Jump to content

ம‌க்க‌ள் ‌மீது அ‌க்கறை கொ‌ண்ட வேதாள‌ம்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விக்ரமாதித்தன் கதை - பாகம் 2

கொழும்பு காடுகளுக்குச் சென்று வேதாளத்தைச் சந்தித்து உரையாடி (பேட்டி கண்டு) நீண்ட நாளாகிவிட்ட நிலையில், கடந்த ஞாயிற்றுக் கிழமை அந்த வேதாளம் லக்க லக்கவென சிரித்ததைக் கேட்டு மதியத் துகில் கலைந்து எழுந்த விக்ரமாதித்தன், தொலைபேசியில் தொடர்பு கொண்டு வேதாளம் சிரித்ததற்கான காரணத்தை வினவினான்.

‘கிளிநொச்சி என் கையில் விழுந்துவிட்டது’ என்று கூறி மீண்டும் லக்க லக்கவென சிரித்தது வேதாளம். கிளிநொச்சி விழாதா என்று நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்த விக்ரமாதித்தனுக்கு முகம் மலர்ந்தது.

ஒரு மாத காலத்திற்கும் மேலாக உயிரைக் கொடுத்து பெற்ற வெற்றிக்காக வேதாளத்திற்கு வாழ்த்துக் கூறிய விக்ரமாதித்தன், அடுத்தது என்னவென்று கேட்க, சற்றே எகத்தாளத்துடன் சிரித்த வேதாளம், அடுத்தது ஆனையிரவு என்று செருக்குடன் கூறியது.

‘இன்னும் கொஞ்ச நாட்களில் அந்த விடுதலைப் புலிகள் போவதற்கு இடமின்றி முல்லைத் தீவில் ஒடுங்கிவிடுவார்கள்’ என்று மிக பாசிடிவாக கூறிய வேதாளம், தனது இராணுவ தாக்குதலினால் பொதுமக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படக் கூடாது என்ற கட்டளை நிறைவேற்றப்பட்டதாகக் கூறியதும் விக்ரமாதித்தனால் சற்றும் நம்ப முடியவில்லை.’Zero civilian casualty policy’ என்று ஆங்கிலத்தில் அதனை வேதாளம் சொன்னபோது ஆச்சரியத்தில் மூழ்கினான் விக்ரமாதித்தன்.

எப்படி... எப்படி... ஒரு அப்பாவி தமிழன் கூட கொல்லப்படாமல் எப்படி விமானத்தில் இருந்து குண்டு வீசினாய் என்றோ, கொத்துக் குண்டுகள் வீசித் தாக்குதல் நடத்தியதில் கூட ஒரு உயிர்கூட பலியாகாமல் எப்படி சாதித்தாய் என்று விக்ரமாதித்தன் கேட்கவில்லை.

சிங்கள போர்ப்படை விமானங்கள் நடத்திய கொத்துக் குண்டு வீச்சில் ஏராளமான கால்நடைகள் ஒரே இடத்தில் கொல்லப்பட்ட படங்கள் ஊடகங்களில் காட்டப்பட்டதே என்றோ அல்லது இரணைமடு, பரந்தன் பகுதிகளில் நடத்திய விமானக் குண்டு வீச்சில் ஏராளமான தமிழர்கள் கையிழந்து காலிழந்து உயிரிழந்து குடல் சரிந்து செத்துக் கிடந்த காட்சிகள் எல்லாம் தொலைக்காட்சியிலும், பத்திரிக்கைகளிலும் காட்டப்பட்டதே அதெல்லாம் பொய்யா என்றும் விக்ரமாதித்தன் கேட்கவில்லை.

அப்படியெல்லாம் கேள்வி கேட்டால் வேதாளத்திற்கு கதை சொல்லும் மூடு போய்விடுமல்லவா.. எனவே பேசவில்லை.

வேதாளம் பேசியது... சாரி தொடர்ந்து கதை விட்டது.

