Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘தமிழ் டயஸ்போறா’ - ‘சிறிலங்கன் டயஸ்போறா’ மலேசிய மாநாட்டில் விவாதம்

Featured Replies

புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களின் தற்போதைய நிலை, எதிர்காலம் குறித்து ஆராயப்பட்ட ஒரு மாநாடு மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் ‘Srilankan Diaspora, the Way Forward’ என்ற தலைப்பில் கடந்த 29 -08 2008ல் இடம்பெற்றது.

சிறிலங்கா அமைப்புகளின் சம்மேளனமும் (FOMSO) மலாயா பல்கலைக்கழகத்தின் இந்திய கற்கை நெறிப் பிரிவும் இணைந்து இம்மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தன.

‘சிறிலங்கன் டயஸ்போறா’ என்ற தலைப்பை விமர்சித்து மாநாட்டில் கட்டுரை படித்த பல தமிழ் ஆய்வாளர்கள், ‘தமிழ் டயஸ்போறா’ என்பதையே பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி அதனைப் பற்றியே பேசினார்கள்.

இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து, மலேசியாவில் மூன்று தலைமுறைகளுக்கும் மேலாக வாழும் ஈழத்தமிழர்கள் இக்காலம் வரையில் தங்களை ‘சிலோனிஸ்’ என்று கூறி வந்தனர்.

இவர்களில் சிலர் இப்போது புதிதாக ‘சிறிலங்கன்ஸ்’ என்ற அடையாளத்தை உருவாக்க முயல்கின்றனர். அதன் ஒரு பகுதியாக, சிறிலங்கா அமைப்புகளின் சம்மேளனம் 2003ல் உருவாக்கப்பட்டு, 2006ல் பதிவும் பெற்றிருக்கிறது.

சிலோன் தமிழர் சங்கம், சிலோன் விளையாட்டு மன்றம் போன்ற பெயர்களில் செயல்பட்ட அமைப்புகள் இப்போது சிறிலங்கா சம்மேளனம் ஆகியுள்ளது. 19 அமைப்புகளைக் கொண்ட இச்சம்மேளனத்தில் மூன்று சிங்கள அமைப்புகளும் இணைந்துள்ளன.

மாநாட்டில் பேசிய மலேசியாவின் மூத்த வரலாற்றியல் பேராசிரியர் கூ கே கிம் தமது உரையில், “மலேசியாவில் சிறிலங்கன்ஸ் இல்லை. பெருமளவில் சிலோனிஸ் - சரியாகச் சொல்லப்போனால் யாழ்ப்பாணியர்களும் (Jafanese), சிறிய அளவில் சிங்களவர்களுமே உள்ளனர்,” என்றார்.

இவர்கள் மலேசிய மக்கள்தொகை புள்ளிவிவரக் கணக்கில் ‘ஏனையவர்கள்’ என்றே குறிப்பிடப்படுகின்றனர். கிட்டத்தட்ட 50,000 தமிழர்களும் 5,000 சிங்களவர்களும் உள்ளனர் என்றார் அவர்.

இதுநாள் வரை தங்களை யாழ்ப்பாணத் தமிழர்கள் அல்லது ‘பனங்கொட்டை’கள் என்று பெருமையோடு தனித்து அடையாளப்படுத்தி வந்த மலேசியாவில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள் தங்களை ‘சிறிலங்கன்ஸ்’ என்ற அடைமொழிக்குள் மாற்றிக் கொள்வதற்கு அரசியல், பொருளாதார இலாபங்கள் காரணமாக இருக்கலாம்.

எனினும் உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழும் ஒட்டுமொத்த ஈழத்தமிழரின் உயர்வுக்கு தனி அடையாளமும் ஒன்றுபட்ட முயற்சிகளும் தேவை என்பதே மாநாட்டில் முன்வைக்கப்பட்ட முக்கிய கருத்தாகும்.

இம்மாநாட்டில் தெறித்த கருத்துக்களை இப்படிப் பட்டியலிடலாம்:

- உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்கள் தங்கள் நலனைத் தாங்களே பேண வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளனர்.

