Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஜினி பாபாவும் பக்தகேடிகளும் - ஒரு நேருக்குநேர் !

Featured Replies

குசேலன் தோல்வி, ஒகேனக்கல் பிரச்சினையில் கர்நாடகத்திடம் மன்னிப்பு கேட்டது போன்றவற்றால் ரஜினியின் இமேஜ் அடிவாங்கியிருப்பது குறித்து யார் கவலைப்படுகிறார்களோ இல்லையோ எந்திரன் படத் தயாரிப்பாளரும் இயக்குநரும் பெரிதும் கவலைப்படுகின்றனர். ஈழத் தமிழர் பிரச்சினைக்காக நடந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்கமாட்டேனென அஜித் கூறியதாகச் செய்தி வெளியானதும் ஏகன் படம் பல வெளிநாடுகளில் ஈழத் தமிழர்களால் தடை செய்யப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஐங்கரன் இன்டர்நேஷனல் அஜித்தைக் கூப்பிட்டு உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளுமாறு ஆணையிட்டதாகவும் செய்திகள் வெளியாயின. இதே போன்று ரஜினிக்கும் உத்தரவு போடப்பட்டிருக்கிறது. கூடுதலாக மிகுந்த செலவுடன் தயாரிக்கப்பட்டு வரும் எந்திரன் படத்தை நன்கு சந்தைப்படுத்துவதற்காக பல ஆண்டுகளாக ரசிகர்களைச் சந்திக்காமல் தவிர்த்து வரும் ரஜினி உடனே சந்திக்குமாறும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.

தனது படத்தை வைத்து சுமார் 100 கோடியை கொள்ளையடிக்கவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இந்த சூப்பர் ஸ்டார் நவம்பர் 2 ஆம் தேதி ரசிகர்களை பெரிய மனதுடன் சந்தித்தார். அங்கு அவர் ஆற்றிய உரை என்ற உளரறல்களை எல்லோரும் அறிந்திருப்பார்கள் என்பதால் இங்கு தவிர்த்து விடுகிறோம். ஆனால் ரஜினி என்ற மாபெரும் சக்தியின் சகல வல்லமைகளைப் பற்றி ஊடகங்களும் அரசியல் உலகமும் கட்டி எழுப்பியிருக்கும் கருத்துலகம் உண்மையில் ஒரு ஊதிப் பெருக்கப்பட்ட பலூன்தான். அதற்கு ஆதாரமாக பாபா படம் வெளியான போது திருச்சியில் இந்த பலூனை வெடிக்கவைத்த கதையை இங்கு காலப்பொருத்தம் கருதி பதிவு செய்கிறோம்.

ரஜினி: பாபாவும் பக்த கேடிகளும் !

சில திரைப்படங்களுக்கு எழுத்தில் விமரிசனம் செய்தால் போதுமானதாக இருப்பதில்லை. சமகால வரலாற்றைத் திரித்து பம்பாய், ரோஜா போன்ற இந்து மதவெறி ஆதரவுப் படங்களை மணிரத்தினம் வெளியிட்டபோது அவற்றுக்கெதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினோம். பாலியல் வக்கிரங்களையே பண்பாடாக்கும் ஆபாசத் திரைப்படங்களுக்கு எதிராகவும் இத்தகைய நேரடி நடவடிக்கை தேவைப்பட்டிருக்கிறது.

ஆபாசமும் வக்கிரமும் படத்திற்குள்ளேதான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பாபா திரைப்படத்தைப் பொறுத்தவரை அதன் கதை இன்னதென்று தெரியாவிட்டாலும், படம் வெளியாவதற்கு முன்னால் அதற்குப் பத்திரிகையுலகம் அளித்த விளம்பரமும், தமிழகமெங்கும் பாபா வெளியீட்டையொட்டி நடைபெற்ற கூத்துகளும் ஆபாசம் வக்கிரம் என்ற சொற்களுக்குள் அடக்கவியலாத அளவுக்கு அருவருப்பானவை.இந்த அசிங்கம் தோற்றுவிக்கும் நாற்றத்தை எதிர்கொள்ளவியலாமல் மூக்கைப் பிடித்துக் கொண்டு ஒதுங்கிச் செல்வதென்பது தமிழ் மக்களின் சுயமரியாதைக்கே விடப்பட்ட சவாலாகக் கருதினோம். எனவே தமிழகத்தில் ரஜினியின் தலைமை ரசிகர் மன்றம் இயங்கும் திருச்சியில், பாபாவையும் பக்தகேடிகளையும் நேருக்கு நேர் சந்திப்பது என்று களத்தில் இறங்கினோம்.