கிளிநொச்சியில் மட்டுமல்ல, இதற்குமேல் எல்லா இடத்திலும் இதே ‘கொ‌ள்கைதான்’ என்று கூறிய வேதாளத்தின் குரலில் திடீரென்று சோகம் கப்பியது. என்ன... என்ன... ஆனது மதிப்பிற்கு‌ரிய வேதாளமே என்று விக்ரமாதித்தன் கேட்க,அங்கே... பாலஸ்தீனத்தில் என்ன நடக்கிறது பார்த்தாயா? ஹாரிபிள் என்று ஆங்கிலத்தில் துக்கத்துடன் கூறியது.

பாலஸ்தீனர்களுக்கு ஏற்பட்ட அவலத்தை நினைத்து துக்க மேலிட்டதால் விக்ரமாதித்தன் அமைதி காக்கிறான்.

‘பாலஸ்தீன அதிபருடன் பேசப்போகிறேன், அங்கு என்ன நிலை என்று கேட்கப் போகிறேன்’ என்று வேதாளம் கூறியபோது அதன் மனித நேயத்தைக் கண்டு மெய் சிலிர்த்துப் போகிறான் விக்ரமாதித்தன்.

இன்னமும் பல்லாயிரக்கண்கான தமிழர்களை விடுதலைப் புலிகள் தங்கள் பிடியில் வைத்திருப்பதுதான் எனக்கு கவலையாக உள்ளது. அவர்களை கைதிகளாகவே புலிகள் பிடித்துவைத்துள்ளனர் என்று துக்கத்துடன் பேசிய வேதாளம், தமிழர்களுக்கு சுதந்திரத்தையும், மனித உரிமைகளையும் அந்த இயக்கம் தொடர்ந்து மறுக்குமானால்... என்று கோபத்துடன் உறுமிய வேதாளம்...அப்புறம்... அதனை தடை செய்துவிடுவேன் என்று கூறியது. அதன் மனித உரிமை ஏக்கத்தை நினைத்து வியந்த விக்ரமாதித்தன் மீண்டும் கேள்வி எதையும் எழுப்பவில்லை.

இந்த மக்களை ‘கவனிப்பதுதான்’ எனது அரசிற்கு முன்னுரிமை. அவர்களின் பாதுகாப்புதான் எனக்கு முக்கியம், அதனால்தான் அவர்களை ‘விடுவிக்குமாறு’ கேட்கின்றேன் என்று வேதாளம் கூற, அதன் அர்த்தத்தைப் புரிந்துகொண்ட விக்ரமாதித்தன் மகிழ்ச்சியுடன் அமைதி காக்கின்றான்.

‘அவர்களுக்கு உணவு அனுப்புகிறோம். அவர்களுக்கு மட்டுமல்ல, விடுதலைப் புலிகளுக்கும் உணவு அனுப்புகிறோம். அவர்க‌ள் மக்களை விடுவித்தாலும் அவர்களுக்கு நாங்கள் உணவு அனுப்புவோம்’ என்று கூறியபோது அதன் மனிதா‌பிமானத்தைக் கண்டு உணர்ச்சிவயப்பட்டு கண்ணீர் உகுத்த விக்ரமாதித்தன், நா தழுதழுக்க தொலைப்பேசியை துண்டிக்கிறான்.

தமிழர்களின் வாழ்விற்காகவும், உரிமைக்காகவும், சுதந்திரத்திற்காகவும் கொழும்பு வேதாளம் உருகியதை கேட்டு மனம் நெகிழந்த விக்ரமாதித்தன் அதையே தனது ஆங்கில நாளிதழின் தலைப்புச் செய்தியாகப் போட்டது மட்டுமின்றி,வேதாளத்தின் ‘நல்ல மனதை’ப் புரிந்துகொள்ளாமல், விடுதலை ஒன்றே வழி என்றெல்லாம் பேசிய ஈழத் தமிழர்களின் தலைவர் பேசியதை எள்ளி நகையாடி ஒரு தலையங்கம் தீட்டிவிட்டு நிம்மதியுடன் உறங்கச் சென்றான்.

அடுத்த பாகம் விரைவில்... (webdunia.com)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.