Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிந்து சமவெளி நாகரிக மக்கள் யார்? அவர்களுக்கு என்ன ஆனது? இன்னும் தீர்க்கப்படாத மர்மங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிந்து சமவெளி நாகரிக மக்கள் யார்? அவர்களுக்கு என்ன ஆனது? இன்னும் தீர்க்கப்படாத மர்மங்கள்

சிந்து சமவெளி நாகரிகம், மொஹஞ்சதாரோ, ஹரப்பா

பட மூலாதாரம்,DEA / A Dagli Orti via Getty Images

படக்குறிப்பு,சிந்து சமவெளி நாகரிகம் மிகவும் மேம்பட்டது என்றும், பண்டைய எகிப்து மற்றும் பண்டைய மெசபடோமியா காலத்திலேயே இருந்ததாகவும் நம்பப்படுகிறது.

கட்டுரை தகவல்

  • டெய்சி ஸ்டீபன்ஸ்

  • பிபிசி உலக சேவை

  • 31 மார்ச் 2026, 04:50 GMT

    புதுப்பிக்கப்பட்டது 31 மார்ச் 2026, 04:56 GMT

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

செங்கலால் கட்டப்பட்ட அடுக்குமாடி வீடுகள், சீரான தெருக்கள் மற்றும் கழிப்பறைகளைச் சுத்தப்படுத்தும் வசதியுடன் கூடிய நவீன வடிகால் அமைப்பு.

இவை உங்களுக்குப் பரிச்சயமானதாகத் தோன்றுகிறதா?

இது ஒரு நவீன நகரத்தைப் போலத் தோன்றலாம், ஆனால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்த பண்டைய சிந்து சமவெளி நாகரிகத்தின் நகரங்கள் இப்படித்தான் வடிவமைக்கப்பட்டிருந்தன.

சிந்து சமவெளி நாகரிகம் மிகவும் மேம்பட்டது என்றும், பண்டைய எகிப்து மற்றும் பண்டைய மெசபடோமியா காலத்திலேயே இருந்ததாகவும் நம்பப்படுகிறது.

இருப்பினும் இதைப் பற்றி நாம் மிகக் குறைவாகவே அறிந்துள்ளோம்.

சிந்து சமவெளி நாகரிகம் ஒரு மர்மமாகவே நீடிக்கிறது.

அந்த நாகரிகத்தின் எழுத்து வடிவம் இன்னும் கண்டறியப்படாததே இதற்கு ஒரு காரணம் என்றும், அன்றைய காலகட்டத்தின் பிற சமூகங்களை விட சிந்து சமவெளி நாகரிகம் மிகவும் சமத்துவம் மிக்கதாக இருந்திருக்கலாம் என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

சிந்து சமவெளி நாகரிக மக்கள் யார்?

சிந்து சமவெளி நாகரிகத்தின் வளர்ச்சியடைந்த காலகட்டம் கி.மு. 2600 முதல் கி.மு. 1900 வரை நீடித்தது. இருப்பினும், அதற்கும் முன்பே, அதாவது சுமார் கி.மு. 4000 வாக்கில் சிந்து சமவெளி நாகரிகம் வளரத் தொடங்கியதாக பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் லண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் விரிவுரையாளர் முனைவர் சங்கரலிங்கம் ரமேஷ் கூறுகிறார்.

சிந்து சமவெளி நாகரிகம் தற்போதைய பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் பகுதிகளில் பாயும் சிந்து நதியை மையமாகக் கொண்டு அமைந்திருந்தது.

இது கிராமப்புற விவசாய சமூகங்களையும், 1,400-க்கும் மேற்பட்ட நகரங்களையும் கொண்டிருந்தது. அவற்றில் ஹரப்பா மற்றும் மொஹஞ்சதாரோ ஆகியவை மிகப்பெரிய நகரங்களாகும்.

சிந்து சமவெளி நாகரிகம், மொஹஞ்சதாரோ, ஹரப்பா

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,மொஹஞ்சதாரோ

சுமார் 80,000 குடியிருப்புகளில் 10 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட இந்த நாகரிகம், பண்டைய எகிப்து மற்றும் பண்டைய மெசபடோமியா ஆகிய இரண்டையும் விடப் பெரிதாக இருந்தது என்று ரமேஷ் கூறினார்.

