Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தங்கதுரை, குட்டிமணி, ஜெகன்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

kuttimani17py6.jpg

அந்த நினைவுகள்...

'இலங்கையின் அபலைகள்...'

- ஐம்பது ஆண்டுகளுக்கு முன், 1958-ல் ஈழத்தமிழரின் அன்றைய அவல நிலையைத் தனது 'ஹோம்லேண்ட்' ஆங்கில இதழில் இரண்டே வார்த்தைகளில் இப்படி வர்ணித்தார் அறிஞர் அண்ணா. சிங்கள வெறியர்கள் 1958-ம் ஆண்டு ஜூன் மாதம் ஆரம்பித்து வைத்த தமிழர் படுகொலைகள் குறித்து எழுதியபோது, அண்ணா கொடுத்த தலைப்பு இது. ஈழத்தமிழரின் அந்த அவலங்கள் இன்று பன்மடங்கு பெருகித் தொடர்கின்றன.p8gk3.jpg

'கறுப்பு ஜூலை...'

- 1983-ம் ஆண்டு ஜூலை மாதம், சிங்கள இனவெறியர் பாரிய அளவில் நடத்திய தமிழர் சம்ஹாரத்துக்குப் பின், ஈழத்தமிழருக்கும் ஏனைய உணர் வுள்ள தமிழருக்கும் அறிமுகமான அடைமொழி!

அரசியல் அநாதைகளான தமிழர்களை, 1983 ஜூலை 23-ம் தேதி நள்ளிரவு தொடங்கி, சிங்கள வெறியர் விரட்டி விரட்டி வேட்டையாடினர். கொலை, கொள்ளை, பலாத்காரம், தீவைப்பு இன்னோரன்ன பயங்கரப் பரிமாணங்களுடன் சுமார் ஒரு வார காலம் நீடித்த கொலைவெறியரின் கோரத்தாண்டவம், சுமார் 3,000 அப்பாவித் தமிழர்களைப் பலிகொண்டது. கொதிக்கும் தார்ப் பீப்பாய்க்குள் பச்சிளங் குழந்தைகளை வீசினர். தமிழ்ப் பெண்களைச் சூறையாடினர். நூற்றுக்கணக்கான தமிழர்கள் குத்திக் குதறப்பட்டு ஊனமானார்கள். கோடிக்கணக்கான தமிழர் சொத்துகள், வீடுகள், வணிக நிலையங்கள், தொழிற்சாலைகள் கொள்ளையிடப்பட்டு எரியூட்டப்பட்டன. எங்கும் தமிழரின் ஓலம். பல்லாயிரம் தமிழர்கள் அகதிகளாயினர்.

குருதி வேட்கை கொண்ட சிங்களப் பேய்கள் நடத்திய நரவேட்டையின் தொடர்ச்சியாக... ஜூலை 25, 27--ம் தேதிகளில் கொழும்பு-வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த தங்கதுரை, குட்டிமணி, ஜெகன் முதலான 53 தமிழ் மறவர்களை அதிகாரிகளின் துணையுடன் சிங்களக் கைதிகள் வெட்டிச்சாய்த்தனர்.

யார் இந்தத் தமிழ் மறவர்கள்?

முப்பது ஆண்டுகளாக ஈழத்தமிழரின் மூத்த தலைவர்கள் சிங்களப் பேரினவாதத்தை எதிர்த்து அகிம்சை வழியில் போராடி, கையறு நிலையில், 'துருப்பிடித்த இந்த ஆயுதங்களைத் தூக்கியெறிவோம். துப்பாக்கியைத் தூக்குங்கள்!' என்று கூறி ஆயுதப் போருக்கு அடித்தளமிட்ட ஆரம்ப கர்த்தாக்கள் இவர்கள். ஈழத்தமிழ் மக்களின் விடுதலைப் போரில் தம்மை ஆகுதியாக அர்ப்பணித்தவர்கள். இன்று, கால்நூற்றாண்டுக்குப் பிறகு அந்த வேள்வித் தீ காட்டுத் தீயாக மாறி, சர்வதேச நாடுகள் தலையிடும் அளவுக்குக் கொழுந்துவிட்டு எரிகிறது.

p8awj4.jpg

இந்த அற்புதமான தமிழ்த் தம்பிகளுடன் அவர்களின் வழக்கறிஞர் என்ற முறையில் அன்று நெருங்கி உறவாடி யிருக்கிறேன். அவர்கள் சம்பந்தப்பட்ட நீதிமன்ற வழக்குகள் அரசியல் பின்னணியில் அமைந்தவை என்பதால், எமது உறவு உணர்வுபூர்வமானது.