பாபா வெளியிடப்பட்ட ஆகஸ்டு 15, 2002 அன்று தமிழகத்தின் சூழல் என்னவென்பதை வாசகர்களுக்கு நினைவுபடுத்துகிறோம். நெசவாளர்களுக்குக் கஞ்சித் தொட்டி வைத்த தி.மு.க வினர், முட்டை பிரியாணிக் கும்பலிடம் அடி வாங்கி, சிறை சென்ற முன்னாள் சபாநாயகர் உள்ளிட்ட 110பேர் கண்டிசன் பெயிலில் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருந்தனர். நெசவாளர்கள் ஆங்காங்கே போராடிக் கொண்டிருந்தனர். காவிரியில் தண்ணீர் விடாமல் கர்நாடகம் அடாவடித்தனம் செய்து கொண்டிருந்தது. தஞ்சை பஞ்சபூமியாகி விவசாயிகள் எலிக்கறி தின்னும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர். தமிழகமெங்கும், ஆசிரியர் போராட்டம், வழக்குறைஞர் போராட்டம்.

இந்தச் சூழலில் தமிழகப் பத்திரிகைகளில் பாபாதான் அட்டைப்படக் கட்டுரை அல்லது முக்கியச் செய்தி. இதை விடப் பெரிய பூச்செண்டை பாபாவைத் தவிர யாரும் ஜெயலலிதாவுக்கு வழங்கியிருக்க முடியாது. அந்த அளவிற்கு இருட்டடிப்பு செய்யப்பட்டன மக்கள் பிரச்சினைகள்.பாபா வெளியீட்டிற்கு இரண்டு நாட்கள் முன் ராமதாஸ் ரஜினியைப் பற்றித் தெரிவித்த விமரிசனம் பத்திரிகைகளில் பெற்ற முக்கியத்துவத்தைக் காட்டிலும், ராமதாசுக்கு ரஜினி ரசிகர்கள் தமிழகமெங்கும் கொடும்பாவி கொளுத்திய செய்திதான் முக்கியத்துவம் பெற்றது. ரசிகர்கள் “கொந்தளிப்பு - ஆவேசம்” என்றும் ரஜினி மட்டும் தடுத்து நிறுத்தாமலிருந்தால் ரசிகர்கள் தமிழ்நாட்டையே கொளுத்தி விடுவார்கள் என்பது போலவும் ஒரு பயங்கரத் தோற்றத்தையும் உருவாக்கின பத்திரிகைகள்.

தங்கள் முகத்தை பூதக்கண்ணாடி வழியே பார்த்து தைரியம் பெற்ற ரசிகர்கள் எனப்படும் தெள்ளவாரிகள் கூட்டம் ” ராமதாசையும் திருமாவளவனையும் பொடாவில் கைது செய்” என்று அறிக்கை விட்டு தங்கள் அரசியல் பார்வையைத் தெளிவுபடுத்தியது; இதுவும் மாலைப் பத்திரிக்கைகளின் முதல் பக்கச் செய்தியானது.

திருச்சி நகரமோ பாபா நகரமாகவே இருந்தது. ஷாகுல்ஜி (ஷாகுல் ஹமீது) தலைமையில் அதிகாரபூர்வ ரசிகர் மன்றம்; கலீல்ஜி (கலீல்) தலைமையில் போட்டி ரசிகர் மன்றம். மாவட்டத்தில் மொத்தம் 550 கிளைகள், இரு ரசிகர் மன்றங்களுக்கிடையிலான போட்டியில் திருச்சி நகரத்தின் எல்லாச் சுவர்களுக்கும் ஆயில் பெயிண்ட் அடித்து விட்டனர். ஒரு சுவர் விளம்பரத்துக்கு 3000 ரூபாய் என்று மதிப்பிட்டாலும் மொத்தம் சுமார் 18 லட்சம் ரூபாய்க்கு (600 இடங்களுக்கு மேல்) பாபா விளம்பரம் செய்திருந்தனர். விளம்பர வாசகங்களைப் படித்தால் தன்மானமுள்ள வாசகர்களுக்கு அது கொலை வெறியை ஏற்படுத்தும் என்பதால் எழுதாமல் விடுகிறோம்.

