Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திமுகவால் நீட் விலக்கை சாத்தியமாக்க முடியாதது ஏன்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'அப்பா, ரொம்ப கஷ்டப்படுத்தறேனா': திமுகவால் நீட் விலக்கை சாத்தியமாக்க முடியாதது ஏன்?

நீட் விலக்கு, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல், திமுக - பாஜக

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,கோப்புப் படம்

கட்டுரை தகவல்

(எச்சரிக்கை: கட்டுரையில் இடம்பெற்றுள்ள சில விவரிப்புகள் சங்கடம் தரலாம்)

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தில் வசித்து வந்த மாணவி தேவதர்ஷினிக்கு மருத்துவம் படிக்க வேண்டும் என்பது கனவாக இருந்தது. 2021 ஆம் ஆண்டு பிளஸ்டூ படிப்பை அவர் நிறைவு செய்துவிட்டார். ஆனால், மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வை மூன்று முறை எழுதியும் அவர் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.

கடந்த ஆண்டு மார்ச் 28 ஆம் தேதி தற்கொலையால் உயிரிழந்தார்.

அவரது பெற்றோரான செல்வராஜ்-தேவி தம்பதியினர் செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தில் சிறிய அளவில் பேக்கரி ஒன்றை நடத்தி வருகின்றனர். பேக்கரி பெயரளவுக்கு இருந்தாலும் சமோசா தயாரித்து கடைகளுக்கு விற்கும் தொழிலில் செல்வராஜ் ஈடுபட்டு வருகிறார்.

இந்த தம்பதியின் இரண்டு பெண் குழந்தைகளில் மூத்த மகள் தேவதர்ஷினி. மருத்துவம் படிக்க வேண்டும் என்பது சிறுவயது கனவாக இருந்து வந்ததாக கூறுகிறார் செல்வராஜ்.

"பிளஸ் 2 பொதுத்தேர்வில் என் மகள் 600க்கு 526 மதிப்பெண் வாங்கினார். முதல் ஆண்டு நீட் தேர்வில் சுமார் 200 மதிப்பெண்ணும் இரண்டாம் ஆண்டில் சுமார் 300 மதிப்பெண்ணும் வாங்கினார். மூன்றாவது முறையாக நீட் தேர்வை எழுதியபோது 476 மதிப்பெண்ணை தேவதர்ஷினி வாங்கினார். மூன்று முறையும் தனியார் கல்லூரிகளில் இடம் கிடைத்தது. குடும்ப சூழல் காரணமாக அரசு ஒதுக்கீட்டுப் பிரிவில் மருத்துவம் படிப்பது தான் அவரது நோக்கமாக இருந்தது" என்றார் செல்வராஜ்.

'இப்படியொரு முடிவை எதிர்பார்க்கவில்லை'

நீட் விலக்கு, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல், திமுக - பாஜக

படக்குறிப்பு,நீட் தேர்வு தோல்வியால் உயிரிழந்த தேவதர்ஷினி

மகளின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக லட்சக்கணக்கில் கடன் வாங்கி தனியார் நீட் பயிற்சி வகுப்பில் அவரை செல்வராஜ் சேர்த்துள்ளார்.

"முதல் முறையாக நீட் பயிற்சி வகுப்பில் சேர்ப்பதற்காக 2 லட்ச ரூபாயைக் கட்டணமாக செலுத்தினேன். சமோசா விற்ற பணத்தில் குருவி சேர்ப்பதுபோல பணத்தைச் சேர்த்துக் கட்டினேன்" என்கிறார் அவர்.

"நான்காவது முறை நல்ல மதிப்பெண் வந்துவிடும் என உறுதியாக இருந்தார். அவரே லோன் செயலி மூலமாக கடன் வாங்கினார். இதற்கு மாதம் ஐந்தாயிரம் செலுத்தி வந்தேன்" என்கிறார் செல்வராஜ்.

கடந்த ஆண்டு நீட் தேர்வுக்கு ஏறக்குறைய ஒரு மாதகாலம் இருந்தபோது மார்ச் 28 அன்று மாலை தற்கொலையால் உயிரிழந்தார்.

"அன்று வகுப்பில் இருந்து வந்ததில் இருந்தே சோகமாக இருந்தார். சமோசா தயாரித்துக் கொண்டிருந்த என்னிடம் 'அப்பா, உன்னை ரொம்பவும் கஷ்டப்படுத்தறேனா?' எனக் கேட்டார். 'அப்படியெல்லாம் இல்லை. நீ நிச்சயம் ஜெயிப்பாய்' என்றேன்" எனக் கூறுகிறார்.

நீட் விலக்கு, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல், திமுக - பாஜக

படக்குறிப்பு,தேவதர்ஷினியின் தந்தை செல்வராஜ்

"ஆனால் இப்படியொரு முடிவை என் மகள் எடுப்பாள் என கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை" எனக் கூறி கதறியழுத செல்வராஜ், "நாங்கள் அடைந்த துன்பத்தை யாரும் அடையக் கூடாது. இதைவிட பெற்றோருக்கு வேறு என்ன கஷ்டம் வேண்டும்?" எனக் கேள்வி எழுப்பினார்.

