Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறு கதை - 207 / பெயர்களுக்கு முன் நினைவிருந்த தீவு அல்லது ஒரு நிலத்தின் கதை [ஒன்பது பகுதிகள்]

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறு கதை - 207 / பெயர்களுக்கு முன் நினைவிருந்த தீவு அல்லது ஒரு நிலத்தின் கதை / அத்தியாயம் 1


[இந்த கதை ஒரு கல்லைப் பற்றியது மட்டுமல்ல. இது ஒரு நிலத்தின் கதை. அதில் வாழ்ந்த மக்களின் கதை. மாற்றப்பட்ட ஒரு சொல்லின் கதை. மறைக்கப்பட்ட நினைவுகளின் கதை. வரலாறு என்றால் நாம் புத்தகங்களில் படிப்பதையே நினைப்போம். ஆனால் வரலாறு மக்களின் நினைவுகளிலும் வாழ்கிறது. ஒரு கல், ஒரு சொல், ஒரு மாற்றம் — இவை எல்லாம் சேர்ந்து எவ்வாறு ஒரு சமூகத்தின் வாழ்க்கையை மாற்றுகின்றன என்பதையே இந்த கதை சொல்லுகிறது.


ஒரு கல் பேசாது. ஆனால் அது பல காலங்களைக் காணும். மனிதர்கள் வரலாற்றை எழுதுகிறார்கள். ஆனால் அவர்கள் எல்லாவற்றையும் எழுத மாட்டார்கள். சில உண்மைகள் தெரிவு செய்யப்படுகின்றன. சில உண்மைகள் மறைக்கப்படுகின்றன. இந்த கதை சொல்லும் முக்கியமான செய்தி இதுதான்: வரலாறு முழுவதும் பொய்யாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அது ஆபத்தாக மாறுவதற்கு சில உண்மைகளை மட்டும் தேர்ந்தெடுத்து சொல்லினால் போதும்.


என் குறிப்பு: இந்த நூல் ஒரு கற்பனைக்கதை. ஆனால் இதில் பேசப்படும் உணர்வுகள் உண்மையானவை. நிலம், மொழி, அடையாளம், நினைவு — இவை எல்லாம் மனிதர்களின் வாழ்க்கையில் முக்கியமானவை. இந்த நூல் ஒருபக்கத்தை ஆதரிப்பதற்காக அல்ல. பேசப்படாத குரல்களை நினைவில் கொள்ளச் செய்வதற்காக. நாம் வரலாற்றைப் படிக்கும் போது ஒரு கேள்வியை கேட்க வேண்டும்: “இங்கே யாருடைய குரல் கேட்கப்படவில்லை?” அந்தக் கேள்வியே இந்த நூலின் இதயம்.]



திருவள்ளுவர், இயேசு, முகம்மது நபி ஆகியோர் இன்னும் பிறக்காத காலம் அது. அன்று சிங்களம் என்ற சொற்கள் இல்லை. பௌத்தம் என்றும் சைவம் என்றும் சுவர்கள் இல்லை. வடக்கே சிவந்த மண்ணும், மேற்கே உப்புக்காற்றும், நடுவே கருங்கற்களும் மட்டுமே இருந்தன. மனிதர்கள் ஒருவரை ஒருவர் பார்த்தபோது, "நீ யார்?" என்று கேட்கவில்லை. "எந்த நிலத்திலிருந்து வருகிறாய்?" என்று மட்டுமே கேட்டார்கள்.


யாழ்ப்பாணத்தின் கந்தரோடையில் அந்த முதியவர் ஒரு உடைந்த மண்பாண்டத்தின் விளிம்பைத் தடவிக் கொண்டிருந்தார். "தம்பி, கப்பல்கள் வருவதற்கு முன்பே நாம் இங்கே இருந்தோம்," என்றார். சிறுவன் கேட்டான், "எந்தக் கப்பல்கள் தாத்தா?" பெரியவர் சிரித்தார். "எல்லாக் கப்பல்களும் தான்." அங்கே நாகரிகம் என்பது ஒரு மொழியாக இருக்கவில்லை; அது ஒரு பகிர்வாக இருந்தது. தெற்கிலிருந்து வந்த வணிகன் ஒருவன் பேசிய மொழி புதியதாக இருந்தாலும், அதில் இருந்த ஈரப்பதம் அவர்களுக்குப் புரிந்தது. அவர்கள் தங்களைத் 'தமிழர்' என்றோ 'நாகர்' என்றோ அழைத்துக்கொள்ளவில்லை. 'நிலத்தின் மக்கள்' என்று மட்டுமே உணர்ந்தார்கள். அவர்களின் இறந்தவர்கள் நடுகற்களுக்குக் கீழே உறங்கினார்கள்; அவர்கள் மீது எந்தப் புனித நூல்களும் பாரமாக ஏற்றப்படவில்லை.


மன்னார் கடலில் முத்து குளிக்கும்போது, மூச்சைப் பிடித்துக்கொண்டு கடலுக்குள் இறங்கிய மனிதர்களுக்கு மதம் தெரியவில்லை. அரபு தேசத்திலிருந்தும், தமிழகக் கரையிலிருந்தும் வந்த வணிகர்களிடம் அருவதி என்ற பெண் கணக்கு வழக்குகளைப் பேசினாள். அவளுக்கு மூன்று மொழிகள் தெரியும், ஆனால் அவை எதற்கும் அப்போது பெயர் சூட்டப்படவில்லை.


இந்த காலகட்டத்தில் தான், இலங்கையின் வடபகுதியில் உள்ள கந்தரோடை மண்ணில் மாலை நேரம் மெல்ல இறங்கிக் கொண்டிருந்தது. வானத்தில் மேகம் திரண்டது. தொலைவில் இடி முழக்கம் கேட்டது. அங்கே வட்டமாக அடுக்கப்பட்ட பெரிய கற்கள் இருந்தன. அவை பழமையான கல்லறைகள். அந்தக் கற்கள் பல தலைமுறைகளை பார்த்திருந்தன. ஒரு கல்லருகில் சிவா அமர்ந்திருந்தான். அவன் தனது இரும்புக் கத்தியை மெதுவாக தீட்டிக் கொண்டிருந்தான். உப்பு காற்றும் கடின உழைப்பும் அவன் கைகளை கருப்பாக மாற்றியிருந்தது.


அவனருகில் கலினி நின்றாள். அவள் நாகர் குலத்தைச் சேர்ந்த திசையனின் மகள். கடலோர வர்த்தகக் குடும்பத்தில் பிறந்தவள். அவளின் காலணியில் இருந்த மணிகள் மெதுவாக ஒலித்தன. “மாலை நேரத்தில் இங்கே இருக்கக்கூடாது,” என்றாள் கலினி. “இங்கே ஆவிகள் நடமாடும் என்று சொல்வார்கள்.” சிவா சிரித்தான். “ ஆவிகளுக்கு நான் பயப்பட மாட்டேன். உயிரோடு இருப்பவர்கள்தான் எம்மை பயமுறுத்துவார்கள்,” என்றான். அவர்கள் இன்னும் காதலர்கள் இல்லை. ஆனால் ஊரார் ஏற்கனவே அவர்களைப் பற்றி பேசத் தொடங்கியிருந்தனர்.


அந்தக் காலத்தில் நாகர்கள் தமிழ் மொழியையும் பண்பாட்டையும் ஏற்றுக்கொண்டு மற்ற மக்களுடன் கலந்திருந்தனர். எனவே சிவா மற்றும் கலினி இடையில் பெரிய மொழி வேறுபாடு இல்லை. ஆனால் அவர்களின் வாழ்க்கை முறை வேறுபட்டது. கலினியின் குடும்பம் கடலோர வர்த்தகத்தில் ஈடுபட்டது. சிவாவின் மக்கள் நிலத்தோடும் கடலோடும் வாழ்ந்தவர்கள்.


“உன் அப்பாவுக்கு இது பிடிக்காது,” என்றாள் கலினி. “அவர் கணக்கிட முடியாத விஷயங்களை விரும்பமாட்டார்,” என்றான் சிவா. “தானியம், கால்நடை, உறவுகள் — அவையே அவருக்கு முக்கியம்.” கலினி மண்டியிட்டு கல் வட்டத்தைத் தொட்டாள். “இவை மன்னர்களை விடப் பழமையானவை என்று என் பாட்டி சொல்வார்,” என்றாள். “அது உண்மை,” என்றான் சிவா. “இவை நம் முன்னோர்கள் தங்கள் இறந்தவர்களை புதைத்த இடங்கள். அவர்கள் இரும்பும் சிப்பிகளும் வைத்து அடக்கம் செய்தார்கள்.”
(இவற்றை இன்று ‘மெகாலிதிக் கல்லறைகள்’ என்று அழைக்கிறோம். இவை கிமு 500 முதல் கிமு 200 வரை இருந்தவை என்று ஆய்வுகள் கூறுகின்றன.)


அந்த நேரத்தில் வயலருகே சண்டைச் சத்தம் கேட்டது. ஒரு கடலோர இளைஞன், ஒரு உள்நாட்டு இளைஞனுடன் வாக்குவாதம் செய்தான். “உங்கள் மக்கள் வர்த்தகம் செய்கிறார்கள், திருமணம் செய்கிறார்கள். ஆனால் எங்களை பழமையானவர்கள் என்று அழைக்கிறார்கள்!” என்றான் உள்நாட்டு இளைஞன். “நீங்கள் கற்களோடு பேசுகிறீர்கள். உலகம் மாறிக் கொண்டிருக்கிறது,” என்றான் மற்றவன். சிவா எழுந்து நின்றான். அவன் அமைதியாகச் சொன்னான்: “மாற்றம் நல்லது. ஆனால் மாற்றம் என்றால் அழிப்பது அல்ல. நம் பழமையை காப்பாற்றிக் கொண்டே முன்னேறலாம்.” என்றான்


அன்று இரவு கலினியின் தாய் அவளிடம் கூறினாள்: “உன் வாழ்க்கைத் துணையை கவனமாகத் தேர்ந்தெடு. புதிய கடவுள்களும் புதிய சட்டங்களும் வரும் காலம் இது.” கலினி எதுவும் பேசவில்லை. அவள் ஏற்கனவே காதலித்திருந்தாள் — ஒரு மனிதனை மட்டும் அல்ல, தன் நினைவுகளை மறக்காத இந்த நிலத்தையும்.


தொலைவில் கப்பல்கள் கடலைக் கடந்து சென்றன. ஆனால் கந்தரோடை கற்கள் அமைதியாக இருந்தன. அவை ஏற்கனவே பல கப்பல்களை பார்த்திருந்தன.


நன்றி



[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]



அத்தியாயம் 2 தொடரும்

துளி/DROP: 2109 [சிறு கதை - 207 / பெயர்களுக்கு முன் நினைவிருந்த தீவு அல்லது ஒரு நிலத்தின் கதை / அத்தியாயம் 1

https://www.facebook.com/groups/978753388866632/posts/34464768263171714/?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறு கதை - 207 / பெயர்களுக்கு முன் நினைவிருந்த தீவு அல்லது ஒரு நிலத்தின் கதை / அத்தியாயம் 2

[இந்த கதை ஒரு கல்லைப் பற்றியது மட்டுமல்ல. இது ஒரு நிலத்தின் கதை. அதில் வாழ்ந்த மக்களின் கதை. மாற்றப்பட்ட ஒரு சொல்லின் கதை. மறைக்கப்பட்ட நினைவுகளின் கதை. வரலாறு என்றால் நாம் புத்தகங்களில் படிப்பதையே நினைப்போம். ஆனால் வரலாறு மக்களின் நினைவுகளிலும் வாழ்கிறது. ஒரு கல், ஒரு சொல், ஒரு மாற்றம் — இவை எல்லாம் சேர்ந்து எவ்வாறு ஒரு சமூகத்தின் வாழ்க்கையை மாற்றுகின்றன என்பதையே இந்த கதை சொல்லுகிறது.

ஒரு கல் பேசாது. ஆனால் அது பல காலங்களைக் காணும். மனிதர்கள் வரலாற்றை எழுதுகிறார்கள். ஆனால் அவர்கள் எல்லாவற்றையும் எழுத மாட்டார்கள். சில உண்மைகள் தெரிவு செய்யப்படுகின்றன. சில உண்மைகள் மறைக்கப்படுகின்றன. இந்த கதை சொல்லும் முக்கியமான செய்தி இதுதான்: வரலாறு முழுவதும் பொய்யாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அது ஆபத்தாக மாறுவதற்கு சில உண்மைகளை மட்டும் தேர்ந்தெடுத்து சொல்லினால் போதும்.

என் குறிப்பு: இந்த நூல் ஒரு கற்பனைக்கதை. ஆனால் இதில் பேசப்படும் உணர்வுகள் உண்மையானவை. நிலம், மொழி, அடையாளம், நினைவு — இவை எல்லாம் மனிதர்களின் வாழ்க்கையில் முக்கியமானவை. இந்த நூல் ஒருபக்கத்தை ஆதரிப்பதற்காக அல்ல. பேசப்படாத குரல்களை நினைவில் கொள்ளச் செய்வதற்காக. நாம் வரலாற்றைப் படிக்கும் போது ஒரு கேள்வியை கேட்க வேண்டும்: “இங்கே யாருடைய குரல் கேட்கப்படவில்லை?” அந்தக் கேள்வியே இந்த கதையின் இதயம்.]

அந்த ஆண்டில் கடல் மாறியிருந்தது. அது மீன், காற்று, மழை பற்றி பேசவில்லை. அது புதிய எண்ணங்கள், புதிய விதிகள், புதிய மனிதர்களைக் கொண்டு வந்தது. ஒரு நாள் ஒரு துறவி திருக்கேதீஸ்வரம் அருகே வந்தார். அவர் படையுடன் வரவில்லை. அவர் அமைதியாக வந்தார். அவர் காவி நிற ஆடை அணிந்திருந்தார். தலை மொட்டையடிக்கப்பட்டிருந்தது. கால்களில் செருப்பு இல்லை.



மக்கள் அவரை பயத்துடன் அல்ல, ஆச்சரியத்துடன் பார்த்தனர். “இந்த நிலம் அமைதியானது,” என்றார் துறவி. “ஆனால் அமைதிக்கு வழிகாட்டுதல் தேவை.” என்றார்.

சிலர் தலையசைத்தனர். சிலர் கேட்டனர். சிலர் திரும்பிப் போனார்கள். சிவா தூரத்தில் இருந்து பார்த்தான். கலினி அவனருகில் நின்றாள்.

“அவர்கள் ஆயுதங்களுடன் வரவில்லை, ஆனால் உறுதியுடன் வருகிறார்கள்.” என்றாள் அவள். “அதுதான் ஆபத்து,” என்றான் சிவா. அந்த காலத்தில் மதம் ஒரே நாளில் பரவவில்லை. வர்த்தகம், பயணம், அரச ஆதரவு — இவையால் மெதுவாக பரவியது. மாந்தை, கோக்கண்ணம் (திருகோணமலை), ஜம்புகோலப்பட்டணம் போன்ற துறைமுகங்களில் பல மக்கள் வந்துச் சென்றனர். தமிழர், உள்நாட்டு மக்கள், தென்னிந்திய வணிகர்கள், வெளிநாட்டு வணிகர்கள் — பலரும் இங்கு சந்தித்தனர்.

