Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசிய மக்கள் சக்தியை, இன்றைய ஜேவிபியை தமிழ்த்தரப்பு புரிந்து கொள்ள வேண்டும் — கருணாகரன் —

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய மக்கள் சக்தியை, இன்றைய ஜேவிபியை தமிழ்த்தரப்பு புரிந்து கொள்ள வேண்டும்

February 24, 2026

தேசிய மக்கள் சக்தியை, இன்றைய ஜேவிபியை தமிழ்த்தரப்பு புரிந்து கொள்ள வேண்டும்

— கருணாகரன் —

தமிழ்த் தரப்பினர் தமது அரசியலைச் சரிசெய்ய வேண்டும் என்றால், மெய்யாகவே முன்கொண்டு செல்ல வேண்டும் என்றால், தேசிய மக்கள் சக்தியைப் புரிந்து கொள்ள வேண்டும். தேசிய மக்கள் சக்தியை (அதாவது இன்றைய அரசாங்கத்தை) புரிந்து கொள்ள வேண்டும் என்றால், இன்றைய ஜே.வி.பியைப் புரிந்து கொள்ள வேண்டும். 

இன்றைய ஜே.வி.பியைப் புரிந்து கொள்ள முடியாதோரின் கண்களுக்கு ரோஹண விஜேவீர, சோமவன்ஸ அமரசிங்க போன்ற முகங்களே தென்படும். அந்த முகங்கள் பிரதிபலித்த பழைய – தீவிர இனவாத முகத்தையும் அது மேற்கொண்ட பகிரங்க வெறுப்பு நடவடிக்கைகளுமே நினைவில் எழும். அவ்வாறு தோன்றுவதால்தான் பழைய ஜே.வி.பியை நினைத்துக்கொண்டு தமிழ்த்தரப்புப் பேசுகிறது; எழுதுகிறது; தீர்மானங்களை எடுக்கிறது;  போராட்டங்களை நடத்துவதற்கு முயற்சிக்கிறது. மொத்தத்தில் தன்னுடைய அரசியலை முன்னெடுக்கிறது. இது தவறான ஒரு வழிமுறை – அணுகுமுறை ஆகும். என்பதால் தமிழ்த்தரப்பு மேலும் பின்னடைவையும் தோல்வியையுமே சந்திக்கப்போகிறது என உறுதியாகச் சொல்ல முடிகிறது. 

எதிர்த் தரப்பைப் பற்றிச் சரியான கணிப்பீட்டைச் செய்து கொண்டால்தான் அதை எதிர்கொள்ளக் கூடிய அரசியற் பொறிமுறைகளை(தீர்மானங்கள், போராட்டங்கள், தந்திரோபாயங்கள், தொடர்பாடல்கள் போன்றவை)  முன்னெடுக்க முடியும். இல்லையெனில் தடுமாற்றங்களும் தவறான நடவடிக்கைகளுமே தொடரும். தடுமாற்றங்களும் தவறான நடவடிக்கைகளும் ஒருபோதும் சரியான விளைவுகளைத் தராது. நற்பயன்கள் எதையும் விளைக்காது. பதிலாக மேலும் பின்னடைவையும் சிதைவையும் தோல்வியையுமே வழங்கும்.

இன்றைய ஜே.வி.பி வேறு. அது நெகிழ்ச்சியும் உருமாற்றத்தையும் கொண்ட அநுரகுமார திசநாயக்கவின் முகத்தை உடையது. உறுதிப்பாடும் நிதானமும் கொண்ட ரில்வின் சில்வாவின் அகத்தைக் கொண்டது. இந்த இரண்டின் கலவையே தேசிய மக்கள் சக்தி. இன்றைய ஜே.வி.பியைப் புரிந்து கொள்ள முற்படுவோருக்கு இந்தக் கலவையின் நுட்பத்தையும் சிறப்பையும் தெரிந்து கொள்வது இலகுவாக இருக்கும். சுலபமாக ஒன்றைச் சொல்லி இதை விளக்கவும் நிரூபிக்கவும் முடியும். 

உள்நாட்டிலும் சரி, வெளியுலகிலும் சரி, மிகச் செல்வாக்கான – நம்பிக்கைத் தோற்றமுடைய முகம் அநுரகுமார திசநாயக்கவினுடையது. ‘மக்களின் நாயகன்’ என்று சொல்லக் கூடிய இன்றைய தலைவர் அநுரகுமார திசநாயக்க. இதை யாரும் மறுக்க முடியாது. வெளியுறவுக் கொள்கை உட்பட எதையும் வெளிப்படையாக உரத்துச் சொல்லாத, இனவாதத்தை வெளிக்காட்டாத செல்வாக்கான இந்த முகத்தை வாய்ப்பாகப் பயன்படுத்தி, அநுரகுமார முதலில் ஓரிடத்துக்குச் செல்வார். அடுத்ததாக அவரைத் தொடர்ந்து ஏனைய அரசுப் பிரதிநிதிகள் அந்த இடங்களுக்குச் செல்வார்கள். அதற்குப் பிறகு ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா செல்வார். உள்நாட்டிலும் இதுதான் நடக்கிறது. வெளிநாடுகளிலும் இதுவே நிகழ்கிறது.