குறிப்பிட்ட சில காரணங்களுக்காக இந்த நாகரிகம் தனித்துவ மிக்கதாகக் கருதப்படுகிறது .

1. மேம்பட்ட நகர்ப்புற திட்டமிடல்

செங்கற்களைக் கொண்டு வீடுகளைக் கட்டிய முதல் நாகரிகங்களில் சிந்து சமவெளியும் ஒன்று எனவும், அவர்கள் தரப்படுத்தப்பட்ட அளவுகளைப் பயன்படுத்தினார்கள் எனவும் ரமேஷ் கூறுகிறார்.

"நகரங்கள் நேரான தெருக்களுடன் செங்கோண வடிவில் அமைக்கப்பட்டிருந்தன" என்று அவர் கூறினார்.

மேலும், "அங்கு கிணறுகள் இருந்தன, வீடுகளில் கழிப்பறைகள் இருந்தன... ரோமானியர்களை விட 2,000 ஆண்டுகளுக்கு முன்பே அங்கு ஒரு கழிவுநீர் அமைப்பு இருந்தது"என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

இந்தக் கழிவுநீர் அமைப்பு மற்றும் அகழ்வாராய்ச்சியில் கண்டறியப்பட்ட குளியலறைகள், சிந்துசமவெளி நாகரிக மக்களுக்கு நோய்கள் பற்றிய விழிப்புணர்வு இருந்ததையும், "சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அளித்ததையும்" காட்டுவதாக ரமேஷ் கூறினார்.

சிந்து சமவெளி நாகரிகம், மொஹஞ்சதாரோ, ஹரப்பா

பட மூலாதாரம்,DEA / W Buss via Getty Images

படக்குறிப்பு,சிந்து சமவெளி நாகரிகத்தின் நகரங்கள் செங்கல் வீடுகளையும் நேர்க்கோட்டு தெருக்களையும் கொண்டிருந்தன.

நகர்ப்புறப் பகுதிகளின் அடர்த்தி, விநியோகச் சங்கிலி தளவாடங்களைச் சாத்தியமாக்கியதுடன், வணிகம் நடைபெறவும் வழிவகுத்தது.

"அவர்கள் பண்டைய மெசபடோமியாவுடன் வர்த்தகம் செய்தனர், குறிப்பாக மரம், மணிகள், செம்பு, தங்கம் மற்றும் பருத்தி ஆடைகள் போன்ற மூலப்பொருட்களை வர்த்தகம் செய்தனர்" என்று ரமேஷ் விளக்கினார்.

2. கூட்டாட்சி முறை

நகர்ப்புற பகுதிகளின் கட்டமைப்பு வேறு ஒரு விஷயத்தையும் வெளிப்படுத்துகிறது என ரமேஷ் கூறினார்.

"நகரங்கள் மற்றும் குடியிருப்புகளின் உள்கட்டமைப்பைப் பராமரிக்க, நன்கு செயல்படும் குடிமை நிர்வாக அமைப்பு அங்கு இருந்ததற்கான சான்று இது" என்று ரமேஷ் அதனை விளக்கினார்.

"அவர்களுடையது மிகவும் தனித்துவமான ஆட்சி முறையாக இருந்தது, இது அதிகாரத்தை ஒரு மையத்தில் குவிக்காமல் கூட்டுப் பொறுப்பாக இருந்தது. அங்கு அரண்மனைகள் அல்லது பிரபுக்கள் இருந்ததற்கான சான்றுகள் எதுவும் இல்லை"

இந்த முறை, சிந்து சமவெளி நாகரிகத்தை அக்காலத்தைச் சேர்ந்த பிற சமூகங்களிலிருந்து தனித்துக் காட்டுவதாக அவர் கூறினார்.

சிந்து சமவெளி நாகரிகம், மொஹஞ்சதாரோ, ஹரப்பா

பட மூலாதாரம்,Leemage/Corbis via Getty Images

படக்குறிப்பு,சிந்து சமவெளி தளங்களில் இருந்து இந்தச் சுடுமண் சிலை உட்பட பல பொருட்கள் அகழ்வாராய்ச்சி மூலம் கண்டெடுக்கப்பட்டுள்ளன, இருப்பினும் நாம் இன்னும் அறியாத விஷயங்கள் ஏராளம் உள்ளன.

