Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'ஓர் அடி விலகியிருந்தால் மரணம்': ஊசிமலையில் ஆழமான பாறையில் விழுந்த நபர் - ராணுவம் வந்து மீட்டது எப்படி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'ஓர் அடி விலகியிருந்தால் மரணம்': ஊசிமலையில் ஆழமான பாறையில் விழுந்த நபர் - ராணுவம் வந்து மீட்டது எப்படி?

நீலகிரி: மீண்டும் ஒரு 'மஞ்சுமல் பாய்ஸ்' சம்பவம்: மலையில் விழுந்து உயிரோடு மீட்கப்பட்ட இளைஞர்!

கட்டுரை தகவல்

  • சேவியர் செல்வக்குமார்

  • பிபிசி தமிழ்

  • 20 மார்ச் 2026, 12:23 GMT

    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள ஊசிமலை காட்சி முனையில், இரும்பு வேலி தடுப்புகளைத் தாண்டி பாறை பகுதிக்குச் சென்ற இளைஞர் 150 அடி ஆழத்திலுள்ள பாறையில் தவறி விழுந்தார்.

உயிருடன் இருந்த அவரை தீயணைப்பு துறையினர் முயன்றும் மீட்க இயலாத நிலையில், வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமெண்ட் சென்டர் ராணுவ வீரர்கள் விடிய விடிய முயற்சி செய்து அதிகாலை 3:30 மணியளவில் உயிருடன் மீட்டனர்.

தவறி விழுந்த இளைஞரே அங்கிருந்து போனில் பேசி, லொகேஷன் அனுப்பிய பின்பே அவர் அங்கே விழுந்து கிடந்த தகவல் வெளியில் தெரியவந்ததாக கூடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் வசந்தகுமார் தெரிவித்தார்.

இந்த மீட்புப் பணி இரவு முழுவதும் 8 மணி நேரத்திற்கும் மேலாக நடந்துள்ளது.

மீட்புப் பணியின்போது நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா, கூடலூர் மாவட்ட வன அலுவலர் தேவராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்துள்ளனர்.

மீட்கப்பட்ட இளைஞரின் உயிருக்கு ஆபத்தில்லையெனினும், முதுகெலும்பு மற்றும் இடுப்பு எலும்புகள் உடைந்து இருப்பதால் அவர் நடப்பதற்கு பல மாதங்களாகும் என்றும், அவருக்கு தற்போது உளவியல் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் உதகை அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவ அலுவலர் ரவிசங்கர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

தனியாக வந்து தவறி விழுந்த இளைஞர்!

நீலகிரி மாவட்டம் உதகையிலிருந்து கூடலூர் வழியாக கர்நாடகா செல்லும் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் ஊசிமலை காட்சி முனை உள்ளது.

இப்பகுதி, கூடலூர் வனக்கோட்டத்திற்குட்பட்ட காப்புக்காடு பகுதியாகவும் இருக்கிறது.

சூழல் சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ஊசிமலை காட்சி முனை சூழல் சுற்றுலா மையத்தை வனத்துறை நிர்வகித்து வருகிறது.

இந்த பகுதியில் சாலையின் இரு புறமும் யூகலிப்டஸ் மரங்கள் அமைந்துள்ளது.

அதனால் அந்த இடத்தில் நின்று சுற்றுலாப் பயணிகள் படமெடுப்பது வழக்கம். அங்கே நிறைய படப்பிடிப்புகளும் நடந்துள்ளன.

இதில் ஒரு புறத்தில் மரங்கள் அமைந்துள்ள பகுதிக்கு அருகிலுள்ள மலையுச்சியிலிருந்து கீழே பார்க்கும்போது, அதற்கும் கீழே உள்ள தவளை மலை, முதுமலை மற்றும் கூடலூர் வனப்பகுதிகளை நன்கு ரசிக்கலாம்.

இதற்காக ஒரு காட்சி முனையும், படிக்கட்டுகள், இரும்புத் தடுப்புகள், கழிப்பறை வசதிகள் என சில கட்டமைப்பு வசதிகளையும் தமிழக வனத்துறை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அங்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர் வருவதாக வனத்துறையினர் கூறுகின்றனர்.

