Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழமறுப்புத்தீர்வுகள், இனப்படுகொலை ஏற்புத்தீர்வுகளாய் ..

Featured Replies

ஈழமறுப்புத்தீர்வுகள், இனப்படுகொலை ஏற்புத்தீர்வுகளாய் ..

பிரபாகரன்

உலகின் அனைத்து நிகழ்ச்சி நிரல்களையும் வழிநடத்தும் 50×10தினர், ஈழப்படுகொலை நிகழ்வுகளை அவசரமற்ற, முடிக்கக்கூடாத நிகழ்ச்சியாகவே வைத்திருக்கின்றனர். யார் இந்த 50×10தினர்? உலகின் 50 முன்னணி நாடுகளில் உள்ள, அந்நாடுகளின் அரசியல், பொருளாதார, அயலுறவு கொள்கைகளை தீர்மானித்து வழிநடத்தும் உயர் அதிகாரம் கொண்ட மேல்நிலையில் உள்ள 10 மனிதர்களே இந்த 50×10தினர். இங்கு 50 என்பதும் 10 என்பதும் ±. இன அழிப்பு போருக்கு எதிராகவும், ஈழ அமைவிற்கு ஆதரவாகவும், உலகெங்கும் 10 கோடி தமிழர்களும், இனம் கடந்த எழுத்தாளர்களும், கலைஞர்களும், மனிதஉரிமை அமைப்புகளும், அரசியல் அமைப்புகளும், விமர்சகர்களும், மனிதநேயர்களும் குரல் கொடுத்து வந்தாலும், அவ்வுணர்வுகளையெல்லாம் அலட்சியம் செய்யும் சர்வதேச அதிகாரம் படைத்தவர்கள் இந்த 50×10 தினர்.

ஈராக்கின் இல்லாத இரசாயண ஆயுதங்களுக்காக இன்னும் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கும் இவர்கள், மக்கள் மீதான கனரக ஆயுதப்பயன்பாட்டிற்கு எதிராக, இலங்கை மீது இன்னமும் நடவடிக்கை எடுக்கத் தொடங்கவில்லை. அரச பயங்கரங்களை அப்பட்டமாக நடத்தி வரும் சிங்கள அரசை பயங்கரவாத அரசு என அறிவிக்காதிருப்பது, புலிகளை பயங்கரவாதிகள் என்று அறிவித்த இவர்களின் நேர்மையை சந்தேகப் படுத்துவதாக ஏன் இல்லை? புலிகள் மீதான தடை என்பது அவர்களது நடவடிக்கைகள் பற்றியது. ஈழப்பிரிவினைக் கோரிக்கை என்பது சமூகநிலைமைகள் பற்றியது. ஆனால், புலிகள் மீது தடை விதித்தாலும், ஈழப்பிரிவினைக் கோரிக்கை சரியானது என்று இவர்களில் யாருமே அறிவிக்காதது, இவர்களின் தற்செயலான கருத்து ஒற்றுமை இல்லை. ஈழ அமைவுக்கு மாற்றாக, இவர்கள் முன்வைக்கும் கவர்ச்சிகர சொற்களாலான தமிழர்பகுதிக்கு சமஉரிமை, சமரசதீர்வு, இறையாண்மைக்குட்ட அரசியல் தீர்வு என்பவற்றில் கோட்பாட்டு நெறிமுறைகளும் இல்லை. சூழல் குறித்த ஆய்வுகளுமில்லை, உலக வழக்குமில்லை.

இறையாண்மைக்குட்ட அரசியல் தீர்வு எனும் 50×10 தினரே, மனசாட்சியோடு பதில் சொல்லுங்கள்:

1. ஈழ அமைவை விட எவ்விதத்தில் உங்கள் அரசியல் தீர்வு சரியானது என்று இரண்டையும் வேறுபடுத்தி சாதக, பாதங்களுடன் விளக்கம் கூறமுடியுமா?