- உலகளவில் பலமிக்க சமூகமாக உருவாக வேண்டிய ஓர் அவசரத் தேவை ஈழத் தமிழருக்கு ஏற்பட்டுள்ளது.

- சொந்த நாட்டிமிருந்தோ அனைத்துலக சமூகத்திடமிருந்தோ உதவியும் ஆதரவும் கிடைக்காத நிலையில், இச்சமூகத்தின் வளமான எதிர்காலம் அதன் கைகளில்தான் இருக்கிறது.

- புலம்பெயர் ஈழத்தமிழர் சமூகம், தனித்தன்மையான அடையாளத்துடன் உயர்ந்த நாகரிகமுடைய தனிச் சமூகமாக குறுகிய காலத்துக்குள் எழுச்சி பெறுவதற்கு குறுக்கு வழி மனிதவளத்தில் முதலிடுவது. இதன்மூலம் உலகளாவிய அங்கீகாரத்தையும் மரியாதையும் ஈழத் தமிழர் பெற முடியும்.

-ஐந்து கண்டங்களிலும் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களின் வளங்களையும் ஒன்றிணைத்து, அதன்மூலம் இச்சமூகத்தைக் கட்டியெழுப்ப ஒரு பலக்கலைக்கழகம் தேவைப்படுகிறது…..

“புலம்பெயர் ஈழத்தமிழ் சமூகம் எவ்வளவு முதலீட்டைப் பெற்றிருக்கிறது, அதை எப்படிக் கையாள்கிறது என்பதைப் பொறுத்தே அதன் எதிர்காலம் இருக்கிறது,” என்றார் வரலாற்றியல் அறிஞர், கலாநிதி பொ.இரகுபதி.

“பொருளாதார செழிப்புக்குக் காலமாகும். ஆனால் மனிதவளத்தைப் பெருக்கி, அதைச் சரியாகப் பயன்படுத்தினால் இரண்டொரு தலைமுறைக்குள் புலம்பெயர் ஈழத்தமிழர் சமூகம் மதிப்புப் பெற முடியும்.

அதற்கு ஒரு விழிப்புணர்ச்சியும் போதுமான அடிப்படைக் கட்டமைப்பும் தேவை. உயர்கல்வி ஒரு வர்த்தக பண்டமாகவும் குறிக்கோளாகவும் ஆகிவிட்ட இன்றைய உலகில் மனிதவள மேம்பாடு அவசியமாகிறது.

புலம் பெயர் ஈழச் சமூகத்தின் அறிஞர்களுக்கு இச்சமூகத்தின் மனித வளத்தை மேம்படுத்த வேண்டிய பொறுப்பு உள்ளது. அதற்கு புலம்பெயர் பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும். எந்த ஒரு தனி நாட்டினதோ, அனைத்துலக அமைப்பினதோ அல்லது தனிமனிதரினதோ கட்டுப்பாட்டின் கீழ் இல்லாமல் அனைத்து ஈழத்தமிழர்களினதும் சொத்தாக, ஒரு கூட்டுறவு அமைப்பாக இந்தப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட வேண்டும்,”

என வேண்டுகோள் விடுத்தார் கலாநிதி பொ.இரகுபதி.

சமூகத்தின் முதன்மை அடையாளமாகிய மொழி பேணப்பட வேண்டும். அதற்காக அனைத்துலக நிலையில் ஒரு தமிழ்க் கற்றல், கற்பித்தல் மையம் உருவாக்கப்பட வேண்டும் என்பது தமிழ்த்துறைப் பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்களின் கோரிக்கையாக அமைந்திருந்தது.

மேலும் அவர் குறிப்பிட்ட இரு முக்கிய பரிந்துரைகள்:

1.எந்தெந்த நாடுகளில் தமிழ் கற்பிக்கப்படுகிறதோ அந்தந்த நாடுகளின் தேசிய மொழிகளில் தமிழ் மொழி பற்றிய ஓர் அறிமுக நுìல் எழுதப்பட வேண்டும்.

