Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முத்துக்குமாரை புதைத்தவர்களும்... விதைத்தவர்களும்...

Featured Replies

நரி தான் உண்பதை வாந்தி எடுத்துத்தான் தன் குட்டிகளுக்குக் கொடுக்கும். தாய் வாந்தி எடுத்துத் தருகிற உணவைத்தான் குட்டிகளும் உண்ணும். குட்டிகளின் ஜீரணத்துக்கு அதுதான் நல்லது என்பதால் நரி அவ்விதமாய்ச் செய்கிறது. ஆனால் தாயானாலும் யாரானாலும் மனித குலத்தில் ஒருவர் எடுத்த வாந்தியை இன்னொருவர் உண்ண முடியாது. ஏனென்றால் நரி எடுக்கும் வாந்தி இயற்கையானது அதை நரி சாப்பிடுவதுதான் சுகாதாரம். மனிதன் எடுக்கும் வாந்தி உடல் உபாதைகளால் தோன்றுவது. சமீபத்தில் கருணாநிதி ஒரு வாந்தி எடுத்திருந்தார். கடந்த ஐம்பதாண்டுகளாக உண்ட உணவை இத்தனை ஆண்டுகள் கழித்து ஒருவர் வாந்தி எடுத்து அதை ஈழத் தமிழர்களை உண்ணவும் சொல்லியிருக்கிறார்.

‘என்ன விலை கொடுத்தேனும் ஈழத் தமிழரைக் காப்பேன்’ என்றவர் இப்போது ‘என்ன விலை கொடுத்தேனும் காங்கிரஸ் கட்சியைக் காப்பேன். அதன் மூலம் என் மைனாரிட்டி அரசை இரண்டரை ஆண்டுகாலம் தக்க வைப்பேன்’ என்கிற நிலைக்கு தரம் தாழ்ந்து இறங்கி வந்திருக்கிறார். அத்தோடு யார் மனமும் புண்படாமல் இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை என்கிற அமைப்பைத் தொடங்கி காங்கிரஸ் கட்சியினரோடு தோளோடு தோள் நின்று போராடத் துவங்கியிருக்கிறார், கருணாநிதி முன்னெடுத்திருக்கும் இந்த நலச்சங்கத்தின் கோரிக்கை பேரணியில் கலந்து கொள்ளும் கருணாநிதியின் ஆதரவாளர்கள் யார் மனமும் புண்படாமல் எழுப்ப வேண்டிய கோஷங்கள் இவை:

‘‘இலங்கையில் போர் நிறுத்தம் செய்க’’

‘‘நிலையான அமைதிக்கு வழி காண்போம் வாரீர்’’

‘‘தமிழினம் தாழாது தாழாது யாரையும் தாழ்த்தாது’’

‘‘தடுப்போம் தடுப்போம் இனப்படுகொலையை தடுப்போம்’’

திமுகவும் காங்கிரஸ் கட்சியும் யாருக்கு எதிராக இந்த கோஷங்களை முன்வைக்கிறார்கள் என்றோ, யாரிடம் கோரிக்கை வைக்கிறார்கள் என்றோ அவர்களுக்கே தெரியவில்லை. இலங்கை விவகாரத்தில் வெளிப்படையாகவே மத்திய அரசின் நிலையை ஆதரித்துப் பேசும் திமுக அமைச்சர்களின் குரலிருந்து நாம் ஒரு முடிவுக்கு வர முடியும். தமிழகத்தில் ஈழம் தொடர்பாக எழுந்துள்ள கொதிப்புகளை குழப்பி நாடாளுமன்றத் தேர்தலில் தங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்ற நோக்கமாக மட்டுமே திமுக, காங்கிரஸின் இந்த ஈழத் தமிழர் ஆதரவு நாடகங்களை பார்க்க வேண்டியுள்ளது. அதனால்தான் கருணாநிதியே சொல்கிறார் ‘வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை’. உண்மையில் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக மக்கள் மன்றத்தில் உருவாகியிருக்கும் எதிர்ப்புணர்வுகளை அறுவடை செய்து மக்கள் விரோத காங்கிரஸை தமிழகத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டும். காங்கிரசுக்கு முட்டுக் கொடுத்து நிற்கும் திமுகவையும் மக்கள் தனிமைப்படுத்த நேரிடும். இதுதான் தமிழக மக்களின் விருப்பமும் நமது விருப்பமும் கூட.

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான போராட்டங்கள் தமிழகத்தில் வெடிக்கத் துவங்கி அது முத்துக்குமாரின் தியாகத்துக்குப் பிறகு கொழுந்து விட்டு எரிவதற்கு முன்னரே கருணாநிதி இந்த எழுச்சிகளை சட்டம் காவல்துறை கொண்டு அடக்கிப் பார்த்தார். அந்த அடக்குமுறைகளும் முத்துக்குமாரின் தியாகமும் அந்த எழுச்சியை பல மடங்கு தூண்டி விட இப்போது தன் கட்சியையே காங்கிரசுக்கு ஆதரவாக இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை என்னும் அமைப்பின் கீழ் களம் இறக்கியிருக்கிறார். அதிமுக ஆட்சியில் ஈழ விடுதலை ஆதரவாளர்கள் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக வைகோ, சுபவீ, நெடுமாறன் ஆகியோரை பொடாச் சட்டத்தில் கைது செய்த ஜெயலலிதாவின் பாசிசத்துக்கு கொஞ்சமும் குறைவில்லாத நடவடிக்கைகளை இன்று கருணாநிதி ஈழ ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்.

