Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலையின் நாயகன் -கண்மணி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலையின் நாயகன் -கண்மணி

நாம் தொடர்ந்து ஒரு செய்தியை வலியுறுத்திக் கொண்டே இருக்கிறோம். அது நமக்கான தேவை நிறைவுபெறும்வரை போராடிக் கொண்டே இருப்பது. போராட்டம் ஒன்றுமட்டும்தான் நமது வாழ்வை, நமது எண்ணத்தை, நமது பண்பாட்டை, கலாச்சாரத்தை, பல பழக்க வழக்கங்களை மாற்றி அமைக்கவல்லதாய் இருக்கிறது. ஆகவே இடைவிடா போராட்டத்தின் இறுதிநிலையில் நாம் நின்றுக் கொண்டிருக்கிறோம். எச்சூழல் வந்தாலும் அதை தகர்த்தெறியும் மனதிடமும், அதை கையாளும் அறிவுத்திறனும் கொண்டவர்களாய் களமாட வேண்டிய கட்டாயத்தில் நமது போராட்டத்தின் வடிவம் மாற்றப்பட்டிருக்கிறது. துரோகங்களால் சிதைக்கப்பட்ட நமது போராட்டத்தின் படிமம், இப்போது மறுஉரு எடுத்து வானுக்கும், பூமிக்கும் உயர்ந்து நின்றுக் கொண்டிருக்கிறது. உலகமெல்லாம் இருக்கும் எமது உறவுகள் வாழ்வியல் கோட்பாடுகளை கட்டியமைப்பதற்காக, சிதைவுப்பட்டிருந்த நமது இனத்தின் வாழ்வை வடிவமைப்பதற்காக களம் ஏகி இருக்கிறார்கள்.

சிங்கள-பௌத்த பேரினவாதத்தின் கொடும் கரங்கள் கடந்த 60 ஆண்டுகளாக நம்மை சிதறடித்தப்போது, சீறி எழுந்த எமது தேசிய தலைவர், நமது போராட்டத்தின் வடிவத்தை தமது எண்ணத்திற்கு ஏற்ப அல்லாமல் அதை தமது எதிர்கால தலைமுறையின் வாழ்வியல் மகிழ்வுக்காக மாற்றி அமைத்தார். படிப்படியாக எமது மக்களின் உளவியலை செதுக்கிய எமது தேசிய தலைவர், போராட்டத்தின் அவசியத்தை எமது மக்களின் குருதியில் பாய்ச்சினார். எமது விடுதலை என்பது உயிரைவிட மேலானது என்பதை ஒவ்வொரு நொடியும் அவர் கற்று நமக்கு கற்றுக்கொடுத்தார். ஆகவே, நமது போராட்டத்தின் தன்மைகள் எத்தனை இடர் வந்தாலும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. எவ்வளவு துரோகங்கள் நிகழ்ந்தாலும் அத்தடைகளைத் தாண்டி முன்னோக்கி நடந்துக் கொண்டே இருக்கிறது. ஒன்று, நமக்குத் தெளிவாக புரிகிறது. அது, மீண்டும் மீண்டுமாய் நாம் போராடிக் கொண்டே இருக்க வேண்டும்.

இந்த போராட்டத்தின் இடையே மனத்தோய்வோ, அல்லது மனதில் அழுத்தமோ இல்லையெனில் தோல்வி பயமோ நமக்கு சிறிதும் வரக்கூடாது. நாம் முள்ளிவாய்க்காலில் முடக்கப்பட்ட நாளில்தான், நமக்கான அடுத்தக்கட்ட நகர்வு திட்டமிடப்பட்டது. இயற்கை எப்போதுமே தம்மை வலுப்படுத்திக் கொண்டு, தான் இயங்கிக் கொண்டே இருக்கும். நாம் இயற்கையாகவே இணைந்து போனவர்கள். ஆகவே, நொடிக்கு நொடி நம்மை நாம் தயாரித்துக் கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம். பன்னாட்டுப் படைகளின் கொடும் கரங்கள் நம்மை சிதறடித்து, சின்னாபின்னமாக்கி விட்டது. எமது உறவுகள் ஆயிரக்கணக்கில் மண்ணில் புதைக்கப்பட்டார்கள். பல ஆயிரம் பேர் உடல் உறுப்புகளை இழந்து, பறிதவிக்கிறார்கள். பன்னாட்டு படைகளின் ஆதிக்க ஆயுதங்கள் நம்மை இறுக்கி ஒடுக்கிவிட்டது என்றெல்லாம் கற்பனை செய்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த கற்பனைகளை தூள்தூளாக்கி நம்முடைய கனவான தமிழீழத்தை கட்டியமைக்க வேண்டிய பெரும் பொறுப்பு நாம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

