Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திரையுலகத் தமிழீழ ஆதரவு இயக்கத்தின் போராட்டம்: அசத்திக் காட்டிய இயக்குநர் இமயம்!!!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முத்துக்குமாரின் தியாகத்திற்கு பின்பு தமிழகத்தில் எழுந்துள்ள ஈழம் பற்றிய எழுச்சிப் போராட்டத்தை, காங்கிரஸ் தவிர மற்ற அரசியல் கட்சிகள் நடத்திக் கொண்டுதான் இருந்தன. இடையில் வந்துவிட்ட தேர்தல் நடவடிக்கைகளினால் அவர்களிடையே இருந்த போராட்ட ஒற்றுமைகூட சிதைந்து போய் கூட்டணி அரசியலால் பிரிந்துவிட்டனர். இந்த அரசியல் சார்பானவர்கள் பொறுப்பேற்று தமிழ் ஈழப் போராட்டத்தை இன்னும் வேகமாக முன்னெடுப்பார்கள் என்று காத்திருந்து, பொறுத்திருந்து, பொறுமையிழந்துபோன அமைப்பு சாராத ஈழத்து ஆதரவாளவர்கள் பலரும் ஒன்றுகூடி, இனி இவர்களை நம்பி பயனில்லை என்ற உணர்வோடு தாங்களே போராட்டக் களத்தில் நேரடியாக களமிறங்க தீர்மானித்து விட்டார்கள்.

அப்படிப்பட்ட தமிழ்த் திரையுலக உணர்வாளர்கள் அனைவரும் திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம் என்கிற அமைப்பை இயக்குநர் இமயம் பாரதிராஜா தலைமையில் ஏற்படுத்தி, இது போன்ற ஈழத்தின்பால் நேசமும், பாசமும், பற்றும் கொண்ட பல்வேறு அமைப்பினர்களையும் ஒருங்கிணைத்து போராட்டம் நடத்த ஆயத்தமாகி இருக்கிறார்கள்.

இதுவே எனக்கு முதல் ஆச்சரியத்தை அளித்தது. காரணம் இயக்குநர் இமயம் தற்போது கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'தெக்கத்திப்பொண்ணு' என்னும் சீரியலை இயக்கிக் கொண்டிருக்கிறார். அவருடைய சொந்தத் தயாரிப்பு அது.. இந்த நேரத்தில் கலைஞரை சிக்கலில் மாட்டிவிடும் வேலையை அவரே முன் நின்று செய்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அதுதான் நடந்தது..

கடந்த 23-ம் தேதியன்று சென்னை ஜெமினி மேம்பாலம் அருகில் இருக்கும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அரங்கத்தின் திறந்த வெளியில் மாநாடு போல் பந்தல் அமைத்து மிகப் பெரும் அளவுக்கு ஈழத்து ஆதரவாளர்களை அழைத்து கூட்டம் நடத்திவிட்டார்கள்.

எப்போதுமே கலைஞர் எல்லாருக்கும் முந்தி தனக்குத்தான் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற நினைப்புடையவர். பாரதிராஜாவின் இந்த போராட்டம் உலகம் முழுக்க தமிழர்களிடையே முழு கவனத்தையும் ஈர்க்கும் என்பதை உணர்ந்த கலைஞர் முதல் நாளே ஏதோ திடீர் ஞானதோயம் பெற்றவராக 23-ம் தேதியன்று தமிழகம் முழுவதும் 12 மணி நேர பந்த் என்று அறிவித்திருந்தார்.

கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பல்வேறு இடங்களில் இருந்தும் பொதுமக்களும், இளைஞர்களும் பெருவாரியாக இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். சென்னை மாநகரம் முழுவதிலும் பல்வேறு இடங்களிலும் பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்தன என்றாலும் கூட்டம் பந்தலையும் தாண்டி அமர்ந்திருந்தது எதிர்பார்க்காத ஆச்சரியம்.

இக்கூட்டம் பற்றிய எனது செய்திக் கட்டுரையை இங்கே உங்கள் முன் வைக்கிறேன். மேடையில் பேசியவர்களின் பேச்சில் எனக்கு நினைவில் இருப்பவைகளை இங்கே பதிவு செய்துள்ளேன்.

கூட்டத்திற்கு வந்திருந்த இயக்குநர்கள் கே.பாலசந்தர், பாரதிராஜா, மனோபாலா, அமீர், சேரன், மணிவண்ணன், பார்த்திபன், பாலுமகேந்திரா, ஏ.ஆர்.முருகதாஸ், ஹரி, தங்கர்பச்சான், வெற்றிமாறன், வசந்தபாலன், ஜனநாதன், வி.சேகர், வசந்த், மனோஜ்குமார், யார் கண்ணன், சித்ரா லட்சுமணன், ஆர்.சுந்தர்ராஜன், ஈ.ராமதாஸ், கதிர், சசிமோகன், ரவீந்தர், ஆதி, போன்றோர்.

மேலும் பெப்ஸி தலைவர் வி.சி.குகநாதன், செயலாளர் ஜி.சிவா, முன்னாள் தலைவர் விஜயன், மற்றும் பெப்ஸி நிர்வாகிகளும் அனைத்து சங்கங்களின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜன், கே.பாலு, ஏ.எல்.அழகப்பன், சோழா பொன்னுரங்கம், வசனகர்த்தா பிரபாகரன், ஒளிப்பதிவாளர் கே.எஸ்.செல்வராஜ் போன்றோரும் வந்திருந்தனர்.

நடிகர்களில் சத்யராஜ், கஞ்சா கருப்புவும் காலை 8.30 மணிக்கே வந்திருந்து இறுதிவரையில் இருந்தனர். நாசரும் வந்திருந்து பேசிவிட்டுச் சென்றார். ஆனால் மதியம் 2 மணிக்கு வந்த வைகைப்புயல் வடிவேலு பாதியிலேயே பேசக்கூட இல்லாமல் ஓடிவிட்டார்.

நடிகைகளில் முதல் ஆளாக வந்தவர் புவனேஸ்வரி. பாரதிராஜாவின் 'தெக்கத்திப்பொண்ணு' சீரியலில் நடிப்பதால் இவரது வருகை ஆச்சரியமளிக்கவில்லை. தங்கர்பச்சானும், ரோகிணியும் ம.தி.மு.க. தலைமை அலுவலகமான தாயகத்தில் உண்ணாவிரதம் இருக்கும் பெண்கள் அமைப்பினரை நேரில் சென்று பார்த்து வாழ்த்திவிட்டு இந்த மேடைக்கு வந்தார்கள்.

கவிஞர் தாமரை, கவிஞர் சினேகன், கவிஞர் மு.மேத்தா, புலவர் புலமைப்பித்தன், அருட்தந்தை ஜெகத்கஸ்பார், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பால்கனகராஜ், வழக்கறிஞர் கருப்பன், த.வெள்ளையன், திருச்சி வேலுச்சாமி, தமிழருவிமணியன், ஐயா பழ. நெடுமாறன் என்று திரண்டிருந்தனர்.

நிகழ்ச்சிகளை இயக்குநர்கள் பாரதிகிருஷ்ணகுமாரும், சேரனும் தொகுத்து வழங்கினார்கள். காலை 8.30 மணி முதலே வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. காலை 9.30 மணிக்கு நிகழ்ச்சி துவங்க.. முதலில் பெப்ஸியின் தலைவர் வி.சி.குகநாதன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

கவிஞர் புலமைப்பித்தன்

“எம்ஜிஆர். ஆட்சிக் காலத்தில் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்தவர்களில் நானும் ஒருவன். இது பற்றி கலைஞரே குறிப்பிட்டுச் சொல்லியிருந்தார். ‘அரசவைக் கவிஞரும் எதிர்க்கிறாரே..' என்று.. அந்தக் கலைஞரை எனக்கு மிகவும் பிடிக்கிறது. ஆனால் இப்போதைய கலைஞரை உங்களைப் போலவே எனக்கும்தான் பிடிக்கவில்லை. கலைஞர் அவர்களே.. கூட்டணியை உடைத்துவிட்டு காங்கிரஸோடு ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று சொல்லிவிட்டு வெளியே வாருங்கள்.. அதுதான் உங்களுக்கு அழகு..” என்று கலைஞருக்கு அட்வைஸ் செய்தார்.

