Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அறிவும் திருவும்

Featured Replies

அறிவும் திருவும்

(சித்தாந்தப் புலவர் மாமணி, பாலகவி, வைநாகரம், வே. இராமநாதன் செட்டியார் அவர்கள், தேவகோட்டை)

உலகத்திலே உள்ள உயிர்த்தொகுதிகள் அனைத்திற்கும் அறிவையும் திருவையும் ஆண்டவன் வழங்கியிருக்கிறான். ஆனால் அனைத்துயிர்களிடத்திலும் அவை ஒரே படித்தானவையாக அமைந்திருக்கவில்லை உடல்கொண்டு பிறக்கின்ற உயிர்கள் நால்வகைத் தோற்றம், எழுவகைப் பிறப்பு, எண்பத்துநான்கு நூறாயிரம் யோனி பேதங்களுக்கு உட்படுகின்றன என்று நூல்கள் கூறும்.

மரம், செடி, கொடிகளிலிருந்து மனிதர்வரை காணப்பெறுகின்ற உயிர்த் தொகுதிகளின் அறிவு நிலை படிப்படியாக உயர்ந்திருப்பதை நாம் அறிவோம்.

உயிர்களின் அறிவுக்குக் கருவியாயிருந்து உதவுவன பொறிகள். அவற்றால் அறியும் அறிவைப் புலமென்று சொல்லுவர். இவையிரண்டையும் தொடர்புப்படுத்திப் பொறி புலன்கள் என்று வழங்குவதுண்டு பொறிகளை வடமொழியில் இந்திரியங்கள் என்று சொல்லுவார்கள். புலங்களை விடயங்களென்றுரைப்பர். சித்தாந்த சைவ நூல்கள் ஆன்மதத்துவம் இருபத்துநான்கு எனக் கூறும். அவை பூதங்களைந்து, தன்மாத்திரைகளைந்து, கன்மேந்திரியங்களைந்து, ஞானேந்திரியங்களைந்து, மனம் அகங்காரம் புத்தி பிரகிருதி ஆகிய நான்கு என்பனவாம்.

இவற்றுள் ஞானேந்திரியங்களென்பன அறியும் பொறிகளும், கன்மேந்திரியங்களென்பன தொழில் செய்யும் பொறிகளுமாம். அறிவுப் பொறிகளான மெய், வாய், கண், மூக்கு செவிகளால் உற்றும், உண்டும், கண்டும், உயிர்த்தும், கேட்டும் அறிகிறோம். ஆகவே பொறிகளாகிய கருவிகள் கொண்டுதான் உயிர்கள் எவற்றையும் அறிகின்றனவென்பது விளங்குகின்றது. இப்பொறிகளில் ஏதேனும் ஒன்றோ, சிலவோ ஒரு சில உயிர்களுக்குக் குறையாக இருந்தால் அப்பொறி கருவியாக விளங்குகின்ற அறிவும் அவ்வுயிர்களுக்கு இல்லையாகிவிடும் என்பது உணரப்பெறும். அதனாலேயே மரம் முதல் விலங்கு வரையுள்ள உயிர்களைப் பொறியுண்மை அடிப்படையில் வைத்து ஐந்து வகையாகப் பிரித்துக் கண்டனர் நம் முன்னோர்.

  • தொடங்கியவர்

புல்லும் மரமும் முதலியன உற்றறிவதாகிய ஓரறிவை மட்டும் உடையன. சிப்பியும், சங்கும் முதலியன உற்றும், உண்டும் அறியும் இரண்டறிவை உடையன, கறையானும் எறும்பும் முதலியன உற்றும், உண்டும், உயிர்த்தும் அறியும் முன்றறிவை உடையன. தும்பியும் வண்டும் முதலியன உற்றும், உண்டும், உயிர்த்தும், கண்டும் அறியும் நான்கறிவை உடையன. மக்களும், விலங்கு புள் முதலியனவும் உற்றும், உண்டும், உயிர்த்தும், கண்டும், கேட்டும் அறியும் ஐந்து அறிவை உடையன.