2. தமிழ்க் கல்விப் பாடத்திட்டங்கள் மறுஆய்வுசெய்யப்படவேண்டும். சூழலுக்கு ஏற்றவகையில், தமிழ் பயன்பாட்டு மொழியாக விளங்கக்கூடியதாக பாடத்திட்டங்கள் அமைய வேண்டும் என்பவையாகும்.

இன்று உலகெங்கும் கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்கிறார்கள் என்பது பொதுக் கணிப்பாகும்.

“துடிப்பும் ஆற்றலும் ஆட்படுத்தும் திறனும் கொண்ட ஈழத்தமிழ்ச் சமூகம், தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்த வலுவான இன அடையாளத்தைக் கட்டிக்காத்து வருகிறது,” எனக் கூறினார் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பி.சகாதேவன்.

புலம்பெயர்ந்த இந்திய சமூகம், புலம்பெயர்ந்த சிங்களவர் சமூகங்களுடன் ஒப்புநோக்கி, புலம்பெயர் ஈழத் தமிழ் சமூகத்துக்கு உள்ள பலங்களையும் சவால்களையும் அவர் விளக்கினார்.

“திட்டம்போட்டு நிர்வகிப்பதில் இலங்கைத் தமிழர்கள் திறமையானவர்கள். மற்ற சமூகங்களிடம் காணப்படாத அவர்களின் பலம் இது.”

“புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில் தங்களை நிலைப்படுத்திக்கொள்ள வேண்டிய அதேநேரத்தில், தாய்நாட்டின் அரசியலிலும் தங்கள் இடத்தைப் பெற வேண்டிய பொறுப்பும் அவர்களுக்கு இருக்கிறது.”

“இதில் சிங்களவர்கள் சிறிலங்காவுடன் தங்களை ஐக்கியப்படுத்திக்கொள்ள முடிகிறது. அவர்களுக்கு ஆதரவாக ஒரு நாடு இருக்கிறது. ஆனால் இலங்கைத் தமிழர் சமூகம் தனிமைப்படுத்தப்பட்ட சமூகம். தனது ஒற்றுமைக்கும் உயர்வுக்கும் தனது பலத்தையே நம்பியுள்ளது.”

“புலம்பெயர் இந்திய சமூகத்துக்கு இந்திய அரசாங்கத்திடமிருந்து கிடைப்பதுபோல், வாய்ப்புகளும் உதவிகளும் வரவேற்பும் அனுகூலங்களும் இலங்கைத் தமிழர் சமூகத்துக்கு இலங்கை அரசிடம் இருந்து கிடைப்பதில்லை.”

“இந்நிலையில் ஒரு புலம்பெயர் சமூகத்தின் பலம், அதன் அரசியல், பொருளாதார பலங்கள் மூலமே பெறப்படுகிறது எனும்நிலையில், இலங்கைத் தமிழர் சமூகம் கல்வி, அரசியல் கட்டமைப்பு, அறிவுப் பெருக்கம் ஆகியவற்றில் சிறக்க வேண்டும்.”

“புலம் பெயர் இலங்கைத் தமிழர் சமூகம் பலம் மிக்க ஒரு சமூகமாக உருவாக வேண்டுமெனில், குடியேறிய நாடுகளில் அரசியல் அந்தஸ்தைப் பெறவேண்டும். கல்வியில் ஆளுமை செலுத்த வேண்டும். மற்ற சமூகங்களுடன் அணுக்க உறவை வளர்க்க வேண்டும். வாழும் நாட்டில் இவற்றில் முக்கிய இடங்களைப் பெற வேண்டும்,”

என்றார் போராசியர் சகாதேவன்.

“எனினும் இலங்கை தமிழர் சமூகம், பலம் மிக்க சமூகமாக உருவாவது என்பது பெருமளவில் சொந்த நாட்டில் அமைதி நிலைநிறுத்தப்படுவதைப் பொறுத்தது.”

“இலங்கைத் தமிழர்களின் கடந்த காலம் உண்மையிலேயே பயங்கரமானது. நிகழ்காலம் கடினமானது. எதிர்காலம் பிரகாசமாகத் தெரிகிறது,”

என்றும் பேராசிரியர் பி.சகாதேவன் வலியுறுத்தினார்.

புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்கள், தாங்கள் வாழும் நாடுகளில் வசிக்கும் தமிழர்களின் மேம்பாட்டுக்குக் கைகொடுக்க வேண்டும். அதேநேரத்தில் ஈழத்தில் வாழும் தமிழ் மக்களுக்கும் உதவ வேண்டும் என்ற கருத்தை பலரும் முன்வைத்தனர்.

“இதற்கு வசதியாக உலகளாவிய ஒரு கட்டமைப்பும் விவரப் பட்டியலும் (Global Directory) உருவாக்கப்பட வேண்டும்,” என்று வலியுறுத்தினார் செல்வின் இரேனியூஸ்.

வடக்கு கிழக்குக்கான உடனடி மனிதாபிமான, மறுவாழ்வு தேவைகளுக்கான செயலகத்தின் (SIHRN) இயக்குநராக இருந்த திரு செல்வின் தற்போது நோர்வேயில் முதுநிலைப் பட்டக்கல்வியை மேற்கொண்டுள்ளார்.

“இடம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களுக்காகச் செயலாற்ற ஒரு தமிழர் வங்கி இல்லை, வழக்கறிஞர் குழாம் இல்லை,” எனக் குறிப்பிட்ட திரு செல்வின் “ஈழத் தமிழ்ச் சமூகத்துக்கு உதவ வேண்டிய கடப்பாடும் பொறுப்பும் உயர்ந்த நிலையில் இருக்கும் ஈழத்தமிழர்களுக்கு உள்ளது,” எனச் சுட்டிக் காட்டினார்.

“முதலீட்டாளர்களாகவும் தொழில் அதிபர்களாகவும் வர்த்தகர்களாகவும் அறிஞர்களாகவும் விளங்கும் ஈழத் தமிழர்கள் தங்களது சேவைகளை ஈழத் தமிழருக்கும் நீடிக்க வேண்டும். முடிந்தால் எங்களது சமூகக்கான சேவைத் துறைகளில் நாமே முதலிட வேண்டும். உதாரணமாக ஈழத்தமிழ் மக்களின் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப வங்கிச் சேவைகள், சட்ட சேவைகள், ஆலோசனை சேவைகள் போன்றவற்றை அனைத்துலக அளவில் ஆரம்பிக்கலாம்.

இடம்பெயர்ந்து வாழும் வடக்கு, கிழக்கு மக்களின் மறுவாழ்வுக்குக் கைகொடுக்க வேண்டிய கட்டாயக் கடமை நமக்குள்ளது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. இதற்கு வசதியாக நேர்மையான நோக்கத்துடனான, முறைப்படுத்தப்பட்ட ஒரு விவரப்பட்டியல் இணையத்தில் உருவாக்கப்பட வேண்டும். சேவைகள் கிடைக்கும் இடங்கள் - தேவைப்படும் சேவைகள், உதவி தேவைப்படுவோர் - உதவி செய்ய விரும்புவோர், போன்ற அனைத்து விவரங்களும் இதில் இடம் பெற வேண்டும்”

என்று விளக்கினார் திரு செல்வின்.

“புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள் கட்டாயமாகத் தாய்நாட்டுக்குத் திரும்ப வேண்டும் என்பதில்லை. எல்லைகள் கடந்த செயல்பாடுகள் மூலம் எங்களது சமூகத்தை நாம் கட்டியெழுப்ப முடியும்,” என்றார் கனடா வின்சர் பல்கலைக் கழகத்தின் சமூகவியல் மற்றும் மானுடவியல் துறைப் பேராசிரியர் சேரன்.

“முதலீட்டாளர்களாக, நிபுணத்துவ சேவையாளர்களாக, அறிவுசார் சேவையாளர்களாக, மேம்பாட்டு பணியாளர்களாக சுற்றுப்பயணிகளாகக்கூட ‘தாய்நாட்டு’ உருவாக்குவதிலும் கட்டியெழுப்புவதிலும் பங்களிக்க முடியும்,” என்று கூறினார் அவர்.

