Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆசியா நோக்கி திரும்பும் உலகின் கவனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆசியா நோக்கி திரும்பும் உலகின் கவனம்

3/16/2008 9:30:14 AM

வீரகேசரி வாரவெளியீடு

- கொசோவா மேற்கொண்ட சுதந்திரப் பிரகடனம் தொடர்பான ஆரவாரங்கள் அடங்குவதற்கு இடையில் மேற்குலகம் தமது நேட்டோ கூட்டணியில் பல்கன் நாடுகளில் மூன்றை இணைத்துக் கொள்வதற்கான அடுத்தகட்ட முயற்சிகளில் இறங்கியுள்ளன. அல்பேனியா, குறோசியா மற்றும் மசிடோனியா ஆகிய நாடுகளை நேட்டோ கூட்டணியில் இணைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

கொசோவாவின் சுதந்திரத்துடன் பல்கன் பிராந்தியத்தில் ஏறத்தாள முடிவுக்கு வரும் மேற்குலகத்தின் பூகோள அரசியல் தற்போது ஆசியக் கண்டத்தை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது. சீனாவின் அதிகாரத்தின் கீழிருந்து வரும் தாய்வான் தன்னை ஒரு முழுமையான சுதந்திர நாடாக ஐ.நா.வின் உதவியுடன் எதிர்வரும் 22 ஆம் திகதி பிரகடனப்படுத்தலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. பசுபிக் கடலின் எல்லையில் அமைந்துள்ள இந்த சிறிய தீவுக்கு அமெரிக்காவினதும், மேற்குலகத்தினதும் ஆதரவுகள் எப்போதும் உண்டு. சீனா இதனை வன்மையாக எதிர்க்கின்றபோதும் அந்த எதிர்ப்பின் தாக்கம் எந்தளவிற்கு இருக்கும் என்பதை கொசோவாவின் சுதந்திரப் பிரகடனத்தின்போது ரஷ்யா காட்டிய எதிர்ப்பில் இருந்து புரிந்து கொள்ளலாம்.

சீனாவின் ""ஒரே சீனா'' என்ற தத்துவம் பல சீனாக்களை உருவாக்கவே வழிவகுக்கும் என கடந்த ஆண்டு ஆசியாவின் முன்னணி ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் தாய்வானின் அதிபர் சென் சூய்பியான்ஸ் தெரிவித்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால் தாய்வானின் இந்த நகர்வை மிக அதிகளவில் எதிர்க்கும் நாடாக இலங்கை மாறியுள்ளமை கவனிக்கத்தக்கது. தாய்வான் ஒரு பூரண சுதந்திர நாடாக தன்னை ஐ.நா.வில் பிரகடனப்படுத்திக் கொள்வதைத் தாம் எதிர்ப்பதாகவும், "ஒரே சீனா' என்ற சீனாவின் கொள்கையைத் தாம் ஆதரிப்பதாகவும் இலங்கையின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு சீனா அதிகம் இராணுவ ஒத்துழைப்புக்களை வழங்கி வரும் நாடு என்பது ஒருபுறம் இருக்க, பல்கன் பிராந்தியத்தில் மேற்குலகம் கடைப்பிடித்து வந்த பிரித்து சேர்க்கும் உத்திகள் ஆசிய கண்டத்திற்கும் பரவும் அபாயம் உள்ளதை இலங்கை தற்போது வலுவாக உணர ஆரம்பித்துள்ளது. அதுதான் வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையின் பிரதான காரணம்.

கொசோவாவின் நிலை தொடர்பாக உலகில் ஏற்பட்ட இரு எதிரெதிர் முனைவுகள் போன்ற அழுத்தமான முனைவாக்கம் தாய்வான் விடயத்திலும் உண்டு. எனவே அதனை எதிர்ப்பது என்பது கடினமானது. பலம் கொண்ட நாடுகளை அல்லது அவற்றிற்கு துணைபோகும் தேசங்களை சிறிய தேசங்களாக உடைப்பதன் மூலம் தமக்கு சார்பான சில நாடுகளையாவது அந்த பிராந்தியங்களில் உருவாக்க முடியும் என்பது மேற்குலகத்தின் தற்போதைய புதிய தத்துவம். அதற்கேற்ப அது மெல்ல மெல்ல காய்களை நகர்த்தி வருகின்றது.

மேற்குலகத்தின் இந்த அணுகுமுறையானது உலக வரைபடத்தில் அண்மையில் பல மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளதை நாம் இலகுவாகப் புரிந்துகொள்ள முடியும். எனினும் உலகத்தில் ஏற்பட்டுவரும் இந்த முனைவாக்கம் இலங்கையின் நிலை தொடர்பாக இதுவரை தோன்றவில்லை. எனினும் அதற்கான தூரமும் அதிகம் இல்லை என்பதைத்தான் நடக்கும் சம்பவங்கள் மறைமுகமாக சுட்டிக்காட்டுகின்றன. உலகிலேயே மிகவும் மோசமாக மனித உரிமைகள் மீறப்படும் நாடுகளின் முதல் வரிசையில் இலங்கை உள்ளதாக அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அமைப்பான யு.என்.எச்.சி.ஆர் ஜெனிவாவில் நடத்திய கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான காரசாரமான விவாதங்கள் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நகர்வுகளும் இலங்கை அரசிற்கு சாதகமானதாக இல்லை.

