Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மீண்டும் யுத்தம் ஆரம்பமானதற்கு பொறுப்பாளிகள் வல்லரசுகளே

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் யுத்தம் ஆரம்பமானதற்கு பொறுப்பாளிகள் வல்லரசுகளே

[18 - January - 2008]

-விஜய டயஸ்-

இலங்கை அரசாங்கம், இரண்டு ஆண்டுகளாக பிரகடனப்படுத்தப்படாத யுத்தத்தை முன்னெடுத்த பின்னர், தமிழீழ விடுதலைப் புலிகளுடன் 2002இல் கைச்சாத்திட்டுக்கொண்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையை இரத்து செய்வதற்கான அறிவித்தலை ஜனவரி 2ஆம் திகதி விடுத்தது. இந்த முடிவானது புலிகளை இராணுவ ரீதியில் அழிப்பதை இலக்காகக் கொண்ட மோதல்களை மேலும் உக்கிரப்படுத்துவதற்கு களம் அமைப்பதோடு சமாதானப் பேச்சுக்களுக்கும் மற்றும் 25 ஆண்டுகால மோதல்களுக்கு பேச்சுவார்த்தை மூலமான தீர்வொன்றைக் காண்பதற்குமான வாய்ப்புக்கு விளைபயனுடன் முடிவுகட்டுகிறது.

அரசாங்கம் கடந்த 02 ஆம் திகதி அதன் முடிவை கொழும்பில் உள்ள நோர்வே தூதரகத்திற்கு அறிவித்தது. யுத்த நிறுத்தத்தை மேற்பார்வை செய்த இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவுக்கு தலைமைவகித்து சமாதான முன்னெடுப்புகளுக்கும் அனுசரணை செய்த நோர்வே, இப்போது நாட்டை விட்டு வெளியேறுவதற்காக பொதிகளைத் தயார்செய்து கொண்டிருக்கின்றது. ஜனவரி 16ஆம் திகதியுடன் யுத்த நிறுத்தம் உத்தியோகபூர்வமாக முடிவுக்கு வந்தது.

வட இலங்கையில் ஏற்கனவே மோதல்கள் உக்கிரமடைந்துள்ளன. கடந்த ஐந்து நாட்களில் வவுனியா, மன்னார் மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் 94 புலி உறுப்பனர்களை கொன்றதாகவும் நான்கு படையினரை இழந்திருப்பதாகவும் இராணுவம் கூறிக்கொள்கின்றது. உயிரிழந்தவர்களில் ஒருவர் புலிகளின் புலனாய்வுத்துறை தலைவர் எனக் கூறப்படும் கேனல் சார்ள்ஸ் என்றழைக்கப்படும் சண்முகநாதன் ரவிசங்கராவார். தேசத்தைக் கட்டியெழுப்பும் இலங்கை அமைச்சர் தா.மு. தசநாயக்க, கொழும்புத் தலைநகருக்கு அருகில் அவரது வாகனத்தை இலக்காகக் கொண்ட குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலை பெரும்பாலும் புலிகளே மேற்கொண்டிருக்கக் கூடும்.

இலங்கை ஊடகங்களின்படி, ஜனவரி 2இல் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் யுத்த நிறுத்தத்தை இரத்து செய்யும் பிரேரணையை பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்கவே முன்வைத்துள்ளார். அன்றைய தினம் நடந்த ஒரு குண்டு வெடிப்புக்கு உடனடியாக புலிகளின் மீது குற்றம் சுமத்தப்பட்டது. விக்கிரமநாயக்கவால் இந்த குண்டுவெடிப்பு சுட்டிக்காட்டப்பட்டதற்கும் மேலாக, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது அரசாங்கமும் இந்த முடிவுக்கு உண்மையான விளக்கங்கள் எதையும் வழங்கவில்லை. அரசாங்கப் பேச்சாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா, யுத்த நிறுத்தம் இனிமேலும் நடைமுறைக்குரியதல்ல என சாதாரணமாக கூறிவிட்டார்.