ஞானேந்திரியங்கள் கருவியாக அறியும் ஐவகை அறிவும் பறவை விலங்குகளோடொப்ப மனிதனுக்கும் இருப்பதனால், அவற்றை விட அவன் உயர்ந்தவன் ஆதலுக்கு அவனிடம் அமைந்திருக்கின்ற பகுத்தறிவே காரணமாயிருக்கின்றது. இதனாலேயே கம்பர் "தக்க வின்ன தகாதன வின்ன வென் றொக்க வுன்னல ராயினு யர்ந்துள மக்களும் விலங்கே" என்று கூறினார்.

மற்றை உயிரினங்களிலிருந்து பிரித்தெடுத்து மனிதனை உயர்ந்தவனாகச் செய்கின்ற பகுத்தறிவு மனம் கருவியாக நிகழுவதாகும். மனத்தால் நினைக்கும் ஆற்றல் மனிதனுக்கு இருப்பதனாலேயே 'மன்' என்ற பகுதியினடியாகப் பிறந்த மனிதன் என்ற பெயர் அவனுக்கு உரியதாக ஆயிற்று. இதுகாறும் கூறியவற்றால் ஐம்பொறிகளின் வாயிலாக அறியும் அறிவைவிட மனதைக் கருவியாக வைத்து அறியும் பகுத்தறிவு சிறந்ததென்பது நன்கு பெறப்படும்.

  • தொடங்கியவர்

இனி இவ்வறிவின் இன்றியமையாமையைப் பற்றிக் கல்வி கேள்வி முதலிய அதிகாரங்களில் காரணகாரியப் பொருள்படவும், அறிவுடைமை என்ற அதிகாரத்தில் தூலமாகவும், மெய்யுணர்தல் முதலிய அதிகாரங்களில் சூக்குமமாகவும் திருவள்ளுவர் வற்புறுத்தியிருப்பதை இங்கே நினைவூட்ட விரும்புகிறேன். 'சென்ற விடத்தாற் செலவிடாதீதொரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு.' எனவும் "எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு' எனவும் "எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு, அவ்வது உறைவது அறிவு" எனவும் உள்ள திருக்குறள்கள் இடையீடின்றி நமது நினைவிலிருக்க வேண்டியனவாகும்.

எதிர்காலத்தைப் பற்றி யறிந்து நடக்கின்ற இயைபு அறிவுடையவர்களுக்கே அமையும். ஏனை எதுவுமில்லாதவராயினும் அறிவுடையார் எல்லாம் உடையவராவர். பிற அனைத்தும் உடையவரேனும் அறிவில்லாதார் எதுவும் இல்லாதவரேயாவர். அறிவு அனைத்தையும் படைத்துக் கொள்ளுதற்கும், காப்பாற்றுதற்கும் கருவியாயிருந்து பயன்படுதலின் அதிற் சிறந்தவொன்று பிறிதில்லையென்று ஆன்றோர் கூறினர்.

  • தொடங்கியவர்

இனி அறிவைப் பாச அறிவென்றும், பசு அறிவென்றும் பதியறிவென்றும் மூவகைப் படுத்திச் சைவ சித்தாந்த நூல்கள் கூறும் உண்மையும் இங்கே சிந்திக்கத் தக்கது. உலக வாயிலாக வரும் அறிவு பாச அறிவாகும். சித்தும் சடமுமாகக் கூடியுள்ள இவ்வுலகத்தில் தாமே இயங்குவன. சித்துப் பொருள்கள். பிறர் இயக்க இயங்குவன சடப்பொருள்கள். புறக் காட்சியில் சடப்பொருள்களைத்தான் காண முடியும் சித்துப் பொருள்கள் புறக் காட்சிக்கு வரமாட்டா.

சித்துப் பொருள்கள் சடப்பொருள்களிற் கலந்து அவையேயாய் நிற்பது இயல்பு. 'ஒற்றுமை நயத்தின் ஒன்றெனத் தோன்றினும், வேற்றுமை நயத்தின் வேறே உடலுயிர்' என்றது நன்னூல். சடங்களாகிய புறக்காட்சிப் பொருள்கள் பற்றி அறிகின்றவரையே இக் காலத்துப் பெரும்பாலோர் அறிஞரென்று மதிக்கின்றார்கள். சித்துப் பொருளாகிய உயிரைப் பற்றி அறிந்தவர் சடப்பொருள் அறிஞர்களைவிட ஒருபடி உயர்ந்தவரென்பதும் சத்தும் சித்தும் ஆனந்தமுமாகிய இறைவனைப் பற்றி அறிந்தவர் இவ்விருவரிலும் மேம்பட்டு விளங்குபவரென்பதும் உணர்த் தக்கனவாகும்.