இன்னும் சொல்லப் போனால் எப்போதுமே ஈழத் தமிழர்களின் விடுதலைப் போரை கொச்சைப்படுத்தி வரும் ஜெயலலிதா செய்ததை விட கருணாநிதி செய்தது பெருந்துரோகம். இந்த நூற்றாண்டில் ஒரு இனத்தின் அழிவுக்கே இட்டுச் செல்லும் படியான காட்டிக் கொடுப்பு என்று கூட கருணாநிதியின் ஈழ ஆதரவு நாடகங்களை சொல்லலாம். ஈழ மக்களுக்காக தான் செய்ய வேண்டிய கடமைகளை செய்ய வேண்டிய பொறுப்பை தட்டிக் கழிப்பதோடு, இன்று மக்கள் விரோத மன்மோகன்சிங் அரசு இலங்கையில் சிங்களப் பாசிஸ்டுகளோடு சேர்ந்து நடத்தி வரும் போரிலிருந்து காங்கிரஸ் கட்சியை காப்பாற்றும் ஒரு வரலாற்றுத் துரோகத்தையும் செய்யத் துவங்கியிருக்கிறார், இந்த தமிழினத் தலைவர்.

யார்மனமும் புண்படாமல் போராடுவது எப்படி? சில மாதங்களுக்கு முன்பு கவிஞர்கள் எழுத்தாளர்கள் எல்லாம் இலங்கைத் தமிழர்களுக்காக சென்னை கடற்கரையில் ஒரு போராட்டம் நடத்தினார்கள். அதில் ஆளும் கட்சியின் ஆதரவு பெற்ற தமிழ் படைப்பாளிகள் அதிகம். மத்திய அரசை விமர்சித்தவர்கள் மேடையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டார்கள். ராஜபக்ச்ஜேவை பற்றி விமர்சிக்கும் உரிமை கூட அங்கே மறுக்கப்பட்டது. ஆளும் கட்சியின் ஆதரவு பெற்ற அந்த போராட்டம் அரசியல் நீக்கம் செய்யப்பட்டு யார் மனமும் புண்படாமல் போராடப்பட்டது. அந்தத் தமிழ் படைப்பாளிகளின் அரசியல் ஆசானும் இன்று காங்கிரஸ் கட்சியையும் இணைத்துக் கொண்டு யார்மனமும் புண்படாமல் போராடக் கிளம்பிவிட்டார். யாரை எதிர்க்க வேண்டுமோ யாரை அம்பலப்படுத்த வேண்டுமோ அவர்களை வைத்தே இந்தப் பிரச்சனையை குழப்புகிறார் கருணாநிதி.

ஆனால் உண்மையான போராட்டங்களை நடத்திய தோழர்கள் காவல்துறை மரபுகளையும் மீறி மாலையில் நீதிமன்றத்தில் நேர் நிறுத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்கள். சீமான், கொளத்தூர் மணி, பெ. மணியரசன் ஆகியோரைக் கைது செய்த அரசு அவர்களை ஜாமீனில் வெளிவராமல் பார்த்துக் கொண்டது. அதே சமயம் ஆளும் கட்சிக்கு ஆதரவானவர்கள், யார் மனதும் புண்படாமல் போராட்டம் நடத்தினால் அதற்கு கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோரின் ஆதரவோடு திமுக அரசின் மறைமுக ஆதரவும் கிடைத்து வந்தது. இதன் உச்சபட்ச வடிவமாக திமுக இப்போது இலங்கைத் தமிழர் நல உரிமை பேரவையைத் துவங்கியிருக்கிறது. இலங்கை அரசு தமிழ் மக்கள் மீது முன்னெடுத்து வரும் பாசிசப் போரை இந்திய அரசு வலது கரமாக இருந்து நடத்திவருவதோடு பெரும் தொகையான சிங்கள் ராணுவத்தினர் தமிழகத்திலும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் ரகசிய பயிற்சி பெற்று தமிழ் மக்கள் மீது குண்டு வீச யுத்த முனைக்கு அனுப்பப்படுகிறார்கள். இவர் கொல்கிறவனுடன் சேர்ந்தே இலங்கைத் தமிழரின் உரிமைக்காக பேசப் போகிறாராம்.

