Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிலத்தடியில் 6,300 டன் தங்கத்தை சேமித்து வைத்துள்ள அமெரிக்கா - ஐரோப்பிய நாடுகள் கவலை கொள்வது ஏன்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நிலத்தடியில் 6,300 டன் தங்கத்தை சேமித்து வைத்துள்ள அமெரிக்கா - ஐரோப்பிய நாடுகள் கவலை கொள்வது ஏன்?

அமெரிக்கா 6,300 டன் தங்கத்தை சேமித்து வைத்துள்ள பாதுகாப்புப் பெட்டகம் எங்கு உள்ளது?

பட மூலாதாரம்,Photos: New York Fed / Editing: Caroline Souza

கட்டுரை தகவல்

  • கில்லெர்மோ டி. ஓல்மோ

  • பிபிசி முண்டோ

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

நியூயார்க்கில் உள்ள லிபர்ட்டி தெருவில், தரைக்குக் கீழே 25 மீட்டர் ஆழத்தில் ஃபெடரல் ரிசர்வ் தனது பிரதான கட்டடத்தின் அடித்தளத்தில் பெருமளவு தங்கத்தைப் பாதுகாத்து வருகிறது. இந்தத் தங்கம் உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளின் பல மத்திய வங்கிகள், அரசுகள் மற்றும் நிறுவனங்களுக்குச் சொந்தமானது. அங்கு அரை மில்லியனுக்கும் அதிகமான தங்கக் கட்டிகள் சேமிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலத்தடிப் பாதுகாப்புப் பெட்டகம், மிகவும் வலிமையான 90 டன் எடையுள்ள எஃகு கதவால் பாதுகாக்கப்படுகிறது. இந்தக் கதவு ஒருமுறை மூடப்பட்டால், அடுத்த நாள் வரை அதை மீண்டும் திறக்க முடியாது. இந்த இடம் ஃபெடரல் ரிசர்வின் தங்கப் பாதுகாப்புப் பெட்டகம் (Fed's Gold Vault) என்று அழைக்கப்படுகிறது. மேலும், இது உலகின் மிகப்பெரிய தங்கச் சேமிப்புக் கிடங்காக அறியப்படுகிறது.

இது சுமார் 6,300 டன் தங்கத்தை வைத்துள்ளது. இன்றைய விலையில், இதன் மதிப்பு ஒரு டிரில்லியன் டாலருக்கும் அதிகமாக இருக்கும். இது அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 4% ஆகும்.

இந்தப் பாதுகாப்புப் பெட்டகம் உலகளாவிய நிதி அமைப்புக்கு மிகவும் முக்கியமானது. தங்கம் மிகவும் பாதுகாப்பான சொத்தாகக் கருதப்படுவதால், பல நாடுகள் தங்கள் தங்கத்தை இங்கு சேமித்து வைக்கின்றன. நாடுகள் தங்களது நாணயத்தை ஆதரிக்கவும், நிதி நெருக்கடிகளின்போது ஏற்படும் சிக்கல்களைக் கையாளவும் இதைப் பயன்படுத்துகின்றன.

நிதி நெருக்கடி, அரசியல் பதற்றங்கள், பணவீக்கத்தால் பணத்தின் மதிப்பு குறைதல் ஆகிய காலங்களில், தங்கம் எப்போதுமே பணத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு "பாதுகாப்பான இடமாக" பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள், குறிப்பாக ஐரோப்பாவில் உள்ளவை, தங்களது கையிருப்பு நிதியில் பெரும் பகுதியைத் தங்கமாக வைத்திருக்கிறார்கள்.

கலிஃபோர்னியா பெர்க்லி பல்கலைக்கழகத்தின் சர்வதேச பண அமைப்பு நிபுணரான பேரி ஐகென்கிரீன், பிபிசி முண்டோவிடம் பேசியபோது, "இது அவர்களின் மிக முக்கியமான சொத்துகளில் ஒன்று. ஏனெனில், பாதகமான புவிசார் அரசியல் நிகழ்வுகளை எதிர்கொள்ளும்போது, வங்கிகள் மற்றும் நிறுவனங்களுக்கு இறுதிப் புகலிடக் கடன் வழங்குநராகச் செயல்படவும், அந்நிய செலாவணி சந்தையில் தலையிடவும் இது அவர்களுக்கு உதவுகிறது," என்று கூறினார்.

