Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தலைவர்களின் சுயமோக போதை !

Featured Replies

திருச்சியில் மே தினமன்று தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய கருணாநிதி அற்ப விசயங்களை ஆராதித்தும், ஒன்றுமில்லாத பிரச்சினைகளை மாபெரும் தியாகமாகவும் சித்தரித்தார். சான்றாக அவருக்கு நடந்த ‘வரலாற்றுச்’ சிறப்பு மிக்க முதுகுத்தண்டு மைனர் சர்ஜரியைக் குறிப்பிட்டவர், அந்த அறுவை சிகிச்சை செய்யும் போது மருத்துவர்கள் அவரது 85 வயதைக் குறிப்பிட்டு சிகிச்சை வெற்றிபெற்றால் முதுகுவலி மறையும், தோல்வியடைந்தால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்றார்களாம். குடும்பத்தினரெல்லாம் அழுது அரற்றி அறுவை சிகிச்சையே தேவையில்லை என்று போராடினார்களாம். அதுதானே மூன்றுமணிநேர உண்ணாவிரதத்தன்று தலைமாட்டில் ராஜாத்தி அம்மாளும், கால்மாட்டில் தயாளு அம்மாளும் எங்கே பங்கு பறிபோய்விடுமென்ற கவலையுடன் அமர்ந்திருந்ததை பார்த்தோமே! வலியிலிருந்து நிவராணம் அல்லது அமைதியான முடிவு என்று அவர்தான் சிகிச்சைக்கு சம்மதித்தாராம். இப்போது தேர்தல் பிரச்சாரத்துக்கு சுற்றுப் பிரயாணம் கிளம்பியதற்குக் கூட மருத்துவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தார்களாம். மீண்டும் முதுகுத் தண்டில் பிரச்சினை ஏற்பட்டால் மரண அபாயம் உண்டு என்பதையும் மீறித்தான் அவர் பிரச்சாரத்துக்கு கிளம்பினாராம்.

ம.க.இ.க பாடலொன்றில் அரசு மருத்துவமனைகளின் அவல நிலையை சுட்டுவதற்காக ” அறுத்துப் போட்டுவிட்டு இல்லேன்கறான் நூலு ” என்று ஒரு வரிவரும். உண்மையில் அபாயகரமான அறுவை சிகிச்சைகளெல்லாம் கால்நடை மருத்துவமனைகளின் தரத்துக்கும் கீழான அளவில் அன்றாடம் செய்துகொள்ளும் மக்கள் நிறைந்த நாட்டில் கலைஞரின் அறுவை சிகிச்சைக்கு என்ன ஆர்பாட்டமெல்லாம் செய்தார்கள்? இந்தியா முழுவதும் சிறப்பு மருத்துவர்கள் விமானத்தில் வந்து கவனிக்க, உண்ணாவிரதத்தில் கூட அவர்களும் வந்து காத்திருக்க, ஆம்புலன்ஸ் எல்லாம் தயார் நிலையில் இருக்க என்ன ஒரு கவனிப்பு? இதையெல்லாம் வைத்து கருணாநிதியின் முதுமையை நாம் கேலி செய்யவில்லை. முழு அரசு எந்திரமும் அந்த சிகிச்சைக்காக இயங்கிய நிலையில் அதை மாபெரும் தியாகச் செயலாக சித்திரிப்பதுதான் சகிக்க முடியவில்லை. அந்தக் கூட்டத்தில் திருக்குவளையில் சாதாரண குடும்பத்தில் பிறந்த தன்னை இயற்கை இன்னமும் வாழவைத்திருப்பதற்கு காரணம் அவர் தமிழினித்திற்கு இன்னும் சேவை செய்வதற்காம். இருக்கட்டுமே!

கருணாநிதியைப் பொறுத்தவரை அவர் காந்தி, நேரு முதலான அதிகாரப்பூர்வமான ஆரம்பிக் கல்வி வரலாற்று நாயகர்களின் பட்டியலில் இடம் பெற நினைக்கிறார். அப்படி ஒரு பிம்பத்தை அவரது ஜால்ராக்கள் சும்மா எதுகை மோனைக்காக பேசுவதை வைத்து அவருக்கும் அப்படி ஒரு ஆசை வந்திருக்கக் கூடும். இதற்கு என்ன ஆதாரம்?

