Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தசாவதாரம்....தினமலர் குமுதம் விகடன் விமர்சனம்

Featured Replies

leftcinemaqv2.jpg

நடிப்பு : கமல்ஹாசன், நெப்போலியன், அசின், மல்லிகா ஷெராவத், ஜெயப்பிரதா, எம்.எஸ்.பாஸ்கர், நாகேஷ் மற்றும் பலர்.

இயக்கம் : கே.எஸ்.ரவிக்குமார்

தயாரிப்பு : ஆஸ்கார் ரவிச்சந்திரன்

இசை : ஹிமேஷ் ரேஷம்மையா

ஒளிப்பதிவு : ரவி வர்மன்

நாட்டையே அழிக்கும் சக்திகொண்ட விஷக்கிருமியை தீவிரவாதிகளின் கைகளுக்கு சிக்காமல் அழிப்பது என்ற ஒற்றை வரி கதையில் 10 கேரக்டர்களையும் கொண்டு வந்து, மூன்று மணி நேரம் 10 நிமிடங்களை கடத்தியிருக்கிறார் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார். 12ம் நூற்றாண்டில் படத்தை தொடங்கி 2004 டிசம்பர் 26ம் தேதி (சுனாமி வந்த நாள்) வரை கொண்டு வந்து படத்தை முடித்திருக்கிறார்கள். படம் தொடங்கியதுமே ஹிமேஷின் இசையில் தியேட்டரே அதிர்கிறது. கோயிலில் உள்ள ரங்கநா‌தரின் சிலையை பெயர்த்தெடுத்து கடலில் தூக்கி வீச மதவெறி கொண்ட மன்னன் நெப்போலியன் உத்தரவிடுகிறார். கோபமும், தைரியமும் கொண்ட வைணவ இளைஞரான கமல், சிலையை பெயர்க்கும் படை வீரர்களுடன் சண்டையிடுகிறார். பெரும்படை சூழ கமல்ஹாசனை பிடித்து, ஓம் நமச்சிவாய என்று சொன்னால் உயிரோடு விட்டுவிடுகிறேன் என்கிறார் மன்னன். கமலின் மனைவியாக வரும் அசின் உள்பட அனைவருமே நமச்சிவாய என்று சொல்லிடும்படி கெஞ்சுகிறார்கள். ஆனால் கமல்ஹாசன் ஓம் நமோ நாராயணா என்று ஓங்கி ஒலிக்கிறார். கோபங்கொண்ட மன்னரின் கட்டளைப்படி, ரங்கநாதர் சிலையுடன் கடலில் தூக்கி விசப்படுகிறார்.

-இதுதான் படத்தின் முதல் இரண்டு ரீல்கள். என்னடா இது... சோழர் காலத்து கதையாக இருக்குமோ என்று யோசிக்கும்போதே விஞ்ஞானி கமலை காட்டுகிறார்கள். நாட்டையே அழிக்கும் சக்தியான விஷக்கிருமியை உயரதிகாரி தீவிரவாதிகளுக்கு விற்க முயலுகிறார். அவரிடம் இருந்து விஷக்கிருமியை லாவகமாக எடுத்து வரும் விஞ்ஞானி கமல், கிருமி ஊருக்குள் பரவி விடாமல் தடுக்க படாத பாடு படுகிறார். விஷக்கிருமியை அபகரிக்க வரும் வில்லனாக தோன்றுபவரும் கமல்தான்.

விஷக்கிருமியுடன் நேராக நண்பர் ஒருவரது வீட்டுக்கு வரும் கமல், நண்பரின் மனைவியான ஜப்பான் பெண்ணிடம் கொடுத்து கிருமியை பத்திரமாக பிரிட்ஜ்ஜில் வைத்திருக்கும்படி சொல்கிறார். அதற்குள் அங்கு வரும் வில்லன் கமல், நண்பனையும், நண்பனின் மனைவியையும் கொன்று விடுகிறார். இது அந்த ஜப்பான் பெண்ணின் சகோதரர் கராத்தே மாஸ்டர் கமலுக்கு கோபமளிக்கிறது. அவரும் வில்லன் கமலை பழிவாங்க புறப்படுகிறார்.

