Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் இப்போதும் விடுதலைப்புலிகளை ஆதரிக்கிறேன். தொல். திருமாவளவன்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல். திருமாவளவனைக் கைது செய்ய வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது. தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் இயக்கத்தை அவர் தீவிரமாக ஆதரித்துப் பேசுவதற்கு எதிராக, காவல்துறையிடம் புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறை நடவடிக்கை எடுக்கத் தவறினால் நீதிமன்றத்தை நாடும் அடுத்தகட்ட முயற்சியிலும் இறங்கியிருக்கிறார்கள் என்ற பேச்சும் உள்ளது. இந்தச் சூழ்நிலையில்தான் நாம் திருமாவளவனைச் சந்தித்தோம்...

விடுதலைப் புலிகளை நீங்கள் தொடர்ந்து ஆதரித்துப் பேசி வருகிறீர்கள். அதனால் உங்களைக் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருவது பற்றி?

``கைது, சிறை ஆகியவற்றிற்கு அஞ்சி நியாயத்தைப் பேசத் தவறினால் மனிதனாக இருப்பதில் பொருள் இல்லை. கொடுமையைக் கண்டு குமுறாமல், அநீதிக்கு எதிராக ஆத்திரப்படாமல், சட்டத்திற்காகவும், சிறைக்காகவும் பயந்து நடுங்கி உண்மையை உலகுக்கு எடுத்துச் சொல்லத் தயங்கும் கோழைத்தனத்தை நான் கொண்டிருக்க முடியாது. அப்படி ஒரு வாழ்க்கையே தேவையில்லை என நினைப்பவன் நான். இன்று நேற்றல்ல. கடந்த இருபத்தைந்து ஆண்டு காலமாகவே விடுதலைப் புலிகளையும் அதன் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களையும் நான் ஆதரித்தே வருகிறேன். அந்த நிலைப்பாட்டை எந்த சந்தர்ப்பத்திலும் நான் மாற்றிக் கொள்ள முடியாது. இன்னும் சொல்லப்போனால் புலிகளோடு ஆயுதம் ஏந்திப் போராட முடியவில்லையே என்ற வருத்தம்தான் எனக்கிருக்கிறதே ஒழிய, ஆதரித்தால் கைது செய்வார்களே என்ற அச்சம் சிறிதும் இல்லை.

இங்கே விடுதலைப் புலிகளை எதிர்க்கும் சில தலைவர்கள் வரலாற்றை அறிந்துகொள்ள, தெரிந்து கொள்ளத் தவறியதால், அல்லது தெரிந்து கொள்ளாமலேயே இருப்பதால் அப்படி எதிர்க்கிறார்கள் என்பதே என் கருத்து. வெள்ளையர்களின் ஆட்சிக் காலத்தில் இலங்கையில் உள்ள மலையகத்தில் தேயிலைத் தோட்ட வேலைக்காக தாய்த் தமிழகத்திலிருந்து தமிழர்கள் பல லட்சம் பேர் கப்பல் ஏற்றப்பட்டார்கள். சுதந்திரத்திற்குப் பிறகும் அங்கே உள்ள சிங்கள அரசு மலையகத் தமிழர்களுக்குக் குடியுரிமையும், வாக்குரிமையும்கூடத் தரவில்லை. மறுத்தது. கொத்தடிமைகளாகவே பார்த்தது. `இந்த மண்ணிலேயே நூற்றாண்டுகளாக வாழும் மலையகத் தமிழனுக்கு எல்லா உரிமைகளையும் கொடு' என்று கேட்டுப் போராடினார் ஈழத் தந்தை செல்வா. பிரச்னையே அங்கிருந்துதான் தொடங்கியது. எதிர்ப்பவர்கள் இந்த வரலாற்றைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

இன்றும்கூட அங்கே சுமார் நான்கு லட்சம் மலையகத் தமிழ் மக்கள், அதாவது தாய்த் தமிழகத்து வம்சாவழிகள் ஓட்டுரிமையும், குடியுரிமையும் இல்லாமல்தான் கொத்தடிமைகளாக இருக்கிறார்கள். அதற்காக இங்கே `எதிர்ப்பு'ப் பேசும், தலைவர்கள் யாரும் வெட்கப்படவில்லை.

