Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வேலையற்ற பட்டதாரிகளை உற்பத்தி செய்யும் சமூகம் ? நிலாந்தன்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

VV.jpg?resize=600%2C375&ssl=1

வேலையற்ற பட்டதாரிகளை  உற்பத்தி செய்யும் சமூகம் ? நிலாந்தன்!

இக்கட்டுரை எழுதப்படுகையில் யாழ் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நடந்து கொண்டிருக்கிறது. அதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் ஒரு விவாதம் எழுந்திருக்கிறது.

அரச பல்கலைக்கழகங்களில் நிகழும் பட்டமளிப்பு விழாக்களில் வேலை இல்லாத புதிய தொகுதி பட்டதாரிகள் உற்பத்தி செய்யப்படுகிறார்கள் என்று அந்த வாதப் பிரதிவாதங்களில் சுட்டிக்காட்டப்படுகிறது. அரச வேலை தேடும் மேலும் ஒரு தொகுதி பட்டதாரிகள் இன்று வெளியேறுகிறார்கள் என்று அவர்கள் விமர்சிக்கிறார்கள்.

ஏற்கனவே 4000க்கும் குறையாத பட்டதாரிகள் வேலை தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை நான் வெளியேற்றப்பட்ட பட்டதாரிகள் என்று எழுதுவதற்கு பதிலாக அரச வேலை இல்லாத பட்டதாரிகள் என்று எழுதுவதே பொருத்தம் என்று கூறுவோர் சமூகத்தில் உண்டு.மேற்படி பட்டதாரிகள் அரச வேலைகளுக்காக காத்திருக்கிறார்கள் என்ற பொருளில் தான் அவ்வாறு அழைக்கப்படுகிறார்கள்.அரச வேலை அல்லாத தனியார் நிறுவனங்களில் வேலை செய்ய அவர்கள் தயாரில்லை என்றும் அரச வேலை அல்லாத ஏனைய வேலைகளை அவர்கள் நிரந்தரமானவைகளாகவோ அல்லது பாதுகாப்பானவைகளாகவோ கருதவில்லை என்றும், அதனால் அவர்கள் அரச வேலைகளுக்காக காத்திருக்கிறார்கள் என்றும் விமர்சிக்கப்படுகிறது.

பட்டதாரிகள் ஏன் அரச வேலைக்காக காத்திருக்கிறார்கள்?பின்வரும் காரணங்களை கூறலாம்.

முதலாவது காரணம், ஓய்வூதியம். அதாவது இறக்கும்வரை ஒரு பாதுகாப்பு ஏற்பாடு உண்டு.

இரண்டாவது,அதிகம் கஷ்டப்பட்டு உழைக்க தேவையில்லை.அரச வேலைகளில் குறிப்பிட்ட சில சோதனைகளை எழுதுவதன் மூலமும் மூப்பின் மூலமும் பதவி உயர்வுகளைப் பெறலாம். அங்கே வேலை செய்தால்தான் சம்பளம் என்று இல்லை. எனவே வேலை செய்யாமலும் சம்பளம் வாங்கலாம் என்ற ஒரு நிலை இருப்பதினால் அரசு வேலை கஷ்டப்படத் தேவையில்லாத ஒன்று என்ற கருத்து ஒரு பகுதி பட்டதாரிகள் மத்தியில் உண்டு என்று விமர்சிக்கப்படுகிறது.

மூன்றாவது,அரச உத்தியோகத்துக்கு சமூகத்தில் காணப்படும் மதிப்பு.குறிப்பாக சீதனச் சந்தையில் காணப்படும் மதிப்பு.

மேற்சொன்ன காரணங்களினால்தான் அரச ஊழியத்துக்காக பட்டதாரிகள் காத்திருக்கிறார்கள் என்று விளக்கம் கூறப்படுகிறது. ஆனால் அரச ஊழியத்தில் மேற்கூறிய நன்மைகள் மட்டும் இல்லை. தீமைகளும் உண்டு. குறிப்பாக ஓர் இளம் பட்டதாரி தன் பட்டப் படிப்பை முடித்து வெளியேறும் போது அனேகமாக திருமண வயதை அடைந்திருப்பார். அவர் திருமணம் செய்யும் நபரும் அரசு ஊழியராக இருந்தால், பெரும்பாலும் அவர்களுக்கு கிடைக்கும் முதலாவது அரச ஊழியம் கஷ்டப்பிரதேசத்தில்தான் கிடைக்கும். கஷ்டப் பிரதேசத்தில் அவர்கள் குறைந்தது 8 ஆண்டுகள் வேலை செய்யவேண்டி இருக்கும். இந்த எட்டு ஆண்டுகள் என்ற பருவம் பெரும்பாலும் இல்லறத்தின் தொடக்கப் பருவம். திருமணம் செய்த புதிதில் சந்தோசமாக சுற்றித் திரியும் பருவம். இக்காலகட்டத்தில் அரச ஊழியம் கிடைக்குமாக இருந்தால் அதுவும் கஷ்டப் பிரதேசத்தில் கிடைக்குமாக இருந்தால் என்ன நடக்கும்?