அநுர முதலில் இந்தியாவுக்குச் சென்றார். இப்பொழுது ரில்வின் சென்று திரும்பியிருக்கிறார். அநுர முதலில் சீனாவுக்குச் சென்றார். ரில்வின் பிறகு சீனாவுக்குச் சென்று திரும்பினார். அநுர முதலில் ஐரோப்பாவுக்குச் சென்றார். ரில்வின் பின்னர் ஐரோப்பாவுக்குச் சென்று திரும்பினார். அநுர முதலில் வடக்குக் கிழக்கிற்கு வந்து சென்றார். ரில்வின் அதற்குப் பிறகு வடக்குக் கிழக்குக்குச் சென்று திரும்பினார்.

இந்தப் பயண ஒழுங்கினை யாரும் மீள நினைவு கொண்டு நோக்கலாம். 

அநுரகுமார திசநாயக்க தன்னுடைய செல்வாக்கான அடையாளத்தைக் கொண்டு கடினமான பாதைகளை இலகுவாக்கிக் கொடுக்கிறார். அதைப் பயன்படுத்தி, ஏனையவர்கள் தங்களுடைய அடுத்த கட்டச் செயற்பாடுகளை முன்னெடுக்கிறார்கள். ஆக ஜே.வி.பியின் அல்லது தேசிய மக்கள் சக்தியின் நம்பிக்கை நட்சத்திரமும் அரசியல் முதலீடும் அநுரகுமார திசநாயக்கவே. அதை அவரும் மிகச் சரியாகப் பேணிக்கொள்கிறார். மிகச் சாதாரணரைப் போன்ற ஒரு தோற்றத்தில் மிக வலிமையான மனிதராக – தலைவராக அநுர தொழிற்படுகிறார். அநுரகுமார திசநாயக்கவுக்கு துணை செய்வதைப்போல அல்லது தேசிய மக்கள் சக்தியின் பயணத்துக்கு வலுச்சேர்ப்பதைப்போல கூடவே பிரதமர் ஹரிணி அமரசூரியவும் விஜித ஹேரத்தும் இருக்கிறார்கள். கடந்த ஓராண்டைக் கடந்த ஆட்சிக் காலத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சர்வதேச ரீதியாக வலுவான உறவைக் கட்டியெழுப்பியிருக்கிறது. நன்மதிப்பைப் பெற்றுள்ளது.

ஒரு வகையான நூதனமான அரசியலைக் கையாண்டு, தன்னைப் பாதுகாத்துக் கொண்டு முன்செல்கிறது தேசிய மக்கள் சக்தி. இதற்கு இசைவாகத் தன்னை நெகிழ்ந்து கொடுக்கிறது ஜே. வி. பி.

ஆனால், தேசிய மக்கள் சக்திக்கும் ஜே.வி. பிக்கும் இடையில் பெரியதொரு உட்போர் நடந்து கொண்டிருப்பதாக பரவலாகப் பேசப்படுவதுண்டு. இதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை எதிர்கொள்ள முடியாமலிருக்கும் ஆற்றாமையின் வெளிப்பாடு. இரண்டாவது, தேசிய மக்கள் சக்தியையும் ஜே.வி.பியின் இன்றைய போக்கையும் புரிந்து கொள்ளத் தவறுவதன் விளைவு. 

இந்த இரண்டினாலும் தேசிய மக்கள் சக்திக்கோ ஜே.வி.பிக்கோ எந்தப் பாதிப்புமில்லை. 

இங்கே வேடிக்கை என்னவென்றால், தங்களுடைய கட்சிக்குள் அல்லது அரசியற் கூட்டுக்குள் எந்தப் பிரச்சினையுமில்லை. தேசிய மக்கள் சக்திக்குள்தான் குத்து வெட்டுகளும் இழுபறிகளும் என்பதைப்போல கதை விடுவதுதான். 

எல்லாக் கட்சிகளுக்குள்ளும் உள்முரண்பாடுகளும் கொதி நிலைகளும் இருப்பது வழமை. உள் முரண்பாடுகளால் தமிழரசுக் கட்சி நீதிமன்றத்திலேயே போய் நிற்கிறது. ஐ.தே.க உள்முரண்பாட்டினால் நீண்டகாலம் இழுபறிப்பட்டதை யாரும் மறக்க மாட்டார்கள். இனித் தாக்குப் பிடிக்க முடியாது என்ற நிலையில்தான் ரணில் – சஜித் அணி என்று பிளவு ஏற்பட்டது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உள் முரண்பாடுகளும் உட்கொதிப்புகளும் உலகறிந்தவை. தமிழ் முற்போக்குக் கூட்டணிக்குள், முஸ்லிம் காங்கிரசுக்குள் எல்லாம் உள் முரண்பாடுகள் அல்லது கொதிப்பான நிலை இருந்தபடியால்தான் அவற்றிலிருந்து சிலர் வெளியேறும் நிலை உருவானது. விடுதலைப் புலிகள் அமைப்புக்குள் நிகழ்ந்த உள்முரண்பாடுகள் பல. உமா மகேஸ்வரன் – பிரபாரன் முரண்பாடு, மாத்தயா – பிரபாகரன் முரண்பாடு, கருணா – பிரபாகரன் முரண்பாடு என பல அடுக்குகள் உண்டு. முரண்பாடும் கொதிப்புகளும் எந்தக் கட்சியிலும் எந்தக் கூட்டிலும் இருக்கும். அதைக் கடந்து, தமது அரசியல் முன்னெடுப்பில் குறித்த தரப்பு எப்படிச் செயற்படுகிறது? எப்படி வெற்றிகளைப் பெறுகிறது? எப்படி முன்செல்கிறது என்பதே அரசியல் பெறுமானமும் அரசியல் வெற்றியுமாகும்.