வேதனைப்படவில்லை. இந்திய பிரஜைகளின் வம்சாவழித் தமிழர்களை சிங்கள அரசு இன்றைக்கும் கொத்தடிமைகளாக வைத்திருக்கிறதே என்று வெட்கப்பட வேண்டாமா? தேசப் பற்றாளர்களாக நடிக்கும் கதர்ச் சட்டைக்காரர்கள் சிலர் இதில் வெட்கப்படாமல் இருப்பது ஏன்? இந்த நியாயத்தைத்தான் நான் எடுத்துச் சொல்கிறேன். கேட்கிறேன்.''

வன்முறையாளர்களான புலிகளை ஆதரித்து நியாயம் பேசுவது சரியா என்பதுதானே சில காங்கிரஸாரின் குற்றச்சாட்டு?

``வன்முறை எது, விடுதலைப் போராட்டம் எது என்ற வித்தியாசம் தெரியாத தலைவர்களைப் பற்றி என்ன கூறுவது? கோழிக்குஞ்சு ஒன்றை பருந்து தன் இரைக்காக தூக்கிச் செல்வது வன்முறை வெறியாட்டம். தன் குஞ்சை மீட்க கோழி நடத்தும் எதிர்ப் போராட்டம் விடுதலைக்கான போராட்டம். அங்கே சிங்கள அரசு நடத்துவதுதான் வன்முறை வெறியாட்டம். ஈழ மக்கள் என்ற கோழிக்குஞ்சை மீட்க புலிகள் நடத்துவது விடுதலைக்கான போராட்டம். இதை நான் ஆதரிக்கின்றேன். `கைது செய்' என்ற குரலுக்கு அஞ்சி என் நிலைப்பாட்டை என்றுமே மாற்றிக்கொள்ள மாட்டேன்.''

ஏதோ சிலர் அல்ல; உங்கள் கூட்டணியிலேயே உள்ள காங்கிரஸாரும், பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அ.தி.மு.க. தலைமையும்தான் உங்களைக் கைது செய்யச் சொல்கிறார்கள்...

``தமிழக மக்களிடமே ஓட்டு வாங்கி, பதவியில் அமர்ந்துகொண்டு அந்த மக்களுக்கே துரோகம் செய்கிறார்கள். இனத்திற்கும், மொழிக்கும் துரோகியாக நிற்கிறார்கள். அவர்களின் நோக்கம் எல்லாம் தி.மு.க.வை நிர்ப்பந்திப்பது. நெருக்கடிக்குள் தள்ளுவது. அதற்கு திருமாவளவனைப் பயன்படுத்துகிறார்கள்.

என்னைக் கைது செய்ய வைப்பதன் மூலம் தி.மு.க.விற்கும், விடுதலைச் சிறுத்தைகளுக்கும் பிளவை ஏற்படுத்திவிட முடியும் என கனவு காண்கிறார்கள். அது ஒரு காலமும் நடக்காது.

இன்னொன்று... காங்கிரஸார் என்று கூறுகிறீர்கள். எந்த காங்கிரஸ் என்று கூறவேண்டும். இங்கே `அம்மா' காங்கிரஸும் இருக்கிறது. அன்னை சோனியா தலைமையில் உள்ள காங்கிரஸார் ஏதும் கூறவில்லை. ராஜீவ் கொலையாளிகளையே `மறப்போம். மனிதநேயத்தைக் காப்போம்' என்று பெருந்தன்மையோடு மன்னித்து, தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற கருத்துக் கூறியவர்தான் அன்னை சோனியா. அவரே அப்படி இருக்கும்போது, இங்குள்ள சிலர் காங்கிரஸ் என்ற போர்வையில் ராஜீவ் படுகொலையையே இன்னமும் கூறிக்கொண்டிருந்தால் என்ன பொருள்? `அம்மா' காங்கிரஸுக்கான பணியைச் செய்கிறார்கள். அ.தி.மு.க.வின் அரசியல் காய் நகர்த்தலுக்கு ஆதரவாகவும், டெல்லி காங்கிரஸ் தலைமைக்கு எதிராகவும் இருக்கிறார்கள் என்றே பொருள்.