பல ஆண்டுகளாக, அமெரிக்காவும் அதன் ஃபெடரல் ரிசர்வும் தங்கத்தைச் சேமித்து வைப்பதற்கு மிகவும் பாதுகாப்பான, நம்பகமான இடங்களாகக் கருதப்பட்டன. பல ஐரோப்பிய நாடுகள், குறிப்பாக சோவியத் யூனியனால் அச்சுறுத்தப்படுவதாக உணர்ந்த காலகட்டத்தில், தங்கத்தின் பெரும் பகுதியை அமெரிக்காவில் வைத்திருந்தன.

ஆனால், இப்போது டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, சில ஐரோப்பிய தலைவர்களும் நிபுணர்களும் தங்களது தங்கத்தைத் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பக் கொண்டு வருவது பற்றிச் சிந்தித்து வருகின்றனர். சர்வதேச ஒப்பந்தங்களை முழுமையாகப் பின்பற்றாதது, வர்த்தக வரிகள், கிரீன்லாந்து மீதான டென்மார்க்கின் கட்டுப்பாடு, சமீபத்தில் இரானுடனான போர் போன்ற விவகாரங்களில் ஐரோப்பிய நட்பு நாடுகளுடன் கருத்து வேறுபாடுகள் கொண்டிருப்பது போன்ற டிரம்பின் நடவடிக்கைகளால் அவர்கள் கவலை கொண்டுள்ளனர். இந்தப் பிரச்னைகள், அமெரிக்காவில் சேமிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய தங்கம் முழுமையாகப் பாதுகாப்பாக உள்ளதா என்பது குறித்த கவலையை உருவாக்கியுள்ளன.

கடந்த 1950கள் முதல் சோவியத்தின் அச்சுறுத்தலுக்கு பயந்து ஐரோப்பிய நாடுகள் தங்கள் தங்கத்தை அமெரிக்காவில் குவித்து வைத்தன.

பட மூலாதாரம்,Harry Benson / Getty

படக்குறிப்பு,கடந்த 1950கள் முதல் சோவியத்தின் அச்சுறுத்தலுக்கு பயந்து ஐரோப்பிய நாடுகள் தங்கள் தங்கத்தை அமெரிக்காவில் குவித்து வைத்தன.

ஐரோப்பிய தங்கம் அமெரிக்காவுக்கு வந்தது எப்படி?

சாத்தியமான மேற்கத்திய தடைகளில் இருந்து தங்கத்தைப் பாதுகாக்க, ரஷ்யா தனது தங்கத்தைத் தனது நாட்டிலேயே வைத்திருப்பதைப் போலன்றி, பல ஐரோப்பிய நாடுகள் இன்றும் தங்கள் தங்கத்தைப் பிற நாடுகளில், குறிப்பாக நியூயார்க்கில் உள்ள நியூயார்க் தங்கப் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைத்திருக்கிறார்கள்.

ஐரோப்பிய நாடுகள் 1950களில் இருந்து தங்களது தங்கத்தை அங்கு சேமிக்கத் தொடங்கின. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, பல ஐரோப்பிய பொருளாதாரங்கள் மெதுவாக மீண்டு வந்து, அமெரிக்காவுக்கு அதிக பொருட்களை ஏற்றுமதி செய்யத் தொடங்கின.

"ஜெர்மனி மற்றும் பொருளாதாரத்தை மீட்டெடுத்துக் கொண்டிருந்த பிற ஐரோப்பிய நாடுகள், அமெரிக்காவுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்து, தங்கம் மற்றும் டாலர்கள் கலந்த வடிவத்தில் பணத்தைப் பெற்று வந்தன," என்று பேரி ஐகென்கிரீன் விளக்குகிறார்.

மேலும், "தங்கத்தை ஒரு கப்பலிலோ அல்லது விமானத்திலோ ஏற்றி, அந்தப் போக்குவரத்திற்குப் பாதுகாப்பு அளிக்கக் காப்பீடு எடுப்பதற்குப் பணம் செலவாகும். எனவே, அதை ஃபெடரல் ரிசர்வ் பாதுகாப்புப் பெட்டகத்தில் சேமிப்பது ஒரு நல்ல யோசனை என்று அவர்கள் கருதினர். ஏனெனில், அது பாதுகாப்புக்காகக் கட்டணம் வசூலிப்பதில்லை," என்றும் அவர் விளக்கினார்.