வடக்கே ஒரு துறவி (புத்தர்) தோன்றி, துயரத்தைப் பற்றிப் பேசுவதாக ஒரு செய்தியை அருவதி கூடக் கேட்டாள். அவள் தலைவணங்கவில்லை; ஆனால் அந்தச் சிந்தனையை வரவேற்றாள். கப்பல்களைப் போலவே புதிய கருத்துக்களையும் அந்த நிலம் எப்போதும் அனுமதித்தது. கோணேஸ்வரத்தில் அலைகள் மோதும் பாறையில் ஒரு சிற்பி கல்லைச் செதுக்கிக் கொண்டிருந்தான். அவனுக்கு உதவியாக ஒரு உள்ளூர் இளைஞன் நின்றான். "உன் கடவுள் எங்களுடையவரை விட வேறுபட்டவரா?" என்று கேட்டான் இளைஞன். சிற்பி சொன்னான், "இல்லை தம்பி. அவர் வேறு மொழியில் கேட்கிறார், அவ்வளவுதான்." அங்கே பிரார்த்தனைகள் வேறு வேறாக இருந்தாலும், கடலின் மீதான பயமும் பக்தியும் ஒன்றாகவே இருந்தது.

[1] இலங்கை நாளாகமம்களில், புத்த மத வருகையை மகிந்த தேரருடன் ஒரு ஒற்றைத் திருப்புமுனையாக தோன்றினாலும், தொல்பொருள் ஆய்வு வேறு ஒன்றைக் காட்டுகிறது: பௌத்தம் - வர்த்தகம் மற்றும் தொடர்பு மூலம் படிப்படியாக வந்திருக்கலாம் என்றும் மகிந்தாவின் பணி பௌத்தத்தை முறைப்படுத்தி அரசமயமாக்கி யிருக்கலாம் என்றும் - அதாவது விதைகள் முன்பே இருந்திருக்கலாம் என்றும் மகிந்த அதை ஒரு தேசிய மரமாக வளரச் செய்தார் என்றும் சான்றுபகிர்கிறது

[2] பழமையான வர்த்தகத் துறைமுகமாக தொல்லியல் ஆதாரங்களால் இன்று மிகவும் உறுதிப்படுத்தப்பட்டது தான் இந்த மாந்தை (மஹாதித்த / மாதோட்டம்) துறைமுகம். இதைவிட மேலும் புவியியல் ரீதியாக மிகவும் மூலோபாய முக்கியத்துவமும் கொண்டதாக கோக்கண்ண (திருகோணமலை) மற்றும் சமய மற்றும் பாரம்பரிய இலக்கியங்களில் இன்று மிக வலுவாக குறிப்பிடப்படும் ஜம்புகோலப்பட்டணமும் (யாழ்ப்பாணப் பகுதி) அன்று இருந்தது. அத்துடன் அங்கு ஆரம்பகால தமிழ் பேசும் வணிகர்கள் அல்லது தமிழ் பேசும் கடலோர மக்களுடன் மற்றவர்களும், குறிப்பாக அனுராதபுர இராச்சியத்திலிருந்தும் மற்றும் தென்னிந்திய வணிகர்களும், ஒருவேளை அரேபிய வணிகர்களும் (பிற்காலம்) காணப்பட்டார்கள் என்பதும் இன்றைய ஆய்வின் முடிவு.

வடக்கிலிருந்து பிக்குகளும் கலைஞர்களும் வந்தார்கள்; அருகிலிருந்த தென்னிந்திய நிலப்பரப்பிலிருந்து வணிகர்களும் கவிஞர்களும் வந்தார்கள். அவர்கள் இந்த நிலத்துப் பெண்களை மணந்தார்கள். அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் இந்தத் தீவின் காற்றால் உருவான ஒரு புதிய மொழியில் பேசினார்கள். அது எலு (Elu) மொழி. அதற்கு இன்னும் 'சிங்களம்' என்று பெயரிடப்படவில்லை; ஆனால் அது தமிழ் மற்றும் சமஸ்கிருதச் சொற்களைத் தன்னுள் ஏந்தி, இந்த மண்ணுக்கே உரிய தனித்துவமான இசையுடன் மலரத் தொடங்கியது.

எனினும், இந்த மொழி ஒரு தனித்துவமான வடிவத்தைப் பெறுவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, தீவின் வடக்கு, கிழக்கு மற்றும் வடமேற்குக் கடலோரப் பகுதிகளில் தமிழர்களும் நாகர்களும் செழித்து வாழ்ந்தனர். இதற்கு கி.மு. 3-ஆம் நூற்றாண்டு ஆனைக்கோட்டை முத்திரை, கந்தரோடையில் கண்டெடுக்கப்பட்ட மண்பாண்டங்கள், பொம்பரிப்பு (Pomparippu) முதுமக்கள் தாழிகள் மற்றும் திஸ்ஸமஹாராமவில் கண்டெடுக்கப்பட்ட கி.மு. 2-ஆம் நூற்றாண்டுக்குரிய 'திரளி முறி' (Tirali Muri) பொறிக்கப்பட்ட மண்பாண்டங்கள் சான்று பகிர்கின்றன. மற்றும் ஈழத்து கவிஞர் பூதந்தேவனார் கவிதைகள் சங்க நூல்களில் (கி.மு. 100- கி.பி. 250) காணப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது

மகிந்த தேரர் வந்தபோது வாளோடு வரவில்லை, வார்த்தைகளோடு வந்தார். மன்னன் செவிசாய்த்தான்; நிலம் மௌனித்தது. பௌத்தம் ஒரு அதிகாரமாக அன்றிக் கலைந்திருந்த மக்களை இணைக்கும் ஒரு சாத்தியமாகவே வந்தது. அது ஆதித் தெய்வங்களை அழிக்கவில்லை; குல வழக்கங்களை வேரறுக்கவில்லை. ஆனால், ஆட்சியில் இருப்பவர்கள் தங்கள் அதிகாரத்தை வளர்க்க, புதிதாக வந்த ஆன்மீகத் தத்துவத்தை ஓர் அரசியல் அடித்தளமாக மாற்றுவதற்கான வழியைக் கண்டனர்.

காலப்போக்கில், புத்த சமய பரவல் நடைபெறும் வேளையில், அனுராதபுரம் அருகே, குகைகளில் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டன. ஒருவர் பாறையில் புதிய எழுத்துகளை பொறித்தார். அது பிராமி எழுத்து. அதில் எழுதப்பட்டது: “இந்த குகை சங்கத்துக்கு தானமாக வழங்கப்பட்டது.” சிவா அந்த எழுத்துகளை விரலால் தொட்டான். “இந்த எழுத்துக்கள் நம்மை விட நீண்ட நாட்கள் வாழும்,” என்றான். ஒரு பெரியவர் பதிலளித்தார்: “ஆம். இதில் தானம் செய்தவரின் பெயர் உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் அந்தப் பெயர் வாழும்.”

சிவா மெதுவாகச் சொன்னான்: “வரலாறு நடந்ததை மட்டும் நினைவில் வைக்காது. எழுதப்பட்டதை நினைவில் வைக்கும். எழுதப்பட்டவர்கள் வாழ்கிறார்கள். எழுதப்படாதவர்கள் மறைந்து போகிறார்கள்.” அந்த இரவு, ஊர்சபையில் மக்களின் குரல்கள் உயர்ந்தன. “துறவைக் கற்பிக்கிறார்கள்,” என்றான் ஒருவன். “ஆனால் நிலம் வாங்குகிறார்கள்”. “சமத்துவம் பேசுகிறார்கள்,” என்றான் இன்னொருவன். “ஆனால் அரசர்கள் முதலில் அவர்களை தலைவணங்குகிறார்கள்.” சிவாவின் தலை சுற்றியது!

ஒரு கடலோர வியாபாரி எழுந்து நின்று, “அவர்கள் ஒழுங்கைக் கொண்டுவருகிறார்கள். சட்டம், ஒன்றுபடுவதற்கான ஒரு வழி.” என்றான். சிவா முன்னே வந்தான். “எந்த விலைக்கு?” என்று கேட்டான். நம் முன்னோர்கள் இங்கே புதைக்கப்பட்டிருக்கிறார்கள். புதிய பிரார்த்தனைகள் வளரும் போது, இந்த கற்கள் இன்னும் பேசுமா? அல்லது உடைக்கப்படுமா?” யாரும் பதில் சொல்லவில்லை. அங்கு மௌனம் நிலவியது. பயம் மெதுவாகப் பரவியது.

ஒரு மாலை, ஆற்றங்கரையில் சிவா மற்றும் கலினி சந்தித்தனர். “என் வீட்டில், என் திருமணத்தைப் பேசுகிறார்கள்,” என்றாள் கலினி. “புதிய ஒழுங்கை ஆதரிக்கும் ஒருவருடன்.” “அவன் உன்னை நேசிக்கிறானா?” என்று கேட்டான் சிவா. “அவன் நிலைத்தன்மையை [stability] விரும்புகிறான்,” என்றாள் அவள். “நீ?” அவள் அமைதியாக இருந்தாள். ஆறு ஓடிக் கொண்டே இருந்தது. அது பல காதல்களின் கதையை அறிந்த ஆறு.

ஒரு நாள் துறவி பெண்களிடம் கூறினார்: “பெண் தனது கடமையில் அமைதியைக் காண்கிறாள். குடும்பமும் சமூகமும் வாழ்வுக்கு முக்கியம்.” அந்த வார்த்தைகள் கலினியின் மனதை அடைந்தன. அந்த இரவு அவள் சிவாவிடம் சொன்னாள்: “அவர்கள் காதலைத் தடை செய்யவில்லை. அதன் அர்த்தத்தை மாற்றுகிறார்கள்.”

சிவா அவள் கையை மெதுவாகத் தொட்டான். “அன்பு [காதல்] அனுமதி கேட்க வேண்டிய நிலை வந்தால், அது சுதந்திரமான அன்பு அல்ல,” என்றான். “சுதந்திரம் இழந்த அன்பு — காயமடைந்த அன்பு.”

காலம் நகர்ந்தது. கப்பல்கள் புறப்பட்டன. சிலர் உள்நாட்டுக்குப் போனார்கள். சிலர் கடலைக் கடந்தனர். கலினியின் தாய் மகளின் ஆபரணங்களை அடுக்கினாள். “மாற்றம் காத்திருக்காது,” என்றாள். “அது தேர்வு செய்யும்.” கலினி நிலத்தைப் பார்த்தாள் — கற்கள், வயல்கள், ஆறு.

சிவா தொலைவில் நின்றான். இருவரும் கைகளை அசைக்கவில்லை. சில பிரிவுகள் மிகவும் கனமானவை. இது அப்படிப்பட்ட ஒன்று. மனிதர்கள் இந்த தீவுக்கு வருகிறார்கள். போகிறார்கள். காதல்கள் உருவாகின்றன. உடைகின்றன. ஆனால் தீவு அவசரப்படாது. அது அனைத்தையும் அமைதியாக நினைவில் வைத்துக்கொள்கிறது — ஒரு காயத்தடம் ["Trace of a wound" or "Scar" ] போல.

[3] சிங்கள மொழி ஒரே நாளில் தோன்றியதல்ல; கி.மு. 3ஆம் நூற்றாண்டில் வடஇந்திய இந்தோ-ஆரிய பிராகிருத வழக்குமொழிகள் இலங்கைக்கு வந்து, அங்கு உள்ளூர் சூழலில் மெதுவாக மாறி “எலு” எனப்படும் ஒரு பழைய வடிவமாக வளர்ந்தது. பௌத்த மதத்தின் பரவலால் பாலி மொழிச் சொற்கள் சேர்க்கப்பட்டன; பின்னர் சமஸ்கிருதச் சொற்களும் இலக்கிய வழியாக புகுந்தன. இலங்கைத் தமிழர்களுடன் நீண்டகால தொடர்பினால் தமிழ் மற்றும் பிற திராவிட மொழிகளின் சொல், இலக்கணத் தாக்கமும் ஏற்பட்டது. இவ்வாறு பல நூற்றாண்டுகளாக ஏற்பட்ட மொழிச்சேர்க்கை மற்றும் மாற்றங்களின் விளைவாக 8–10ஆம் நூற்றாண்டுகளுக்குப் பின்னர் தெளிவான இலக்கிய சிங்களம் உருவாகி, கல்வெட்டுகள் மற்றும் நூல்கள் மூலம் நிலைபெற்றது என்பது மொழியின் வரலாறாகும்.

[4] கி.மு. 3ஆம் நூற்றாண்டு (அசோகர் காலம்) அளவில் உருவானதே பிராமி எழுத்து (Brahmi Script), பின்னர் பல எழுத்துமுறைகளின் தாய் எழுத்தாக அமைந்தது. தமிழ் மொழிக்காக மாற்றியமைக்கப்பட்ட பிராமி எழுத்து வடிவமே தமிழ் பிராமி. பொதுவாக கி.மு. 2ஆம் நூற்றாண்டு முதல் தமிழகத்திலும் இலங்கையிலும் தமிழ் பிராமி அல்லது தமிழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பெரும்பாலும் கி.மு. 3–1 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிராமி கல்வெட்டுகள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன. அவற்றில் சில கல்வெட்டுகளில் தமிழ் நாமங்கள், தமிழ் மொழிச்சொற்கள், தமிழ் இலக்கண அம்சங்கள் காணப்படுகின்றன. இவை அனுராதபுரம், திஸ்ஸமஹாராம, மாந்தை, கந்தரோடை பகுதிகளில் முக்கியமாகக் காணப்பட்டன. என்றாலும் தமிழ்நாட்டில்: கீழடி (Keeladi), பொருந்தல் (Porunthal), கொடுமணல் (Kodumanal) இடங்களில் கண்ட குடுவை எழுத்துகள் சில: கி.மு. 5–6ஆம் நூற்றாண்டு வரை தள்ளப்படலாம் என்று சில radiocarbon ஆய்வுகள் இன்று கூறுகின்றன. இது அசோகா எழுத்துக்கும் முன்னதாக அமைவது குறிப்பிடத்தக்கது.

நன்றி

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

அத்தியாயம் 3 தொடரும்

துளி/DROP: 2113 [சிறு கதை - 207 / பெயர்களுக்கு முன் நினைவிருந்த தீவு அல்லது ஒரு நிலத்தின் கதை / அத்தியாயம் 2

https://www.facebook.com/groups/978753388866632/posts/34503361082645765/?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறு கதை - 207 / பெயர்களுக்கு முன் நினைவிருந்த தீவு அல்லது ஒரு நிலத்தின் கதை / அத்தியாயம் 3

[இந்த கதை ஒரு கல்லைப் பற்றியது மட்டுமல்ல. இது ஒரு நிலத்தின் கதை. அதில் வாழ்ந்த மக்களின் கதை. மாற்றப்பட்ட ஒரு சொல்லின் கதை. மறைக்கப்பட்ட நினைவுகளின் கதை. வரலாறு என்றால் நாம் புத்தகங்களில் படிப்பதையே நினைப்போம். ஆனால் வரலாறு மக்களின் நினைவுகளிலும் வாழ்கிறது. ஒரு கல், ஒரு சொல், ஒரு மாற்றம் — இவை எல்லாம் சேர்ந்து எவ்வாறு ஒரு சமூகத்தின் வாழ்க்கையை மாற்றுகின்றன என்பதையே இந்த கதை சொல்லுகிறது.

ஒரு கல் பேசாது. ஆனால் அது பல காலங்களைக் காணும். மனிதர்கள் வரலாற்றை எழுதுகிறார்கள். ஆனால் அவர்கள் எல்லாவற்றையும் எழுத மாட்டார்கள். சில உண்மைகள் தெரிவு செய்யப்படுகின்றன. சில உண்மைகள் மறைக்கப்படுகின்றன. இந்த கதை சொல்லும் முக்கியமான செய்தி இதுதான்: வரலாறு முழுவதும் பொய்யாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அது ஆபத்தாக மாறுவதற்கு சில உண்மைகளை மட்டும் தேர்ந்தெடுத்து சொல்லினால் போதும்.