மேலும், இந்திய அமைதி காப்புப்படையில் மேஜர் ஜெனரலாக இருந்த கர்ஹிரத்சிங் எழுதிய புத்தகத்தைப் படித்துக் காட்டினார். இந்திய-இலங்கை ஒப்பந்தம் எந்த நோக்கத்திற்காக போடப்பட்டது என்பதை ராஜீவ்காந்தி ஜெயவர்த்தனேவுக்கு எழுதிய கடிதத்தை வைத்து விளக்கினார். எம்.ஜி.ஆர். இந்திய ராணுவம் ஈழத்துப் பெண்கள் மீது நடத்திய அட்டூழியங்களை ராஜீவின் கவனத்திற்கு கொண்டு போனதையும், அவர் எரிச்சலடைந்து எம்.ஜி.ஆர். மீதே எரிந்து விழுந்ததையும் சுட்டிக் காட்டினார் புலவர்.

“ஒரு ராஜிவ் உயிருக்கு இன்னும் எத்தனை லட்சம் ஈழத் தமிழர்கள் இரையாக வேண்டும்..? புறத்தே வெளுத்து, அகத்தே கருத்துள்ள சோனியாவே வெளிப்படையாகச் சொல்லிவிடுங்கள்.. நாங்கள் பிரபாகரனை பிடிக்கின்றவரையில், அவனைக் கொல்கின்றவரையில் போரை தொடர்ந்து நடத்துவோம் என்று சொல்லிவிடுங்கள்.. அடுத்து நடப்பதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்..” என்றார் கோபத்துடன்.

“பிரபாகரன்தான் தமிழ் இனத்திற்கு விடிவெள்ளி. அவன்தான் ஈழத்தமிழர்களின் தளபதி. அவனைத் தவிர தமிழர்களுக்கு வேறு நாதியில்லை..” என்று வெளிப்படையாகவே தனது ‘தம்பி' பாசத்தைக் காட்டிவிட்டுப் போனார் புலவர் புலமைப்பித்தன்.

இயக்குநர் மணிவண்ணன்

காலில் அடிபட்டு சில காலமாகவே நொண்டி, நொண்டி நடந்து வரும் இயக்குநர் மணிவண்ணன், இந்த உபாதையுடனேயே தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஈழத்து விடுதலைக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

“சில மாதங்களுக்கு முன்னால் தமிழகத்து அரசியல்வாதிகளை இலங்கைக்காரன் ஒருவன் ‘கோமாளிகள்' என்றான். அப்போது நான்கூட கோபப்பட்டேன். ஆனால் இப்ப நடக்கிறதையெல்லாம் பார்க்கும்போது, அவன் உண்மையாத்தான் சொல்லிருக்கான்னு நினைக்கிறேன்...” என்றபோது பலத்த கைதட்டல் எழுந்தது.

“புலியை நான் நம்புகிறேன்.. புலியை எனக்குப் பிடிக்கும்.. புலியை நான் நேசிக்கிறேன்.. புலிகளை வாழ வைக்க வேண்டும்.. நான் புலிகளை ஆதரிப்பேன்.. ஏன்னா நம்மளோட தேசிய விலங்கே புலிதாங்க. நம்ம புலிக்கு நம்மளே சப்போர்ட் பண்ணலைன்னா வேற எவன்ங்க சப்போர்ட் பண்ணுவான்..? ஆகவே தோழர்களே.. நீங்களும் புலிக்கு சப்போர்ட் பண்ணுங்க.. புலி நம்மளோட பிரெண்டு.. பெஸ்ட் பிரெண்டு.. புலியே நமக்கு விடுதலை பெற்றுத் தரும். புலிகளை நம்புங்கள்.. புலிகளை ஆதரியுங்கள். நமக்கு விடிவு காலம் நிச்சயம் பிறக்கும்...” என்று தொடர்ந்து 2 நிமிடங்களுக்கு எழுந்த கை தட்டலால் அரங்கத்தை அதிர வைத்துவிட்டுப் போனார் இயக்குநர் மணிவண்ணன்.

சிவாஜிலிங்கம் எம்.பி.

இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் சிவாஜிலிங்கம் தனது பேச்சில் இலங்கை வரலாற்றை எடுத்துச் சொல்லியதோடு, இனப்பிரச்சினை எதனால் ஏற்பட்டது.. இதுவரையில் நடந்தது என்ன என்பது பற்றியெல்லாம் கூட்டத்தினருக்கு விளக்கமாக எடுத்துரைத்தார்.

இரண்டாண்டுகளுக்கு முன்பாக டெல்லியில் எம்.கே.நாராயணனை சந்தித்தபோது அவர் “எங்களுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் பாலமாக இருங்கள்” என்று தன்னிடம் தெரிவித்தையும் சொன்னார் சிவாஜிலிங்கம்.

“4000 விடுதலைப்புலிகள்தான் உள்ளனர் என்று சொல்லிவிட்டு 8000 விடுதலைப் புலிகளைக் கொன்றுவிட்டதாக சிங்கள இராணுவம் கணக்குச் சொன்னது. நான் இலங்கை நாடாளுமன்றத்திலே கேட்டேன்.. ‘4000 என்று சொல்லிவிட்டு இப்போது 8000 புலிகளை கொன்றுவிட்டதாகச் சொல்கிறீர்களே.. கணக்கு உதைக்கிறதே.. அங்கே சண்டையிட்டது புலிகள்தானா..? அல்லது ஆவிகளா..? பிசாசுகளா?' என்று கேட்டேன். அரசுத் தரப்பில் பதிலே இல்லை.

இங்கே ஒரு பிரச்சினை பேசப்பட்டு வருகிறது.. எமது போராட்டம் தீவிரவாதமா அல்லது இன விடுதலைப் போராட்டமா என்று.. இந்திய விடுதலைக்காக நடத்தப்பட்ட சுதந்திரப் போராட்டம் போன்றதுதான் எங்களது விடுதலைப் போராட்டம். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் போராட்டம் போன்றதுதான் எங்களுடையது.. அது போராட்டம் என்றால் எங்களுடையதும் போராட்டம்தான். பகத்சிங்கின் போராட்டமும் எங்களுடையது ஒன்றுதான். இது போன்றதுதான் பிரபாகரன் தலைமையில் நாங்கள் நடத்தும் போராட்டம். இதில் வித்தியாசம் ஏதுமில்லை.

ஒட்டு மொத்த ஈழத்து தமிழர்களின் ஒரே பிரதிநிதிகள் விடுதலைப்புலிகள்தான்.. வேறு யாருமில்லை.. அவர்களால் மட்டுமே தனித் தமிழ் ஈழத்தை பெற்றுத் தர முடியும். அவர்களைத்தான் உலகத்தில் உள்ள அனைத்து ஈழத் தமிழர்களும் நம்புகிறார்கள். தமிழகத்து மக்கள் எமது ஈழ விடுதலைக்காக எத்தனையோ தியாகங்களையும், உதவிகளையும் செய்திருக்கிறார்கள். இப்போது இந்த நேரத்தில் நீங்கள் எங்களுக்கு உதவாவிட்டால் ஈழத்தில் எமது வம்சம் இருந்ததா என்பதை வருங்காலத்தில் பாடப்புத்தகத்தில் மட்டுமே படிக்க முடியும்.. எதையாவது செய்யுங்கள்...” என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்.

நடிகர் சத்யராஜ்

“தமிழ் ஈழத்தின் இன்றைய நிலைமை பற்றி இன்றைய ஈழத்து வாரிசுகளுக்கு தெரியாது என்று நினைத்திருந்தேன். ஆனால் தற்போது உலகத்தின் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வரும் போராட்டங்களில் 20 வயதான இளைஞர்களும், பெண்களும்தான் முன்னணியில் இருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது இந்தப் போர் வெற்றியடையும்வரையில் ஓயாது என்றே நினைக்கிறேன்..” என்றவர் அன்றைய குமுதம் பத்திரிகையில் அரசு பதில்களில் இருந்த ஈழம் தொடர்பான கேள்வி-பதிலை படித்துக் காட்டினார். ஆனாலும் சத்யராஜின் அன்றைய பேச்சில் ஆவேசம் சற்று மிஸ்ஸிங்தான்.

