Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனி என்ன ஆவான் இலங்கைத் தமிழன்?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

'30 ஆண்டுக் கால யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது!' - ஜோர்டான் போன இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே பறந்து வந்து, கொழும்பு மண்ணைக் குனிந்து முத்தமிட்டார்.

சிங்கள ஆட்சியின் கீழ் கிடந்த மூன்றில் ஒரு பங்கு நிலத்தைச் சிறுகச் சிறுகப் பறித்து 'தமிழீழம்' என்று பெயர் சூட்டி ஐ.நா. அங்கீகாரம் தவிர, அத்தனை உள்கட்டமைப்புகளையும் நிர்மாணித்து வைத்திருந்த விடுதலைப் புலிகள் இயக்கம் முற்றாக அழிக்கப்பட்டதாகச் சிங்கள அரசு சொல்ல ஆரம்பித்திருக்கிறது.

''இனி விடுதலைப் புலிகள் என்பதே கிடையாது. எல்லா மக்களையும் புலி களிடம் இருந்து மீட்டுவிட்டோம்'' என்று மகிந்தாவின் சகோதரரும், பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபய ராஜபக்ஷே சொல்லி இருக்கிறார். சிங்கள ராணுவத் தின் அதிகபட்ச சாதனைக்குக் கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் சுமார் 35 ஆயிரம் தமிழர்கள் பலியாகி இருக்கிறார் கள். மகிந்தா பதவிக்கு வந்து யுத்தத்தைத் தொடங்கிய பிறகு, சுமார் 90 ஆயிரம் தமிழர்கள் குண்டு வீசிக் கொல்லப்பட்டுள்ளார்கள். 22 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பு பல்லாயிரம் தமிழர்களைப் புதைகுழிக்குள் அனுப்பிக் கைப்பற்றப்பட்டுள்ளது. அதாவது, பிணங்கள் புதைக்கப்பட்ட மைதானம் மகிந்தா வசமாகியிருக்கிறது.

இருக்கலாம், கொன்றது போக மீதம் உள்ள தமிழர்களின் கதி என்ன? இதுதான் இன்று பூதாகாரமாக இருக்கும் கேள்வி!

ராணுவ சாகசத்தைத் தன்னுடைய வெற்றிக் களிப்பாகக் கொழும்பு கொண்டாடி வரும் வேளையில், இலங்கையில் இருந்து இரண்டு குரல்கள் கேட்கின்றன. ''அரசுக்கும் புலிகளுக்கும் இடையிலான யுத்தத்தால் பாதிக்கப்பட்டது நிராயுதபாணிகளான மக்கள்தான். புலிகள் மீதான வெற்றி தேசியப் பிரச்னைக்குத் தீர்வாகாது. தமிழர்களின் விருப்பத்துக்கு முக்கியத்துவம் தரக்கூடிய அதிகாரப் பகிர்வுத் திட்டத்தை முன்வைக்க வேண்டும்'' என்று சிவத்தம்பி உள்ளிட்ட தமிழ் அறிவுஜீவிகள் சொல்லியிருக்கிறார்கள்.

கொழும்பு தலைமை நீதிபதியான சரத் என். சில்வா, ''வன்னியில் இருந்த மக்களை முதலில் சொந்த இடத்தில் குடியமர்த்த வேண்டும். சோறு போட்டு முகாமில் தங்கவைப்பது தீர்வாகாது. வடக்கு மாகாணத்தில் அகதி முகாம்கள் அதிகரித்து வருவது தீர்வாகாது. பத்து ஏக்கர் நிலப்பரப்புக்குள் 2 லட்சம் மக்களை எத்தனை காலத்துக்கு வைக்கப்போகிறீர்கள்? அவர்களுக்கு சட்டரீதியான தீர்வைச் சொல்லுங்கள். இல்லையென்றால், சர்வ தேச நாடுகள் தலையிட நேரிடும்'' என்று சொல்லிஇருக்கிறார்.

போரை முடித்துவிட்டதாக அறிவித்திருக்கிற அரசாங்கம், அந்த அப்பாவித் தமிழ் மக்களுக்கு என்ன செய்யப் போகிறது என்பதை உலகம் உற்றுக் கவனிக்க ஆரம்பித்திருக்கிறது.

