Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிவபரத்துவ நிச்சயம்

Featured Replies

திருச்சிற்றம்பலம்

ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க

சிவபரத்துவ நிச்சயம்

eswaredback.jpg

சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை

திருநெல்வேலி பேட்டை

முன்னுரை

சகல சமயாதீத சைவ சமயத் தெய்வமாகிய சிவபிரானே சகல தேவாதி தேவனென்று நிர்ணயிக்கும் நூல்கள் தமிழிலும் வடமொழியிலும் பலவுள. அவற்றுட் 'சுலோக பஞ்சகம்' என்பது ஒன்று. நான் அதற்கு வியாக்கியான மொன்றியற்றி அதனைச் 'சுலோகபஞ்சகவிஷயம்' எனப் பெயரிட்டுச் 'சிவநேசன்' அதிபரவர்கள் சகாயத்தாற் புத்தக ரூபமாக அச்சிட்டு வெளிப்படுத்தினேன். சிவபரத்துவ சம்பந்தமாக அந்நூலில் வெளியாயின போக இன்னுஞ் சில வுண்மைகள் என்னுள்ளத்தி லிருந்தன. அவற்றையும் ஒரு நூலியற்றி வெளியிட வேண்டுமென்ற ஆசை எனக்குண்டாயிற்று. அவ்வாசையாற் றோன்றியதே 'சிவபரத்துவ நிச்சயம்' என்னும் இந்நூல். கூடியவரை இ·தொரு முழுநூலாயிருக்க வேண்டுமென்று நான் எண்ணியதால் என் 'விஷயம்' முதலியவற்றில் வெளியான கருத்துக்களும் இதில் வந்திருக்கும்.

முதன் முதலில் நானியற்றிய செய்யுள்நூல் இதுவே. சிவபரத்துவ வுண்மைகள் சைவமக்கட்கு மனப்பாடமாக வேண்டுமென்ற எண்ணமே நான் இச் 'நிச்சய'த்தைச் செய்யுள்நூலாக இயற்றக் காரணமாயிற்று. வைதிக சைவோத்தமர்கள் இந்நூலிற் காணப்படுஞ்சொற்குற்றம் பொருட்குற்றங்களை க்ஷமித்து என்னை ஆதரிக்கும்படி நான் அவர்களைப் பிரார்த்திக்கிறேன். விநாயக வணக்கம் ஆசிரிய வணக்கம் உள்பட இந்நூற் செய்யுட்கள் இருநூற்றுப் பதினைந்து.

  • தொடங்கியவர்

நான் ஒரு தடவை மதுரைக்குப் போயிருந்த காலத்தில் எனக்குப் பாட்டனார் முறையிலுள்ள ஸ்ரீ மாந் மு.ரா. அருணாசலக் கவிராயரவர்களிடம் இந்நூலைச் சுமார் ஒருமாதகாலம் வாசித்துக்காட்டினேன். அப்போது அவர்கள் மிக விருத்தாப்பியரா யிருந்தார்கள். ஆயினும் அவர்கள் இதனைப் பொறுமையோடும் ஆசையோடும் செவிமடுத்துப் பரம சந்தோஷமடைந்து என்னைப் பார்த்துப், 'பேரப் பிள்ளை! உம்முடைய இந்நூலிலுள்ள செய்யுட்கள் மிகவும் நயமுடையனவா யிருக்கின்றன. கருத்துக்களும் உயரியனவே. ஆனால் இந்நூல் தழுவிச்செல்லும் பிரமாணங்களிற் பல வடமொழி வேதாதிகளிலுள்ளன வாகலின் அவை சம்பந்தமாக இதனை நான் மாத்திரம் ஆராய்ந்து அபிப்பிராயஞ் சொல்லுதல் போதாது. இவ்வூரிலுள்ள சிவஸ்ரீ கலியாண சுந்தர பட்டரவர்களை நான் உமக்கு அறிமுகப்படுத்திவைப்பேன். அவர்களிடமும் நீர் இந்நூலை வாசித்துக்காட்டி அபிப்பிராயங்கேளும்' என்று கூறி எனக்கு அப்பட்டரவர்களை அறிமுகப்படுத்தி வைத்தார்கள். சுமார் பதினைந்து நாட்கள் நான் அவர்கள் வீட்டுக்குப்போய் இந்நூல் முழுவதையும் ஒவ்வொரு நாளும் பிற்பகலில் சுமார் இரண்டுமணி நேரம்வரை சிலசில செய்யுட்கள் வீதம் வாசித்துக்காட்டி முடித்தேன். இந்த நூலில் அந்தப்பிரமாண வாக்கியங்களுக்கெல்லாம் செவ்வையாகப் பொருள் கொள்ளப்பட்டிருக்கிறதென்று அவர்களுஞ் சம்மதித்தார்கள். அப்பால் அவ்விரு பெரியார்களிடத்திலும் அபிப்பிராயங்களை எழுத்துமூலம் தரும்படி நான் வேண்டினேன், அவர்களுந் தந்தார்கள். அவை இதிற் சேர்க்கப்பட்டுள்ளன.