என் குறிப்பு: இந்த நூல் ஒரு கற்பனைக்கதை. ஆனால் இதில் பேசப்படும் உணர்வுகள் உண்மையானவை. நிலம், மொழி, அடையாளம், நினைவு — இவை எல்லாம் மனிதர்களின் வாழ்க்கையில் முக்கியமானவை. இந்த நூல் ஒருபக்கத்தை ஆதரிப்பதற்காக அல்ல. பேசப்படாத குரல்களை நினைவில் கொள்ளச் செய்வதற்காக. நாம் வரலாற்றைப் படிக்கும் போது ஒரு கேள்வியை கேட்க வேண்டும்: “இங்கே யாருடைய குரல் கேட்கப்படவில்லை?” அந்தக் கேள்வியே இந்த கதையின் இதயம்.]

பொதுவாக ஒரு திருமணம் என்றால் அங்கே மேள தாளங்கள் அதிரும், உறவினர்களின் சிரிப்பு சத்தம் கேட்கும், எங்கும் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். ஆனால், கலினியின் திருமணம் இதற்கு நேர்மாறாக இருந்தது. அங்கே கொண்டாட்டங்கள் ஏதுமில்லை; மௌனம் மட்டுமே அந்த அறையை ஆக்கிரமித்திருந்தது. அவள் கட்டியிருந்த பட்டுப்புடவையின் சலசலப்பு சத்தம் மட்டுமே அந்த அமைதியைக் கலைத்துக் கொண்டிருந்தது. அங்கிருந்த சாட்சிகளின் பார்வையில் மகிழ்ச்சிக்கு பதிலாக ஒருவித பாரமும், தயக்கமும் மட்டுமே தெரிந்தது.

அங்கு திரண்டிருந்த சாட்சிகள் வெறும் வேடிக்கை பார்க்க வந்த சாதாரண மனிதர்கள் அல்ல. அவர்கள் சமூகத்தின் எழுதப்படாத சட்டங்களாகவும், மதத்தின் இறுக்கமான கட்டுப்பாடுகளாகவும், அரசின் அதிகாரமாகவும் அங்கே நின்றார்கள். அது ஒரு குடும்பம் எடுத்த முடிவிற்கு ஒட்டுமொத்த சமூகமும் வழங்கிய அங்கீகாரம். அதனால்தான் அந்தத் திருமணச் சூழல் ஒரு திருவிழாவைப் போல இல்லாமல், தண்டனை வழங்கும் ஒரு நீதிமன்றத்தின் தீர்ப்பைப் போல கனமாக இருந்தது.

கலினி அங்கே ஒரு சிலையைப் போல அமைதியாக அமர்ந்திருந்தாள். மங்கலத்தின் அடையாளமான மஞ்சள் அவளுடைய கைகளில் பூசப்பட்டிருந்தது, ஆனால் அவள் முகத்தில் அந்த மங்கலம் இல்லை. அவள் கண்கள் நிமிர்ந்து யாரையும் பார்க்கத் துணியாமல், தரையையே வெறித்துக் கொண்டிருந்தன. அது அவளது அடக்கத்தைக் காட்டவில்லை; மாறாக அவள் அனுபவித்துக் கொண்டிருந்த தனிமையைக் காட்டியது.

அவளுக்கு அருகில் 'மித்த' நின்றிருந்தான். அவன் வெறும் மணமகன் மட்டுமல்ல; படித்தவன், மதக் கோட்பாடுகளைத் தீவிரமாகப் பின்பற்றுபவன் மற்றும் அரசின் நம்பிக்கையைப் பெற்றவன். சுருக்கமாகச் சொன்னால், இந்தச் சமூகம் எதை 'உயர்ந்தது' என்று கருதுகிறதோ, அதன் ஒட்டுமொத்த உருவமாக அவன் இருந்தான்.
அங்கிருந்த பெரியவர், 'இந்தத் திருமணத்திற்குச் சம்மதமா?' என்பது போல, 'நீங்கள் இவரை ஏற்றுக்கொள்கிறீர்களா?' என்று வழக்கமான கேள்வியைக் கேட்டார். ஆனால், அந்தக் கேள்விக்கு 'இல்லை' என்று சொல்லும் அதிகாரம் அங்கு எவருக்கும் இல்லை; பதில் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது.

'ஏற்றுக்கொள்கிறேன்,' என்று கலினி பதில் சொன்னாள். அவள் குரலில் நடுக்கம் ஏதுமில்லை. அந்தத் தெளிவு தைரியத்தால் வந்ததல்ல, அல்லது மகிழ்ச்சியால் வந்ததல்ல. தனக்குப் பிடித்தமான ஏதோ ஒன்று தனக்குள் உடைந்து போன பிறகு, எஞ்சியிருக்கும் ஒருவித உணர்ச்சியற்ற நிலையில் இருந்து வந்த குரல் அது.

தென்னை மரங்களின் மறைவிலிருந்து சிவா அந்தத் திருமணத்தைப் பார்த்தான். அவன் காதலித்த கலினி, இப்போது 'மித்த' என்பவனுக்கு மனைவியாகிவிட்டாள். கலினி நாகர் இனத்தைச் சேர்ந்தவள்; அவர்கள் ஏற்கனவே தமிழர்களுடன் இணைந்து, தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் ஏற்றுக்கொண்டவர்கள். கடலோரப் பகுதியில் வசிக்கும் ஒரு சாதாரணத் தமிழ் இளைஞனான சிவாவிற்கு, அந்தத் திருமணத்தைத் தடுத்து நிறுத்த வலிமை இல்லை.

அவன் அவளைச் சபிக்கவில்லை, அழுது ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. அந்த இடத்தை விட்டு மெதுவாக விலகி நடந்தான். அவன் பாதம் வைத்த நிலமே அவனைப் பிடித்துத் தள்ளுவது போல ஒரு உணர்வு—அதாவது அந்த மண்ணில் அவனுக்கான இடம் பறிக்கப்பட்டுவிட்டது என்பதை அவன் உணர்ந்தான்.

சில நாட்களில் சூழல் இன்னும் மோசமானது. அனுராதபுரம் அருகே தலைமுறை தலைமுறையாகப் பயன்படுத்தப்பட்டு வந்த ஒரு பழங்காலக் குளம் இருந்தது. அங்கிருந்த தமிழ் மக்களின் மூதாதையர்கள் கைகளால் தோண்டிய குளம் அது. ஆனால், அங்கு புதிதாகக் குடியேறியவர்கள் வந்தனர்.

“இந்தக் குளம் இனி ‘சங்கத்தின்’ (மத அமைப்பின்) பாதுகாப்பில் இருக்கும்; யாரும் உரிமை கோர முடியாது,” என்றனர். ஒரு மூதாட்டி ஆக்ரோஷமாக, “இது என் பாட்டி தோண்டியது!” என்று வாதிட்டாள். இந்த வாக்குவாதம் வன்முறையாக மாறியது. தள்ளுமுள்ளு, கல்லெறிதல் எனத் தொடங்கி கடைசியில் ஒரு மரண அலறலில் முடிந்தது.

அமைதியாக இருந்த அந்த மண் அன்று இரவு ரத்தத்தால் நனைந்தது. இரண்டு குடிசைகள் எரிக்கப்பட்டன. மறுநாள் காலை, ஒரு மனித உடல் அடையாளம் காண முடியாத அளவுக்குக் கருகிக் கிடந்தது. அவனது பெயரோ, வரலாறோ எங்கும் பதியப்படவில்லை.

ஆனால், பல ஆண்டுகள் கழித்து எழுதப்பட்ட வரலாற்று ஏடுகளில், அந்த உயிர் பலியும், நில அபகரிப்பும் ஒரு “சிறிய குழப்பம்” (Minor Disturbance) என்று மிகச் சாதாரணமாகக் குறிப்பிடப்பட்டது. சிவா அந்தச் சாம்பல் அருகே மண்டியிட்டு அமர்ந்தான். “ஆயுதங்களால் அமைதியை ஏற்படுத்திவிட்டு, இதோ அமைதி வந்துவிட்டது என்று அவர்கள் பெருமை பேசுவார்கள்,” என்று கசப்புடன் நினைத்துக் கொண்டான்.

ஒரு மலையடிவாரக் குகையில் இருந்த பழங்காலக் கல்வெட்டில் ஒரு மாற்றம் நிகழ்ந்தது. முன்பு அங்கே “ஊரார் வழங்கிய தானம்” என்று செதுக்கப்பட்டிருந்தது. அதாவது மக்கள் தாங்களாகவே முன்வந்து கொடுத்த நிலம் அது. ஆனால், ஒரு புத்த துறவியின் மேற்பார்வையில் அந்த எழுத்துகள் மாற்றப்பட்டன. இப்போது அது “அரசரின் அருளால் சங்கத்திற்கு வழங்கப்பட்ட தானம்” என்று மாறியது.

அதாவது, மக்களின் உரிமை என்பது மறைக்கப்பட்டு, அது அரசின் அதிகாரத்தால் கொடுக்கப்பட்ட பிச்சை போல மாற்றப்பட்டது. இதைப் பார்த்த சிவா அந்தத் துறவியிடம் கேட்டான்: “இது வரலாற்றைத் தெளிவுபடுத்துவதா? அல்லது அதிகாரம் உள்ளவர்கள் தங்கள் வசதிக்கு ஏற்பச் செய்யும் மாற்றமா?”

அதற்குத் துறவி புன்னகைத்துக் கொண்டே சொன்னார், “உண்மை என்பது காலத்திற்கு ஏற்ப வளரக்கூடியது. எனவே பழைய பதிவுகளைத் திருத்த வேண்டியது அவசியம்.” அப்போது சிவா ஒரு கசப்பான உண்மையை உணர்ந்தான்: எழுத்துகள் அப்படியேதான் இருக்கின்றன, ஆனால் அவற்றின் பின்னால் இருந்த மக்களின் உரிமை மறைந்து, அதிகாரத்தின் குரல் ஒலிக்கத் தொடங்கிவிட்டது.

அந்தக் கல் இனி உண்மையைச் சொல்லாது; அது யார் வலிமையானவர்களோ, அவர்களின் பக்கமே நிற்கும்.

திருமணத்திற்குப் பிறகு கலினி அந்தப் புதிய வீட்டிற்குள் நுழைந்தாள். அங்கு எல்லாம் துல்லியமாக இருந்தது—சுத்தம், ஒழுங்கு, ஒருவிதமான கனத்த அமைதி. மித்த அவளைத் துன்புறுத்தவில்லை; உடல் ரீதியாகவோ அல்லது சொல் ரீதியாகவோ அவன் வன்முறையை ஏவவில்லை. அவளிடம் மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடந்துகொண்டான். ஆனால், அந்த மிகையான மரியாதையே அவளுக்குப் பெரும் வலியாக இருந்தது. அவனது அன்பு இயந்திரத்தனமானது; அது இதயத்திலிருந்து வராமல், 'கடமை' என்ற விதியிலிருந்து பிறந்தது.

அவன் தனது மதத்தின் மொழியில் பேசினான்: “இந்த இணைப்பு தர்மமானது; இது புண்ணியம் தரும்,” என்றான். அவன் பழமைவாத சட்டங்களைப் பேசினானே தவிர, அவளது இழப்பைப் பற்றியோ, அவள் உள்ளுக்குள் புதைத்து வைத்திருக்கும் காதலைப் பற்றியோ ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. “நீ அதிர்ஷ்டசாலி,” என்று அவன் சொன்னபோது, அது அவனது குரலாக மட்டும் ஒலிக்கவில்லை; மதத்தின் ஆசீர்வாதமாகவும், அரசின் ஆதரவாகவும், சமூகத்தின் அங்கீகாரமாகவும் ஒலித்தது. அனைவரும் இந்தத் திருமணத்தைச் சரியென்று ஒப்புக்கொண்டனர். ஆனால் கலினியின் இதயம் மட்டும் இந்த 'சரியான' வாழ்க்கையை ஓர் அறமற்றச் செயலாகக் கருதி மௌனமாக எதிர்த்தது.

அன்று இரவு அவளுக்குத் தூக்கம் வரவில்லை. அவள் ஒரு ஆற்றைப் பற்றி நினைத்துப் பார்த்தாள். ஆறு என்பது சுதந்திரமானது; அது யாரிடமும் அனுமதி கேட்காமல் தனது பாதையைத் தானே செதுக்கிக்கொண்டு ஓடும். அதுதான் அவள் விரும்பிய காதல். ஆனால் இப்போது அவள் வாழ்க்கை ஒரு கால்வாயைப் போல மாறிவிட்டது. கால்வாய் பயனுள்ளதுதான், ஆனால் அதன் பாதையை மற்றவர்கள் தீர்மானிக்கிறார்கள். அடுத்தவர்கள் வெட்டிய பாதையில், அவர்கள் இட்ட கட்டளைப்படி அமைதியாக ஓட வேண்டிய ஒரு கட்டுப் படுத்தப்பட்ட வாழ்க்கையாக அவள் எதிர்காலம் மாறியிருந்தது.

ஒருநாள் சிவாவும் மித்தவும் சந்தித்துக் கொண்டபோது, உண்மைக்கும் அதிகாரத்திற்குமான போர் வெளிப்படையாகத் தெரிந்தது. “நீ அவளைக் காதலித்துத் திருமணம் செய்யவில்லை,” என்றான் சிவா. “நீ பாதுகாப்பையும் சமூகத்தின் ஒப்புதலையும் மட்டுமே தேடினாய்.”
மித்த மிகவும் நிதானமாகப் பதிலளித்தான்: “அவளுக்குப் பாதுகாப்பு தேவை. உலகம் மாறிக்கொண்டிருக்கிறது.”

“அந்த மாற்றத்தை யார் தீர்மானிக்கிறார்கள்?” என்று சிவா கேட்டபோது, மித்த அந்த மடாலயத்தைச் சுட்டிக்காட்டினான். “எழுதுபவர்கள். வரலாற்றைப் பதிவு செய்பவர்கள். யாரிடம் அதிகாரம் இருக்கிறதோ அவர்களே மாற்றத்தைத் தீர்மானிக்கிறார்கள்,” என்றான் மித்த. அப்போதுதான் சிவாவுக்குப் புரிந்தது—அன்பை விட அதிகாரமே மனித வாழ்க்கையை வடிவமைக்கிறது. 'உண்மை' என்பது கூடச் சுதந்திரமானது அல்ல; அது அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பவர்கள் எழுதும் ஒரு காகிதம்தான்.

அந்தத் தீவில் நிலவிய பதற்றம் ஒரு திட்டமிடப்பட்ட சக்தியாக உருவெடுத்தது. எல்லைகள் புதிதாக வரையப்பட்டன. பல நூற்றாண்டுகளாக நிலைத்திருந்த இடங்களின் பெயர்கள் மாற்றப்பட்டன. இயற்கையாகத் தோன்றிய குகைகள் கூட ஏதோ ஒரு குறிப்பிட்ட அடையாளத்தின் சின்னங்களாக முத்திரை குத்தப்பட்டன.
புதிய தலைமுறை குழந்தைகளுக்குப் புதிய கதைகள் கற்பிக்கப்பட்டன. “வெளியிலிருந்து வந்தவர்கள்” இப்போது “மண்ணின் மைந்தர்கள்” என்று வரலாற்றில் திருத்தம் செய்யப்பட்டனர். பழைய நினைவுகள் அழிக்கப்பட்டு, அதிகாரத்திற்குச் சாதகமான ஒரு புதிய வரலாறு எழுதப்பட்டது. இந்த அநீதிகள் அனைத்தையும் அந்தத் தீவு மௌனமாகப் பார்த்துக்கொண்டிருந்தது. மனித இனத்தை விடப் பழமையான அந்த நிலத்திற்கு உண்மை தெரியும்.