அடுத்து, அ.தி.மு.க. பற்றிக் கூறவேண்டும். எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.தி.மு.க. என்பது ஈழ மக்களையும், விடுதலைப் புலிகளையும் ஆதரிப்பதாகவே இருந்தது. ஆனால் இப்போது இருப்பது `அம்மா' அ.தி.மு.க. `அம்மா'வின் நிலைப்பாடு ஈழ மக்களுக்கும், புலிகளுக்கும் எதிரானது. குறிப்பாக ஒரு தமிழனான பிரபாகரன் உலகம் போற்றும் மாவீரனாக எழுந்து நிற்பதை அவரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அதற்கு ராஜீவ் படுகொலையை முன்னிறுத்தி புலிகளை எதிர்ப்பதாகச் சொல்கிறார். நான் கேட்கிறேன், அமரர் ராஜீவ் காந்தி என்ன அ.தி.மு.க.விற்குத் தலைவராகவா இருந்தார்? ராஜீவின் மனைவியும், புதல்வர்களுமே அதை மன்னித்த பிறகு `அம்மா' ஏன் அதையே பிடித்துக் கொண்டு தொங்க வேண்டும்? சில காங்கிரஸாருக்கும், `அம்மா'விற்கும் சொல்வது இதுதான். ஓர் இனத்திற்கான விடுதலைக்கு முட்டுக்கட்டையாக இருந்து தமிழினத்தின் துரோகிகளாக மாறிவிடாதீர்கள்!''

காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க.வும் கூட ஈழ மக்கள் பிரச்னையை ஆதரிக்கிறார்கள். அந்த வகையில் சிங்கள அரசை எதிர்க்கிறார்கள். விடுதலைப் புலிகளைத்தான் வன்முறை இயக்கம் என எதிர்க்கிறார்கள். புலிகள் மூலமான ஈழ விடுதலை சரியானதல்ல என்கிறார்களா?!

``அப்படிக் கூறுவது அவர்களின் `அரசியல் அறியாமை' அல்லது மோசடி, ஏமாற்று நாடகம் என்றே கூறுவேன். அங்கே புலிகள் வேறு, ஈழ மக்கள் வேறு அல்ல. உலகில் எந்த ஒரு விடுதலைப் போராட்ட இயக்கமும் புலிகளைப்போன்று இத்தனை காலமும் தாக்குப்பிடித்து நின்றதில்லை. அந்த அளவிற்கு மக்கள் ஆதரவு இருப்பதால்தான் இன்று வரையிலும் அவர்களால், பன்னாட்டு ஆயுதக்குவியலோடு போரிட்டு வரும் சிங்கள ராணுவத்திற்கு எதிராக நிற்கமுடிகிறது. தனி ஈழம் என்பது விடுதலைப் புலிகளின் வயிற்றில் சுமக்கும் கரு. அதை அவர்கள்தான் பிரசவித்தாக வேண்டும். அவர்கள் மூலமே அந்த விடுதலை கிடைத்தாக வேண்டும்.

இவர்கள் இங்கே மக்களை ஏமாற்ற, `ஈழ மக்கள் பிரச்னையை ஆதரிக்கிறோம். புலிகளை எதிர்க்கிறோம்' என்கிறார்கள். ஈழ விடுதலையை யார் வாங்கித் தருவார்கள்? அ.தி.மு.க.வும், `சில' காங்கிரஸாருமா? அப்படிச் சொல்லட்டும். நாங்கள் அவர்களை ஆதரித்துவிட்டுப் போகிறோம்.''

தமிழக முதல்வர் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் `இலங்கையில் உடனடி போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு தலையிட்டு வற்புறுத்த வேண்டும்' என்ற தீர்மானம் அப்படியே உள்ளதாக குற்றச்சாட்டு எழுகிறதே? கலைஞர் இதில் மெத்தனமாக இருக்கிறார் என்ற குற்றச்சாட்டும் எழுப்பப்படுகிறது. இதில் உங்கள் கருத்து என்ன?

``சமத்துவப் பெரியார் கலைஞர் அவர்களின் மொழிப்பற்றும் இனப்பற்றும் எப்படிப்பட்டது என்பது அவரை அறிந்தவர்களுக்குத் தெரியும். தனிப்பட்ட முறையில் அவரது வேகம் என்பது வேறு. அரசு எந்திரமாகச் செயல்படுவது என்பது வேறு. கலைஞரின் நிர்ப்பந்தத்தின் பேரில்தான் இப்போது மத்திய அரசு அசைந்துள்ளது. `தாமதம்' என்ற காரணத்தைக் கூறி `சொன்னபடி எம்.பி. பதவிகளை வாபஸ் வாங்கினால், காங்கிரஸ் ஆட்சி கவிழ வாய்ப்பு ஏற்படும். பிறகு யாரிடம் போய் `செய்யுங்கள்' என்று கேட்க முடியும்? அதனால்தான் தாமதமாகக் காய் நகர்த்துகிறார் எனத் தெரிகிறது. அவர் நினைத்ததைச் செய்வார் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்.''