1983 ஜூலை இனக்கலவரத்தைத் தொடர்ந்து நான் தமிழ்நாட்டில் அகதியாகத் தங்கியிருந்த வேளையில்... இந்த வீரர்கள் பற்றிய எனது அனுபவங்களை 'ஜூனியர் விகடன்' இதழில் 21.12.83 தொடங்கி இருபது வாரங்கள் எழுதினேன். நெகிழ்ச்சியுடனும் மனக்கிளர்ச்சியுடனும் பலர் எனக்கு எதிர்வினை எழுதியிருந்தனர்.

வாசகர்களின் விதப்புரைகளுக்கு மகுடம் வைத்தது போல, ஜூ.வி-யின் கால் நூற்றாண்டு மலரில் பின் வருமாறு குறிப்பிட்டிருந்தார்கள்:

'பத்திரிகை ஆரம்பித்த முதல் வருடக் கடைசியில் கரிகாலனின் தொடர் ஆரம்பிக்கப்பட்டது. புலிகளைப் பற்றி இவ்வளவு விளக்க மாக அதுவரை கட்டுரைகள் வந்ததில்லை. அதனால் அதைப் படிக்க நல்ல ஆர்வம் வாசகர்களிடம் இருந்தது. அந்தத் தொடரில் இடம்பெற்றிருந்த மூன்று கதாநாயகர்களின் தியாகம் மெய்சிலிர்க்கும்படியாக இருந்ததாலேயே... அந்தத் தொடருக்குப் பெரிய வரவேற்பு கிடைத்தது!'

-இந்த வாசகங்களைப் படித்துப் பெருமிதமுற்றேன்.

சிறப்பாக, தமிழக முதல்வர் கலைஞர் அந்தக் கட்டுரைத் தொடர் வெளியாகி வந்த சமயத்தில் கரிசனையுடன் படித்துவந்ததும், 'அறிவகம்' (அறிவாலயம் அப்போது உருவாகவில்லை!) அலுவலகத்தில் நான் சந்தித்த வேளையில், 'படிக்கிறேன்... நல்லாயிருக்கு!' என்று பாராட்டியதும் இன்றும் நினைவிலிருக் கிறது.

ஓர் இயக்குநர் இந்தத் தொடரை அடித்தளமாக வைத்துத் திரைப்படம் தயாரிக்க விரும்பினார். 'மறவர்களின் தியாகங்களைத் திரையில் மலிவாக்கிவிடுவாரோ?' என்று அஞ்சியதால், அவரைத் தவிர்த்தேன். போராளிகளின் தீரத்தையும் தியாகத்தையும் உலகத் தமிழர் தெரிந்துகொள்ள அன்று உதவிய ஜூனியர் விகடன், 25 ஆண்டுகளுக்குப் பின்... இந்தத் தொடரை இத்தருணத்தில், எனது இன்றைய கண்ணோட்டத்தையும் இணைத்து வெளியிட முன்வந்திருப்பது மிகப் பொருத்தமே! விமான குண்டு வீச்சுகள், 'ஷெல்' தாக்குதல்கள், குண்டு வீச்சுகள் ஆகியவற்றில் தப்பியோடி, வீடு வாசலை இழந்து, பசியும் பிணியும் வாட்ட காடுமேடுகளில் இன்னும் கரந்துறையும் பல்லாயிரம் அகதிகள்... தமிழ்நாட்டில் தஞ்சம் தேடி படகுகளில் தப்பியோடியவர்கள்... இடையில் படகு மூழ்கிச் செத்தவர்கள் ஆயிரக்கணக்கில்..!p8cww5.jpg