அப்பால் என் வீட்டிற்கு அவ்வப்போது வந்த சைவ சித்தாந்த அறிஞர் சிலரிடம் பொழுது போக்காக நான் இந்நூலைக் காட்டினேன். அவர்கள் நூல் முழுவதையும் படித்துப் பார்க்க அவகாசமில்லாதவராய்ப் பார்த்தவரையும் மெச்சி இதனைச் சீக்கிரம் அச்சிடும்படி என்னைத் தூண்டிச் சென்றார்கள். அப்பெரியார்களுள் ஒருவரும் சைவசமயத்தில் ஆர்வமிக்கவரும் காழிக்கல்விக் கழகத்து உறுப்பினரும், காழி வித்வான் சைவத்திருவாளர் ப.அ.முத்துத்தாண்டவராய பிள்ளை அவர்களின் மாணவரும், எனக்கு வெகுபிரியரும் ஆகிய ஸ்ரீமாந்-காழி.பி.அகோரம் பிள்ளையவர்கள் இந்நூலை முழுவதும் படித்து உத்ஸாக மேலிட்டவராய்த் தாமே அரும்பதவுரை யெழுதிப் பிரமாணங்களையுஞ் சேர்த்துச் சிவகிருபையால் அச்சிட்டுப் பூர்த்தி செய்தார்கள். இப்பெரிய சிவபணியைச் செய்த அவர்களுக்கு என் வந்தனம் உரியதாவதுடன், அவர்களுக்குச் சகலவித நன்மைகளையுந் தந்து இத்தகைய சிவபணிகளில் அவர்களுடைய மனம் இடையீடின்றிச் செல்லத் திருவருள் சுரக்குமாறு ஸ்ரீ பார்வதி பதியாகிய ஸ்ரீ பரமசிவனாரின் உபய சரணாரவிந்தங்களையும் நான் பணிகிறேன்.

செங்கற்பட்டு ஸெயிண்ட் கொலம்பா உயர்தர பாடசாலைத் தமிழாசிரியர் வித்வான் பிரம்மஸ்ரீ K.M.வேங்கடராமையா அவர்கள் B.A.,B.O.L., இந்நூலை வெளியிடுதற்கண் பெருமுயற்சி யெடுத்துக் கொண்டார்கள். இவ்வேலையைத் தம் சொந்த வேலைகளில் ஒன்றாகக்கொண்டு அச்சுப்பிழை சரிபார்த்தல் முதலியவற்றையெல்லாம் அவர்களே செய்து உபகரித்தார்கள். அவர்களுக்கு என் வந்தனம் உரியது.