கொழும்பில் ஆறு லட்சம் தமிழர்கள் இருக்கிறார்கள். யாழ்ப்பாணத்திலும் அதே எண்ணிக்கையிலான மக்கள் இருப்பார்கள். கிழக்கு மாகாணத்தில் நான்கு லட்சம் பேரும், போர் முனையின் கொடுமையைக் கடந்த ஓராண்டாக அனுபவித்த வடக்கு மாகாணத்தில் இரண்டரை லட்சம் பேரும் இருக்கிறார்கள். சிங்க ளர்களின் பண்டிகை, இலங்கை சுதந்திர தினம், தேர் தல் வெற்றிகளின்போது கொழும்புத் தமிழர்களின் நிம்மதி மொத்தமாகப் பறிபோய்விடும். வெள்ளை வேன்களில் கடத்தப்பட்டும், காவல் துறையால் அச்சுறுத்தப்பட்டும் வாழும் மக்கள் அவர்கள். தமிழன் என்பதற்கான அடையாளமான பொட்டு வைக்காமல் வாழப் பழகிவிட்டார்கள் அங்கு. யாழ்ப்பாணம், கடந்த 14 ஆண்டுகளாக எமர்ஜென்சி அறிவிக்கப்பட்ட பகுதி யாகத்தான் இருக்கிறது. அங்கு உறவினர்கள் யாரும் வந்து பார்க்க முடியாது. இவர்களும் வெளியூர் போக முடியாது. எங்கு வேலைக்குப் போனாலும், மாலை ஆறு மணிக்கு முன்னதாக வீட்டுக்குள் போய் அடங்கி விட வேண்டும் என்ற அடக்கு முறை தொடர் கிறது.

கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் வாழும் இடங்களில் சிங்களவர்கள் வலுக்கட்டாயமாகக் குடியேற்றப்பட்டுள்ளார்கள். இடஒதுக்கீட்டின்படி, சுகாதாரப் பணியாளர் வேலைக்கு 100 பேர் எடுத்தால், ஐந்து தமிழர்களுக்குத்தான் அங்கு வேலை கிடைக்கும். அந்த அளவுக்கு சிங்களக் குடியேற்றம் அதிகமாகிவிட்டது. புலிகளிடம் இருந்து கைப்பற்றியதும் 'கிழக்கின் உதயம்' என்று ஒரு திட்டத்தை மகிந்தா அறிவித்தார். பள்ளிக் கூடம், தொழிற்சாலை, மருத்துவமனை ஆகியவை கட்டித் தரப்படும் என்றார். எதுவும் நடக்கவில்லை. அங்கு நடத்தப்பட்ட தேர்தலில், பிள்ளையான் முதலமைச்சர் ஆனார். 'என் மாகாணத்தின் வளர்ச்சிக்குச் சொன்னபடி பணத்தை ஒதுக்கவில்லை' என்று அவர் புகார் சொன்னார். உடனே சிங்கள அதிகாரிகளால் மிரட்டப்பட்டு, இப்போது அமைதியாக இருக்கிறார். வடக்கு மாகாணத்தைக் கைப்பற்றியதும் 'வடக்கில் வசந்தம்' என்ற திட்டம் கொண்டுவரப்படும் என்று மகிந்தா அறிவித்துள்ளார். கிளிநொச்சியைப் பிடித்ததும் தமிழர்களுக்கான தீர்வு அறிவிக்கப்படும் என்று சொன்னார். ஆனால், ஐந்து மாதங்கள் ஆகியும் அப்படி எதுவும் அறிவிக்கப்படவில்லை.

'தமிழர்கள் கொல்லப்படுகிறார்களே?' என்று டெல்லி பத்திரிகையாளர்கள் மாறி மாறிக் கேட்டபோது கோபமான மகிந்தா ராஜபக்ஷே, ''என் நாட்டு மக்களைப் பற்றி என்னைவிட உங்களுக்கு அதிகமான அக்கறை இருக்குமா?'' என்று கேட்டார். அந்த அக்கறையை ராஜபக்ஷே காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது. முதலில் அவர் கவனிக்க வேண்டியது வன்னி பகுதியில் உள்ள முகாம்களை.

