Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த் திரைத்துறை தோழர்களே...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் திரைத்துறை தோழர்களே...

993w9l.jpg

நான் இந்தப்படம் எடுப்பதினால் உலகம் மாறிவிடுமென்று எப்போதும் சொன்னது இல்லை, அதற்காகவும் படம் எடுக்கவில்லை. ஷிண்டலர்’ஸ் லிஸ்ட் எடுத்ததுக்கூட அந்தப் படுகொலையில் உயிரிழுந்தவர்களின் நினைவுகளைப் பற்றிய அவமானகரமான எண்ணத்தை தோற்றுவிற்பதற்கே. அந்தப் படத்தை நான் எடுத்ததிற்கு காரணம் அந்தக்கதை சொல்லப்படவேண்டும் என்பதினால் தான். பிற்காலத்தில் என் மகன் என்ன நடந்தது என்று தெரிந்துக்கொள்ள வேண்டும். அதற்காகவேனும் இதை நான் பதிவுச்செய்வது மிக முக்கியம் என்று கருதுகிறேன். - ஸ்டீபன் ஸ்பீல்பர்க்.

ஸ்டீபன் ஸ்பீல்பர்க் உலகப்புகழ்பெற்ற இயக்குனர். ஜாஸ், ஜுராசிக் பார்க், ஈ.டி, ஷிண்டல்ர்’ஸ் லிஸ்ட் போன்ற பிரபலப்படங்களை எடுத்தவர். இதில் ’ஷிண்டல்ர்’ஸ் லிஸ்ட்’ இரண்டாம் உலகப் போரின்போது இட்லரின் நாஜிக்கள் யூதர்களைப் படுகொலைச் செய்ததைப்பற்றி விவரிக்கும் படம்.

1972-இல் ஜெர்மனிய நகரமான மூனிச்சில் நடந்த ஒலிப்பிக்கில் ’கறுப்பு செப்டம்பர்’ என்று அழைக்கப்பட்ட பாலஸ்த்தீனிய போராளிக்குழுவினர், பதினோறு இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துக்கொண்டு, இஸ்ரேலோடு பேரம் பேசினார்கள். இஸ்ரேல் இனங்கவில்லை. பதினோறு இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களின் மரணத்தில் முடிந்தது அந்தச் சம்பவம். உலகமே அதிர்ந்தது.

அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இஸ்ரேலிய அரசாங்கம் 1979 காலகட்டத்தில் தன்னுடைய உளவு நிறுவனமான ’மொஸாட்டை’ பயன்படுத்தி ’கறுப்பு செப்டம்பர்’ உறுப்பினர்களை தேடித்தேடிக் கொன்றது. இந்தப் பழிக்குப்பழி வாங்கிய ரகசியச் சம்பவத்தை உலகுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டியது 2005-ஆம் ஆண்டு ஸ்டீபன் ஸ்பீல்பர்க் எடுத்த ’மூனிச்’ திரைப்படம்.

இந்த இரண்டு படங்களிலும் ஒரு ஒற்றுமை இருக்கிறது, இரண்டு படங்களும் ’யூதர்’களைப் பற்றியது. யூதர்களுக்கு மற்ற இனம் இழைத்த அநீதியையும், அதற்கு அவர்களின் எதிர்வினையையும் விவரிக்கின்றன. இதனை ஸ்டீபன் ஸ்பீல்பர்க் படமாக ஏன் எடுக்க வேண்டும்? காரணம் மிக எளிமையானது. மிக ஆதாரமானதும் கூட. ஏனெனில் ஸ்டீபன் ஸ்பீல்பர்க் ஒரு யூதர். அமெரிக்காவில் பிறந்தவர். அங்கேதான் தொழில் செய்பவர். ஆனாலும் தான் ஒரு யூதன் என்ற அடையாளத்தை எப்போதும் துறக்காதவர். வசூல் மன்னனாக இருந்தாலும், தன் இனத்திற்கு தான் செய்யவேண்டிய கடமையாக தன் இனத்தின் துயரவரலாற்றை படைப்பில் பதிவுசெய்கிறார்.