1-12-1939 ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை

நூலாசிரியன்

  • 2 months later...
  • தொடங்கியவர்

பதிப்புரை

சைவ சமயத்தில் முழுமுதற் கடவுளுக்குச் சிவன் சங்கரன் சம்பு ஈசுரன் உருத்திரன் ஈசன் அரன் முதலியனவே சிறந்த பெயர்கள்; உமாசகாயம் நீலகண்டம் சந்திரசேகரம் முதலியனவே சிறந்த அடையாளங்கள்; சர்வஞ்ஞ்தை திருப்தி அநாதிபோதம் முதலியனவே சிறந்த குணங்கள். அந்நாமங்களிலும் அவ்வடையாளங்களிலும் அக்குணங்களிலும் அசூயை கொள்பவன் வைதிக சைவ சமயத்தவனாக மாட்டான். ஒருசைவனும் வைஷ்ணவ கிறிஸ்தவ இசுலாமிய மாதியவற்றுள் ஏதாவதொரு சமயத்தைச் சேர்ந்தவனும் கலந்து சம்பாஷிக்கத் தொடங்குங்கால் கடவுளைப்பற்றிய பிரஸ்தாபங்கள் வருமேல் அவ்விருவரும் தத்தம் மதங்களிற் கடவுளுக்கு வழங்கப்படுஞ் சிறப்புப் பெயரை வழங்காமல் கடவுள் ஆண்டவன் கருத்தன் முதலிய பொதுப்பெயர்களை வழங்கலாம். ஆனால் இரண்டு சைவர் தம்முட் கலந்து பேசுங்கால் தெய்வப் பிரஸ்தாபம் வருமிடங்களிலெல்லாம் தம் சமயத்திற் கடவுளுக்குச் சிறப்பாக வழங்கப்படுஞ் சிவாதி நாமங்களையே வழங்கவேண்டும். ஈசுர நாமங் கொண்டே முன்னுள்ள நாத்திகரும் இந்நாட்டில் விவகரித்து வந்துளார். இப்போதும் அந்நாமப் பிரஸ்தாபம் எங்குமுண்டு. சைவம் அப்போது எவ்வளவு வியாபகமுடையதாயிருந்தது, இப்போதும் எவ்வளவு வியாபகமுடையதாயிருக்கிறது என்பதை அவ்வீசுரநாம வியாபகமொன்றாலேயே யறியலாம்.

'சிவபரத்துவ நிச்சயம்' என்னும் இந்நூல் அத்தகைய சிவபரம்பொருளின் பிரபாவங்களைச் சவிஸ்தாரமாய் எடுத்துவிளக்குவது. எனக்குச் சிறந்த நேசராகிய திருநெல்வேலிப்பேட்டை ஸ்ரீமாந். ஆ.ஈசுரமூர்த்திப்பிள்ளையவர்கள் இந்நூலையாக்கிப் பலரிடமுங்காட்டியது போல் என்னிடமுங் காட்டினார்கள். நான் இதனைப் படித்தறிந்ததும் அவர்களுக்குள்ள சைவசாத்திர ஆராய்ச்சியையும் சைவசமயப்பற்றையும் என்னால் அளவிட முடியவில்லை. இதையச்சிட்டுக் கொடுக்க யாரையாவது தேடியதுண்டாவென்று நான் அவர்களைக் கேட்டேன். சைவாபிமானமுள்ள தனவந்தர் யாரையுந் தமக்குத் தெரியாதென்று அவர்கள் சொன்னார்கள். நானே உரையெழுதிப் பிரமாணங்களையுந் திரட்டிச் சேர்த்து இதனை அச்சிடுகிறேன். என்னிடங் கொடுங்கள் என்றேன் நான். அவர்களும் கொடுத்து விட்டார்கள். நான் அரும்பதவுரை யியற்றிப் பிரமாணங்களையுந் திரட்டிச் சேர்த்து இதனை அச்சிட்டுப் பூர்த்தி செய்தேன். இவ்வுரை முதலியவற்றுட் பிழைகளுளவேல் இந்நூலாசிரியரவர்களும் மற்றை அறிஞர்களும் பொறுத்தருள்க.

ஒவ்வொரு செய்யுட்குங் கிடைத்த பிரமாணங்கள் அச்செய்யுளடியில் வருகின்றன. அவை அச்செய்யுளிலுள்ள பல பகுதிகளுக்கும் பிரமாணங்களாக விருக்கும். ஒவ்வொரு பகுதிக்குமுரிய பிரமாணங்களை அவற்றிலிருந்து பிரித்தெடுத்துக்கொள்ளும்படி வாசகர்களை நான் வேண்டுகிறேன். பூர்வபட்சத்துக்குரிய பிரமாணங்களும் அங்குண்டு. வேண்டாதனபோலிருக்கும் பிரமாணங்களை ஒதுக்கிவிடலாம்.

இந்நூல் இவ்வழகான புத்தகவடிவில் மிகச்சுருங்கிய காலத்தில் அச்சாகிவருதற்குத் துணை புரிந்தவர்கள் என்னுடைய மாணாக்கரும் முன்னுரையிற் கண்டவருமாகிய பிரம்மஸ்ரீ K.M.வேங்கடராமய்யா அவர்கள் B.A.,B.O.L., ஆவார்கள். அவர்கள் செய்த அந்நன்றி மறக்கற்பாலதன்று.

6-1-1940 காழி.P.அகோரம் பிள்ளை

பதிப்பாசிரியன்.