வாழ்க்கையில் அதிகம் சந்தோஷமாக இருக்க வேண்டிய ஒரு பருவம் பயணங்களில் முடிந்துவிடும். அரச ஊழியர்களுக்கான பேருந்துக்காக அதிகாலையில் எழுவதிலும்,வேலை முடிந்து அந்தி சாய்ந்தபின் வீடு திரும்புவதிலும் அந்தக் காலத்தின் பெரும் பகுதி கழித்து விடும். குழந்தை பெறும் போதும் நிலைமை அப்படித்தான் இருக்கும். வீட்டில் குழந்தையை பராமரிக்க முதியவர்கள் இல்லை என்றால் வாழ்க்கை மேலும் சித்திரவதையாகும்.குழந்தையின் மழலையை அனுபவிப்பதற்கும் நேரம் இருப்பதில்லை. ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்.

எனவே அரச ஊழியத்தில் இருக்கும் பிரதானமான பிரதிகூலம் எதுவென்றால் கஷ்டப் பிரதேசத்தில் வேலை செய்ய வேண்டும் என்பதுதான். திருமண வாழ்வில் ஆரம்பப் பருவத்தை,சந்தோஷமாக இருக்கவேண்டிய ஒரு பருவத்தை இப்படி வேலைக்காக மாவட்டங்களுக்கு இடையில் பயணம் செய்வதிலேயே தொலைத்தால் பிறகெப்பொழுது வாழ்க்கையை அனுபவிப்பது ?

ஆனால் அரசு ஊழியத்தை நாடும் பெரும்பாலான பட்டதாரிகள் இதை ஒரு விவகாரமாக எடுத்துக் கொள்வதில்லை. கஷ்டப் பிரதேச வேலையை 8 அல்லது 5 ஆண்டுகளுக்குள் கடந்து விட்டால் பின்னர் வாழ்க்கை முழுக்க சந்தோசமாக இருக்கலாம் என்று அவர்கள் நினைக்கக் கூடும்.

அதேசமயம் அரச ஊழியம் அல்லாத வேறு வேலைகளுக்குப் போக அல்லது தாமாகவே தொழில் முனைவோராகி, ரிஸ்க் எடுத்து புதிய தொழில்துறைகளை ஆரம்பிக்க எத்தனை பட்டதாரிகள் தயார்?

இந்தக் கேள்வியை அதன் பிரயோக அர்த்தத்தில் மறுவளமாக கேட்டால், அரச ஊழியத்துக்கு வெளியே தொழில் முனைவராக ஏழுவதற்குத் தேவையான துணிச்சலையும் தகைமையும் நமது கல்விமுறை பட்டதாரிகளுக்கு வழங்குகிறதா? என்று கேட்கலாம்.

இல்லை.அதுதான் பிரச்சினையே. வேலையில்லாத பட்டதாரிகள் தொழில் முனைவோர்களாய் ஏழுவதற்கும் சொந்தத் தொழிலில் ரிஸ்க் எடுப்பதற்கும் தயாராக இல்லை என்பது அவர்களுடைய தொழில் தொடர்பான மனோ நிலை சம்பந்தப்பட்ட ஒரு விடயம் மட்டுமல்ல. அது அதைவிட ஆழமான பொருளில் நமது கல்வி முறையின் மீதான ஒரு விமர்சனமாகத்தான் முன்வைக்கப்பட வேண்டும். நமது கல்வி முறை தொழில் முனைவோரை உருவாக்கத் தவறுகிறது என்பதனை பெரும்பாலான பொருளாதார நிபுணர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்.தொழில் முனைவோருக்குத் தேவையான துணிச்சலையும் சுய ஒழுக்கத்தையும் சமூக விழிப்பையும் புதிய சிந்தனையையும் நமது கல்விமுறை போதிய அளவுக்குக் கட்டியெழுப்பவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு பரவலாக உண்டு.

நமது யூடியூப்பர்களில் ஒரு பகுதியினர் சமூகத்தில் அரிதாகக் காணப்படும் தொழில் முனைவோரைத் தேடிச் சென்று படம்பிடித்து வெளியே கொண்டு வருகிறார்கள். அதனால் தூண்டப்பட்டு தாமும் அவ்வாறு ரிஸ்க் எடுப்பதற்கு எத்தனை பட்டதாரிகள் தயாராக இருக்கிறார்கள்?

வேலையில்லாத பட்டதாரிகளின் தொகை அதிகரிப்பது என்பது பட்டதாரிகளின் குற்றம் அல்ல.அது முதலாவதாக கல்வி முறையில் உள்ள குறைபாடு.