இந்த இரண்டு படங்களும் மிக முக்கிய மானவை, ஏனெனில் இதில் ஸ்டீபன் ஸ்பீல்பர்க்கின் செய்தி இருக்கிறது. அதாவது ’ஷிண்டலர்’ஸ் லிஸ்ட்’ படத்தின் மூலம் யூத இனத்திற்கு உலகம் இழைத்த அநீதியை அந்த இனம் மறந்துவிடக்கூடாது என்பது, ’மூனிச்’படம் மூலம் தன் இனத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு பழிவாங்கியே தீருவோம் என்பதையும் உலகத்திற்கும் சொல்லாமல் சொல்லுகிறார். இதை ஒரு சமூக அக்கறையுள்ள படைப்பாளியாகவோ அல்லது ஒரு இனத்தின் அங்கத்தினாகவோ அவர் செய்திருக்கலாம். செய்தார் என்பது கவனிக்கத்தக்கது.

‘ஒலிவர் ஸ்டோன்’என்ற புகழ்ப்பெற்ற இயக்குனரைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ’பிளாட் டூன்’, ’வால் ஸ்டீட்’, ’ஒஊஓ’, ’ஹெவன் அண்ட் எர்த்’, அலெக்ஸ்சாண்டர்’ போன்ற படங்களை எடுத்தவர்.

இவர் வியட்நாம் போரைப் பற்றி மூன்று படங்களை எடுத்திருக்கிறார். ’பிளாட்டூன்’, ’பார்ன் இன் ஃபோர்த் ஆஃப் ஜூலை’ மற்றும் ’ஹெவன் அண்ட் எர்த்’. இந்த மூன்று படங்களும் வியட்நாம் போரின் அவலத்தை வெவ்வேறு தளத்திலிருந்தும் மாறுப்பட்ட பார்வையிலும் சொல்லுபவை. ’பிளாட்டூன்’ மற்றும் ’பார்ன் இன் ஃபோர்த் ஆஃப் ஜூலை’ படங்கள் ஒரு இராணுவ வீரனின் பார்வையில் சொல்லப்படுகின்றன. ’ஹெவன் அண்ட் எர்த்’ வியட்நாம் கிராமத்தில் வாழ்ந்த ’ஃஞு ஃதூ ஏச்தூண்டூடிணீ’ என்கிற பெண்ணின் போர் அனுபவங் களையும் அதனால் அவள் வாழ்க்கையடைந்த சீரழிவையும் சொல்லு கிறது.

’ஒலிவர் ஸ்டோன்’ அமெரிக்காவில் பிறந்தவர். யூதத் தந்தைக்கும் ஃபிரன்ச் தாயுக்கும் பிறந்தவர். அவருக்கு வியட்நாமைப்பற்றி படம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? அல்லது அவருக்கு அதிலென்ன அக்கறை? காரணம் இருக்கிறது.

அமெரிக்க வியட்நாம் போர் நவம்பர் 1,1955-லிருந்து ஏப்ரல் 30, 1975 வரை நடந்தது. ’ஒலிவர் ஸ்டோன்’ 1967,68 ஆண்டுகளில் ஒரு அமெரிக்கப் போர்வீரனாக வியட்நாம் போருக்கு அனுப்பப் பட்டார். அந்த போர்க்கால அனுபவமும், அதன் பேரழிவுகளும்தான் பிற்காலத்தில் அவரை வியட்நாம் போரினைப்பற்றி படம் எடுக்கத்தூண்டியன.