இலங்கைத் தமிழர்களுக்கான நிதிவசூல் என்பது `போர் நிறுத்தம் செய்ய வேண்டும்' என்ற கோரிக்கையை மழுங்கடிக்கச் செய்வது, பின்னுக்குத் தள்ளுவது என்ற எதிர்ப்புக் குரலுக்கு என்ன சொல்கிறீர்கள்?

``ஆமாம். இது திட்டமிடப்பட்டே, உள்நோக்கத்தோடு செய்யப்பட்டதா என்று தெரியவில்லை. தமிழகத்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக எழுந்த பெரிய கொந்தளிப்பு இப்போது கொஞ்சம் அடங்கி விட்டதாகவே படுகிறது. இலங்கை ராணுவத்தின் குண்டு வீச்சுக்கு அப்பாவி மக்கள் பலியாவதை உடனே தடுத்து நிறுத்தவேண்டும் என்ற போர்க்குரல் மங்கி, இப்போது எங்கு பார்த்தாலும் `நிதி கொடுங்கள், நிதி கொடுங்கள்' என்ற குரலே எதிரொலிக்கிறது. அங்கே போரை நிறுத்தாமல், நிதி வசூல் செய்தும் பயன் இல்லை. குண்டு மழைகளுக்கிடையேவா `போய்ச் சாப்பிடுங்கள், மருந்திட்டுக் கொள்ளுங்கள்' என்று கொடுக்க முடியும்? ஆகவே முதலில் `போர் நிறுத்தம்' என்பதுதான் மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டியது. முதல்வரிடம் நாங்களும் அதை எடுத்துக் கூறி வருகிறோம்.''

இலங்கையிலிருந்து இங்கே தூதுவராக வந்து சென்ற பசில் ராஜபக்சே, `போர் நிறுத்தம் செய்யவேண்டும் என்று என்னிடம் இந்திய பிரதமர் ஏதும் கூறவில்லை' என்றே கூறியிருக்கிறார். ஆக உங்களின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் தீர்மானத்தை `மத்தியில்' கண்டு கொண்ட மாதிரி தெரியவில்லை என்பதுதானே பொருள்?

``அதில் எந்தளவிற்கு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை. உண்மையிருக்கும் பட்சத்தில் மத்திய அரசு தமிழினத்திற்குத் துரோகம் இழைப்பதாகத்தான் அர்த்தம். தமிழக முதல்வர் தொடர்ந்து நிர்ப்பந்தம் கொடுக்க வேண்டும். அப்படிச் செய்வார் என நம்புகிறோம். சிங்களவர்களுக்கு ஆயுதம் கொடுத்துஉதவுவதில் காட்டிய மத்திய அரசின் வேகம், போர் நிறுத்தத்திலும் இருக்க வேண்டும்.''

இலங்கை அரசுக்கு நாங்கள் ஆயுதம் ஏதும் கொடுக்கவில்லை என்கிறாரே மத்திய அமைச்சர்?

``ஆயுதம் கொடுத்தால்கூட பரவாயில்லை. ஏதோ அண்டை நாட்டிலுள்ளவர்களுக்கு உதவி மனப்பான்மையில் செய்கிறார்கள் எனலாம். ஆனால் மத்திய அரசு அதைவிட பல படிகள் மேலே சென்று உதவியிருக்கிறது. வெளி விவகாரத்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் பார்த்தால், இலங்கையின் முப்படைகளுக்கும் எந்தெந்த விதத்தில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்ற முழு விவரமும் இருக்கிறது. இன்றைக்கு அப்பாவி ஈழத் தமிழர்கள் மீது குண்டுவீசும் விமானங்களை ஓட்டுவதே இந்திய ராணுவம்தான் என்ற செய்தியும் இருக்கிறது. மிக நவீன வசதிகள் கொண்ட அந்தப் போர் விமானத்தை அவ்வளவு எளிதில் இயக்க முடியாது. அதிகப் பயிற்சிகள் தேவை. அப்படிப்பட்ட அனுபவம் இந்திய ராணுவத்திடம்தான் இருக்கிறது. இப்படி எல்லா வகையிலும் உதவியதோடு, நமது வரிப்பணத்தில் வாங்கிய ஆயுதங்களை சிங்களத்தவனுக்கு தூக்கி ஓசியில் கொடுத்துள்ளார்கள். ஒரு விதத்தில் பார்ப்பதென்றால் இது சிங்கள அரசு நடத்தும் போர் அல்ல. அவர்கள் மூலமாக இந்திய ராணுவம் நடத்தும் போர் என்றுதான் கூற வேண்டும்.''