ஊசிமலை காட்சி முனைக்கு கடந்த 19-ஆம் தேதியன்று, ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றுள்ளனர்.

சிவகுருநாதன் (வயது 28) என்ற இளைஞரும் அன்று மாலை ஊசி மலை காட்சி முனைக்கு வந்துள்ளார்.

தனியாக வந்திருந்த அவர், காட்சி முனைக்கு அருகிலிருந்த இரும்பு வேலி தடுப்பையும் தாண்டி கீழே பாறையில் நடந்துசென்றுள்ளார்.

அப்போது பாறையிலிருந்து வழுக்கி, 150 அடி ஆழமுள்ள பாறையில் விழுந்துள்ளார். நல்வாய்ப்பாக தலையில் எதுவும் அடிபடாமல் உயிர் தப்பியுள்ளார்.

ஆனால் எழமுடியாமல் பலத்த காயமடைந்திருந்த அவர், தனது போனில் தகவல் தெரிவித்த பின்புதான் அவர் விழுந்தது வெளியே தெரியவந்ததாக கூடலூர் காவல்துறையினர் தெரிவித்தனர்.

நீலகிரி: மீண்டும் ஒரு 'மஞ்சுமல் பாய்ஸ்' சம்பவம்: மலையில் விழுந்து உயிரோடு மீட்கப்பட்ட இளைஞர்!

பிபிசி தமிழிடம் காவல்துறையினர் பகிர்ந்த தகவலின்படி, செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரைச் சேர்ந்த சிவகுருநாதன், தற்போது கோவையில் உள்ள ஒரு ஜவுளி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

திருமணமாகாத அவர், காந்திபுரம் பகுதியில் ஒரு விடுதியில் அறை எடுத்துத் தங்கியுள்ளார். 3 நாட்களுக்கு முன்பு, உதகைக்கு தனியாக வந்து ஒரு ரிசார்ட்டில் தங்கியிருந்த அவர், மார்ச் 19 அன்று கால் டாக்சி புக் செய்து, ஊசிமலைக்குச் சென்றுள்ளார்.

அங்கிருந்து பெங்களூரு சென்று, அதன்பின் சொந்த ஊருக்குச் செல்ல திட்டமிட்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்ததாக காவல்துறையினர் கூறினர்.

பிபிசி தமிழிடம் இதுபற்றி விளக்கிய கூடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் வசந்தகுமார், ''பாறையைத் தாண்டி அவர் செல்ஃபி எடுக்கப் போனதாகத் தெரிகிறது. அப்போது வழுக்கி 150 அடி ஆழமுள்ள பாறையின் மீது விழுந்திருக்கிறார். அப்போது மாலை 3:30 மணி இருக்கலாம். தலையில் அடிபடாததால் உயிர் தப்பிய அவர் நினைவிழக்காமலும் இருந்துள்ளார். ஆனால் பலத்த காயமடைந்துள்ளார். நல்வாய்ப்பாக அவர் விழுந்த இடத்தில் அவருக்கு போன் சிக்னல் இருந்துள்ளது. அவர், தான் வந்த வாகன ஓட்டுநர் மற்றும் தங்கியிருந்த இடத்துக்கு தகவல் தெரிவித்துவிட்டு, அவர் விழுந்து கிடந்த லொகேஷனையும் அனுப்பியுள்ளார்.'' என்றார்.

''ரிசார்ட்டில் இருந்த ஒருவர், தனக்குத் தெரிந்த ஒரு வனக்காவலருக்குத் தெரிவித்து, அவர் மூலமாக முதலில் வனத்துறையினருக்கு தகவல் தெரிந்துள்ளது. எங்களுக்கு 5:30 மணிக்குத் தகவல் வந்தது. நாங்களும் தீயணைப்புத் துறையினரும் சென்றோம். அப்போது வெயில் இருந்தது. நாங்கள் தேடிப்பார்த்தபோது அவர் விழுந்த பாறை தெரியவில்லை. அதன்பின்பே யானையைக் கண்காணிக்கப் பயன்படுத்தும் டிரோன் மூலமாக வனத்துறையினர் அவர் விழுந்து கிடந்த இடத்தைக் கண்டுபிடித்தனர்.'' என்றார்.