இரண்டாவதாக,வேலை வாய்ப்புகளை உருவாக்கத் தவறிய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளில் உள்ள பலவீனம்.

மூன்றாவதாக,தொழில் தெரிவுகள் பற்றிய சமூகத்தின் கூட்டு உளவியலில் உள்ள கோளாறு.

எனவே இதுவிடயத்தில் பட்டதாரிகளைக் குறை சொல்ல முடியாது. அவர்கள் பிழையான கல்விமுறையின் பலியாடுகள்தான்.மிகப்பிழையான பொருளாதாரக் கொள்கைகளால் பாதிக்கப்பட்டவர்கள்.அவர்கள் பொன்னிறமான கனவுகளோடு பல்கலைக்கழகத்துக்கு வருகிறார்கள். ஆனால் வேலைக்காக காத்திருப்பதிலேயே அவர்களுடைய கனவுகள் நிறமிழந்து போகின்றன. வயதுகளும் தொலைந்து போகின்றன.

எனவே இந்த விடயத்தில் தீர்வைக் கண்டுபிடிக்க வேண்டியது பட்டதாரிகள் மட்டுமல்ல, அரசாங்கமும் கல்விக் கொள்கைகளைத் திட்டமிடும் நிபுணர்களும் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.குறிப்பாக ஈழத் தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தவரை மிகப்பலமான நிதி வளம்மிக்க புலம்பெயர்ந்த சமூகம் ஒன்று உண்டு.புலம்பெயர்ந்த சமூக வாழ்க்கையை ஒரு சொர்க்கம் என்று கருதும் பட்டதாரிகளே அதிகம். ஓர் ஆங்கில ஆசிரியர் சொன்னார், இரண்டாவது பட்டப்படிப்புக்காக ஆங்கிலம் பயிலவரும் பெரும்பாலானவர்கள் புலப்பெயர்ச்சியை நோக்கமாகக் கொண்டவர்கள் என்று.ஓர் இளம் தலைமுறையினரின் மனதில் புலப்பெயர்ச்சி ஒரு கனவாகத் தொடர்ந்து காணப்படுகிறது.ஆனால் இந்த விடயத்தில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களில் உள்ள தொழில் முனைவோரும் தொழில் அதிபர்களும் தாயகத்தில் முதலீடு செய்யலாம்.புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கலாம். புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் நிதி ரீதியாக பிரகாசமான ஒரு முன்னுதாரணமாகத் திகழும் இந்த சமூகத்தில்,அதே புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தில் வெற்றிபெற்ற தொழில் முனைவோர் தாயகத்தில் முதலீடுகளைச்  செய்வதன்மூலம் தமது முன்னுதாரணங்களைப் பின்பற்றும் பட்டதாரிகளின் எண்ணிக்கையை,தொழில் முனைவோரின் எண்ணிக்கையை அதிகப்படுத்தலாம்.

தன் சொந்த பலத்தில்,தன் சொந்தக் காலில், தனது வேரிலேயே நிலைத்து நிற்கத் தேவையான துணிச்சலையும் நம்பிக்கையையும் புதிய தலைமுறைக்கு வழங்குவது தமிழ்த் தேசியவாத நோக்குநிலையில் கட்டாயமானது.அது தேசத்தைக் கட்டி எழுப்புவதன் ஒரு பகுதி. தனது வேர்களை அறுத்துக் கொண்டு ஓர் இளைய தலைமுறை புலம்பெயர முயற்சிப்பது என்பது தமிழ்த் தேசிய அரசியலின் தோல்வி. எனவே இந்த விடயத்தில் விசேஷமாக புலம்பெயர்ந்த தமிழ்த் தொழில் முனைவோருக்கு ஒரு பொறுப்பு உண்டு.அது அரசியல் அர்த்தத்தில் தேசத்தைக் கட்டியெழுப்பும்  ஒரு பொறுப்புத்தான். தமிழ்த் தேசியப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் ஒரு பொறுப்புத்தான்.

https://athavannews.com/2026/1465820

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு கீழே உள்ள பதிவில் முழுமையாக ஒப்புதல் இல்லை. ஆனால் அரச உத்தியோகத்திற்காக மட்டும் கல்வி கற்பது வீண்வேலை.

புதிய திறன்களயும், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களையும் அறியாது சமூகத்திற்கு உதவமுடியாது.

#கறுப்பு_அங்கியும், #கையில_சுருட்டின_பேப்பரும். யாழ்ப்பாணத்தின் புதிய 'கௌரவ' பிச்சைக்காரர்கள்!

இந்த வருசமும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வாசலில கறுப்பு அங்கியும் கையில ஒரு சுருட்டி வைச்ச பேப்பருமா நிக்கிற இளவட்டங்களைப் பாக்க வடிவாத்தான் கிடக்கு. கேமராவுக்கு முன்னால அந்தப் புன்னகையும், பெத்தவங்கள் முகத்தில பெருமிதமும்...