தேசிய மக்கள் சக்தியும் ஜே.வி.பியும் தமக்குள் உள்ள முரண்பாடுகளை எப்படித் தீர்த்துக் கொள்கின்றன என்று வெளியே தெரியவில்லை. அவற்றுக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கும் கொதிப்புகளின் தன்மையைச் சரியாக உணர முடியவில்லை. நிச்சயமாக புகைச்சல்களும் முரண்களும் இருந்தே தீரும். ஆனால், அரசியல் ரீதியாக இரண்டும் முன்செல்வதை யாரும் மறுக்கவே முடியாது. இதையே நாம் கவனிக்க வேண்டும்.

இதற்கு முதற்காரணம் வரலாற்றிலிருந்து படிப்பினைகளைப் படித்துக் கொண்ட ஒரு பேரமைப்பாக ஜே.வி.பி இன்றிருப்பதாகும். தன்னுடைய லட்சியவாதத்துக்கும் நடைமுறைகளுக்கும் இடையிலான தூரத்தையும் (இடைவெளியையும்) முரண்பாடுகளையும் இயலாமைகளையும் அது கற்றுள்ளது. அப்படிக் கற்றுக் கொண்டபடியால்தான் அதனால் தன்னை நெகிழ்ந்து கொடுக்க முடிந்திருக்கிறது. அதற்கு ஏராளம் உதாரணங்கள் உண்டு. அண்மைய (இந்த வார) உதாரணம், ரில்வின் சில்வாவின் இந்தியப் பயணமும் அது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களுமாகும். 

இந்தியப் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய ரில்வினிடம் ‘இந்து’ பத்திரிகை கேள்வி எழுப்பியபோது, ”ஜே.வி.பி இந்தியாவுக்கு எதிரானது என்று நீண்டகாலமாக நிலவிவரும் கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டி வந்து விட்டது. காலப்போக்கில் எமது நிலைப்பாட்டில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்”  என்று சொல்லியிருக்கிறார் ரில்வின். மட்டுமல்ல, கொழும்பு – ‘சண்டே ரைம்ஸ்’ பத்திரிகை எழுப்பிய “ஜே.வி.பியின் முதல் தலைவரான ரோஹண விஜேவீர இந்தியாவுக்கு எதிராக எடுத்த நிலைப்பாட்டை நீங்கள் கைவிட்டு விட்டீர்களா?” என்ற கேள்விக்குப் பதில் சொல்லும்போது, “இலங்கைக்குப் பாதகமாக அமையக் கூடிய கொள்கைகளைக் கடைப்பிடித்த இந்திய அரசாங்கங்களை எதிர்த்தோமே தவிர, நாம் ஒருபோதுமே இந்தியாவை எதிர்க்கவில்லை“ என்று தெரிவித்திருக்கிறார். 

இது எதைக்காட்டுகிறது? 

முந்திய ஜே.வி.பி யிடமிருந்து இப்படி ஒரு சொல் வருமா? அதைப்போல இன்றைய ஜே.வி.பியிடமிருந்து முன்பைப்போலக் கடுமையான ஒரு வார்த்தை வரவே வராது. இதுதான் படிப்பினை. இதுதான் மாற்றம். இதுதான் விவேகம். இதுதான் வெற்றிக்கான வழிமுறை.

புறச் சூழலின் யதார்த்தத்தை ஜே.வி.பி கற்றுத் தேர்ந்துள்ளது. அதனால்தான் ரில்வின் இந்தியாவைக் குறித்து அவ்வாறு சொல்ல வேண்டியிருக்கிறது. மட்டுமல்ல, இந்தியாவுக்கு அவர் பயணம் செய்தது கூட யதார்த்தத்தை உணர்ந்ததன் விளைவே. இந்தியாவை தூர வைத்துக் கையாள முடியாது என்று அவருக்குத் தெரியும். 

மட்டுமல்ல, ரில்வினின் இந்தியப் பயணம் ஜே.வி.பிக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் மிகப் பெரிய வெற்றியே. ஒன்று, நல்லுறவை வலுப்படுத்துவதில். இரண்டாவது, பொருளாதார உதவி மற்றும் அபிவிருத்திக்கான பங்களிப்பைப் பெற்றுக் கொள்வதில். மூன்றாவது, இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக இந்தியாவின் அழுத்தத்தைக் குறைப்பதில்.