கவிஞர் தாமரை

இந்த போராட்ட மேடையின் ‘கலரையே' மாற்றியவர் இவர்தான். இவருடைய பேச்சிற்குப் பின்புதான் பேச்சாளர்கள் அனைவரும் நேரடியாக கலைஞர், சோனியா, ஜெயலலிதா மூவரையும் வெளுத்துக் கட்டினார்கள். அந்த வகையில் தாமரையக்காவுக்கு ஒரு ‘ஜே' போட்டுக்குறேன்..

“நீங்க எப்படியோ தெரியலை.. ஆனா என்னால என்னை கட்டுப்படுத்த முடியவில்லை. ஈழத்தில் நடைபெறும் கோரச் சம்பவங்களின் புகைப்படங்களை பார்த்தபோது எப்படி என்னை அடக்கிக் கொள்வது.. என்ன பேசுவது என்பதே தெரியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. நம்மளால எப்படி அதைத் தாங்கிக்க முடியும்.. சொல்லுங்க..

இப்ப இந்த திரையுலகக் கலைஞர்கள் எல்லாரும் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், ஆளுங்கட்சிக்கு ஆதரவான நிலையையே எடுக்கின்றனர். நான் அப்படியில்லை.. எதையும் வெளிப்படையாப் பேசுவேன். தமிழ் ஒரு இனம். மலையாளி ஒரு இனம். இந்தியன் எப்படி ஒரு இனமாகும்..? இதைக் கேட்டால் ‘இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசுகிறேன்' என்கின்றனர். சின்னதாகக்கூட என் உணர்வுகளை வெளிப்படுத்த முடியவில்லை. ரொம்ப கோபம், கோபமாக வருகிறது..

இந்த நேரத்தில்தான் அப்படி, இப்படி என்று தனது சீட்டில் உட்கார்ந்து தவித்துக் கொண்டிருந்த பாரதிராஜா, நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த பாரதிகிருஷ்ணகுமாரை அழைத்து ஏதோ சொல்லியனுப்ப கிருஷ்ணகுமார் துண்டு சீட்டை தாமரையிடம் கொடுக்க.. புரிந்து கொண்ட கூட்டத்தின் முன் வரிசையினர் எழுந்து சத்தம் போட.. ஆளாளுக்கு எழுந்து நின்று தாமரையக்காவுக்கு ஆதரவுக் கரம் நீட்டினார்கள்.. தொடர்ந்தும் பேசினார் தாமரை.

‘ஜெயலலிதா எதிர்க்கட்சியில் இருப்பதால் எப்படி வேண்டுமானாலும் பேசலாம். ஆட்சியில் இருப்பவர்கள் அப்படி பேச முடியாது..' என்கிறார் கலைஞர். இலங்கை பிரச்சினையில் இங்குள்ள மக்கள் நம்மால் எதுவும் செய்ய முடியவில்லையே என்று சொல்லலாம்.. முதல்வராக இருக்கும் கலைஞர் ‘என்னால் முடியாது' என்று சொல்லலாமா..? பின்பு எதற்கு அவருக்கு முதலமைச்சர் பதவி..? பதவியை ராஜினாமா செய்துவிட்டு மத்திய அரசிற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தால் உங்கள் மதிப்பு மக்கள் மனதில் உயர்ந்திருக்கும்.

ஈழப் பிரச்சினையைப் பொறுத்தவரை ஜெயலலிதா அமாவாசை என்றால், கலைஞர் அமாவாசைக்கு அடுத்த நாள்..” என்று ஆவேசத்துடன் சொல்ல.. எழுந்த கை தட்டல் ஜெமினி பாலத்தையே சற்று அசைத்திருக்கும் என்று நினைக்கிறேன்.

பொறுத்துப் பார்த்த பாரதிராஜா எழுந்து வந்து தாமரையிடம் ஏதோ சொல்ல.. தாமரை “நான் இன்னும் பேசணுமே ஸார்..” என்றார் அதே வேகத்தோடு.. பாரதிராஜா பதிலுக்கு ஏதோ சொல்லப் போக.. கூட்டம் மொத்தமும் எழுந்து சவுண்டு விட்டது.. “பேச விடுங்க.. பேச விடுங்க..” என்று சத்தம் நாலாபுறத்திலிருந்து மேடையை நோக்கி வர.. ஆனாலும் மேடை நாகரிகம் காரணமாக தாமரை தன் பேச்சை முடித்துக் கொண்டார்.

கவிஞர் சினேகன்

கலைஞரை வெளுத்து வாங்கினார் இந்தக் கவிஞர். “போயும் போயும் அந்த இத்தாலிக்காரிகிட்ட போய் எங்களைக் கெஞ்ச விட்டுட்டீங்களே கலைஞர் ஐயா.. இது உங்களுக்கே நியாயமா..?” என்றபோது கைதட்டல் தூள் பறந்தது..

இயக்குநர் கவிதாபாரதி

மக்கள் தொலைக்காட்சியில் ஈழத்தின் இன்றைய நிலைமை பற்றி ஒளிபரப்பாகி வரும் தொடரின் இயக்குநரான கவிதாபாரதி துவக்கத்தில் மேடையிலேயே கதறி அழுதார். இளங்கோவனை பற்றிப் பேசும்போது “அவர் பெரியாரின் நிஜ பேரனல்ல.. போலி பேரன்.. அந்த இன்ஷியலைப் போட்டுக் கொள்ளும் தகுதியே அவருக்கில்லை.. பெரியாரின் உண்மையான பேரன் முத்துக்குமார்தான்” என்றார்.

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர்

“என் வாழ்க்கையில இதுவரைக்கும் இரண்டு முறைகள்தான் மிக, மிக வருத்தப்பட்டிருக்கிறேன்.. ஒன்று நான் பள்ளியில் படித்து வரும்போது நிகழ்ந்த மகாத்மாகாந்தியின் மரணம்.. இன்னொன்று சமீபத்தில் முத்துக்குமாரின் மரணத்தின்போது..” என்றவர், “நடந்து வரும் நிகழ்வுகள் விரும்பத்தக்கது அல்ல.. ஈழத்தை, ஈழத்து மக்களை அன்னை பராசக்திதான் காப்பாற்ற வேண்டும்..” என்றார்.

த.வெள்ளையன்

“முத்துக்குமாரோடு சேர்ந்து இதுவரையில் 13 பேர் தீக்குளித்து மாண்டிருக்கிறார்கள். இன்னமும் மத்திய அரசும், மாநில அரசும் போரை நிறுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நான் ஒரே ஒரு கருத்தை மட்டும் சொல்கிறேன்.. இந்திய ராணுவத்தில் இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்களை மட்டும் தனியே பிரித்து எங்களிடம் கொடுத்துவிடுங்கள்.. தனி ஈழத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.. இனி எதற்கும் உங்களிடம் வந்து கேட்க மாட்டோம்.. கையேந்த மாட்டோம்.

கலைஞர் அவர்களே.. உடனடியாக காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகி வாருங்கள். அப்போதுதான் நீங்களே உங்களைப் பற்றிச் சொல்லிக் கொள்ளும் தமிழினத் தலைவர் பட்டம் உங்களுக்குப் பொருந்தும்.. இல்லாவிடில் ‘தமிழினத் துரோகி' என்ற பெயர்தான் கிடைக்கும்..” என்றபோது அதை ஆமோதிப்பதைப் போல் கரகோஷம் கிளம்பியது.

கடைசியாக பேச்சை முடிக்கும் போது மீண்டும் கலைஞருக்கு வேண்டுகோள் விடுத்தவர், “கலைஞர் அவர்களே மீண்டும் ஒரு முறை சொல்கிறேன்.. காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகி வாருங்கள்.. இல்லாமல் அந்தக் கூட்டணியில்தான் இருப்பேன். கொஞ்சுவேன் என்று இருந்தால், அந்த பாழாப் போன காங்கிரஸோடு சேர்ந்து நீங்களும்..” என்று சொல்லி வார்த்தையை முடிக்காமல் தலைக்கு மேல் இரு கரங்களையும் உயர்த்தி கும்பிட்டுவிட்டுப் போக ‘அர்த்தம்' புரிந்து ஆர்ப்பரித்தது அரங்கம்.

பேசி முடித்துவிட்டு தனது சீட்டுக்கு வந்தமர்ந்த வெள்ளையனிடம் கை குலுக்கி பாராட்டு தெரிவித்தார்கள் பாரதிராஜாவும், பாலுமகேந்திராவும்.

