Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கே போனது என் அல்வா துண்டு?

Featured Replies

maze.jpg

வாழ்ந்து கெட்ட குடும்பம் என்று 'ச்சூ' கொட்டுகிறோம். அந்த குடும்பம் எப்படி, ஏன் வாழ்ந்தது? எங்கே சறுக்கி கெட்டது? என்று யாராவது யோசித்திருக்கிறோமா? யோசித்துப் பார்த்தால் தான் உண்மை புரியும். கிடைத்த வாய்ப்பை எண்ணி சிலாகித்து அந்த குடும்பத்தின் அப்போதைய உறுப்பினர்கள் திருப்திபட்டு இருப்பார்கள். அடுத்த வாய்ப்புக்கான தேடல் குறித்து சிந்தனை ஏதும் அவர்களுக்கு இருந்திருக்காது. புதிய மாற்றங்களுக்கான இடைவிடா தேடுதல் தான் அடுத்தக்கட்ட நகர்வுக்கு வழிவகுக்கும். மாற்றம், தேடுதல் குறித்து நகைச்சுவையாக, எளியமொழியில் அலசுகிறது ‘எங்கே போனது என் அல்வா துண்டு' என்ற புத்தகம்.

ஒரு இனிப்புக்கடையில் நான்கு ஜீவராசிகள் வாழுகிறது, வாசு - அரி என்ற இரண்டு எலிகளும், அச்சுபிச்சு - விவேக் என்ற இரண்டு குட்டியூண்டு மனிதர்களும் அவர்கள். அந்த இனிப்புக்கடையின் ஆறாம் எண் அறையில் பெட்டி பெட்டியாக, விதம்விதமாக அடுக்கிவைக்கப்பட்ட அல்வாதுண்டுகள் தான் அவர்களது வாழ்க்கை. தினமும் ஆறாம் எண் அறைக்கு வந்து அல்வாக்களை வயிறுமுட்டும் வரையில் தின்று அவர்களது வாழ்க்கை இனிமையாக கழிகிறது. “அல்வா துண்டுகள் சாப்பிடுவது எப்போதும் அலாதி இன்பமே!”

ஒரு நாள் திடீரென ஆறாம் எண் அறை காலியாகிக் கிடக்கிறது. நால்வரும் அதிர்ச்சி அடைகிறார்கள். இனி ஜீவனத்துக்கு என்ன செய்வது என்று தலைமீது கை வைத்து உட்கார்ந்துவிடுகிறார்கள். வாசு - அரி இரு எலிகளும் இனிப்புக்கடையின் வேறு அறை எதிலாவது அல்வாத்துண்டுகள் கிடைக்கும், தேடிப்பார்த்து சாப்பிடலாம் என்று தங்கள் தேடலை ஆரம்பிக்கின்றன. அச்சுபிச்சுவும், விவேக்கும் இந்த அறையிலேயே யாராவது இனிமேல் வந்து அல்வாத்துண்டுகளை அடுக்குவார்கள், அப்போது சாப்பிட்டுக்கொள்ளலாம் என்று அறையிலேயே தவம் கிடக்கிறார்கள். “எவ்வளவுக்கெவ்வளவு அல்வாத்துண்டு உங்களுக்கு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் அதை சேமித்து வைப்பதும்!”

பல அறைகளில் இடைவிடாது தேடி ஒன்பதாவது என் அறையில் வேறுரக அல்வாத்துண்டுகள் அடுக்கிவைக்கப்பட்டிருப்பதை வாசுவும், அரியும் காண்கிறார்கள். தங்கள் தேடுதலுக்கு பலன் கிடைத்தது குறித்து மகிழ்கிறார்கள். இங்கே அல்வாத்துண்டு காலி ஆனாலும் கூட அடுத்த தேடலுக்கு மனதளவில் ஆயத்தமாகிறார்கள். மாறாக ஆறாம் எண் அறையில் தங்கிவிட்ட அச்சுபிச்சு - விவேக் கோஷ்டி பட்டினியில் வாடுகிறது. புதிய அல்வாத்துண்டுகளை தேடுவதற்கு எந்த முனைப்பும் காட்டாமல் சோம்பேறித்தனமாக நாட்களை கடத்துகிறது. “நீ மாறவில்லையெனில் சுவடுகளே இல்லாமல் அழிந்துப் போவாய்!”

நீண்டநாட்களாக உணவில்லாமல் வாழும் அவலநிலை அச்சுபிச்சுவையும், விவேக்கையும் சூழ, புதிய அல்வாத்துண்டுகளை தேடுவோம் என்று விவேக் ஆலோசனை கூறுகிறான். புதிய அல்வாத்துண்டை தேட தான் தயாரில்லை, புதியதாக கிடைத்தாலும் அது ஏற்கனவே கிடைத்த அல்வாத்துண்டுக்கு இணையாகாது என்று கூறி அச்சுபிச்சு அந்த ஆலோசனையை நிராகரிக்கிறான். வேறுவழியில்லாமல் தனியாக தன் தேடுதலை தொடங்குகிறான் விவேக். பலமணி நேர அயராத தேடுதலுக்குப் பின்னரும் அவனால் அல்வாத்துண்டுகளை கண்டறிய இயலாததால் மனக்கிலேசம் அடைகிறான். எதிர்காலம் குறித்து அச்சம் கொள்கிறான். “நீ பயப்படவில்லையெனில் என்னவெல்லாம் செய்திருப்பாய்?”