நீலகிரி: மீண்டும் ஒரு 'மஞ்சுமல் பாய்ஸ்' சம்பவம்: மலையில் விழுந்து உயிரோடு மீட்கப்பட்ட இளைஞர்!

படக்குறிப்பு,மீட்புக் குழுவினர்

வெலிங்டன் ராணுவ மையத்தின் உதவியை நாடிய நீலகிரி ஆட்சியர்

டிரோன் மூலமாக அவர் இருந்த இடம் தெரிந்தபோது, 6:45 மணியாகிவிட்டது என்றார் கூடலூர் தீயணைப்பு அலுவலர் சங்கர்.

தீயணைப்புத்துறைக்கு மாலை 5:15 மணிக்குத் தகவல் தெரிந்து, 5:35 மணிக்குச் சென்று விட்டாலும் அவர் இருந்த இடத்தைக் கண்டறியவே முடியவில்லை என்பதை அவரும் விளக்கினார்.

டிரோன் மூலமாக அவர் இருந்த இடம் தெரிந்த அடுத்த கால் மணி நேரத்தில் அதாவது இரவு 7 மணிக்கு அவர் இருக்குமிடத்தில் தீயணைப்புத் துறையினர் இறங்கிவிட்டதாகவும் தீயணைப்பு அலுவலர் சங்கர் விளக்கினார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், ''நாங்கள் அங்கே போனபோது, அவர் உயிருடன் இருப்பது தெரியவந்தது. ஆனால் அவரால் அசையக்கூட முடியவில்லை. உடலில் பல எலும்புகள் உடைந்திருந்ததால் கடுமையான வலியில் இருந்தார். ஆனால் நன்றாகப் பேசிக் கொண்டிருந்தார். அவரை அங்கிருந்து எப்படி மேலே கொண்டு வருவது என்று ஆலோசிப்பதற்குள் நன்கு இருட்டிவிட்டது. அங்கிருந்து மேலே வருவதற்கு பாதை எதுவுமே இல்லை. அந்த இளைஞரின் எலும்புகள் உடைந்து, அவரால் எழவும் முடியாத நிலையில், 80 கிலோவுக்கும் மேலாகவுள்ள அவரை கயிறு கட்டி தூக்குவது பெரும் ரிஸ்க் என்பதை நாங்கள் உணர்ந்தோம்.'' என்றார்.

தீயணைப்புத்துறையில் இருக்கும் உபகரணங்களைக் கொண்டு, அவரை மேலே கொண்டு வருவதில் பல சிக்கல்கள் இருப்பது பற்றி நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யாவுக்கு காவல்துறையினரும், தீயணைப்புத் துறையினரும் விளக்கியுள்ளனர்.

அதன்பின் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா, வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் ( எம்ஆர்சி ) அதிகாரிகளிடம் இதுபற்றி பேசி உதவி கோரியிருக்கிறார்.

நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவும் இதற்காக எம்ஆர்சி அதிகாரிகளிடம் பேசியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தகவல் தெரிந்து, முறையான அனுமதி பெற்று, எம்ஆர்சி ராணுவ வீரர்கள் 20 பேர் மற்றும் சிறப்பு மருத்துவக் குழுவும் வந்தபோது நள்ளிரவு 12 மணியாகியிருக்கிறது.

அதே நேரத்தில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா, கூடலூர் மாவட்ட வன அலுவலர் தேவராஜ் மற்றும் அதிகாரிகள் வந்து விட்டதாகத் தெரிவித்தார் துணை காவல் கண்காணிப்பாளர் வசந்தகுமார்.

இரவில் 8 மணி நேரம் நீடித்த மீட்புப்பணி முழுக்கவும் ஆட்சியர் உள்ளிட்ட உயரதிகாரிகள் உடனிருந்ததாகக் கூறிய அவர், அதிகாலை 3:30 மணியளவில் அவரை ராணுவத்தினர் மீட்டு மேலே கொண்டுவந்ததாகத் தெரிவித்தார்.

நீலகிரி: மீண்டும் ஒரு 'மஞ்சுமல் பாய்ஸ்' சம்பவம்: மலையில் விழுந்து உயிரோடு மீட்கப்பட்ட இளைஞர்!