கடந்த 1944இல், பிரெட்டன் வூட்ஸ் அமைப்பு என்றழைக்கப்படும் ஒரு சர்வதேச அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில், அமெரிக்க டாலர் ஒரு நிலையான மதிப்பில் தங்கத்துடன் இணைக்கப்பட்டது. இதன் காரணமாக, தங்கமும் அமெரிக்க டாலரும் மிகவும் நம்பகமான, நிலையான பண வடிவங்களாக மாறின. போருக்குப் பிறகு பலவீனமடைந்திருந்த ஐரோப்பிய நாடுகள், தங்களது தங்கத்தை எந்த சேமிப்புக் கட்டணமும் செலுத்தாமல் ஃபெடரல் ரிசர்வில் பாதுகாத்து வைத்திருப்பதைப் பயனுள்ள விஷயமாகப் பார்த்தனர்.

பிற நாடுகள் அமெரிக்க ஃபெடரல் ரிசர்விடம் ஒப்படைக்கும் தங்கத்தை ஒரு பாதுகாப்புப் பெட்டகம் பாதுகாத்து வைக்கிறது.

பட மூலாதாரம்,New York Fed

படக்குறிப்பு,பிற நாடுகள் அமெரிக்க ஃபெடரல் ரிசர்விடம் ஒப்படைக்கும் தங்கத்தை ஒரு பாதுகாப்புப் பெட்டகம் பாதுகாத்து வைக்கிறது.

அந்தக் காலகட்டத்தில், இரும்புத் திரையின் மறுபுறத்தில் இருந்த சோவியத் யூனியன் குறித்த அச்சமும் இருந்தது. எனவே, தங்கத்தை அமெரிக்காவில் வைத்திருப்பது மிகவும் பாதுகாப்பானது எனக் கருதப்பட்டது.

ஆனால் இப்போது சோவியத் யூனியன் இல்லை. மேலும் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகைக்குத் திரும்பியதால், அமெரிக்காவுக்கும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளுக்கும் இடையிலான நீண்ட கால நட்புறவு சில பதற்றங்களைச் சந்திக்கத் தொடங்கியுள்ளது.

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக, உலகில் இரண்டாவது பெரிய தங்க இருப்பைக் கொண்டுள்ள ஜெர்மனியில் பல நிபுணர்கள் கவலை கொண்டுள்ளனர். இவ்வளவு பெரிய அளவிலான தங்கம் இருப்பதால், ஏதேனும் தவறு நடந்தால் ஜெர்மனி அதிக ஆபத்தை எதிர்கொள்ளக்கூடும்.

முன்னர் பன்டெஸ்பேங்கில் (Bundesbank) தலைமை ஆய்வாளராகப் பணியாற்றிய பொருளாதார நிபுணர் இமானுவேல் மோன்ச், நியூயார்க்கில் வைத்துள்ள தங்கத்தை ஜெர்மனி திரும்பக் கொண்டு வர வேண்டும் என்று கூறினார். ஜெர்மன் ஊடகங்களின்படி, ஜெர்மனி அங்கு சுமார் 1,200 டன் தங்கத்தைச் சேமித்து வைத்துள்ளது. அதன் மதிப்பு சுமார் 200 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

ஃபெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பாவெல் (வலது) மீது டிரம்ப் தொடுத்துள்ள தாக்குதல்கள், பிற நாடுகளின் தங்கத்தைப் பாதுகாக்கும் நிறுவனத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.

பட மூலாதாரம்,Chip Somodevilla / Getty

படக்குறிப்பு,ஃபெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பாவெல் (வலது) மீது டிரம்ப் தொடுத்துள்ள தாக்குதல்கள், பிற நாடுகளின் தங்கத்தைப் பாதுகாக்கும் நிறுவனத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.

"தற்போதைய புவிசார் அரசியல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இவ்வளவு தங்கத்தை அமெரிக்காவில் வைத்திருப்பது ஆபத்தானதாகத் தெரிகிறது. தங்கத்தைத் திரும்பக் கொண்டு வருவது ஜெர்மனிக்கு அதிக மூலோபாய சுதந்திரத்தை அடைய உதவும்" என்று கூறுகிறார் மோன்ச்.