போரின் பெருவாய் தின்று தீர்த்த மக்கள் போக, இன்றும் லட்சக்கணக்கான தமிழ் மக்களை வதை முகாம்களில் அடைத்துவைத்திருக்கிறது சிங்கள அரசு. மாற்றுடுப்புகள் சிலவற்றுடன் தலைச் சுமையாக ஒரு பையைச் சுமந்தபடி உயிர்ப் பிச்சை கேட்டு வரும் மக்களை வவுனியா செட்டிக்குளம் மெனிக்பாம் பகுதி யின் அடர்காட்டுக்குள் அமைந்திருக்கும் இடைத்தங்கல் முகாமுக்குக் கொண்டுசெல்கிறார்கள். சுமார் 100 ஏக்கர் பரப்பளவிலான இந்த முகாமில், அரசின் கணக்குப்படி 1 லட்சத்து 33 ஆயிரம் குடும்பங்கள் இருக்கின்றன. இதுவரை 2 லட்சத்துக்கும் மேலானவர்கள் வந்திருப்பதாகச் சொல்கிறது. ஆனால், அந்த முகாம்களில் குடியிருப்பு என்று எதுவும் இல்லை. செஞ்சிலுவை சங்கம் வழங்கிய தற்காலிகக் கூடாரங்கள் மட்டுமே எங்கும் நிறைந்திருக் கின்றன. சின்னஞ்சிறிய கூடாரம் ஒவ்வொன்றிலும் மூன்று குடும்பங்கள் நெருக்கியடித்து வசிக்கின்றன.

முகாம் அமைக்கப்பட்டு மாதக் கணக்காகிவிட்ட நிலையில், இதுவரை லாரிகள் மூலமாகவே குடிதண்ணீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. அது குடிக்க மட்டுமே! குளிக்கவும் அன்றா டத் தேவைகளுக்கும் தண்ணீர் கிடை யாது. அவர்கள் அனைவரும் குளித்து வாரக்கணக்கில், மாதக்கணக்கில் ஆகின்றன. இப்போதுதான் முகாமில் கிணறு தோண்டும் பணி நடந்து வருகிறது. நாள் ஒன்றுக்கு ஒரு தடவை லாரிகள் மூலம் ஏதோ உணவு விநியோகிக்கிறார்கள். பசியால், பட்டினியால் வாடித் துடிக்கும் அம்மக்கள் அந்த உணவை வாங்க லாரிகளின் முன்னால் கையேந்தி முண்டியடிக்கின்றனர். கூட்டம் அதிகமாகும் நாட்களில் நாய்களுக்கு பிஸ்கட் வீசுவது போல மக்களை நோக்கி உணவுப் பொட்டலங்கள் தூக்கி வீசப்படுகின்றன. மக்கள் அதை ஓடி ஓடிப் பொறுக்கிக்கொள்ள வேண்டும். அந்த உணவையும் பெற வாய்ப்பற்ற வயது முதிர்ந்த பெரியவர்கள் மரணத்தைச் சந்திக்கின்றனர். மே 1 முதல் மே 11 வரைக்கும் மட்டும் பூந்தோட்டம் முகாமில் 61 முதியவர்கள் பட்டினியால் செத்துப் போயிருக்கிறார்கள்.

முகாமுக்கு வந்து சேர்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், இப்போது வவுனியா முகாமைச் சுற்றி இரும்பு முள்வேலி அமைக்கப்பட்டு, அதில் மின்சாரம் பாய்ச்சப்பட்டுஇருப்பதாகச் சொல்லப்படுகிறது. தப்பிக்க நினைத்தால் மரணமே பரிசு. ''இப்போது எங்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை. அடித்தாலும், சுட்டாலும், சிதைத்தாலும், கற்பழித்தாலும், என்ன சித்ரவதை செய்தாலும் எங்களால் வாய் திறந்து பேச முடியாது. துப்பாக்கிகளின் கண்காணிப்பில் சோறு உண்ணவும், உடுப்பு மாற்றவும் நிர்பந்திக்கப்படுகிறோம். சின்ன பாதுகாப்புக்கூட இல்லாமல் ஒரு திறந்தவெளி சித்ரவதைக் கூடத்தில் அடைக்கப்பட்டு இருக்கிறோம். இலங்கை அரசாங்கம் எங்களைப் போர்க் கைதிகளாகவே பாவிக்கிறது. எங்களைச் சிரிக்கச் சொல்லி புகைப்படம் எடுத்து, நாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகப் பிரசாரம் செய்கிறது. அடுத்த நான்கைந்து ஆண்டுகளுக்கு எங்களை நிச்சயம் இந்த முகாமைவிட்டு அனுப்ப மாட்டார்கள். வெளியில் வேலைக்குப் போகக்கூட அனுமதிக்க மாட்டார்கள். அரசாங்கம் கொடுக்கும் சோற்றைத் தின்றுகொண்டு, அவர்கள் கொடுக்கும் தண்ணீரைக் குடித்துக்கொண்டு, வெறும் பிணங்களாக, அடிமைகளாக வாழ்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை.