ஏற்கனவே அநுரகுமார திசநாயக்க, ஹரிணி அமரசூரிய போன்றவர்கள் சென்று நிலைமையைச் சுமுகமாக்கியிருந்தனர். இப்பொழுது ரில்வின் இந்தியாவுக்குப் போய் வந்திருக்கிறார். இப்படிப் பல உயர்மட்டத் தலைவர்களும் இந்தியாவுக்கு விஜயம் செய்வதை இந்தியாவும் வரவேற்கிறது. இதில் இரண்டு தரப்புக்கும் வெற்றியே உண்டு. இந்திய எதிர்ப்பைத் தன்னுடைய வரலாறாகக் கொண்ட ஒரு இயக்கத்தை – அதனுடைய ஆட்சியைத் தன் வசப்படுத்தியுள்ளது இந்தியா. அதைப்போல, தான் முந்திய நிலைப்பாட்டைப்போல இந்திய எதிர்ப்பில் தான் இல்லை என்று காட்டுவதன் மூலம் இந்தியாவின் சந்தேகத்தையும் பகைமையையும் இல்லாமற் செய்துள்ளது ஜே.வி.பி. கூடவே தனக்கு ஏற்படவுள்ள நெருக்கடிகளையும் அழுத்தத்தையும் குறைத்துள்ளது அல்லது இல்லாமற் செய்துள்ளது. 

ஆக, இந்தியா, மேற்குலகம், சீனா, யப்பான், ஐ.எம்.எவ் என அனைத்துத் தரப்புகளையும் கையாளும் நுட்பத்தை தேசிய மக்கள் சக்தியும் ஜே.வி.பியும் கற்றுக் கொண்டுள்ளன.  ‘L போர்ட் அரசாங்கம் ஓராண்டைத் தாக்குப் பிடிப்பதே கஸ்ரம்‘ என்று கேலி செய்த ரணில் விக்கிரமசிங்கவைக் காணவேயில்லை. 

இப்படியெல்லாம் சொல்லும்போது, தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் விழுந்தடித்துக் கொண்டு, மகிழ்ச்சி ஆரவாரம் செய்ய வேண்டியதில்லை. அப்படி அவர்களால் செய்யவும் முடியாது. அதைப்போல தேசிய மக்கள் சக்தியை எதிர்ப்பவர்கள், இந்தக் கட்டுரை தேசிய மக்கள் சக்தியையும் ஜே.வி.பியையும் கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்கிறது என்று கொதிக்கவும் தேவையில்லை. அப்படியான எந்த ஆபத்தையும் இந்தக் கட்டுரை உருவாக்கவில்லை. 

ஏனெனில் நாம் மேலும் ஊன்றிக் கவனிக்க வேண்டிய சங்கதிகள் உள்ளன. மேலே சொல்லப்பட்டவையெல்லாம் தேசிய மக்கள் சக்தி – ஜே.வி.பி ஆகியவற்றின் புதிய தோற்றமும் புதிய அணுகுமுறைகளும் என்பது உண்மையே. அதே அளவுக்கு இவற்றின் இன்னொரு பக்கமும் உண்டு.  

முக்கியமாக வெளிநாட்டில்  தம்முடைய உறவை நல்லபடி பார்த்துக் கொள்ள முயற்சிக்கும் தேசிய மக்கள் சக்தியும் ஜே.வி.பியும் உள்நாட்டில் சிறுபான்மைத் தேசிய இனங்களின் விடயங்களில் சரியாகச் செயற்படவே இல்லை. அதனால் தமிழ்பேசும் மக்கள் ஏமாற்றத்திற்குள்ளாகியுள்ளனர். வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் பேசும் சமூகத்தின் மத்தியிலும் தேசிய மக்கள் சக்திக்கான ஆதரவுத் தளம் ஒன்று உருவாகியுள்ளது என்பதை வைத்துக் கொண்டு, குறித்த சமூகங்களின் அரசியல் உரிமைகளையும் அபிலாஷைகளையும் புறக்கணிக்கவும் முடியாது. அதை வேறு விதமாக – இனவாத அடிப்படையில் – கையாளவும் கூடாது. ஆனால், அப்படித்தான் தேசிய மக்கள் சக்தியும் ஜே.வி.பியும் தவறாகச் செயற்படுகின்றன. 

இனப்பிரச்சினைக்கான தீர்வைப்பற்றி அரசாங்கம் வாயே திறக்கவில்லை. குறைந்த பட்சம் மாகாணசபைகளுக்கான தேர்தல் பற்றி ஜனாதிபதியோ பிரதமரோ எத்தகைய உத்தரவாதத்தையும் வழங்கவில்லை. இனப்பிரச்சினை தீர்வு உள்ளடங்கலாக, பல பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காண்பதற்கு ஏதுவான அரசியலமைப்பை மாற்றம் செய்வதற்கு ஆலோசிக்கப்படுவதாகச் சொல்லப்பட்டாலும். அது தொடர்பாக மேலும் எந்த நடவடிக்கையையும் காணவில்லை. ஏன், பொருளாதார மறுசீரமைப்போ, புதிய பொருளாதாரக் கொள்கையோ, மாற்றுப் பொருளாதார விருத்தித் திட்டங்களோ உருவாக்கப்படவும் இல்லை.

ஆக மொத்தத்தில் முந்திய அரசாங்கங்களைப்போல சிங்களப் பெரும்பான்மையினரின் விருப்பத்தை நிறைவேற்றுவதிலேயே அரசாங்கம் (ஜே.வி.பியும் தேசிய மக்கள் சக்தியும்) அக்கறையாக உள்ளது. ஆனாலும் அப்படிக் காட்டிக் கொள்ளாமல் முற்போக்கு முலாம் பூசிச் சிரிக்கிறது. இது கபடத்தனமாகும். இந்தக் கபடத்தனத்தோடு வெற்றிகரமாக ஆட்சியை நடத்தலாம். ஆனால், நாட்டை அமைதியாக்கவோ முன்னேற்றவோ முடியாது. 