இருப்பினும் தன்னால் எப்படியாவது அல்வாத்துண்டுகளை கண்டறிந்து வாழமுடியும் என்ற தன்னம்பிக்கையை தனக்கு தானே வளர்த்துக் கொள்கிறான். இதுவரை அவன் தேடாத புதிய இடங்களை தேடுகிறான். எந்தவொரு வாய்ப்பையும் அவன் தவறவிடுவதாக இல்லை. கண்ணில் பட்ட வழியிலெல்லாம் பயணிக்கிறான். பலநாட்களாக சோம்பேறித்தனமாக, உல்லாசமாக வாழ்ந்த வாழ்க்கைக்கும், அயராத தேடுதலில், உழைப்பில் கிடைக்கும் மகிழ்ச்சிக்கும் இடையில் இருக்கும் வேறுபாடுகளை கண்டறிகிறான். “பயத்தை தகர்த்து! முன்னேறுதலில் நீ சுதந்திரமாக உணர்வாய்!”

ஒருவாறாக ஏற்கனவே வாசுவும், அரியும் கண்டறிந்த அல்வாக்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஒன்பதாவது எண் அறையை கண்டறிகிறான் விவேக். வாசுவும், அரியும் இவனை மனமகிழ்ச்சியோடு வரவேற்கிறார்கள். பலநாள் பசி தந்த களைப்பும், ஓயாத உழைப்பு தந்த சோர்வும் காரணமாக ஏராளமாக உண்கிறான் விவேக். ஆறாம் எண் அறையில் அல்வாத்துண்டுகள் காலியான போதே தன் தேடுதலை ஆரம்பித்திருந்தால் இவ்வளவு அலைச்சல் ஏற்பட்டிருக்கிறாது என்பதை நினைத்துப் பார்க்கிறான். “எவ்வளவு சீக்கிரமாக பழசை உதறுகிறோமோ, அவ்வளவு சீக்கிரமாக புதுசு கிடைக்கும்!”

தன் நண்பன் அச்சுபிச்சுவும் இந்த அறைக்கு வந்தால் நன்றாக இருக்கும், அவன் வருவானா என்று ஏங்குகிறான் விவேக். இந்த அறையில் இருக்கும் அல்வாத்துண்டுகளும் ஒருநாள் திடீரென காணாமல் போகும். அப்போது தன் அடுத்தக்கட்ட நகர்வுக்கு தயாராகவேண்டும் என்று மனதளவில் உறுதிகொள்கிறான். எதுவுமே நிலையானதல்ல, மாற்றங்கள் வருவதும், அதனால் விளையும் விளைவுகளை எதிர்கொள்வதும் தான் வாழ்க்கை என்பதை உணர்கிறான். “சிறிய மாற்றங்களை முதலிலேயே கண்டுபிடித்து விடுவது, பின்னால் வருகிற பெரிய மாற்றங்களுக்கு நம்மை தயார்படுத்திக் கொள்ளவும், ஏற்றுக் கொள்ளவும் உதவும்” என்ற அறிவுரையோடு முடிகிறது இந்த நாற்பத்தியெட்டு பக்க புத்தகம்.

நூல் வெளியீடு : அநுராகம், 19, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600017. விலை : ரூ.15. இந்நூலின் மூலம் ஆங்கிலத்தில் பல லட்சம் பிரதிகள் விற்ற 'WHO MOVED MY CHEESE' என்ற புத்தகம். கே.ஆர். மணி தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.

இப்புத்தகத்தில் அல்வாத்துண்டு என்பது வாய்ப்புகளை உருவகப்படுத்துகிறது. எலி, சிறிய மனிதர்கள் என நான்கே நான்கு கதாபாத்திரங்களை வைத்து மிக எளிய மொழியில் கனமான விஷயங்களை சொல்ல பயன்படுத்தும் உத்தி புதிது. இவ்வகை எழுத்துக்களை 'நெம்புகோல் எழுத்துக்கள்' என்று முன்னுரையில் குறிப்பிடுகிறார் ஆசிரியர். வாசிக்க குழந்தைகளுக்கான இலக்கியம் போல தோற்றமளித்தாலும் இப்புத்தகம் முழுக்க முழுக்க வாய்ப்புகள் குறித்த அவசியத்தை பெரியவர்களுக்கு போதிக்கிறது.

குளமாய் தேங்கிக் கிடக்கும் நீர் கோடை வந்தால் வற்றிவிடும், ஆறாய் ஓடும் நீரோ கடலில் கலந்து சாகாவரம் பெறும். நாம் குளத்து நீராய் வாழப்போகிறோமா, இல்லை ஆற்றுநீராய் வாழப்போகிறோமா? என்று முடிவெடுக்கும் உரிமை நம்மிடமே இருக்கிறது. தொடர்ச்சியாக இயங்கி, அடுத்தக்கட்ட நகர்வுக்கு ஆற்றுநீரைப் போல நம்மை தயார்செய்து வைப்பதின் மூலம் மட்டுமே நம் காலத்துக்கு பிறகும், நம்மைப் பற்றிய நினைவலைகளை மட்டுமாவது உலகில் வாழவைக்க முடியும் என்பது நிதர்சனம். மாற்றங்களுக்கு தயாரில்லாத மனிதனும், சமூகமும் வாழ்ந்ததற்கு எந்த அடையாளமும் எதிர்காலத்தில் இருக்கப்போவதில்லை. கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி, எதிர்காலத்தில் தனக்கென ஏராள வாய்ப்புகளை தன்முனைப்போடு ஏற்படுத்துகிறவனே வரலாற்றில் இடம்பெறுகிறான்.

Edited by லக்கிலுக்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.