Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வேகமாக மாறும் காட்சிகள்: இரானுடன் இணக்கம் காட்ட இந்தியா தாமதித்து விட்டதா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வேகமாக மாறும் காட்சிகள்: இரானுடன் இணக்கம் காட்ட இந்தியா தாமதித்து விட்டதா?

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், இந்தியா, மத்திய கிழக்கு, எண்ணெய் எரிவாயு சப்ளை

பட மூலாதாரம்,AFP via Getty Images

கட்டுரை தகவல்

  • தீபக் மண்டல்

  • பிபிசி செய்தியாளர்

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

பிப்ரவரி 26-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோதி இஸ்ரேல் பயணத்தை முடித்து இந்தியா திரும்பினார். அதற்கு இரண்டு நாட்கள் கழித்து, பிப்ரவரி 28-ஆம் தேதி இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா, இரான் மீது தாக்குதல் நடத்தின.

இஸ்ரேலும் அமெரிக்காவும் நடத்திய தாக்குதல்களுக்கு பின்னர், அமெரிக்காவின் ராணுவத் தளங்கள் உள்ள வளைகுடா நாடுகளை இரான் தாக்கியது.

இஸ்ரேல்–அமெரிக்கா–இரான் இடையிலான போரின் முதல் இரண்டு நாட்களில் இந்தியா இரண்டு அறிக்கைகளை வெளியிட்டது. ஒன்றில் மோதல் குறித்து கவலை தெரிவித்தது; மற்றொன்றில் பிரச்னையைத் தீர்க்க உரையாடல் நடத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்தது.

தனியே வெளியிடப்பட்ட மற்றொரு அறிக்கையில், பிரதமர் மோதி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீது இரான் நடத்திய தாக்குதலை "கடுமையாக கண்டித்தார்" என்றும், அந்த நாட்டுடன் இந்தியா நிற்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டது ஆனால், இரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதலை இந்தியா வெளிப்படையாக கண்டிக்கவில்லை.

மார்ச் 12-ஆம் தேதி இந்தியா மற்றும் இரான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும், இரானுடன் இணக்கம் காட்ட இந்தியா தாமதித்து விட்டதா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், இந்தியா, மத்திய கிழக்கு, எண்ணெய் எரிவாயு சப்ளை

பட மூலாதாரம்,XPD Division, MEA

படக்குறிப்பு,இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி இரங்கல் புத்தகத்தில் ஒரு செய்தியை எழுதுகிறார்.

இரான் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி மரணமடைந்த ஐந்து நாட்கள் கழித்தே இந்தியா அதிகாரப்பூர்வமாக அவருக்கு அஞ்சலி செலுத்தியது. இந்திய அரசின் இந்த நிலைப்பாடு பரவலாக விமர்சிக்கப்பட்டது.

ஆனால், "அனுதாபப் பதிவேடு ஐந்து நாட்கள் கழித்தே திறக்கப்பட்டது. அதனால் வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி மார்ச் 5 அன்று அந்த அனுதாபப் பதிவேட்டில் கையெழுத்திட்டார்." என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது.

இந்தியப் பெருங்கடலில் இரானின் ஐஆர்ஐஎஸ் தேனா போர்க்கப்பல் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் மூழ்கடிக்கப்பட்டதற்குப் பிறகு இந்தியாவின் வெளிநாட்டு கொள்கை மீது மிகுந்த விமர்சனம் எழுந்தது. அந்த போர்க்கப்பல், இந்திய கடற்படையின் அழைப்பின் பேரில் ராணுவப் பயிற்சியில் பங்கேற்க இந்தியா வந்திருந்தது.

இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இந்தியாவில் ஒரு இரான் போர்க்கப்பலுக்கு தஞ்சம் வழங்கப்பட்டது குறித்து நாடாளுமன்றத்தில் அறிக்கை வெளியிட்டார். ஆனால் இந்தியப் பெருங்கடலில் மூழ்கிய ஐஆர்ஐஎஸ் தேனா கப்பல் குறித்து அவர் கருத்து தெரிவிக்கவில்லை.

ஆனால் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் இரான் இடையிலான போரில் இந்த 'சமநிலை அணுகுமுறையை' கடைபிடிக்கும் இந்தியாவின் நிலைப்பாடு, கடந்த மூன்று–நான்கு நாட்களில் வேகமாக மாறியுள்ளது.