அந்தப் போரில் அமெரிக்க படுதோல்வியைச் சந்தித்து வெளியேறியது, இன்று வரை அதை பெரும் அவமானமாக அமெரிக்கா கருதுகிறது. ஒரு தேசமே அவமானமாக கருதும் போரினைப்பற்றி அந்நாட்டு குடிமகனே படமெடுப் பதற்கு இவைதான் காரணங்களாக இருக்க முடியும், ஒன்று தைரியம். மற்றொன்று, மனிதம் மீதிருக்கும் அளவுகடந்த அன்பு. அந்த அழிவுப்போரில் கலந்துக் கொண் டவன் என்பதனாலேயே அதைப்பற்றி படமெடுக்க துணிகிறான் இந்தப் படைப்பாளி. அதைத் தன் தார்மீகக் கடமையாகவும் கருதுகிறான். இப்படி எண்ணிலடங்காப் படைப்பாளிகளைப் பற்றி குறிப்பிட முடியும்.

பல நாட்டுப் படைப் பாளிகள் தங்களின் நாட்டின் பிரச்சினைகளை தன் படைப்புகளில் பதிவுசெய்திருக்கிறார்கள். அதை உலக கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். இங்கே இந்த இரண்டு இயக்குனர்கள் உதாரணமாகத்தான் சொல்லப்பட்டி ருக்கிறார்கள். அதுவும் அவர்கள் இரண்டுபேரும் அமெரிக்கர்கள். பெரும் வணிகமயமான ’ஹாலி வுட்டைச்’ சார்ந்தவர்கள். உங்க ளுக்குத் தெரியும் அமெரிக்காவின் போர் வெறியும் அதன் வியாபார அரசியலும். உலகில் எங்கு போர் நடந்தாலும் அதில் அமெரிக்காவின் பங்கு எத்தகையது என்பது நாம் அறிந்ததே. அப்படி இருக்க, அதன் மடியில் உட்கார்ந்துக்கொண்டும் மனிதம் பேசுவதும், அழிவைச்சுட்டி காட்டுவதும், தன்னை வெளிப்படுத்திக்கொள்வதும் ஒரு படைப்பாளியால், மனிதனால் முடியும் என்பதற்கு இவர்கள் உதாரணம்.

ஆனால் இங்கே நம் படைப்பாளிகள்? எத்தனை படைப்புகளில் நமது சமுகத்தை பிரதிபலித்திருக்கிறார்கள்? எத்தனை படைப்புகளில் மனிதத்தை வெளிப் படுத்திருக்கிறார்கள்?.. படைப்புகளில் வேண்டாம், தங்களின் மதிப்பீடுகளிலாவது வெளிப் படுத்திருக்கிறார்களா? செயல்பாடுகளில்? ஒன்றும் சொல்லிக் கொள்ளும் விதமாக இல்லை. இங்கே நமக்கு கருத்துகளே கிடையாது, அப்புறம் எங்கே செயல்பாடு, பதிவு எல்லாம்.?

அரை நூற்றாண்டு கால ஈழப்பிரச்சனை கண்முன்னே கண்டும், அதை பதிவுசெய்யாத வர்கள் நாம். முப்பது ஆண்டுகால போராட்ட வரலாற்றையும் நம் திரைப்படங்களில் பதிவு செய்யக்கூடிய தகுதியோ, தைரியமோ அற்றவர்கள் நம் திரைப் படத்துறையினர். ஈழம் வேண்டாம்.. இனம் வேண்டாம்.. மனிதம்? சமூகம், ஏழ்மை, வாழ்க்கை இதை எதைப்பற்றியாவது குறிப்பிடும் படியாக நாம் திரைப்படம் எடுத்திருக்கிறோமா?

எழுத்தாளர் சுஜாதா ஒருமுறை குறிப்பிட்டதுண்டு. அவரை சந்தித்த ஒரு வெளிநாட்டு அறிஞர் கேட்டாராம், ’உங்கள் நாட்டில் பிரச்சனைகளே இல்லை போலிருக்கிறது, உங்கள் திரைப்படங்கள் காதலைத்தான் எப்போதும் பேசுகின்றன’ என்று. அதற்கு என்ன பதில் சொல்லுவது என்று புரியாமல் தவித்ததாக சுஜாதா குறிப்பிட்டிருக்கிறார். அவர் மட்டுமில்லை, அந்த கேள்விக்கு பதில் சொல்ல வேண்டியவர்கள் அநேகம் பேர் உண்டு இங்கே.

