Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காஷ்மீரிலும், ஈழத்திலும், உலகெங்கிலும் நடக்கும் மக்கள் புரட்சி வெல்க! – குர்ரம் பர்வேஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காஷ்மீரிலும், ஈழத்திலும், உலகெங்கிலும் நடக்கும் மக்கள் புரட்சி வெல்க! – குர்ரம் பர்வேஸ்

காஷ்மீரில் ஜூன் 11 லிருந்து ஆகஸ்ட் 8 க்குள் மட்டும் 51 பொது மக்கள் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. மக்கள் வீதியில் இறங்கி துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புப் படையினரை நோக்கிக் கல்லெறிவது என்பது பாகிஸ்தானின் தூண்டுதலால் என்று இந்திய அரசு சொல்கின்றது.

உண்மைகளை அறியும் நோக்கத்தோடு ‘காஷ்மீரில் நடப்பது என்ன?’ என்ற தலைப்பில் ஆகஸ்ட் 14 ஆம் நாள் லயோலா கல்லூரியில் பி.எட் அரங்கில் ஒரு அரங்கக் கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டம் மாலை 5.30 மணிக்கு தொடங்கியது. இக்கூட்டத்தில், சிறீநகரிலிருந்து ஜம்மு காஷ்மீர் குடிமைச் சமூகங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாள்ர் திரு. குர்ரம் பர்வேஸ், பெங்களுரிலிருந்து காஷ்மீரிகளின் சுயநிர்ணய இயக்கத்தின் சமய மற்றும் பண்பாட்டுப் பிரிவிலிருந்து மாணவர் திரு காலிது வாசிம் மற்றும் கவிஞர் இன்குலாப் அவர்கள் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சி தகவல் தொழிற்நுட்பத் துறையினர் மற்றும் இளைஞர்கள் இணைந்து செயல்படும் சேவ் தமிழ் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் ஏறக்குறைய 120 பேர் கலந்து கொண்டனர்.

14 ஆகஸ்ட் 2006 ல் செஞ்சோலையில் சிங்கள வான்படையால் குண்டு வீசி கொல்லப்பட்ட 61 குழந்தைகளையும், இந்திய படையினரால் கடந்த இரண்டு மாதத்தில் கொல்லப்பட்ட 51 காஷ்மீரிகளையும் நினைவு கூறும் விதமாக மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர், சேவ் தமிழ் சார்பாக திரு அருண் அவர்கள் உரையாற்றினார். அவர் தன் உரையில் பேசியது பின் வருமாறு, ஒன்றரை ஆண்டுக்கு முன் நடந்த நான்காம் கட்ட ஈழப் போரின் போது பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட செய்தியை வெளியிடாமல் ஊடகங்கள் எப்படி நடந்து கொண்டன என்பதை நாம் நன்கு அறிவோம். இன்று காஷ்மீரில் நடக்கும் போராட்டத்தையும் ஊடகங்கள் மறைப்பதையும், திரிப்பதையும் நம்மால் உணர முடியும். எனவே, காஷ்மீரில் உண்மையில் என்ன நடக்கின்றது என்பதை தெரிந்து கொள்ளும் நோக்கத்துடன் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சாதாரண காவலரைப் பார்த்தாலே பயப்படும் நம்மைப் போன்ற பொது மக்கள், காஷ்மீரில் உயிரைத் துச்சமாக மதித்து ஆயுதமேந்திய காவற் படைகளை நோக்கி போராடுவதன் காரணம் என்ன? காரணம், ஒடுக்குமுறைக்கு எதிராக மக்கள் வெடித்து எழுவது அன்றி வேறொன்றும் இல்லை. நமக்கு மேலும் சில கேள்விகள் உள்ளன. பிற இடங்களில் போராடும் மக்களைக் கலைப்பதற்கு கண்ணீர் புகை, ரப்பர் குண்டுகளைப் பயன்படுத்து இந்திய படையினர் காஷ்மீரில் மட்டும் ஏன் துப்பாக்கியால் சுடுகின்றனர்? அதுவும், முழங்காலுக்கு கீழே சுடாமல் தலையில் சுடுவதன் காரணம் என்ன? மக்கள் திரள் வீதிக்கு வந்து போராடுவதை ஏன் பயங்கரவாதம் என்று சித்தரிக்கின்றனர்? நாம் நேசிப்பது காஷ்மீர் மக்களையா? இல்லை காஷ்மீர் மக்கள் வாழும் நிலத்தையா?