அருட்தந்தை ஜெகத் கஸ்பார்

“இப்படியே பேசிக் கொண்டிருப்பதில் பலனில்லை. அடுத்து என்ன செய்வது? டெல்லியின் கவனத்தை எப்படி நாம் ஈர்ப்பது..? அவர்களை எப்படி அசைய வைப்பது.. நம்முடைய இது மாதிரியான போராட்டங்கள் எல்லாம் டெல்லி மத்திய சர்க்காரை எதுவும் செய்யாது.. வேறு மாதிரிதான் செய்ய வேண்டும்.. நாம் போராடி முடிப்பதற்குள் அங்கே கடைசித் தமிழனையும் முடித்துவிடுவார்கள் போலிருக்கிறது.. தமிழ்த் திரையுலகத்தினருக்கு மட்டுமே இந்த ஈழப் போராட்டத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பிக்கும் திறமையும், உரிமையும், கடமையும் இருக்கிறது. இதனை அவர்கள் உறுதியுடன், உண்மையாகச் செய்ய வேண்டும்..” என்றார்.

இவர் பேசும்போது ‘இவர் கனிமொழியின் நண்பர்' என்பதைச் சொல்லி அரங்கில் நான்கைந்து பேர் எழுந்து நின்று ஆட்சேபம் தெரிவித்தார்கள்.

பெ.மணியரசன் (தமிழ்த் தேசிய பொதுவுடமைக் கட்சித் தலைவர்)

“தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்களையும் இழுத்துப் பூட்ட வேண்டும்.. அலுவலகங்கள் இயங்கவிடாமல் செய்ய வேண்டும்.. மத்திய அரசின் இயந்திரங்கள் எதுவும் தமிழ் மாநிலத்திற்குள் செயல்படக்கூடாது. அறவே நிறுத்தவேண்டும். அப்போதுதான் மத்திய அரசு ஓடோடி வரும். இதுதான் நமது அடுத்தக் கட்டப் போராட்டமாக இருக்க வேண்டும்..” என்றார் இவர்.

இந்த நேரத்தில் சென்னையில் 13-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் பெண்கள் போராட்ட அமைப்பினர் மேடைக்கு வந்தார்கள். அவர்கள் மேடைக்கு வரும்வரையிலும் மொத்தக் கூட்டமும் எழுந்து நின்று கை தட்டியது நெகிழ்ச்சியாக இருந்தது. பெண்கள் அமைப்பினர் மேடைக்கு வந்து அமர்ந்த பின்புதான் கூட்டமும் அமர்ந்தது.

பெண்கள் அமைப்பின் சார்பில் சந்திரா

“நாங்கள் கடந்த 11 நாட்களாகப் போராட்டம் நடத்தி வருகிறோம். மத்திய அரசும், மாநில அரசும் ஒரு வார்த்தைகூட கேட்கவில்லை. அங்கே நம் இனப் பெண்கள் அநியாயமாகக் கொல்லப்படுகிறார்கள். கற்பழிக்கப்படுகிறார்கள். இதையெல்லாம் தட்டி கேட்க வேண்டிய மத்திய அரசு தனது பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறது.. இப்போது நீங்கள் போராட்டத்தைத் துவக்கியிருக்கிறீர்கள். இது நல்லதொரு திருப்பம். இதனை நீங்கள் கடைசிவரையிலும் கைவிடாமல் தொடர வேண்டும்..”

‘கருப்புக் குரல்' நாடகம்

இதன் பின்பு சீமானிடம் உதவி இயக்குநர்களாகப் பணியாற்றுபவர்கள் ஒன்று சேர்ந்து ‘கருப்பு குரல்' என்றொரு நாடகத்தை நடித்துக் காட்டினார்கள். இந்நாடகத்தில் ஈழத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் பிரதான பாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.

ஏற்கெனவே மகனையோ, மகளையோ இழந்திருந்த அந்த வீட்டுப் பெரியவருக்கு இதனாலேயே மனநிலை பிறழ்ந்து எப்போதும் ரேடியோவில் செய்தி கேட்டுக் கொண்டேயிருக்கிறார். “ஐ.நா. படைகள் வந்துவிட்டதா..? ஈழத்தில் அமைதி திரும்பிவிட்டதா..?” என்று கேட்டபடியே இருக்கிறார்.

அப்போது இருக்கின்ற மகனும் குண்டடிபட்டு வருகிறான். கதறி அழுகிறார்கள். அதுதானே முடியும்.. மருமகனைத் தேடி வரும் சிங்கள ராணுவம் அவனை புலி என்று நினைத்து சித்ரவதை செய்கிறது. ஒரு கட்டத்தில் அதனைத் தாங்கிக் கொள்ள முடியாமல் “நான் புலிதான்.. நான் புலிதான்..” என்று கத்துகிறான் அவன். ராணுவம் அவனைச் சுட்டு வீழ்த்திவிட்டுப் போகிறது. குடும்பத்தினர் இப்போது கதறி அழுகிறார்கள்.

உடனேயே ஓடி வருகிறார் ‘மஞ்சள் துண்டு' அணிந்த பெரியவர் ஒருவர்.. “நான் மஞ்சள் கட்சிக்காரன். நான் ஐ.நா.வுக்கே தந்தி அடிச்சிருக்கேன்.. சீக்கிரம் நல்லது நடக்கும்..” என்கிறார். “இந்த இடத்தில் முதல் மரியாதை செய்ய தனக்கே முதல் உரிமை இருக்கிறது..” என்கிறார்.

அடுத்து வருகிறார் ஒரு நீண்ட துண்டு அணிந்தவர். “நான் கருப்பு கட்சிக்காரன்.. நான்தான் ஆதிக்காலம் தொட்டே இந்தப் பிரச்சினையைப் பற்றி பேசி வருகிறேன். எனவே எனக்குத்தான் முதல் உரிமை..” என்கிறார்.

அடுத்து வரும் ரோஸ் கட்சிக்காரர் “நான்தான் உண்மையான தமிழன். தனக்குத்தான் முதல் உரிமை..” என்றும் சொல்கிறார்.

கடைசியாக வரும் ஒருவர் “நான்தான் உண்மையான தம்பி.. சீறுகின்ற தம்பி.. எனக்குத்தான் முதல் உரிமை..” என்கிறார்.

கடைசியில் நால்வரும் கலந்து பேசி, ஒன்று சேர்ந்து அந்தப் பிணத்திற்கு மாலை அணிவித்து சடலத்தைத் தூக்கிச் செல்கிறார்கள். அப்போது ரேடியோவில் செய்தி ஒளிபரப்பாகிறது தேர்தல் அறிவிக்கப்பட்டது என்று.. சடலத்தை மெது, மெதுவாக கீழே வைத்தவர்கள் ஓடோடிப் போய் தேர்தல் கூட்டணி பற்றிப் பேசுகிறார்கள்.

ஒருவர் மாற்றி ஒருவர் பேசுகிறார்கள். இங்கே பின்னணியில் பிணத்தின் அருகே குடும்பத்தினர் அழுது கொண்டிருக்கிறார்கள். கூட்டணி பேரங்கள் முறிந்து போக.. ஆளுக்கொரு பக்கமாகப் பிரிந்து இருவர், இருவராக கூட்டணி அமைத்துக் கொள்கிறார்கள்.

அப்போது எங்கிருந்தோ வரும் சிலர் தனித்தனியாக வந்து மாலை அணிவித்து “இவர்கள் யாரும் நமக்கு வேண்டாம்.. நாங்கள் இருக்கிறோம்.. நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். இனி நாங்கள்தான் செயலாற்றப் போகிறோம்..” என்று சொல்லி பிணத்திற்கு மாலை அணிவித்து தூக்கிச் செல்கிறார்கள். அரசியல்வாதிகள் அதனை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

நாடகம் முடிகிறது.

இந்த நாடகத்தில் அந்த 4 அரசியல்வாதிகள் யார், யார் என்பது பார்வையாளர்களுக்கு நன்கு தெரிந்திருந்ததால் ஏக ரெஸ்பான்ஸ்.. பலத்த கரவொலி. அற்புதமான நடிப்பு. மிகக் கச்சிதமாக தற்போதைய அரசியல் நிலவரத்திற்கு ஏற்றாற்போல் வசனமெழுதி நடித்துக் காண்பித்திருக்கிறார்கள் துணை இயக்குநர்கள். பாராட்டுக்கள்..