மனிதர்களின் காலடிகள் இப்போது அந்த நிலத்தின் மீது கனமாகப் பதிந்தன. மனிதர்கள் தங்களுக்குச் சாதகமான வரிகளை மட்டும் உரக்க வாசித்துக் கொண்டிருந்தனர். ஆனால், அங்குள்ள கற்கள் நடந்த எதையும் மறக்கவில்லை; அவை மௌன சாட்சிகளாக உண்மையைச் சுமந்து நின்றன.

நன்றி

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

அத்தியாயம் 4 தொடரும்

துளி/DROP: 2115 [சிறு கதை - 207 / பெயர்களுக்கு முன் நினைவிருந்த தீவு அல்லது ஒரு நிலத்தின் கதை / அத்தியாயம் 3

https://www.facebook.com/groups/978753388866632/posts/34526319740349899/?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறு கதை - 207 / பெயர்களுக்கு முன் நினைவிருந்த தீவு அல்லது ஒரு நிலத்தின் கதை / அத்தியாயம் 4]

[இந்த கதை ஒரு கல்லைப் பற்றியது மட்டுமல்ல. இது ஒரு நிலத்தின் கதை. அதில் வாழ்ந்த மக்களின் கதை. மாற்றப்பட்ட ஒரு சொல்லின் கதை. மறைக்கப்பட்ட நினைவுகளின் கதை. வரலாறு என்றால் நாம் புத்தகங்களில் படிப்பதையே நினைப்போம். ஆனால் வரலாறு மக்களின் நினைவுகளிலும் வாழ்கிறது. ஒரு கல், ஒரு சொல், ஒரு மாற்றம் — இவை எல்லாம் சேர்ந்து எவ்வாறு ஒரு சமூகத்தின் வாழ்க்கையை மாற்றுகின்றன என்பதையே இந்த கதை சொல்லுகிறது.

ஒரு கல் பேசாது. ஆனால் அது பல காலங்களைக் காணும். மனிதர்கள் வரலாற்றை எழுதுகிறார்கள். ஆனால் அவர்கள் எல்லாவற்றையும் எழுத மாட்டார்கள். சில உண்மைகள் தெரிவு செய்யப்படுகின்றன. சில உண்மைகள் மறைக்கப்படுகின்றன. இந்த கதை சொல்லும் முக்கியமான செய்தி இதுதான்: வரலாறு முழுவதும் பொய்யாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அது ஆபத்தாக மாறுவதற்கு சில உண்மைகளை மட்டும் தேர்ந்தெடுத்து சொல்லினால் போதும்.

என் குறிப்பு: இந்த நூல் ஒரு கற்பனைக்கதை. ஆனால் இதில் பேசப்படும் உணர்வுகள் உண்மையானவை. நிலம், மொழி, அடையாளம், நினைவு — இவை எல்லாம் மனிதர்களின் வாழ்க்கையில் முக்கியமானவை. இந்த நூல் ஒருபக்கத்தை ஆதரிப்பதற்காக அல்ல. பேசப்படாத குரல்களை நினைவில் கொள்ளச் செய்வதற்காக. நாம் வரலாற்றைப் படிக்கும் போது ஒரு கேள்வியை கேட்க வேண்டும்: “இங்கே யாருடைய குரல் கேட்கப்படவில்லை?” அந்தக் கேள்வியே இந்த கதையின் இதயம்.]

பஞ்சம் திடீரென ஒரு பெருவெடிப்பைப் போல வந்ததாகத் தோன்றினாலும், அது ஒரே நாளில் உருவானது அல்ல. கி.மு. முதலாம் நூற்றாண்டில் (கி.மு. 103 - 89), அனுராதபுரத்தின் வலகம்பாகு மன்னன் ஆட்சிக்காலத்தில், நாட்டின் அரசியல் அஸ்திவாரம் ஏற்கனவே பலவீனப்பட்டிருந்தது. தென்னிந்தியப் படையெடுப்புகள், ஏழு தமிழ் மன்னர்களின் குறுக்கீடு மற்றும் உள்நாட்டு அதிகாரப் போட்டிகளால் நீர் மேலாண்மை சிதைந்தது. பல ஆண்டுகளாக நீர்த்தேக்கங்கள் தூர்வாரப்படாமல் விடப்பட்டதும், பருவமழை தொடர்ந்து பொய்த்ததும் நிலத்தை மெல்ல மெல்ல மரணத்தின் விளிம்பிற்குத் தள்ளியது. முதலில் கிழக்குக் கடற்கரையின் திருகோணமலை அருகே கருகத் தொடங்கிய நிலம், பின்னர் ரஜரட்டையின் இதயப்பகுதியான அனுராதபுரத்தை நோக்கி நகர்ந்தது. பிரம்மாண்டமான குளங்களின் அடித்தளம் பிளந்து, நிலம் தாகத்தால் வெடித்தது.

நீர் இல்லையெனில் பயிர் இல்லை; பயிர் இல்லையெனில் உயிர் இல்லை. 12 ஆண்டுகள் நீடித்த இந்தப் பஞ்சம் "பெமினிட்டிய சேய" (Beminitiya Seya) அல்லது பிராமண தீய பஞ்சமென அழைக்கப்பட்டது. களஞ்சியங்கள் காலியானதும், மக்கள் பசியால் நிலைகுலைந்தனர். வரலாற்றுக் குறிப்புகளின்படி, பசியின் கொடுமையால் மனிதர்களே மனிதர்களை உண்ணும் அவலமும் நேர்ந்தது. இது வெறும் வறட்சி மட்டுமல்ல; ஆட்சி மாற்றம், நிர்வாகக் குழப்பம் மற்றும் மக்களின் இடப்பெயர்வு என ஒரு நாகரிகத்தின் இருண்ட காலமாக மாறியது. மடங்களில் இருந்த ஆயிரக்கணக்கான பிக்குகள் உணவின்றி மடிந்தனர்; எஞ்சியவர்கள் உயிர் பிழைக்க இந்தியாவுக்கும், மலையகத்திற்கும் ஓடினர். அழியும் நிலையில் இருந்த தர்மத்தைப் பாதுகாக்க, அதுவரை வாய்மொழியாக இருந்த ‘திரிபிடகம்’ மாத்தளை அலுவிஹாரையில் முதல்முறையாக ஓலைச்சுவடிகளில் ஆவணப்படுத்தப்பட்டது.

இந்த நெருக்கடி காலத்தைப் பழைய குடிகளான நாகர்கள், கடலோரத் தமிழர்கள் மற்றும் வேட்டுவ இனக்குழுக்கள் எதிர்கொண்ட விதம் வேறுபட்டது. அவர்கள் நிலத்தின் ரகசியங்களை அறிந்தவர்கள். ஆனால் இம்முறை இயற்கை மட்டும் சவால் விடவில்லை; புதிய அதிகார வர்க்கமும் சேர்ந்தே அழுத்தியது. நீர் எங்கு எஞ்சியிருந்ததோ, அங்கெல்லாம் மன்னரின் ஆணை புகுந்தது. நீர்நிலைகளின் உரிமை தனிநபர்களிடமிருந்து பறிக்கப்பட்டு, அதிகாரத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. பழைய நடுகற்களிலும், பாறைகளிலும் இருந்த தமிழ்-பிராமி எழுத்துக்களும், நாக வம்சத்தின் பாம்புச் சின்னங்களும், பழங்குடி இனக்குழுக்களின் குறியீடுகளும் மெல்ல அழிக்கப்பட்டன. அவற்றின் மேல், "இந்த நிலமும் நீரும் மன்னரின் கட்டளைப்படி வழங்கப்படுகிறது" என்ற புதிய அதிகாரத்துவ எழுத்துக்கள் செதுக்கப்பட்டன.

பழைய வரலாற்றின் மேல் புதிய கதைகள் எழுதப்பட்டன. நிலத்தின் உண்மையான உரிமையாளர்களின் பெயர்கள் பாசி படிந்த கற்களில் மறைக்கப்பட, நீர் யாரிடம் இருந்ததோ அவர்கள் புதிய எஜமானர்களாக உருவெடுத்தனர். 12 ஆண்டுகளுக்குப் பிறகு மழை பெய்தபோது, நிலம் குளிர்ந்தது; ஆனால் அதன் பழைய அடையாளம் மீட்க முடியாதபடி மாறியிருந்தது. நீர் வற்றிய காலத்தில், ஒரு சமூகத்தின் கூட்டு நினைவுகளும், உரிமைகளும் சேர்த்தே வற்றச் செய்யப்பட்டன. பசி ஆறிய பின் எஞ்சியது, புதிய அதிகாரத்தால் மாற்றி எழுதப்பட்ட ஒரு தேசத்தின் வரலாறு மட்டுமே.

அந்த நேரத்தில் அமைதியான எதிர்ப்பு உருவானது. வெளியில் பசி. உள்ளே கோபம். மன்னார் மீனவர்கள் இரவில் வலைகளில் செய்திகளை மறைத்து எடுத்துச் சென்றனர். யாழ்ப்பாணத்தில் பெண்கள் தங்களின் ஆடைகளில், குறிப்பாகப் புடவைகளில் நுணுக்கமான தையல் வேலைப்பாடுகள் (Embroidery) மூலம் செய்திகளையும், நில வரைபடக் குறிகளையும் ரகசியமாகப் பொறித்தனர். வவுனியா காடுகளில் வேட்டைக்காரர்கள் மறைவுப் பாதைகளை மனப்பாடம் செய்தனர். கலினி ஒருபோதும் தன்னை ஒரு கிளர்ச்சியாளர் என்று பகிரங்கமாக அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை. ஆனால், அவள் அந்த ரகசிய வலையமைப்பின் மூளையாகச் செயல்பட்டாள்.

பகலில் அவள் ஒரு குடியேற்ற அதிகாரியின் மனைவியாக, அமைதியான வாழ்க்கையை வாழ்ந்தாள். வெளியில் பார்த்தால் கீழ்ப்படியும் மனைவி போலத் தோன்றினாள். ஆனால் இரவில் அவள் வேறு. தன் கணவனுக்கு எழுத்தாளராக பணிபுரிந்த போர்வையில், தன் கணவனின் அலுவலகத்தில் இருந்த ஆவணங்களில் அவள் செய்த மாற்றங்கள் நுட்பமானவை. அவள் சில பதிவுகளை திட்டமிட்டு “தவறவிட்டாள்.” சில ஆவணங்கள் இடம் மாறின. சில பெயர்கள் நீக்கப்பட்டன. சில உத்தரவுகள் தாமதமானது.

அவள் குழந்தைகளிடம் பழைய ஊர் பெயர்களைச் சொன்னாள். “இந்த நிலத்திற்கு முன்பு வேறு பெயர் இருந்தது,” என்று நினைவூட்டினாள். அவள் தாலாட்டு பாடல்கள் பாடினாள். அவை சாதாரண பாடல்கள் போல இருந்தது. ஆனால் அவற்றில் மறைந்த பாதைகள், கிணறுகள், ஆறுகள் பற்றிய தகவல்கள் இருந்தது. அவளின் எதிர்ப்பு ஆயுதமில்லாதது. அவள் வாள் எடுத்துக்கொள்ளவில்லை. அவள் தீ வைத்துக் கொள்ளவில்லை. அவள் நினைவைக் காத்தாள். அவள் புரிந்துகொண்டிருந்தாள்: நிலம் பறிக்கப்படலாம். நீர் தடுக்கப்படலாம். ஆனால் நினைவு உயிரோடு இருந்தால், மீண்டும் எழுந்து நிற்க முடியும்.

கிமு 2-ஆம் நூற்றாண்டு. இலங்கையில் புதிய குடியேற்றங்களும், மதம் சார்ந்த அதிகார மாற்றங்களும் நிகழத் தொடங்கிய காலம். வரலாற்று ஆய்வாளர் டாக்டர் பால் ஈ. பீரிஸ் (Dr. Paul E. Pieris) 1917-ஆம் ஆண்டு அரச ஆசியக் கழகத்தில் (Royal Asiatic Society) குறிப்பிட்டது போல, விஜயன் வருகைக்கு நீண்ட காலத்திற்கு முன்பே, பாரத தேசமே போற்றும் வண்ணம் பஞ்ச ஈஸ்வரங்கள் (ஐந்து சிவத்தலங்கள்) இலங்கையில் செழித்திருந்தன.

சிவா இந்தத் தொன்மையான மரபின் காவலனாக இருந்தான். அவன் கடலோரப் பகுதிகளில் வாழ்ந்த சைவத் தமிழ் மக்களிடையே இந்த இரகசிய வலைப்பின்னலை உருவாக்கியிருந்தான். பஞ்சம் வருவதற்கு முன்பே அவன் இதை அமைத்திருந்தாலும், புதிய குடியேற்ற அதிகாரிகளின் வருகைக்குப் பின் இது உயிர்-மரணம் பிரச்சினையாக மாறியது.

சிவா ஒரு முடிவெடுக்க வேண்டிய நிலை வந்தது. பலர் ஏற்கனவே கடல் கடந்து தமிழகம் நோக்கிச் சென்றுவிட்டனர். அங்கு மொழி மாறவில்லை, பூர்வீகப் பெயர்கள் சிதைக்கப்படவில்லை. ஆனால் ஓடுவது உயிரைக் காப்பாற்றலாம்; நம் நிலத்தையும் நினைவையும் காப்பாற்றுமா? “உயிர் மட்டும் போதுமா? நாம் யார் என்ற அடையாளத்தை காக்க வேண்டாமா?” – இதுவே அவனின் போராக மாறியது.

ஒரு நீர்க்கால்வாய் அருகே மோதல் வெடித்தது. மூன்று பேர் இறந்தனர் – இரண்டு குடியேற்றக்காரர்கள், ஒரு பூர்வீக மனிதன். பின்னர் அங்கு எழுப்பப்பட்ட கல்வெட்டில், புதிய மதத்தைத் தழுவிய குடியேற்றக்காரர்களின் பெயர்கள் மட்டுமே பொறிக்கப்பட்டன. அந்த இரவு, சிவாவும் கலினியும் ஒரு பழைய நாகர் கோயில் இடிபாடுகளில் சந்தித்தனர்.

“நாம் போய்விட்டால், இந்த இடத்தை அவர்கள் காலி நிலம் என்பார்கள்,” என்றான் சிவா. “நாம் போராடினால், நம்மை தர்மத்திற்கு எதிரான காட்டுமிராண்டிகள் என்பார்கள்,” என்றாள் கலினி.

அனுராதபுரத்தில் புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டது: பஞ்சத்தால் கைவிடப்பட்ட நிலங்கள் அனைத்தும் அரசாங்கத்தால் மறுவினியோகம் செய்யப்படும். பௌத்த மதம் பரப்பப்பட்ட அதே வேகத்தில், பூர்வீக நாகர் மற்றும் தமிழ் மக்களின் நிலங்கள் 'புனித தானம்' என்ற பெயரில் கையகப்படுத்தப்பட்டன.

அப்போது சிவாவுக்கு ஒன்று புரிந்தது: இது நிலத்துக்கான போர் மட்டும் அல்ல. திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம், நகுலேஸ்வரம், முன்னேஸ்வரம், தொண்டீஸ்வரம் எனத் தீவைச் சுற்றி அரணாக நின்ற பஞ்ச ஈஸ்வரங்களின் நினைவுகளை அழித்துவிட்டு, புதிய வரலாற்றை எழுதும் முயற்சி இது.