ஆனா, இந்த ஓலப்பேயத்தனத்திற்கு பின்னால ஒளிஞ்சிருக்கிற "எதிர்கால சூனியம்" இவங்களுக்குத் தெரியுதோ இல்லையோ, சமூகத்துக்கு நல்லாவே தெரியும்! கண்டியளே...

இந்த வருசம் மட்டும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 3252 'வேலையில்லாப் பட்டதாரிகளை' உற்பத்தி செய்து, ரோட்டுக்கு அனுப்பியிருக்கு. பலத்த கரகோசங்கள்!

கேட்கக் கொஞ்சம் கசப்பாத்தான் இருக்கும், ஆனா உண்மையை உரக்கச் சொல்லித்தான் ஆகோணும். எந்த ஸ்கில்லும் (Skill) இல்லாம, வெறுமனே மனப்பாடம் பண்ணி வாங்குன இந்தப் பட்டத்தை வைச்சுக்கொண்டு இனி என்னத்தைச் செய்யப் போறாங்கள்? கொஞ்சம் கமண்டில சொல்லுங்கோ போட்டு பொளப்பம்...

#வரலாற்றுப்_பாடமும், #மாறாத_எங்கட_மோட்டுத்தனமும்!

வரலாற்றைக் கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம். 1970களில் வடக்கில் இளைஞர்கள் ஆயுதம் தூக்கியதற்கும், 1971 மற்றும் 1989களில் தெற்கில் ஜே.வி.பி (JVP) இளைஞர்கள் கிளர்ச்சி செய்ததற்கும் மிக முக்கியமான காரணங்களில் ஒன்று — இந்த வேலையில்லாப் பட்டதாரிப் பிரச்சனைதான்! வேணும் எண்டால் நிறைய தேடிப்படியுங்கோ ஓலப்பேயன்களே....!!

பிரிட்டிஷ்காரன் விட்டுப்போன கிளார்க் (Clerk) வேலைக்கான கல்விமுறையை மாத்தாம, "பட்டம் படிச்சா அரச வேலை கிடைக்கும்" எண்ட மாயையில ஒரு சமூகத்தையே பலிகொடுத்ததுதான் அரசியல்வாதிகள் செஞ்ச மிகப் பெரிய துரோகம். கனவு அரசியல் பிச்சைக்காரர்களும் அதையேதான் செய்துகொண்டும் இருக்கிறார்கள்....

50 வருசம் கடந்தும் நாங்க மாறினபாடா இல்ல! அதே மோட்டுத்தனமான முட்டுக்கொடுத்தல். "எங்கட கல்விதான் உலகத்திலயே சிறந்த கல்வி" எண்டு மார்தட்டிக்கொண்டு திரியவேண்டியது. ஆனா, படிக்கிற படிப்புக்கும் வெளியில இருக்கிற வேலைவாய்ப்புக்கும் சம்மந்தமே இருக்காது. இதை கேட்டால் கதைச்சால் என்னோட மல்லுக்கட்டுவாங்க.... நீ என்ன எஞ்சினியரோ எண்டு கேட்பானுகள், காமடிப்புன்னகைகள்... (எனக்கே தெரியாது நான் எஞ்சினியரா எண்டது வேற கதை)

#ஏசி_ரூம்_மோகமும், #அந்தஸ்துப்_பம்மாத்தும்.

பட்டம் படிச்சா உடனே சுழல் கதிரையும், ஏ/சி (A/C) ரூமும் வேணும் எண்டு எதிர்பார்க்கிற மனநிலை. ஒரு அரச வேலைக்காக 5 வருசமோ 10 வருசமோ காத்திருந்து, மனித வளத்தை வீணாக்குகிற ஒரே சமூகம் நாமாகத்தான் இருப்போம். கடும் படிச்ச மோடுகள்...

#ஆண்பிள்ளைகளின் அவலம்.

கேம்பஸ் முடிஞ்சவுடனே கல்யாணத்தைப் பேசலாம் எண்டு பெத்தவங்கள் நினைப்பாங்கள். ஆனா சமூகம் அவனுக்கு "வேலையில்லாப் பட்டதாரி" எண்டுற பட்டத்தைத்தான் சீதனமா குடுக்கும்.

யாழ்ப்பாணத்தில ஒரு மின்குமிழை (Bulb) மாத்தோணும் எண்டா 2,000 ரூவா சம்பளமும், வடிவான மதியச் சாப்பாடும் குடுக்க ஆக்கள் ரெடி. ஆனா, இந்தப் பட்டம் படிச்ச 'அறிவாளி' வருவாரா? வரமாட்டார்! ஏனெண்டா அது "கௌரவக் குறைச்சல்". வீட்டை இருந்து அப்பா அம்மாட பென்சன் காசில சாப்பிட்டாலும் சாப்பிடுவானே தவிர, இறங்கி வேலை செய்ய மாட்டான்.