இப்பொழுது எல்லாமே சரியாக நடப்பதாக – முன்னோக்கிச் செல்வதாக – ஒரு தோற்றம் காண்பிக்கப்படுகிறது. இதுதான் ஜே.வி.பி  – தேசிய மக்கள் சக்தி ஆகியவற்றின்  வெற்றியாகும். அடிப்படையில் எந்த மாற்றங்களையும் செய்யாமல், மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. மாற்றம் நிகழ்ந்து விட்டது என்று நம்ப வைக்கப்படுகிறது. System Change என்பதற்கே மக்கள் தேர்தல் ஆணையை தேசிய மக்கள் சக்திக்கு வழங்கினார்கள். அந்த ஆணையின் அடிப்படையில் அநுரகுமார அணி எந்த வகையில் System Change ஐச் செய்துள்ளது? அல்லது அப்படியொரு மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு முயற்சிக்கிறது? இதை தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் தெளிவாகச் சொல்ல வேண்டும்.

இப்பொழுது நடக்கும் இந்த அரசியல் வித்தைக்கு எவ்வளவு காலம் ஆயுள் என்று உடனடியாகச் சொல்லத் தெரியவில்லை. ஆனால், தந்திரங்களுக்கும் சூதான அரசியலுக்கும் மயானம் வெகு தொலைவில் இல்லை. 

இப்பொழுது நாம் இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் சொல்லப்பட்டதை மீள நினைவுபடுத்திக் கொள்ளலாம். “தமிழ்த் தரப்பினர் தமது அரசியலைச் சரிசெய்ய வேண்டும் என்றால், மெய்யாகவே முன்கொண்டு செல்ல வேண்டும் என்றால், தேசிய மக்கள் சக்தியைப் புரிந்து கொள்ள வேண்டும். தேசிய மக்கள் சக்தியை (அதாவது இன்றைய அரசாங்கத்தை) புரிந்து கொள்ள வேண்டும் என்றால், இன்றைய ஜே.வி.பியைப் புரிந்து கொள்ள வேண்டும்” என்பதை. 

அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகவும் கைப்பற்றிய அதிகாரத்தைத் தக்க வைப்பதற்காகவும் ஜே.வி.பி தன்னை நெகிழ்த்தியுள்ளது. ‘ரில்வின் இந்தியாவிடம் சரணடைந்து விட்டார்’ என்றுகூடச் சிலர் கடுந்தொனியில் பேசலாம். கைகொட்டிச் சிரிக்கலாம்.

அரசியலில் என்னவும் நடக்கலாம். எப்படியும் நடக்கலாம். அதிகாரத்துக்கு வேண்டியவை எவையோ அவற்றைச் செய்ய வேண்டும் என்ற யதார்த்தமே இங்கே முக்கியமானது. அதையே ஜே.வி.பியும் தேசிய மக்கள் சக்தியும் செய்கின்றன. 

இனப்பிரச்சினைத்  தீர்வுக்கும் மாகாணசபைத் தேர்தலுக்கும் இந்தியாவின் ஆதரவையும் உதவியையும் பெற வேண்டிய தமிழ்த் தரப்பு இந்தியாவைக் கையாளத் தெரியாமல் தடுமாறுகிறது. இலங்கை அரசுடன் நெருங்கவும் முடியாமல் திணறுகிறது. போருக்குப் பிறகான அரசியலை எப்படி முன்னெடுப்பது? இதுவரையான அரசியற் பயணத்தில் கற்றுக் கொண்டது என்ன? பெற்றுக் கொண்டது என்ன? இலங்கையில் மெய்யாகவே சாத்தியப்படக்கூடிய அரசியற் தீர்வு என்ன? அதை எப்படிப் பெற்றுக் கொள்ளது? சர்வதேச ஆதரவை எப்படிப் பெறுவது? அதனுடைய சாத்தியப்பாடுகளும் வரையறைகளும் என்ன? என எதைப்பற்றியும் அது படித்தறியவும் இல்லை. பட்டறியவும் இல்லை. 

இப்பொழுதும் அந்தப் பழைய – நைந்துபோன – சில பல சொற்களை வைத்துக் கொண்டு வார்த்தைகளால் அரசுக்கு எதிராகப் பீரங்கிகளை அடிக்கின்றன. தினமும் சமூக வலைத்தளங்கள், பத்திரிகைகள், ஊடக மாநாடுகளில் எல்லாம் குற்றச்சாட்டுப் போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன. அதாவது தாம் எந்த நிலையிலும் நெகிழவோ மாறவோ மாட்டோம் என்ற விதமாக தோற்றம் காட்டுகின்றனர் தமிழ் அரசியற் தரப்பினர். இது சுத்தமான அரசியற் கோமாளித்தனமாகும். 

‘நெகிழவோ மாறவோ மாட்டோம்‘ என்ற பிடிவாதத்தினால்தான் விடுதலைப்புலிகள் தம்மையே பலியிட நேர்ந்தது. அதற்கான விலையை இன்னும் பல ஆண்டுகளுக்குத் தமிழ் மக்கள் கொடுக்க வேண்டியுள்ளது. அந்தக் காலத்தை நீடிப்பதும் குறைத்துக் கொள்வதும் தற்பொழுது அரங்கில் உள்ள தமிழ்க் கட்சிகளின் கைகளில்தான் உள்ளது.