இதற்கிடையில் விஷக்கிருமி விமான பார்சல் மூலமாக இந்தியாவுக்கு செல்கிறது. இதுபற்றி அறியும் அமெரிக்க ஜனாதிபதி வேட கமல், இந்திய பிரதமருடன் பேசி விஷயத்தை தெரிவிக்கிறார். இதற்கிடையில் பார்சலுடன் விஞ்ஞானி கமலும் சென்னை வருகிறார். விமான நிலைய சோதனையில் சிக்கிக் கொள்ளும் விஞ்ஞானி கமலிடம் விசாரணை நடத்தும் உளவுத்துறை அதிகாரியாக வருகிறார் இன்னொரு கமல். விசாரணை நடந்து கொண்டிருக்கையில் வில்லன் கமலும் அங்கு வந்துவிடுகிறார். அவருக்கு மொழி பெயர்ப்பாளராக மல்லிகா ஷெராவத்தும் வருகிறார்.

அதேநேரத்தில் விமான நிலையத்துக்கு பிரபல பாப் பாடகர் கமல் வருகிறார். அவரது மனைவி ஜெயப்பிரதா. பாப் பாடகர் கமல் திடீரென ரத்த வாந்தி எடுத்து சாய்கிறார். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. இதை தனக்குசாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் வில்லன் கமல், விஞ்ஞானி கமலை கடத்துகிறார். அவரிடம் இருந்து தப்பிக்கும் விஞ்ஞானி பார்சல் சென்ற இடத்தை தேடுகிறார். விமானத்தில் வந்த பார்சல் மாறி சிதம்பரத்துக்கு சென்றுவிடுகிறது. சிதம்பரம் அக்ரஹாரத்தில் இருக்கும் மூதாட்டி கமல் கைக்கு பார்சல் கிடைக்கிறது. மனநலம் சரியில்லாத அந்த மூதாட்டி கமல் பார்சலை பெருமாள் சிலையினுள் போட்டு விடுகிறார். அதற்குள் விஞ்ஞானி கமல், உளவுத்துறை அதிகாரி கமல், வில்லன் கமல் ஆகியோரும் சிதம்பரத்தை முற்றுகையிட படத்தின் பரபரப்பு மேலும் அதிகரிக்கிறது.

பெருமாள் சிலையில் கிடக்கும் விஷக்கிருமி பாக்ஸை எடுக்க விஞ்ஞானி கமல் முயற்சிக்கிறார். பெருமாள்தான் எல்லாமே என்று வாழும் அக்ரஹாரத்த பெண்ணான அசின், பெருமாள் சிலையை தன்னிடம் ஒப்படைத்து விடுமாறு விஞ்ஞானியை துரத்துகிறார். இருவரும் மற்ற கமல்களின் கண்களில் மண்ணை தூவி விட்டு தப்பிக்கிறார்கள். பஸ், ரயில் என்று தாவித்தாவி செல்லும் இவர்கள் கடைசியில் சென்றடையும் இடம் ஒரு மணற்பரபப்பு. அங்கு சிலையை மறைத்து வைக்கிறார்கள். அதற்குள் அந்த மணற்பரபப்பில் இருக்கும் மணலை எடுக்கிறார் அரசியல்வாதி ஒருவர். மணல் திருட்டை தடுத்த நிறுத்தம் தலித் இளைஞராக வருகிறார் இன்னொரு கமல். ஒருவழியாக சிலையுடன் விஞ்ஞானி கமலும், அசினும் மணல் லாரியில் ஏறி தப்பிக்கிறார்கள். அந்த லாரி விபத்தக்குள்ளாகிறது. எதிரே வந்த வேனில் இஸ்லாமியரான நாகேஷ் மற்றும் குடும்பத்தினர். நாகேஷின் மூத்த மகனாக வருகிறார் 7 அடி உயர கமல். பல சேஷிங்களை கடந்து நகரும் கதையின் கடைசியில் சுனாமி வந்து விடுகிறது. பேரழிவை ஏற்படுத்திய அந்த சுனாமி உலகையே அச்சுறுத்தும் விஷக்கிருமியையும் அழித்து விட்டுச் செல்கிறது என்பதுதான் க்ளைமாக்ஸ்.

படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் கிராபிக்ஸ் புகுந்து விளையாடுகிறது. பத்த கமல்களும் நடிப்பில் முத்திரை பதித்துள்ளனர். முதல் காட்சியில் அடியேன் ராமானுஜ தாசன் என்று தூய தமிழில் வசனம் பேசத் தொடங்கும் கமல் ஆங்கிலம், தெ‌லுங்கு, சீனமொழி, உருது என பல பாஷைகளை பேசி கலக்குகிறார்.

அமெரிக்க ஜனாதிபதி வேட கமல், மூதாட்டி கமல், தலித் கமல், பாப் பாடகர் கமல் ஆகியோர் ரசிக்க வைக்கிறார்கள். உளவுத்துறை கமல், இஸ்லாமிய கமல் ஆகியோர் சிரிக்க வைக்கிறார்கள். வில்லன் கமல், ஜப்பான் கமல் ஆகியோர் பிரமிக்க வைக்கிறார்கள். வைணவ இளைஞர் கமல், விஞ்ஞானி கமல் ஆகியோர் வழக்கமான கமல்.

தசாவதாரம் படத்தில் அசினுக்கு படம் முழுக்கவும் பெருமாள் சிலையுடன் ஓடி வருவதுதான் வேலை. தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை நன்றாகவே செய்திருக்கிறார். மல்லாகா ஷெராவத் சில காட்சிகளிலேயே வந்தாலும் நெஞ்சில் நிற்கிறார். எம்.எஸ்.பாஸ்கர் பட்லர் இங்கிலீஷ் பேசி பட்டையை கிளப்புகிறார். ஹிமேஷின் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. குறிப்பாக உலக நாயகனே பாடல் ரசிகர்களை எழுந்து நின்ற ஆட வைக்கிறது. முகுந்தா முகுந்தா பாடல் காதுகளுக்கு இனிமை...!

தசாவதாரம் - பிரமாண்டத்தின் மறுஉருவம்.

- பட காட்சிகள் -

- தினமலர் விமர்சன குழு -

தசாவதாரம்

10 வேடங்களில் கமல் நடிக்க, 70 கோடி செலவில் ஹாலிவுட்டுக்குச் சவால் விடும் வகையில் வந்திருக்கிறது தசாவதாரம். முதல் காட்சியே பிரமிக்க வைக்கிறது. சென்னையிலிருந்து கடலைப் பார்த்திருக்கிறோம். கடலிலிருந்து சென்னையை பார்த்திருக்கிறோமோ? கடலிலிருந்து மேலாகப் பறந்து வந்து கழுகு பார்வையில் சென்னையைப் பார்ப்பது தமிழ் சினிமாவுக்குப் புதுசு. அத்துடன் நிற்காமல் அந்தப் பார்வை அப்படியே கடந்து போய் சோழர்கால சிவ வைஷ்ணவ பிரச்சனையின் நடுவே சென்று நிற்பது அதைவிட புதுசு.