2. இதுவரை பலநாடுகளின் பிரிவினை அங்கீகரிக்கப்பட்டமைக்கும், உங்களால் ஈழத்தின் பிரிவினை மறுக்கப்படுபமைக்கும் இடையே கொள்கை ரீதியான வேறுபாட்டை நீங்கள் அளிக்க முடியுமா?

3. இதுவரை பிரிவினை அங்கீகரிக்கப்பட்ட தேசிய இனங்களைவிட ஈழத்தமிழ் தேசிய இனம் எவ்வகையில் குறைந்தது என்று விளக்க முடியுமா? படுகொலைகளின் எண்ணிக்கை வகையிலே…, போராட்டங்கள் நீண்டிருக்கும் காலவகையிலே…, தேசிய இன அந்தஸ்து வகையிலே…,

4. ஈழப்படுகொலை, இலங்கையின் ‘இறையாண்மைக்கு’ உட்பட்டது. அந்நியர் தலையிட முடியாது. சரிதான். ஆனால் அப்படுகொலைகள் சர்வதேச நெறிமுறைகளுக்கும் உட்பட்டதா? இல்லை, இலங்கையின் இறையாண்மை தான் சர்வதேச நெறிமுறைகளுக்கு அப்பாற்பட்டதா?

5. இனிமேல் முன் வைக்கப்படுகிற, ஏதோ ஒரு அரசியல் தீர்வு சொல்லும், சட்டதிட்டங்கள், தமிழ் இனப்படுகொலைகளை முடிவுக்கு கொண்டு வந்துவிடும் என்றால், இதுவரை இலங்கையில் இருந்து வந்த சட்டதிட்டங்கள், இனப்படுகொலைச் சட்டதிட்டங்களே என்பதை ஒப்புக் கொள்வீர்களா? இல்லை, இலங்கையின் சட்டங்கள் அவ்வாறில்லை என்றால், லட்சத்திற்கும் மேற்பட்ட படுகொலை செய்தது, சிங்கள ஆட்சியாளர்களும், அவர்களுக்கு ஆதரவளித்து வரும் சிங்கள மக்களுமே என்பதை நீங்கள் ஒப்புக் கொள்ளவேண்டிவரும். சிங்கள பேரினம் காரணமில்லை என்றால், சிங்கள சட்டங்கள் படுகொலை சட்டங்கள் ஆகிவிடும். அதை வகுத்தவர்கள், நடைமுறைப்படுத்தியவர்கள் என்ற வகையில் சிங்கள பேரினமே எப்படிப் பார்த்தாலும் காரணமாகிவிடும்.

ஆனாலும் நீங்கள் சொல்லலாம், உங்கள் அரசியல் தீர்விற்கான புதிய திடடங்கள், சிங்கள மக்களிடையே மனமாற்றத்தையும், சிங்களதமிழ் மக்களிடையே பிணைப்பையும் ஏற்படுத்திவிடுமென்று. நீங்கள் சொல்லும் இச்சோசியத்தை நம்பமுடியாது. ஏனெனில் உங்கள் பொன்னான சமரசதீர்வு சொல்லும் இனச்சமத்துவ நெறிகளைவிட, ஆயிரம் மடங்கு வலிமையுடைய “உயிர்க்கொல்லாமை” வலியுறுத்தும் பௌத்தத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டுதான், சிங்களர்கள் இத்தனைப் படுகொலைகளையும் அரங்கேற்றி இருக்கிறார்கள். இனவெறிக்கு முன் தங்கள் மதபோதனைகளையே தூக்கி எறிந்தவர்களுக்கு உங்கள் பொன்னான அரசியல்தீர்வு எம்மாத்திரம் ?

நீங்கள் சொல்லும் சனநாயகத்தீர்வு உங்களை சனநாயக வாதிகளாக காட்டிக்கொள்ள பயன்படுகிறது. அதற்குள் சூழ்நிலை பொருத்தபாடிண்மை மறைக்கப்படுகிறது. அதற்குள் உங்கள் ஆதாயங்கள் ஒளிக்கப்படுகிறது. உண்மையறியா உலகம் ஏமாற்றப்படுகிறது.