இதேவேளை பல மனித உரிமை அமைப்புக்கள் இலங்கையில் மோசமடைந்துவரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான தமது நிலைகளை வெளிப்படையாகத் தெரிவித்து வருகின்றன. ஆனால் இந்த மனித உரிமை மீறல்களுக்கு எதிரான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படுமா என்பது இன்றுவரை நிச்சயமற்றதாகவே உள்ளது. மேற்குலகத்தை முற்றாக புறம் தள்ளி தமிழ் மக்களுக்கு எதிராக இந்தியாவே முற்று முழுதாக களமிறங்கியுள்ளதாகவும் , அதன் உச்சக்கட்டமாகவே இலங்கையின் இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு இந்தியா அதிக முக்கியத்துவம் கொடுத்து வரவேற்றுள்ளதாகவும் கருத்துப்பட விடுதலைப்புலிகள் அண்மையில் கடுமையான அறிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.

அதாவது இந்தியாவின் நடவடிக்கைகளை நேரடியாகக் கண்டிக்கும் நிலைப்பாட்டை அவர்கள் எடுத்துள்ளதையே அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. உலகிலேயே மிக மோசமான மனித உரிமைகள் மீறப்படும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னணியில் உள்ளதாக மனித உரிமை அமைப்புக்கள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றன. மேலும் இங்கு நடைபெறும் மனித உரிமை மீறல்களில் படையினரின் பங்குகளும் உண்டு எனவும் அவர்கள் தெரிவித்து வரும் வேளையில் படை அதிகாரி ஒருவருக்கு இந்தியா அதிக கௌரவம் கொடுத்து வரவேற்றுள்ளது பலரையும் ஆச்சரியமடைய வைத்துள்ளது.

மேலும் பெரும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் உலகின் முன்னணி வங்கிகளிடம் இருந்து கடந்த ஆண்டு இலங்கை அரசு பெற்றுக்கொண்ட 500 மில்லியன் டொலர் கடன் தொகைக்கு இணையான தொகையை படைத்துறை கடன் உதவியாக வழங்க ரஷ்யா முன்வந்துள்ளதும் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவின் அனுசரணையுடன்தான் ரஷ்யா களமிறங்கியுள்ளதா என்ற கேள்விகளும் எழாமல் இல்லை.

மேற்குலகத்தினதும், பிராந்திய வல்லரசுகளினதும் இந்த இழுபறிகளுக்கு இடையில் தமிழ் மக்கள் செறிவாக வாழும் பகுதிகளை நோக்கி படை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருவதுடன், அவர்களின் பிரதிநிதிகளும் திட்டமிட்ட வகையில் குறிவைக்கப்பட்டு வருகின்றனர். இந்த தொடர் நடவடிக்கைகளில் அண்மையில் இலக்கு வைக்கப்பட்டவர் நாடாளுமன்ற உறுப்பினர் கி. சிவநேசன் ஆவார். போர் தீவிரமடைந்த இரு வருட காலப்பகுதியில் படுகொலை செய்யப்பட்ட நான்காவது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் கி.சிவநேசன்.

2005 ஆம் ஆண்டு நத்தார்தின ஆராதனையின்போது மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டிருந்தார். அதன் பின்னர் இலங்கையில் தமிழ் மக்கள் கடத்தப்படுவது, படுகொலை செய்யப்படுவது தொடர்பாக கடுமையாக விமர்சித்து வந்த யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என். ரவிராஜ் கொழும்பில் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த ஆண்டின் முதல் இரு மாதங்களில் மேலும் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் கடத்தல்கள், படுகொலைகளுடன் தொடர்புடையவர்களை வெளிப்படையாக தெரிவிக்கப் போவதாக கூறி வந்த ஐ.தே.கவின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தி.மகேஸ்வரன் இந்த ஆண்டின் புதுவருட தினத்தன்று பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்திற்குள் வைத்து கொடூரமாக படுகொலை செய்யப்பட்டிருந்தார். அதன் பின்னர் தற்போது மீண்டும் மற்றுமொரு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சிவநேசன் கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். ஓமந்தையில் வழமையான சோதனை நடவடிக்கைகளை முடித்துக் கொண்டு மதியம் 12.30 மணியளவில் வன்னிக்கு பயணத்தை ஆரம்பித்த சிவநேசன் கனகராயன்குளத்திற்கு அண்மையில் நடைபெற்ற கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். இத் தாக்குதலில் அவரின் வாகனசாரதியும் கொல்லப்பட்டுள்ளார். அண்மைக்காலமாக இலங்கை இராணுவத்தின் ஆழஊடுருவும் சிறப்புப் படையினர் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளினுள் ஊடுருவித் தாக்குதல்களை நடத்தி வருவதுடன், பல தடவைகள் முயற்சிகளையும் மேற்கொண்டு வந்துள்ளனர். இந்த தாக்குதல்களில் பெருமளவில் பொதுமக்களும், பள்ளிச்சிறுவர்களும் கொல்லப்பட்டு வருவதும் தெரிந்தவையே.

