய ரூ.1.84 லட்சம் கோடியிலிருந்து தான் திமுக அரசு செலுத்தியுள்ளது. புதிய கடனை வாங்கி, பழைய கடனை அடைக்கும் அற்புதமான நிதி நிர்வாகத்தைத் தான் திமுக செய்திருக்கிறது. கடனை அடைக்க செலுத்தப்பட்ட தொகையும் போக, கடனாக வாங்கிய ரூ.1.84 லட்சம் கோடியில் ரூ.77,223 கோடி மீதமிருக்க வேண்டும். ஆனால், அந்தத் தொகை எங்கு போனது என்பது தெரியவில்லை.

வருவாய்ப் பற்றாக்குறையை முற்றிலுமாக ஒழித்து, வருவாய் உபரியை ஏற்படுத்துவதாகக் கூறித் தான் திமுக ஆட்சிக்கு வந்தது. அடுத்த ஆண்டு முதல் வருவாய்ப் பற்றாக்குறை ஒழிக்கப்படும் என்று ஒவ்வொரு ஆண்டும் கூறி வந்தது. ஆனால், இன்று வரை திமுக அரசு வருவாய்ப் பற்றாக்குறையை ஒழிக்கவில்லை; மாறாக உயர்த்தி வைத்திருக்கிறது.

2025-26ஆம் ஆண்டில் வருவாய்ப் பற்றாக்குறை ரூ.41,635 கோடியாக இருக்கும் என்று கடந்த நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. திமுக அரசுக்கு நிதி மேலாண்மைத் திறன் இருந்திருந்தால் இதை இயன்றவரை குறைத்திருக்க வேண்டும். ஆனால், இலக்கை விட 66%, அதாவது ரூ.27,584 கோடி அதிகமாக ரூ.69,219 கோடியாக வருவாய்ப் பற்றாக்குறை அதிகரித்திருக்கிறது.

அரசு ஊழியர்கள் ஊதியம், சமூகநலத் திட்டங்கள் உள்ளிட்ட வருவாய்ச் செலவுகளைக் கூட திமுக அரசால் சமாளிக்க முடியவில்லை; அதைக் கூட கடன் வாங்கித் தான் அரசு செலவு செய்திருக்கிறது என்பதை இது காட்டுகிறது. வருவாய்ப் பற்றாக்குறை குறைக்கப்பட்டிருந்தால் தமிழக அரசு தேவையின்றி கடன் வாங்கியிருக்க வேண்டியிருந்திருக்காது. மூலதன செலவுகளுக்காக மட்டும் கடன் வாங்கி, மொத்தக் கடன் சுமையை குறைத்திருக்க முடியும். ஆனால், அதற்கான திறனும், அறிவும் திமுக அரசுக்கு இல்லை.

வருவாயைப் பெருக்குவதும், அதற்குள் செலவு செய்வதும் தான் சிறந்த நிதி நிர்வாகம் ஆகும். ஆனால், இந்த இரண்டிலுமே திமுக அரசு படுதோல்வி அடைந்துள்ளது. 2025-26ஆம் ஆண்டில் ரூ.2.20 லட்சம் கோடி சொந்த வரி வருவாய் ரூ.2.06 லட்சம் கோடியாக குறைந்திருக்கிறது. இது இலக்கை விட ரூ.14,355 கோடி, அதாவது 6.50% குறைவு ஆகும். அதேபோல், வரி அல்லாத வருவாய் இலக்கை விட 7.82%, அதாவது ரூ.2554 கோடி குறைந்து விட்டது. மொத்த வருவாயும் ரூ.3.31 லட்சம் கோடி என்ற இலக்கில் இருந்து ரூ.21,871 கோடி (6.6%) குறைந்து ரூ.3.09 லட்சம் கோடியாக சுருங்கி விட்டது. அதே நேரத்தில் அரசின் வருவாய் செலவுகள் ரூ.5113 கோடி அதிகரித்து ரூ.3 லட்சத்து 78,917 கோடியாக உயர்ந்துள்ளது.

ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் கடன் வாங்கிக் குவித்ததைத் தவிர வேறு எந்த சாதனையும் செய்யப் படவில்லை. இந்திய விடுதலைக்குப் பிறகு, தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஏற்படுத்தப்பட்ட 1952-ஆம் ஆண்டிலிருந்து திமுக அரசு பொறுப்பேற்பதற்கு முந்தைய 2020-21ஆம் நிதியாண்டின் இறுதி வரையிலான 70 ஆண்டுகளில் தமிழகத்தின் நேரடிக் கடன் ரூ.4.56 லட்சம் கோடி மட்டும் தான்.