இவையன்றி, சுவரொட்டிகள். ரஜினி திரைப்படத்தின் தயாரிப்பு செலவு 5 கோடியென்றால் ரசிகர்கள் செய்யும் விளம்பரச் செலவு 10 கோடி என்பதை ‘படையப்பா’ படம் வெளிவந்த போது உரிய விவரங்களுடன் புதிய கலாச்சாரத்தில் எழுதியிருக்கிறோம். மூன்றாண்டுகளுக்குப் பிறகு ‘தலைவர்’ படம் வருகிறதென்பதால் விளம்பரம் எப்படி இருந்திருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.ரஜினியின் நண்பரும் தொழில் கூட்டாளியுமான முன்னாள் காங்கிரசு எம்.பி அடைக்கலராஜின் கொட்டகை உட்பட 3 திரையரங்குகளில் படம் திரையிடப்பட்டது. ஆகஸ்டு - 15 அன்று மட்டும் 5 திரையரங்குகளில் அன்றாடம் 5 காட்சிகள்.

ஆகஸ்டு - 14 ஆம் தேதியன்று போலிச் சுதந்திரத்தை அம்பலப்படுத்தி ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியிருந்த திருச்சி நகர மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தோழர்கள், ஆகஸ்டு - 15 ஆம் தேதியன்று பாபா திரையிடப்படும் ரம்பா திரையரங்கின் வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கும் கண்டன ஊர்வலத்திற்கும் போலீசிடம் அனுமதி கேட்டனர். “சுதந்திர தினத்தன்று குடிமக்கள் எந்த விதமான ஜனநாயக உரிமையையும் பயன்படுத்த அனுமதிப்பது வழக்கமில்லை” என்ற புனிதமான மரபை போலீசார் சுட்டிக் காட்டினர். 16 ஆம் தேதி அனுமதியளிப்பதாக வாக்களித்தனர்.

“பாபாவுக்குப் பால்குட ஊர்வலம் நடத்த அனுமதித்தால் அதை எதிர்த்து காலிப்பானை ஊர்வலம் நடத்துவோம் ” என்று போலீசை எச்சரித்தோம். பால்குட ஊர்வலத்தை அனுமதிக்க மாட்டோமென உறுதியளித்தனர் போலீசு அதிகாரிகள். ரஜினியின் படம் வெளியாகும் நாளன்று நகரம் எப்படி இருக்குமென்பதைத் தமிழக மக்களுக்கு விளக்கத் தேவையில்லை. சுதந்தி தினத்தன்று பிராந்திக் கடை திறக்கக்கூடாது என்ற ‘ கருப்புச் சட்டம்’ அமலில் இருப்பதால் 14 ஆம் தேதியே போதுமான அளவு ‘ ஜனநாயகத்தை’ வாங்கி இடுப்பில் செருகிக் கொண்டிருந்தார்கள் பாபாவின் பக்த கேடிகள்.

எம் தரப்பில், பாபாவை அம்பலப்படுத்தும் 3500 சுவரொட்டிகள் தயாரிக்கப்பட்டன. இவற்றை 14 ஆம் தேதி இரவு ஒட்டுவதைக் காட்டிலும் காலையில் ஒட்டுவதன் மூலம்தான் பக்த கேடிகளை “நேருக்குநேர்” சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பதாலும், ரஜினி ரசிகர்கள் எனும் ” மாபெரும் சக்தி ” பற்றி மக்களிடம் தோற்றுவிக்கப்பட்டிருக்கும பிரமையை உடைக்க முடியும் என்பதாலும் ஆகஸ்டு 15 அன்று காலையில் ஒட்டுவதென முடிவு செய்தோம்.