இந்தியா–இரான் வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், இந்தியா, மத்திய கிழக்கு, எண்ணெய் எரிவாயு சப்ளை

பட மூலாதாரம்,@IN_HQENC

படக்குறிப்பு,ஐஆர்ஐஎஸ் தேனா

மார்ச் 9 அன்று, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நாடாளுமன்றத்தில் பேசும்போது, தற்போது நடைபெற்று வரும் போர் சூழ்நிலையில் இரான் தலைமைத்துவத்துடன் தொடர்பு கொள்ளுவது கடினமாக இருப்பதாக தெரிவித்தார். ஆனால் வியாழக்கிழமை வெளியுறவு அமைச்சகம், ஜெய்சங்கர் இரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சியுடன் மூன்று முறை பேசியதாக தெரிவித்தது.

இரு வெளியுறவுத்துறை அமைச்சர்களுக்கு இடையிலான நான்காவது உரையாடல் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

ஜெய்சங்கருடன் அராக்சி பேசிய விஷயங்களைப் பற்றி இரான் வெளியுறவு அமைச்சகம் விவரித்தது.

அதனைத் தொடர்ந்து மார்ச் 12 அன்று பிரதமர் நரேந்திர மோதி, இரான் அதிபர் மசூத் பெசேஷ்கியான் உடன் தொலைபேசியில் பேசினார். உரையாடல் மூலம் இரான் போருக்கு விரைவில் முடிவு காண வேண்டிய அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

இரான் மற்றும் வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து இருவரும் கவலை தெரிவித்தனர். இரான் அருகிலுள்ள கடற்பரப்பு வழியாக எண்ணெய் மற்றும் பிற பொருட்கள் பாதுகாப்பாகவும் தடையின்றியும் கொண்டு செல்லப்பட வேண்டியதற்கான தேவையையும் அவர்கள் வலியுறுத்தினர்.

இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் தகவல்படி, இரு தலைவர்களும் தொடர்ந்து தொடர்பில் இருக்க ஒப்புக் கொண்டனர்.

இதற்குப் பிறகு, ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் இந்தியக் கொடியுடன் இயங்கும் கப்பல்களுக்கு பாதுகாப்பான பயணத்தை வழங்க இரான் ஒப்புக்கொண்டதாக செய்திகள் வெளியாயின.

ஆனால் இன்னும் ஆரம்ப கட்டத்தில்தான் இருப்பதாக கூறி அதுகுறித்து கருத்து தெரிவிக்க இதை இந்திய வெளியுறவு அமைச்சகம் மறுத்துவிட்டது. இந்த விஷயத்தைப் பற்றி இரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சியுடன் எஸ். ஜெய்சங்கர் பேசியதாகக் கூறப்படுகிறது.

வியாழக்கிழமை இரவு இரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அராக்சியுடன் பேசியதாக வெள்ளிக்கிழமை (மார்ச் 13) பிற்பகலில், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் டிவிட்டரில் மீண்டும் பதிவிட்டார். அவர்கள் இருதரப்பு விவகாரங்கள் மற்றும் பிரிக்ஸ் (BRICS) தொடர்பான விஷயங்களைப் பற்றி பேசியதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தியா–இரான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இடையிலான உரையாடல் குறித்து இரான் வெளியுறவு அமைச்சகமும் டிவிட்டரில் பதிவு செய்தது. அந்தப் பதிவில், இரான் வெளியுறவுத்துறை அமைச்சர் சையது அப்பாஸ் அராக்சி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உடன் நடந்த உரையாடலில் இரான் மீது நடத்தப்பட்ட ராணுவத் தாக்குதல்களை பிராந்திய மற்றும் சர்வதேச அமைப்புகள் கண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக கூறப்பட்டது.

பலதரப்பு ஒத்துழைப்பை முன்னேற்றும் ஒரு முக்கிய தளமாக பிரிக்ஸ் அமைப்புக்கு தனித்துவமான முக்கியத்துவம் இருப்பதாகவும், தற்போதைய சூழ்நிலையில் பிராந்திய மற்றும் உலகளாவிய நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவதில் அந்த அமைப்பின் பங்கு மிகவும் முக்கியமானது என்றும் அவர் கூறினார்.

இந்தியாவின் குழப்பம்

இந்தியா ஏன் திடீரென இரான் உடனான உறவில் நெருக்கம் காட்டுகிறது, இரான் பக்கம் நிற்க இந்தியா தாமதித்துவிட்டதா என்ற கேள்விகளும் எழுகின்றன.