6. அப்படியானால், பிரிவினைக்குட்பட்ட தீர்வு எப்போதுமே சாத்தியமற்றதா? என்ற உங்கள் கேள்வி முக்கியத்தவமுடையதுதான். பிரிவினைக்குட்பட்ட தீர்வா? அப்பாற்பட்டதீர்வா? என்பது சூழலைப் பொறுத்தது. 50,60,70 கள் வரை ஒரு அரசியல் தீர்வை முன்வைக்கும் சூழ்நிலைகளை இக்காலங்கள் கொண்டிருந்தது. முன்வைத்திருந்தால், தீர்க்கப்பட்டிருக்குமா? அல்லது மேலும் வளர்ந்திருக்குமா? என்பது வேறுவிசயம். எனினும் முன்வைக்கும் சூழல் இருந்ததாகக் கொள்ளலாம். அதன்பிறகு தமிழர்கள் தமிழீழம் கேட்க, சிங்களர்கள் உக்கிரமடைந்து தாக்க, பதிலுக்கு தமிழர்களும் ஆயுதமேந்த தொடங்கிவிட்டார்கள். அதன்பின் அரசியல் தீர்வு சாத்தியப்பாடு மெல்லகுறைந்து முடிவுக்கு வந்துவிட்டது. இனமுரண், இனப்பகையாகி, இனமுறிவாகி அதன் உச்சத்திலிருக்கிறது. ஈழம் பெறாமல் தமக்கு வாழ்வில்லை என்று தமிழர்களும், அதற்கு விட்டுக்கொடுக்கப்போவதில்லை என்று சிங்களர்களும் அனைத்துக் களங்களிலும் நேருக்கு நேர் நிற்கிறார்கள்.

இந்நிலையில் சேர்ந்து வாழச்சொல்லும் உங்கள் எந்த தீர்வும், இவர்களின் இனப்பிணைப்பை உறுதிப்படுத்துமா? முரண்பட்ட இரு இனங்களை பிணைப்பது, அரசியல் தீர்வென்ன, மனித குலபேராற்றலுக்கே அப்பாற்பட்டது. இரு இனங்களின் தலைமுறைகள்நீண்ட பரஸ்பர உணர்வு படிமங்களுக்கு மட்டுமே இவர்களைப் பிணைக்கும் ஆற்றல் உண்டு. பிணக்கு என்பது மிகவிரைவாக ஏற்படுவதும், பிணைப்பு என்பது மிகமெதுவாக நிகழ்வதும் எல்லா உறவுகளிலுமான பொதுவிதி. இங்கே 60 ஆண்டுகள் பிணக்குக்கு என்றால் எத்தனை ஆண்டுகள் பிணைப்புக்கு? இதையெல்லாம் மூடி மறைத்து எப்படி நீங்கள் சமரசதீர்வை சாத்தியம் என்கிறீர்கள்?

7. நீங்கள் எந்த அரசியல் தீர்வை வைத்தாலும், தமிழ்ப்பகுதிகளில் இராணுவம் நிற்குமா? நிற்காதா? என்பதே முக்கிய கேள்வி. நிற்கும் என்பீர்களேயானால், அரசியல் தீர்வு காலத்திற்கும், முந்தைய காலத்திற்கும் என்ன வேறுபாடு? நிற்கக்கூடாது என்பதற்காகத்தான் முதலில் விடுதலை புலிகளை ஒழித்துவிட்டு அரசியல்தீர்வு என்பீர்களாயின், விடுதலைப்புலிகள் ஒழிக்கப்பட்டுவிட்டார்கள் என்று எப்படி இறுதி செய்வது? தளப்பிரதேச வெற்றிகளே வி.புலிகள் ஒழிக்கப்பட்டதன் பொருள் என்றால், சிங்கள இராணுவம் அதன் பின் தமிழ்ப்பகுதிகளை விட்டு வெளியேறிவிடுமா? அல்லது வி.புலிகள் இன்னும் இருக்கக்கூடும், கொரில்லா போர் தொடங்கக்கூடும் என்று அங்கேயே நிலைகொள்ளுமா? வி.புலிகள் ஒழிக்கப்பட்டுவிட்டார்கள் என்று எதை வைத்தும் இறுதி செய்ய முடியாது என்றால், காலாகாலத்திற்கும் தமிழர் பகுதிகளில் இராணுவ ஆட்சிதானா?