ஈழ மக்களை கொன்று குவிக்கும் சிங்கள பாசிசத்தோடு கூட்டு சேர்ந்திருக்கும் மத்திய காங்கிரஸ் மன்மோகன்சிங் அரசு ஒரு பக்கம். அந்த அரசின் பிரதிநிதிகளான துரோக காங்கிரஸை பதவி அரசியலுக்காக பாதுகாக்கும் கருணாநிதி இன்னொரு பக்கம். இன்று ஈழ மக்கள் சந்திப்பது பல முனைத்தாக்குதலை. கருணாநிதி இவ்வளவு கேவலமாக தங்களை காட்டிக் கொடுப்பார் என்பதை ஈழமக்கள் யாரும் கனவிலும் நினைக்கவில்லை. பிரபாகரனை சர்வாதிகாரி என்று சொல்வதன் மூலம் யுத்த முனையில் பின்னடைவுகளை சந்திக்கும் புலிகளையும் வன்னிப் பகுதிக்குள் சிக்கியிருக்கும் இரண்டரை லட்சம் மக்களையும் இந்திய அடியாட்களுக்கு இரையாக்கி விட்டார் கருணாநிதி.

பத்து ஆண்டுகளுக்கு முன்னால் ஆங்கிலப் பத்திரிகைக்கு பேட்டியளித்த பிரபாகரன் நாளை மலரப் போகும் தமிழீழத்தில் தான் சர்வாதிகாரியாக இருக்கப் போவதாக சொன்னபோதே பிரபாகரனை இவருக்குப் புளித்து விட்டதாம். ஆகவே வடக்கு கிழக்குக்கு அதிகாரப் பரவல் கிடைத்தால் போதும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம். இந்த முடிவுக்குத்தான் இவர் வருவார் என்பதும் நாளை தென்கிழக்கின் போர் வெறியன் ராஜபக்ஷே தமிழ் மக்களுக்கு வழங்குவதாகச் சொல்லிக் கொண்டிருக்கும் - இலங்கை அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு தமிழ் மக்களுக்கு சம உரிமை வழங்கும் திட்டத்தையும் இந்த கருணாநிதி ஆதரித்து நிற்பார் என்பதும் நம்மால் புரிந்து கொள்ளக்கூடிய விஷயங்களே. அதற்காக தான் அரசியலில் உருவாக்கி வைத்திருக்கும் ரப்பர் ஸ்டாம்புகளையும், கைத்தடிகளையும் பயன்படுத்திக் கொள்வார்.

இப்போது தமிழர்களின் முதுகில் குத்தியிருக்கும் கருணாநிதி இன்று நேற்றல்ல எல்லா காலத்திலும் - காவிரி பிரச்சனையிலும் ஓகேனக்கல் பிரச்சனையிலும் இதைச் செய்தவர்தான். ஆனால் போருக்கு முகம் கொடுத்து அன்றாடம் நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் பேரினவாதத்திற்கு பலியாகிக் கொண்டிருக்கும் சூழலில் இதைச் செய்ததோடு அதற்காக முனைந்து வந்து தன்னெழுச்சியாய் போராடுகிறவர்களையும் அடக்கி ஒடுக்கிற ஒரு பாசிச சர்க்காராக இன்று உருமாறியிருக்கிறார் கருணாநிதி.

புலிகளை ஆதரிக்க மாட்டேன். ஆனால் ஈழம் கிடைத்தால் மகிழ்வேன். சுப.தமிழ்ச் செல்வனுக்கு அஞ்சலிக் கவிதை எழுதுவேன் ஆனால் சுப. தமிழ்ச்செல்வனின் படுகொலையை ஆதரிப்பேன் என்கிற மாதிரி கருணாநிதியின் பேச்சுகள் குழப்பமாக இருக்கும். உங்களின் இத்தனை ஆண்டுகாலத்தில் ஈழ மக்களுக்காக நீங்கள் செய்தது என்ன? என்று யாராவது கேட்டால் ‘நான் டெசோ மாநாடு நடத்தினேன். இரண்டு முறை ஈழமக்களுக்காக ஆட்சியை தியாகம் செய்தேன். எண்பதுகளில் என் பிறந்த நாளில் வசூலான தொகையை ஈழப் போராளிக்குழுக்களுக்கு பங்கிட்டுக் கொடுத்தேன். நாலு தடவை அளவுச் சாப்பாடு போட்டேன்’ என்றெல்லாம் சொல்வார். (எந்த ஈழப் போராளிக் குழுத்தலைவரும் இவரை ஒரு ஒப்புக்குக் கூட மதித்ததில்லை. அமிர்தலிங்கத்தின் துணைவியார் மங்கையர்க்கரசியாரும், தமிழக அரசுப்பணத்தை அகதிகள் மறுவாழ்வு என்னும் பெயரில் ஏப்பம் விட்டுக் கொண்டிருக்கும் தந்தை செல்வாவின் மகன் சந்திரஹாசனும்தான் இன்று கருணாநிதியின் ஆதரவாளர்கள். மங்கையர்க்கரசியாருக்கும், சந்திரஹாசனுக்கும் ஈழ விடுதலைப் போருக்கும் அங்குள்ள ஈழ மக்களுக்கும் என்ன சம்பந்தம் என்றுதான் நமக்குத் தெரியவில்லை.)