படக்குறிப்பு,மீட்புப்பணியின்போது மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி

''ராணுவ வீரர்களுடன் எம்ஆர்சி சிறப்பு மருத்துவக்குழுவினரும் மருத்துவர் கவிதா தலைமையில் வந்தனர். இளைஞர் விழுந்திருந்த இடத்திற்கே சென்று அதே இடத்தில் வைத்து அவருக்கு குளுக்கோஸ் ஏற்றி, வலி நிவாரணி ஊசி உள்ளிட்ட அத்தியாவசிய சிகிச்சைகளை அளித்தனர். ரத்தக்கசிவையும் நிறுத்தினர். அந்த இடத்தின் ஆழம், சுற்றுப்புறச்சூழல் எல்லாவற்றையும் ஆராய்ந்த ராணுவத்தினர், அவரை எப்படிக் கொண்டு வருவது என்று ஆலோசித்து, கனமான இரும்புக் கம்பிகளால் மேலேயிருந்து அந்த இடம் வரை கன்வேயர் பெல்ட் போன்று வலுவான பாலம் அமைத்தனர். பின்பு ஸ்ரெச்சரில் அவரை இறுக்கமாகக் கட்டி மேலே கொண்டுவந்தனர்.'' என்று அந்த இளைஞரை மீட்ட விதத்தை விளக்கினார் தீயணைப்பு அலுவலர் சங்கர்.

விழுந்ததிலிருந்து 13 மணி நேரத்துக்குள் அந்த இளைஞர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

அதன்பின் உதகை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பினர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது அவருக்கு உயிருக்கு ஆபத்து எதுவுமில்லை என்றும், தலையில் அடிபடாததால் அந்த இளைஞர் உயிர் தப்பியிருப்பதாக உதகை அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவ அலுவலர் ரவிசங்கர் தெரிவித்தார்.

சிவகுருநாதனுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து பிபிசி தமிழிடம் விளக்கிய மருத்துவர் ரவிசங்கர், ''உயிருக்கு ஆபத்தான கட்டத்தை அவர் தாண்டிவிட்டார். 150 அடி உயரத்தில் இருந்து விழுந்ததில் அவருடைய முதுகெலும்பு, இடுப்பு எலும்பு மற்றும் நெஞ்சுக்கூட்டு எலும்புகள் உடைந்துள்ளன. கால் எலும்புகள், கை எலும்புகள் சேரும் இடமும் உடைந்திருப்பதால் அதற்கு முதலில் சிகிச்சை கொடுத்து வருகிறோம். எல்லாவற்றையும் ஆராய்ந்த பின்பே அவருக்கு எங்கெங்கே அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்பதை திட்டமிடமுடியும்.'' என்றார்.

''இப்போது அவர் நன்றாகவுள்ளார். நன்கு பேசுகிறார். ஆனால் தான் யார் என்பதே தெரியவில்லை என்கிறார். அவருக்கு முதலில் உளவியல் ரீதியான சிகிச்சைதான் அவசியமாகவுள்ளதால் தற்போது உளவியல் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கின்றனர். இடுப்பு, முதுகெலும்பு உட்பட பல எலும்புகள் உடைந்திருப்பதால் அவர் நடப்பதற்கு இன்னும் பல மாதங்களாகும்.'' என்றார் மருத்துவர் ரவிசங்கர்.

இளைஞர் சிவகுருநாதனின் தாய், தந்தை ஆகியோருக்கு தகவல் அளிக்கப்பட்டு, அவர்கள் வந்து கொண்டிருப்பதாகத் தெரிவித்த துணை காவல் கண்காணிப்பாளர் வசந்தகுமார், இந்த சம்பவம் குறித்து இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்றார்.

இந்த ஊசிமலை காட்சி முனையில் கடந்த ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதியன்றும், இரும்பு வேலி தடுப்பைத் தாண்டிச் சென்ற கேரள இளைஞர்கள் 3 பேர்களில் ஒருவர் தேனீக்கள் கொட்டி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

நீலகிரி: மீண்டும் ஒரு 'மஞ்சுமல் பாய்ஸ்' சம்பவம்: மலையில் விழுந்து உயிரோடு மீட்கப்பட்ட இளைஞர்!