வைகைப் புயல் வடிவேலுவின் எஸ்கேப்

இந்த நாடகம் துவங்குவதற்கு முன்புதான் நடிகர் வடிவேலு மேடைக்கு வந்தார். பாரதிராஜா எழுந்தோடி போய் அவரை வரவேற்று முன் வரிசையில் அமர வைத்தார். நாடகத்தை மேடையின் ஓரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்த வடிவேலு, நாடகம் முடிந்ததும் யாரிடமும் எதுவும் சொல்லிக் கொள்ளாமல் போய்விட்டார்.

வடிவேலுவின் இந்த ஜூட் பாரதிராஜாவுக்குத் தெரிய வர.. மனிதர் டென்ஷனாகிவிட்டார். ஆனாலும் பின்பு பேச வந்த அமீர் விடவில்லை. தனது பேச்சின்போது வடிவேலுவைப் போட்டுத் தாக்கிவிட்டார்.

இயக்குநர் யார் கண்ணன்

இவர் தனது பேச்சினை தனது கணீர்க் குரலில் கவிதையாகவே வடித்துவிட்டார். அந்தக் கவிதை இது..

"சமுத்திரத்தின் நடுவே தமிழன் வடித்த கண்ணீர்ச் சொட்டு இலங்கையாகிக் கிடக்கிறதா..?

ஒவ்வொரு மறை அச்சடிக்கப்படும்போதும் உலக வரைபடத்தில் இலங்கைக்கு மட்டும் இன்னும் இரத்த நிறம்தானா..?

இது மனிதனை மனிதனே விரட்டும் மஞ்சுவிரட்டு.. இனவெறித் தீயில் விறகுகள் மட்டுமா..? பானைகளே பற்றி எரியும் பயங்கரம்.

நீரில் நீந்தும்போது நனையாத இந்தத் தீவு போரின் தீயில் மூழ்கிப் போனதா..?

இலங்கையில் மட்டும் வருங்கால மாணவர்கள் வரலாறு படிக்கும்போது இன்னும் எத்தனை ஆண்டுகள் இறந்த காலமும், இறக்கும் காலமும் நிகழ்காலமாய்த் தெரியும்..?

சேதுவை மேடுறுத்தி வீதி சமைக்கவில்லை.. வீதி சமைத்துக் கொண்டிருக்கிறது தமிழனை..

திசைதோறும் உலக அமைதிக்காகப் போதித்தவனின் திருச்சபையில் ஒப்பாரி உலா.

சாஸ்திரிய சங்கீதத்தின் மேனியில் ராப்பகலாய் பறைக்கொட்டு..

ராவணன் ராகம் வளர்த்த ராஜ்ஜியத்தில் அபஸ்வரங்களின் ஆட்சி..

பெயர்த்தெடுத்து வந்த அடுத்தவர் மனைவியிடம்கூட அவன் தோற்றுவித்த தொடா நாகரீகம் மண்ணில் உயிர்த்து வளர்ந்தவர்களிடம் மரித்துப் போனது.

மெளனமற்றுப் பபேன மயான பூமியே.. உனது வானொலி தமிழைச் சவைத்தது - நீ தமிழர்களைச் சுவைத்துவிட்டாய்..

தேசத்தின் திசை எங்கும் உட்கார்ந்திருக்கிற கரம் இலங்கை அரசின் இதயத்தைவிட்டு எப்போது வெளிநடப்பு செய்தது..?

ஒரு இலக்கியச் சீதையின் கற்பு காக்கப்பட்டபோது அது அசோக வனம் - இன்று சோக வனம்..

இந்த மனித இனத்திற்கு குண்டு துளைக்காத உடை.. விஷம் கலக்காத காற்று.. உயிர் பறிக்காத உறைவிடம்.. தர உத்தரவாதம் யார்..?

புராதன ஜடாயுக்களின் புனிதம் போய் - மனிதம் பிணந்தின்னிக் கழுகுகளின் பெரும் பிடியில்..

இது அஹிம்சையை போதித்த புத்த பூமியை இல்லை ரத்தத்தால் எழுதப்பட்ட யுத்த பூமியா..?

மானுடத் தீப்பெட்டியில் குச்சிகளைக் குச்சிகளே கொளுத்தும் கொடூரம்..

போர்ச்சத்தத்தில் பூக்கள் சுமந்த மரங்களின் கருச்சிதைவு..

மலடாகிப் போனது மண்ணின் செடி, கொடிகள்..

படுகொலையைப் பயிர் செய்து பாத்தி கட்டி உயிர் அறுவடைகள்..

சடலங்களையே கரையாக்கி சமுத்திர அலையோட்டம் சாவின் துர்நாற்றம்..

தன் ஆவியைக் கூவி விற்று ஆயுளையே பசிக்குத் தின்னும் தமிழனுக்கு - கடல் நீரின் நுரைப்பூக்கள் மட்டுமே கரை ஒதுங்கி கண்ணீர் அஞ்சலி..

அங்கு மட்டும் கடல் நீரின் நிறம் சிவப்பு.. உப்பும் கசக்கிறது..

இமயம் இன்று குமரியைக் காக்க எழுந்து நின்றதடா..!

இயக்குநர் இமயம் இன்று தமிழ்க் குமரியைக் காக்க எழுந்து நின்றதடா..!

எழுத்தும் பாட்டும் இயக்கமும் சேர ஈழம் வென்றதடா..!

உழைப்பவர் எல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்தார் உணரட்டும் மத்திய அரசு..!

ஒவ்வொரு தமிழனின் விரல் நுனிமையும் ஓட்டு

ஆட்சியைப் புரட்டும் முரசு..!

உலகத் தரத்துக்கு படமெடுக்கும் திரை உலகே!

கலகத் தரக்கரை வேர் அறுக்க

பொறுப்பு இருக்கு உனக்கும்..

பொறுப்பு இருக்கு உனக்கும்..!

வன்முறை வேண்டாம் என்பதற்காக

எத்தனைப் படங்கள் எடுத்தோம் நாம்!

வறுமையும் பசியும் போவதற்காக

வழிகள் சொல்லிக் கொடுத்தோம் நாம்..!

என் தமிழ் இயக்குநர் இந்திவரைக்கும்

வென்றது தமிழன் வெற்றியடா!

நல்லதும் கெட்டதும் சொல்கிற நாமே

நாளைய உலகின் தொட்டிலடா!

தர்மம் வெல்லும் என்னும் முடிவை

படங்களில் வடித்தவர் நாம்..?

அதர்மம் மத்தியில் ஆண்டு கொண்டிருந்தால்

எப்படிப் பொறுப்பது நாம்..?

தமிழனை வைத்து தமிழால் உயர்ந்தோம்!

தமிழனை ஏன் மறந்தோம்-ஈழத்

தமிழனை ஏன் மறந்தோம்?

உண்டும், உறங்கியும் வாழ்வது என்றால்

இருந்தும் நாம் இறந்தோம்..!

இருந்தும் நாம் இறந்தோம்..!

ஓட்டு ஆயுதம் கைகளில் இருக்கு

உணரட்டும் மத்திய ஆட்சி..!

ஒவ்வொரு தமிழனும் நினைத்தால்போதும்

தலைமை மாறும் காட்சி..!

அத்தனை பேரும் முடிவெடுப்போம்!

அநீதியைத் தடுப்போம்!

ஆட்சியில் இருக்கும்

கைகளை முறித்து

விடுதலை நாம் கொடுப்போம்-ஈழ

விடுதலை நாம் கொடுப்போம்..”

தமிழருவி மணியன்

“நான் வணங்கும் பெரியவர்கள் இரண்டே பேர்தான். ஒருவர் பழ.நெடுமாறன். இன்னொருவர் நல்லகண்ணு..