எதிர்க்கட்சிகளும் பல முக்கிய வெளிநாட்டு கொள்கை நிபுணர்களும் இரான் குறித்து இந்தியா எடுத்துள்ள நிலைப்பாட்டை விமர்சித்துள்ளனர். ஆனால் கேள்வி என்னவென்றால், இந்தப் போரில் இஸ்ரேல், அமெரிக்கா அல்லது இரான் ஆகியவற்றில் எதன் பக்கமும் இந்தியா எளிதாக நிற்க முடியுமா?

இந்த கேள்விக்கு பதிலளித்த இந்தியாவின் உலகம் (India's World) இதழின் ஆசிரியரும், ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்தின் கௌரவ பேராசிரியருமான ஹேப்பிமோன் ஜேக்கப், "இரான் தொடர்பான இந்தப் போரில் இந்தியா எந்த ஒரு தரப்பையும் முழுமையாக ஆதரிக்க முடியாது என்பது ஆரம்பத்திலேயே தெளிவாக இருந்தது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் பக்கம் இந்தியா நின்றால், இரான் நாட்டில் உள்ள தற்போதைய ஆட்சியுடன் இந்தியாவின் உறவுகள் கடுமையாக பாதிக்கப்படும். இந்தியாவுக்குள் அரசின் நிலைப்பாட்டை கடுமையாக விமர்சிப்பார்கள். இரானுக்கான ஆதரவு கணிசமாக அதிகரிக்கும்." என்றார்.

மேலும் பேசிய ஹேப்பிமோன் ஜேக்கப், "இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா பக்கம் இந்தியா நின்றால், அது மத்திய கிழக்கில் ரஷ்யா மற்றும் இந்தியாவின் நலன்களுக்கு இடையே முரண்பாட்டை உருவாக்கக்கூடும். மறுபுறம், இரான் மீது நடத்தப்பட்ட தாக்குதலை இந்தியா கண்டித்தால், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா உடனான உறவுகள் பாதிக்கப்படும். முக்கியமான பாதுகாப்பு தொழில்நுட்பங்களை இந்தியா இந்த நாடுகளிடமிருந்தே பெறுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்" என்று கூறினார்.

இந்தியர்களின் பாதுகாப்பு குறித்த கவலை

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், இந்தியா, மத்திய கிழக்கு, எண்ணெய் எரிவாயு சப்ளை

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்

இந்தப் போரின் தாக்கம் தற்போது இந்தியாவையும் சேர்த்து உலகம் முழுவதும் உணரப்படத் தொடங்கியுள்ளது. ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்ல முயலும் கப்பல்களை தொடர்ந்து தடுக்கப்போவதாக இரான் எச்சரித்துள்ளது.

இரான் இவ்வாறு எச்சரித்ததன் பின்னர், இந்த வழியாக எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றிச் செல்லும் கப்பல்கள் மிகவும் குறைந்துவிட்டன.

ஹோர்முஸ் நீரிணை வழியாக உலகின் மொத்த எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20 சதவீதம் எடுத்துச் செல்லப்படுகிறது. இந்தியாவின் எண்ணெய் விநியோகத்தில் சுமார் 40–50 சதவீதம் இந்த வழியாகவே வருகிறது. ஆனால் தற்போது அது 30 சதவீதமாகக் குறைந்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தாக்குதல்களுக்கு பதிலாக இரான் வளைகுடா நாடுகளில் நடத்திய எதிர்தாக்குதல்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு பற்றாக்குறையை உருவாக்கியுள்ளன.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை, போருக்கு முன்பு ஒரு பீப்பாய் 68–70 அமெரிக்க டாலராக இருந்த நிலையில், தற்போது 100 அமெரிக்க டாலருக்கும் அருகில் நிலைத்திருக்கிறது.

இந்தியாவில் எல்பிஜி பற்றாக்குறை உருவாகியுள்ளது. ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல்களின் போக்குவரத்து குறைந்ததால், எரிவாயு விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தாக்குதல்களுக்கு பதிலாக இரான் வளைகுடா நாடுகளில் நடத்திய தாக்குதல்கள், அங்கு வாழும் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்த கவலையையும் அதிகரித்துள்ளன. வளைகுடா பிராந்தியத்தில் சுமார் 1 கோடி இந்தியர்கள் வாழ்கின்றனர். இரான் நாட்டில் மட்டும் சுமார் 9,000 இந்தியர்கள் உள்ளனர்.

அங்கிருந்து இந்தியர்கள் வெளியேறத் தொடங்கினால், அது மோதி அரசுக்கு பெரிய கவலையாக மாறலாம். அதனால் தான் பிரதமர் மோதி, அங்கு உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்துள்ளார்.