அறிவே திருவுக்கு அடிப்படையாயிருந்து உதவும்.

  • தொடங்கியவர்

திரு, என்பது உலகியலிற், பொருட்செல்வத்தையும், இறையியலில் முத்தியையும் குறிக்கும். உலகியலறிவு உலகியற்றிருவைப் பெருதற்குத் துணை செய்வதுபோல் இறையியலறிவு எனப்படுகின்ற சிவஞானம் இறையியற்றிருவாகிய முத்தியைப் பெறுதற்கு வழிசெய்து தரும். இந்தச் சிவஞானமே திருவள்ளுவரால 'மெய்யுணர்வு' என்று குறிக்கப் பெறுவதாகும். இதனை 'கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார்தலைப்படுவர். மற்றீண்டு வாராநெறி' என்ற திருக்குறளால் அறியலாம்.

திரு என்ற சொல்லுக்குக் கண்டாரால் விரும்பப்படுவது, என்று பொருளுரைத்தார் பேராசிரியர் உலகியலில் அந்தத் தகுதியையுடையது பொருட் செல்வமாதலின் அதனைத்திரு என அழைத்தார்கள். "பொன்னு மெய்ப்பொருளுந் தருவானைப் போகமும் திருவும் புணர்ப்பானை" என்பது நம்பியாரூரர் திருவாக்கு. இங்கு பொன்னென்று உலகத்திருவும் மெய்ப் பொருளென்று அருட்டிருவும் குறிக்கப் பெற்றுள்ளன. அதனாலேயே உலகத் திருவின் பயனாகக் கிடைக்கின்ற போகம் முதலாவதாகவும் அருட்டிருவின் பயனாகக் கிடைக்கின்ற முத்தித்திரு இரண்டாவதாகவும் கூறப் பெற்றன.

  • தொடங்கியவர்

அம் முத்தித்திருவைச் சென்றடையாத திருவென்று ஆளுடைய பிள்ளையாரருளுவார். எனவே சென்றடைகின்ற திரு உலகத்திரு என்பது புலப்படும். சென்றடையாத திரு என்பது உயிர்கள் தாமாகச் சென்றடைய முடியாத திரு என்னும் பொருளிலுள்ளது ஆண்டவனது திருவருள் கூட்டினாலன்றி அத்திருவை அடைய முடியாது என்பது கருத்து.

'அவனருளே கண்ணாகக் காணினல்லால்' என்ற தேவாரமும் 'காட்டுந் திருவருளே கண்ணாகக் கண்டு பர, வீட்டின்பமெய்ப்பொருளை மேவுநாளெந் நாளோ' என்ற தாயுமான அடிகள் திருவாக்கும் இங்கே நினைவு கொள்ளற் பாலனவாம், உலகத்திருவையும், முத்தித் திருவையும் பெறுவதற்கு அடிப்படையாயிருந்து உதவினாலன்றி அறிவினால் ஏதும் பயனில்லை.

  • தொடங்கியவர்

அறிவு அதனளவில் நின்று அறிஞர் என்று பெயர் வாங்கித் தந்தால் மட்டும் போதாது என்பதை 'கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்' என்ற குறளில் குறிப்பாலுணர்த்தி யருளினர் திருவள்ளுவர். உயிர்களுக்கு இயல்பாய் அமைந்த இயற்கையறிவும் கல்வியால் வருகின்ற செயற்கையறிவும் ஆண்டவனது திருவடியை அடைவதற்குத் துணை செய்யாத பொழுது அவற்றால் பயனில்லை என்பதை இதனாலறிகின்றோம். பிறவிப் பெருங்கடலில் நீந்திப் பேரின்பக் கரையை அடைதற்கு இறைவனடி சேர்தலே ஏற்றதெனக் கடவுள் வாழ்த்தின் இறுதிக் குறள் அறிவிக்கின்றதாதலின் தாள் தொழுதலால் வரும் பயன் முத்தித் திருவே என்பது பெறப்படுகின்றது. மக்களுக்கு வாய்த்துள்ள அறிவு அதன் பயனாகிய இருவகைத் திருவையும் அடைதற்குத் துணையாயிருந்து உதவுதல் வேண்டும்.

நலம் பெருகுக.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.