யுத்த நிறுத்தம் கடதாசியில் மட்டுமே உள்ளது மற்றும் அது வேடிக்கையானது என டிசம்பர் 30இல் வெளியான சண்டே ஒப்சேவர் பத்திரிகைக்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதியின் சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோதாபய ராஜபக்‌ஷ, யுத்த நிறுத்தம் கவிழ்ந்தமைக்கு புலிகள் மீது வெளிப்படையாக குற்றஞ்சாட்டினார். தனது சகோதரர் ஜனாதிபதியான போது, யுத்த நிறுத்த உடன்படிக்கை 3,000 தடவைகள் மீறப்பட்டுள்ள தோடு புலிகள் செய்தது என்ன என்பது அனைவருக்கும் தெரியும். அவர்கள் சமாதானத்தை நாடவேயில்லை. அவர்கள் செய்தது எல்லாம் யுத்த நிறுத்த காலத்தில் தமது இராணுவத்தையும் மற்றும் தாக்குதல் திறனையும் பலப்படுத்திக்கொள்ள நடவடிக்கை எடுத்ததே, என பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்திருந்தார்.

யதார்த்தத்தில், யுத்தநிறுத்த உடன்படிக்கையை கிழித்தெறிய அரசாங்கம் எடுத்த முடிவு என்பது, கடந்த இரண்டு ஆண்டுகளாக அது யுத்தத்தை நாடியதால் குவிந்துவந்துள்ள சமூக மற்றும் அரசியல் பதட்ட நிலைமைகளுக்கான அதன் பிரதிபலிப்பே ஆகும். சீரழிந்துவரும் வாழ்க்கை நிலைமைகள் சம்பந்தமாக வளர்ச்சி கண்டுவரும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகளை எதிர்கொண்ட ஜனாதிபதி இராஜபக்ஷ, புலிகளுக்கு எதிரான மோதல்களை உக்கிரமாக்கியதோடு உழைக்கும் மக்களை பிளவுபடுத்துவதன் பேரில் தமிழர் விரோத உணர்வுகளை கிளறிவிட்டதுடன் அடக்குமுறை மற்றும் பொலிஸ்- அரச நடைவடிக்கைகளை நாடுவதையும் நியாயப்படுத்தினார்.

ஜனாதிபதி ராஜபக்‌ஷவின் புதிய வரவுசெலவுத் திட்டத்தைச் சூழ்ந்துகொண்ட கூர்மையான அரசியல் நெருக்கடிகள் யுத்த நிறுத்தத்தை இரத்து செய்வதற்கான உடனடி தூண்டுதலாக இருந்தது. இந்த வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்புச் செலவு 167 பில்லியன் ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததை விட மூன்று மடங்காகும். யுத்தத்திற்கு செலவிடுவதற்காக மேலும் பொரு ளாதார சுமைகளை திணிப்பதற்கு எதிரான பரந்த எதிர்ப்பின் அழுத்தத்தின் கீழ் ஆட்டங்கண்டுபோன, அதன் சொந்த கூட்டணியின் உறுப்பினர்களே எதிர்ப்பதாக அச்சுறுத்திய நிலையில், டிசம்பர் 14இல் நடக்கவிருந்த வரவுசெலவுக்கான இறுதி வாக்கெடுப்பில் அரசாங்கம் தோல்வியடைவதற்கான வாய்ப்பை எதிர்கொண்டது.

வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்புக்கு சில நாட்களுக்கு முன்னர் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்தரப்புக்கு மாறியது. ஸ்ரீ.ல.சு.க. ஸ்தாபகத் தலைவரின் மகனான அனுர பண்டாரநாயக்கவின் இராஜிநாமாவில் வெளிப்பட்டவாறு ராஜபக்ஷவின் சொந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களே எதிர்த்தரப்புக்கு மாறுவதற்குத் தாயாராகிக் கொண்டிருந்ததாக அறிவிக்கப்பட்டது. அதே சமயம், ஆளும் கூட்டணியின் பங்காளியாக இருக்காமல் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் சிங்கள அதிதீவிரவாத மக்கள் விடுதலை முன்னணியும் (ஜே.வி.பி.), கிராமப்புற ஏழைகள் மத்தியில் தமது ஆதரவை பெருக்கிக்கொள்வதற்காக வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கப் போவ தாக சமிக்ஞை செய்தது.