#பெண்பிள்ளைகளின் நாடகம்: பொம்பிளைப் பிள்ளை எண்டா... எப்படியாவது லண்டன், கனடா, சுவிஸ் எண்டு ஒரு வெளிநாட்டு மாப்பிள்ளையைப் பிடிச்சு கட்டிக் குடுத்திடலாம் எண்ட நப்பாசை. அங்க போய் இந்தம்மா என்ன வேலை செய்யும் எண்டு நினைக்கிறியள்? ஊரில செய்யக் கூச்சப்பட்ட அதே சின்னச் சின்ன வேலைகளைக் குளிருக்குள்ள கிடந்து கஸ்டப்பட்டுச் செய்யும். நாகரீகத்துக்காக சின்ன சின்ன வேலை எண்டானான் (வீட்டில கக்கூஸ் கழுவவே வாரத்துக்கு ஒருக்கா யாரையும் சம்பளத்துக்கு கூப்பிடுறவையள்) என்ன ஒரு பம்மாத்து கண்டியளோ!

#கலைப்பிரிவும், #சித்த_மருத்துவமும். யாருடைய தவறு?

சரி, அரச வேலை வேண்டாம், பிரைவேட் கம்பனிக்குப் (Private Sector) போவம் எண்டா... அங்க போய் சைவ சித்தாந்தமும், வரலாறும் படிச்சதை வைச்சு என்னத்தைச் செய்ய? ஒபீசில (Office) வாற பொங்கல், தீபாவளிக்குப் பாட்டுப் பாடி கலைநயத்தைக் கூட்டலாமே தவிர, வேற என்ன ஸ்கில்லோட வெளியில வந்திருக்கிறாங்கள்?

இன்னொரு பக்கம் சித்த மருத்துவம். படிச்சு முடிச்சு 37 வயசாகுது, இன்னும் வேலை இல்ல. பிழையான கோர்ஸை (Course) நாலு அஞ்சு வருசம் படிச்சு தங்களின்ட வாழ்க்கையை வீணாக்கச் சொன்னது யார்? எந்த அழுத்தத்துக்காக இந்த மாணவர்களை உள்ளே எடுத்தாங்கள்? எனது நண்பி சித்தமருத்துவ பட்டதாரி இப்ப 38 வயசில கோறணமேந்து வேலை கிடைச்சிருக்கு ஆனால் வேலை சித்தமருத்துவர் இல்லை. 30-35 வயசுக்கு பிறகு வேலைக்கு புதிதாக இணைபவர்களிடம் இருந்து என்ன வேலை வாங்கேலும் எண்டு நினைக்கிறியள்??

வேற வழி தெரியாம, அரசியல்வாதிகளின்ட வாசல் படியில போய் ஏறி இறங்கி, கடைசியில "அரச வேலையை எதிர்பார்க்கும் சித்த மருத்துவ மாணவர்கள் சங்கம்" எண்டு ஒரு போர்ட்டைத் (Board) தூக்கிக்கொண்டு நிக்கிறதே இவங்களுக்கு வேலையாப் போச்சு. அரசியல்வாதிக்கு இதுதான் வேணும். அவனுக்கு இது ஒரு நிரந்தர வாக்கு வங்கி!

பெற்றோருக்கும் இளைய சமுதாயத்துக்கும் ஒரு வார்த்தை...

பெற்றோர்களே. தயவுசெய்து "என்ட பிள்ளை கேம்பஸ் போகுது" எண்ட வெட்டிப் பந்தாவுக்காக அவங்களை பலிகடா ஆக்காதேங்கோ. காலம் மாறிட்டுது. அரச வேலை எண்டது இனிமேல் கானல் நீர்தான். உங்கட பிள்ளைக்கு வேலைவாய்ப்பைத் தரக்கூடிய திறன்களை (Skills) வளர்க்க உதவுங்கோ. அதுக்கு செலவு செய்யுங்கோ. சாமத்தியவீடு, கீபேத்டே, கலியானவீடு எண்டு வெட்டிப்பந்தா செலவுகளை குறைக்கலாம்.

இளைய சமுதாயமே. சுருட்டின பேப்பரை வைச்சுக்கொண்டு அரசியல்வாதிகளின்ட வாசல்ல நிக்கிறதை விடுங்கோ. உங்கட கோர்ஸில (Course) வேலை இல்லை எண்டா, உலகத்துக்கு என்ன தேவையோ அதைப் படிங்கோ.

தொழில்நுட்பம், மொழியறிவு, செய்முறைத் திறன் (Practical skills) இத வளர்க்காம, "பட்டம் படிச்சிருக்கன்" எண்டு சொல்லிக்கொண்டு திரிஞ்சா, காலம் உங்களை இரக்கமில்லாம ஓரங்கட்டிப் போடும்! Practical skills அ வைச்சு வேலை எடுங்கோ சம்பாதீங்கோ, அதைவைச்சு எம் கலைகளை உலகறிய செய்யுங்கோ பணம் தானா உங்களை தேடிவரும்.....