அதேபோல, ஜெர்மன் வரி செலுத்துவோர் சங்கத்தின் தலைவர் மைக்கேல் ஜாகர், "டிரம்ப் கணிக்க முடியாதவர் மற்றும் வருவாயை ஈட்டுவதற்காக எதையும் செய்யக்கூடியவர். அதனாலேயே நமது தங்கம் இனி ஃபெடரல் ரிசர்வின் பாதுகாப்புப் பெட்டகத்தில் பாதுகாப்பாக இருக்காது," என்று கூறினார்.

மேலும் அவர், "கிரீன்லாந்து மீதான ஆத்திரமூட்டல் தொடர்ந்தால் என்ன நடக்கும்? இது பன்டெஸ்பேங்க் தனது தங்கத்தை அணுக முடியாமல் போகக்கூடிய அபாயத்தை அதிகரிக்கிறது. எனவே அதன் கையிருப்பைத் திருப்பி அனுப்ப வேண்டியிருக்கும்," என்றும் அவர் கேட்டார்.

இந்தக் கவலைகள், அதிபர் ஃபிரெட்ரிக் மெர்ஸின் கட்சியான சி.டி.யு-வின் உறுப்பினர்கள் மற்றும் பிற அரசியல் குழுக்களாலும் எழுப்பப்படுகின்றன.

இருப்பினும், பன்டெஸ்பேங்கின் தலைவர் ஜோக்கிம் நாகல், இந்த அச்சங்களைத் தணிக்க முயன்றுள்ளார். கடந்த அக்டோபரில் வாஷிங்டனில் நடந்த சர்வதேச நானய நிதியத்தின் கூட்டத்தில் அவர், "கவலைப்படத் தேவையில்லை" என்று கூறினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க...   https://www.bbc.com/tamil/topics/cx2r5pqvxy1t

படக்குறிப்பு,தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க...

பிப்ரவரியில், அவர் மீண்டும் ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசியபோது, "இது என் தூக்கத்தைக் கெடுப்பதில்லை. அமெரிக்க மத்திய வங்கியில் உள்ள எங்கள் சகாக்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது" என்றார்.

ஆனால் அமெரிக்காவில் ஃபெடரல் ரிசர்வ் அல்லது டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் ஆகிய இரண்டுமே இந்த விவகாரம் குறித்து மற்றவர்களுக்குத் தெளிவாக உறுதியளிக்கவில்லை.

பகுப்பாய்வாளர் பேரி ஐகென்கிரீன், "நான் எந்த உறுதியளிக்கும் வார்த்தைகளையும் கேட்கவில்லை. மேலும் இது சரியான நேரத்தில் செய்யப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்" என்றார்.

பிபிசி முண்டோ ஃபெடரல் ரிசர்வை தொடர்புகொள்ள முயன்றது. ஆனால் எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.

அதே நேரத்தில், அமெரிக்காவுக்குள் ஃபெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பாவெலுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே பதற்றம் நிலவுகிறது. வட்டி விகிதங்களைக் குறைக்க மறுத்ததால், டிரம்ப் பாவெலை பலமுறை விமர்சித்துள்ளார். நீதித் துறையும் பவலுக்கு எதிராக ஒரு குற்றவியல் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

ஃபெடரல் ரிசர்வின் சுதந்திரத்தைக் குறைப்பதற்கும், அதை "அதிபரின் விருப்பங்களைப் பின்பற்றுமாறு" கட்டாயப்படுத்துவதற்கும் அரசாங்கம் மேற்கொள்ளும் "மிரட்டல்கள் மற்றும் அழுத்தங்களின்" ஒரு பகுதியே இந்த விசாரணை என்று பாவெல் கூறினார்.

ஃபெடரல் ரிசர்வின் தங்கப் பாதுகாப்புப் பெட்டகத்தில் சுமார் 6,000 டன் தங்கக் கட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

பட மூலாதாரம்,New York Fed

படக்குறிப்பு,ஃபெடரல் ரிசர்வின் தங்கப் பாதுகாப்புப் பெட்டகத்தில் சுமார் 6,000 டன் தங்கக் கட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

திடீரென வீழ்ந்த தங்கத்தின் மதிப்பு

ஜெர்மனி மட்டுமே நியூயார்க்கில் தங்கத்தை வைத்திருக்கும் ஒரே ஐரோப்பிய நாடு இல்லை. இத்தாலி, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளும் அங்கு அதிக அளவில் தங்கத்தைச் சேமித்து வைத்திருப்பதாக அறியப்படுகிறது.