அவர்களுக்கிடையே ஒரு கனமான மௌனம் நிலவியது. அப்போது அவர்களுக்குப் புரிந்தது:

மொழி மாற்றம்: பழைய பெயர்கள் மெல்ல பாளி மற்றும் ஆரம்பகால சிங்கள மொழி [எலு மொழி] வடிவங்களுக்கு மாற்றப்பட்டுக் கொண்டிருந்தன.

நில அபகரிப்பு: ‘தர்ம தானம்’ என்ற பெயரில் பூர்வீக மக்களின் விளைநிலங்கள் புதிய விகாரைகளுக்கு வழங்கப்பட்டன.

அடையாளப் போர்: இது வெறும் மண்ணுக்கான சண்டை அல்ல; யார் இந்த நாட்டின் முதல் குடிமக்கள் என்ற வரலாற்று நினைவிற்கான போர்.

சிவா தன் கையில் இருந்த பழைய ஓலைச்சுவடிகளை இறுகப் பற்றினான். அதில் அந்த நிலத்தின் உண்மையான எல்லைகளும், நாகர்களின் பரம்பரை பெயர்களும் இருந்தன. வாளை விட வலிமையானது நினைவு என்பதை அவன் உணர்ந்தான்.

நன்றி

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

அத்தியாயம் 5 தொடரும்

துளி/DROP: 2117 [சிறு கதை - 207 / பெயர்களுக்கு முன் நினைவிருந்த தீவு அல்லது ஒரு நிலத்தின் கதை / அத்தியாயம் 4

https://www.facebook.com/groups/978753388866632/posts/34545175638464309/?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறு கதை - 207 / பெயர்களுக்கு முன் நினைவிருந்த தீவு அல்லது ஒரு நிலத்தின் கதை / அத்தியாயம் 5

[இந்த கதை ஒரு கல்லைப் பற்றியது மட்டுமல்ல. இது ஒரு நிலத்தின் கதை. அதில் வாழ்ந்த மக்களின் கதை. மாற்றப்பட்ட ஒரு சொல்லின் கதை. மறைக்கப்பட்ட நினைவுகளின் கதை. வரலாறு என்றால் நாம் புத்தகங்களில் படிப்பதையே நினைப்போம். ஆனால் வரலாறு மக்களின் நினைவுகளிலும் வாழ்கிறது. ஒரு கல், ஒரு சொல், ஒரு மாற்றம் — இவை எல்லாம் சேர்ந்து எவ்வாறு ஒரு சமூகத்தின் வாழ்க்கையை மாற்றுகின்றன என்பதையே இந்த கதை சொல்லுகிறது.

ஒரு கல் பேசாது. ஆனால் அது பல காலங்களைக் காணும். மனிதர்கள் வரலாற்றை எழுதுகிறார்கள். ஆனால் அவர்கள் எல்லாவற்றையும் எழுத மாட்டார்கள். சில உண்மைகள் தெரிவு செய்யப்படுகின்றன. சில உண்மைகள் மறைக்கப்படுகின்றன. இந்த கதை சொல்லும் முக்கியமான செய்தி இதுதான்: வரலாறு முழுவதும் பொய்யாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அது ஆபத்தாக மாறுவதற்கு சில உண்மைகளை மட்டும் தேர்ந்தெடுத்து சொல்லினால் போதும்.

என் குறிப்பு: இந்த நூல் ஒரு கற்பனைக்கதை. ஆனால் இதில் பேசப்படும் உணர்வுகள் உண்மையானவை. நிலம், மொழி, அடையாளம், நினைவு — இவை எல்லாம் மனிதர்களின் வாழ்க்கையில் முக்கியமானவை. இந்த நூல் ஒருபக்கத்தை ஆதரிப்பதற்காக அல்ல. பேசப்படாத குரல்களை நினைவில் கொள்ளச் செய்வதற்காக. நாம் வரலாற்றைப் படிக்கும் போது ஒரு கேள்வியை கேட்க வேண்டும்: “இங்கே யாருடைய குரல் கேட்கப்படவில்லை?” அந்தக் கேள்வியே இந்த கதையின் இதயம்.]

அந்தக் கிளர்ச்சி பெரும் முரசொலிகளுடனோ, கொடியேற்றத்துடனோ தொடங்கவில்லை. அது ஒரு சிறிய 'இல்லை' என்ற சொல்லில் இருந்து முளைத்தது. சில கிராமங்கள் வரியாகத் தானியங்களைக் கொடுக்க மறுத்தன; கடலோர மக்கள் தங்களின் உழைப்பை அரசுக் களஞ்சியத்திற்கு வழங்க மறுத்தனர். காடுகளில் ஒதுங்கியிருந்தவர்கள் மெல்ல ஊருக்குள் திரும்பினர். அவர்கள் சண்டையிட வரவில்லை, என்ன நடக்கிறது என்று அமைதியாகப் பார்க்க வந்தனர். பழங்குடி மக்கள் தங்களைப் புரட்சியாளர்கள் என்று அழைத்துக்கொள்ளவில்லை, ஆனால் அவர்கள் அதிகாரத்திற்குப் பணியவில்லை.

குடியேற்ற அதிகாரிகள் இதை ‘குழப்பம்’ என்றனர். அரசவையினர் ‘துரோகம்’ என்றனர். மடாலயங்களில் இருந்தவர்கள் இதனை ‘தவறான கலகம்’ எனத் தூற்றினர்.

அனுராதபுரத்திற்குத் தெற்கே, ஒரு பெரிய நீர்த்தேக்கத்தின் (வாவி) அருகே முதல் மோதல் வெடித்தது. வரி வசூலிக்க வந்த அரசுப் படையினர், வலுக்கட்டாயமாகத் தானியங்களைப் பறிக்க முயன்றனர். பல ஆண்டுகளாக மழையே பார்த்திராத அந்த வறண்ட மண், அன்று மனித இரத்தத்தைப் பார்த்தது.

சிவா அந்தப் போர்க்களத்தில் இருந்தான். அவன் வெற்றியை எதிர்பார்த்து கிளர்ச்சியில் இறங்கவில்லை; மாறாக, தன் மௌனம் அதிகாரத்தின் அநீதிக்குச் சம்மதமாகிவிடக் கூடாது என்பதற்காகவே ஆயுதம் ஏந்தினான். சண்டை முடிந்தபோது பல உடல்கள் மண்ணில் கிடந்தன. அவர்களின் பெயர்கள் எங்கும் குறிக்கப்படவில்லை.

அடுத்த நாள் காலையில் பிக்குகள் அங்கு வந்தனர். அவர்கள் காயமடைந்தவர்களுக்கு மருத்துவம் செய்ய வரவில்லை; மாறாக, நடந்தவற்றைத் தங்களுக்குச் சாதகமாகப் பதிவு செய்ய வந்தனர். ஓலைச்சுவடிகள் விரிக்கப்பட்டன. வார்த்தைகள் மிகவும் சாதுர்யமாகத் தேர்ந்து எடுக்கப்பட்டன:

தங்கள் நிலத்தைக் காக்கப் போராடியவர்கள் ‘கொள்ளையர்கள்’ என அழைக்கப்பட்டனர்.

அவர்களின் எதிர்ப்பு ‘சங்கத்திற்கு எதிரான வன்முறை’ என்று திரிக்கப்பட்டது.

வரலாறு பல ஆண்டுகள் கழித்து எழுதப்படவில்லை; அது நடந்த அன்றே அதிகார வர்க்கத்தால் மாற்றியமைக்கப்பட்டது.

கலினி இந்தச் செய்திகளைப் பிறர் சொல்லிக் கேட்கவில்லை; அவள் அனைத்தையும் நேரில் கண்ட சாட்சி. அவளது கணவன் அப்போது ஒரு மடாலயத்தில் வரலாற்றுப் பதிவேடுகளை எழுதும் பணியில் உதவியாளராக இருந்தான். ஒவ்வொரு மாலையும் அவன் அன்றைய பதிவுகளைச் சொல்லச் சொல்ல, கலினி மை தயாரித்துக் கொடுத்தாள்; ஓலைச்சுவடிகளை உலர்த்தினாள்.

ஆனால், அவள் கவனித்துக் கொண்டே இருந்தாள். பழைய ‘ஈழத் தமிழ்’ பெயர்களுடன் இருந்த கிராமங்களின் பெயர்கள் மெல்ல மாற்றப்பட்டு, சமஸ்கிருதம் மற்றும் பாலி மொழிக் கலப்புடன் புதிய பெயர்களாக உருமாறிக்கொண்டிருந்தன. ஒரு இனத்தின் அடையாளமும், நிலத்தின் வரலாறும் எழுத்துக்களாலேயே அழிக்கப்படுவதை அவள் உணர்ந்தாள்.

[வரலாற்றுத் தரவுகள் (Historical Context):

காலம்: கி.மு. 3-ஆம் நூற்றாண்டு முதல் கி.மு. 1-ஆம் நூற்றாண்டு வரை (பௌத்தம் இலங்கையில் பரவத் தொடங்கிய காலம்).

மொழி மாற்றம்: ஆதி இலங்கையில் புழங்கிய 'எளு' (Elu) அல்லது 'ஹெல' (Hela) என்றழைக்கப்படும் பிராகிருத மொழியுடன், பௌத்த வருகைக்குப் பிறகு பாளி மற்றும் சமஸ்கிருத மொழிகள் கலக்கத் தொடங்கின. இதன் விளைவாக, கி.மு. 3-ஆம் நூற்றாண்டு முதல் கி.மு. 1-ஆம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியில் இன்றைய சிங்கள மொழியின் ஆரம்பக்கால வடிவம் (Old Sinhalese) உருவானது.

அரசியல்: அனுராதபுரத்தை மையமாகக் கொண்ட மகா வம்சம் போன்ற வரலாற்றுப் பதிவுகள், பெரும்பாலும் மதச் சார்புடனும் அரச ஆதரவுடனும் எழுதப்பட்டவை.

கிளர்ச்சி: இக்காலகட்டத்தில் (கி.மு. 300 - 100), வரிப்பளு மற்றும் நில ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகப் பூர்வகுடிகளான இயக்கர் (வேடர்கள்) மற்றும் ஆதித் தமிழர்கள் இணைந்து செயல்பட்டதற்கான சான்றுகள் வாய்மொழி வரலாறுகளிலும் மட்டக்களப்பு 'வெல்லாவெளி' (Vellaveli) போன்ற ஆதிப் பிராமி கல்வெட்டுகளிலும் காணப்படுகின்றன. இக்கல்வெட்டுகள் 'இயக்க' குலத் தலைவர்களும் 'தமெட' (Dameda/Tamil) வணிகர்களும் சமூக மற்றும் நில மேலாண்மையில் ஒருமித்துச் செயல்பட்டதை உறுதிப்படுத்துகின்றன.]

ஒரு பெயர் என்பது வெறும் சொல் அல்ல; அது அந்த நிலத்தின் ஆதி நினைவு. அந்த மக்களின் மாறாத மரபு. ஒரு இடத்தின் பெயரை மாற்றினால், அந்த இடத்தின் வரலாறே சிதைக்கப்பட்டுவிடும் என்பதை கலினி உணர்ந்தாள்.

மடாலயத்தின் ஓலைச்சுவடிகளில், பழங்காலச் சிறு தெய்வக் கோயில்கள் “கைவிடப்பட்ட இடங்கள்” என்று குறிக்கப்பட்டன. அங்கு மக்கள் வாழ்ந்ததற்கான எந்தத் தடயமும் பதிவிடப்படவில்லை. “கைவிடப்பட்டது” என்ற ஒரு சொல், அந்த நிலம் யாருக்கும் சொந்தமில்லை என்ற பிம்பத்தை உருவாக்கியது. இதன் மூலம் அந்த இடங்களை அரசு எளிதாகக் கையகப்படுத்த வழிவகை செய்யப்பட்டது.

முன்பு நடந்த உரிமைப் போராட்டங்கள் அனைத்தும் “குழப்பங்கள்” எனத் திரிக்கப்பட்டன. புதிய ஆட்சி மட்டுமே “ஒழுங்கை நிலைநாட்டியதாக” எழுதப்பட்டது. தங்கள் மண்ணிற்காக நின்ற மக்கள், அமைதிக்குக் குந்தகம் விளைவித்தவர்களாகச் சித்தரிக்கப்பட்டனர்.

ஒரு இரவு, கலினி தன் கணவனிடம் மெல்லிய குரலில் கேட்டாள்: “அங்கே காலம் காலமாக வாழ்ந்த அந்த மக்களைப் பற்றி என்ன எழுதப் போகிறீர்கள்?” அவன் தயக்கத்துடன் சொன்னான்: “அவர்கள் குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள்... ‘தடைகள்’ (Obstacles) என்று.”

“தடைகள்” — அந்த ஒரு சொல் கலினியின் இதயத்தை ஈட்டியாய் ஊடுருவியது. அவர்கள் பெயர்களோடும், கதைகளோடும் பதியப்படவில்லை; அவர்கள் வெறும் தடைகளாக மட்டுமே சுருக்கப்பட்டனர். ஒரு சமூகத்தைத் ‘தடை’ என்று முத்திரை குத்தினால், அவர்களை அந்த நிலத்திலிருந்து அகற்றுவது ‘தார்மீகமான செயல்’ போலத் தோன்றும். அவர்களின் வலியும் துயரமும் வரலாற்றின் பக்கங்களில் தேவையற்றதாகிவிடும்.

அப்போதுதான் கலினிக்கு ஒரு உண்மை புரிந்தது — இது வெறும் நிலத்துக்கான போர் அல்ல; இது நினைவுகளுக்கான போர். இது பெயர்களுக்கான போர். இது சொற்களால் கட்டமைக்கப்படும் அதிகாரம்.

அவளது அமைதி இனி கீழ்ப்படிதல் அல்ல; அது உள்ளுக்குள் கனலும் எதிர்ப்பு. அதே நேரத்தில், வெளியே ஒரு மௌனமான வெளியேற்றம் நிகழ்ந்துகொண்டிருந்தது. பிழைப்புக்காகவும் பாதுகாப்பிற்காகவும் பலர் நாட்டை விட்டு வெளியேறினர். மன்னார் (Mantai/ Mathoddam) கடற்கரையிலிருந்து அந்திப் பொழுதில் படகுகள் புறப்பட்டன. அந்த மக்கள் தங்கம் போன்ற விலையுயர்ந்த பொருட்களை எடுத்துச் செல்லவில்லை. மாறாக, தங்கள் நிலத்தின் ஆதிப் பாடல்களையும், குலதெய்வச் சிலைகளையும் மட்டுமே நெஞ்சோடு அணைத்துக்கொண்டு கடலில் பயணிக்கத் தொடங்கினர்.

வரலாற்றுப் பின்னணி (Facts & Context):

இடப்பெயர் மாற்றம் (Toponymy): இலங்கையின் ஆதிப் பெயர்களான 'எளு' (Elu) மற்றும் தமிழ் பெயர்கள் காலப்போக்கில் பாலி மற்றும் சமஸ்கிருதமயமாக்கப்பட்ட சிங்களப் பெயர்களாக மருவின. உதாரணமாக, 'மணிநாகதீபம்' மற்றும் 'மாதோட்டம்' போன்ற பெயர்கள் பிற்காலப் பதிவுகளில் மாற்றமடைந்ததை மொழியியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மாந்தை (Mannar): இது கி.மு. காலத்திலிருந்தே இலங்கையின் முதன்மையான சர்வதேசத் துறைமுகமாகவும், தென்னிந்தியாவையும் மேலைநாடுகளையும் இணைக்கும் கடல்வழி வணிக மையமாகவும் திகழ்ந்தது. இது 'மாதோட்டம்' எனத் தமிழ் இலக்கியங்களிலும் குறிக்கப்பபட்டுள்ளது.