எவ்வாறெனினும், கடைசி நிமிடத்தில், ஜே.வி.பி. ஜனாதிபதியின் இன்னுமொரு சகோதரரான பசில் ராஜபக்ஷவுடன் பேசிய பின்னர் வாக்களிப்பை புறக்கணித்ததோடு வரவு செலவுத் திட்டம் நிறைவேற அனுமதித்தது. அந்த பேச்சுவார்த்தையின் உள்ளடக்கம் வெளியிடப்படாத அதேவேளை, ஒட்டு மொத்த யுத்தத்தை முன்னெடுத்து புலிகளை அழிக்காமைக்காக அரசாங்கத்தை விமர்சித்து வந்த ஜே.வி.பி., தொடர்ச்சியாக நான்கு கோரிக்கைகளை முன்வைத்தது. அந்த கோரிக்கைகள் அனைத்தும் வரவு செலவுத் திட்டத்தின் தாக்கத்தை சீர்செய்வதற்குப் பதிலாக, யுத்தத்தை உக்கிரமாக்குவதுடன் தொடர்புபட்டவையாகும். யுத்தநிறுத்தத்தை இரத்து செய்தல், இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவை வெளியேற்றுதல் ஆகிய இரு மிகவும் குறிப்பிடத்தக்க கோரிக்கைகள் இப்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. ஏனைய சிங்கள பேரினவாதக் கும்பல்களைப் போல், நோர்வே மற்றும் கண்காணிப்புக் குழுவும் புலிகளுக்கு சார்பாக நடந்துகொள்கின்றன என்ற தமது குற்றச்சாட்டின் அடிப்படையில் கசப்பான விமர்சனங்களை ஜே.வி.பி. யும் முன்வைத்தது.

நீண்டகால செயற்பாடு

யுத்த நிறுத்தம் முறிந்து போனமை, தமது பிற்போக்கு யுத்தத்திற்கு முடிவுகட்டுவதற்கு அரசியல் ஸ்தாபனத்தின் எந்தவொரு பகுதியும் இலாயக்கற்றது என்பதையே கோடிட்டுக் காட்டுகிறது. 2000ஆம் ஆண்டில் இராணுவம் புலிகளிடம் பெரும் பின்னடைவுகளை சந்தித்த பின்னரும் நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக 2001இல் பொருளாதாரம் கீழ்நோக்கிய வளர்ச்சியை கண்ட பின்னருமே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி 2002 பெப்ரவரியில் யுத்த நிறுத்தத்தைக் கைச்சாத்திட்டது. செப்டெம்பர் 11 அன்று அமெரிக்காவில் நடந்த தாக்குதலையடுத்து, புஷ் நிர்வாகத்தின் பயங்கரவாதத்தின் மீதான யுத்தத்தை தமது நிபந்தனைகளின்படி பயங்கரவாத புலிகளை பேச்சுவார்த்தை மேசைக்குத் தள்ளும் சிறந்த வாய்ப்பாக ஆளும் தட்டின் பகுதிகள் கண்டன. உடனடி வெற்றியாக, ஷ்ரீ.ல.சு.க. தலைமையிலான அரசாங்கம் கவிழ்ந்து ஐ.தே.க.வும் அதன் பங்காளிகளும் பொதுத் தேர்தலில் வென்றதோடு சமாதானப் பேச்சுக்களின் முன்னோடியாக யுத்த நிறுத்தம் கைச்சாத்திடப்பட்டது.