இந்த யதார்த்தத்தை உங்களின் நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் பகிர்ந்து, அவர்கள் மத்தியில் ஒரு ஆரோக்கியமான விவாதத்தை ஏற்படுத்துங்கோ, போட்டு பொளந்து தள்ளுங்கோ.... தேடல் உள்ள சமூகமே வெல்லும்.

அல்லது, பட்டதாரிகள் மாற்று வழிகளில் எவ்வாறு தங்களை நிலைநிறுத்திக் கொள்ளலாம் என்பது குறித்த நவீன வேலைவாய்ப்புத் திறன்கள் (Modern Skillsets) பற்றி உங்களுக்குத் தெரிந்த தகவல்கள் தேடுங்கோ எனக்கும் சொல்லுங்கோ கேப்பம். எனக்கு ஓலப்பேயர்களின் சமூகம் தேவையே இல்லை.....

https://www.facebook.com/share/p/18VBrMJJdJ/?mibextid=wwXIfr

  • கருத்துக்கள உறவுகள்

ரிஸ்க் எடு கொண்டாடு - நிலாந்தன்

cccc-1024x588.png

கடந்த வாரம் யாழ். பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. வழமையாக சமூகவலைத்தளங்களில் பட்டம் பெற்றவர்களின் கொண்டாட்டப் படங்கள் பகிரப்படும். ஆனால் இம்முறை வேலையற்ற பட்டதாரிகளை முன்வைத்து ஒரு விவாதப்  பரப்பு திறக்கப்பட்டது.

பல்கலைக்கழகங்கள் ஆண்டு தோறும் பட்டதாரிகளை உருவாக்குகின்றன. ஆனால் நாட்டில் இப்பொழுது 42000க்கும்  குறையாத வேலையற்ற பட்டதாரிகள் உண்டு. நாட்டில் வேலையில்லாத 365,951 தனி நபர்களில், பட்டதாரிகள் அல்லது அதையொத்த கல்வித் தகமையுடையவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 42,254  என்று பிரதமர் ஹரிணி கடந்தநொவம்பர்  மாதம் நாடாளுமன்றத்தில் கூறினார்.

அவர்களை வேலையற்ற பட்டதாரிகள் என்று அழைப்பதை விடவும் அரச வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரிகள் என்று அழைப்பது நல்லது என்று எனது நண்பர் ஒருவர் கூறுவார். கடந்த வாரம் சமூக வலைத்தளங்களில் நிகழ்ந்த வாதப்பிரதிவாதங்களும் அந்த வகைப்பட்டவைதான். பட்டதாரிகள் பட்டம் பெற்ற பின் வேலை இன்றி தெருவில் நிற்கப் போகிறார்கள் அல்லது அரச வேலை கேட்டு ஆர்ப்பாட்டம் செய்யப் போகிறார்கள் என்ற பொருளில் வாதப் பிரதிவாதங்கள் நடந்தன. இத்தகையதோர் பின்னணியில்,புதிய தொகுதி பட்டதாரிகள் வெளியேறுவது என்பது வெளியேற்றப் பட்டதாரிகளின் எண்ணிக்கையில் ஒரு புதிய தொகுதி இணைவதைக்  குறிக்கும் என்றும் அங்கு விமர்சிக்கப்பட்டது.

பல்கலைக்கழக அனுமதி கிடைக்கும்பொழுது வாழ்வின் முக்கிய பேறு ஒன்றை அடைந்து விட்டதாக ஒவ்வொரு பிள்ளையும் பெருமைப்படுகிறது. அது உண்மைதான். பொன்னிறக் கனவுகளோடு அவர்கள் பல்கலைக்கழகத்துக்குள் வருகிறார்கள். பட்டம் கிடைத்ததும் அவர்கள் அதைக் கொண்டாடும் விதத்தில், எடுக்கும் ஒளிப்படங்களில் அதை அவர்கள் எந்தளவு பெருமைக்குரியதாகக்  கொண்டாடுகிறார்கள் என்பது தெரியும். ஆனால் பட்டம் எடுத்த பின் வேலை தேடி அலையும் போதுதான் அவர்களுடைய பொன் நிறக் கனவுகள் நிறமிழக்கத்  தொடங்குகின்றன.

111-zzzzz.jpg

111-ccccccc.jpg

ஆனால் அதற்கு அவர்கள் மட்டும்  பொறுப்பல்ல. பின்வரும் அடிப்படைக் காரணங்கள் உண்டு.

முதலாவது,சந்தைப் பெறுமதி மிக்க, தொழில் வாய்ப்புகள் அதிகமுடைய பட்டதாரிகளை உருவாக்கும் விதத்தில் கல்விக் கொள்கை திட்டமிடப்படாமை.