சோழர் காலத்து கோபம் கொண்ட வைணவ இளைஞன்,

அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்,

மனநிலை தவறிய வயது முதிர்ந்த பாட்டி,

ஜப்பானிய கராத்தே மாஸ்டர்,

பஞ்சாபி கஜல் பாடகன்,

நியாயத்திற்காக போராடும் தலித் இளைஞன்,

கத்தி, துப்பக்கியுடன் கொலை வெறியுடன் சுற்றும் அமெரிக்கன்,

எட்டு அடி உயரத்தில் அப்பாவியாய்ப் பேசும் முஸ்லிம் இளைஞன்,

நவீன யுகத்தின் துடிப்பான சயன்டிஸ்ட்,

இழுத்து, இழுத்துத் தமிழ் பேசும் கூர் மூக்கு தெலுங்கு உளவுத்துறை அதிகாரி

- என்று வெவ்வேறு வாசனை உள்ள பாத்திரங்கள். தசாவதாரங்களுக்கும் உலக நாயகன் கமல் கடுமையாய் உழைத்திருப்பது தெரிகிறது. இஸ்லாமும், கிறிஸ்தவமும் அடி பதிக்காத காலத்தில் சிதம்பரத்தில் நடந்த சைவ வைணவ மோதலுடன் படம் ஆரம்பிக்கும்போதே ஒரு பிரமிப்பு தோன்றி விடுகிறது.

கோவிலில் உள்ள ரங்கநாதரின் சிலையைப் பெயர்த்து கடலில் வீச சைவ மன்னன் ஏற்பாடு செய்ய, புயலாக புறப்பட்டு எதிரிகளை துவம்சம் செய்யும் கமலிடம், ஓம் நமசிவாய என்று சொன்னால் உயிர் பிச்சை; இல்லாவிட்டால் சிலையுடன் கட்டிக் கடலில் வீசப்படுவாய், என்று, சோழ மன்னன் எச்சரிக்க, கமலின் குடும்பத்தினரும் சொல்லி விடுங்கள் என்று கண்ணீர் விட, ஓம் என்று க்ம்பீரக் குரலில் கமல் ஆரம்பிக்க, என்ன நடக்குமோ, ஏது ஆகுமோ? என்று சீட்டு நுனிக்கு அனைவரும் வர, நமோ நாராயணாய என்று முடிப்பதாகட்டும், கொக்கி மாட்டி ரத்தம் வழிய தூக்கியபோதும் துதிப்பதாகட்டும், கடலுக்குள் சிலையோடு கட்டப்பட்டு மடிவதாகட்டும்... காட்சியமைப்பும், கமலின் நடிப்பும், ரவிவர்மனின் ஒளிப்பதிவும், தேவிஸ்ரீ பிரசாத்தின் அலாதியான ரீரெக்கார்டிங்கும் நம்மை அந்த காலத்திற்கே அழைத்து சென்று விடுகின்றன. அந்த பிரமிப்பிலிருந்து விடுபட நாட்களாகும்.

வைஷ்ணவ நம்பி கதாபாத்திரத்தை வைத்து தமிழில் ஒரு முழுநீள திரைப்படத்தையே தயாரித்திருக்கலாம். வழக்கமாய் வரலாற்றுப் படங்களில் வைக்கப்படும் கட்அவுட் அரண்மனைகளிருந்து வேறுபட்டு தத்ரூபமாக காட்சிகள் இருப்பதற்கு சபாஷ். ஆனால் பத்தே நிமிடங்களில் அந்தக் காட்சிகள் முடிந்துவிடுவது ஏமாற்றம்.

தமிழகத்தின் அந்தக் கால சம்பவங்களை அடிப்படையாக வைத்து ஆரம்பிக்கும் படம் அடுத்த கட்டத்தில் ஹாலிவுட் ஆக்ஷன் - அட்வென்சர் - சேஸிங் படமாக கைகோர்க்கிறது. பரவினால் ஒரு ஊரையே காலி செய்யும் வைரஸ்ஸை எதிரிகளுக்கு விற்க துணிந்த மேலதிகாரியின் கைகளில் அது கிடைக்காமல் கமல் செய்யும் கலாட்டக்கள்தான் மீதிக் கதை. தமிழகத்தை உருக்குலைத்த சுனாமியையே ஒரு கதாபாத்திரமாகப் பயன்படுத்திக் கொண்டிருப்பது கமலின் கதை சொல்லும் திறன்!