`தடை செய்யப்பட்ட புலிகளுக்கு ஆதரவாகப் பேசும் திருமாவளவனை முதல்வர் கருணாநிதி கைது செய்யாததன் `நோக்கம்' என்ன? அவரும் புலிகள் ஆதரவாளர் என்பதுதானே' என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறுவது பற்றி?

``முதலில் தடை செய்யப்பட்ட இயக்கம் என்பதையே நான் எதிர்க்கிறேன். மக்களிடம் கருத்துக் கணிப்பு எடுத்த பிறகு தடை செய்யட்டும் என்பதே எமது கோரிக்கை. அடுத்தது, நான் 2002-ம் ஆண்டு போர் நிறுத்த சமயத்தில் இலங்கைக்குச் சென்று வந்தேன். `வன்னி' பகுதி எல்லாமும் பார்த்துவிட்டு அங்கிருந்து ராணுவப் பொறுப்பிலுள்ள யாழ் மாவட்டத்திற்குள் நுழையும் வரை பெண் புலிகள்தான் என்னைப் பாதுகாப்பாகக் கொண்டு வந்துவிட்டுச் சென்றார்கள். அதன்பிறகு இலங்கை ராணுவம் பாதுகாப்பாக அழைத்துச் சென்றது. திரும்பி வந்தது முதல் எல்லாமும் `அம்மா'விற்குத் தெரியும். அப்போது `பொடா' சட்டமும் இருந்தது. முதல்வராக இருந்த செல்வி ஜெயலலிதா அவர்கள் எந்தக் காரணத்திற்காக என்னை அப்போது கைது செய்யாமல் விட்டு வைத்தாரோ, அதே காரணம்தான் இப்போது கலைஞருக்கும் இருக்கும்.''

விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் கடத்திய வழக்கில் சிக்கிய வன்னி அரசுவை உடன் வைத்துக் கொண்டே முதல்வரைச் சந்திக்கிறீர்கள் என்பதுதானே முக்கிய குற்றச்சாட்டு!

``வன்னி அரசு எமது கட்சியின் நிர்வாகி. அவரை உடன்வைத்துக் கொண்டிருக்காமல் வேறு யாரை வைத்துக் கொள்வது? மேலும் அவர் `ஆயுதம் கடத்தினார் என்ற குற்றச்சாட்டே ஆதாரமற்ற, அர்த்தமற்ற குற்றச்சாட்டு. அவருக்குத் தெரிந்த மீனவர்களுக்கு படகு மோட்டார் இன்ஜின் தேவைப்பட, அதை தனக்குத் தெரிந்த வெளிநாட்டு நண்பர்களிடம் கேட்டிருக்கிறார். இயந்திரப் படகு மோட்டார் வந்தது. அவ்வளவுதான். வேறு எந்த ஆயுதத்தைக் காட்டினார்கள்? எதுவும் இல்லையே! பொதுவாகவே, இங்கிருந்து புலிகளுக்கு ஆயுதக் கடத்தல் என்பது சிரிப்பான ஒன்று. விடுதலைப்புலிகள் ஆயுத விஷயத்தில் எங்கேயோ இருக்கிறார்கள். சிங்களப் படைகளிடம் பிடித்த நவீன ஆயுதங்களே அவர்களிடம் நிறைய இருக்கிறது. நானோ, வன்னி அரசுவோ கடத்த வேண்டிய அவசியமே அவர்களுக்கு இல்லை.''

வைகோ, கண்ணப்பன், இயக்குநர்கள் சீமான், அமீர் கைது சரியானதென்று கருதுகிறீர்களா?

``என்னைப் பொறுத்தவரையில் அது தேவையற்ற கைது என்றே கருதுகிறேன். கைது செய்திருக்கக் கூடாது. புலிகள் இயக்கத்தை எதிர்த்துப் பேச என்ன கருத்துரிமை இருக்கிறதோ, அதே கருத்துரிமை ஆதரித்துப் பேசுபவர்களுக்கும் இருக்கிறது. அவர்கள் ஒன்றும் பிரிவினைவாதத்துக்கு ஆதரவாக இயக்கம்கூட்டி, ஆயுதம் சேகரித்து, அந்தத் தலைமைக்கு `தலைவர்' என்று கூறிக் கொண்டவர்கள் அல்ல. அப்படியொரு சூழ்நிலை வந்துவிடக்கூடாது என்று மத்திய அரசை கேட்டுக் கொள்வது ஒன்றும் பெரிய குற்றமில்லை.''

குமுதம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.