வரலாற்றில் பல நிகழ்வுகள் தோல்விகளிலிருந்தே தொடங்குவதை அறிகிறோம். எந்த நிலையிலும் தோல்வி என்பது நிரந்தரமாய் தங்கிவிடும் ஒரு சுமை அல்ல. தோல்வி என்பது நம்மை அழித்து, கொன்றொழிக்கும் கால நகர்வு அல்ல. அது, நம்மை தயார்படுத்துவதற்கு நம்மை நாம் மேலும் வலிமைப்படுத்திக் கொள்வதற்கு நமக்கு அளிக்கப்படும் வரம். தோல்வி என்பது நம்மை மேலும் மேலுமாய் பொலிவூட்டிக்கொள்ள வழக்கப்படும் ஒரு வரப்பிரசாதம். தோல்வி என்பது நமது மனங்களை பக்குவப்படுத்தும் ஒரு கொடை. ஆகவே, தோல்விகளிலிருந்து கற்றப் பாடமே மாபெரும் வெற்றிகளை இந்த மண்ணிலே செதுக்கியிருக்கிறது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. நாம் அடைந்த தோல்வி என்பது வெற்றியின் வேகத்தை அதிகரிப்பதற்காக நமக்கு அளிக்கப்பட்ட ஒரு பட்டயம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். துரோகத்தின் அடையாளங்கள் நாம் தெரிந்து கொள்வதற்கு இந்த தோல்வியே நமக்கு துணைபுரியும். நண்பன் என்பவன் யார் என்பதை அறிந்து கொள்வதற்கு தோல்விதான் பெரும் உதவிப்புரியும். சிரிக்கும்போது நம்மோடு சேர்ந்து சிரிப்பவர்கள் எல்லாம் நண்பர்கள் அல்ல. மாறாக, நாம் அழும்போது நம்மோடு சேர்ந்து அழுவதற்கு எத்தனைபேர் உடன் வருகிறார்கள் என்பதைத்தான் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

நாம் அழும் காலத்தில் நம்மோடு சேர்ந்து அழுபவர்களே, நம் உடன் பிறந்தவர்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே இப்போது நமக்கு புரிகிறது, யார் நம்மின் உணர்வுகளை புரிந்து கொண்டவர்கள், யார் நமது ஆதங்கத்தை சரியாக அறிந்து கொண்டவர்கள், யார் யாருக்கெல்லாம் நமது தேவைகள் புரிகிறது என்பது. இந்தியா ஒரு துரோகத்தின் அடையாளமாக நமது விடுதலையை ஒடுக்கிப்போட்ட ஒடுக்குமுறை ஆற்றலாக பெரும் சதி பின்னனியின் பொருளாக நம் முன்னால் விஸ்வரூபம் எடுத்து நின்றுக் கொண்டிருக்கிறது. இந்தியாவிற்கு ஒரே ஒரு செய்திதான் முன்னிருக்கிறது. இந்தியா நமது விடுதலைப் போராட்டத்தை ஒடுக்குவதற்கு தேடி எடுத்த ஒரே காரணம், ராஜீவ்காந்தி சாவு தான். ஆனால் இயற்கையில் ராஜீவ்காந்தி என்பவரும் நம் பக்கத்தில் இருக்கும் ராஜாராமுக்கும் உயிரில் பெரும் வேறுபாடு இல்லை.