பத்து அவதாரங்களில் தலித் தலைவராக வரும் பூவராகன் கமல் வித்தியாசப் பட்டு நிற்கிறார். குரல் ஏற்ற இறக்கம், விழி அசைவுகள், உடல்மொழி அனைத்திலும் கமலின் நடிப்பு சிரத்தை தெரிகிறது. இந்திய உளவுத்துறை அதிகாரியாக வரும் தெலுங்கர் கமல் சிரிக்க வைக்கிறார். வயதான கிழவியாக வரும் கமல் அவ்வை சண்முகியை நினைவூட்டுகிறார். அர்னால்ட் ஸ்வாஸநேகர் ஸ்டைலில் இருக்கும் வில்லன் கமல் வியப்பூட்டுகிறார்.

அக்ரஹாரத்துப் பெண்ணாக அஸின் அம்சமாய் அல்வாவாய் இருக்கிறார். பயந்த சுபாவமும், துடுக்குத்தனமுமாய் அஸின் நடிப்பில் ஏறத்தாழ குட்டி கமல்!

முகுந்தா பாடலில் ஹிமேஷ் ரேஷ்மியா தமிழராக இனிக்கிறார். மற்ற பாடல்களில் வடக்கத்தியராக அந்நியப்பட்டிருக்கிறார். உலக நாயகனே பாடலில் பத்து அவதாரங்களுக்கும் கமலின் மேக்கப் ரகசியத்தை காட்சிப்படுத்தியிருப்பது டைரக்டர் ரவிக்குமாரின் புத்திசாலித்தனம். படத்தின் உயிர் தொழில்நுட்பம். ஆனால் அந்த தொழில்நுட்பத்தைப் பார்ப்பவர்கள் உணராமல் பயன்படுத்தியிருப்பது கலைஞர்களின் திறமை, சாமர்த்தியம்.

கமல்கள் ஒன்றாக வரும் இடங்கள், சுனாமி, அதிவேக கார் துரத்தல்கள், சோழர்கால காட்சிகள், அமெரிக்க அதிரடிகள் என எல்லாவற்றிலும் தொழில்நுட்பம் நிறைந்திருக்கிறது. இத்தனை தொழில்நுட்பம் பயன்பட்ட ஒரே தமிழ்ப்படம் தசாவதாரமாகத்தான் இருக்கும்.

தரம். உலக நாயகத் தரம். உலகத்தரம்.

- குமுதம் விமர்சன குழு -

தசாவதாரம் (43/100)

இது கமல்ஹாசனின் "பென்மேன் ஷோ!'

பறவைப் பார்வையில் அந்த ஆரம்பப் பத்து நிமிடங்கள்... அசத்தல்! மற்றபடி தமிழ் சினிமாவுக்குப் பழக்கமான, ரொம்ப வழக்கமான சேஸிங் ரேஸிங் கதை. அதில் பத்து கமல்கள் பங்கெடுத்திருப்பது மட்டுமே புதுசு!

கி.பி.12ம் நுற்றாண்டில் இரண்டாம் குலோத்துங்க சோழனிடம் இருந்து பெருமாளைக் காப்பாற்ற முடியாமல் கடலுக்குள் மடிகிறார் வைணவக் கமல் (ரங்கராஜன் நம்பி). கி.பி.21ம் நுõற்றாண்டில் அமெரிக்க விஞ்ஞானி கமல் (கோவிந்த் ராமசாமி) கண்டுபிடித்த உயிர்க்கொல்லிக் கிருமியைக் கவர்ந்து தீவிரவாதிகளிடம் விற்க, அமெரிக்க வில்லன் கமல் (கிறிஸ்டியன் ஃப்ளெட்சா) துரத்தி வருகிறார். குழப்பக் குளறுபடிகளில் வைரஸ் அமெரிக்காவிலிருந்து சிதம்பரத்துப் பாட்டி கமலிடம் (கிருஷ்ணவேணி) வந்து சேருகிறது. கிருமி விவகாரம் அமெரிக்க ஜனாதிபதி கமல் (ஜார்ஜ் புஷ்!) வரை போகிறது. இங்கே இந்தியரா அதிகாரி தெலுங்கு கமலிடம் (பலராம் நாயுடு) வழக்கு விசாரணை ஒப்படைக்கப்படுகிறது. இவர்களுக்கிடையிலான கண்ணாமூச்சி விளையாட்டின்போது பாடகர் கமல் (அவ்தார் சிங்), ஜப்பான் கமல் (ஷிங்கென் நரஹசி) சமூக சேவகர் கமல் (வின்சென்ட் பூவராகன்) எட்டடி முஸ்லிம் கமல் (க்லிஃபுல்லா கான்) ஆகியோரும் வலம் வருகிறார்கள். க்ளைமாக்ஸில் கொடிய வைரஸிடமிருந்து "டிசம்பர் 26' சுனாமி... உலகத்தைக் "காக்கும்' திடீர் டிவிஸ்ட்!