  • தொடங்கியவர்

அபிபிராயங்கள்

வேத சிவாகமாதி சகல சாஸ்திர பண்டிதோத்தமராகிய

மதுரை

சிவஸ்ரீ.ம.கல்யாணசுந்தர பட்டரவர்கள்

தந்தது

ஆசிரியப்பா

தென்றமிழ் நாடு செய்தவப் பயனென

வந்திடு நெல்லை வளம்பதிக் கணித்தாம்

பேட்டை யென்னும் பெருநக ரதனுள்

தாவில் பரம்பரைச் சைவ வேளாண்

மரபில் வந்தோன் மதிநலம் வாய்ந்தோன்

ஈசுர மூர்த்தி யெனும்பெய ருடையோன்

செய்சிவ பரத்துவ நிச்சயச் செழுநூல்

எவரும் பொருளை யெளிதிற் கண்டு

மகிழத் தக்க வகையில் விளங்கி

யருமறை யாகம புராண மாதி

சாத்திர மனைத்தொடுஞ் சமஞ்சஸ மாகி

வியனறி வுடையோர் வியக்க வுளதே.

13-6-1937

  • தொடங்கியவர்

திருக்குறள் தெளிபொருள் வசனம், பரங்கிரிப் பிரபந்தத்திரட்டு முதலிய பலநூல்களுகாசிரியரும் மதுரைத் தமிழ்ச் சங்க வித்துவானும்

ஆகிய

சைவத்திருவாளர் மு.ரா.அருணாசலக் கவிராயரவர்கள்

தந்தது

இந்நூலாசிரியர் தமிழ் வித்துவான் ஸ்ரீ த.ஆறுமுக நயினார் பிள்ளையவர்களுக்குச் சீமந்த புத்திரராய்ப் பிறந்து சிறுவயதிலே ஆங்கிலமுந் தமிழுங் கற்று......... உபாத்தியாயரா யிருக்கின்றனர். அப்படியிருக்கும்போது தமிழ்க் கல்வியை.........நிரம்பக் கற்கவேண்டுமென்று நினைத்துக் கலியுக வரதராகிய முருகக்கடவுள் திருவருளால் நூலாராய்ச்சி செய்தனர். (அதனால்) பரத்துவ நிச்சயம் பிறப்பிறப்பில்லாத பரம்பொருளாகிய சிவனொருவர்க்கே கூறவேண்டு மென்று தெரிந்தனர்........மேற்கூறிய உண்மையைத் தெளிந்து 'தாமின்புறுவ துலகின் புறக்கண்டு' என்னுஞ் சுருதிக் கிணங்க இலை மறை காய் போற் கிடந்த விஷயங்களை யெல்லாம் வெள்ளிடை மலைபோல் விளங்குமாறு தர்க்க சுத்தியாகச் 'சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல்' என்ற அழகுடனே இருநூற்றுப்பதினைந்து செய்யுளால் ஒரு சிறு நூல் செய்து.....மதுரைக்கு வந்து என்னிடம் ஒவ்வொரு பாடலையும் நேரிலே வாசித்துக் காட்டினர். பாடல்களைக் கேட்குந்தோறும்.......அதி மாதுரியமாக இருந்ததைக் கண்டு மிகுதியுஞ் சந்தோஷமுற்றேன். பற்பல சமயத்தாரும் இதற்கொரு மறுப்பெழுத வேண்டுமென்று துணிந்தால் அவருக்கு வேதாகமங்களிற் பிரமாணங் கிடைக்கமாட்டாது.............ஆதலால் அவர் கருத்து நிரம்பாததாய் முடியும். தமிழ்ச் செய்யுளில் பரத்துவ நிச்சயங் கூறும் இந்த நூல் போல ஒரு நூல் இருக்கிறதாக நான் கேட்டதுமில்லை, கண்டதுமில்லை. பரத்துவ நிச்சயந் தெரியப்புகுவார் அரிய பெரிய நூல்களைப் படித்துப் பெருங்காலம் போக்காமல் இந்த சிறு நூலை ஒரு முறை படித்தாலே ஐயமறத் தெளிவாய் விளங்கும். தமிழுலகத்திற்கு இவ்வுதவி புரிந்த நூலாசிரியருக்கு நாமெல்லாம் என்றும் நன்றியறிதல் பாராட்டுங் கடப்பாடுடையோம்.

16-6-1937

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.