செஞ்சட்டையணிந்த தோழர்கள் பல குழுக்களாகப் பிரிந்து திருச்சி நகரின் எல்லாப் பேருந்துகளிலும் சுவரொட்டிகளை ஒட்டினர். மக்கள் கும்பல் கும்பலாகப் படித்து ரசிக்கத் தொடங்கினர். ரசிகர்கள் நின்று படித்துவிட்டு மவுனமாக இடத்தை விட்டு அகன்றனர். ஒட்டும்போது வம்புக்கு வந்தாலோ ஒட்டிய பிறகு கிழித்தாலோ என்ன நடக்கும் என்பது சுவரொட்டியிலேயே அச்சிடப்பட்டிருந்தது. படித்துப் புரிந்து கொள்ளத் தவறும் ரசிகர்கள் பார்த்தே புரிந்து கொள்ள ஏதுவாக உரிய தயாரிப்புடன் சென்றனர் தோழர்கள். “ராமதாசுக்குத் தமிழகமெங்கும் கொடும்பாவி கொளுத்தினார்கள், கொதிக்கிறார்கள், கொந்தளிக்கிறார்கள் ” என்று பத்திரிகைகளால் வருணிக்கப்பட்ட ரசிகர்கள் ஒரு இடத்திலும் மூச்சு விடவில்லை.

தேநீர்க் கடைகள், தெருக்கள் என்று நகரின் உட்பகுதிகளெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. ஒரேயொரு தெருவில் சுவரொட்டியைக் கிழித்த ரசிகர் கூட்டத்தைத் ‘ தக்கபடி கவனித்து ‘ கையில் பசைவாளியையும் சுவரொட்டிகளையும் கொடுத்து அவர்களையே ஒட்டச் செய்தனர் தோழர்கள். நகரின் மையமான இடங்களில் இதே முழக்கங்கள் ( தாழ்ந்த தமிழகமே! கஞ்சிக்கு மக்கள் மிதிபடும் நாட்டில் காவிரிக்கு உழவன் கண்ணீர் விடும் மண்ணில் பாபா காட்சிக்கு அலை மோதும் ரசிகர் கூட்டம்! பாபா டிக்கெட் 600 ரூபாயாம்! தமிழனே! உன் சூடு சொரணை எத்தனை ரூபாய்?! ஆர்ப்பாட்டம், “ஈராயிரம் ஆண்டுகளாய் உயிரோடிருந்து, ஏசு முதல் ரஜினி வரை எல்லொருக்கும் ஆசி வழங்கிய இமயத்து பாபாவின் இயற்பெயர் என்ன - கஞ்சாச் செடி!” ) பெரிய தட்டிகளாக எழுதி வைக்கப்பட்டன. அவற்றுக்கும் சேதமில்லை.

மதியம் தட்டிகளைக் கையிலேந்தியபடி பல குழுக்களாகக் குடியிருப்புப் பகுதிகளுக்குள் பிரச்சாரம் செய்யச் சென்றனர் தோழர்கள். ரஜினி ரசிகர் மன்றங்களில் உட்காந்திருந்தவர்களை அழைத்துப் பேசினர். “ரேசன் வாங்க வைத்திருந்த காசைக் காணோம்; பைனான்சுக்கு வைத்திருந்த காசை எடுத்து விட்டான்; பாத்திரத்தைக் காணோம்; நகையைக் காணோம்” என்ற தாய்மார்களின் புகார்களும், வசவுகளும், கண்ணீரும் எல்லாத் தெருக்களிலும் கேட்டது. இந்த எதிர்ப்பியக்கத்தை மக்கள் எப்படி வரவேற்றிருப்பார்கள் என்று மேலும் விளக்கத் தேவையில்லை.

“படம் படுதோல்வி ” என்ற செய்தி அதற்குள் நகரம் முழுவதும் பரவிவிட்டது. ” பாபா படுதோல்வி! போண்டியானது ரசிகர்கள்தான் - ரஜினி அல்ல! பண்ட பாத்திரத்தை விற்று ரஜினிக்கு மொய் எழுதிய ரசிகர்களே இனியாவது திருந்துங்கள்!” என்ற தட்டிகளை அன்று மாலையே நகரின் மையப்பகுதிகளில் வைத்தோம். அன்று காலை “ஜெயங்கொண்டத்தில் படப்பெட்டியைப் பா.ம.க வினர் பறித்துச் சென்று விட்டனர் ” என்ற செய்தி மாலைப் பத்திரிகைகளின் பரபரப்புக்குத் தீனியானது.