கருணாநிதி ஆட்சியிலிருக்கும் போதெல்லாம் திரையுலகினர் விதம் விதமான தலைப்புக்களில், கலையுலகின் முதல்வர், பொன்விழா, சலுகைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விழா என்றெல்லாம் எடுப்பார்கள். இந்த நிகழ்ச்சிகள் நான்கைந்து மணிநேரம் நடக்கும் என்றால் கருணாநிதியும் இதற்கு ஒப்புக்குச் சென்றுவிட்டு புறப்படாமல் நீராருங்க கடலெடுத்தவில் ஆரம்பித்து ஜயகே வரைக்கும் அப்படியே அசையாமல் கவனிப்பார். இந்த நிகழ்ச்சிகளில் கர்ச்சிப்பைக் கட்டிக்கொண்டு நடிகைகள் குத்தாட்டம் போடுவதுதான் முக்கியமான ஒன்று. இடையில் நட்சத்திரங்களெல்லாம் இதற்கு முன் ஜெயலலிதாவுக்கு விழா எடுத்து பாராட்டியவர்க ளெல்லாம் இப்போது கருணாநிதியை இந்திரனே சந்திரனே என்று வெட்கமில்லாமல் பிழைப்புக்காக உருகுவது போல உளறுவார்கள்.

பாமரனுக்குக் கூட அருவெறுப்பை ஏற்படுத்தக்கூடிய இந்த மேனா மினுக்கிகளின் பாராட்டுமழையில் தமிழினத்தலைவர் மட்டும் உள்ளபடியே மயங்கிக் கிடப்பார். ஒரு வேளை இந்தக் கூத்துக்களுக்கு செல்லாமல் தவிர்த்திருந்தால் அவருக்கு முதுகுவலியே வராமல் இருந்திருக்கக்கூடும். இதுமட்டுமல்ல, நண்பர் லக்கிலுக்கே விமரிசனம் எழுதாமல் நிராகரிக்கும் குப்பைப் படங்களைக்கூட அந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் சிறப்புக் காட்சிக்கு அழைத்தால் மறுக்காமல் சென்று பார்ப்பார். ரம்பாவீட்டு நாய்க்குட்டிக்கு இருமலென்றாலும், நமிதா வீட்டு பூனைக்கு ‘பர்த் டே’ என்றாலும் அழைப்பு வரும் பட்சத்தில் ஆவலுடன் சென்று வாழ்த்துவார். எல்லாம் எம்.ஜி.ஆர் சினிமாவை வைத்தே அவரை அழவைத்த காலத்தின் கட்டாயம். நாளை யார் எம்.ஜ.ஆர் போல வருவார்கள் என்பது தெரியாதே? அந்தக் கொடுமை சிம்புவாகக்கூட இருக்கலாம்

இப்படித்தான் கருணாநிதி அவரைப் பற்றிய புகழுரையில் மயங்கி தனது அற்ப பிரச்சினைகளைக் கூட தமிழினத்திற்கு அவர் செய்யும் தியாகமாக கற்பித்துக் கொள்கிறார். இந்த வெற்றுப் பாராட்டுரை வீரமனியின் வாயில் இருந்து வந்தாலும், எஸ்.வி.சேகரது ஆசனவாயிலிலிருந்து வந்தாலும் அவரைப் பொறுத்தவரை எல்லாமும் முக்கியமானது. கருணாநிதியின் சமீபத்திய உழைப்பில் அவர் இந்த வெற்றுரைகளுக்கு முகம் கொடுத்து காது குளிரக் கேட்பதற்கென்றே கிட்டத்தட்ட 75% நேரத்தை ஒதுக்கியிருப்பார் என்றால் மிகையல்ல. ஊதிப்பெருக்கப்பட்ட தனது பொய்யான பிம்பத்தை பார்த்து மகிழும் இந்த நார்சிச நோய்தான் குறிப்பாக தமிழக அரசியல் கட்சித்தலைவர்களை பிடித்திருக்கின்ற மிகப்பெரிய நோய்.