போர்க்களத்திலே புலிகளை ஒழித்துவிடவேண்டும் அல்லது ஒழித்துவிடலாம் என்று சொல்கிறீர்களே, சமூக களத்திலே புலிகளின் ஊற்றெடுப்பை தடுக்கமுடியாது என்பதை ஏன் சொல்ல மறுக்கிறீர்கள்? அவ்வூற்றெடுப்பை நிறுத்தாமல், புலிகளை ஒழிப்பதாய் சொல்வது, தமிழ்இனம் வற்றித் தீரும் வரை ஒழித்துக்கொண்டே இருப்பதாய் சொல்வதுதான். புலிகளின் ஊற்றெடுப்பை தடுக்க 3 வழிகள் உண்டு.

அ. சிங்கள தமிழ் இனப்பிணைப்பு - இதை நாம் தீர்மானிக்க முடியாது. காலம் மட்டுமே தீர்மானிக்கும்.

ஆ. ஈழப்பிரிவினை - இதை நாமும் தீர்மானிக்கலாம், காலமும் தீர்மானிக்கலாம். ஒரே வேறுபாடு, நாம் தீர்மானித்தால் எதிர்வரும் இழப்புகளைத் தவிர்க்கலாம். காலம் தீர்மானித்தால் அதையெல்லாம் பார்க்கலாம்.

இ. உளவியல் அழிப்பு - அதாவது தொடர்படுகொலைகள் மூலம் ஒட்டு மொத்த தமிழினத்தையும் ஒரு பீதியுற்ற மனநோய்க்கு ஆளாக்கி, புலிகளின் ஊற்றெடுப்பைத் தடுப்பது. இதுவே சிங்கள அரசால் தீர்மானிக்கப்பட்டு நடந்துவருவதும், 50x 10 தினரே, உங்களால் ஆதரிக்கப்பட்டு வருவதும் ஆகும். எனவே புலிகளை அழிப்பதும் ஏதோ ஒரு விதமாக இனத்தை அழிப்பதும் வேறல்ல அப்படியானால் உங்கள் அரசியல்தீர்வு இன அழிப்பிற்கு பின்னர்தானே நடைமுறைக்கு வர முடியும்?

8. உலகில் 0.2% மனிதபளமும், 0.05% உலக நிலப்பரப்பு கூட இல்லாத, வேறு அரியவளம் ஏதுமிராத, இலங்கையின் வர்த்த மதிப்பு உலக வர்த்தகமதிப்பில் ஒற்றைச் சதவிதத்திற்கும் கீழானதே. 50×10தினரே, நீங்கள் இந்த சொற்ப வளத்தை பங்கிடும் அற்ப நலனுக்காகவே சிங்கள அரசை ஆதரிக்கிறீர்கள் என்றால், பிணத்தில் பணம் பொறுக்குவது, மலத்தில் அரிசி பொறுக்குவதை விட எந்தவகையில் உயர்வானது?

இல்லை, இலங்கையைவிட சுமார் 80 மடங்கு மனிதவளமும், 40 மடங்கு மண்வளமும் கொண்ட இந்தியாவுடனான பொருளாதார நலன்கள் பாதிக்காமலிருக்கவே, போருக்கு மறைமுக தலைமையளிக்கும் இந்தியாவை மீற மறுக்கிறீர்கள் என்றால், இலங்கûயில் ஈழத்தமிழர்களுக்கு பதிலாக உங்கள் அமெரிக்க மக்கள், பிரித்தானியமக்கள், பிரெஞ்சு, ஜெர்மானிய மக்கள் படுகொலை செய்யப்பட்டாலும், இந்தியாவுடனான பொருளாதார நலன்களையே முதன்மை படுத்துவீர்களா? மாட்டீர்கள் என்றால் ஈழமக்கள் மட்டும் என்ன புழுக்களா? பூச்சிகளா? அவர்கள் நம் தாயுலகப் பொதுமக்கள் இல்லையா?