இரண்டு முறை காங்கிரஸ் துரோகிகள் ஜெயலலிதாவோடு சேர்ந்து கொண்டு புலிகளைக் காட்டி கருணாநிதியின் ஆட்சியைக் கலைத்ததை இவர் தியாகம் என்கிறார். அதுவும் எவன் இவரது ஆட்சியைக் கலைத்தானோ அவனைப் பக்கத்தில் வைத்துக் கொண்டே இதை தியாகம் என்கிறார். தியாகம் என்பதற்கும் டிஸ்மிஸ் என்பதற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை காங்கிரஸ்காரர்களிடம் கேட்டாவது கருணாநிதி தெரிந்து கொள்ளலாம். தவிரவும் கருணாநிதி சந்தித்தது காங்கிரசாரின் துரோகம் அதையே மாற்றி ஈழ மக்களுக்கான தியாகம் என்று சொல்வது அற்பத்தனத்திலும் அற்பத்தனம். அது போல ஈழ மக்களுக்காக கருணாநிதி என்னவெல்லாம் செய்தார் என்று சமீபத்தில் ஒரு பட்டியல் வெளியிட்டிருந்தார். அது அனைத்துமே ஆட்சியில் இல்லாத காலத்தில் உள்ளூர் அரசியலை மனதில் வைத்து விளையாடிய விளையாட்டு. இதை எல்லாம் மீறி அப்படியே செய்திருந்தால் கூட இவ்வளவு கீழ்த்தரமாக அதைச் சொல்லிக் காட்டி தமிழக மக்களை அவமானப்படுத்தியிருக்க வேண்டியதில்லை.

ஆனால் இன்று தியாகம் செய்வதற்கான சூழல் எழுந்திருக்கும் நிலையில் கருணாநிதி அதைச் செய்யாமல் இருப்பதும் தியாகமே செய்யாமல் எவன் போட்ட சோற்றையோ தான் போட்டதாக சொல்லிக் கொள்வதும் இந்த நூற்றாண்டில் தமிழகம் பார்க்காத ஏமாற்றுத்தனம். எவன் திமுக ஆட்சியைக் கலைத்து அதை கருணாநிதி தியாகம் என்கிறாரோ அவனுடனேயே இணைந்து ஈழத் தமிழர்களுக்காக போராடப் போவதாக கருணாநிதி சொல்வது, கள்ளனோடு சேர்ந்து கள்ளனைப் பிடிக்கிற கதையாக இருக்கிறதே? இதை எல்லாம் யாருமே உங்களுக்கு சொல்ல மாட்டார்களா? அல்லது சொல்கிற மாதிரி ஆட்கள் யாருமே உங்களை நெருங்க முடிவதில்லையா? தமிழகத்தில் எழும் இந்த ஈழ ஆதரவு எழுச்சிகளை ஜெயலலிதாவோடு தான் நடத்திக் கொண்டிருக்கும் லாவணி அரசியலுக்கு பயன்படுத்துவதன் மூலம் இது ஏதோ திமுக, அதிமுக பிரச்சனை என்னும் ஒரு தோற்றத்தை சித்தரிக்க முயல்கிறார் கருணாநிதி.

முத்துக்குமார்: நின்று எரிய வேண்டிய தீ...

காலையில் முத்துக்குமார் ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்த செய்தி கிடைத்தபோது அவரின் உடலின் சில பாகங்கள் எரிந்து கொண்டிருந்தது. அப்போது அவர் உடலில் எரிந்த நெருப்பு அவர் எழுதிய நான்கு பக்க கடிதத்தையும் எரித்திருந்தது. அந்தக் கடிதம் என் கையில் கிடைத்தபோது நெருப்பின் சூடு ஆறாமலேயே இருந்தது. அணைந்த நெருப்பை சாம்பல் மூடியிருந்தது. மூடப்பட்ட சாம்பலுக்குள் பெருநெருப்பு ஒன்று தணலாக அந்த மரணசாசனத்தில் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த நெருப்புதான் கருணாநிதி மீதான நமது பாசாங்கை எரித்து சாம்பலாக்கியது; ஜெயலலிதா என்னும் பாசிச சக்தியை மக்கள் முன் தோலுரித்தது. அவரது மரண சாசனம் அதிர்வேட்டாகி இதயத்தை சுட்ட போது, அந்த நெருப்பை அணைப்பதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருந்தன. கடந்த இருபது ஆண்டுகளில் ஈழத் தமிழர் தொடர்பான சிறந்த ஆவணமான முத்துக்குமாரின் மரணசாசனம் அத்தனை அரசியல்வாதிகளையும் நிராகரிக்கிறது. அதனால்தான் ஈழ விடுதலையை, புலிகளை ஆதரிக்கிறவர்களே முத்துக்குமாரை அரசியல் நீக்கம் செய்ய முயற்சிக்கிறார்கள். இவர்கள் பதவி அரசியலுக்காக அமைத்திருக்கும் கூட்டணியும் இந்த தேர்தல் அமைப்புக்குள் குதிரை ஓட்டியாக வேண்டிய நிர்ப்பந்தமும் முத்துக்குமாரை அரசியல் நீக்கம் செய்யத் தூண்டியிருக்கலாம்.

‘‘உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள். போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம். உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள்.’’