மத்திய கிழக்கில் ஒரு நாடு துண்டாடப்பட்டதிற்கு ஒட்டுமொத்த இனமே இன்றுவரை போராடி வருகிறது. நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் இங்கே நம் இனம், நாம் பேசும் அதே மொழிபேசும் மக்கள் முற்றிலுமாக அழிக்கப்படுகிறார்கள் கண்ணுக்கெட்டிய தூரத்தில், காது கேட்கும் தூரத்தில்.. நாம் என்ன செய்துவிட்டோம்? அலறல் சத்தம் கேட்கும்போதெல்லாம் ஓடிவந்து எட்டிப்பார்த்திருக்கிறோம், குரல் கூட கொடுத்திருக்கிறோம். போதுமா தோழர்களே? மனிதனாக நம் கடமையை செய்துவிட்டோம் என்று வேண்டுமானால் திருப்திப்பட்டுக் கொள்ளலாம். படைப்பாளியாய்? நம் படைப்புகளில் அதை பதிவுச் செய்ய வேண்டாமா? இந்த அவலத்தை உலகிற்கு சொல்ல வேண்டாமா? நம் மகன்கள் தெரிந்துக்கொள்ள அதைப் பதிவு செய்வது நம் கடமை அல்லவா.

இங்கே சில படைப்பாளிகள் இருக்கிறார்கள். உணர்வோடும் தகுதியோடும். ஆனால் அவர்களால் தமிழ்ப்படங்களில் எதையும் சுதந்திரமாகப் பதிவுசெய்துவிட முடியாது. ஏனெனில் கோலிவுட் என்பது தமிழன் கையில் இல்லை. அது அயல் மாநிலத்தான் கைகளில் போய்ச்சேர்ந்து பல காலம் ஆகிறது. நடிகர்களிலிருந்து, தயாரிப்பாள ரிலிருந்து, வட்டிக்கு பணம் கொடுக்கும் ’பைனான்சியர்’ வரை எல்லாம் அயல் மாநிலத்தான்தான். எடுப்பதுதான் தமிழ்ப் படம், அதிலெதிலும் தமிழ்ச் சமூகம் வந்துவிடாதபடி பார்த்துக்கொள்ள இங்கு ஒரு கூட்டமே உண்டு. ஒரு இயக்குனரின் படைபுலகத்திற்குள் இங்கே யார் யாரோ நுழைய முடிகிறது. நடிகன், தயாரிப்பாளர் எல்லாம் தாண்டி வட்டிக்கு பணம் கொடுப்பவன் வரை.

பாவம் நம் தமிழ் படைப்பாளிகள். இலட்சியத்திற்கும் வாழ்வாதாரத்திற்கும் இடையே மாட்டிக்கொண்டு போராடும் போராட்டத்தில், தங்களையே தொலைத்து விட்டார்கள். தாங்கள் யார் என்ற அடையாளமே அவர்களுக்கு தேவையற்றுப் போய்விட்டது. தொலைத்த காலமும், தொலைத்த இளமையும், தொலைத்த வாழ்க்கையும் இங்கே ஏராளம் உண்டு. இதில் எங்கே இனத்திற்காக போராடுவது என்பது உங்கள் பக்க நியாயம் என்பதினால்தான், எல்லாவற்றிக்கும் உங்களை வற்புறுத்தியே அழைத்துவர வேண்டியதாக இருக்கிறது.