வாழிய தமிழ்.. வாழ்க நற்றமிழர்.. வாழிய பாரத மணித்திருநாடு.. என்ற பாரதியின் கூற்றை காங்கிரஸார் புரிந்து கொள்ள வேண்டும். முதலில் மொழியின் மீது பற்று வேண்டும். அதற்குத்தான் ‘வாழிய தமிழ்' என்றான் பாரதி. பின்பு அந்த மொழி பேசும் தமிழரின் வாழ்வு சிறக்க வேண்டும் என்கிறான். பின்பு மூன்றாவதாகத்தான் ‘வாழிய பாரத மணித்திருநாடு' என்கிறான். இது கூடத் தெரியாமல் தேசியம் பேசிக்கொண்டிருக்கிறார்கள் இந்த காங்கிரஸ் கட்சியினர். இவர்களுடைய நாடக நடிப்பைச் சகித்துக் கொள்ள முடியாமல்தான் நான் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினேன்.

இந்த அரசியல் கட்சிகளுக்கு இப்போது என்ன நேர்ந்தது..? வைகோ 4 தொகுதிகளில் நின்று ஜெயித்துவிட்டால் தனி ஈழம் கிடைத்துவிடுமா..? ராமதாஸ் 7 தொகுதிகளில் ஜெயித்துவிட்டால் ராஜபக்சே மண்டியிட்டுவிடுவானா..? சிறுத்தைகளைப் பாருங்கள்.. ‘அடங்க மறு.. அத்து மீறு..' என்றெல்லாம் வீரவசனம் பேசிவிட்டு இப்போது ‘எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்'னு விவேக் பேசுற வசனம் மாதிரி போயி நின்றுக்காங்களே.. இவங்களையெல்லாம் என்ன செய்யறது..?

மத்திய அரசுகளை அசைக்க வேண்டும். அவர்களை நம்மைத் தேடி ஓடிவர வைக்க வேண்டும்.. அனைத்துக் கட்சிகளும் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும். மக்கள் ஓட்டுப் போடக் கூடாது.. இப்படிச் செய்தால் தமிழன் என்றோர் இனமுண்டு.. அவனுக்கோர் தனியோர் குணமுண்டு.. என்பதை உலகத்துக்குக் காட்டினால் மத்திய அரசும், கட்சிகளும் ஓடோடி வருவார்களே.. அப்போது நாம் பேசுவோம்.. நம்மிடம் இருக்கும் வாக்கு வித்தையைக் காட்டுவோம்.. ‘எமக்கு ஈழத்தை வாங்கித் தந்தால் ஓட்டுப் போடுவோம்' என்போம். இதுதான் ஒற்றுமை உணர்ச்சி.. இதுதான் இப்போதைக்கு நமக்கு வேண்டாம். அந்த உணர்வு இருந்தால்தான் நம்மால் ஜெயிக்க முடியும்..” என்று ஒரு நீண்ட பேருரையை ஆற்றினார்.

அருமையான தமிழ். சும்மா அருவி மாதிரி கொட்டியது இவரிடமிருந்து..

திருச்சி வேலுச்சாமி

“நான் பரம்பரை காங்கிரஸ்காரன்.. என் அப்பா காங்கிரஸ்காரர். என் அம்மாவும் காங்கிரஸ்தான்.. என் மனைவியும் காங்கிரஸ்காரி. மாமனார் காங்கிரஸ்காரர்.. என் தம்பி காங்கிரஸ்காரன். வார்டு உறுப்பினர். அவன் மனைவியும் காங்கிரஸ்காரிதான்.. பழனி பக்கத்துல ஊராட்சி மன்றத் தலைவி.. என் தாய்மாமன் காங்கிரஸ்காரன்.. அவன் குடும்பமும் காங்கிரஸ்காரர்கள்தான்.. எனது சொந்த பந்தங்கள் அனைத்துமே காங்கிரஸ்தான். ஆனாலும் சொல்கிறேன்.. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடியோடு தோற்கடிக்கப்பட வேண்டும்..” என்றபோது எழுந்த கைதட்டலில் அந்தப் பகுதியே அதிர்ந்தது.

“ராஜீவ்காந்தி படுகொலையில் தண்டனை அடைந்து 18 வருடங்களாக சிறையில் இருப்பவர்களை விடுவிக்கக் கோரி வழக்குத் தொடுத்திருக்கிறேன். அதன் விசாரணை நேற்று நடந்தது. படுகொலை தொடர்பாக விசாரிக்கும் பல்நோக்கு விசாரணைக் குழுவான ஜெயின் கமிஷன் இரண்டு பேரைக் குறிப்பிட்டு அவர்களைத் தீர விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. அந்த இரண்டு பேர் சுப்பிரமணியம் சுவாமி, சந்திராசுவாமி.. ‘சிபிஐ அவர்களை விசாரித்ததா?' என்றார் நீதிபதி.. ‘இல்லை..' என்றார் சி.பி.ஐ. வக்கீல். ‘ஏன்..? இரண்டு வருடங்களாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள்..?' என்று கேட்டார் நீதிபதி. பதில் இல்லை. ‘இரண்டு வருடங்களாக நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? ஏன் விசாரிக்கவில்லை..' என்பதனை எழுத்துப் பூர்வமாக நாளை மறுநாள் தாக்கல் செய்யுங்கள் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்..” என்று தனது வழக்கு பற்றிய செய்திகளையும் சொன்னார்.

அதோடு கூடவே ராஜீவ்காந்தி படுகொலை சம்பந்தமாக சுப்பிரமணியம்சுவாமி முந்திரிக்கொட்டையாக சொன்ன, ‘புலிகள்தான் இந்தக் கொலையைச் செய்திருக்கிறார்கள்' என்கிற தகவலையும் சொல்லி சுப்பிரமணியம் சுவாமி மீதான தனது சந்தேகத்தை இங்கேயும் பதிவு செய்தார்.

இயக்குநர் அமீர்

சீமான் இல்லாத குறையைப் போக்கினார் அமீர். மேடைப் பேச்சு போன்று இல்லை என்றாலும் சுவையாகவும், சூடாகவும் இருந்தது..

“இங்கே நடிகர்கள் பலரும் வரவில்லை. ஆனால் வரவேண்டியவர்கள்தான் வந்திருக்கிறார்கள். தமிழ் என்ற உணர்வு, தமிழன் என்ற உணர்வு இல்லாதவர்கள்தான் வரவில்லை.

‘மானாட மயிலாட' நிகழ்ச்சி போன்று போட்டிகள் நடத்தினால் நடுவராகச் செல்வதற்கு விழுந்தடித்துக் கொண்டு ஓடி வந்திருப்பார்கள். நட்சத்திரங்கள் என்றாலே மின்னி மறைபவர்கள் என்றுதான் பொருள். மின்னல் வேகத்தில் வருவார்கள்.. அதே வேகத்தில் திரும்ப போயிருவாங்க.. அவங்க படத்தோட வேலைன்னா உடனே வருவாங்க.. இது அவங்களோட வேலையில்லையே.. அதுனால அவங்க யாரும் வரலை..

இங்ககூட ஒரு நடிகர் வந்தாரு.. இப்ப நடுவுல திடீர்ன்னு ஓடிட்டாரு.. நீங்களும் இனிமே அந்தப் புயலு.. இந்தப் புயலுன்னு எவனையாவது சொன்னா நம்பாதீங்க..

சோனியா நமக்கு அன்னையா..? நமக்கு அன்னை என்றால் அது இந்திராகாந்திதான்.. சோனியா நமக்கு அன்னை அல்ல.. சித்தி.. ரெண்டாம்தாரம். கொல்லைப்புறமாக வந்தவர்.. சித்தி கொடுமை.. சித்தி கொடுமைன்னு சீரியல்லேயும், சினிமாவுலேயும் நாம பார்த்திருப்போம். இப்ப நேராவே.. நிஜமாவே நாம அனுபவிக்கிறது இந்த சித்தி கொடுமையைத்தான்..

பிரணாப் முகர்ஜிக்கு தமிழினத்தை பத்தி, தமிழர்களோட வலியைப் பத்தி என்ன தெரியும்..? ராணி முகர்ஜிக்கு ஏதாவது ஒண்ணுன்னா அவனுக்குத் தெரியும்.. நம்மளைப் பத்தி என்ன தெரியும் அவனுக்கு..?

இதைப் பேசாத.. அதைப் பேசாத.. அப்படிப் பேசாத.. இப்படிப் பேசாத.. பேசினா இறையாண்மைக்கு எதிரா பேசுறன்னு சொல்லி உள்ள தூக்கிப் போடுறீங்க..? இதோ இப்ப தூக்கிப் போட்டீங்க.. என்னாச்சு.. கோர்ட் உங்களைக் கிழிக்கலை..