இதுகுறித்து விளக்கிய ரமேஷ், "பண்டைய எகிப்து அல்லது மெசபடோமியா போல ஆடம்பரமான ஆட்சியாளர்களை மையமாகக் கொண்ட ஆட்சி அல்ல, மாறாக, ஆடம்பரமான ஆட்சியாளர்கள் மீது கவனம் செலுத்தாத ஆட்சி முறை சிந்து சமவெளியில் இருந்ததை தொல்லியல் அடையாளங்கள் சுட்டிக்காட்டுகின்றன. அங்கு பாரோக்கள், அரண்மனை, கோவில்கள் தெளிவாகக் காணப்பட்டன. ஆனால் இங்கு அவ்வாறு இல்லை"என்றார்.

மேலும், "அந்தப் பிராந்தியங்களில், அதிகாரம் ஒரு மையத்தில் குவிக்கப்பட்டிருந்தது. பிரம்மாண்டமான கட்டிடங்கள், அதிகாரத்துவ நூல்கள் மற்றும் அரச அடையாளங்கள் மூலம் அந்த அதிகாரம் வெளிப்படையாகத் தெரிந்தது"என்றும் விவரித்தார்.

3. சமத்துவமிக்க மற்றும் அமைதியான நாகரிகம்

சிந்து சமவெளியில் சில சமூகப் படிநிலைகள் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன, ஆனால் அக்காலத்தைச் சேர்ந்த பிற சமூகங்களை விட இது தெளிவற்றதாகவே உள்ளது.

"எகிப்து மற்றும் மெசபடோமியாவில் சமூகப் படிநிலைகளைக் கண்டறிவது எளிது. சிந்து சமவெளியில் வீடுகளின் அளவுகளில் வேறுபாடுகள் உள்ளன, ஆனால் அது பொதுவாக அவ்வளவு வெளிப்படையாகத் தெரிவதில்லை" என்று ரமேஷ் கூறினார்.

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் காயங்களுடன் கூடிய சில எலும்புக்கூடுகளைக் கண்டறிந்த போதிலும், அவர்கள் பிற சமூகங்களை விட ஒப்பீட்டளவில் அமைதியானவர்களாக இருந்ததாகச் சிலர் கருதுகின்றனர்.

"போர் தொடர்பான தெளிவான அடையாளங்கள் அங்கு மிகக் குறைவு, ஆயுதங்கள் நிறைந்த உயர்குடிச் சூழல்களும் ஒப்பீட்டளவில் குறைவு. பண்டைய அண்மை கிழக்குப் பகுதிகளுடன் ஒப்பிடும்போது, சில எலும்புக்கூடு மாதிரிகள் மண்டையோட்டு காயங்கள் குறைவாகவே இருப்பதைக் காட்டுகின்றன," என்று ரமேஷ் கூறினார்.

சிந்து சமவெளி நாகரிகம், மொஹஞ்சதாரோ, ஹரப்பா

பட மூலாதாரம்,AFP via Getty Images

படக்குறிப்பு,பண்டைய காலத்தின் பிற சமூகங்களுடன் ஒப்பிடுகையில், சிந்து சமவெளி நாகரிகத்தின் இடுகாடுகளில் கண்டறியப்பட்ட மண்டையோடுகளில் காயங்களின் விகிதம் குறைவாகவே உள்ளது.

இருப்பினும், அவர்கள் வன்முறையில் ஈடுபடவில்லை என்பது இதற்கு அர்த்தமல்ல என்றும், ஆதாரங்கள் கிடைக்காதது அந்தப் பொருட்கள் பாதுகாக்கப்படாததன் விளைவாக இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

"ஒரு சமூகம் தனது போர் முறைகளை நீடித்த நினைவுச்சின்னங்கள் மற்றும் நூல்கள் மூலம் வெளிப்படுத்தவில்லை என்றால் அல்லது அந்தப் பொருட்கள் கிடைக்கவில்லை என்றால், வன்முறை இருந்திருந்தாலும் கூட பிற்காலப் பார்வையாளர்களுக்கு மோதல்கள் குறித்த 'அடையாளம் ' குறைவாகவே கிடைக்கும்" என்று அவர் விளக்கினார்.