இல்லை, இராணுவ கேந்திர முக்கியத்துவத்தை அடைவதற்குத் தான் உங்களில் முன்னனி நாடுகளைச் சேர்ந்தவர்கள் முயல்கிறீர்கள் என்றால், இது சிறுதுரும்பும் பல் குத்த உதவும் என்பதை போன்றது. உங்களை பொறுத்தவரை, இலங்கை தெற்காசிய இராணுவ கேந்திர முக்கியத்துவம் உடைய சிறு துரும்பு. எனினும் இத்துரும்பு பல்குத்த உதவும் சூழ்நிலை வருமா? வராதா? சூழ்நிலையில் பயன்படுமா? பயன்படாதா? பயன்பட்டாலும் யாருக்குபயன்படும்? என்ற தீர்க்க தரிசனமெல்லாம் உங்களிடம் இல்லை. இன்றைய கணிப்பை காலம் மாற்றாது என்ற உறுதிப்பாடும் இல்லை. இருப்பினும் ஒரு வெற்று வாய்ப்பை அடையும் போட்டியில் சிங்கள அரசின் இணக்கத்தைப் பெற ஆயுதம் தருகிறீர்கள், நிதி தருகிறீர்கள், அரசியல் தீர்வு தருகிறீர்கள், இன அழிப்பிற்கு பயங்கரவாத அழிப்பு என பெயர்தருகிறீர்கள். சிலநேரம் சிங்கள அரசைமிரட்ட ஈழப்படுகொலைகளை கருத்துப் பணியமாய் பயன்படுத்துகிறீர்கள். நீங்கள் இலட்சக்கணக்கான மனித உயிர்கள் அழிவதாயினும், உங்கள் நலனுக்கான சிறு துரும்பைக் கூட விட்டுத்தர மாட்டீர்கள்.

ஈழப்படுகொலை - உங்களுக்கு இலாபம்தரும் இரவல் மூலதனம் எனவே அதை இழக்க மாட்டீர்கள்.

ஈழப்படுகொலை - உங்கள் நன்மைக்குச் செய்யப்படும் நரபலி எனவே தடுக்கமாட்டீர்கள்.

இது மனித நலன்களை மிருகநலன்களுக்கு உட்படுத்துவதுபோல் இல்லையா?

9. 70% மொத்த வாக்குபதிவில் 36 சதவீதம் பெரும்பான்மை பெற்று,தங்களுக்கு ஆதரவளிக்காத 64 சதவீதம் மக்களையும் சேர்த்து 100% மக்கள் மீதும் அதிகாரம் செலுத்துவதைக்கூட முழுசனநாயக அரசுகள் என்று தகுதி பேசும் நீங்கள், 90% மக்களின் உணர்வையும் உயிரையும் கூட ஆதரவாய் பெற்ற புலிகளை பயங்கரவாதிகள் என அறிவித்தீர்கள் அதற்கும் முன்னதாக இருந்து அவர்கள் அமைத்த தமிழீழ சனநாயக அரசை அங்கீகரிக்க மறுத்தீர்கள். இது 36% மதிப்பெண்ணில் தேர்ச்சி பெற்றவர்களெல்லாம் சேர்ந்து 90 % மதிப்பெண் பெற்றவனை மக்கு என்று உரக்கக் கூறி நம்பச் செய்வது போல்இல்லையா? நீங்களும் முழு சனநாயகத் தலைவர்கள் இல்லை உங்கள் செயல்களிலும் சனநாயகம் இல்லை. இருந்திருந்தால், 10 மணி நேரத்தேர்தல் நடத்தி, ஈழவிடுதலையையும், புலிகள் ஆதரவையும் முடிவு செய்திருக்கலாமே அல்லது சிங்கள அரசிற்கு உங்கள் கருத்தாக இதைச் சொல்லியிருக்கலாமே? ஏன் இந்த அரசியல்தீர்வு பாவனைகள்?

10. புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்ட 42 நாடுகளிலும் பயங்கரவாத இயக்கம் என அறிவிக்கப்பட்டதால், அவ்வெல்லைகளைத் தாண்டி தமிழ் ஈழத்திலும் அது பயங்கரவாத இயக்கம் ஆகிவிடுமா? இந்தியாவிற்கு பாகிஸ்தான் ‘பகைநாடாக’ இருப்பதால், பாகிஸ்தான் பாகிஸ்தானிய மக்களுக்கே பகை நாடாகிவிடுமா? உங்கள் எல்லைகளில் நீங்கள் பயங்கரவாத இயக்கம் என அறிவித்தாலும், தமிழீழ எல்லைக்குள் அது மக்கள் இயக்கமே என்பதை நேர்மையோடு சொல்லியிருக்க வேண்டும். அந்த நேர்மையில்லாமல் நடந்து கொண்டதால், உலகின் பார்வையில் மக்கள் வேறு, புலிகள் வேறு என்று ஆக்கிவிட்டீர்கள். இன அழிப்புப் போரை பயங்கரவாத எதிர்ப்புபோராய் ஆக்கிவிட்டீர்கள். இத்தகைய உங்கள் கருத்தியல் பங்களிப்பு, இன்றைய இனப்படுகொலைகளின் அடிப்படையாக இருக்கும்போது, அடுத்ததான உங்கள் ‘அரசியல் தீர்வு’ பங்களிப்பு எப்படி அழிவற்றதாக இருக்கமுடியும்?

எனவே சமரச தீர்வு, சனநாயகத்தீர்வு என்றெல்லாம் கூறப்படும் இறையாண்மைக்குட்பட்ட அரசியல் தீர்வு, பிரச்சனைகளைத் தீர்க்கும் திறனற்றதாகும். எதை எதையோ தீர்வாகச் சொல்லி, ஈழப்பிரிவினையை மறுக்கும் துர்நோக்கமாகும்.

50×10 தினரின் அரசியல் தீர்வு என்பது :

1.சனநாயக வார்த்தைகளால் கூறப்படும் (சிங்கள) அதிகாரத்தீர்வு.

2.இனப்படுகொலைகள் தொடர்ந்துசெல்ல பாதைபோடும் தீர்வு.

3.இது எப்போதும் தமிழ்ப்பகுதிகளில் இராணுவ ஆட்சியையே தொடர வழி செய்யும் தீர்வு.

4.இது தமிழ் மக்களின் உயிரச்சத்தையும், வாழ்வியல் அச்சத்தையும் உதாசீனப்படுத்தும் தீர்வு.

5. இது முற்றிலும் பிளந்து கிடக்கும் இரு சமூகங்களை ஒரே சமூகம் போல் காட்டும் காட்சிப்பிழையும், கருத்துப்பிழையும் கொண்ட தீர்வு

6.இது தமிழ்மக்களின் நலன்களிலிருந்து அல்லாமல். நாடுகளின் இராஜதந்திர நலன்களுக்காய் சொல்லப்படும் தீர்வு.

7. இது தேசிய இன உணர்வுகளை உணரமுடியாத அவ்வுணர்வுகளுக்கு எல்லாம் அப்பாற்பட்ட நேரெதிரான அதிகார உணர்வாளர்களால் முன்வைக்கப்படும் தீர்வு.

8. இது இரத்தப்புற்றுநோயை, இலேசான தொற்றுநோய் போல் பாவிக்கும் மருத்துவம் போன்ற தீர்வு.

9. குழந்தைக்கு பால் பொருத்தமான உணவு என்பதால் அதன் ஆயுள்முழுவதும் பாலே பொருத்தமான உணவு என்பதைப் போன்ற காலப்பொருத்தமற்ற தீர்வு.

10. இது இனஒதுக்கலுக்கும், இன ஒழிப்புக்கும் காரணமாயிருந்து வரும் சிங்கள பெரும்பான்மை அதிகாரம் என்னும் மூலவேரை அப்படியே தொடர அனுமதிக்கும் தீர்வு.