கமலின் அவதாரங்கள்?

இன்னும் வயதான "அவ்வை சண்முகி', கொஞ்சம் இளமையான இந்திரன் சந்திரன்' மேயர், "எனக்குள் ஒருவன்', நேபாளி சாயல் ஜப்பான் கமல் என வித்தியாச வலம் வந்த கமல்களின் ஒட்டுமொத்த கலெக்ஷன்தான் படம் முழுக்க. இவற்றில் அசரடிக்கிற முதல் மூன்று இடங்கள்... நம்பியின் மிரட்டும் நடிப்பு, பல்ராம் நாயுடுவின் அசட்டு நகைச்சுவை, மிக முக்கியமாக வின்சென்ட் பூவராகன், தவிர, வெரைட்டியில் வெளுத்தெடுத்திருப்பது, வில்லன் கமல்!

ஆவேச ஆத்திகரான ரங்கராஜன் நம்பி சில நிமிடங்களே வந்தாலும் ரணகள ரௌத்ரம் தெலுங்கு ரிங்டோனுக்கு இடுப்பை அசைக்கும் குறும்பாகட்டும், "நீரு தெலுங்கா...? என்று புத்திசாலி நரசம்மராவைப் பாசமாக விசாரிப்பதாகட்டும், பல்ராம் நாயுடு... ஜாலி ஜோலி!

மக்களே, என்ன சொல்லுதீய...? என்று நாகர்கோயில் தமிழில். மணல் கொள்ளையர்களோடு மல்லுக்கட்டும் வின்சென்ட், வராகனின் நடை, பார்வை, பேச்சு என இந்தப் பாத்திரத்துக்கான கமலின் உழைப்பு உலகத்தரம்! டமால் டூமீல் சாகசத்தில் ஃப்ளெட்சர் பதறடித்தாலும் அத்தனை பெரிய தலை உறுத்துகிறது. ஜப்பான் ஷிங்கென் நரஹசி, பக்கா ஜப்பானியர்! பேயறைந்தது போல இருந்தாலும் ஜார்ஜ் புஷ்ஷின் அசட்டுக் குறும்புகள் ரசிக்கும் ரகம். பாட்டியின் சேட்டைகள் சமயங்களில் கிச்சுக்கிச்சுகிறது. அவதார சிங்கும் கலிஃபுல்லா கானும் எண்ணிக்கைக்கு உதவி இருக்கிறார்கள். இத்தனை கதாபாத்திரங்களின் கனத்தைத் தாங்கிய சுவடே இல்லாமல் பெருமாள் புலம்பலுடன் திரியும் அசினுடன் ஓடிக் கொண்டே இருக்கிறார் "நார்மல்! கமல்!

உடல் மட்டுமல்லாமல் குரலும் பிரமாதப்படுத்த, டாப்டென் இடங்களையும் கமலே பிடித்துக் கொண்டதால், அசின், மல்லிகா ஷெராவத் முதல் நாகேஷ் வரை அனைவருக்கும் கிடைக்கும் சைக்கிள் கேப்களில் ஷேர் ஆட்டோ விட, வேண்டிய அவஸ்தை, ச்சொன்னாக் கேளு சாப்ட்ரு அண்ணாத்தே! என்று மழலைத் தமிழ் பேசும் ஜப்பானியப் பெண் ஆன் மட்டும் சின்னதாக ஈர்க்கிறார்.