எஞ்சியிருக்கும் மர்மங்கள்

ஆனால் சிந்து சமவெளி நாகரிகத்தைப் பற்றி இன்னும் நாம் அறியாத விஷயங்கள் நிறைய உள்ளன.

அவற்றில் பெரும்பாலானவை இன்னும் அகழ்வாராய்ச்சி செய்யப்படாததே இதற்குக் ஒரு காரணம் என்கிறார் ரமேஷ்.

"மேற்கு இந்தியாவில் இன்னும் பல இடங்களைக் கண்டறிந்து வருகின்றனர். இந்த நாகரிகம் ஆப்கானிஸ்தான் வரை பரவியிருந்தது. அங்குள்ள சூழல் காரணமாக தற்போது அங்கு அதிக அளவில் அகழ்வாராய்ச்சி செய்ய முடியவில்லை" என்று அவர் கூறினார்.

அவர்கள் கட்டிய கட்டடங்களின் வகைகள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய முறைகளும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

"எகிப்து மற்றும் மெசபடோமியா ஆகியவை நீடித்த கற்கால நினைவுச்சின்னங்களை விட்டுச் சென்றுள்ளன. ஆனால் சிந்து சமவெளியினர் பெரும்பாலும் மண் செங்கற்கள் மற்றும் சுட்ட செங்கற்களைக் கொண்டே கட்டினார்கள்" என்று ரமேஷ் விவரித்தார் .

ஆனால் மற்றொரு காரணமும் உண்டு. அதாவது, பண்டைய மெசபடோமியாவின் ஆரம்பகால எழுத்து முறைகளில் ஒன்றான கியூனிஃபார்ம் போலல்லாமல், சிந்து சமவெளி எழுத்து முறையை நம்மால் இன்னும் புரிந்துகொள்ள முடியவில்லை.

சிந்து சமவெளி நாகரிகம், மொஹஞ்சதாரோ, ஹரப்பா

பட மூலாதாரம்,DEA / G Nimatallah via Getty Images

படக்குறிப்பு,சிந்து சமவெளி முத்திரைகளில் கண்டறியப்பட்ட எழுத்து வடிவத்தை இன்னும் கண்டறியப்படவில்லை.

சிந்து சமவெளி தளங்களில் உள்ள முத்திரைகளில் இந்த எழுத்து வடிவம் கண்டறியப்பட்டுள்ளது.

இது "இன்னும் புரிந்துகொள்ளப்படாத, ஆனால் அதிக முறை புரிந்துகொள்ள முயற்சி செய்யப்பட்ட எழுத்து வடிவம்" என்று மும்பையில் உள்ள டாட்டா இன்ஸ்டிட்யூட் ஆப்ஃ பண்ட்மெண்டல் ரிசர்ச் நிறுவனத்தைச் சேர்ந்த முனைவர் நிஷா யாதவ் நகைச்சுவையாகக் கூறுகிறார்.

"ஒவ்வொரு 10 நாட்களுக்கு ஒருமுறை, ' நான் சிந்து சமவெளி எழுத்துகளைக் கண்டறிந்துவிட்டேன்' என்று எனக்கு ஒரு மின்னஞ்சல் வரும்" என்கிறார் அவர்.

ஆனால் இதுவரை எந்த விளக்கத்திற்கும் அறிவியல்பூர்வமான ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை.

இந்த எழுத்து வடிவம் மிகவும் சுருக்கமானது என்பதால் இதை புரிந்துகொள்வது கடினம் என்று நிஷா யாதவ் கூறுகிறார்.

பொதுவாக ஒரு முத்திரையில் ஐந்து முதல் 14 குறியீடுகள் மட்டுமே உள்ளன. இதற்கான 'ரோசெட்டா ஸ்டோன்' போன்ற ஒரு பொருள் இதுவரை கிடைக்கவில்லை. ரோசெட்டா ஸ்டோன் என்பது எகிப்திய ஹைரோகிளிஃபிக், எகிப்திய டெமோடிக் மற்றும் செம்மொழி கிரேக்கம் ஆகிய மூன்று எழுத்து வடிவங்களில் பொறிக்கப்பட்ட ஒரு அரசாணையாகும். இது ஹைரோகிளிஃபிக்ஸை (சித்திர எழுத்துகளை) வாசிப்பதற்கு முக்கியமானதாக அமைந்தது.