11. இது அதிகாரத்தில் பெரும்பான்மை, சிறுபான்மை விகிதாச்சாரம் சொன்னால், மீண்டும் சிங்கள பெரும்பான்மை அதிகாரத்திற்கே வழிவகுக்கும் தீர்வு.

12.இது அதிகாரத்தில் இருவருக்கும் சமபங்கு என்று சொன்னால், சிங்கள பேரினத்திற்கு செய்யும் துரோகத்தீர்வு. அவர்களால் ஏற்கப்படாமல், இனப்படுகொலைகளை மேலும் மூர்க்கப்ப்படுத்தம் தீர்வு.

13.சமஉரிமைகள் வழங்கப்பட்டாலும் மீண்டும் அது சிங்கள பெரும்பான்மையால் கடந்த காலங்கள் போல் மறுக்கப்படக்கூடிய தீர்வு.

14.இது சமஉரிமைச்சட்டங்களை மீறும் சிங்களர்களைத் தடுக்க தமிழர்க்கு அதிகாரம் தரமுடியாத தீர்வு.

15.பிரிந்தே ஆகவேண்டிய இறுதி எல்லையில் தமிழர்களும், சேர்த்துவைத்து அழித்தே ஆகவேண்டிய இறுதி எல்லையில் சிங்களர்களும் இருக்கும் சமூக சூழ்நிலைகளை முற்றிலும் பொருட்படுத்தாத தீர்வு.

16.அதிகாரமற்ற மக்களுக்கும், போடப்படும் ஒப்பந்தத்தை எல்லாவிதத்திலும் மீறமுடிந்த அதிகாரமிக்க அரசுக்கும், இடையில் கிட்டத்தட்ட ஒப்பந்தமாயில்லாத, மிக பலவீனமான ஒப்பந்தத்தை நம்புகின்ற தீர்வு.

17.இதுவரையிலும் நடந்து வருகின்ற, இன்னும் தொடரவிருக்கின்ற அப்பாவி மனித உயிர் அழிவுகள் குறித்து, கொஞ்சமும் பதற்றப்படாத, ஈவு, இரக்கம் காட்டாத தீர்வு.

18.பாதிக்கப்பட்ட மக்களின் விருப்பங்களை மதிக்காமல், அன்னியரால் வன்முறையாக திணிக்கப்படும் தீர்வு.

19.தமிழர்களின் தரப்பு புலிகள் என்பதையே மறுத்து, இருதரப்பு என்பதே இல்லாமல் செய்து ஒரு தரப்பாய் ஒப்பந்தம் போடும் ஏகபோகர்களின் தீர்வு.

20.இது மொத்தித்தில் ஈழத்தமிழ் தேசிய சுய நிர்ணய உரிமையின் மீது சர்வதேச மீறல் படும் தீர்வு.

உலகமக்கள் யாவரும் பிழையான தீர்வுகளை மறுக்கவும், தனி ஈழ அமைவிற்கு ஆதரவளிக்கவும் ஒவ்வொரு விதத்தில் கடமைப்பட்டவர்களே.

அமெரிக்கமக்களே,

செப்.11-தாக்குதலின் பின் அவசரகோலமாக சம்பந்தமற்ற முறையில் புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்டதால் அதைப்பயன்படுத்தி பயங்கரவாத அழிப்பு என்ற பெயரில் சிங்கள அரசு செய்து வரும் இன அழிப்பில் உங்கள் காரண-காரிய பங்குக்கு பொறுப்பேற்று தடையை நீக்கி, தனிஈழ அமைவை ஆதரியுங்கள்

பிரித்தானிய மக்களே,

1948-ல் உங்கள் முன்னோர்கள் செய்து சென்ற வரலாற்றுப் பிழைகளின் கோரவிளைவுகளுக்கு தார்மீகப்பொறுப்பேற்று, அதற்கான வரலாற்றுத்திருத்தமாக தனிஈழ அமைவை ஆதரியுங்கள்.