ரவிவர்மனின் ஒளிப்பதிவும் தணிகாசலத்தின் படத் தொகுப்பும் அழகான ஆக்ஷன் வைட்டமின்கள். ஜப்பான் அமெரிக்க ஸ்டைல் க்ளைமாக்ஸ் சண்டை செம சூடு. வாலியின் கல்லை மட்டும் கண்டால்... பாடல் வரிகளில் அத்தனை உக்கிரம். மற்றபடி ஹிமேஷின் பாடல் இசையும் தேவி ஸ்ரீபிரசாத்தின் பின்னணி இசையும் அத்தனை சுகமில்லை!

பத்து அவதாரங்களில் சரிபாதி மேக்கப் முகங்கள் சற்றும் பொருந்தாததால் மாறுவேடப் போட்டி உணர்வுதான் ஏற்பகிறுது. தவிர, சர்க்கஸ் பார்க்கிற உற்சாகத்துடன் ஃப்ரேம்களில் வருகிற கமல்களைத் தேடுகிற ஆர்வத்திலேயே நேரம் செலவாகி விடுகிறது.

ஒரு வழக்கமான காமெடி ஆக்ஷன் கதை. சைவ வைணவ விவகாரம், பயோவார், ஜார்ஜ் புஷ்ஷின் அச்சுப்பிச்சு, மணல் கொள்ளை, இயற்கைச் சீற்றம் எனப் பல தளங்களில் பயணிப்பதால் சாமான்ய ரசிகன் குழம்பிப் போவான்.

பல்லாயிரம் உயிர்களைப் பலிகொண்ட சுனாமியை இப்படி ஒரு கோணத்தில் அணுகலாம் என்ற ஒரு புள்ளிதான் கதை. ஆனால், ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகி ஊரே துடிதுடித்துத் திரியும் சூழலில் கமலும் அசினும் காதல் பேசுவது... ஸாரி!

ஆக்ஷன் கதைகளில் லாஜிக் பார்க்கக்கூடாதுதான். மலையளவு உப்பால் மட்டுமே (அதாங்க... என்.ஏ.சி.எல்), அந்தக் கிருமியை அழிக்க முடியும் என்றால் தமிழகத்தையே 48 மணிநேரத்தில் அழித்துவிடக்கூடிய கிரிமியை லுõஸுப் பெண் அசினிடம் இருந்து வாங்க முடியாமல் க்ளைமாக்ஸ் வரை அலைவாரா சமூகப் பொறுப்பு உள்ள ஒரு விஞ்ஞானி?

ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த சுனாமி சம்பவத்தில் உயிர்க்கொல்லிக் கிருமியை அழித்து ஆறே நாட்களில் தமிழகத்தைக் காப்பாற்றிய கமலுக்கு, ஆற அமர கலைஞர் அரசு பாராட்டு விழா நடத்துவது இன்னும் படா காமெடி!

இருந்தாலும் ஒன்றுக்குப் பத்தாக வரும் கமல்களுக்குத் தீனி போடுவதிலேயே பெரும் கவனத்தைச் செலவிட்டதாலோ என்னவோ, கதை லாஜிக்கிலும் திரைக்கதை மேஜிக்கிலும் கிராஃபிக்ஸ் நேர்த்தியிலும் ஆங்காங்கே சறுக்கல்கள்.

நம்பியின் நடிப்பாளுமை, சமூகப் போராளியான வின்சென்ட் பூவராகனின் புயல் கோபம், பத்து கேரக்டர்களுக்கும் விதவிதமான குரல் மாற்றம் என கமலின் உழைப்பு... சம காலத் தமிழ் சினிமாவின் பிரமிப்பு!

- விகடன் விமர்சன குழு -

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.