ஆனால், அந்தத் தலைமைகளோ வரலாற்றிலிருந்தும் எதையும் படிக்கத் தயாரில்லை. வாழ்க்கை அனுபவங்களில் இருந்தும் எதையும் கற்றுக் கொள்ள முயல்வதில்லை. குறைந்த பட்சம் தம்மை, தம்முடைய கட்சியை அல்லது இயக்கத்தை ஒரு தடவையேனும் மறுபார்வைக்குட்படுத்திச் சீர்ப்படுத்த முயற்சிப்பதில்லை. தமிழ்த்தரப்பில் தலைமைத்துவத்துக்கான ஒரு முகத்தைக்கூடக் காணவில்லை. இருக்கின்ற முகங்களை மாறி மாறி ஒவ்வொரு தரப்பும் சிதைப்பதிலேயே குறியாக உள்ளன. தலைமைக்குரிய ஒரு முகத்தையாவது அடையாளப்படுத்தி வளர்த்தெடுக்க வேண்டும் என்ற எண்ணம் எவரிடத்திலும் இல்லை. இந்தப் பிழையான குணத்தினால்– இயல்பினால் – மூடத்தனத்தினால் – இந்தியாவையும் எதிர்த்தரப்பாகிய சிங்களர்களிடத்தில் ஒப்படைத்து விட்டு ஒப்பாரி வைக்கின்றன. 

இந்த (இன்றைய) உலகத்தில் ஒப்பாரிக்கு எந்தப் பெறுமானமும் இல்லை. அது புலம்பலுக்கு ஒப்பானது. புலம்பல்களை யாரும் செவி கொள்வதில்லை. 

உங்களுடைய விருப்பங்களும் தேவைகளும் நியாயங்களும் நிலைப்பாடும் எவ்வளவோ பெறுமதிக்குரியனவாக இருக்கலாம். அவை எல்லாவற்றையும் பெறுவதற்கான யதார்த்தம் எப்படி உள்ளது என்பதே முக்கியமானது. ஜே.வி.பி பல பத்து ஆண்டுகளாக  கடைப்பிடித்த நிலைப்பாட்டையெல்லாம் மூடையாகக் கட்டி ஓரத்தில் வைத்து விட்டு, தன்னை நெகிழ்த்தி, தேசிய மக்கள் சக்தியாகி, இன்று உலகத்தோடு ஒத்து ஓடுகிறது. 

தமிழர்களோ???

https://arangamnews.com/?p=12696

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கிருபன் said:

எதிர்த் தரப்பைப் பற்றிச் சரியான கணிப்பீட்டைச் செய்து கொண்டால்தான் அதை எதிர்கொள்ளக் கூடிய அரசியற் பொறிமுறைகளை(தீர்மானங்கள், போராட்டங்கள், தந்திரோபாயங்கள், தொடர்பாடல்கள் போன்றவை)  முன்னெடுக்க முடியும். இல்லையெனில் தடுமாற்றங்களும் தவறான நடவடிக்கைகளுமே தொடரும். தடுமாற்றங்களும் தவறான நடவடிக்கைகளும் ஒருபோதும் சரியான விளைவுகளைத் தராது. நற்பயன்கள் எதையும் விளைக்காது. பதிலாக மேலும் பின்னடைவையும் சிதைவையும் தோல்வியையுமே வழங்கும்.

இதற்கு முதற்காரணம் வரலாற்றிலிருந்து படிப்பினைகளைப் படித்துக் கொண்ட ஒரு பேரமைப்பாக ஜே.வி.பி இன்றிருப்பதாகும். தன்னுடைய லட்சியவாதத்துக்கும் நடைமுறைகளுக்கும் இடையிலான தூரத்தையும் (இடைவெளியையும்) முரண்பாடுகளையும் இயலாமைகளையும் அது கற்றுள்ளது. அப்படிக் கற்றுக் கொண்டபடியால்தான் அதனால் தன்னை நெகிழ்ந்து கொடுக்க முடிந்திருக்கிறது. அதற்கு ஏராளம் உதாரணங்கள் உண்டு. அண்மைய (இந்த வார) உதாரணம், ரில்வின் சில்வாவின் இந்தியப் பயணமும் அது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களுமாகும். 

இந்தியப் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய ரில்வினிடம் ‘இந்து’ பத்திரிகை கேள்வி எழுப்பியபோது, ”ஜே.வி.பி இந்தியாவுக்கு எதிரானது என்று நீண்டகாலமாக நிலவிவரும் கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டி வந்து விட்டது. காலப்போக்கில் எமது நிலைப்பாட்டில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்”  என்று சொல்லியிருக்கிறார் ரில்வின். மட்டுமல்ல, கொழும்பு – ‘சண்டே ரைம்ஸ்’ பத்திரிகை எழுப்பிய “ஜே.வி.பியின் முதல் தலைவரான ரோஹண விஜேவீர இந்தியாவுக்கு எதிராக எடுத்த நிலைப்பாட்டை நீங்கள் கைவிட்டு விட்டீர்களா?” என்ற கேள்விக்குப் பதில் சொல்லும்போது, “இலங்கைக்குப் பாதகமாக அமையக் கூடிய கொள்கைகளைக் கடைப்பிடித்த இந்திய அரசாங்கங்களை எதிர்த்தோமே தவிர, நாம் ஒருபோதுமே இந்தியாவை எதிர்க்கவில்லை“ என்று தெரிவித்திருக்கிறார். 