பல்வேறு சிறைக்கூடங்களிலும் தடுப்பு முகாம்களிலும் அடைக்கப்பட்டு விசாரணை என்ற பேரில் வதைக்கப்படுகிற இளைஞர்களின் எண்ணிக்கையை யாரும் அறியார். நாளாந்தம் அப்பாவித் தமிழர்கள் அரச பயங்கரவாதத்துக்கு பலியாகின்றனர். படுகொலைகள், ஆட்கடத்தல், பணம் பறித்தல், பணயக் கைதிகள் என ஆயுதக் கும்பல்களின் அட்டூழியங்கள், அரச படைகளின் துணையுடன் அரங்கேறுகின்றன. சிங்களப் பேரினவாதத்தின் பிரதிநிதிகளான அத்தனை அரசியல் கட்சிகளும் சிங்கள-பௌத்த அமைப்புகளும் தேசிய ஊடகங்களும் தமிழரை ஒடுக்குவதிலும் தமிழரின் கோரிக்கைகளை முடக்குவதிலும் முனைப்புடன் செயல்படுகின்றன.

இத்தகைய அவலங்களும் அனர்த்தங்களும் சூழ ஏக்கத்துடனும் ஏமாற்றங் களுடனும் வாழ்ந்துகொண்டிருக்கும் ஈழத் தமிழர்களுக்கு நடுவே தோன்றிய அந்தத் தீப்பந்தங்கள்... இனி உங்களிடையே உலவ வருகிறார்கள்!

விகடன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

p9gv6.jpg

தங்கதுரை, குட்டிமணி, தேவன் ஆகியோர் 1981 ஏப்ரல் 5-ம் தேதி கைது செய்யப்பட்டனர். 22-ம் தேதி ஜெகன் கைதானார். தொடர்ந்து விடுதலை வீரர்கள் பலர் கைதாயினர்.

p8cf5.jpg

1981 செப்டம்பர் இறுதி வாரத்தில் என நினைவு... நீதிமன்ற உத்தரவுடன் குட்டிமணி, தங்கதுரை, தேவன், ஜெகன் ஆகியோரை பனாகொடை ராணுவ முகாமில் சந்திக்க வழக்கறிஞர்களாகிய நால்வர் புறப்பட்டோம். பனாகொடை என்ற இடம் கொழும்பு நகரிலிருந்து 16 மைல் தூரத்தில் இருக்கிறது.

கைதான நாள் முதலாக வழக்கறிஞர்களோ உறவினர்களோ தொடர்புகொள்ள

முடியாதவாறு ராணுவ முகாம்களில் வைத்து விடுதலை வீரர்கள் கொடுமைப் படுத்தப்பட்டனர். சித்ரவதைக் கூடங்களிலிருந்து தப்பித் தவறிக் கசிந்த செய்திகளைக் கேட்டு, ஈழத்தமிழரின் - குறிப்பாக இளைய தலைமுறையினரின் இதயம் கனன் றிருந்தது.

நானோ மிகவும் உணர்ச்சிவசப்படும் பேர்வழி. அந்தக் கனலிலே குளிர் காயவா முடியும்? என் உள்ளம் கனத்திருந்தது.

வெங்கொடுமைக் கூடங்களில் வெந்துகொண்டிருக்கும் வீரர்களை, அவர்கள் கைதாகி ஆறு மாதங்களுக்குப் பிறகு வழக்கறிஞனாகச் சந்திக்கச் செல்கிற என் நெஞ்சிலே கொப்பளிக்கிற ஆவல் ஒரு புறம். இன்னொரு புறத்தில் விடுதலை வேட்கை கொண்ட கல்லூரி மாணவனாக இதே ராணுவ முகாம் கட்டடத்தில் நான் பல்லாண்டுகளுக்கு முன் காவலில் வைக்கப்பட்டிருந்த நினைவுகள். அப்போது ஸ்ரீமா பண்டாரநாயகா அம்மையாரின் ஆட்சி! மறைந்த தமிழ்த் தந்தை செல்வநாயகம், தலைவர் அமிர்தலிங்கம் ஆகியோரும் அப்போது காவலில் வைக்கப்பட்டிருந்தனர். அன்று ராணுவ முகாம் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட காலகட்டம். நாம் காவலில் வைக்கப்பட்டிருந்த கட்டடம் எது என்று ஒரு கணம் தடுமாறினேன். உள்ளே புதிய கட்டடங்கள் எத்தனையோ முளைத்துவிட்டன.