இதில் முதலிடம் புரட்சித்தலைவிக்குத்தான். தமிழின் அகராதியில் கட்அவுட் என்ற சொல்லுக்கு புதிய பொழிப்புரை எழுதியவர் அந்தத்தலைவி. யானை வருமுன்னே அவரது கட்டவுட் உயரும் பின்னே. வால்டர் தேவாராத்தை அப்பளம் சுடவைத்து அவர் நடத்திய ‘வரலாற்றுச்’ சிறப்புமிக்க வளர்ப்புமகன் திருமணத்தில் உடலெடையை மிஞ்சும் வகையில் நகையணிந்து, உடன்பிறவா தோழியுடன் அவர் சென்னையில் நடத்திய மாப்பிள்ளை அழைப்பை யாரும் மறந்திருக்க முடியாது. அந்த ஊர்வலத்தில் அவர் முகத்தில் தென்பட்ட சுயவீக்க பெருமித உணர்ச்சிதான் அவரின் ஒரே உண்மையான உணர்ச்சி. அவர் ஆங்கிலம் பேசினாலும், இந்தியில் போலோன்னாலும், தெலுங்கில் செப்பினாலும், மலையாளத்தில் சம்சாரிச்சாலும், அவை வரலாறு. கன்னியாகுமாரியில் வண்ண மணல் பாக்கெட்டுக்களை விற்கும் சிறுவர்கள் இந்தியாவின் எல்லா மொழிகளையும் பிளந்து கட்டினாலும் அவர்கள்கூட அம்மாவுடன் போட்டிபோட முடியாது.

எஸ்.எஸ்.சந்திரன் என்ற சலிப்பூட்டும் நகைச்சுவை நடிகர் கருணாநிதியைக் கேவலமாக, வக்கிரமாக பேசும் போது அம்மா குலுங்கிக் குலுங்கிச் சிரிப்பார். அதனாலேயே இது போன்ற அனாமதேயங்கள் தலைவியின் கடைக்கண்பார்வை பட்டு எம்.பியாகவோ, மந்திரியாகவோ எழுந்தருளும். காசுக்கு வழியில்லாத கடைமட்டத் தொண்டன் கூட கடன்வாங்கி தலைவியின் கட்வுட் வைபோகத்தை கலக்கலாக செய்வான். ஒருவேளை இது தலைவியன் பார்வைக்கு தென்பட்டு அவனது வாழ்க்கையில் அதிரடி முன்னேற்றங்கள் நிகழலாம். மேடையில் அம்மா மட்டும் அமருவதற்கு நாற்காலி போடப்பட்டு, வேட்பாளர் கூப்பிய கைகளுடன் நிற்பது என்ற திருபூஜைக்கு வைகோவும். தா.பாண்டியனும் கூட தப்பவில்லை என்றார்கள் மற்ற பாவங்களைப் பற்றி விளக்கத் தேவையில்லை.

அம்மாவின் உற்சவ வலத்திற்கு துணை வரும் தளபதிகளில் அவர் தொண்டு கிழம் எஸ்.டி.எஸ் ஆனாலும் வேனில் தொங்கியவாறு வருவதை தமிழக வரலாறு பதிந்திருக்கிறது. மற்றபடி ‘வீரத்திற்கு’ பெயர்போன தேவர்சாதி பிரபலங்கள்கூட அவரது காலில் சாட்சாங்க நமஸ்காரம் செய்யும் போது முழு தமிழகமுமே அதை பின்பற்றியாக வேண்டுமென்பதையும் வலியுறுத்தத் தேவையில்லை. இப்படி எந்தத் தகுதியுமில்லாமல் அ.தி.மு.க எனும் ஆண்கள் மட்டும் நிறைந்த கொள்ளைக் கூடாரத்தை கட்டி மேய்ப்பதையே சாதனையாக செய்து வரும் தலைவியின் அகராதியில்தான் தன்னையே வெறியுடன் விரும்பும் சுயமோக நார்சிசம் தலைவிரித்தாடியது. இதில் புரட்சித் தலைவியை வேறு யாருடனும் ஒப்பிட முடியாதென்பது அவரது பெருமைக்கு மணிமகுடமாகும்.