ஆனால், அதன்பின் பொறுப்பேற்ற திமுக அரசு ஐந்தாண்டுகளில் வாங்கிக் குவித்துள்ள கடன் மட்டும் ரூ.4.96 லட்சம் கோடி ஆகும். 70 ஆண்டுகளில் வாங்கப்பட்ட கடனை விட 109% கடனை திமுக ஐந்தாண்டுகளில் வாங்கிக் குவித்திருக்கிறது. தமிழ்நாட்டிலிலுள்ள ஒவ்வொருவர் பெயரிலும் ரூ.1.27 லட்சமும், 4 பேர் கொண்ட ஒரு குடும்பத்தின் பெயரில் ரூ.5.08 லட்சமும் கடன் சுமையை மு.க.ஸ்டாலின் அரசு சுமத்தியிருக்கிறது.

தமிழ்நாட்டில் திமுக அரசு தொடர்ந்தால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் வங்கிகளிடம் அடகு வைக்கப்பட்டு விடும். தமிழ்நாடு திவாலாவதை தடுக்க வேண்டும் என்றால், திமுக அரசு உடனடியாக அகற்றப்பட வேண்டும். அதை அடுத்த சில வாரங்களில் நடைபெறவுள்ள தேர்தலில் தமிழக மக்கள் செய்து முடிப்பார்கள்” என்று அவர் தெரிவித்தார்.

https://www.hindutamil.in/news/tamilnadu/nbumani-criticizes-tamil-nadus-interim-budget

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழக இடைக்கால வேளாண் பட்ஜெட் 2026: முக்கிய அம்சங்கள் என்னென்ன?

hindutamil%2Fimport%2Fhindu%2Fuploads%2F

சென்னை: தமிழக அரசின் 2026-27 இடைக்கால வேளாண் பட்ஜெட்டை இன்று (பிப்.17) சட்டப்பேரவையில் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்த உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்:

> தென்னை விவசாயத்தை ஊக்குவிக்க 53 லட்சம் தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன. 21 லட்சம் பழச்செடிச் தொகுப்புகள் பயனாளிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

> நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தில் 900 மெட்ரிக் டன் பாரம்பரிய நெல் விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு 70,000 விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.

> நெல் சாகுபடிப் பரப்பை அதிகரிக்க குறுவை சிறப்புத் தொகுப்பு திட்டம் ரூ.5.482 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு 19.51 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

> 2021-22 முதல் 2024-25 ஆம் ஆண்டு வரை, இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக்குதல் திட்டம் மூலம் 456 பட்டதாரி இளைஞர்கள் வேளாண் சார்ந்த தொழில் தொடங்க ஊக்குவிக்கப்பட்டு, அவர்களுக்கு ரூ.4.56 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.

> தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் 2023-24-ஆம் ஆண்டு முதல் ஐந்தாண்டுத் திட்டமாக செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில், இதுவரை 12.84 லட்சம் விவசாயிகள் ரூ.178 கோடி நிதியில் பயனடைந்துள்ளனர். 20 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் சிறுதானியப் பயிர்கள் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது.

> தேசிய அளவில், தமிழ்நாடு கேழ்வரகு உற்பத்தித் திறனில் முதல் இடம், கேழ்வரகு உற்பத்தியில் இரண்டாம் இடம், குறுதானியங்கள் உற்பத்தியில் ஐந்தாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளது.

> கம்பு சாகுபடிப் பரப்பு 113 லட்சம் ஏக்கரிலிருந்து 133 லட்சம் ஏக்கராக அதிகரித்துள்ளது.

> வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மொத்தம் 77,499 வேளாண் இயந்திரங்கள், கருவிகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. 1,320 வேளாண் இயந்திர வாடகை மையங்களும் நிறுவப்பட்டன. இதற்கென மானியமாக மொத்தம் ரூ.783 கோடி வழங்கப்பட்டது.