சுமார் ஒன்பது மாத கால மாக நாம் உறைந்து உறவாடிய கட்டடத்தை அடையாளம் காண முடியவில்லை. இந்த இடத்துக்கு நான் புதியவனல்ல என்ற எண்ணம், என் நெஞ்சில் ஒருவிதக் கிளர்ச்சியையும் இறுமாப்பையும் தந்தது. எமது வீரர்கள் மீது இழைக்கப்பட்ட சித்ரவதைகள் உண்மை யில் புத்தம் புதிய உத்திகளே. பழைய நினைவுகளின் பனிப்படலத்தை விலக்கிக்கொண்டு புதிய வரலாறு படைக் கப் புறப்பட்ட வீரர் களைக் காண விரைந் தேன்.

'பயங்கரவாதிகள்' என்பது எமது வீர இளைஞர்களுக்கு ஆட்சியாளர் தந்த பட்டம்! அரசு சார்பான பத்திரிகைகளும் வானொலி தொலைக்காட்சிச் செய்திகளும் 'பயங்கரவாதிகள்' என்றே இவர்களைக் குறிப்பிடும். 'பயங்கரவாதிகளின் வழக்கறிஞர்கள் வருகிறார்கள்' என வாசலில் சார்ஜ் ரூமிலிருந்து காவல் முகாமுக்குத் தகவல் கூறியிருந்தார்கள். உள்ளே சிறைக்கூடம் இருந்த கட்டடத்தில் நுழைந்ததும் பளபளக்கும் இயந்திரத் துப்பாக்கிகளுடன் பரபரக்கும் சிங்களச் சிப்பாய்களின் நடமாட்டம் அதிகரித்திருந்தது. ராணுவ பந்தாக்களும் துப்பாக்கிகளின் 'கிறீச்... கிளிக்...' போன்ற ஓசைகளும் பயங்கரச் சூழ்நிலையை உருவாக்குவதற்கென்றே அவர்கள் பண்ணிய சாகசங்கள். முற்றிலும் அந்நியமான ஓர் அந்தகார நிலை அந்த இடத்தை ஆக்கிரமித்திருந்தது.

முன் மண்டபத்தில் மூலைக்கு ஒருவராக வழக்கறிஞர் களாகிய எம்மை உட்கார வைத்தனர். துப்பாக்கி தாங்கிய சிப்பாய்கள் கூண்டுக்குள் இருந்த குட்டிமணியை என் முன்னே கொண்டுவந்து நிறுத்தினர். இவ்வாறே ஏனைய வீரர்களும் இதர வழக்கறிஞர்களின் முன் நிறுத்தப் பட்டனர்.

அவர்களுக்கு இருக்கைகள் தரப்படவில்லை. கைகளை விலங்குகள் பிணைத்திருந்தன. போதிய ஆகாரமின்றி நலிந்து, மெலிந்து சடலங்களைப் போலிருந்தனர்.

சித்ரவதைக் கூடங்களில் பல்வேறு கொடுமையான கருவிகளை, தூரிகையாகக் கொண்டு இந்த வீரர்களின் ரத்தத்தில் தோய்த்து வரையப்பட்ட சித்திரங்களைத் தாங்கியிருந்த சடலங்கள். அந்தத் தழும்புகள் தமிழ் ஈழ விடுதலை வரலாற்றின் பரிமாணங்களைக் கூறும்.

மாதக் கணக்கில் கொடுமையின் கோரப் பற்களிடையே சிக்கிச் சீரழிந்தவர்கள், முதன் முதலாகத் தம்மை நோக்கி முறுவலிக்கும் முகங்களைச் சந்திக்கின்றனர். எம்மிடையே பரிமாறிக்கொள்ள முடியாத பரஸ்பர நெகிழ்ச்சி - அகத்திலும் முகத்திலும். குட்டிமணியின் முகத்தை உற்று நோக்கினேன். கண நேரம் மௌனம் சாதித்தார்.