ஆனால் ராஜீவ்காந்தி என்ற ஒரு தனிநபரின் உயிருக்காக, ஆயிரக்கணக்கான உயிர்களை நம் களபலியாக்கினோம். ராஜீவ்காந்தி என்கிற ஒரு மனிதனுக்காக, நாம் பல்லாயிரம் இளைஞர்களை பலி கொடுத்தோம். நமது உறுப்புகளை இழந்து, உரிமைகளை இழந்து, ஒடுக்கப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டோம். இவர்களுக்கு ராஜீவின் உயிரைவிட நமது உயிர் மிக சாதாரணமாக ஆகிவிட்டது. அந்த ஒரே உயிருக்காக, நாம் உயிருக்கும் மேலாக நினைத்த நமது விடுதலை ஒடுக்கப்பட்டது. நாம் உயிரூட்டி வளர்த்த போராட்டம் சிதைக்கப்பட்டது. நாம் குருதியால் கட்டி எழுப்பிய கோட்டை உடைத்தெறியப்பட்டது. இந்த நேரத்தில் நாம் உளமார களத்திற்கு வரவேண்டிய காரணத்தை புரிந்து கொண்டிருப்போம். நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும்ஒரு காரணத்தை புரிந்து கொண்டிருப்போம். அது, தமிழர்களுக்கு பார்ப்பனியம் எப்போதுமே துணைக்கு வராது என்பதுதான். பார்ப்பனிய பாசிச இந்திய அரசு, தமிழர்களின் வாழ்வை சூறையாடி, சுவைத்து மகிழ்ந்தது. தமிழர்களின் உயிர், ராஜீவின் உயிருக்கு கீழ்நிலைக்கு உகந்ததாக வர்ணிக்கப்பட்டது.

ஆகவே, நாம் துரோகத்தின் அடையாளங்களை கண்டு கொள்வதற்கு இந்த நமது தோல்வி மிகத் தெளிவாக கற்றுத் தருகிறது. நாம் தோற்பதிலிருந்துதான் பாடம் கற்கிறோம். இந்தியாவில் எத்தனையோ அடக்குமுறைகள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. எத்தனையோ தவறுகள் தொடர்கிறது. ஆனால் அத்தனையும் துடைத்தெறியப்பட்டு நம் முன்னால் அவைகளுக்கு நியாயம் கற்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் நம் நியாயமானப் போராட்டம் நம் கண்ணெதிரே சிதறடிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, நமது போராட்டத்தை மறுவடிவம் செய்ய நாம் தயாராக இருக்க வேண்டும். அதற்கு நம் முன்னால் இருக்கும் தடைகளை கட்டாயமாக புரிந்து கொள்ளவே வேண்டும். அந்த தடைகளை உடைத்தெறிய நாம், நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இதில் விருப்பு, வெறுப்பு ஏதும் இல்லை. நமக்குள் கட்சி அரசியல் நம்மை மிகப்பெரிய பிளவு ஆற்றலாக ஓங்கி வளர்ந்திருக்கிறது. நமக்குள் சாதி அரசியல், நம்மை சிதைவுப்பட்ட நிலைக்கு தள்ளிக் கொண்டு போகிறது.

ஆகவே, தமிழ் சாதி என்கின்ற ஒரே அடையாளம் நம்முடைய உளவியலாக அமைய வேண்டும். நாம் எந்த சாதியை சார்ந்தவர்கள், எந்த மதத்தைச் சார்ந்தவர்கள், எந்த அரசியல் இயக்கத்தை சார்ந்தவர்கள் என்பதை பின் தள்ளி, நமக்கான ஒரு சாதி இருக்கிறது, நமக்கான ஒரு அடையாளம் இருக்கிறது, நாம் தமிழ் சாதி. இதை தவிர்த்து நமக்குள் எவ்வித பிளவும் இல்லை. இதை தவிர்த்து நமக்குள் எவ்வித வேறுபாடும் இல்லை. ஒன்றிணைந்திருக்கிறோம். உலகெங்கும் வாழும் ஒட்டுமொத்த தமிழினமும் ஒரே சாதி அடையாளத்தோடு உருவாகி, நாம் பெரும் உருவமாய் காட்சி அளிக்க உறுதி செய்வோம். நமக்குள் பிளவுகளை சமன் செய்வோம். நாம் நாமாக இருப்போம். நமது உறவுகளை காப்பதற்காக நம்முடைய களப்பணி தொடர உறுதி எடுப்போம்.