புலிகளுடனான அதிகாரப் பரவலாக்கல் கொடுக்கல் வாங்கல்களுக்கான உந்துதல் என்பன சாதாரண உழைக்கும் மக்கள் மீதான யுத்தத்தின் தாக்கத்தையிட்டு ஏற்பட்ட கவலையினால் உருவானது அல்ல. அதற்கு அப்பால், 1983இல் யுத்தத்தை முன்னெடுத்தமைக்குப் பொறுப்பான ஐ.தே.க., பெரும் வர்த்தகத் தட்டினரைப் பிரதிநிதித்துவம் செய்தது. இந்தப் பெரும் வர்த்தகத் தட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஊள்ளீர்ப்பதற்கும் மற்றும் தெற்காசியாவில், குறிப்பாக இந்தியாவில், அரும்புவிட்டுக் கொண்டிருக்கும் பொருளாதார அபிவிருத்தியுடன் இலங்கையையும் இணைப்பதற்கும் இந்த யுத்தம் ஒரு தடையாக இருப்பதாகக் கணித்தன. ஆயினும், சுதந்திரத்தில் இருந்தே இலங்கை முதலாளித்துவம் தமிழர் விரோத பேரினவாதத்தை நாடுவதிலேயே தங்கியிருக்கின்ற நிலையில், ஆரம்பத்திலிருந்தே ஆளும் அரசியல் வழிமுறையுடன் சமாதானப் பேச்சுக்கள் மோதிக்கொண்டன. பேச்சுவார்த்தைகளில் புலிகளின் நிபந்தனைகளுக்கு சரணடைவதன் மூலம் தேசியப் பாதுகாப்பை கீழறுப்பதாகவும் தேசத்தைப் பிளவுபடுத்துவதாகவும் குற்றஞ்சாட்டிய ஷ்ரீ.ல.சு.க. வின் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, இராணுவ உயர் மட்டத்தினர் மற்றும் ஜே.வி.பி. யினதும் தாக்குதல்களை ஐ.தே.க. உடனடியாக எதிர்கொண்டது.

ராஜபக்‌ஷ 2005 நவம்பரில் நடந்த ஜனாதிபதி தேர்தலில், ஜே.வி.பி. மற்றும் இன்னுமொரு சிங்கள அதிதீவிரவாத கட்சியான ஜாதிக ஹெல உறுமயவுடனும் அணிசேர்ந்து ஒரு குறுகிய வெற்றியைப் பெற்று விக்கிரமசிங்கவை தோற்கடித்தார். மஹிந்த சிந்தனை என பெயரிடப்பட்டிருந்த அவரது தேர்தல் விஞ்ஞாபனம், யுத்த நிறுத்த உடன்படிக்கையை மீளாய்வு செய்தல் மற்றும் இராணுவத்தை பலப்படுத்துதல் உட்பட ஜே.வி.பி. யின் பல கோரிக்கைகளை இணைத்துக்கொண்டிருந்தது. ராஜபக்‌ஷ சமாதானத்தை விரும்புவதாகக் கூறிக்கொள்ளும் அதேசமயம், அவரது வேலைத்திட்டம் புலிகளுக்கு எதிரான புதுப்பிக்கப்பட்ட யுத்தத்திற்கான தெளிவான தயாரிப்பாக இருந்தது.