வைகோ இந்தப் புகழுரைகளை செயற்கையாக உணர்ச்சிவசப்படச் செய்து வலிய பெறுவதற்கு ஒட்டு மீசையைப் போன்ற அந்த வஸ்துவுக்கு டை அடிப்பதில் துவங்கி உலக வரலாற்றின் துணுக்குகளை சம்பந்தமே இல்லாமல் இழுத்து பேசி அழுது, புலம்பி, ஆர்ப்பாட்டமெல்லாம் செய்வார்.எனினும் இப்போது அவரது கட்சிக்காரர்களே அவரை புகழுவதற்கு தயாராக இல்லை எனும் அவல நிலையில் வைகோ வாடுவதால் அவரை விட்டு விடுவோம்.

செல்வமணியின் புண்ணியத்தில் கேப்டன் பிரபாகரன் படத்தில் நடித்து, லியாகத் அலிகான் தயவில் ஆர்ப்பாட்டமாய் பேசி நடித்த விஜயகாந்த் பிறகு அதை உண்மை என்று நம்ப ஆரம்பித்து விட்டார். வெள்ளித் திரையின் இமேஜ் தந்த போதையிலேயே தள்ளாடத் துவங்கயிருக்கும் கேப்டன் 2011 சட்டமன்ற தேர்தலை இலக்காக வைத்திருப்பதால் இவர் எல்லா பலூன்களையும் தூக்கிச் சாப்பிட வாய்ப்பிருக்கிறது. கல்யாண மண்டபத்தையும், கல்லூரியையும் காப்பாற்றுவதற்காக கட்சி ஆரம்பித்து தனது மாயையை மட்டும் வைத்து மக்களிடன் செல்வாக்கை அறுவடை செய்ய நினைக்கும் இந்த கருப்பு எம்.ஜி.ஆரின் லீலைகள் இனிமேல்தான் வெளித்தெரிய ஆரம்பிக்கும்.

தலித்துக்களின் விடிவெள்ளியாக முளைத்திருக்கும் திருமாவளவன் தேர்தல் அரசியலில் கரைவதற்கு முன்னர் அடங்க மறு, அத்துமீறு, புலி, சிறுத்தை என்றெல்லாம் அறியப்பட்டிருந்த பிம்பமே போதுமானதாக இருந்தது. இதற்காகவே மீசையை முறுக்கி விட்டுக்கொண்டு, சிறுத்தையுடன் போட்டோஷாப்பின் தயவில் தாய்மண்ணின் அட்டை டூ அட்டையில் தேவனின் நற்செய்தி உபதேசியார் போல எழுந்தருளும் திருமாவை தென்னாட்டின் அம்பேத்கார், தமிழ்நாட்டின் சே குவேரா (உபயம்- பா.ஜ.கவின் தமிழிசை சௌந்தர்ராஜன்) என்றெல்லாம் ஜொள்ளுவிடப்படும் போது அதையே கேட்டு கேட்டு அவரும் அதுவாகவே மாறிப் போனார். உண்மையில் இந்த சிறுத்தை முன்பு மூப்பனாரை புரட்சித் தலைவராகவும், தற்போது தங்கபாலுவை காந்தியாகவும் எடுத்துரைத்து வாழ்கிறது. சிறுத்தையின் சத்தம் அதிகம் கேட்பதற்கேற்ப அது பூனையாக மாறி வருகிறது. இருந்தாலும் இந்தப் பூனைக்கு சென்னை கே.கே நகரில் நாளொன்றுக்கு மூன்று கட்டவுட் வைத்து பூஜை நடப்பதற்கு ஒன்றும் குறைவில்லை.

தமிழக காங்கிரசின் தலைவர்களை எடுத்துக் கொண்டால் இப்படியெல்லாம் அவர்களுக்கு நடக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தாலும் அதற்கான முயற்சிகளுக்குக்கூட அவர்கள் தயாராக இல்லை. எல்லாம் ஓசியில் பெற்று வயிறு வளர்த்த கூட்டமல்லவா இதையும் யாராவது ஒரு இளித்தவாயன் தானமளித்தால் அதையும் வாங்கிச் சுருட்டிக் கொள்ள காத்திருக்கும் காக்கைகள் கூட்டமது. வேட்டியை உருவி கோஷ்டி சண்டை போடுவதற்கே நேரம் சரியாக இருக்கும் போது இந்த மின்வித்தைகளுக்கெல்லாம் அவர்கள் தயாரில்லை.

