10,000 சர்வதேச ஓட்டங்கள் குவித்த நான்காவது வீராங்கனை மந்தனா; 4ஆவது ரி20இலும் இலங்கையை வீழ்த்தியது இந்தியா
Published By: Vishnu
28 Dec, 2025 | 11:52 PM
(நெவில் அன்தனி)
இலங்கைக்கு எதிராக திருவனந்தபுரம் க்றீன்பீல்ட் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்ற நான்காவது மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் ஸ்ம்ரித்தி மந்தனா மைல்கல் சாதனை ஒன்றை நிலைநாட்ட இந்தியா 30 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
ஐந்து போட்டிகள் கொண்ட மகளிர் சர்வதேச ரி20 கிரிககெட் தொடரை ஏற்கனவே தனதாக்கிக்கொண்டிருந்த இந்தியா, இந்த வெற்றியுடன் 4 - 0 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறது.
இந்த தொடரில் ஷபாலி வர்மா தொடர்ச்சியான 3ஆவது அரைச் சதத்தைக் குவித்ததுடன் ஸ்மிரித்தி மந்தனா அரைச் சதம் விளாசினார்.
அவர்கள் இருவரும் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி முதலாவது விக்கெட்டில் 92 பந்துகளில் 162 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவுக்கு கணிசமான மொத்த எண்ணிக்கையை பெற உதவினர்.
ஷபாலி வர்மா 46 பந்துகளில் 12 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 79 ஓட்டங்களையும் ஸ்ம்ரித்தி மந்தனா 48 பந்துகளில் 11 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 80 ஓட்டங்களையும் பெற்றனர்.
இதனிடையே இந்தப் போட்டியில் ஸ்மிரித்தி மந்தனா 27ஆவது ஓட்டத்தைப் பெற்றபோது மூவகை சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்தார்.
இந்தியாவின் மிதாலி ராஜ் (10,868 ஓட்டங்கள்), நியூஸிலாந்தின் சுஸி பேட்ஸ் (10,652 ஓட்டங்கள்), சார்லட் எட்வேர்ட்ஸ் (10,273 ஓட்டங்கள்) ஆகியோருக்கு அடுத்ததாக 10,000 சர்வதேச ஓட்டங்களைக் குவித்த வீராங்கனைகள் வரிசையில் நான்காவது இடத்தை மந்தானா பெற்றுக்கொண்டுள்ளார்.
ஷபாலி வர்மாவும் ஸ்ம்ரித்தி மந்தனாவும் ஆட்டம் இழந்த பின்னர் ரிச்சா கோஷ், அணித் தலைவி ஹாமன்ப்ரீத் கோர் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 53 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்திய அணியை மேலும் பலப்படுத்தினர்.
ரிச்சா கோஷ் 16 பந்துகளில் 4 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 40 ஓட்டங்களுடனும் ஹாமன்ப்ரீத் கோர் 10 பந்துகளில் 16 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
222 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 191 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
அணித் தலைவி சமரி அத்தபத்து சிறப்பாக துடுப்பெடுத்தாடி அரைச் சதம் பெற்றதுடன் முதலாவது விக்கெட்டில் ஹசினி பெரேராவுடன் 59 ஓட்டங்களையும் 2ஆவது விக்கெட்டில் இமேஷா துலானியுடன் 57 ஓட்டங்களையும் பகிர்ந்தார்.
ஆனால், இலங்கையின் ஓட்டவேகம் போதுமானதாக அமையவில்லை.
சமரி அத்தபத்து 37 பந்துகளில் 3 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 52 ஓட்டங்களையும் ஹசினி பெரேரா 33 ஓட்டங்களையும் இமேஷா துலானி 29 ஓட்டங்களையும் பெற்றனர்.
அவர்களைவிட ஹர்ஷித்தா சமரவிக்ரம 20 ஓட்டங்களையும் கவிஷா டில்ஹாரி 13 ஓட்டங்களையும் நிலக்ஷிக்கா சில்வா 23 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் வைஷ்ணவி ஷர்மா 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அருந்ததி ரெட்டி 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகி: ஸ்ம்ரித்தி மந்தனா.
https://www.virakesari.lk/article/234619
By
ஏராளன் ·
Archived
This topic is now archived and is closed to further replies.