"நீட் தேர்வு தொடர்பாக எந்தச் செய்தியை பார்த்தாலும் என் மகள்தான் நினைவுக்கு வருகிறார். நீட் தேர்வுக்காக எத்தனையோ பேர் உயிரிழந்துவிட்டனர். அரசுகள் கொண்டு வரும் சட்டங்களால் ஏழைக் குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்" என அவர் கூறுகிறார்.

'5 ஆண்டுகளில் 19 மரணங்கள்'

நீட் விலக்கு, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல், திமுக - பாஜக

பட மூலாதாரம்,X/EDAPPADI PALANISAMY

படக்குறிப்பு,எடப்பாடி பழனிசாமி (கோப்புப் படம்)

தேவதர்ஷினியைப் போலவே நீட் தேர்வு காரணமாக கடந்த ஐந்தாண்டுகளில் 19 மாணவ, மாணவிகள் உயிரிழந்ததாக, பெயர்களை தனது எக்ஸ் தள பதிவில் பட்டியலிட்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, 'இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் சொல்லப் போகும் பதில் என்ன?' என கேள்வி எழுப்பியிருந்தார்.

மத்தியில் திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணி ஆட்சியில் இருந்த போதே நீட் தேர்வு முன்னெடுக்கப்பட்டாலும், தமிழ்நாட்டைப் பொருத்தவரை 2017 ஆம் ஆண்டுதான் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த ஆண்டு அரியலூரில் மாணவி அனிதா உயிரிழந்தது தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில், 'ஆட்சிப் பொறுப்பேற்றதும் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெறுவோம்' என, தி.மு.க பிரசாரம் செய்தது.

தி.மு.க அரசு செய்தது என்ன?

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வென்று ஆட்சிப் பொறுப்பேற்றதும் நீட் தேர்வு குறித்து ஆராய்வதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு ஒன்றை தி.மு.க அரசு அமைத்தது.

அந்தக் கமிட்டி அளித்த பரிந்துரையின் அடிப்படையில் 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவை ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி நிராகரித்தார்.

2022 ஆம் ஆண்டு மீண்டும் அதே மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு தி.மு.க அரசு அனுப்பியது. இந்த முறை மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பினார்.

இந்த மசோதாவும் நிராகரிக்கப்பட்டுவிட்டதாக, கடந்த ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

'பா.ஜ.க தான் காரணம்'

தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளரும் வழக்கறிஞருமான சரவணன் அண்ணாதுரை

படக்குறிப்பு,தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளரும் வழக்கறிஞருமான சரவணன் அண்ணாதுரை

நீட் தேர்வுக்கு விலக்கு கிடைக்காமல் இருப்பதன் பின்னணியில் பா.ஜ.க உள்ளதாகக் கூறுகிறார், தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளரும் வழக்கறிஞருமான சரவணன் அண்ணாதுரை.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "மத்திய அரசு இயற்றும் சட்டத்துக்கு மாநில அரசுகளால் விலக்கு பெற முடியும். அரசியலமைப்புச் சட்டத்தில் அதற்கு வழிவகைகள் உள்ளன" என்கிறார்.

"பொதுப் பட்டியலில் கல்வி இருப்பதால் மாநில அரசுகள் விலக்கு கேட்கலாம். அவ்வாறு நீட் தேர்வுக்கு விலக்கு கொடுக்கப்பட்டால் தி.மு.க அரசுக்கு வெற்றி கிடைத்துவிடும் என்ற நோக்கில் திட்டமிட்டு பா.ஜ.க அரசு தடுத்து நிறுத்துகிறது" என்கிறார் அவர்.

தொடர்ந்து பேசிய சரவணன் அண்ணாதுரை, "நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்பது என்பது தி.மு.கவின் விருப்பம் அல்ல. தமிழ்நாட்டு மக்களின் விருப்பமாக அது உள்ளது. அதனை மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு மதிக்கவில்லை" என்கிறார்.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுக்கிறார், தமிழ்நாடு பா.ஜ.க தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி.

'தி.மு.க அரசுக்கு ஏற்பட்ட சரிவு'

தமிழ்நாடு பா.ஜ.க தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி

படக்குறிப்பு,தமிழ்நாடு பா.ஜ.க தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி

"சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதா, சட்டத்துக்கு உட்பட்டதாக இல்லாவிட்டால் திருப்பி அனுப்பிவிடுவார்கள். தி.மு.க அரசு நிறைவேற்றிய மசோதா சட்டத்துக்கு உட்பட்டதாக இல்லை" என்கிறார் அவர்.