போனதெல்லாம் போகட்டும், இதோ இலங்கையில் நடக்கும் திரைப்பட விழாவிற்கு கலந்துக் கொள்வதிற்கு எதிராக முடிவெடுப்பதிற்குக்கூட எவ்வளவு போராட்டங்கள் தேவைப்படுகின்றன. களத்திற்கு வேண்டாம், அடையாள அணி வகுப்பில் கூட பங்குபெற தயங்குகிறோம். எதிரி உன்னை பகைவன் என்று வாள் தூக்கிவிட்ட போதும் நீ யார் என்று உணராதது தமிழனின் துரதிர்ஷ்டம்.

மறுபுறம், வட இந்திய திரைக்கலைஞர்களுக்கு தமிழ் நாட்டில் அவர்கள் படம் ஓட வேண்டும் என்ற அக்கறை மட்டும் தான் இருக்கிறது. 1 இலட்சம் பேர் இனப்படுகொலைக்கு உள்ளாகி அழிந்த போதும், அது அவர்களது கலை மனதை கொஞ்சமும் பாதிக்கவில்லை.

இலங்கையில் நடக்கும் இந்தியத் திரைப்பட விழாவில் கலந்து கொள்ளக் கூடாது என்று அமிதாபச்சனை வலியுறுத்த மும்பைத் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டிய நிலை உள்ளது. தமிழர்களின் வற்புறுத்தலுக்கு பணிந்து அவ்விழாவில் கலந்து கொள்ளப் போவதில்லை என அமிதாப்பச்சன் அறிவித்தார். ஆனால், சல்மான்கான் போவார் என செய்திகள் வருகின்றன. ஆனால், இதே அமிதாப் பச்சன் ஆஸ்திரேலியாவில் வட இந்தியர்கள் சிலர் தாக்கப்பட்டதற்கு துடித்துப் போனார். அவருக்கு வழங்கப்பட்ட சிறப்பு விருதை பெறுவதற்குக் கூட ஆஸ்திரேலியா செல்ல மாட்டேன் என்று அறிவித்தார்.

வடநாட்டு கலைஞர்களுக்கு ஒன்றிரண்டு வடநாட்டார் தாக்கப்பட்டால் துடிக்கிற மனம், ஒரு இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்ட போதும் அசையாமல் கல்லாக இருக்கிறது. அவர்களது மனித நேயத்தில், தமிழர் மீதான நேயத்திற்கு இடமில்லை போலும். தமிழர்களை இவர்கள் மனிதர்களாக கருதவில்லை. இதையாவது தமிழ்நாட்டுத் திரைக்கலைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இங்கே நாம் மீட்டெடுக்க வேண்டியது மிக நீண்ட பட்டியல் கொண்டது. நம் வாழ்வாதார தேவைகளை வென்றெடுத்துவிட்டு மொழியையும் இனத்தையும் மீட்டெடுக்கலாம் என்று நினைத்தீர்களானால், நாம் அடையாளம் அற்றவர்களாகி விடுவோம். தனிப்பட்ட வாழ்க்கைக்கும், இன மீட்புக்கும் சம அளவிலான முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். இரண்டு ஒரே காலத்தில் சம அளவில் நடைபெற வேண்டும். தவறினால் ஒரு அடையாளமற்ற நாடோடி சமூகத்தை உருவாக்குபவர்களில் நாம் முன்னோடிகளாகிவிடுவோம்.

சமூகச்சுமையை நீங்கள் தூக்காதபோது அது உங்கள் பிள்ளைகளின் முதுகில் ஏற்றப்படும். பாதுகாப்பான தினசரி வாழ்க்கையினை தொலைக்க நீங்கள் தயங்கினால், உங்கள் பிள்ளைகள் தொலைக்க வேண்டிவரும். களத்திற்கு வரவேண்டியது நீங்களா உங்கள் பிள்ளைகளா என்பதனை நீங்களே முடிவு செய்யுங்கள் தோழர்களே.

நன்றி:

தோழர் தமிழ் ஒளி

தமிழ் தேசிய தமிழர் கண்ணோட்டம் இதழ்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.