இப்படிப்பட்ட சோம்பேறிக் காக்கைகள் தும்மினாலும், துவண்டாலும் தவறாமல் உச்சரிப்பது அன்னை சோனியாவின் திருநாமத்தை. கக்கா போவதற்கும், குறட்டை விடுவதற்கும் கூட அன்னையின் அனுமதியை எதிர்பார்த்திருப்பதாக ஆயிரம் வாட்ஸ் சவுண்ட் ஸ்பீக்கரில் டிடி.எஸ் எபெக்டில் பேசிப்பேசியே அந்த அன்னைக்கு அப்படி ஒரு மனப்பிராந்தி உருவாகிவிட்டது. அதன்படி முழு இந்தியாவும் அந்த இத்தாலியின் மகளுக்காக காத்திருப்பதாக சோனியா காந்தியும் நிச்சயமாக நம்புகிறார். அதனால்தான் போனால் போகிறெதென மன்மோகன்சிங் போன்ற முழு அடிமைகளிடம் ஆட்சியை ஒப்படைத்தாலும் அன்னையின் மகிமை குறைந்தபாடில்லை. இப்போது இந்த மகிமை அன்னையின் தவப்புதல்வன் ராகுல் காந்திக்கு திட்டமிட்ட வகையில் 2014 தேர்தலில் அவர்தான் பிரதமரென்ற இலக்குடன் காதைப் பிளக்கும் சப்தத்துடன் பரப்பப்படுகிறது.

இங்கிலாந்தில் கொலம்பியக் காதலியுடன் ஊரைச் சுற்றிய இந்த மேட்டுக்குடிக் குலக்கொழுந்து இன்று கிராமங்களுக்குச் செல்வதும், கயிற்றுக்கட்டிலில் தூங்கியதும், வறண்டுபோன ரொட்டிகளை சாப்பிட்டதும் மாபெரும் தியாகமாக, நாட்டு மக்களின் முன் வைக்கப்படுகிறது. எப்படியும் ஒரு பத்து ராஜீவ்காந்திகள் ஒன்றாகச் சேர்ந்தால் விளையும் அபயாத்தை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

பா.ஜ.கவைப் பொறுத்தவரை சுயமோக பிம்பத்திற்காக மக்கள் பிரச்சினைகள் என்றெல்லாம் மெனக்கெடாமல் சாதி, மத உணர்வை மேலோட்டமாக கிளறிவிட்டு காரியத்தை சாதித்து வந்திருக்கிறார்கள். தற்போது அது மட்டுமே வேலைக்காகாது என்பதால் அத்வானியின் படத்தை வைத்து சில வார்த்தைகளை கோர்த்து இணையத்தில் எங்கு பார்க்கினும் உலவ விட்டிருக்கிறார்கள். ஆனால் அத்வானிக்கு போட்டியாக மோடி சங்க வானரங்களால் இறக்கி விடப்பட்டிருப்பதால் இந்த தேர்தலில் போண்டியாகவில்லை என்றால் அத்வானி அரசியலில் இருந்து வாஜ்பாயியைப் போல ஒய்வு பெறவேண்டியதுதான். மோடியின் மதவெறியும், பொருளாதார முன்னேற்றமும் இந்தியா முழுவதும் போணியாக விட்டாலும் இந்திபேசும் மாநிலங்களில் எடுபடலாம். அதற்குள்ளேயே மோடியின் முகமூடிகள் குஜராத்தில் இலட்சக்கணக்கில் இறக்கிவிடப்பட்டுள்ளன. சுயமோக இலட்சணத்தில் பாசிஸ்ட்டுகளை மற்றவர்கள் விஞ்சுவது சிரமம்.