தேனீக்கள் கொட்டி உயிரிழந்த கேரள இளைஞர்

கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த ஆசிப், ஜாபீர், சினான் ஆகிய 3 நண்பர்கள், கடந்த ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதியன்று ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாட தமிழகத்துக்கு சுற்றுலா வந்துள்ளனர்.

ஊசிமலை காட்சி முனையில் இரும்புத் தடுப்பைத் தாண்டிச் சென்றுள்ளனர். தூரமாக பாறையில் இருந்த தேன் கூட்டின் மீது கல் எறிந்துள்ளனர்.

தேனீக்கள் கொட்டியதில் ஜாபீர் (வயது 23) அதே இடத்தில் உயிரிழந்தார்.

அந்த சம்பவம் பற்றி விளக்கிய தீயணைப்பு அலுவலர் சங்கர், ''தேனீக்கள் அவர்களைச் சூழ்ந்து தாக்குவதாக எங்களுக்குத் தகவல் கிடைத்து நாங்கள் விரைந்து சென்றோம், கவச உடையணிந்து அங்கே நாங்கள் சென்றபோது அந்த இளைஞர் மரணமடைந்திருந்தார். ஒருவரைக் காப்பாற்றி சிகிச்சைக்கு அனுப்பினோம். இறந்த இளைஞரின் உடலில் ஒட்டியிருந்த ஆயிரக்கணக்கான தேனீக்களை அகற்றுவதே சிரமமாயிருந்தது. பாதை இருந்ததால் அவரை மேலே கொண்டுவந்துவிட்டோம். இந்த இளைஞர் சிவகுருநாதன் விழுந்த இடத்திலிருந்து பாதையே இல்லை. அவர் விழுந்த பாறையிலிருந்து ஓரடி விலகி விழுந்திருந்தாலும் அவர் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை.'' என்றார்.

சூழல் சுற்றுலா என்ற பெயரில் ஊசிமலை காட்சி முனைக்குச் செல்ல தமிழக வனத்துறையினர் கட்டணம் வசூலித்து வரும் நிலையில், அங்கே சுற்றுலாப் பயணிகள் அத்துமீறிச் செல்லாமல் தடுக்கவும், பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தாமலும் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

இந்த இளைஞர் விழுந்து மீட்கப்பட்டது குறித்து, 'ஊட்டியில் மீண்டும் ஒரு மஞ்சுமல் பாய்ஸ்' என்று குறிப்பிட்டு பலரும் சமூக ஊடகங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். வனத்துறையையும் பலர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

இதுபற்றி கருத்து கேட்பதற்காக கூடலூர் மாவட்ட வனஅலுவலர் தேவராஜை பலமுறை தொடர்பு கொண்ட போதும், தொடர்ந்து மீட்டிங்கில் இருப்பதாக பதிலளித்தார்.

கேள்விகளை அனுப்புமாறு கூறிய அவர், அதற்குரிய பதில்களை அனுப்பவில்லை. ஆனால் அந்த இளைஞர் இருந்த இடத்தைக் கண்டறிய டிரோன் அனுப்பியதாகவும், இரவில் புலி, சிறுத்தை உள்ளிட்ட காட்டுயிர்களிடமிருந்து காப்பாற்றுவதற்கு, அவரைச் சுற்றிலும் தீ மூட்டி, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை தாங்கள் செய்ததாகவும் கீழ்நிலையிலுள்ள வனத்துறையினர் தகவல் பகிர்ந்தனர்.

நீலகிரி மண்டல வனப்பாதுகாவலரும், முதுமலை புலிகள் காப்பகத்தின் கள இயக்குநருமான கிருபா சங்கரிடம் இதுபற்றி கேட்டபோது, ''அங்கு வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். நிறைய எச்சரிக்கை, விழிப்புணர்வு பலகைகள் வைத்துள்ளோம். ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் வனத்துறையினர் கண்களுக்கும் படாமல் சிலர் இப்படி இரும்பு வேலிகளைத் தாண்டிச் செல்கின்றனர். அதனால் காட்சி முனையைத் தாண்டி யாரும் கீழே செல்லாத வகையில் மேலும் இரும்புத் தடுப்புகளை பலமாக அமைப்பது பற்றி ஆலோசித்து வருகிறோம். விரைவில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.'' என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cm2r38y3w9xo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.