மதமாற்றமும் வரலாற்றுப் பதிவும்: 'மகாவம்சம்' போன்ற பௌத்த வரலாற்று நூல்கள், பௌத்தத்தைப் பரப்ப வந்தவர்களை நாகரிகத்தை நிலைநாட்டியவர்களாகவும், அங்கிருந்த பூர்வகுடிகளான இயக்கர் மற்றும் நாகர்களை "இயற்கைக்கு அப்பாற்பட்டவர்களாக" அல்லது "தடைகளாகவும்" சித்தரித்தன. இது ஒரு மதச்சார்பு வரலாற்றுப் பார்வையாகவே (Ideological Narrative) இன்று கருதப்படுகிறது.

சமஸ்கிருதத்தின் தாக்கம்: பௌத்த மதப் பரவலோடு வந்த பாளி மற்றும் சமஸ்கிருத சொற்கள், ஏற்கனவே புழக்கத்தில் இருந்த 'எளு' மற்றும் தமிழ் மொழிகளுடன் கலந்து, புதிய அதிகாரப்பூர்வ மொழிக் கட்டமைப்பிற்கு (Early Sinhala) வித்திட்டன. இது அரச நிர்வாகத்திலும் மதச் சடங்குகளிலும் மேலாதிக்கம் செலுத்தியது.

அவர்கள் தங்கள் நிலத்தை இழந்திருக்கலாம், ஆனால் தங்கள் மொழியையும் நம்பிக்கையையும் இழக்கவில்லை. இடம்பெயர்ந்தவர்களில் சிலர் புத்தளம் (Puttalam) பகுதிக்குச் சென்று புதிய வாழ்வைத் தொடங்கினர். இன்னும் சிலர், ஆதித் துறைமுகமான மாந்தையில் இருந்து கடலைக் கடந்து தமிழகத்தின் பாண்டிய நாட்டு கடற்கரையை அடைந்தனர். அங்கு அவர்கள் அந்நியர்களாகக் கருதப்படவில்லை; ஒரே மொழி, ஒரே பண்பாடு மற்றும் இரத்த உறவு அவர்களைத் தாய்மையுடன் வரவேற்றது.

புலம்பெயர்ந்த அந்த மக்கள், தங்கள் குழந்தைகளுக்குத் தங்களின் பழைய ஊர் பெயர்களைத் திரும்பத் திரும்பக் கற்றுக் கொடுத்தனர். "பெயர்கள் அழிந்தால், நம் அடையாளமும் வரலாறும் அழிந்துவிடும்" என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தது. அவர்கள் தங்கள் பிள்ளைகளிடம், "ஒருகாலத்தில் நாம் அந்த நிலத்தில் வாழ்ந்தோம்..." என்று கதைகளைச் சொல்லத் தொடங்கினர். அது வெறும் கதையல்ல; அது ஒரு சமூகத்தின் இருப்பிற்கான சாட்சியம்.

இதற்கிடையில், வடக்கில் இருந்த சிவா இந்தச் செய்திகளைக் கேட்டான். வன்முறையும் திரிபுகளும் நிறைந்த அந்த இடத்தை விட்டு, அமைதி நிலவும் இடத்திற்குச் செல்ல அவன் விரும்பினான். அவன் கலினியை ஒரு மடாலயச் சுவருக்கு அருகே ரகசியமாகச் சந்தித்தான். "என்னுடன் வந்துவிடு, இங்கே இனி உண்மைகளுக்கு இடமிருக்காது" என்று அவன் அழைத்தான்.

ஆனால் கலினி மறுத்துவிட்டாள். அவள் சொன்னாள்: “உண்மையையும் நினைவுகளையும் சுமந்திருப்பவர்கள் அனைவரும் வெளியேறிவிட்டால், இங்கே அதிகாரத்தால் எழுதப்படும் பொய்களுக்கு எதிராகச் சாட்சி சொல்ல யார் இருப்பார்கள்?”

உண்மையைக் காக்க வரலாற்றில் இரண்டு வழிகள் எப்போதும் உண்டு. ஒன்று, பாதுகாப்பான இடத்திற்குச் சென்று அந்த உண்மையைப் பாதுகாப்பது. மற்றொன்று, ஆபத்தான இடத்திலேயே நின்று அந்த உண்மை சிதைக்கப்படுவதை எதிர்த்துச் சாட்சியாக வாழ்வது. கலினி அந்த இரண்டாவது சவாலான வழியைத் தேர்ந்தெடுத்தாள்.

அவர்கள் ஒருவருக்கொருவர் வாக்குறுதிகள் எதையும் தந்து கொள்ளவில்லை. அவர்களின் பாதைகள் வேறானவை. சில காதல்கள் கூடி வாழ்வதன் மூலம் அர்த்தப்படும்; சில காதல்கள் பிரிந்திருந்தாலும் உயர்ந்த லட்சியத்திற்காக உயிர்வாழும்.

அன்று இரவு, அனுராதபுரத்தின் அரசவை வெளிச்சத்தில் அதிகாரப்பூர்வமான 'புதிய வரலாறு' ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டது. அதே நேரத்தில், கடலுக்கு அப்பால் ஒரு அகதிக் குடியிருப்பில் ஏதோ ஒரு குடிசையில் முதல் விளக்கு ஏற்றப்பட்டது. ஒரு பக்கம் எழுதப்பட்ட வரலாறு (Written History); மற்றொரு பக்கம் சொல்லப்பட்ட நினைவுகள் (Oral Tradition).

கலினியும் சிவாவும் வெவ்வேறு இடங்களில் இருந்தாலும், தாங்கள் இருவரும் அந்த நிலத்தின் 'உண்மையைக்' காப்பதாகவே நம்பினர்.

வரலாற்றுத் தரவுகள் (Historical Context):

இலங்கை - தமிழக உறவு: கி.மு. காலத்திலிருந்தே தமிழகத்தின் பாண்டிய, சோழ அரசுகளுக்கும் இலங்கையின் பூர்வகுடிகளுக்கும் இடையே நெருங்கிய வணிக மற்றும் பண்பாட்டுத் தொடர்புகள் இருந்தன. மன்னார் வளைகுடா வெறும் கடல் அல்ல, அது இரு நிலப்பரப்புகளையும் இணைக்கும் ஒரு கலாச்சாரப் பாலமாகச் செயல்பட்டது.

வாய்மொழி வரலாறு (Oral Tradition): 'மகாவம்சம்' போன்ற எழுதப்பட்ட அரச வரலாறுகள் ஒருதலைப்பட்சமான (Viharist perspective) மதக் கண்ணோட்டத்தைக் கொண்டிருந்தபோது, மக்கள் தங்கள் உண்மையான வரலாற்றை தாலாட்டுப் பாடல்கள், நாட்டுப்புறக் கதைகள் மற்றும் 'கூத்து' வழியாகத் தலைமுறைகளைக் கடந்து பாதுகாத்தனர்.

புத்தளம் மற்றும் மன்னார்: இவை கி.மு. காலத்திலிருந்தே தமிழகத்துடனான வர்த்தகப் போக்குவரத்துகளுக்குப் பிரதான வணிக மையங்களாக (Trading Ports) விளங்கின. இவை வெறும் தங்குமிடங்கள் மட்டுமல்ல, தென்னிந்தியப் பண்பாடு இலங்கைக்குள் நுழைந்த முக்கிய வாயில்களாகவும் இருந்தன.

மொழிப் பரிணாமம்: இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட 'தமிழ்-பிராமி' (Tamil-Brahmi) கல்வெட்டுகள், அக்காலத் தமிழ் மற்றும் ஆரம்பக்கால சிங்கள மொழி ஆகிய இரண்டிற்கும் பொதுவான எழுத்து ஊடகமாக இருந்தன. இது இரு மொழிகளுக்கும் இடையிலான ஆதித் தொடர்பையும், சொற்கள் பரிமாறப்பட்ட விதத்தையும் உறுதிப்படுத்தும் வலுவான தொல்பொருள் சான்றாகும்.

நன்றி

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

அத்தியாயம் 6 தொடரும்

துளி/DROP: 2121 [சிறு கதை - 207 / பெயர்களுக்கு முன் நினைவிருந்த தீவு அல்லது ஒரு நிலத்தின் கதை / அத்தியாயம் 5

https://www.facebook.com/groups/978753388866632/posts/34586294014352471/?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறு கதை - 207 / பெயர்களுக்கு முன் நினைவிருந்த தீவு அல்லது ஒரு நிலத்தின் கதை / அத்தியாயம் 6

[இந்த கதை ஒரு கல்லைப் பற்றியது மட்டுமல்ல. இது ஒரு நிலத்தின் கதை. அதில் வாழ்ந்த மக்களின் கதை. மாற்றப்பட்ட ஒரு சொல்லின் கதை. மறைக்கப்பட்ட நினைவுகளின் கதை. வரலாறு என்றால் நாம் புத்தகங்களில் படிப்பதையே நினைப்போம். ஆனால் வரலாறு மக்களின் நினைவுகளிலும் வாழ்கிறது. ஒரு கல், ஒரு சொல், ஒரு மாற்றம் — இவை எல்லாம் சேர்ந்து எவ்வாறு ஒரு சமூகத்தின் வாழ்க்கையை மாற்றுகின்றன என்பதையே இந்த கதை சொல்லுகிறது.

ஒரு கல் பேசாது. ஆனால் அது பல காலங்களைக் காணும். மனிதர்கள் வரலாற்றை எழுதுகிறார்கள். ஆனால் அவர்கள் எல்லாவற்றையும் எழுத மாட்டார்கள். சில உண்மைகள் தெரிவு செய்யப்படுகின்றன. சில உண்மைகள் மறைக்கப்படுகின்றன. இந்த கதை சொல்லும் முக்கியமான செய்தி இதுதான்: வரலாறு முழுவதும் பொய்யாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அது ஆபத்தாக மாறுவதற்கு சில உண்மைகளை மட்டும் தேர்ந்தெடுத்து சொல்லினால் போதும்.

என் குறிப்பு: இந்த நூல் ஒரு கற்பனைக்கதை. ஆனால் இதில் பேசப்படும் உணர்வுகள் உண்மையானவை. நிலம், மொழி, அடையாளம், நினைவு — இவை எல்லாம் மனிதர்களின் வாழ்க்கையில் முக்கியமானவை. இந்த நூல் ஒருபக்கத்தை ஆதரிப்பதற்காக அல்ல. பேசப்படாத குரல்களை நினைவில் கொள்ளச் செய்வதற்காக. நாம் வரலாற்றைப் படிக்கும் போது ஒரு கேள்வியை கேட்க வேண்டும்: “இங்கே யாருடைய குரல் கேட்கப்படவில்லை?” அந்தக் கேள்வியே இந்த கதையின் இதயம்.]

அந்தக் கிளர்ச்சி ஒரு மாபெரும் காவியமாக உருவெடுக்கும் முன்பே பலவீனமடையத் தொடங்கியது. பாடல்களில் பாடப்படும் பிரம்மாண்டமான இறுதிப் போரோ அல்லது தீர்ப்பு வழங்கும் ஒரு குறிப்பிட்ட தருணமோ அங்கே நிகழவில்லை. மாறாக, அங்கிருந்தது நீண்ட காலச் சோர்வு, தீராத பசி மற்றும் அதிகாரம் மெதுவாகத் தன் பிடியை இறுக்கிய ஒரு இருண்ட உணர்வு மட்டுமே.

நிலவில்லாத ஒரு இரவில், மலைக்காடுகளில் எரிந்த புரட்சியின் நெருப்பு ஒவ்வொன்றாக அணைந்தது. ஒற்றர்கள் வரவில்லை; செய்திகள் துண்டிக்கப்பட்டன. "இது முடிவின் ஆரம்பம்" என்பதைச் சிவா உணர்ந்தான். சிவா அவனது உடல் வலிமைக்காகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை; அவன் அந்த நிலத்தின் ஆதி நினைவுகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டான். மன்னர்கள் தோன்றுவதற்கு முன்பே அங்கிருந்த ஒற்றையடிப் பாதைகள், வணிகர்களின் வழித்தடங்கள், யாத்திரிகர்களின் பாதைகள் மற்றும் வேடர்கள் (Veddhas) மட்டுமே அறிந்த அடர்ந்த காட்டு வழிகள் சிவாவிற்கு அத்தப்படியாகத் தெரிந்திருந்தது.

அவன் சிறிய குழுக்களைக் கொண்டு அரசின் தானியக் களஞ்சியங்களைத் தாக்கினான்; கைதிகளை விடுவித்தான். இருளுக்குள் தோன்றி விடியலுக்குள் மறைந்தான். சில காலம் இந்த யுக்தி வெற்றியளித்தது. ஆனால், ஒரு கிளர்ச்சி நீடிக்கத் துணிச்சல் மட்டும் போதாது; அதற்குச் சாதகமான காலமும் தொடர்ச்சியான மக்கள் ஆதரவும் தேவை. அரசவையிடம் ஆள் பலமும், தானியமும் இருந்தது. மடாலயங்களிடம் தங்களின் செயல்களை நியாயப்படுத்த ‘தர்மம்’ என்ற முகமூடி இருந்தது.

மீண்டும் பஞ்சம் வந்தபோது, மக்கள் தங்களின் உரிமையை விட உயிரைத் தக்கவைக்க உணவைத் தேர்ந்தெடுத்தனர். சிலர் சரணடைந்தனர்; சிலர் உயிர் பிழைக்கக் காட்டிக் கொடுத்தனர். ஒரு காலத்தில் சிவா யாரைப் பசியிலிருந்து காப்பாற்றினானோ, அதே சிறுவனால் ஒரு வறண்ட ஏரிக்கரையில் (Wewa) வைத்துச் சிவா காட்டிக்கொடுக்கப்பட்டான்.

சிவா பிடிபட்டபோது அவனுக்குச் சித்திரவதைகள் வழங்கப்படவில்லை. ஒரு உயர் அதிகாரியும் (Adigar) ஒரு மூத்த துறவியும் அவனிடம் பேசினர். அந்தத் துறவி நிதானமாகச் சொன்னார்: “நீ ஒரு பழைய கதையை (Identity) நம்பிப் போராடினாய். இப்போது நாங்கள் ஒரு புதிய, மேன்மையான கதையை (The New History) உலகிற்குச் சொல்வோம்.”

அப்போதுதான் அவர்களின் உண்மையான திட்டம் சிவாவிற்குப் புரிந்தது. அவர்கள் அவனைக் கொல்ல விரும்பவில்லை; மாறாக, அவனை வரலாற்றிலிருந்தே துடைத்தெறிய விரும்பினர். அவனுக்கு இரண்டு தேர்வுகள் தரப்பட்டன:

கடல் கடந்து (தமிழகம் அல்லது தென்கிழக்கு ஆசியாவுக்கு) நாடு கடத்தப்படுதல்.

முழுமையான மௌனம் — எவருமறியாத இடத்தில் அடையாளமின்றி மறைந்து வாழ்வது.

அவன் பெயர் எந்தக் கல்வெட்டிலும் வராது; அவன் ஒரு வீரனாகப் போற்றப்பட மாட்டான். அவன் இந்த மண்ணில் பிறந்ததற்கான தடையமே இல்லாமல் ஆக்கப்படுவான்.

வரலாற்றுத் தரவுகள் (Historical Context):

யுக்தி (Guerrilla Warfare): கி.மு. காலத்திலேயே இலங்கையின் மலைப்பாங்கான பகுதிகளில் (மலையரட்டை - Hill Country) மறைந்திருந்து தாக்கும் முறை புழக்கத்தில் இருந்தது. இதற்குப் பூர்வகுடி வேடர்களின் உதவி முக்கியமாக இருந்தது.