இரண்டாவது, புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதில் தொடர்ச்சியாக வந்த அரசாங்கங்கள் தோல்வியடைந்தமை.

மூன்றாவது, தொழில் தொடர்பாக சமூகத்திடம் இருக்கும் அளவுகோல்கள், பிரமைகள்.

நான்காவது,தொழில் முனைவோரை உருவாக்காத கல்வி முறை. இதை வேறு வார்த்தைகளில் சொன்னால் அரசு அலுவலர்களை அதிகமாக உற்பத்தி செய்யும் கல்வி. அதாவது ரிஸ்க் எடுக்கக் கற்றுக் கொடுக்காத கல்வி.

எனவே பட்டதாரிகள் வேலையில்லாமல் இருக்கிறார்கள் என்பதற்கு தனிய  அவர்கள் மட்டும் பொறுப்பல்ல. மேற்சொன்ன காரணங்களும் பொறுப்பு அது ஒரு கூட்டுத் தோல்வி.

பட்டதாரிகளில் பெரும் பகுதியினர் ஏன் அரச வேலையை நாடுகிறார்கள் ? அதற்குப் பின்வரும் காரணங்கள் கூறப்படுகின்றன.

முதலாவதாக அங்கே கஷ்டப்பட்டு வேலை செய்யத் தேவையில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு. சும்மா இருந்து சம்பளம் எடுக்கலாம்,தடை தாண்டிப் பரீட்சைகளில் சித்தி பெறுவதன் மூலம் பதவி உயர்வுகளையும் சம்பள உயர்வுகளையும் பெறலாம் என்று பட்டதாரிகள் நம்புகிறார்கள் என்ற குற்றச்சாட்டு.

இரண்டாவது காரணம்,ஓய்வூதியம் கிடைக்கும். எனவே முதிய வயதில் பாதுகாப்பு உண்டு.

மூன்றாவது காரணம், அரசாங்கம் என்றால் பலமானது. மக்களைப் பாதுகாப்பது. அதிகாரம் மிக்கது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அரச ஊழியராக இருப்பது அதாவது அரச அதிகாரத்தை சமூகத்தில் அமுல்படுத்துவோராக இருப்பது கௌரவமானது, உயர்வானது என்ற சமூக நம்பிக்கை.

நான்காவது காரணம், அரசாங்கத்தை மட்டுமல்ல யாரையும் பார்த்துக் கொண்டிருக்காமல்,யாரிடமும் கையேந்தாமல் தன் திறமைகளை நம்பி, தான் கற்றவைவைகளை அடிப்படையாக வைத்து தொழில் முனைவோராக மேல் எழத்  தேவையான துணிச்சலும் வைராக்கியமும் இல்லாமல் இருப்பது.

இந்த நான்கு காரணங்களிலும் முக்கியமானது நாலாவது. பட்டதாரிகள் ஏன் தொழில் முனைவோராக மேலெழ முடியவில்லை? அல்லது மேலெழ விரும்பவில்லை? இந்தக் கேள்விக்குப் பதில், கல்வி முறையின் தோல்விக்குள் இருக்கிறது. நமது கல்வி முறைமை தொழில் முனைவோருக்குத் தேவையான துணிச்சலையும் படைப்புத்திறனையும் தெரிவுகளையும் பட்டதாரிகளுக்கு வழங்கத் தவறிவிட்டதா?

111-zzzzz.jpg

அரச ஊழியத்துக்குள் கிடைக்கும் பாதுகாப்பு,அரசு ஊழியர் என்பதால் கிடைக்கும் மரியாதை இவை இரண்டையும் தவிர ஒரு தொழில் முனைவோர் அல்லது புதிதாகச் சிந்திக்கும் ஒரு பட்டதாரி அதிகம் சம்பாதிக்கலாம், அதிகம் சாதிக்கலாம், அதிகம் பிரபல்யமாகலாம் என்பதற்கு நமது சமூகத்துக்குள்ளேயே உதாரணங்கள் உண்டு.

ஆனால் பட்டங்கள் தொடர்பாகவும் தொழில் தெரிவுகள் பொறுத்தும் தமிழ்ச் சமூகத்தில் காணப்படும் இறுகிக் கட்டிபத்திய சிந்தனைகளை உடைத்துக் கொண்டு வெளிவர பெரும்பாலான பட்டதாரிகள் தயாராக இல்லை. ஒரே வசனத்தில்  சொன்னால் ரிஸ்க் எடுக்கத்  தயாரில்லை.