போலீசுக்கோ 16 ஆம் தேதி ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்க இது ஒரு முகாந்திரமானது. ” அடுத்த 10 நாட்களுக்குள் பாபாவுக்கு எதிராக எதுவும் செய்ய அனுமதிக்கக்கூடாது ” என்று அம்மாவின் அரசு உத்திரவிட்டிருப்பதாகக் கூறினர். தடை உத்திரவை நள்ளிரவு 1 மணிக்குக் கொண்டு வந்து கொடுத்தனர். ஆனால் 16ஆம் தேதி காலை 9 மணிக்குத் தடையை மீறி திருச்சி சிங்காரத் தோப்பில் திடீரென்று குழுமிய தோழர்கள் ஊர்வலமாகக் கிளம்பி ரம்பா திரையரங்கம் நோக்கிச் சென்றனர். தெப்பக்குளம் அருகே ஊர்வலத்தை மறித்துக் கைது செய்தது போலீசு. பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சிகள் அனைத்திலும் செய்தி வெளிவந்தது. ( பரபரப்பு முக்கியத்துவம் என்று ஒன்று இருக்கிறதே )

பண்ருட்டியில் சுவரொட்டி வாசகத்திற்காக அதனை ஒட்டிய தோழர்கள் கைது செய்யப்பட்டனர். “”ஈராயிரம் ஆண்டுகளாய் உயிரோடிருந்து, ஏசு முதல் ரஜினி வரை எல்லொருக்கும் ஆசி வழங்கிய இமயத்து பாபாவின் இயற்பெயர் என்ன - கஞ்சாச் செடி!” என்ற அந்தச் சுவரொட்டி வாசகம் இந்து மத உணர்வைப் புண்படுத்துவதாகக் கூறி குற்றப் பிரிவு 153-ஏ இல் கைது செய்து சிறை வைத்தனர். அதாவது பாபர் மசூதியை இடித்ததற்கு அத்வானி மேல் போடப்பட்ட அதே குற்றப் பிரிவு!

16 - ஆம் தேதி இரவே திருச்சி நகரச் சுவர்களை அசிங்கமாக்கிக் கொண்டிருந்த பாபா விளம்பரங்கள் மீது வெள்ளையடித்து “உலக வங்கிக் கைக்கூலி ஜெயா” வுக்கு எதிரான முழக்கங்களை எழுதத் தொடங்கினார்கள் தோழர்கள். வெள்ளையடிக்கும் பணி மறுநாள் பகலிலும் தொடர்ந்தது. இதைக் கண்டும் ரசிகர்கள் யாரும் கொந்தளிக்கவோ குறுக்கிடவோ இல்லை. ஒரு இடத்தில் ரஜினியின் முகத்தில் வெள்ளையடிக்கும்போது மட்டும் ஒரு ரசிகர் குறுக்கிட்டார். ” தலைவா… பாத்து… தலைவர் முகத்தில் அடிக்கும் போது மட்டும் கொஞ்சம் பாத்து அடிங்க ” என்றார்.

பார்த்து அடிப்போம்.

***

இணைப்பு - 1

ரசிகர்கள்: விடலைகளா? விபரீதங்களா?

விடலைப் பருவத்துக்கேயுரிய அறிவு வளர்ச்சியும் உதிரித்தனமும் கொண்ட உழைக்கும் வர்க்கத்து இளைஞர்கள்தான் ரஜினி ரசிகர்களில் ( எல்லா ரசிகர்களும்தான் ) முக்கியமானவர்கள். குழப்பமான, உதிரித்தனமான மனோபாவத்தில் வளரும் இவர்கள் ரஜினியைத் தலைவா என்றும் தெய்வமே என்றும் கொண்டாடுகிறார்கள். இந்த விடலைத்தனம் இத்தோடு முடிந்து விடுவதில்லை. பிழைப்புவாத அரசியலின் சமூக அடித்தளமாக இவர்கள் மாறுகிறார்கள். எம்.ஜி.ஆர் கட்சி இதற்கொரு முன்னோடி. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற பாசிச சக்திகள் அதிகாரத்துக்கு வரும்போது இதே கூட்டம் அவர்களது குண்டர் படையாக மாறுகிறது. இந்தக் கொக்குகளின் தலையில் வெண்ணெய் வைத்துப் பிடித்து விடலாம் என்பதுதான் போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட ஓட்டுப் பொறுக்கிகளின் கனவு.