தேசியவிடுதலை பெற்ற மக்களே,

நீங்கள் தேசிய விடுதலை உணர்ச்சிகளை நடைமுறைகொண்டவர்கள், சக தேசிய இனத்தின் விடுதலை உணர்ச்சியை மதித்து, தனிஈழ அமைவை சகோதர உணர்வோடு ஆதரியுங்கள்.

ஈழப்போராட்டத்திற்கு பின் விடுதலை பெற்ற தேசிய இனங்களே,

உங்கள் தேசிய விடுதலை போராட்டத்திற்கு மூத்த தேசிய விடுதலைப்போராட்டம் என்ற வகையில், ஈழவிடுதலை போராட்டம் புறவயத்தாக்கமாக நின்று உங்கள் எழுச்சிக்கு ஆதர்சனமாய் உதவாமல் இருந்திருக்க முடியாது. அதற்கான உங்கள் நன்றிக் கடனை தீர்க்கும் விதத்தில் தனி ஈழஅமைவை உரக்கஆதரியுங்கள்.

20-ம் நூற்றாண்டு மத்தியில் பிரித்தானிய காலனி விடுதலை பெற்ற மக்களே,

உங்கள் நாடுகளின் விடுதலை என்பது, அன்றைய பிரித்தானிய காலனி நாடுகளின் பொதுப் போராட்டத்தின் பொதுவிளைவு. அப்பொதுப் போராட்டம் என்ற வகையிலேயே, உங்கள் விடுதலையில் இலங்கைக்கும் பங்குண்டு. ஆனால் உங்கள் பங்கால் இலங்கை பெற்ற விடுதலை இன்னும் போய் ஈழத்தமிழர்க்கு சேரவில்லை. சேராத பிரதிபலனை சேர்க்க தனி ஈழ அமைவை ஆதரியுங்கள்.

புலம் பெயர்தமிழர் வாழும் தேசமக்களே,

ஈழத்தமிழர் வேதனையை, உலகமக்கள் எல்லோரினும் கூடுதலாக உணரமுடிந்தவர்கள் நீங்களே. ஏனெனில் அவர்களோடு சேர்ந்து வாழ்ந்து அவர்களின் சொந்தங்களாகிவிட்ட மக்கள் நீங்களே, உங்கள் சொந்தங்களை காக்கும் கடமையாக

தனி ஈழ அமைவை ஒரே தீர்வென ஆதரியுங்கள்

உலகமக்களே

உங்கள் ஆதரவு நாகரிகத்திற்கா? காட்டுமிராண்டித்தனத்திற்கா? என்ற கேள்வி அரசியல் தீர்வுக்கா? தனிஈழ அமைவிற்கா? என உங்கள் முன் வைக்கப்பட்டுள்ளது. நாகரீகமே என்று பதிலளிக்க தனி ஈழ அமைவை ஆதரியுங்கள்.

தமிழக மக்களே,

நீங்கள் விரும்பினாலும், வெறுத்தாலும், ஏற்றாலும், மறுத்தாலும், ஈழ மக்கள் தங்களின் தாயாகவே உங்களை தத்தெடுத்துவிட்டவர்கள். தாயின் அரவணைப்பும், பாதுகாப்பும் இருக்குமென்று நம்பியே சிங்களத்தை எதிர்க்கும் துணிச்சல் கொண்டார்கள். ஏழாம் தர ஊடகச் செய்திகளாலும், 8-ம் தர அரசியல்வாதிகளாலும், 80-களில் இருந்து வந்த உங்கள் பெரும் ஆதரவு, 90-களில் தடுமாறியது. இப்போது மீண்டும் தடுமாறி தன்னெமுச்சி ஒன்று வயப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட மனிதாபிமானத் தடுமாற்றங்களை விட்டு அரசியல் நியாயங்களிலிருந்து உங்கள் தாய்மைப் பொறுப்பை செய்தால், இலங்கைக்கு உதவ இந்தியா உங்களை மீறமுடியாது. சிங்களம் உலகை மீறமுடியாது.

ஈழ மறுப்புத் தீர்வுகளை இனம் காண்போம்!

தனி ஈழ அமைவொன்றே தீர்வென்போம்.!!

http://www.nerudal.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.