சமாதான முன்னெடுப்புகள் என சொல்லப்படுவதை மேற்பார்வை செய்யும் பெரும் வல்லரசுகளின் ஆதரவை தக்கவைத்துக்கொள்வதன் பேரில் அரசாங்கம் யுத்தநிறுத்தத்திற்கு பெயரளவில் தொடர்ந்தும் கட்டுப்பட்டிருந்தது. திடீரென யுத்தத்திற்குத் திரும்புவது வெகுஜன எதிர்ப்பை கிளறிவிடும் என்பதையிட்டும் ராஜபக்ஷ கவனமாக இருந்தார். அதே சமயம், இராணுவத்தின் மீதான பிடி கட்டவிழ்த்துவிடப்பட்டதோடு ஏறத்தாழ உடனடியாகவே ஆத்திரமூட்டல்கள் தொடங்கின. கிழக்கு நகரான மட்டக்களப்பில் 2005ஆம் ஆண்டு நத்தார் பண்டிகை நள்ளிரவு பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த போது புலிகளுக்கு சார்பான பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டார். 2006 ஜனவரியில், தமது பல்கலைக்கழக தேர்வுப் பரீட்சையில் சித்தியெய்திய மகிழ்ச்சியுடன் இருந்த ஐந்து தமிழ் இளைஞர்கள் திருகோணமலையில் வைத்து படுகொலை செய்யப்பட்டனர். இந்த இரு விவகாரங்களிலும், சூழ்நிலையானது இராணுவத்தினதும் அதனுடன் சேர்ந்து இயங்கும் தமிழ் துணைப்படை குழுவினதும் தொடர்பை பலமாக சுட்டிக்காட்டின.

சமாதான முன்னெடுப்புகளுக்கு அனுசரணையளித்த இணைத்தலைமை நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் மற்றும் நோர்வேயும் சமாதானப் பேச்சுக்களுக்கு புத்துயிரளிக்க எடுத்த முயற்சிகளும் விரைவில் இக்கட்டான நிலைக்குள் தள்ளப்பட்டது. 2006 பெப்ரவரியில் ஜெனீவாவில் நடந்த ஒரு சுற்றுப் பேச்சுவார்த்தைகளும், யுத்த நிறுத்த உடன்படிக்கையை திருப்பி எழுதும் அர சாங்கத்தின் கோரிக்கையின் பிரதிபலனாக, புலிகள் பேச்சுக்களில் இருந்து வெளியேறுவதாக அச்சுறுத்திய போது ஏறத்தாழ அது கவிழ்ந்தே போனது. இரண்டு மாதங்களின் பின்னர், யுத்தநிறுத்தத்தை கடைப்பிடிப்பதை மீளாய்வு செய்வதற்காக ஒஸ்லோவில் நடக்கவிருந்த பேச்சுவார்த்தையும், அரசாங்கம் அதன் பிரதிநிதிகள் குழுவில் ஒரு அமைச்சரவை அமைச்சரைக் கூட அனுப்பாததன் மூலம் அக்கூட்டத்தை விளைபயனுடன் கீழறுத்ததை அடுத்து, அந்தப் பேச்சுவார்த்தை தொடங்கும் முன்னமே தோல்விகண்டது. அதே சமயம், புலிகளை பலவீனப்படுத்தும், தமிழ் மக்களை அச்சுறுத்தும் மற்றும் புலிகளை எதிர்ச்செயலாற்றத் தூண்டுவதையும் இலக்காகக் கொண்ட இரகசிய ஆத்திரமூட்டல் யுத்தத்தை இராணும் தொடர்ந்தது.

பெரும் வல்லரசுகளின், குறிப்பாக வாஷிங்டனின் மௌனமான ஆதரவால் ராஜபக்ஷ மேலும் ஊக்கமடைந்தார். வாஷிங் டன் புலிகளிடம் இருந்து விட்டுக்கொடுப்புகளை கோரிய அதே வேளை, இலங்கை இராணுவத்தின் நடவடிக்கைகள் மீது குருட்டுப் பார்வையை செலுத்தியது. புஷ் நிர்வாகத்தின் அழுத்தத்தின் கீழ், ஐரோப்பிய ஒன்றியமும் 2006 மே மாதம் புலிகளை பயங்கரவாத அமைப்பாக உத்தியோகபூர்வமாக முத்திரைகுத்தி, ஐரோப்பாவில் உள்ள தமிழ் புலம்பெயர்ந்தவர்கள் மத்தியில் புலிகளுக்கு இருந்த கணிசமான அரசியல் மற்றும் நிதி ஆதரவுக்கு குழிபறித்தது.

(தொடரும்)

http://www.thinakkural.com/news/2008/1/18/...s_page44282.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.