கனடாவில் செயல்படும் ஊர்ச்சங்கங்கள், முன்னாள் மாணவர் சங்கங்கள் போன்றவை சொந்த ஊர்களின் மறுகட்டுமானத்திலும் ஊர் மக்களின் மேம்பாட்டிலும் உதவுவதையும், இச்சங்கங்கள் மற்ற நாடுகளிலும் கிளைகள் அமைத்து, கட்டமைப்புகளை உருவாக்கி இருப்பது பற்றியும் அவர் விவரித்தார்.

இவ்வாறு உள்ள பல்வேறு அமைப்புகளும் சங்கங்களும் ஒன்றுடன் ஒன்று போட்டி போடுவதைத் தவிர்ந்து, ஒன்றிணைந்து சேவைகளைப் பகிர்ந்துகொள்ளும்போது புலம்பெயர் ஈழத்தமிழ் சமூகம் வலுப்பெற முடியும் என்பது பேராசிரியர் சேரனின் கருத்து.

ma-09.jpg

இத்தகைய அமைப்புகள், சங்கங்கள், அவற்றின் சேவைகள் அனைத்தும் ஒன்றிணைக்கப்பட்ட முறையான இணைய விவரப்பட்டியல் உருவாக்கப்பட வேண்டும் என சேரனும் தெரிவித்தார்.

அதேநேரத்தில் இவ்வாறு வெளிப்படையாக விவரங்களை வெளிப்படுத்துவதிலும் சிக்கல்கள் உள்ளன. விவரங்கள் வேறுகாரணங்களுக்காக பயன்படுத்தக்கூடிய அபாயங்களும் உள்ளன என்பதையும் அவர் சுட்டினார்.

செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு பல நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் பயங்கரவாதத் தடைச் சட்டம் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களைப் பெரிதும் பாதிக்கிறது என்பதை பல சம்பவங்களுடன் எடுத்துக்காட்டினார் அவர்.

“பயங்கரவாதிகள், கிரிமினல்கள் என்ற ஒரு படிவார்ப்பு உருவாக்கப்படுகிற முயற்சிகள் நடைபெற்று வருகின்றன,” என்று குறிப்பிட்ட சேரன், இவற்றை எதிர்த்து ஈழத்தமிழர் அடையாளத்தை துணிவாக நிலைநிறுத்தும் தெளிவான வழிமுறைகள் பற்றியும் விரிவாகக் குறிப்பிட்டார்.

இலங்கையில் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் பாரதூரமான அபாயங்களைத் தெளிவாக எடுத்துக்கூறினார் சிறிலங்காவின் தேசிய சமாதான மன்றத்தின் தலைமை இயக்குநர் கலாநிதி ஜெகான் பெரெரா.

அதேநேரம் புலம்பெயர் தமிழர் ஊடகங்கள் பற்றி சரிவரத் தெரியாமல் பொத்தாம் பொதுவாக அவர் தெரிவித்த கருத்துகளுக்கு கடுமையான கண்டனங்களுக்கும் உள்ளானார்.

ஆஸ்திரேலியாவின் கிரி}பித்ஸ் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறைப் பேராசியர் செல்வா செல்வநாயகம் “வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்களின் நல்வாழ்வு” என்ற தலைப்பில் படித்த கட்டுரை சர்ச்சைகளைக் கிளப்பியது.

வடக்கு கிழக்கில் வாழும் மக்களின் நல்வாழ்வுக்காக ஒழுங்கமைக்கப்பட்ட அறிவிக்கப்படாத ஓர் அரசாங்கம் செயல்படுகிறது எனக்கூறி அதன் செயல்பாடுகளை அவர் விளக்கினார்.

இந்த அமைப்புக்கு உதவுவதில் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் புலம்பெயர் ஈழத் தமிழர் சமூகம் நம்பிக்கை கொண்டுள்ளது. அதற்கு ஆதரவு அளிப்பது பயனுள்ளது எனக் கருதுகிறது.