கடந்த ஆண்டும் கிளிநொச்சியில் இருந்து கொழும்புக்கு திரும்பிக் கொண்டிருந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது கிளைமோர் தாக்குதல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. எனினும் அவர்களின் குறி தப்பிவிட்டது.

இவை தவிர வவுனியா மாவட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் கிசோர், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி ஆகியோர் மீதும் தாக்குதல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதில் ஜெயானந்தமூர்த்தியின் இல்லத்தின் மீது ஆர்.பி.ஜி தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

இந்த படுகொலைகளின் முக்கிய நோக்கங்கள் இரண்டாகவே இருக்க முடியும். ஒன்று தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்களை வெளிக்கொண்டு வருபவர்களின் குரல்வளையை நெரிப்பது. இரண்டாவது விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் அவர்களின் முக்கிய தளபதிகளையோ அல்லது தமிழ் மக்களின் முக்கிய பிரதிநிதிகளையோ குறிவைப்பதன் மூலம் தென்னிலங்கையில் போர் தொடர்பான ஒரு நம்பிக்கை அலையை ஏற்படுத்த முயல்வதாகும்.

ஆனால் தமிழ் மக்களும், அவர்களின் பிரதிநிதிகளும் தொடர்ச்சியாக திட்டமிட்ட வகையில் படுகொலை செய்யப்பட்டு வருவது குறித்து சர்வதேச சமூகமோ அல்லது உலகின் ஜனநாயகநாடு என தன்னைத் தம்பட்டம் அடித்துவரும் இந்தியாவோ அதிக முக்கியத்துவம் கொடுக்க முயலாதது வருத்தமானதே. இதனிடையே மன்னார் களமுனையில் மோதல்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அடம்பன் பகுதியை நோக்கி 58 ஆவது படையணி மூன்று முனைகளிலும், மடுவை குறிவைத்து 57 ஆவது படையணி மூன்று முனைகளிலும் நகர்வை மேற்கொண்டு வருகின்றன. செறிவான பீரங்கி, பல்குழல் உந்துகணை செலுத்தி தாக்குதல்கள் மற்றும் வான் தாக்குதல்களுடன் நடைபெற்று வரும் இந்த படை முன்நகர்வுகளை எதிர்த்து விடுதலைப்புலிகளும் பதில் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் கீரிசுட்டான் மற்றும் பாலைக்குழி ஆகிய பகுதிகளில் நடந்த மோதல்களில் 60 இற்கு மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டதாகவும், பெருமளவானோர் காயமடைந்துள்ளதாகவும் கடந்த செவ்வாய்க்கிழமை விடுதலைப்புலிகள் தெரிவித்திருந்தனர். மேலும் மன்னார் களமுனைகளில் விடுதலைப்புலிகளின் பாதுகாப்பு நிலைகளை ஊடறுத்து நகரமுற்பட்ட இராணுவத்தினரும், சிறப்பு படையினரும் தமது பொறி வெடிகளில் சிக்கி பெரும் இழப்புக்களை சந்தித்துள்ளதாகவும் விடுதலைப்புலிகள் கடந்த வியாழக்கிழமை தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் படைத்தரப்பு எதுவும் தெரிவிக்காத போதும், விடுதலைப்புலிகளின் பொறிவெடியில் சிக்கி லெப். கேணல் கீர்த்தி ரணவக்க கொல்லப்பட்டுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. இவர் களத்தில் மிகவும் திறமையாக செயற்பட்ட படை அதிகாரிகளில் ஒருவர் எனவும் அது மேலும் தெரிவித்துள்ளது. இராணுவத்தின் கவசத்தாக்குதல்படை பிரிவை சேர்ந்த ரணவக்க மன்னார் களமுனைகளில் காயமடையும் படையினரை துருப்புக்காவி கவச வாகனங்களின் உதவியுடன் அகற்றும் நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றி வந்தது குறிப்பிடத்தக்கது. இறக்கும் போது மேஜர் தரத்தில் இருந்த ரணவக்க பின்னர் லெப். கேணலாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

இது ஒரு குறுகிய போராக இருக்கப் போவதில்லை என்பதை வடபோர் முனை உணர்த்தி வருவதுடன், ஆசிய பிராந்தியத்தை நோக்கி திரும்பும் உலகின் கவனம், இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இருந்தே பல சரிவுகளை சந்தித்து வரும் உலக பொருளாதாரம் என எல்லா காரணிகளும் அரசின் திட்டங்களுக்கு அனுகூலமானதாக இல்லை. இந்த நிலையில், பூகோள அரசியலுக்காக உலக ஒழுங்கில் மாற்றத்தை ஏற்படுத்தி வரும் மேற்குலகமும், பிராந்திய வல்லரசுகளாக தம்மை தக்கவைக்க முயலும் ஆசிய நாடுகளும் ஒன்றாக இணைந்து தமிழ் இனத்தை முற்றாகப் புறம்தள்ள முயலுமா என்ற புதிருக்கான பதில் வெளிவரும் காலம் அதிக தூரமில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.