இனிமே தேர்தல்ல ஜெயிச்சு டெல்லிக்குப் போனீங்கன்னா வெளியுறவுத் துறை கேளுங்க.. ராணுவத் துறை கேளுங்க.. உள் துறையைக் கேளுங்க.. ஏன் லம்பமா காசு அள்ளுற துறையா கேக்குறீங்க..?

இப்ப இவுங்க என்னடான்னா ‘அவங்களைக் கேக்கணும்'.. ‘இவங்களைக் கேக்கணும்'ன்றாங்க. உங்ககிட்ட கேக்காம வேற யார்கிட்ட போய் கேக்குறது? ஜப்பான்காரன்கிட்டயா கேக்க முடியும்..? ஓட்டுப் போட்டது உங்களுக்கு..? தந்தி அடிக்கிறது ஐ.நா.வுக்கா..?

பக்கத்துல ஈழத்துல இருக்கிறவன் எனது சகோதரன்.. சொன்னா, ‘அப்படிச் சொல்லாத'ங்குறான்.. எங்கயோ 30000 மைல் தூரத்துல இருந்து வந்தவளை ‘அன்னை'ன்னு கூப்பிடும்போது, 30 மைல் தொலைவுல இருக்கிறவனை ‘சகோதரன்'னு கூப்பிடாம என்னன்னு கூப்பிடறது..?

இயக்குநர் சேரன்

"மானமுள்ள தமிழர்கள் எல்லாரும் இங்க வந்திருக்காங்க.. இல்லாமல் போய் வராதவங்களைப் பத்தி நமக்குக் கவலையில்லை..

இப்படியே எத்தனை நாளைக்கு பேசி, பேசி கலைஞ்சு போறது.. எதாவது செய்யணும்..? நாங்க தயாரா இருக்கோம்.. டசினிமாவைத் தூக்கிப் போட்டுட்டு வாடாடன்னு உடனே இப்பவே வரோம்.. என்ன செய்யலாம் சொல்லுங்க.. ஒரு நிமிஷம்கூட கண்ணை மூட முடியலீங்க.. நெட்ல பாருங்க போட்டோவையெல்லாம்.. பெண்களும், குழந்தைகளும் எவ்வளவு கொடூரமா கொல்லப்பட்டிருக்காங்கன்னு.. ரெண்டு கையும் இல்லாத ஒரு பொண்ணை கைப்புள்ளைக்கு பால் கொடுக்க கஷ்டப்படுறதை பார்க்கும்போது நெஞ்சு வெடிக்குதய்யா..

தமிழனை வாழ விடு.. தமிழன் வாழ்வதற்கு வழி ஏற்படுத்திக் கொடு.. இல்லைன்னா எங்களைத் தனியா விடு.. இதுதான் எங்களுக்கு வேணும்.. சும்மா சும்மா ‘இந்தியா' ‘இந்தியா'ன்னு கும்பிடு போட்டு உக்கார, எங்களால இனியும் முடியாது. இன்னிக்கு இங்கேயே ஏதாவது ஒரு முடிவு எடுத்தே ஆகணும்.. பாரதிராஜா ஐயா.. எடுப்பார்.. எடுக்கணும்.. அதுக்காகத்தான் காத்துக்கிட்டிருக்கோம்..

இயக்குநர் இமயம் பாரதிராஜா

பலத்த கரவொலிக்கிடையிலும், எதிர்பார்ப்புக்கிடையிலும் மைக்கைப் பிடித்தார் பாரதிராஜா.

“எனக்கு பதவி முக்கியமல்ல.. இந்த பாரதிராஜா எந்தப் பதவிக்காகவும் இந்த இயக்கத்தைத் துவங்கவில்லை.. எனக்கு நாற்காலி கனவு கிடையாது. தமிழன் என்பதற்கு இணையான நாற்காலி எதுவும் கிடையாது.

தனது குஞ்சுகளைக் காக்கின்ற கோழியைப் போல இனமானத்தைக் காப்பதற்காக மிகப் பெரிய நாட்டின் ராணுவத்தை எதிர்த்து, ஒரு இயக்கத்தை ஆரம்பித்து எதிர்த்து ஜெயிக்கிறான் எனது ஈழத் தமிழன்.

உனக்கு இது கேவலம்.. உன்னால் முடியாத காரணத்தால்தான் இந்திய அரசு பேடித்தனமாக, கள்ளத்தனமாக, கொல்லைப்புறமாக ஆயுதங்களையும், தளவாடங்களையும் இலங்கைக்குக் கொடுத்து உன்னை ஜெயிக்க வைக்கிறது.. இல்லாவிட்டால் உன்னால் ஜெயிக்க முடியுமா..? இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.. நமது இந்திய அரசுதான் உதவி செய்து வருகிறது..

சோனியாவை விமர்சித்தால் ‘தேச விரோத குற்றம்' என்கிறார்கள். எங்களை உள்ளே தூக்கிப் போட்டாலும் கவலையில்லை. நாங்கள் அரசியல்வாதிகளிடம் யாசகம் கேட்கவில்லை. எங்கள் சொந்த ரத்தங்களை, குழந்தைகளை, சகோதரிகளைக் காப்பாற்ற வேண்டும் என்றுதான் கேட்கிறோம்.

முத்துக்குமார் மரணத்தின்போது அந்த மேடையில் அரசியல் கட்சியினர் பலரும் இருந்தனர். அனைவரிடமும் நான் கேட்டுக் கொண்டேன்.. “உங்களுடைய அரசியல் கொள்கைகளை ஓரங்கட்டி வைத்துவிட்டு, கட்சி அடையாளங்களை தொலைத்துவிட்டு ‘ஈழம்' என்கிற ஒரே கூரையின்கீழ் ஒன்று சேருங்கள்.. நாங்கள் அத்தனை பேரும் பின்னாலேயே ஓடி வருகிறோம் என்றேன்.. ஒருவரும் வாய் திறக்கவில்லையே.. ஆனால் இப்போது நெடுமாறன் ஐயாதான் தனி மரமாக நிற்கிறார். அந்த நாடகத்தில் நான்கு பேர் பிணத்தைப் போட்டுவிட்டு ஓடியதைப் போல அவர்களும் ஓடிவிட்டார்கள்.

நானும் ஆரம்பத்தில் அகநானுறு, புறநானுறு போன்றவற்றையெல்லாம் ஆர்வத்துடன் படித்தேன். தமிழ்நாட்டுப் பொண்ணு புலியை முறத்தால் அடித்து விரட்டியதையெல்லாம் படித்திருக்கிறேன். அது போன்ற வீரத்தை நான் பிரபாகரனிடத்தில்தான் பார்த்தேன்.

இந்த நூற்றாண்டில் பிரபாகரனுடன் யாரையும் ஒப்பிட்டு சொல்ல முடியாது. நான் பிரபாகரனை சந்தித்தபோது, எனக்கு ரோல் மாடல் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்தான் என்றார். அவருடைய சுயசரிதையை அடிக்கடி படிப்பதாகக் கூறினார். அவரை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். 28 வருடங்களாக உறுதியாக இருக்கும் உரமுள்ள தமிழன். அவருக்கு மைக் பிடித்து பேச தெரியாது.. செயலில்தான் காட்ட தெரியும்.

தமிழ் ஈழத்தில் நான் இருந்தபோது ஒரு நாள் ஒரு முதிய பெண் என்னைச் சந்தித்து கதறி அழுதார். ‘ஐயா இந்த ஈழத்துல இதுவரைக்கும் பிச்சைக்காரங்களே இருந்ததில்லைய்யா.. இப்ப எங்கட மக்கள் அத்தனை பேரையும் பிச்சைக்காரர்களாக ஆக்கிட்டாங்களேய்யா..' என்று கதறினார். பிரபாகரனின் ஆட்சிக் காலத்தில் ஈழத்தில் பிச்சைக்காரர்களே கிடையாது..

ஈழத்து மக்களின் இந்த அவல நிலைக்குக் காரணமான குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். பெற்ற தாயாக இருந்தாலும் தண்டிக்கப்பட்டே தீர வேண்டும். பெற்றவனாக இருந்தாலும் தண்டிக்கப்பட்டாக வேண்டும். உற்றத் தோழனாக இருந்தாலும் தண்டிக்கப்பட்டே தீர வேண்டும். நாங்கள் யாருக்கும் பயப்படவில்லை. ஒரு முடிவெடுத்திருக்கிறோம்.. இரண்டு தீர்மானங்களை எடுத்திருக்கிறோம்..