என்று முத்துக்குமார் எச்சரிப்பது திமுகவை மட்டுமல்ல தேர்தல் அரசியல் நிலைப்பாட்டில் இருந்து கொண்டு மக்களின் இயல்பான எழுச்சிகளை அடக்க நினைக்கும் அத்தனை சக்திகளையும் தான். இந்தி எதிர்ப்பு காலத்தின் பயனை தாளமுத்து நடராசனின் வீரச்சாவை, சின்னசாமியின் தீக்குளிப்பை தேர்தலில் அறுவடை செய்த திமுக இரு மொழிக்கொள்கையை கொண்டு வந்து எப்படி தமிழுக்குத் துரோகம் செய்ததோ அது போல ஈழத் தமிழருக்காக எழுந்திருக்கும் தமிழகத்தின் கொதிப்பை அரசியல்வாதிகள் அறுவடை செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டும், இதுதான் முத்துக்குமாரின் ஆசை. இன்னும் சொல்லப் போனால் காங்கிரஸையும் அதை முட்டுக் கொடுத்து நிற்கும் திமுகவையும் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்பதுதான் அந்த தியாகியின் தீர்க்கமான சிந்தனை.

‘‘என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள்.’’

முத்துக்குமாரின் உடலை கைப்பற்றும் அளவுக்கு மாணவர்களுக்கு அரசியலோ தலைமையோ இல்லாத சூழலில் இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவை அவரது இறுதிச் சடங்கை ஒரு சடங்காகவே செய்து முடிக்க நினைத்தது. ஆனால் மாணவர்கள் அவ்வாறு நடக்கவிடாமல், அதை மிகப்பெரிய எழுச்சிப் பேரணியாக்கினார்கள். எப்படி முத்துக்குமாரின் அடக்கத்தை ஒரு சடங்காக மாற்ற நினைத்தார்களோ அது போலவே இந்த மக்கள் எழுச்சியையும் பெரியவர் நெடுமாறன் தலைமையிலான இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவை ஒரு சடங்காக மாற்றுகிறது. முத்துக்குமாரின் வீரச்சாவை ஒட்டி இயல்பாக எழும் ஈழ ஆதரவு கொந்தளிப்புகளை மீண்டும் மீண்டும் சடங்காக மாற்றுவதன் மூலம் அந்த சடங்கிற்குள் புகுந்து குழப்பத்தை ஏற்படுத்த கருணாநிதிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவை முன்னெடுக்கிற போராட்டங்களை நாம் ஆதரிக்கிற அதே வேளையில் ஏன் அதை ஒரு சடங்காக செய்ய வேண்டும் என்னும் அடிப்படையான கேள்வியையும் நம்மால் கேட்காமல் இருக்க முடியவில்லை? சென்னை சர்.பி.டி.தியாகராயா அரங்கில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு பேரவை நடத்திய கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசிய ராம்தாஸ் ‘‘இங்கு பேசுவோர் எந்த அரசியல் கட்சிகளையோ தலைவர்களையோ விமர்சிக்கக் கூடாது’ என நிபந்தனை போட்டாராம். அது போல கிராமங்களில் கருப்புக் கொடி ஏற்றப்படும் என்ற அறிவிப்போடு, யாரையும் விமர்சிக்கக் கூடாது என்ற கண்டிஷனும் போட்டிருக்கிறார் ஜி.கே. மணி.

இது இலங்கைத் தமிழர்களுக்காக பல்வேறு புரட்சிகர அமைப்புகள், பொதுமக்கள், மாணவர்கள், வழக்கறிஞர்கள் நடத்துகிற போராட்டம். தேர்தல் அரசியலில் இருந்து விலகியிருக்கும் அமைப்புகள் பலதும் கலந்து கொள்ளும் கூட்டத்தில் ஒருவர் அரசியல் நீக்கம் செய்து விட்டுப் பேசுங்கள் என்றால் நாம் என்னவென்று சொல்வது. ராமதாஸ் காங்கிரஸோடு இருக்கிறார் அவர்களுடன் பதவியைப் பங்கிட்டிருக்கிறார். ஆகவே ராமதாஸ் கலந்து கொள்ளும் கூட்டத்தில் காங்கிரஸை யாரும் விமர்சித்து விடக் கூடாது என எதிர்பார்க்கிறீர்கள். வைகோவோ யாரும் ஜெயலலிதாவை விமர்சித்து விடக் கூடாது என்று பார்க்கிறார். திருமாவோ யாரும் கருணாநிதியை விமர்சித்து விடக் கூடாது என்று பார்க்கிறார். உண்மையில் ஈழத் தமிழர்களை கொன்று குவிக்க ஆயுதம் அனுப்பும் காங்கிரஸையும் அதை தட்டிக் கேட்காமல் மௌனமாக சகித்துக் கொண்டு இருக்கும் கருணாநிதியையும் எப்படி விமர்சிக்காமல் இருக்க முடியும்.