சிறிலங்கா அரசாங்கமும் சிங்கள மக்களும் தமிழ் மக்களை “பயங்கரவாதிகள்” என முத்திரை குத்தி தங்களைத் தாங்களே பார்த்துக்கொள்ளட்டும் என விட்டுவிடாமல் சமமாக மதித்து நடக்க வேண்டும் என அவர் கூறியது, அங்கு கூடியிருந்த சிலரிடம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

புலம் பெயர் ஈழத் தமிழர்களின் பொருளியல் நடவடிக்கைகள் குறித்து முக்கியமான ஆய்வை முன்வைத்தார் நியூசிலாந்தின் ஆக்லாந்து பல்கலைக்கழகப் பேராசிரியர் வி.நித்தியானந்தம்.

புலம்பெயர் ஈழத் தமிழ்ச் சமூகம், பல சிக்கல்கள் எதிர்ப்புகளுக்கிடையே எவ்வாறு வளர்ச்சி கண்டு வந்துள்ளது, தன்னைத்தானே வளர்த்துக்கொள்ள வேண்டிய சமூகமாக எப்படி உருவாகியுள்ளது, இச்சமூகம் வெளிப்புறத்திலும் தாய்நாட்டிலும் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் - மாற்றங்கள், சிறிலங்கா அரசாங்கத்திடம் எதிர்நோக்கும் சவால்கள் போன்ற பல்வேறு விடயங்களை அவரது களப்பணி ஆய்வு முன்வைத்தது.

மாநாட்டைத் தொடங்கி வைத்துச் சிறப்புரை ஆற்றியவர் சிங்கப்பூர் தென்கிழக்கு ஆசிய கல்விக் கழகத்தின் இயக்குநர் திரு கே.கேசவபாணி.

அரசதந்திரியுமான அவர், பல்வேறு காரணங்களுக்காக புலம்பெயர்ந்து வாழும் ஏறக்குறைய 180 மில்லியன் உலக மக்களின் வரலாறு குறித்துப் பேசினார்:

“இனக் கலவரம் நடைபெறும் நாடுகளில் அரசாங்கத்தாலோ அல்லது போராட்டக் குழுக்களாலோ இராணுவப் பலத்தை பயன்படுவதன் மூலம் நிலையான தீர்வை ஒருபோதும் ஏற்படுத்த முடியாது, இதில் ஏதாவது ஒரு தரப்பினர் அதீத சக்தியுடையவர்களாக தங்கள் நியாயத்துக்கு அனைத்துலக சமூகத்தின் அங்கீகாரத்தைப் பெற்றால் ஒழிய இதில் சாத்தியமில்லை.”

“அத்தகைய தீர்வில் அரசியல் விட்டுக்கொடுப்புகள், தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம், அதிகாரப் பகிர்வு, அமைதி முயற்சிகள் போன்றவை இருக்க வேண்டும். கம்போடிய பிரச்சினையில் இந்த முறையே கையாளப்பட்டது. 12 ஆண்டுகளாகத் தொடர்ந்த கம்போடிய உள்நாட்டுப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் அனைத்து உள்ளூர் தரப்புகளும் ஐக்கிய நாடுகள் சபையும் ஈடுபடுத்தப்பட்டன. சுதந்திரமான நேர்மையான தேர்தலை நடைபெறுவதை ஐநா மேற்பார்வையிட்டது. கம்போடியாவில் அமைதி ஏற்பட ஆசியானும் உதவிக்கரம் நீட்டியது.”

“இத்தகைய சூழலில் புலம்பெயர்ந்து வாழ்பவர்கள் தாய்நாடு திரும்புவது பற்றி சிந்திக்க முடியும். ஆனால் கொடூரமான உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், இலங்கையின் புலம்பெயர் சமூகத்துக்கு அத்தகைய எதிர்காலம் இன்னும் வரவில்லை என்றே சொல்ல வேண்டும்.

அரசாங்கத்துக்கும் போராளிகளுக்கும் இடையே தொடரும் போர், போராடும் இரு முக்கிய சமூகங்களுடையுள்ளே நெருக்கடிநிலையை வெளிப்படுத்துகிறது. இது நம்பிக்கை தருவதாக இல்லை.