பஞ்சத்தின் அரசியல்: அக்காலத்தில் குளங்களை (Wewa) மையமாகக் கொண்ட விவசாயம் பாதிக்கப்பட்டபோது, அரசுகள் உணவைக் கட்டுப்பாட்டில் வைத்துப் போராட்டங்களை ஒடுக்கின.

கல்வெட்டுகள் (Epigraphy): அக்காலக் கல்வெட்டுகள் (Brahmi Inscriptions) பெரும்பாலும் மடாலயங்களுக்கு வழங்கப்பட்ட தானங்களையும், அரச வெற்றிகளையும் மட்டுமே பதிவு செய்தன. கிளர்ச்சியாளர்களின் பெயர்கள் வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டன.

நாடுகடத்தல்: இலங்கையின் வரலாற்றில் தண்டனையாக அல்லது அரசியல் காரணங்களுக்காகத் தலைவர்கள் தமிழகத்திற்கு (பாண்டிய/சோழ நாடு) நாடுகடத்தப்படுவது ஒரு வழக்கமான நடைமுறையாக இருந்தது.

சிவா நாடு கடத்தப்படுவதைத் தேர்ந்தெடுத்தான். அது மரணத்தின் மீதான பயத்தால் அல்ல; யாராவது ஒருவராவது இந்த நிலத்தின் உண்மையான நினைவுகளுடன் உயிரோடு எஞ்சியிருக்க வேண்டும் என்பதற்காக.

அதே சமயம், மடாலயத்தின் சுவர்களுக்குள் கலினி முற்றிலும் வேறொரு போரில் இருந்தாள். பகல் நேரங்களில் அவள் ஓலைகளைப் பதப்படுத்தினாள், மை தயாரித்தாள், எழுத்துப் பிழைகளைச் சீர் செய்தாள். எந்த மாதிரியான வார்த்தைகள் ஆட்சியாளர்களுக்கும் துறவிகளுக்கும் பிடிக்கும் என்பதை அவள் நுணுக்கமாகக் கற்றுக்கொண்டாள். எங்கே உண்மை முடிகிறது, எங்கே புனைவு தொடங்குகிறது என்ற சூட்சுமம் அவளுக்குத் தெரிந்திருந்தது.

இரவு நேரங்களில், அவள் ரகசியமாகச் சில மாற்றங்களைச் செய்தாள். யாரும் கவனிக்காத வண்ணம் ஒரு பழைய ஊர்பெயரை மாற்றாமல் அப்படியே விட்டாள். ஒரு குறிப்பிட்ட குடிவழியை (Clan) “பழமையான ஆதிக்குடிகள்” என்று எழுதினாள். ஒரு வழிபாட்டுத் தலத்தை “அனைவருக்குமான பொதுவான இடம்” என்று குறித்தாள். இவை மிகச் சிறிய மாற்றங்கள் தான். ஆனால், வரலாறு என்பது ஒருமுறை படிக்கப்படுவதில்லை; அது பல நூற்றாண்டுகளாக நகலெடுக்கப்படும் (Manuscript copies). இன்று விடப்படும் ஒரு சிறு குறிப்பு, எதிர்காலத் தலைமுறைக்கு மாபெரும் உண்மையாக மாறலாம் என்பதை அவள் அறிந்திருந்தாள்.

ஒரு நாள், ஒரு வரியை எழுதும்போது கலினி தயங்கி நின்றாள். அவளது கணவன் அதைக் கவனித்து, “வரலாறு சுத்தமாக (Clean) இருக்க வேண்டும்” என்றான். கலினி மெதுவாகக் கேட்டாள்: “சுத்தமாக இருக்க வேண்டுமா? அல்லது முழுமையாக (Complete) இருக்க வேண்டுமா?”
அவளது கணவனின் பார்வையில் சந்தேகம் தெறித்தது. அன்று இரவு, ஒரு முக்கியமான ஓலைச்சுவடியை கலினி எரியூட்டினாள். யாரும் பார்க்கவில்லை; ஆனால் ஒரு திரிபுவாதம் அன்று சாம்பலானது. அதேசமயம், ஒரு உண்மையும் மீண்டும் எழுதப்பட வாய்ப்பில்லாமல் அழிந்தது.

ஆண்டுகள் உருண்டோடின. மடாலயங்களில் வளர்ந்த அடுத்த தலைமுறை குழந்தைகள் புதிய கதைகளையே உண்மையான வரலாறு என நம்பிக் கற்றனர். மன்னர்கள் “நாட்டை உருவாக்கியவர்களாக” (Founders) போற்றப்பட்டனர்; ஆனால் அவர்கள் நிலத்தைக் கைப்பற்றியவர்கள் என்பது மறைக்கப்பட்டது. அந்த நிலத்தில் முன்பே வாழ்ந்த ஆதிக்குடிகள் ஒளி வருவதற்கு முன் இருந்த “இருள்” போலவும், வெறும் “நிழல்கள்” போலவும் சித்திரிக்கப்பட்டனர்.

ஒரு இனத்தின் புராணம் (Mythology) திடீரென்று உருவாவதில்லை. அது கல்லின் மேல் சுண்ணாம்பு பூசுவது போல மெல்ல மெல்லக் கட்டப்பட்டது. ஒரு அடுக்குக்கு மேல் அடுத்த அடுக்கு எனப் பொய்கள் பூசப்பட, இறுதியில் அடியில் இருந்த உண்மையான வரலாறு கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து போனது.

வரலாற்றுத் தரவுகள் (Historical Context):

சிங்கள மொழி உருவாக்கம் (Genesis of Sinhala): கி.மு. காலப்பகுதியில் புழங்கிய 'எளு' (Elu), தமிழ் மற்றும் பிராகிருத மொழிகள், பௌத்த வருகைக்குப் பின் பாளி (Pali) மற்றும் சமஸ்கிருதத்தின் ஆதிக்கத்தால் மாற்றமடைந்து இன்றைய சிங்கள மொழியின் ஆரம்ப வடிவமாக மாறியது.

வரலாறு திரிபு (Historiography): 'மகா வம்சம்' போன்ற நூல்கள் எழுதப்பட்டபோது, விஜயன் வருகைக்கு முந்தைய காலம் 'மனிதர்கள் வாழாத அல்லது அரக்கர்கள் வாழ்ந்த இடமாக' (Yakkhas/ Nagas) உருவகப்படுத்தப்பட்டது. இது நிலத்தைக் கைப்பற்றுவதை நியாயப்படுத்தப் பயன்படுத்தப்பட்ட ஒரு உத்தி.

ஓலைச்சுவடிகள் (Palm-leaf Manuscripts): பழங்காலத்தில் ஓலைச்சுவடிகளை நகலெடுக்கும்போது (Copying process), நகலெடுப்பவர்கள் தங்களுக்குத் தேவையான மாற்றங்களைச் செய்வது வழக்கமாக இருந்தது. கலினி போன்றவர்கள் மூலமே சில ஆதித் தமிழ் அடையாளங்கள் இன்றும் எஞ்சியுள்ளன.

வழிபாட்டுத் தலங்கள்: இலங்கையில் பல இடங்கள் ஆரம்பத்தில் இந்து மற்றும் நாட்டுப்புறத் தெய்வ வழிபாட்டுத் தலங்களாக இருந்து, பின்னர் பௌத்த விகாரைகளாக மாற்றப்பட்டன என்பதைத் தொல்லியல் ஆய்வுகள் (எ.கா: கதிர்காமம்) உணர்த்துகின்றன.

கடலுக்கு அப்பால், தமிழகத்தின் கரைகளில் வாழ்ந்த சிவா, தன் தேசத்தின் புதிய கதைகளைக் கேட்டான். அவனது வாழ்நாள் போராட்டமும், அந்த மக்களின் தியாகமும் ஒரு சிறிய அடிக்குறிப்பாகக் கூடப் பதியப்படவில்லை. "அவர்கள் இருந்தார்கள், பிறகு மறைந்தார்கள்" — அவ்வளவே. ஒரு மாபெரும் கிளர்ச்சி, வரலாற்றின் முன்னுரையில் ஒரு வரியில் கரைந்து போனது.

மடாலயத்தில் ஓலைகளைத் தொகுத்துக் கொண்டிருந்த கலினி ஒரு கசப்பான உண்மையை உணர்ந்தாள்: ஒரு வரலாற்று நூல் முழுவதுமே பொய்யாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அதில் பத்து விஷயங்களில் ஏழு உண்மைகள் இருக்கலாம்; ஆனால் மிக முக்கியமான மூன்று உண்மைகள் மறைக்கப்பட்டால், அந்த நூல் ஒரு முழுப் பொய்யை விடவும் ஆபத்தானது. இது நேரடிப் பொய் அல்ல, ஆனால் முழுமையற்ற உண்மை.

நேரடியான பொய்யை ஆதாரங்களுடன் எதிர்த்துவிடலாம். ஆனால், எழுதப்படாத உண்மையை எப்படி எதிர்ப்பது? ஒரு விஷயம் எழுதப்படவே இல்லை என்றால், அப்படி ஒன்று நிகழவே இல்லை என்று வருங்காலத் தலைமுறை நம்பத் தொடங்கும். காலப்போக்கில் அது நினைவுகளில் இருந்தும் முற்றிலுமாகத் துடைத்தெறியப்படும். இதுவே ஒரு இனத்திற்கு இழைக்கப்படும் மிகப்பெரிய அநீதி.

அந்த வரலாற்று நூலை (மகா வம்சத்தின் முன்னோடிப் பதிவுகள் போன்ற தொகுப்புகள்) உருவாக்க உதவியவள் என்ற முறையில், அதில் மறைக்கப்பட்ட ஓட்டைகளை கலினி நன்கு அறிவாள். அவள் கடவுளிடம் மன்னிப்பு கேட்கவில்லை; மாறாக, அந்த நூலில் இடம் பெறாத மக்களிடம், பெயர்கள் குறிக்கப்படாத வீரர்களிடம், குரல்கள் நசுக்கப்பட்ட அந்தப் பூர்வகுடிகளிடம் மனதார மன்னிப்பு கேட்டாள்.

அவளால் முழு வரலாற்றையும் மாற்ற முடியாமல் போயிருக்கலாம்; அதிகாரத்திற்கு எதிராக முழு உண்மையை நிலைநாட்ட முடியாமல் போயிருக்கலாம். ஆனால், உண்மையை முழுமையாகத் திரிப்பதற்கும் அவள் சம்மதிக்கவில்லை. வரலாறு என்பது வாளால் மட்டும் எழுதப்படுவதில்லை; அது வார்த்தைகளால் வடிவமைக்கப்படுகிறது. சிலரை நாயகர்களாகச் சித்திரிக்கவும், சிலரைச் சிறுமைப்படுத்தவும், சிலரை வரலாற்றிலிருந்தே நீக்கவும் சொற்கள் ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.

கலினி அந்த ஓலைச்சுவடிகளைத் தொட்டு, தன் கண்ணீரால் அந்த மௌனத்திற்கு அஞ்சலி செலுத்தினாள்.

வரலாற்றுத் தரவுகள் (Historical Context):

முழுமையற்ற வரலாறு (Selective History): இலங்கையின் ஆதி வரலாறான 'தீபவம்சம்' மற்றும் 'மகாவம்சம்' போன்றவை பௌத்த மதத்தின் மேன்மையையும், ஒரு குறிப்பிட்ட வம்சத்தின் வெற்றியையும் நிலைநாட்ட எழுதப்பட்டவை. இதில் பூர்வகுடிகளான இயக்கர் மற்றும் நாகர்களின் (ஆதித் தமிழர்களின் முன்னோடிகள்) வாழ்வியல் முறைகள் திட்டமிட்டுத் தவிர்க்கப்பட்டன .

வாய்மொழி மரபு vs எழுத்து மரபு: எழுதப்பட்ட வரலாறுகள் அதிகார மையங்களைச் சார்ந்து இருந்தபோது, உண்மையான வரலாறு நாட்டுப்புறப் பாடல்கள் (Ballads) மற்றும் வாய்மொழி மரபுகள் வழியாகவே மக்களிடையே தங்கியிருந்தது .

மொழிக் கலப்பு: கி.மு. 3-ஆம் நூற்றாண்டு வாக்கில், பாளி மொழியில் இருந்த மத நூல்கள் ஹெல (Elu) மொழியில் மொழிபெயர்க்கப்பட்டபோது, பல தமிழ் மற்றும் ஆதி இடப்பெயர்கள் சமஸ்கிருதமயமாக்கப்பட்டன .

மன்னிப்பு மற்றும் மனசாட்சி: வரலாற்றை எழுதிய பல அறிஞர்கள் (Scribes), தாங்கள் அரசவைக்குக் கட்டுப்பட்டு உண்மையை மறைக்க வேண்டியிருந்ததை மறைமுகமான குறியீடுகள் மூலம் தங்கள் பதிவுகளில் உணர்த்தியுள்ளனர்.

நன்றி

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

அத்தியாயம் 7 தொடரும்

துளி/DROP: 2123 [சிறு கதை - 207 / பெயர்களுக்கு முன் நினைவிருந்த தீவு அல்லது ஒரு நிலத்தின் கதை / அத்தியாயம் 6

https://www.facebook.com/groups/978753388866632/posts/34603845805930625/?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறு கதை - 207 / பெயர்களுக்கு முன் நினைவிருந்த தீவு அல்லது ஒரு நிலத்தின் கதை / அத்தியாயம் 7

[இந்த கதை ஒரு கல்லைப் பற்றியது மட்டுமல்ல. இது ஒரு நிலத்தின் கதை. அதில் வாழ்ந்த மக்களின் கதை. மாற்றப்பட்ட ஒரு சொல்லின் கதை. மறைக்கப்பட்ட நினைவுகளின் கதை. வரலாறு என்றால் நாம் புத்தகங்களில் படிப்பதையே நினைப்போம். ஆனால் வரலாறு மக்களின் நினைவுகளிலும் வாழ்கிறது. ஒரு கல், ஒரு சொல், ஒரு மாற்றம் — இவை எல்லாம் சேர்ந்து எவ்வாறு ஒரு சமூகத்தின் வாழ்க்கையை மாற்றுகின்றன என்பதையே இந்த கதை சொல்லுகிறது.

ஒரு கல் பேசாது. ஆனால் அது பல காலங்களைக் காணும். மனிதர்கள் வரலாற்றை எழுதுகிறார்கள். ஆனால் அவர்கள் எல்லாவற்றையும் எழுத மாட்டார்கள். சில உண்மைகள் தெரிவு செய்யப்படுகின்றன. சில உண்மைகள் மறைக்கப்படுகின்றன. இந்த கதை சொல்லும் முக்கியமான செய்தி இதுதான்: வரலாறு முழுவதும் பொய்யாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அது ஆபத்தாக மாறுவதற்கு சில உண்மைகளை மட்டும் தேர்ந்தெடுத்து சொல்லினால் போதும்.

என் குறிப்பு: இந்த நூல் ஒரு கற்பனைக்கதை. ஆனால் இதில் பேசப்படும் உணர்வுகள் உண்மையானவை. நிலம், மொழி, அடையாளம், நினைவு — இவை எல்லாம் மனிதர்களின் வாழ்க்கையில் முக்கியமானவை. இந்த நூல் ஒருபக்கத்தை ஆதரிப்பதற்காக அல்ல. பேசப்படாத குரல்களை நினைவில் கொள்ளச் செய்வதற்காக. நாம் வரலாற்றைப் படிக்கும் போது ஒரு கேள்வியை கேட்க வேண்டும்: “இங்கே யாருடைய குரல் கேட்கப்படவில்லை?” அந்தக் கேள்வியே இந்த கதையின் இதயம்.]