நமது தேசிய தலைவர் சொல்வதைப்போல, நாம் தொடர்ந்து வாழப்போவது இல்லை. ஆனால் நமது நாடு தொடர்ந்து இருக்கப்போகிறது. நமது மொழி தொடர்ந்து பேசப்போகிறது. ஆகவே, நமது நாட்டையும், நமது மொழியையும் காப்பதற்கான கட்டாய பணியாக நாம், நமக்கான பிளவுகளை சரி செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறோம். உண்மையாகவே நாம் நமது தேசிய தலைவரை நேசித்தோம் என்றால், உள்ளபடியே நாம் அவரை தலைவராக ஏற்றுக் கொள்கிறோம் என்றால், நிச்சயமாக நமக்குள் பிளவுகள் இருக்கக்கூடாது. நமக்குள் சாதி அடையாளங்கள் புகக்கூடாது. நமக்குள் ஒற்றுமை என்கின்ற ஒரே தத்துவம் மேலோங்கி இருக்க வேண்டும். இதைத்தான் நமது தேசிய தலைவர் விரும்புகிறார். உலகமெல்லாம் எமது இனம் தமிழர் என்கின்ற ஒரே அடையாளத்தோடு வாழ வேண்டும் என்பதுதான் அவரின் உள்ளார்ந்த விருப்பமாக இருக்கிறது.

நமது விருப்பத்திற்காக அவர் தம்மை அர்ப்பணித்தார். நம்முடைய விடுதலைக்காக அவர் களமாடினார். நமது விருப்பத்திற்காக அவர் தம்மையே முழுமையாக தந்தார். ஆனால் அவருடைய விருப்பதின்படி நாம் வாழாததோடு, நம்முடைய செயல் நிச்சயமாக தேசிய தலைவரின் வழிநடப்பவன் என்கின்ற நிலையிலிருந்து மாறிவிடும். ஆகவே நாம் தொடர்ந்து போராடுவோம். நம்மை உலகமெல்லாம் ஒன்றிணைந்து எதிர்த்தபோதும் கூட இன்று, இந்த நிமிடம்வரை நமக்காக ஓய்வற்று சிந்திக்கிறார். நம்முடைய விடுதலையை பெற்றுத்தருவதற்காக இடைவிடாது திட்டம் வரைந்து கொண்டிருக்கிறார். அவருக்கு நமது நன்றியின் காணிக்கையாக, நமது ஒற்றுமையை படைப்போம்.

கிறித்துவ மறைநூலான விவிலியத்தில் கோலியத்தை தாவீது என்ற சிறுவன் கவன் கல்லால் வீழ்த்திய வரலாற்று சம்பவம் நம் முன்னால் இருக்கிறது. வல்லரசுகள் தமது ஆதிக்கப்பற்களை வெளியே நீட்டி நம்மை அச்சுறுத்த நினைக்கும்போது, தாவீதைபோல் நம் இனத்தைக்காக்க கரம் நீட்டிய ஒரு தேசிய தலைவனை நாம் பெற்றிருக்கிறோம். அப்படிப்பட்ட ஒரு உன்னதமிக்க அந்த தலைவனின் மனம் எந்தநிலையிலும் கவலை கொள்ளாமல் இருக்க நாம் தொடர்ந்து பணியாற்றுவோம். யூத மக்களை மீட்ட தாவீது இன்று தமிழர்களை மீட்ட தேசிய தலைவனாக நம்முன் தோன்றியிருக்கிறார். அவர் தலைமையின் கீழ் நமது விடுதலை உறுதி செய்யப்பட்டு விட்டது. அது உடைத்தெறிய இந்த உலகில் எந்த ஆற்றலுக்கும் திறன் கிடையாது. வெற்றிக் கொள்வோம். தமிழீழம் அமையும்போது மகிழ்வோடு கட்டியணைப்போம். மகிழ்ந்து களிகூறுவோம். விடுதலையின் நாயகன் நம்மோடு இருக்கிறார். கலங்க வேண்டாம். நிச்சயம் தமிழீழம் நமது கால்பட்டு சிலிர்க்கும். அப்போது நமக்குள் ஏற்படும் பூரிப்பு இந்த உலகையே வியக்கச் செய்யும்.

http://meenakam.com/?p=15633

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.