‘போரில் மக்கள் சாவது இயல்பான ஒன்றுதான்’ என ராஜபக்ஷேவின் தங்கச்சி போல பேசுகிற ஜெயலலிதாவும் ஒன்றுதான், ‘இலங்கையில் தமிழர்கள் மீதான போரை இந்திய அரசு நடத்தவில்லை; அது பொய்’ என்று ராஜபக்ஷேவின் அண்ணனைப் போல பேசுகிற கருணாநிதியும் ஒன்றுதான். கருணாநிதி ஜெயலலிதாவை வெல்லலாம். காங்கிரசுக்கு காவடி தூக்கலாம், வைகோவை முடக்கலாம், ராமதாசை தனிமைப்படுத்தலாம், நெடுமாறனை இழிவுபடுத்தலாம். ஆனால் இனி எப்போதும் கருணாநிதியால் வெல்ல முடியாத ஒரு தியாகிதான் முத்துக்குமார். அந்த வீர மகன் மூட்டிய நெருப்பே இன்று கருணாநிதிக்கு எதிராக நின்று எரிகிறது என்பதுதான் உண்மை.

திமுக சீரழிவின் இறுகிய வடிவம்....

திமுக மத்திய அரசுக்கான அதரவை வாபஸ் வாங்கினால் மத்திய அரசு கவிழுமா கவிழாதா என்பதல்ல இங்கு பிரச்சனை. அதற்கான முயற்சியை திமுக இதய சுத்தியோடு எடுத்ததா என்பதுதான் கேள்வி. அது போல நண்பர் கோவி.லெனின் கலைஞருக்கு ஆதரவாக எழுதிய கட்டுரை ஒன்றில் இப்படி எழுதியிருந்தார். ‘‘2009ல் முல்லைத்தீவுக்குள் சிங்கள ராணுவம் நுழைந்தபோது தமிழகத்தில் எழுந்த உணர்ச்சியலைக்கும், 1995ல் யாழ்ப்பாணத்தை சிங்கள ராணுவம் பிடித்தபோது இங்கே நிலவிய மயான அமைதிக்குமான வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். முல்லைத்தீவு தாக்குதல் நடந்தபோது கலைஞர் ஆட்சி. எல்லோரும் பதைபதைத்து குரல் கொடுத்தனர். யாழ்ப்பாணத் தாக்குதலின்போது ஜெயலலிதா ஆட்சி. அதனால்தான் அந்த மயான அமைதி. இதுதான் கலைஞர் ஆட்சிக்கும் ஜெயலலிதா ஆட்சிக்குமான அடிப்படை வேறுபாடு’’ என்று ஒரு காரணத்தைச் சொல்கிறார்.

யாழ்ப்பாணம் சிங்கள ராணுவத்திடம் விழுந்தபோது வடக்கு கிழக்கின் பெரும்பாலான இடங்கள் புலிகளின் கைகளில் இருந்தது. தவிரவும் ‘‘ஓயாத அலைகள்’’ நடவடிக்கை மூலம் வடக்கை முழுமையாக கைப்பற்றி கிழக்கையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்து புலிகள் வலிமையாக இருந்த நேரம் அது. ஆனால் யாழ்ப்பாணம் எப்போதும் புலிகளிடம் நிரந்தரமாக இருந்ததில்லை. எப்போதெல்லாம் ராணுவத்தால் யாழ்ப்பாணம் ஆக்ரமிக்கப்பட்டதோ அப்போதெல்லாம் யாழ் மக்கள் ராணுவ நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து திறந்த வெளிச்சிறைக்குள் வாழப் பழகி விட்டார்கள். ராணுவ ரீதியிலும், கேந்திர ரீதியிலும் ஈழ விடுதலைப் போருக்கு வடக்குப் பகுதிதான் முக்கியம். கிழக்கை போராளிகள் இழந்தபோது கூட கருணாநிதி ஆட்சிதான் இங்கே நடந்து கொண்டிருந்தது. 1995ல் எப்படி யாழ்ப்பாணம் ராணுவத்தின் கைகளில் விழுந்தபோது ஜெயலலிதாவின் ஆட்சியில் மயான அமைதி நிலவியதோ அப்படித்தான் கிழக்கு விழுந்து பிள்ளையான் முதல்வர் ஆன போதும் இங்கு மயான அமைதி நிலவியது.

ஆனால் கிழக்கை ஆக்ரமித்த சிங்கள பேரினவாதிகள் இன்று வடக்கையும் ஆக்ரமித்திருக்கிறார்கள். ஆனால் யாழ்ப்பாணத்துக்கும், கிழக்கிற்கும் வன்னிப் பிரதேசத்திற்கும் உள்ள வித்தியாசத்தையும் போரால் ஏற்பட்ட பாதிப்புகளை நினைக்கத் தவறுவதாலும் கேந்திர ரீதியாக தமிழர் விடுதலைப் போரில் வடக்கின் பங்கு பற்றி தெரியாத காரணத்தாலும் லெனின் பிழையாக எழுதுகிறார்.