ஆக, இந்தியா, மேற்குலகம், சீனா, யப்பான், ஐ.எம்.எவ் என அனைத்துத் தரப்புகளையும் கையாளும் நுட்பத்தை தேசிய மக்கள் சக்தியும் ஜே.வி.பியும் கற்றுக் கொண்டுள்ளன.  ‘L போர்ட் அரசாங்கம் ஓராண்டைத் தாக்குப் பிடிப்பதே கஸ்ரம்‘ என்று கேலி செய்த ரணில் விக்கிரமசிங்கவைக் காணவேயில்லை. 

முக்கியமாக வெளிநாட்டில்  தம்முடைய உறவை நல்லபடி பார்த்துக் கொள்ள முயற்சிக்கும் தேசிய மக்கள் சக்தியும் ஜே.வி.பியும் உள்நாட்டில் சிறுபான்மைத் தேசிய இனங்களின் விடயங்களில் சரியாகச் செயற்படவே இல்லை. அதனால் தமிழ்பேசும் மக்கள் ஏமாற்றத்திற்குள்ளாகியுள்ளனர். வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் பேசும் சமூகத்தின் மத்தியிலும் தேசிய மக்கள் சக்திக்கான ஆதரவுத் தளம் ஒன்று உருவாகியுள்ளது என்பதை வைத்துக் கொண்டு, குறித்த சமூகங்களின் அரசியல் உரிமைகளையும் அபிலாஷைகளையும் புறக்கணிக்கவும் முடியாது. அதை வேறு விதமாக – இனவாத அடிப்படையில் – கையாளவும் கூடாது. ஆனால், அப்படித்தான் தேசிய மக்கள் சக்தியும் ஜே.வி.பியும் தவறாகச் செயற்படுகின்றன. 

இனப்பிரச்சினைக்கான தீர்வைப்பற்றி அரசாங்கம் வாயே திறக்கவில்லை. குறைந்த பட்சம் மாகாணசபைகளுக்கான தேர்தல் பற்றி ஜனாதிபதியோ பிரதமரோ எத்தகைய உத்தரவாதத்தையும் வழங்கவில்லை. இனப்பிரச்சினை தீர்வு உள்ளடங்கலாக, பல பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காண்பதற்கு ஏதுவான அரசியலமைப்பை மாற்றம் செய்வதற்கு ஆலோசிக்கப்படுவதாகச் சொல்லப்பட்டாலும். அது தொடர்பாக மேலும் எந்த நடவடிக்கையையும் காணவில்லை. ஏன், பொருளாதார மறுசீரமைப்போ, புதிய பொருளாதாரக் கொள்கையோ, மாற்றுப் பொருளாதார விருத்தித் திட்டங்களோ உருவாக்கப்படவும் இல்லை.

ஆக மொத்தத்தில் முந்திய அரசாங்கங்களைப்போல சிங்களப் பெரும்பான்மையினரின் விருப்பத்தை நிறைவேற்றுவதிலேயே அரசாங்கம் (ஜே.வி.பியும் தேசிய மக்கள் சக்தியும்) அக்கறையாக உள்ளது. ஆனாலும் அப்படிக் காட்டிக் கொள்ளாமல் முற்போக்கு முலாம் பூசிச் சிரிக்கிறது. இது கபடத்தனமாகும். இந்தக் கபடத்தனத்தோடு வெற்றிகரமாக ஆட்சியை நடத்தலாம். ஆனால், நாட்டை அமைதியாக்கவோ முன்னேற்றவோ முடியாது. 

இப்பொழுது எல்லாமே சரியாக நடப்பதாக – முன்னோக்கிச் செல்வதாக – ஒரு தோற்றம் காண்பிக்கப்படுகிறது. இதுதான் ஜே.வி.பி  – தேசிய மக்கள் சக்தி ஆகியவற்றின்  வெற்றியாகும். அடிப்படையில் எந்த மாற்றங்களையும் செய்யாமல், மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. மாற்றம் நிகழ்ந்து விட்டது என்று நம்ப வைக்கப்படுகிறது. System Change என்பதற்கே மக்கள் தேர்தல் ஆணையை தேசிய மக்கள் சக்திக்கு வழங்கினார்கள். அந்த ஆணையின் அடிப்படையில் அநுரகுமார அணி எந்த வகையில் System Change ஐச் செய்துள்ளது? அல்லது அப்படியொரு மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு முயற்சிக்கிறது? இதை தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் தெளிவாகச் சொல்ல வேண்டும்.

இப்பொழுது நடக்கும் இந்த அரசியல் வித்தைக்கு எவ்வளவு காலம் ஆயுள் என்று உடனடியாகச் சொல்லத் தெரியவில்லை. ஆனால், தந்திரங்களுக்கும் சூதான அரசியலுக்கும் மயானம் வெகு தொலைவில் இல்லை. 