சில நாடுகள் கடந்த காலங்களிலேயே தங்கள் தங்கத்தைத் தாய்நாட்டிற்குத் திரும்பக் கொண்டு வரத் தொடங்கியுள்ளன. உதாரணமாக, நெதர்லாந்து 2014இல் இதைச் செய்யத் தொடங்கியது. அது ஃபெடரல் ரிசர்வில் வைத்திருந்த தங்கத்தின் அளவை 51% என்பதில் இருந்து 31 சதவிகிதமாகக் குறைத்தது.

ஏறக்குறைய அதேநேரத்தில், ஜெர்மனியும் தனது சில தங்கக் கட்டிகளைத் திரும்பக் கொண்டு வந்தது. ஆனால் அதன் பெரும்பாலான தங்கம் இன்னும் அமெரிக்காவிலேயே சேமித்து வைக்கப்பட்டுள்ளது.

"அது கிரேக்க கடன் நெருக்கடி, யூரோ நெருக்கடியின் காலம். மேலும் ஐரோப்பியர்கள் தங்கள் நாணயம் மற்றும் வங்கி வைப்புத் தொகைகள் உறுதியான ஒன்றால் ஆதரிக்கப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்த விரும்பினர்," என்று பேரி ஐகென்கிரீன் விளக்குகிறார்.

இதற்கும் முன்னதாக, 1960களில், சார்லஸ் டி கோல் பிரான்சின் தங்கத்தை அமெரிக்காவில் இருந்து திரும்பக் கொண்டு வர முடிவு செய்தார். அமெரிக்க டாலர் திடீரென மதிப்பிழக்கக்கூடும் என்று அவர் அஞ்சியதாகப் பல வல்லுநர்கள் கூறுகின்றனர். அந்தக் காலகட்டத்தில் பிரெட்டன் வூட்ஸ் அமைப்பின்கீழ், டாலரின் மதிப்பு தங்கத்துடன் இணைக்கப்பட்டிருந்தது.

பிற்கால நிகழ்வுகள் அவரது கவலை சரியானது என்பதை நிரூபித்தன. 1971இல் டாலர்களை தங்கமாக மாற்றும் முறையை ரிச்சர்ட் நிக்சன் நிறுத்தினார். இந்த முடிவு, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உருவாக்கப்பட்ட உலகளாவிய நிதி அமைப்பைப் பலவீனப்படுத்தியது.

பிரான்ஸ் ஏற்கெனவே தனது தங்கத்தைத் திரும்பக் கொண்டு வந்திருந்ததால், அதுவொரு சிறந்த நிலையில் இருந்தது. தங்கள் தங்கத்தை நியூயார்க்கில் வைத்திருந்த பிற நாடுகள், டாலர் மதிப்பில் தங்களது தங்கத்தின் மதிப்பு திடீரென வீழ்ச்சியடைவதைக் கண்டன.

ஐரோப்பிய நாடுகளிலேயே மிகப்பெரிய தங்க இருப்பைக் கொண்ட நாடாக ஜெர்மனி திகழ்கிறது. ஃபெடரல் ரிசர்வ் வசம் உள்ள தங்கத்தை மீண்டும் தனது நாட்டுக்கே கொண்டு வருவது குறித்த விவாதமும் எழுந்துள்ளது.

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ஐரோப்பிய நாடுகளிலேயே மிகப்பெரிய தங்க இருப்பைக் கொண்ட நாடாக ஜெர்மனி திகழ்கிறது. ஃபெடரல் ரிசர்வ் வசம் உள்ள தங்கத்தை மீண்டும் தனது நாட்டுக்கே கொண்டு வருவது குறித்த விவாதமும் எழுந்துள்ளது.

தங்கத்தை இடம் மாற்றுவது செலவுமிக்க முயற்சி

நியூயார்க்கில் உள்ள தங்கப் பாதுகாப்புப் பெட்டகத்தில் இப்போது முன்பைவிடக் குறைவான தங்கமே உள்ளது. ஃபெடரல் ரிசர்வ் அமைப்பின்படி, 1973இல் 12,000 டன்களுக்கும் அதிகமாக இருந்த தங்கத்தின் அளவு, அன்று முதல் மெதுவாகக் குறைந்து வருகிறது.