நீட் தேர்வுக்கு எதிரான வழக்குகளில் பல்வேறு சட்ட நுணுக்கங்களை ஆராய்ந்து அதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததாகக் கூறும் நாராயணன் திருப்பதி, "இதன் காரணமாகவே தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவர் நிராகரித்தார்" எனக் கூறுகிறார்.

"தேர்தல் பிரசாரத்தில், 'ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ஒழிப்போம்' என தி.மு.க தலைவர் கூறினார். ஆனால், அவ்வாறு நிறைவேற்ற முடியாததை அக்கட்சிக்கு ஏற்பட்ட மிகப் பெரிய சரிவாக பார்க்கிறேன்" என்கிறார் நாராயணன் திருப்பதி.

நீட் தேர்வுக்கு சாதகமாக நீதிமன்ற உத்தரவுகள் இருந்ததாகக் கூறும் நாராயணன் திருப்பதி, "நீட் விலக்கு தொடர்பாக தி.மு.க அரசு முன்வைத்த வாதங்களை உச்ச நீதிமன்றம் புறம்தள்ளிவிட்டது." என்கிறார்.

நீட் - கள நிலவரம்

2025 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதிய1,35,715 மாணவர்களில் 76,181 (56.13 சதவீதம்) பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.

அதுவே 2024 ஆம் ஆண்டில் 1,52,919 பேர் நீட் தேர்வை எழுதியிருந்தனர். இவர்களில் 89,198 பேர் (58.33 சதவீதம்) தேர்ச்சி பெற்றனர்.

"காலம் செல்லச்செல்ல நீட் மிகச் சிறந்த நிலையை எட்டும்" எனக் கூறும் தமிழ்நாடு பா.ஜ.க தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, "மாநில பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் இடம்பெறவில்லை என்ற குற்றச்சாட்டுகளை சிலர் முன்வைத்தனர். அவை சரிசெய்யப்பட்டுவிட்டன" என்கிறார்.

அ.தி.மு.க ஆட்சியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீதத்தை ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனை சுட்டிக்காட்டிய நாராயணன் திருப்பதி, " அரசுப் பள்ளி மாணவர்கள் அதிகளவில் மருத்துவம் படிப்பதற்கு இது ஒரு காரணமாக அமைந்தது. நீட் தேர்வை ஒன்றும் செய்ய முடியாது எனத் தெரிந்தும் திட்டமிட்ட ரீதியில் தி.மு.க பிரசாரம் செய்தது" என்கிறார்.

"மத்திய அரசும் உச்ச நீதிமன்றமும் நீட் தேர்வு ரத்தாகிவிடும் எனக் கூறவில்லை. ஆனால், போலியான நம்பிக்கையை மக்கள் மத்தியில் தி.மு.க விதைத்தது" எனவும் அவர் விமர்சித்தார்.

இதனை மறுக்கும் தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் சரவணன் அண்ணாதுரை, "நீட் விலக்கு தொடர்பாக தி.மு.க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறுவதை ஏற்க முடியாது. ஆனால், தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம்" என்கிறார்.

"நீட் விலக்கு கேட்பது என்பது சமூகநீதிப் போராட்டம். இதை தி.மு.க அரசு ஒருபோதும் கைவிடாது. இந்த தேர்தலிலும் நீட் விலக்கு பிரசாரத்தை முன்னெடுப்போம்" எனவும் அவர் தெரிவித்தார்.

'மருத்துவம் மட்டுமே படிப்பு அல்ல'

சமூக சமத்துவத்துக்கான மருத்துவர் சங்கத்தின் செயலாளர் சாந்தி

படக்குறிப்பு,சமூக சமத்துவத்துக்கான மருத்துவர் சங்கத்தின் செயலாளர் சாந்தி

"நீட் தேர்வில் விலக்கு கேட்பதை மாநிலத்தில் ஒரு கட்சியின் பிரச்னையாக பார்க்கக் கூடாது" என்கிறார், சமூக சமத்துவத்துக்கான மருத்துவர் சங்கத்தின் செயலாளர் சாந்தி.

"மாநில அரசின் செலவில் இயங்கும் கல்லூரிகளில் உள்ள மருத்துவப் படிப்புகளுக்கான உரிமையாக இதைப் பார்க்க வேண்டும்" என்கிறார் அவர்.

"அதேநேரம், கல்வி, வேலைவாய்ப்பில் போட்டித் தேர்வுகளைத் தவிர்க்க முடியாது. அதற்கேற்ப மாணவர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்" என்கிறார் மருத்துவர் சாந்தி.

"பெற்றோர் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். அப்போது தான் நீட் தேர்வு அச்சம் காரணமாக ஏற்படும் தற்கொலை உயிரிழப்புகளைத் தடுக்க முடியும்" எனவும் அவர் தெரிவித்தார்.

மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். இதற்கான உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம்.

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 (24 மணி நேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800-599-0019

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cnv8qpr6637o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.