அந்த மௌனம் என் காதை அடைத்தது. அந்த கணப்பொழுதில் ஒரு கோடி சேதிகளை உரத்த குரலில் ஒப்புவித்தார். எங்களுடன் என்ன பேசுகின்றனர் என்பதை, தமிழ் தெரிந்த சிங்களச் சிப்பாய் ஒருவன் காதைத் தீட்டியபடி கேட்டுக்கொண்டிருந்தான். குட்டிமணி கண்ணைச் சிமிட்டி எச்சரித்தார். சற்று ஜாக்கிரதையானேன். சுமார் அரை மணி நேரம் பண்டிதத் தமிழில் சிப்பாய்க்குப் புரியாவண்ணம் பேசிக்கொள்கிறோம். குட்டிமணிக்கு அந்த நடை நன்கு கைவரவில்லையாதலால், என் கேள்விகளுக்கு இரண்டொரு வார்த்தைகள் மூலம் பதில் தருகிறார். 'அன்னவனுக்கு எம்மொழி தேரும் போலும்' என்றேன் நான்.

சற்று உற்றுக் கேட்கிறார். குட்டிமணி வறட்சியுடன்தான் கூறினார். மன நிறைவுடன் பேச முடியவில்லை. எதையெதையோ சுற்றி வளைத்துப் பேசினோம்

எதிரே நிமிர்ந்து பார்த்தேன். தங்கதுரை, வழக்கறிஞர் நண்பர் விவேகானந்தனுடன் பேசிக் கொண்டிருந்தார். இருந்தாலும், அவர் பார்வை என் மீது படிந்திருந்தது. அவரது கீர்த்தி ஏற்கெனவே கேள்வி யுற்றதுதான். நான் அரசியல் அரங்கைச் சேர்ந்தவனாதலால், என்னையும் அவர் அறிவார். மூர்த்திகள் இப்போதுதான் நேரில் சந்திக்கின்றன.

ஆனானப்பட்ட குட்டிமணிக்கே ஞான குரு என்று தங்கதுரை பற்றி நான் கேள்விப் பட்டிருந்ததால், குட்டிமணியைவிட ஆஜானுபாகுவான ஓர் ஆளைச் சந்திப்பேன் என்று எதிர்பார்த்தேன்.

தங்கதுரையின்பலம், அறிவுடன் கூடிய ஆன்ம வலிமைதான் என்பதை உணர்ந்தேன். தங்கதுரை என்னைப் பார்த்து முறுவலித்தார். அந்தப் புன்னகையைப் புரிந்துகொண்டேன்.

கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கும் சிப்பாயை கவனித்தேன். ''தலைவருடன் சிறிது உரையாடினால் நல்லது!'' - குட்டிமணி கூறினார்.

பொறுப்பாக இருந்த ராணுவ கேப்டனிடம், தங்க துரையுடன் பேச அனுமதி கேட்டேன். 'ஒரு வழக்கறிஞர் ஒரு கைதியிடம்தான் பேசலாம்' என்று நறுக்காகக் கூறினான். அதற்கு மேல் அங்கு அப்பீல் இல்லை. தங்க துரையின் முகத்தில் கார் கப்பியது.

'வெலாவ ஹறி (நேரம் சரி)' என்று கடிகாரத்தைப் பார்த்து விட்டுக் கடுமையாகக் கூறினான், செவிமடுத்துக்கொண்டு இருந்த சிப்பாய். என் கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். இன்னும் ஐந்து நிமிடங்கள் இருந்தன. வாதிப்பதற்கு அது வழக்கு மன்றமா என்ன? பாதி அபிமானமும் மீதி அனுதாபமுமாகக் கலந்து, அத்தனை வீரர்களையும் பரிவுடன் பார்த்துக்கொண்டிருந்தேன்.

'யண்ட யண்ட (போ... போ...)' என்ற கூச்சலுடன் அவர்கள் முதுகில் பிடித்துத் தள்ளியவாறே நால்வரையும் சிப்பாய்கள் உள்ளே இட்டுச் சென்றனர். குறுக்கே நின்ற சுவர்த் திரையைத் தாண்டும்வரை எம்மைத் திரும்பிப் பார்த்தவண்ணமே அந்தத் தமிழ் வீரர்கள் சென்று மறைந்தனர்.

என் நெஞ்சின் சுமையில் ஒரு பாகத்தை ஒரு நெடுமூச்சிலே வெளியே இறக்கிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தோம்.

-தொடரும்..

நன்றி

விகடன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.