இருப்பினும், தங்கத்தை அங்கேயே வைத்திருப்பது நல்லது என சில நிபுணர்கள் நம்புகிறார்கள். ஜெர்மனியில் உள்ள ஐ.எஃப்.ஓ பொருளாதார ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த கிளெமென்ஸ் ஃப்யூஸ்ட், தி கார்டியன் பத்திரிகையிடம் பேசுகையில், "தங்கத்தை மீண்டும் நாட்டிற்குக் கொண்டு வருவது, தற்போதைய சூழ்நிலையின் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போலாகும்" என்றும் எதிர்பாராத சிக்கல்களை அது உருவாக்கக்கூடும் எனவும் கூறினார்.

டொனால்ட் டிரம்ப் அரசாங்கத்திடம் இருந்து ஃபெடரல் ரிசர்வ் சுதந்திரமாகச் செயல்படுவதாகவும் சில நிபுணர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக, தங்கம் இன்னும் அங்கு பாதுகாப்பாக இருப்பதாக அவர்கள் கருதுகின்றனர். இவ்வளவு பெரிய அளவிலான தங்கத்தை இடம் மாற்றுவது மிகவும் செலவுமிக்கது, கடினமானது மற்றும் ஆபத்தானது எனவும், அதற்கு வலுவான பாதுகாப்பும் கவனமான திட்டமிடலும் தேவை என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இருப்பினும், ஐரோப்பிய தங்கத்தைப் பாதுகாக்க அமெரிக்காவை முழுமையாக நம்ப முடியுமா என்பது குறித்த சந்தேகங்கள் அதிகரித்து வருகின்றன. இது பல ஆண்டுகளாக இருந்து வரும் உலகளாவிய அமைப்பைப் பலவீனப்படுத்தக்கூடும்.

இதுகுறித்து விளக்கிய பேரி ஐகென்கிரீன், "தங்கத்தைத் திரும்பப் பெறுவதால் அமெரிக்காவுக்கு குறிப்பிடத்தக்க நிதிசார்ந்த பின்விளைவுகள் ஏற்படாது. இருந்தாலும், நேட்டோவின் பாதுகாப்புக் குடை அல்லது உலகளாவிய நாணயமாக டாலர் இருப்பது ஆகியவற்றைப் போலவே, நண்பர்களையும் வர்த்தகப் பங்காளிகளையும் உருவாக்கிக் கொள்வதற்கு ஈடாக தங்கம் ஓர் உலகளாவிய சொத்தாக உள்ளது. அதை அமெரிக்கா இலவசமாக வழங்கியுள்ளது," என்று கூறினார்.

பிரச்னைகளைப் பேசுவோம்

படக்குறிப்பு,உங்களுக்கோ அல்லது உங்களுக்குத் தெரிந்த பெண்களுக்கோ பாதுகாப்பு தொடர்பாக எங்கள் செய்தியாளர்களுடன் பகிர விரும்பும் தனிப்பட்ட அனுபவம் ஏதேனும் உள்ளதா? - பகிர இங்கே கிளிக் செய்யவும்

மேலும் பேசிய அவர், "அமெரிக்கா இலவசமாக சேவைகளை வழங்க வேண்டும் என்று இந்த அரசாங்கம் நம்பவில்லை. அதோடு அமெரிக்காவில் உள்ள தங்கள் வைப்புத் தொகைகளின் பாதுகாப்பு குறித்து நட்பு நாடுகளின் சந்தேகங்களைத் தூண்டும் எதுவும், நாட்டின் மீதான அவரகளின் நல்லெண்ணத்தை மேலும் சிதைக்கிறது. உதாரணமாக, மத்திய கிழக்கில் ஒரு போருக்கு அவர்களின் உதவி தேவைப்படும்போது இது அவசியமான ஒன்றாகும்," என்றும் தெரிவித்தார்.

இதுவரை டிரம்பின் இந்த இரண்டாவது பதவிக் காலத்தில் எந்தவொரு ஐரோப்பிய நாடும் தனது தங்கத்தைத் திரும்பக் கொண்டு வருவதாக அதிகாரபூர்வமாக முடிவு செய்யவில்லை.

ஆனால் கிறிஸ்டின் லகார்டின் வார்த்தைகள் இன்னும் பல தலைவர்களின் மனதில் இருக்கலாம். அவர் கடந்த ஆண்டு ஓர் உரையில், "சர்வதேச நாணய நிதியத்தின் வரலாற்றில், அசைக்க முடியாததாகத் தோன்றிய அடித்தளங்கள் ஆட்டம் காணத் தொடங்கும் நேரங்கள் உண்டு" என்று கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cvg05nn5pv8o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.