முதல் தீர்மானம்..

இலங்கையில் யுத்தத்தை நிறுத்துவதற்கு இந்திய அரசு எந்த முயற்சியும் எடுக்காமல் அழித்தொழிக்கும் இந்த இனப் போருக்கு ஆயுதம் தந்து உதவுகிறது என்பது எந்த வரலாறும் மன்னிக்க இயலாத துரோகம்.

இருந்தபோதும் ஒரு வாய்ப்பிருக்கிறது. இந்த நொடி போர் நிறுத்தம் வேண்டுமென்று இந்திய அரசு, சிங்கள அரசுக்கு ஆணையிட முடியும். இன்று இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கும் ஆளும்கட்சி அதை செய்துவிட்டு, தமிழகத்துக்கு வந்து தமிழக மக்களிடம் வாக்குகளை கேட்பதுதான் நியாயமானது. நேர்மையானது. அடிவயிற்றில் பசியோடு எரியும் உலைக்கு அரிசி போடாமல், செத்த பிறகு வாய்க்கரிசி போட வரும் கேவலத்தை உலகின் எந்த இனமும் ஏற்காது.

தமிழர்களின் வாழ்வை, உயிரைக் காப்பாற்றத் தவறிய உங்களுக்கு தமிழர்களின் வாக்குகளைக் கேட்கும் தார்மீக தகுதியில்லை என்று நாங்கள் ஒரு மனதாகச் சொல்கிறோம்.

போர் நிறுத்தம் செய்து இனப்படுகொலையை தடுத்து நிறுத்தாமல் இந்திய அரசின் பிரதமர் மன்மோகன்சிங்கும், வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியும், ஆட்சியில் இருக்கும் கட்சியின் தலைவர் சோனியாகாந்தியும் தாங்களாகவே தமிழகத்துக்கு வந்து வாக்கு கேட்கும் முயற்சியை மனசாட்சியின் பேரால் நிறுத்திக் கொள்ள வேண்டும் என ஒருமித்தக் குரலில் முன் மொழிகிறோம்.

இந்த எங்களது உணர்வுப்பூர்வமான கோரிக்கையை நிராகரித்துவிட்டு நீங்கள் தமிழகம் வந்தால், எங்கள் முழு எதிர்ப்பை, எந்தெந்த முறையிலெல்லாம் காட்ட வேண்டுமோ அந்தந்த வழிகளிலெல்லாம் காட்ட வேண்டிய சூழ்நிலைக்கு நாங்கள் தள்ளப்படுவோம் என்பதை ஒரு எச்சரிக்கையாக தெரிவிக்க விரும்புகிறோம்.

எங்கள் தீர்மானத்தில் ததும்பும் உணர்வுகளை அறிந்து கொண்டு உணர்ந்து கொண்டு புரிந்து கொண்டு உடனடி போர் நிறுத்தம் செய்ய உத்தரவிட வேண்டுமென வற்புறுத்துகிறோம்..

இரண்டாவது தீர்மானம்

தமிழ் ஈழத்தின் உண்மையான உணர்வைப் புரிந்து கொள்ளாமல் அதனைக் கொச்சைப்படுத்தியும், உதவி செய்ய முன்வராத தமிழகக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தங்கபாலு, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகிய மூவரின் தொகுதிகளிலும் அவர்களுக்கெதிராக பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்..”

என்று எதிர்பார்க்காத முடிவுகளைச் சொல்லி அசத்திய இயக்குநர் இமயம் கடைசியாகச் செய்ததுதான் ஒட்டு மொத்தமாக அத்தனை பேரையும் உணர்ச்சிவசப்பட வைத்துவிட்டது.

“எனக்கு இந்தத் தமிழகம் எத்தனையோ விருதுகளை ஏற்கெனவே வழங்கிவிட்டது. இந்த நிலையில் மத்திய அரசு வழங்கிய பத்மஸ்ரீ விருது எனக்குத் தேவையில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். இதனைத் தூக்கியெறிய முடிவு செய்துவிட்டேன்..” என்றவர் அந்த பட்டத்தையே மேடையில் காட்ட கூட்டம் மொத்தமும் எழுந்து மேடையை நோக்கி ஓடியது..

“இப்போது இதை உடைக்கவா..? தூக்கியெறியவா..?” என்று பாரதிராஜா கேட்க ‘உடை..' ‘உடை..' என்று ஒட்டு மொத்தக் குரலும் எழும்பியது. பாரதிராஜாவின் கையை சேரன் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, உடைக்காமல் பார்த்துக் கொண்டபடியே மைக்கில் அனைவரையும் அமைதிப்படுத்தினார்.

“இதனை உடைக்காமல் மத்திய அரசுக்கு அப்படியே திருப்பி அனுப்ப வேண்டும். அப்போதுதான் அந்த அவமானத்தை அவர்கள் உணர்வார்கள்..” என்றார் சேரன்.

அமீரும் மற்ற இயக்குநர்களும் இதையே சொல்ல.. “சரி.. திருப்பி அனுப்பிவிடுங்கள்..” என்று ஒரு வார்த்தையில் இந்திய அரசின் முகத்தில் கரியைப் பூசியதோடு பேச்சினை முடித்துக் கொண்டார்.

இறுதியில் இயக்குநர்கள் சங்கத்தின் பொருளாளர் இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன் நன்றி தெரிவிக்க கூட்டம் முடிவுக்கு வந்தது.

இந்தக் கூட்டத்தின் அனைத்துச் செலவுகளும் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தினுடையதுதான்.. கூட்டத்தின் துவக்கத்தில் இருந்து முடியும்வரையிலும் இயக்குநர்கள் சங்கத்தின் பொருளாளர் இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன் கூட்டத்தினரை சுற்றிச் சுற்றி வந்தவர் அனைத்து ஏற்பாடுகளையும் தன்னுடைய நேரடி மேற்பார்வையில் செய்து வந்தார்.

மதிய நேரத்தில் வந்திருந்த அத்தனை பேருக்கும் லெமன் சாதமும், தயிர் சாதமும் கொடுத்து உபசரித்தார். லிட்டர், லிட்டராக குடிதண்ணீர் வந்து இறங்கியது.. கூட்டம் நடந்து கொண்டிருந்தபோதும் கல்யாண வீட்டில் சொல்வதைப் போல், “சாப்பாடு நிறைய இருக்குய்யா.. சாப்பிடாதவங்க சாப்பிட வாங்கய்யா..” என்று வரிசை வரிசையாக வந்து சொன்ன சுந்தர்ராஜன் ஐயாவுக்கு என்னுடைய சிறப்பு நன்றிகள்.. இரவு கூட்டம் முடிந்த பின்பும் மீதமிருந்த சாப்பாட்டு பொட்டலங்களை பலரும் வாங்கிச் சென்றார்கள். வாங்காதவர்களின் கைகளில் வலுக்கட்டாயமாக பார்சல்கள் திணிக்கப்பட்டன.

இந்த கூட்டமும், தீர்மானங்களும் தமிழக, மத்திய அரசுகளை கவலை கொள்ள வைத்திருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை.

அரசியல் கட்சிகள் என்றால் ‘அரசியல்ல இதெல்லாம் சகஜம்..' என்ற நோக்கில் பொதுமக்கள் எடுத்துக் கொள்வார்கள். ஆனால் இப்படி அரசியல் கலப்படமற்றவர்கள் ஈழத்து பிரச்சினையை கையில் எடுத்துக் கொள்வதும், மத்திய, மாநில அரசுகளுடன் நேருக்கு நேர் மோதலுக்காக நிற்பதும், ஜனநாயகத்தில் பெரும் போர் தொடங்கியதற்கான முதல் காட்சி.

சோனியா, மன்மோகன்சிங் வருகையின்போதும், சில நாட்களில் காங்கிரஸ் தலைவர்களின் தொகுதிகளில் நடக்கவிருக்கும் பிரச்சாரத்தின்போதும் இந்த தீர்மானத்தின் தாக்கம் தெரியத் தொடங்கும்..

அதுவரையில் நாமும் காத்திருப்போம்..

thx tamilwin

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.