வன்னிப்பகுதி மட்டும்தான் எப்போதும் சிங்களப் பேரினவாதத்திற்கு அடிபணிய மறுக்கும் மண். (வன்னிமைகள் என்றழைக்கப்பட்ட வன்னிச் சிற்றரசுகள் கூட கடைசி வரை வெள்ளையனுக்கு அடிபணிந்ததில்லை) வன்னியின் உள்ள ஒவ்வொரு தமிழ்க் குடும்பமும் வீட்டிற்கு இரண்டு பிள்ளைகளை புலிப் போராளியாக களமுனைக்கு அனுப்பியிருக்கிறார்கள். தங்கள் பிள்ளைகள் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு கள முனைக்குச் செல்லும்போது புலிகளைப் பெற்றவர்கள் அவர்களை விட்டுவிட்டு ராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்துக்கு செல்ல முடியாது. அப்படிச் சென்றவர்களை நூற்றுக்கணக்கில் கொன்று புதைத்து வருகிறது சிங்கள அரசு. ஆக தங்கள் பிள்ளைகள் எங்கு போகிறார்களோ அவர்களும் அங்குதான் செல்ல முடியும். புலிகளோடு புலிகளாக முல்லைத் தீவின் மரண விளிம்பில் சிக்கியிருக்கிறார்கள் மக்கள்.

புலிகளைத் தாக்குகிறோம் என்று இந்தியாவும் இலங்கையும் சேர்ந்து வீசுகிற குண்டு புலிகளைக் கொல்கிறதோ இல்லையோ புலிகளை ஈன்ற ஈழத் தமிழச்சியைக் கொல்கிறது; புலியின் தங்கையைக் கொல்கிறது; புலியின் மச்சானை, மாமனைக் கொல்கிறது. இப்படி கொன்றொழிப்பதுதான் தமிழகத்தை உசுப்பியிருக்கிறதே தவிர ‘கருணாநிதி ஆட்சிக்கு வந்து விட்டார். ஆகவே எல்லோரும் ஈழத் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் என்று பிரச்சனை பண்ணுங்கள்’ என்று வேண்டுமென்றே நாங்களெல்லாம் கூச்சல் போடவில்லை. ‘இது கருணாநிதிக்கு தலைவலியை உண்டாக்குகிறது. ஆகவே யாரும் இது பற்றி பேசக் கூடாது’ என்று நண்பர் லெனின் விரும்புகிறாரோ என்னவோ?

எம்மைப் பொறுத்தவரையில் ஈழத் தமிழர்களின் தமிழீழ சுதந்திரப் போர் என்பது ஆறரை கோடி தமிழ் மக்களின் உணர்வுப்பூர்வமான பிரச்சனை. அத்தோடு தேசிய இனங்களின் சிறைக்கூடமாக இருக்கும் இந்தியாவின் தென்கோடியை அரசியல் மயப்படுத்த உதவும் ஒரு கருவிதான் ஈழம். அதை ஜெயலலிதாவோ கருணாநிதியோ தங்களின் பதவி அரசியலுக்குப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம். பதவி வெறி பிடித்த இந்த அரசியல்வாதிகளை இனியும் சகித்துக் கொண்டிருப்பது ஈழத் தமிழனுக்கு மட்டுமல்ல இந்தியத் தமிழனுக்கும் ஆபத்து. ஏனென்றால் ஈழத்தையும் தாண்டி ஓகேனக்கல், முல்லைப்பெரியாரு, காவிரி என தமிழர்களை நெருக்கும் சக்திகளிடம் இவர்களே நம்மைக் காட்டிக் கொடுத்து விடுவார்கள். இந்தப் பார்வையின் முதல் வித்தை விதைத்த முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கில் திரண்டது கட்சித் தொண்டர்கள் அல்ல பொது மக்களும் இளைஞர்களும். அவர்கள்தான் கண்ணீரும் கம்பலையுமாக முத்துக்குமாருக்காக அழுதார்கள்.

ஒரு பிரதான அரசியல் தலைவர் அந்த இறுதி ஊர்வலத்துக்கு வரவே இல்லை. முத்துக்குமாரின் தியாகத்தை ஒரு மனிதாபிமான பிரச்சனையாக மாற்றுவது எவ்வளவு அபத்தமோ அது போலத்தான் ‘யாரையும் யாரும் விமர்சிக்கக் கூடாது’ என்பதும். ஒரு பக்கம் கூட்டணியையும் தொடர்ந்து கொண்டு மத்தியில் பதவியையும் சுகித்துக் கொண்டே ஈழத் தமிழர்களுக்காக போராடும்போதுதான் ‘யாரும் வீதிக்கு வந்து போராட வேண்டாம். வீட்டில் சும்மா இருந்தாலே போதும்’ என்று சொல்ல முடியும். உண்மையிலேயே ஈழத் தமிழர்களுக்காக உதவ நினைக்கும் யாரும் காங்கிரஸ் துரோகிகளுடனோ பார்ப்பன பாசிஸ்டுகளுடனோ கூட்டணி வைக்கக் கூடாது. இந்த இரண்டு மக்கள் விரோத சக்திகளுமே ஈழத் தமிழர்களுக்கு மட்டுமல்ல இந்திய உழைக்கும் மக்களுக்கும் எதிரானவர்கள்தான். இந்த கூட்டணிக்குள் தொடர்ந்து கொண்டே இந்தப் போராட்டங்களை முன்னெடுக்கலாம் என்பதும் வீணாய்ப்போன பகல் கனவுதான்.

தோழர்களே!