ஒரு காலம் யுத்த களத்தில் அதி உச்ச ரிஸ்க் எடுத்த ஒரு சமூகம். அதைவிட முக்கியமாக அவ்வாறு ரிஸ்க் எடுக்கலாம் என்ற முன்னுதாரணத்தை காட்டிய பெரும்பாலானவர்கள் முறைசார் கல்விக்கூடாக வந்தவர்கள் அல்ல. ஆயுதப் போராட்டம் தமிழ் சமூகத்தில் பல வெடிப்புகளை ஏற்படுத்தியது. சமூகத்தின் பாரம்பரியக் கல்வி தொடர்பான நம்பிக்கைகளை அது தகர்த்தெறிந்தது. கல்வித் தகமைக்கும் துணிச்சலுக்கும், கல்வித் தகமைக்கும் சாதனைகளுக்கும் இடையே கண்டிப்பாகத் தொடர்பு இருக்கத் தேவையில்லை என்பதையும் அது நிரூபித்தது. பட்டப் படிப்புக்களை அடிப்படைத் தகைமைகளாகப் போற்றாத  விடுதலை இயக்கங்கள் சமூகத்தின் தலைவிதியைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டன. சமூகத்தின் மூன்றில் ஒரு பகுதியை புலம்பெயர வைத்தன. உலகமே வியக்கும் தியாகங்களையும் வீரத்தையும் நிரூபித்த ஒரு போராட்டம் அது.

ஆயுதப் போராட்டத்தின் தொடக்கத்தில் “சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது”, “கல்வித் தகுமையற்ற போராளிகள் வெற்றிபெற மாட்டார்கள்” என்றெல்லாம் விவாதிக்கப்பட்டது. ஆனால் கடந்த நான்கு நூற்றாண்டு காலப்பகுதிக்குள் அரசற்ற தமிழ் மக்கள் மத்தியில் கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்கள் நிலைத்திருந்த கருநிலை அரசானது மேற்படி நம்பிக்கைகளை விவாதத்துக்கு உள்ளாக்கியது. எனினும் ஆயுதப் போராட்டத்தின் தோல்விக்கு பின் மீண்டும் படிப்பு,செல்வம்,செல்வாக்கு… போன்றவை தலைமையைத் தீர்மானிக்கும் அளவுகோல்களாக மேலெழுந்தன. அதிகம் பட்டப் படிப்புகள் இல்லாதவர்கள் நடத்திய போராட்டம் தோல்வியடைந்தது என்று கூறுவோர் இப்பொழுது உண்டு.

ஆனால் அவர்கள் வசதியாக மறந்துவிடும் ஒரு விடயம் என்னவென்றால், ஆயுதப் போராட்டத்திற்கு முன்னரும் பின்னருமான அப்புக்காத்துக்களின் அரசியல் தமிழ் மக்களை மட்டுமல்ல, அவர்களுடைய கட்சிகளையே எங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது? என்பதுதான். ஆங்கிலம் தெரிந்த, சிங்களம் தெரிந்த, கற்றறிந்த தமிழ்த் தலைவர்களும் இறுதி வெற்றியைப் பெறவில்லை. அவர்களை மீறி எழுந்த ஆயுதப் போராட்டமும் இறுதி வெற்றியைப் பெறவில்லை.

இப்படிப்பட்டதோர் அரசியல், பொருளாதார,சமூக உளவியல் பின்னணிக்குள், கடந்த 16ஆண்டுகளையும் தொகுத்துப் பார்த்தால் தமிழ் மக்களின் சுதந்திரத்துக்கான போராட்டத்தில் இருந்து அடுத்து வந்த தலைமுறை கற்றுக்கொண்டவை எவை? என்று கேள்வி வலிமையாக மேல் எழுகிறது. ஆயுதப் போராட்டம் கற்றுக்கொடுத்த துணிச்சல், தியாக முன்னுதாரணம்,ரிஸ்க் எடுக்கும் மனோநிலை போன்றவற்றில் இருந்து பட்டதாரிகள் எந்தளவுக்குக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள்?

அவர்கள் உயிரைக் கொடுக்க வேண்டாம். பெரிய அளவில் அர்பணிக்கவும் வேண்டாம். தொழில் ரீதியாக ரிஸ்க் எடுத்தாலே, துணிகர தொழில் முயற்சிகளில் இறங்கினாலே போதும். செல்வந்தர்களாகலாம். புதிய முன்னுதாரணங்கள் ஆகலாம். ஆனால் ஏன் தங்களுடைய சௌகரிய வலையங்களை விட்டு வெளியே வரப் பயப்படுகிறார்கள்?

“துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிற்பது கப்பலுக்குப் பாதுகாப்பானது. ஆனால் கப்பல் அதற்காகக் கட்டப்படுவதில்லை” என்று ஆங்கில மேற்கோள் ஒன்று  உண்டு. அது போலவே “அமைதியான கடல் சிறந்த படகோட்டிகளை உருவாக்குவதில்லை” என்றும் ஆங்கிலம் மேற்கோள் ஒன்று உண்டு. இந்த இரண்டு மேற்கோள்களில் இருந்தும் கற்றுக் கொண்டால் பட்டதாரிகளுக்கு அவர்களுடைய பட்டங்களே  சிறைகளாக மாறாது.

https://www.nillanthan.com/8161/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.