ராஜ்குமாருக்குக் குரல் கொடுத்த ரஜினி, காவிரிக்குக் குரல் கொடுக்காதது ஏன் என்று கேட்டபோது “தேவையில்லை சார், அவர் ஒரு பிசினஸ்மேன் “என்று திமிராகப் பதில் சொன்னார் ஒரு ரசிகர் மன்றத் தலைவர். “நீங்கள் முசுலீமாக இருக்கிறீர்கள்; ரஜினியோ ஆர்.எஸ்.எஸ் சாமியார்தான் குரு என்கிறாரே” என்று கேட்டதற்கு ” எங்களுக்குத் தலைவர் அவரு. அவருக்கு யார் குரு என்று எங்களுக்குக் கவலையில்லை”என்று தெனாவெட்டாகப் பதில் சொன்னாராம் திருச்சி நகரத் தலைவர் ஷாகுல் ஹமீது.

அரசியல், சமூகப் பிரச்சினைகளில் ரஜினியின் நிலை பற்றிச் சொன்னால் ” அவர் அரசியல்வாதி கிடையாது; நடிகர்” என்கிறார்கள் ரசிகர்கள். அப்புறம் ” தலைவா, தமிழகத்தைக் காப்பாற்று என்று எழுதுகிறீர்களே “என்று கேட்டால், ” அவர் அரசிலுக்கு வந்தால் நாட்டைக் காப்பாற்றுவர்” என்று திருப்பிப் பேசுகின்றனர். ஓட்டுப் பொறுக்கிகளை விஞ்சுகிறது ரசிகர்களின் சந்தர்ப்பவாதமும் திமிரும். “தலைவா, காங்கிரசில் சேர்; தனிக்கட்சியாவது தொடங்கு” என்று 1995 இல் ரஜினிக்கு வேண்டுகோள் விட்டவர்கள் இந்த ரசிகர்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. குறிப்பாக, பிராந்திக் கடை, ரியல் எஸ்டேட் போன்ற தொழில்களை நடத்தும் ரசிகர் மன்றத் தலைவர்கள், வட்டம் மாவட்டத்துக்குரிய அனைத்துத் தகுதிகளுடனும் தலைவராக இருக்கின்றனர். பெயர்ப்பலகை மாற வேண்டியதுதான் பாக்கி.

இந்தக் கும்பல் மேலிருந்து கீழ் நோக்கி எப்படிக் கிரிமினல்மயமாக்கப்பட்டிருக

Edited by வினவு

வணக்கம் வினவு,

யாழ் இணையக் கருத்துக்களத்தில் இணைக்கப்படும் ஆக்கங்கள் முழுமையாக இணைக்கப்படவேண்டும் என்று பலருக்கும் பலமுறை அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. உங்களுக்கும் தனிமடலூடாக அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. தயவுசெய்து கருத்துக்களத்தின் நடைமுறையைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்களுடைய ஆக்கத்தை கருத்துக்களத்தில் முழுமையாக இணைப்பதில் உங்களுக்கு உடன்பாடில்லையெனின், ஆக்கத்தை இணைக்கவேண்டாம். அரைகுறையாக இணைத்து - வேறு தளத்துக்கு இணைப்புக் கொடுக்கப்படும் ஆக்கங்கள், முற்றுமுழுதாக நீக்கப்படும் என்பதையும் அறியத் தருகிறோம். அதேநேரத்தில், ஆக்கத்தை முழுமையயாக இணைத்து அதன்கீழ் அது எங்கிருந்து பெறப்பட்டது என்பதையும் குறிப்பிடுதல்் வரவேற்கப்படுகிறது. புரிந்துகொண்டு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.