வளைகுடா நாடுகளில் வாழும் இந்தியர்களே இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு பணப்பரிமாற்றங்களில் மிகப்பெரிய பங்களிப்பை வழங்குகின்றனர். 2024-25 ஆம் ஆண்டில் மட்டும் இந்தப் பிராந்தியத்திலிருந்து இந்தியாவுக்கு 135 பில்லியன் அமெரிக்க டாலர் வரவு வந்துள்ளது.

இந்தியாவுக்கு வளைகுடா பிராந்தியம் என்பது வெறும் எண்ணெய் இறக்குமதி தொடர்பான விஷயம் மட்டுமல்ல. அது வேலைவாய்ப்பு, குடும்ப வருமானம் மற்றும் இந்தியாவின் வெளிநாட்டு நிதி நிலைத்தன்மையுடனும் தொடர்புடையது. அதனால் தான் இரான் தொடர்பான விஷயத்தில் இந்தியா தற்போது சுறுசுறுப்பாக செயல்படத் தொடங்கியுள்ளது.

'தாமதமானாலும் சரியான முடிவு'

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், இந்தியா, மத்திய கிழக்கு, எண்ணெய் எரிவாயு சப்ளை

பட மூலாதாரம்,Seyed Abbas Araghchi

படக்குறிப்பு,இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் இரான் வெளியுறவுத்துறை அமைச்சர் சையது அப்பாஸ் அராக்சி (கோப்பு படம்)

பிபிசியிடம் பேசிய சர்வதேச விவகாரங்களுக்கான மூத்த பத்திரிகையாளர் ஸ்மிதா சர்மா, "சிறிது தாமதமாக இருந்தாலும், பிரதமர் மோதி இரான் அதிபர் மசூத் பெசேஷ்கியான் உடன் பேசியுள்ளார். இது சரியான ஒரு நடவடிக்கை" என்று கூறினார்.

மேலும், "வளைகுடா நாடுகளில் சுமார் ஒரு கோடி இந்தியர்கள் வாழ்கின்றனர். அங்கு இரான் தாக்குதல்கள் நடத்தி வருகிறது. அதனால் இரான் உடன் பேச்சுவார்த்தை நடத்துவது அவசியம். இந்தியாவின் எண்ணெய் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்ல வேண்டியுள்ளது." என்று அவர் கூறினார்.

"இந்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின்படி, ஹோர்முஸ் நீரிணையின் மேற்குப் பகுதியில் 28 இந்திய எண்ணெய் கப்பல்கள் சிக்கியுள்ளன. இரான் நாட்டின் புதிய அதிஉயர் தலைவர் மொஜ்தபா காமனேயி, ஹோர்முஸ் நீரிணையில் இந்த நிலை தொடர்ந்து நீடிக்கும் என்று தெளிவுபடுத்தியுள்ளார். எனவே இரான் அதிஉயர் தலைவருடன் பேசாமல், ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் டேங்கர் கப்பல்கள் செல்வது கடினமாக இருக்கும்" என்றும் அவர் தெரிவித்தார்.

ஸ்மிதா சர்மா கூறுகையில், "கச்சா எண்ணெய் சப்ளை மற்றும் அதன் விலை தொடர்பாக இந்தியா மீது அழுத்தம் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் எல்பிஜி விநியோகம் குறித்தும் கடும் அதிருப்தி எழுந்துள்ளது. அதோடு, இந்தியாவின் முன்னாள் வெளிநாட்டு கொள்கை நிபுணர்களும் அரசின் நிலைப்பாட்டை கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனால் இரானுடன் நெருக்கத்தை அதிகரிக்குமாறு இந்தியாவுக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது. தற்போது இரான் நாட்டில் சுமார் 9,000 இந்தியர்கள் உள்ளனர். இவர்களில் மாணவர்களும் தொழிலதிபர்களும் அடங்குகின்றனர். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய நெருக்கடி இந்தியாவுக்கு உள்ளது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "இந்தியா மற்றும் இரான் இடையே அண்மையில் நடந்த பேச்சுவார்த்தைகளில் காமனேயி கொல்லப்பட்ட விவகாரம் இதுவரை விவாதிக்கப்படவில்லை. இருப்பினும், இரு நாடுகளுக்கிடையே உரையாடல்கள் நடைபெற்றுள்ளன. அதுவே ஒரு திருப்திகரமான விஷயமாகும்" என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cr45vypnndlo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.