ஆனால் கணினி மாதிரியைப் பயன்படுத்தி குறியீடுகளில் உள்ள வடிவங்களை ஆராய்ந்த நிஷா யாதவின் சொந்த ஆராய்ச்சி, இதில் தொடரியல் சான்றுகளையும், அதாவது வாக்கிய அமைப்பை நிர்வகிக்கும் விதிகள் மற்றும் எழுத்துகளில் உள்ள "அடிப்படை தர்க்கத்தையும்" கண்டறிந்துள்ளது.

"அதை நம்மால் படிக்க முடிந்தால்... அது கதவுகளைத் திறக்கும் ஒரு திறவுகோல் போல இருக்கும்," என்று கூறிய நிஷா யாதவ் , "ஒவ்வொரு கதவு வழியாகவும் அறிவு வெள்ளம் பாயும், அது அந்த நாகரிகத்தின் பல்வேறு அம்சங்களைப் பற்றிய மிக முக்கியமான விஷயங்களை நமக்குத் தெரிவிக்கும்"என்றும் குறிப்பிட்டார்.

இந்த எழுத்து வடிவம் சிந்து சமவெளி நாகரிகத்தின் நம்பிக்கைகள் மற்றும் உலகக் கண்ணோட்டம் பற்றிய தடயங்களைத் தரக்கூடும் என்றும், அவர்களின் வர்த்தகம் மற்றும் முத்திரைகளின் பங்கு குறித்தும் மேலும் தெளிவுபடுத்தக்கூடும் என்று நிஷா யாதவ் கூறினார்.

சிந்து சமவெளி நாகரிகம், மொஹஞ்சதாரோ, ஹரப்பா

பட மூலாதாரம்,Angelo Hornak/Corbis via Getty Images

படக்குறிப்பு,சிந்து சமவெளி எழுத்து முறையை கண்டறிவதன் மூலம், அந்த நாகரிகத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறை எப்படி இருந்தது என்பது பற்றிய பல தகவல்களை நாம் பெற முடியும்.

அவர்களுக்கு என்ன ஆனது?

சிந்து சமவெளி நாகரிகத்தின் வீழ்ச்சிக்குக் கூறப்படும் முக்கியக் கோட்பாடுகளில் ஒன்று சுற்றுச்சூழல் மாற்றமாகும்.

"கி.மு. 1900 வாக்கில் அந்த இடங்கள் கைவிடப்படத் தொடங்கின. இதற்குக் காரணம் பருவமழை முறையில் ஏற்பட்ட மாற்றம் என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் காலநிலை மாற்ற நிபுணர்கள் கருதுகின்றனர்" என்று ரமேஷ் கூறினார்.

மொகஞ்சதாரோவில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில், வெள்ளத்தின் பாதிப்பைக் குறைக்க மக்கள் முயற்சி செய்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதைப் புரிந்துகொள்வது நவீன சமூகங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று ரமேஷ் கருதுகிறார். ஏனெனில், இமயமலையில் உள்ள பனிப்பாறைகள் இன்று வேகமாக உருகினால், வரலாறு மீண்டும் திரும்பக்கூடும்.

அவரைப் பொறுத்தவரை, சிந்து சமவெளி நாகரிகத்தின் ஒருமித்த கருத்து அடிப்படையிலான ஆட்சி முறை, நீண்ட கால சிந்தனைக்கு வழிவகுத்த போதிலும், அவர்களைக் காப்பாற்ற அது போதுமானதாக இல்லை. ஆனால் நவீன சமூகங்களுக்கு அது உதவக்கூடும்.

"உண்மையில் என்ன நடக்கிறது என்பதைக் கண்டறியும் தொழில்நுட்பம் அன்று அவர்களிடம் இல்லை" என்று கூறிய அவர், ஆனால் நம்மிடம் அந்தத் தொழில்நுட்பத் திறன் உள்ளது. நமது நாகரிகம் நிலைத்திருப்பதை உறுதி செய்ய, நமது தொழில்நுட்பத்தை நாம் மிகவும் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்த வேண்டும்"என்று குறிப்பிட்டார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/clydqm1r825o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.