கடந்த நாற்பதாண்டுகளில் தமிழகத்தில் உருவாகி வளர்ந்த திராவிட இயக்கம் தேர்தல் அரசியலில் சீரழிந்து அதன் இறுகிய வடிவத்துக்கு இன்று வந்திருக்கிறது, அதே நேரம் அரசியலற்ற வெற்று தமிழ்த் தேசிய சிந்தனையாளர்கள் பல நேரங்களில் பார்ப்பனர்களைப் போல நடந்து கொள்கிறார்கள். இந்தியா ஈழத்தில் முன்னெடுக்கும் போர் என்பது அதன் முதலாளித்துவ நலன் சார்ந்தது. தென்கிழக்கில் அமெரிக்காவின் அடியாளாக உருவாகி இருக்கும் இந்தியா, அமெரிக்கா சீரழித்த ஆப்கானில் இன்று வருமானம் ஈட்டிக் கொண்டிருக்கிறது. மீள்கட்டுமானம் என்ற பெயரில் இந்திய முதலாளிகள் ஆப்கானை சுரண்டிக் கொண்டிருக்கிறார்கள். அது போலவே இலங்கையையும் சுடுகாடாக்கி விட்டு அதையும் மீள்கட்டுமானம் என்ற பெயரில் வியாபாரத் தந்திரமாக மாற்றுகிறார்கள். அதனால்தான் ஈழ மக்களின் சுய நிர்ணய உரிமைப் போரை நசுக்கி புலிகளை அழித்து விட்டு துரோகக் குழுக்களை அங்கே இறக்கி உள்நாட்டுப் போரை தொடர விரும்புகிறது இந்தியா.

கிளிநொச்சியை சிங்கள ராணுவம் கைப்பற்றியதைத் தொடர்ந்து இலங்கைக்கு சென்ற ப்ரணாப் முகர்ஜி கிளிநொச்சியை கட்டியெழுப்பும் திட்டத்திற்கு இந்தியா உதவும் என்று உறுதி அளித்து வந்திருப்பதும், முல்லைத்தீவு வரை சிங்கள ராணுவம் ஆக்ரமித்த பிறகு ‘‘புலிகளும், இலங்கை ராணுவமும் ஒரே நேரத்தில் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு கையைத் தூக்கி சமாதானப் பேச்சுகளை ஆரம்பிக்க வேண்டும்’’ என்று ப.சிதம்பரம் சொல்வதிலிருந்தும் இது தெரிகிறது. ஒரு போதும் இலங்கை இனப்பிரச்சனை தீர இந்தியா விரும்பாது. தென்கிழக்கில் இந்து மகா சமுத்திரத்தில் தனது ராணுவ மேலாண்மை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றால் இலங்கை எரிந்து கொண்டே இருக்க வேண்டும் என இந்தியா ஆசைப்படுகிறது. அதன் மூலம் ஆயுத வியாபாரமும் செய்யலாம், கூலிப்படைகளையும் கட்டி எழுப்பலாம், இந்து மகா சமுத்திரத்தையும் தன் கட்டுக்குள் வைக்கலாம் என்று கணக்கிடுகிறது இந்தியா.

இப்போது நம் முன்னால் நிற்கும் கேள்வி இரண்டுதான். முத்துக்குமாரின் கனவான கிளர்ச்சியை நாம் முன்னெடுக்கப் போகிறாமா? அல்லது இருக்கிற ஓட்டுக் கட்சிகளால் மீண்டும் காயடிக்கப்படப் போகிறோமா? வெறுமனே ஈழத்துக்கான போராட்டமாக மட்டுமல்லாமல் தமிழகத்தில் புரட்சிகர சக்திகளை வலுப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக இன்று முத்துக்குமார் உருவாகியிருக்கிறார். அந்த தியாகியின் நேர்மையான அரசியலை தேர்தல் அரசியல்வாதிகளால் ஒரு போதும் முன்னெடுக்க முடியாது. உழைக்கும் மக்களாலும், இளைஞர்களாலும், மாணவர்களாலும், பெண்களாலும் மட்டுமே முன்னெடுக்க முடியும். நடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் ஓட்டுப் பொறுக்கிகள் ஈழப் பிரச்சனையை அம்போவென கைவிடுவார்கள். ஆனால் இதுதான் சரியான தருணம். மக்களைத் திரட்டி ஓட்டுச் சீட்டு அரசியல்வாதிகளின் நாடகங்களை நாம் அம்பலப்படுத்த வேண்டும். காங்கிரஸ் கட்சியையும் அதைத் தாங்கிப் பிடிக்கும் கருணாநிதியையும் அனைத்துச் சக்திகளும் ஒன்றிணைந்து தனிமைப்படுத்த வேண்டும்.

தமிழக மக்களை அரசியல் ரீதியில் அணி திரட்டாமல் இந்தப் போர் வெல்லாது. இந்திய ஆக்ரமிப்புச் சக்திகளை நாம் முறியடிப்பது என்பது ஈழத்திற்கு மட்டுமேயான விடிவு மட்டுமல்ல, அது நமக்குமானதுதான். முத்துக்குமார் அதைத்தான் அதற்கான வாசலைத்தான் திறந்து விட்டுச் சென்றிருக்கிறான்.

நன்றி:[இன்ஃபோதமிழ்]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.