> 4,150 சூரிய சக்தி பம்புசெட்டுகள் நிறுவப்பட்டு ரூ.83 கோடி மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும் 5,954 புதிய மின்மோட்டார் பம்புசெட்டுகளும் ரூ.7.67 கோடி மானியத்தில் வழங்கப்பட்டுள்ளன.

> கடந்த ஐந்து ஆண்டுகளில், இதுவரை சுமார் 2 லட்சம் புதிய இலவச மின்சார இணைப்புகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

> கடந்த 5 ஆண்டுகளில், தோட்டக்கலைத் துறை மூலம் 68 லட்சம் பனை விதைகள், 1 லட்சத்து 28 ஆயிரம் பனங்கன்றுகள் விநியோகம், 354 பனை மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் கூடங்கள் ஆகிய செயல்படுத்தப்பட்டன.

> சன்ன ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.156/-ம், சாதாரண ரகங்களுக்கு ரூ.131/-ம் ஊக்கத்தொகையாக வழங்கி அவற்றின் கொள்முதல் விலை முறையே ரூ.2,545 மற்றும் ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

> 5 ஆண்டுகளில் இதுவரை 186 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு ரூ.2,118 கோடி ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

> பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் 5 ஆண்டுகளில் 184 லட்சம் ஏக்கர் பரப்பு, சுமார் 80 லட்சம் விவசாயிகளால் காப்பீடு செய்யப்பட்டது. இத்திட்டத்தில், மகசூல் இழப்பிற்கு 38 லட்சம் விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் ரூ.6,063 கோடி வழங்கப்பட்டுள்ளது.

> தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில், இயற்கைப் பேரிடர்களால் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப் பயிர்களில் 16.20 லட்சம் ஹெக்டரில் ஏற்பட்ட பயிர் சேதத்திற்கு ரூ.2.045 கோடி நிவாரணமாக வழங்கப்பட்டது. இதனால் 25.36 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

> நாகப்பட்டினம். சிவகங்கை, கரூர் மாவட்டங்களில் மூன்று அரசு வேளாண் கல்லூரிகள் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு தோட்டக்கலைக்கல்லூரி புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளன.

> கடந்த ஐந்து ஆண்டுகளில், 101 புதிய பயிர் ரகங்கள், 21 வேளாண் நுட்பங்கள், 16 புதிய பண்ணைக் கருவிகள் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டுள்ளன.

> வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு 2021-ஆம் ஆண்டில் 74 சதவீதமாக இருந்த இளங்கலை மொத்த மாணவர் சேர்க்கை 2025-ஆம் ஆண்டில் 97 சதவீதமாக உயர்ந்துள்ளது.

> கடந்த ஐந்து ஆண்டுகளில் இதுவரை 83 இலட்சத்து 64 ஆயிரம் விவசாயிகளுக்கு 69.457 கோடி ரூபாய் பயிர்க்கடனும், 16 இலட்சத்து 9 ஆயிரம் நபர்களுக்கு 8,938 கோடி ரூபாய் கால்நடை வளர்ப்பு. மீன் வளர்ப்பு உள்ளிட்ட வேளாண் சார்ந்த நடவடிக்கைகளுக்கான கடனும் வழங்கப்பட்டுள்ளன.

> உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் இதுவரை, 6.47 இலட்சம் பயனாளிகளுக்கு கல்வி, திருமணம், விபத்து நிவாரணம், மரணம் போன்றவற்றிற்கு உதவித்தொகையாக ரூ. 819 கோடி வழங்கப்பட்டுள்ளது.

> 2011-12 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024-25 ஆம் ஆண்டில் வேளாண்மையில் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 9.97 சதவீதம் உயர்ந்துள்ளது.

> 2011-12ஆம் ஆண்டில், 53,75,639 லட்சம் ரூபாயாக இருந்த மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி மதிப்பு, 2024-25 ஆம் ஆண்டில், 59,11,708 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது.

> 2021-22 ஆம் ஆண்டில், வரவு செலவுத்திட்டத்தில் ரூ.34,220 கோடியாக இருந்த நிதி ஒதுக்கீடு, 2025-26 ஆம் ஆண்டில், ரூ.45,661 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

> 2026-27 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில், வேளாண்மை உழவர்நலத் துறைக்கு 47,248.24 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

https://www.hindutamil.in/news/tamilnadu/tamil-nadu-interim-budget-2026-for-agriculture-highlights

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.