இனி வரும் நாட்கள் எங்களுக்கு இன்னும் மிக மோசமானதாக இருக்கும். கேட்க நாதியற்ற எங்களை, இலங்கை அரசாங்கம் என்னவும் செய்யும். கடும் சித்ரவதைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதையும் தாண்டி, எங்களின் பூர்வீகப் பிரதேசங்களில் மீளக் குடியமர்த்தினாலும் அந்த வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை. எங்களின் குறைந்தபட்சப் பாதுகாப்பு அரணாக இருந்த புலிகளும் இல்லாத நிலையில், இனி நாங்கள் யாரை நம்பி வாழ முடியும்? உலகத்து நாடுகளே... தயவுசெய்து எங்களை இலங்கையில் இருந்து மீட்டுச் செல்லுங்கள். இந்த தேசத்தை சிங்களனே வைத்துக்கொள்ளட்டும். அவர்களே ஆளட்டும். எங்களை விடுவியுங்கள். வேறு ஏதோ ஒரு நாடு... ஏதோ ஒரு வேலை... இலங்கை மட்டும் வேண்டாம். அரசியல் தஞ்சம் கேட்கிறோம், உயிர் தஞ்சம் கேட்கிறோம். தயவுசெய்து செவிமடுங்கள்... எங்களை மீட்டுச் செல்லுங்கள்'' - வவுனியா முகாமில் அடைக்கப்பட்டு இருக்கும் ஒரு பெண், அங்கு பணிபுரியும் சேவை நிறுவன ஊழியரின் உதவியுடன் நம்மிடம் பேசிய வார்த்தைகள் இவை.

இன்று பிச்சைக்காரர்களைவிடக் கேவலமான நிலையில், மேலாடை இல்லாமல் உடம்பு வற்றி கையேந்தி நிற்கவைக்கப்பட்டு இருக்கும் ஈழத் தமிழர்கள் அத்தனை பேரும் நல்ல வாழ்க்கை வாழ்ந்தவர்கள். ஒட்டு மொத்த யாழ்ப்பாணத்திலும் இப்போது எண்ணிப் பார்த்தாலும்கூட 50-க்கு மேல் பிச்சைக்காரர்கள் இருக்க மாட்டார்கள் என்பதே யதார்த்தம். தமிழகம் போல ஈழத் தமிழர்களிடம் இத்தனைப் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் கிடையாது. 90 சதவிகிதம் பேர் மத்திய தரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். வறுமையையும் பட்டினியையும் கண்டறியாதவர்கள். இந்தக் கொடிய போர் அவர்களைப் பிச்சைக்காரர்கள் போலக் கையேந்த வைத்திருக்கிறது.

உச்சகட்ட சித்ரவதைக் கூடமாக இருக்கும் இந்த கதிர்காமர் இடைத்தங்கல் முகாமைத்தான் 'நலன்புரி மையங்கள்' என்றும், 'உலகின் முன்மாதிரி நிவாரணக் கிராமம்' என்றும் வர்ணிக்கிறது இலங்கை அரசு. 'உலகின் மிகப் பெரிய பணயக் கைதிகள் மீட்பு நட வடிக்கை' என இதைப் பிரசாரம் செய்கிறது. இம் மக்களை அவர்களது வீடுகளுக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று சொன்ன ஒரே காரணத்துக்காக ரவிசங்கர் மீது கோபப்பட்டார் கோத்தபய ராஜபக்ஷே. கொழும்பிலும் இதே போன்ற நிலைமைதான். கொழும்பு பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி நந்தினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது), ''எங்கள் பல்கலைக்கழக வளாகம் எங்கும் தமிழர்கள் பிணமாகக் கிடக்கும் காட்சிகள் புகைப்படங்களாக மாட்டி வைக்கப்பட்டுள்ளன. 'இதே நிலைமைதான் நாளைக்கு உங்களுக்கும்' என்று அந்தப் புகைப்படங் களைக் காட்டி சிங்கள மாணவர்கள் எங்களை எச்சரிக்கின்றனர். நடந்து செல்லும்போது மாடிக் கட்டடத்தில் இருந்து எச்சில் துப்புகின்றனர். எங்களால் எந்தச் சிறு வார்த்தையும் பேச முடியவில்லை. சிங்களம் கற்றுக்கொண்டு சிங்களனாக மாறுவது ஒன்றுதான் இங்கு உயிர் தரித்திருப்பதற்கான ஒரே வழி!'' என்று தொலைபேசியில் கதறுகிறார்.

''கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் அடித்து நொறுக்கப்பட்டவை 56 ஆயிரம் வீடுகள். இப்படி தமிழர் வாழும் 10 மாவட்டங்களிலும் புள்ளிவிவரங்கள் எடுக்கப்பட்டு புனரமைப்பு வேலைகளை ஆரம்பிப்பதில் தொடங்கி, உயிரோடு இருக்கும் அப்பாவி மக்களைக் கொண்டுபோய் அந்த வீடுகளில் குடியமர்த்தி, நிம்மதியான தேசத்தில்தான் வாழ்கிறோம் என்ற நம்பிக்கையை விதைப்பதில் முடிய வேண்டும். கிழக்கு மாகாணத்தில் அடிப்படை வேலைகள் தொடங்கப்பட வேண்டும். யாழ்ப்பாணத்து எமர்ஜென்சி விலக்கப்பட வேண்டும். கொழும்புத் தமிழர்கள், தங்கள் தொழிலைத் தொடர உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும்'' என்ற கோரிக்கையை அங்குள்ள தமிழர் அமைப்புகள் சொல்ல ஆரம்பித்துள்ளன.

தமிழ் எம்.பி. சேனாதிராஜா சொல்கிறார்... ''ஒரு கொள்கைக்காக அர்ப்பணித்து நின்ற தமிழ் மக்கள் ஆவியாக அலைகிறார்கள். அவர்தம் உறவுகள் சிறையில் வீழ்ந்து கிடக்கிறார்கள். கையில் காசுமின்றி, நோய்க்கு மருந்துமின்றி, குழந்தைக்குப் பாலுமின்றி, உடுக்க மாற்றுத் துணியுமின்றி பட்டினியில் கிடக்கின்றன சொந்தங்கள். எமது உழைப்பில், எமது உணவில், எமது உப்பில், ஒரு பிடியையேனும் அல்லல்படும் தமிழனுக்குக் கண்ணீருடன் கொடுத்து உயிர் கொடுப்போம். கடல் கடந்து வாழ்பவர்கள் எங்களுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்!''

அகதிகள் திருப்பி அனுப்பப்படுவார்களா?

'இலங்கையில் போர் முடிந்துவிட்டது என்று அறிவிக்கப்பட்டதால் உலகம் முழுவதும் வாழும் அகதிகள் திருப்பி அனுப்பப்படுவார்கள்' என்று சிலர் பயமுறுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.

தமிழ்நாட்டின் 117 முகாம்களில் 73,433 பேரும், உலகமெங்கும் பல லட்சம் ஈழத் தமிழர்களும் அகதிகளாக வாழ்கிறார்கள். இவர்களை மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பிவிடுவார்களா என்று ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகத்தின் பொருளாளர் சந்திரஹாசனிடம் கேட்டோம். ''ஓர் அகதி மறுபடியும் தன் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவதற்கு அங்கு அவரது உயிருக்கும், வாழ்வாதார உரிமைகளுக்கும் உத்தரவாதம் இருக்க வேண்டும். ஆனால், இலங்கையில் இப்போது ஆயுதப் போராட்டம் ஒரு நிறைவுக் கட்டத்தை எட்டியிருப்பதை வைத்து, தமிழ் மக்கள் அங்கு நிம்மதியாக வாழக்கூடிய சூழல் இருப்பதாகச் சொல்ல முடியாது. இப்போதும் அங்கு சிங்களப் பேரினவாதத்தின் கொடூரம் தொடர்கிறது. தமிழர்களின் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது. இலங்கையில் இருக்கும் தமிழர்கள் இப்போதும் அகதிகளாக வெளியேறி வருகிறார்கள். எனவே, அகதிகள் திருப்பி அனுப்பப்படுவதற்கு எந்தக் காரணங்களும் இல்லை. தவிரவும் ஒரு தேசம் தன் நாட்டில் இருக்கும் அகதிகளைத் திருப்பி அனுப்ப வேண்டுமானால், 'அகதிகளின் சொந்த நாட்டில் அமைதி திரும்பிவிட்டது, அங்கு வாழலாம்' என்று அவர்கள் நம்ப வேண்டும். உண்மையில் இன்று இலங்கைப் பேரினவாதத்தின் கொடூரம் பற்றி அனைத்துலக நாடுகள் அதிகமாக அறிந்துவைத்திருக்கிற சூழலில் திருப்பி அனுப்பப்படுவதற்கான வாய்ப்புகள் அறவே இல்லை!''என்றார்.

http://www.vikatan.com/av/2009/may/27052009/av0201.asp

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.