வாள் செய்ய முடியாததைக் காலம் செய்து முடித்தது. இரத்தம் சிந்தாமலேயே ஒரு இனத்தின் அடையாளம் அழிக்கப்பட்டது. தோற்கடிக்கப்பட்ட கிளர்ச்சிக்குப் பின் இரண்டு தலைமுறைகள் கடந்தன. அந்த நிலத்தில் வாழ்ந்த மக்களின் பேரக்குழந்தைகளுக்குத் தங்கள் முன்னோர்களின் மொழி சரளமாகப் பேச வரவில்லை.

வீட்டுக்குள் பெரியவர்கள் அந்த மொழியை இரகசியமாகப் பேசினர்; வெளியில் அதைப் பேசுவது உயிருக்கு ஆபத்தானது. பூர்வகுடிகளான வேடுவர் மொழியும், பழைய எளு (Elu) மொழியும் சிதைந்து, மெதுவாகச் சிங்களத்தை நோக்கி மாறத் தொடங்கின. ஆனால், தமிழ் மட்டும் தனித்துவத்தோடு நிலைத்து நின்றது.

மாற்றங்கள் மிகத் தந்திரமாக நடந்தன:

பெயர் மாற்றம்: ஊர்களின் பழைய பெயர்கள் மாற்றப்பட்டன.
மத மாற்றம்: பழைய தெய்வங்களுக்குப் புதிய பெயர்கள் சூட்டப்பட்டன.

வரலாறு திருத்தம்: பழைய கதைகள் சுருக்கப்பட்டு, வெறும் புராணக்கதைகளாக மாற்றப்பட்டன.

கட்டடக்கலை: அனுராதபுரத்தில், சிறிய பழைய கோயில்கள் இருந்த இடங்களில் பிரம்மாண்டமான புதிய பௌத்த மடங்கள் எழுந்தன. பழைய நினைவுகளைப் புதிய கல் கட்டிடங்கள் மூடி மறைத்தன.

மக்கள் வாய்வழியாகக் கூறிவந்த உண்மைக் கதைகளை, ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்ட "புதிய வரலாறு" இடமாற்றம் செய்தது. "எழுதப்பட்டதே உண்மை" என்றும், "மக்களின் நினைவில் இருப்பவை சந்தேகத்திற்கு உரியவை" என்றும் ஒரு பிம்பம் உருவாக்கப்பட்டது.

கிளர்ச்சியின் தோல்விக்குப் பிறகு, ஒரு எழுத்தரின் விதவையான கலினி, மடத்திற்கு அருகிலேயே வாழ்ந்தாள். எழுதத் தடைசெய்யப்பட்ட உண்மைகளை ரகசியமாக நகலெடுக்கும் பணியைச் செய்தாள். வெளியில் அமைதியாகத் தெரிந்தாலும், உள்ளுக்குள் தனது போரைத் தொடர்ந்தாள். வரலாற்றின் பக்கங்களில் உண்மையைச் சிறு துளிகளாக விதைத்தாள்:

ஒரு சொல்லின் பொருளை மெதுவாக மாற்றினாள். குடும்ப வரலாறுகளில் சிறு குறிப்புகளைச் சேர்த்தாள். மன்னர்களின் பெயருடன், அழிக்கப்பட்ட பழைய ஊர்ப் பெயர்களையும் இணைத்தாள். வரலாறு என்பது வெறும் பதிவு அல்ல; அது ஒரு ஆயுதம் என்பதை அவள் அறிந்திருந்தாள்.

வரலாற்றுப் பின்னணி (Facts):

காலம்: கி.மு. 3-ஆம் நூற்றாண்டு முதல் கி.மு. 1-ஆம் நூற்றாண்டு வரை.
மொழி பரிணாமம்: இலங்கையின் பூர்வ மொழியான எளு (Elu), தமிழ் மற்றும் வடமொழித் தாக்கத்தால் சிங்கள மொழியாக உருப்பெறத் தொடங்கிய காலம்.

மத மாற்றம்: அசோக சக்கரவர்த்தியின் காலத்தில் (கி.மு. 247 வாக்கில்) இலங்கையில் பௌத்தம் அறிமுகமாகி, அரச ஆதரவுடன் வேகமாகப் பரவியது.

அனுராதபுரம்: இதுவே அக்கால அரசியல் மற்றும் மத மையமாகத் திகழ்ந்தது. இங்குதான் பழைய வழிபாட்டு முறைகள் மாற்றப்பட்டு பெரிய விகாரைகள் கட்டப்பட்டன.

மகாவம்சம் போன்ற நூல்கள்: வாய்வழித் தகவல்களை விட, எழுதப்பட்ட குறிப்புகளே "அதிகாரப்பூர்வ வரலாறு" என நிலைநிறுத்தப்பட்டன.

ஒரு நாள், இளம் துறவி ஒருவன் ஓலைச்சுவடியைப் படித்துக் கொண்டிருந்த போது திடுக்கிட்டு நின்றான். "இந்த ஊரின் பெயர் அரச அதிகாரப்பூர்வப் பட்டியலில் இல்லையே?" என்று கேட்டான். கலினி அமைதியாகப் புன்னகைத்தாள். "அது இந்த நிலத்திற்குரிய உண்மையான பெயர்" என்றாள்.

அந்த ஒரு பதிலே அவளுக்கு வினையாக முடிந்தது. அவர்கள் அவளைச் சித்திரவதை செய்யவில்லை, சிறையிலும் அடைக்கவில்லை. ஆனால், அதிகாரத் தொனியில் எச்சரித்தனர்: "நீ மரபுகளைக் குழப்புகிறாய்; தேவையற்ற விவரங்களைச் சேர்க்கிறாய். இனி நீ எழுதக்கூடாது. அமைதியாக ஒதுங்கி வாழ். அதிகாரம் சொல்லும் திசையில்தான் வரலாறு முன்னேறும்" என்று கட்டளையிட்டனர்.

அவளது எழுத்துரிமை பறிக்கப்பட்டது அவளுக்கு ஒரு மரண தண்டனைக்குச் சமமாக இருந்தது. அன்று இரவு, நிலவொளி படர்ந்த ஏரிக்கரைக்குக் கலினி சென்றாள். பல தலைமுறைகளாக மாறாத அந்த ஏரியின் அமைதியில், அவள் சில ரகசிய ஓலைச்சுவடிகளை ஏந்தியிருந்தாள். அவற்றில் அதிகாரப்பூர்வ வரலாற்றில் நீக்கப்பட்ட பழைய பாடல்கள், உண்மையான ஊர் பெயர்கள் மற்றும் சிதைக்கப்பட்ட குடும்பப் பரம்பரைகள் இருந்தன.
அவற்றை ஒரு மட்குடத்தில் இட்டு, அந்தப் புதிய மடத்தைவிடவும் பழமையான ஒரு எல்லைக் கல்லின் அடியில் புதைத்தாள். "மனிதர்கள் மறந்தாலும், இந்த நிலமும் கல்லும் உண்மையை நினைவில் வைத்திருக்கும்" என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள்.

அடுத்த நாள் கலினி மறைந்து போனாள். அவள் ஏரியில் விழுந்துவிட்டதாகவும் அல்லது வட திசையிலுள்ள அடர்ந்த காடுகளுக்குள் தப்பிச் சென்றுவிட்டதாகவும் கதைகள் பரவின. ஆனால், அவள் உடல் கிடைக்கவே இல்லை.

சில ஆண்டுகளுக்குப் பிறகு, சிவா அந்த ஊருக்குத் திரும்பினான். முதுமையால் அவனது உடல் கூனி, தலைமுடி வெளுத்து, கையில் ஒரு கம்புடன் காணப்பட்டான். நாடு கடத்தப்பட்ட அவனது வாழ்க்கை அவனைச் சோர்வடையச் செய்திருந்தது. இத்தனை காலமும் அவன் பல்வேறு துறைமுகங்களிலும் காடுகளிலும் அலைந்து, வணிகர்களுக்கும் அகதிகளுக்கும் அதிகார வர்க்கம் மறைக்க நினைத்த உண்மைக் கதைகளைச் சொல்லிக்கொண்டே உயிர் பிழைத்திருந்தான்.

வரலாற்று மற்றும் சமூகப் பின்னணி (Contextual Facts):

வரலாற்றுச் சிதைப்பு: கி.மு. 2-ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில், இலங்கையின் வரலாற்றைத் தொகுத்தவர்கள் (குறிப்பாக மகாவம்சம் போன்ற நூல்களின் ஆசிரியர்கள்), பௌத்த மதத்தைப் பரப்பவும் அரச அதிகாரத்தை நிலைநாட்டவும் சில பழைய இனக்குழுக்களின் (யக்க, நாக மற்றும் வேடுவர்) அடையாளங்களையும், அவர்கள் பேசிய எளு (Elu) மற்றும் தமிழ் கலந்த மொழி வழக்குகளையும் திட்டமிட்டு மறைத்தனர் அல்லது மாற்றியமைத்தனர்.

எழுத்தின் அதிகாரம்: அக்காலத்தில் ஓலைச்சுவடிகளில் எழுதப்படும் செய்திகளே "தர்மம்" அல்லது "உண்மை" என மக்களால் நம்பப்பட்டன. இதைப் பயன்படுத்தி, வாய்மொழியாகத் தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்ட "நாட்டுப்புற வரலாறுகள்" (Folk History) அழிக்கப்பட்டன.

இடப்பெயர் மாற்றம்: இலங்கையின் வட மத்திய மற்றும் தெற்குப் பகுதிகளில் இருந்த பல தமிழ்/எளு மொழி ஊர்ப் பெயர்கள், பாலி மற்றும் பிராகிருத மொழிகளின் தாக்கத்தால் மருவி சிங்களப் பெயர்களாக மாற்றப்பட்ட தொடக்கக் காலம் இது.

வடக்குக் காடுகள்: அக்கால கிளர்ச்சியாளர்களும், அதிகார மையத்தால் ஒடுக்கப்பட்டவர்களும் தஞ்சம் புகும் இடமாக இலங்கையின் வன்னி மற்றும் வடக்குக் காடுகளே திகழ்ந்தன.

சிவா திருகோணமலைக்குத் திரும்பியபோது, அங்கேயும் நிலப்பரப்பு மாறியிருந்தது. ஊர்களின் பெயர்கள் மாற்றப்பட்டிருந்தன; வழிபாட்டுத் தலங்களில் அந்நியமான புதிய குறியீடுகள் முளைத்திருந்தன. "ஐயா, ஏன் நீங்கள் எங்களைப் போல் பேசாமல் வேறு மாதிரிப் பேசுகிறீர்கள்?" என்று குழந்தைகள் அவனிடம் கேட்டனர். அவன் பதில் பேசவில்லை.

அவன் அடர்ந்த காடுகளுக்குள் புகுந்தான். காலம் சிதைத்த அடையாளங்களைத் தேடி அலைந்தான். ஒரு இடத்தில், புதர்கள் மூடி மறைத்திருந்த ஒரு பழைய எல்லைக் கல்லைத் தன் விரல்களால் தடவினான். அந்தக் கல்லில் செதுக்கப்பட்டிருந்த எழுத்துக்கள் அந்த நாட்டின் புதிய மன்னர்களை விடவும், அதிகாரப்பூர்வமாக எழுதப்பட்ட புதிய வரலாற்றை விடவும் பழமையானவை.

அதில் ஒரு பெயர் இருந்தது. இப்போது அரசாங்கப் பதிவேடுகளில் இல்லாத, அழிக்கப்பட்ட ஒரு குலத்தின் (Clan) அடையாளம் அதில் பொறிக்கப்பட்டிருந்தது. சிவா அங்கேயே விம்மி அழுதான். தான் இறப்பதற்கு முன்னால், ஒரே ஒரு சிறுவனிடம் மட்டும் ரகசியமாகச் சொன்னான்: "எழுத்துக்கள் ஒருவேளை மறைக்கப்படலாம், ஆனால் இந்தக் கல்லை மட்டும் நினைவில் வைத்திரு."

பல நூற்றாண்டுகள் கடந்தன. ஒரு தொல்பொருள் ஆய்வின் போது, அந்த எல்லையோரக் கல் கண்டெடுக்கப்பட்டது. அதைத் தோண்டியபோது, அதன் அடியில் கலினி புதைத்து வைத்திருந்த அந்த மட்குடமும், சிதைந்திருந்த ஓலைச்சுவடிகளும் கிடைத்தன.
ஆய்வாளர்களிடையே பெரும் விவாதம் வெடித்தது:

"இது பிழையான தகவல்" எனச் சிலர் மறுத்தனர். "இது பிற்காலத்தில் யாரோ வேண்டுமென்றே சேர்த்தது" எனச் சிலர் வாதிட்டனர். "இதுவரை நாம் அறிந்த வரலாற்றையே இது புரட்டிப் போட்டுவிடும்" எனச் சிலர் அமைதியாக ஒத்துக்கொண்டனர்.

வரலாறு முழுமையாகத் திருத்தப்படாவிட்டாலும், அதிகாரப்பூர்வ கதையாடலில் ஒரு பெரிய பிளவு ஏற்பட்டது. அந்தப் பிளவின் வழியாக, பல நூற்றாண்டுகளாக மௌனிக்கப்பட்ட குரல்கள் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்தன. அது ஒரு போர் முழக்கமல்ல; மெல்லிய குரல் தான். ஏனெனில், உண்மைக்கு அதிக சத்தம் தேவையில்லை—அது உயிர் பிழைத்திருப்பதே மிகப்பெரிய வெற்றி.

வரலாற்று உண்மைகள் (Facts & Figures):

திருகோணமலை (Gokanna): கி.மு. காலத்திலேயே இது ஒரு முக்கியமான துறைமுக நகரமாகவும், பூர்வ குடிகளின் வழிபாட்டுத் தலமாகவும் விளங்கியது. பிற்காலத்தில் இது மகாவிகாரைகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்தபோது பல மாற்றங்களைச் சந்தித்தது.

கல்வெட்டுகள் (Epigraphy): இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட பல பிராமி (Brahmi) கல்வெட்டுகள், பிற்கால 'மகாவம்சம்' கூறும் வரலாற்றோடு முரண்படுகின்றன. கல்வெட்டுகளில் உள்ள பழைய குலப் பெயர்கள் (உதாரணமாக: 'வேள்', 'ஆயன்' போன்ற தமிழ் வேர் கொண்ட பெயர்கள்) பிற்கால நூல்களில் திட்டமிட்டுத் தவிர்க்கப்பட்டன.

மறைக்கப்பட்ட குலங்கள்: இலங்கையின் பூர்வ குடிகளான யக்க (Yakka) மற்றும் நாக (Naga) பழங்குடியினரின் அடையாளங்கள், பௌத்த மத எழுச்சிக்குப் பிறகு "அசுரர்களாக" அல்லது "மனிதரல்லாதவர்களாக" புராணத்தன்மை பெற்று, அவர்களின் உண்மையான வரலாறு மறைக்கப்பட்டது.

தொல்லியல் உண்மை: அண்மைய காலங்களில் கண்டெடுக்கப்படும் மட்கல ஓடுகள் மற்றும் கல்வெட்டுகள், சிங்கள மொழி உருவாவதற்கு முன்னரே அங்கு நிலவிய தமிழ்-எளு பண்பாட்டுத் தொடர்பை (கி.மு. 300 - கி.பி. 100) உறுதிப்படுத்துகின்றன.

நன்றி

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

அத்தியாயம் 8 தொடரும்

துளி/DROP: 2125 [சிறு கதை - 207 / பெயர்களுக்கு முன் நினைவிருந்த தீவு அல்லது ஒரு நிலத்தின் கதை / அத்தியாயம் 7

https://www.facebook.com/groups/978753388866632/posts/34624333573881848/?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.