அதேநேரத்தில் மற்ற நாடுகளில் அமைதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அச்சே பிரச்சினையின் தீர்வு - ஒரு காலத்தில் தீர்க்கவே முடியாததாக தென்பட்டது - தீர்வுக்கான முயற்சி இருந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை அது எடுத்துக் காட்டுகிறது.

அச்சேயின் அமைதி நிலை, பலர் நாடு திரும்ப வழிகோலியது. இந்தோனீசியாவும் அனைத்துலக சமூகமும் இந்த நாடு திரும்புதலை சாத்தியமாக்கி. இதே முறை திமோர் லெஸ்டியிலும் (கிழக்குத் திமோர்) கையாளப்பட்டது,” என்று கூறிய அவர்,

படிப்படியாக 30 ஆண்டுகாலமாக போராட்டத்துக்குப் பின்னர் அனைத்துலக உதவியுடன் அச்சேயில் அமைதித் தீர்வு ஏற்பட்ட வழிமுறைகள் பற்றி விவரித்தார்.

கடைசியில் சுனாமி அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்தது என்று கூறிய அவர், “சுனாமி அச்சே, இலங்கை இரு நாடுகளையும் தாக்கியது. அச்சேயில் அமைதி சாத்தியமென்றால், ஏன் இலங்கையில் சாத்தியமாகாது,” எனக் கேட்டார்.

இலங்கையின் அமைதி ஏற்பட வேண்டுமென்றால், அனைத்து இலங்கை நாட்டுக் குடிமக்களுக்கும் அரசியல் அதிகாரத்தில் சம உரிமை வேண்டும். சமூக பொருளாதாரத்தில் சமபங்கு வேண்டும். சட்டத்தின் பாதுகாப்பை, குறிப்பான மனித உரிமைகளில் அனைவரும் அனுபவிக்க வேண்டும். இந்த அடித்தளத்திலேயே நிலையான அமைதி குறித்த நம்பிக்கையை ஏற்படுத்த முடியும்,” எனக்கூறினார் திரு கேசபாணி.

ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த கலாநிதி டக்மர் ஹெல்மான் ராசநாயகம், லண்டனைச் சேர்ந்த ஆய்வாளர் எஸ்.விசாகன், பொறியியலாளரும் சமூகப் பணியாளருமான ஜெய் ஜெயதீசன், தமிழ் தகவல் மையத்தின் திரு வி.வரதகுமார், சிங்கப்பூரின் டொக்டர் ஆர்.தேவேந்திரன், மலேசியாவின் டத்தோ டொக்டர் டி.எம். துரையப்பா, மலாயா பல்கலைக்கழக இந்தியவியல் கற்கைநெறித் துறைத் தலைவர் கலாநிதி எஸ்.குமரன், டத்தோ ராஜேந்திரன் செல்லப்பா, டொக்டர் ஜான் தவசெல்வம், பேராசிரியர் ராஜா ராசைய்யா, கே.மனோகரன் போன்றோரும் கட்டுரைகள் படைத்தனர்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பேராசிரியர் இந்திரபாலா, டொக்டர் எம்.குணசிங்கம், பேராதனைப் பல்கலைக்கழகப் பேராசியர் எம்.நுமான், மட்டகளப்புப் பல்கலைக்கழகப் பேராசியர் சித்ரலேகா மௌனகுரு போன்றோர் கடைசி நேரத்தில் மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை.

இறுதிநாள் நடைபெற்ற பரிந்துரைக் கூட்டத்திலும் தீர்மானம் எடுக்கும் நிகழ்விலும் முக்கியமான பேராசிரியர்கள் பலர் கலந்துகொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://4th-tamil.com/vannasiraku/?p=64

ma-01.jpg

ma-02.jpg

ma-03.jpg

ma-04.jpg

ma-05.jpg

ma-06.jpg

ma-07.jpg

ma-08.jpg

Edited by Tamilmagan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.