போலிக் கம்யூனிஸ்ட்டுகளுக்கும் இந்த சுயமோகத்தில் வெறி இருந்தாலும் கேவலம் கேப்டன், மற்றும் புரட்சித் தலைவிக்கு இருக்கும் சாமர்த்தியத்தில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட கிடையாது. அதனால்தான் இராம.நாராயணன் என்ற அம்மன் புகழ் இயக்குநர் தனது படத்தில் செங்கொடியையோ, அரிவாள் சுத்தியலையோ, சிவப்பாடையையோ காட்டினால் உடனே அந்த படத்திற்கு விழா எடுத்து தங்களது இமேஜைக் கூட்டுவார்கள். மற்றபடி பொதுக்கூட்டத்தில் பேசும் திறனால் இருக்கும் கூட்டத்தை கலைத்துவிடும் ஆற்றல் பெற்ற போலிகளுக்கு பில்டிங்கும் வீக்கு, பேஸ்மெண்டும் வீக்கு.

சுயமோக நார்சிசம் என்ற நோய் குறிப்பாகத் தமிழகத்தில்தான் அதிகம். இதில் தி.மு.கவின் அலங்காரப் பேச்சுக்கள், அர்த்தமற்ற வருணணைகள், காமடியான பட்டங்கள் உருவாக்கியிருக்கும் தொற்று நோய் அபாயகரமானது. இதன் தோற்றுவாய் தமிழ் சினிமாவாக இருப்பதும் மற்றொரு விபத்து. ஒரிரு படங்கள் வெற்றிபெற்று விட்டால் அந்த புதிய இயக்குநர்கள் டிஸ்கஷன் அறையின் விரிக்கப்பட்ட மெத்தையில் மூலவரைப் போல அமர்ந்து அடிமைகளைப் போல அமர்ந்திருக்கும் உதவி இயக்குநர்களிடம் அறிவே இல்லாமல் பேசுவதும் அதை உலகமே உண்மையாக ஏற்றுக் கொள்வதாக நம்புவதும், அதை வழிமொழிவது போல உதவி இயக்குநர்கள் வேறுவழியின்றி சிங்கி அடிப்பதும், வாய்ப்பு கிடைத்தால் அந்த இயக்குநர்களிடன் பேசிப் பாருங்கள், அவர் உங்களை பேசவே விடமாட்டார். இதனால்தான் அடுத்த படங்களுக்கான சரக்கை அவர் விரைவிலேயே இழந்து போவதும், பழைய பெருமையை வைத்து மிச்சமிருக்கும் காலத்தை ஓட்ட நினைப்பதற்கும் பலரை எடுத்துக் காட்டலாம்.

இதிலிருந்துதான் மக்களிடமிருந்து கற்றுக் கொள்வது என்பது அறவே இல்லாமல், தங்களை மீட்பர்களாக அவதாரங்களாக கருதிக் கொள்ளும் தற்புகழ்ச்சி நோய் பிறக்கிறது.

தமிழகத்தில் இந்த நோய் முற்றுவதற்கு சினிமாவும், ஓட்டுப் பொறுக்கி அரசியிலும் ஒரு நாணயத்தின் இருபக்கங்களைப் போல கச்சிதமாக ஒன்றுக்கொன்று உதவி சராசரித் தமிழனை அறிவேயில்லாமல், மேலோட்டமான உணர்ச்சியில் மூழ்கவைத்து கேப்டன்களையும், தமிழினத் தலைவர்களையும், தளபதிகளையும், அஞ்சாநெஞ்சன்களையும், புரட்சித் தலைவிகளையும் பன்றி போட்ட குட்டிகளைப் போல அளித்துவருகிறது. ஆகவே இந்த நார்சிச நோய் என்பது தமிழர்களின் ஆரோக்கியம் சம்பந்தப்பட்டது. சிங்கங்களைப் போல தோற்றம் தரும் இந்த எலிகளின் அலங்காரம் கலைக்கப்படும் போதுதான் அந்த ஆரோக்கியம் மீண்டுவரும். அதுவரை அந்த சிங்கங்களின்…இல்லை எலிகளின் உறுமலிலிருந்து நமக்கு விடுதலையில்லை.

வினவு தளத்திலிருந்து; http://www.vinavu.com/2009/05/politicalnas/

தொடர்புடைய பதிவுகளின் தொகுப்பு:

கருனாநிதிக்கு காந்தி நேரு பட்டியலில் இடம் கிடையாது. எட்;டப்பன் கருனா பட்டியலில்தான் இடம் கிடைக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.