இப்பொழுது நாம் இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் சொல்லப்பட்டதை மீள நினைவுபடுத்திக் கொள்ளலாம். “தமிழ்த் தரப்பினர் தமது அரசியலைச் சரிசெய்ய வேண்டும் என்றால், மெய்யாகவே முன்கொண்டு செல்ல வேண்டும் என்றால், தேசிய மக்கள் சக்தியைப் புரிந்து கொள்ள வேண்டும். தேசிய மக்கள் சக்தியை (அதாவது இன்றைய அரசாங்கத்தை) புரிந்து கொள்ள வேண்டும் என்றால், இன்றைய ஜே.வி.பியைப் புரிந்து கொள்ள வேண்டும்” என்பதை. 

இனப்பிரச்சினைத்  தீர்வுக்கும் மாகாணசபைத் தேர்தலுக்கும் இந்தியாவின் ஆதரவையும் உதவியையும் பெற வேண்டிய தமிழ்த் தரப்பு இந்தியாவைக் கையாளத் தெரியாமல் தடுமாறுகிறது. இலங்கை அரசுடன் நெருங்கவும் முடியாமல் திணறுகிறது. போருக்குப் பிறகான அரசியலை எப்படி முன்னெடுப்பது? இதுவரையான அரசியற் பயணத்தில் கற்றுக் கொண்டது என்ன? பெற்றுக் கொண்டது என்ன? இலங்கையில் மெய்யாகவே சாத்தியப்படக்கூடிய அரசியற் தீர்வு என்ன? அதை எப்படிப் பெற்றுக் கொள்ளது? சர்வதேச ஆதரவை எப்படிப் பெறுவது? அதனுடைய சாத்தியப்பாடுகளும் வரையறைகளும் என்ன? என எதைப்பற்றியும் அது படித்தறியவும் இல்லை. பட்டறியவும் இல்லை. 

இப்பொழுதும் அந்தப் பழைய – நைந்துபோன – சில பல சொற்களை வைத்துக் கொண்டு வார்த்தைகளால் அரசுக்கு எதிராகப் பீரங்கிகளை அடிக்கின்றன. தினமும் சமூக வலைத்தளங்கள், பத்திரிகைகள், ஊடக மாநாடுகளில் எல்லாம் குற்றச்சாட்டுப் போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன. அதாவது தாம் எந்த நிலையிலும் நெகிழவோ மாறவோ மாட்டோம் என்ற விதமாக தோற்றம் காட்டுகின்றனர் தமிழ் அரசியற் தரப்பினர். இது சுத்தமான அரசியற் கோமாளித்தனமாகும். 

ஆனால், அந்தத் தலைமைகளோ வரலாற்றிலிருந்தும் எதையும் படிக்கத் தயாரில்லை. வாழ்க்கை அனுபவங்களில் இருந்தும் எதையும் கற்றுக் கொள்ள முயல்வதில்லை. குறைந்த பட்சம் தம்மை, தம்முடைய கட்சியை அல்லது இயக்கத்தை ஒரு தடவையேனும் மறுபார்வைக்குட்படுத்திச் சீர்ப்படுத்த முயற்சிப்பதில்லை. தமிழ்த்தரப்பில் தலைமைத்துவத்துக்கான ஒரு முகத்தைக்கூடக் காணவில்லை. இருக்கின்ற முகங்களை மாறி மாறி ஒவ்வொரு தரப்பும் சிதைப்பதிலேயே குறியாக உள்ளன. தலைமைக்குரிய ஒரு முகத்தையாவது அடையாளப்படுத்தி வளர்த்தெடுக்க வேண்டும் என்ற எண்ணம் எவரிடத்திலும் இல்லை. இந்தப் பிழையான குணத்தினால்– இயல்பினால் – மூடத்தனத்தினால் – இந்தியாவையும் எதிர்த்தரப்பாகிய சிங்களர்களிடத்தில் ஒப்படைத்து விட்டு ஒப்பாரி வைக்கின்றன. 

இந்த (இன்றைய) உலகத்தில் ஒப்பாரிக்கு எந்தப் பெறுமானமும் இல்லை. அது புலம்பலுக்கு ஒப்பானது. புலம்பல்களை யாரும் செவி கொள்வதில்லை. 

உங்களுடைய விருப்பங்களும் தேவைகளும் நியாயங்களும் நிலைப்பாடும் எவ்வளவோ பெறுமதிக்குரியனவாக இருக்கலாம். அவை எல்லாவற்றையும் பெறுவதற்கான யதார்த்தம் எப்படி உள்ளது என்பதே முக்கியமானது. ஜே.வி.பி பல பத்து ஆண்டுகளாக  கடைப்பிடித்த நிலைப்பாட்டையெல்லாம் மூடையாகக் கட்டி ஓரத்தில் வைத்து விட்டு, தன்னை நெகிழ்த்தி, தேசிய மக்கள் சக்தியாகி, இன்று உலகத்தோடு ஒத்து ஓடுகிறது. 

பகிர்விற்கு நன்றி கிருபன் அண்ணா.

நம்மட தலைவர்கள் கொஞ்சம் இதுபோன்ற கட்டுரைகளை பிரதி எடுத்து ஆறுதலாக திரும்ப திரும்ப வாசித்தாலே சின்ன சின்ன மாற்றங்கள் ஏற்படலாம்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.