கவிஞர் இன்குலாப் தன் உரையில் காஷ்மீர் எப்படி இந்தியாவால் 1948 இல் ஆக்கிரமிக்கப்பட்டது என்பதையும் காஷ்மீர் மக்களின் விடுதலை வரலாற்றையும் விளக்கிப் பேசினார். இந்திய அரசு எப்படி காஷ்மீர் விடுதலைப் போராட்டத்தையும் இந்தியாவில் உள்ள பிற தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டத்தையும் ஒடுக்குகின்றது என்று விளக்கினார். மேலும், ஜனநாயகம் என்பது அரசை எதிர்த்து கேள்வி கேட்கும் உரிமை என்று கேள்வி கேட்பவர்களை ஒடுக்குவதும், எச்சரிப்பதும் ஜனநாயகமாகாது என்றும் சொல்லி இதற்கு சான்றாகத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் சீமான் கைது செய்யப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிப் பேசினார். நான்காம்கட்ட ஈழப் போரில் ஆயிரக்கணக்கானத் தமிழர்களைக் கொல்வதற்குத் துணை போன இந்திய அரசின் கரங்களில் இரத்தக் கறைப் படிந்துள்ளது என்று இந்திய அரசைக் கண்டித்தார்.

இந்திய அரசும், இந்திய ஊடகங்களும் காஷ்மீர் குறித்து திட்டமிட்டு உருவாக்கி வைத்திருக்கும் மாயைகளை உடைத்துப் பேசினார் திரு காலிது வாசிம். 1948 இல் இந்தியாவோடு காஷ்மீரை இணைக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மன்னர் அரிசிங்கிற்கு மக்கள் ஆதரவு கிடையாது. மேலும், அம்மன்னர் கூட நிபந்தனையோடு கூடிய இணைப்பு என்றும் பொது வாக்கெடுப்பு மூலம் இணைப்பு குறித்து காஷ்மீர் மக்களின் விருப்பத்தைக் கண்டறியும் வரை நடைமுறையில் இருக்கும் தற்காலிகமான இணைப்பு என்றும் தான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அப்படி ஒரு நியாயமான பொது வாக்கெடுப்பு கடந்த 62 ஆண்டுகளில் நடத்தப்படவில்லையாதலால் அவ்வொப்பந்தம் தன்னுடைய சட்டப்பூர்வ மதிப்பை இழந்துவிட்டது.

இப்போது நடக்கும் காஷ்மீர் மக்களின் எழுச்சிமிக்கப் போராட்டம் ஏதோ வளர்ச்சியின்மையின் காரணமாக மக்கள் வெளிப்படுத்து கோபம் என்று காரணம் சொல்லப் பார்க்கின்றார்கள் இந்தியாவின் அறிவு ஜீவிகள். காஷ்மீர் மக்கள் தங்களுடைய உரிமையான உள் கட்டமைப்பையும், பள்ளிகளையும், மருத்துவமனைகளையும், வேலை வாய்ப்புகளையும் கோருகின்ற அதே நேரத்தில் இந்தியாவிலிருந்து விடுதலையைத் தான் விரும்புகின்றனர்.காஷ்மீர் ஒரு உள்நாட்டுப் பிரச்சனை என்று தொடர்ச்சியாகப் பொய் சொல்லி வருகின்றது இந்திய அரசு. அப்படியெனில், இது வரை காஷ்மீர் பிரச்சனை குறித்து 18 முறை ஐ.நாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதே ஏன்? இந்தியா பாகிஸ்தானோடு மேற்கொண்ட தாஸ்கெண்டு மற்றும் சிம்லா உடன்படிக்கையில் காஷ்மீர் பற்றி பேசியிருப்பது ஏன்? காஷ்மீர் பிரச்சனையில் காஷ்மீர் மக்கள் தான் முதன்மையான தரப்பு. காஷ்மீர் மக்களின் விருப்பத்தை அங்கீகரிக்காமலும், காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமையைப் பாதுகாக்காமலும் இவ்விடயத்தில் ஒரு அங்குலம் கூட முன்னேற முடியாது.

அண்மையில் இஸ்ரேலின் தலைமை இராணுவ அதிகாரி இந்திய இராணுவ அதிகாரியைச் சந்தித்து பிரிவினைவாதப் போராட்டங்களை எப்படி ஒடுக்குவது என்று கலந்து ஆலோசித்தார். உலகெங்கும் உள்ள ஒடுக்கும் அரசுகள் ஒன்று சேர்ந்து விட்டன. உலகெங்கும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களாகிய நாம் ஒடுக்குமுறைக்கெதிரானப் போராட்டத்தில் ஒன்றிணைய வேண்டும். ஆசாத் காஷ்மீர் போராட்டமானாலும், இலங்கையில் நடக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டமானாலும், வடகிழக்கு இந்தியாவில் நடக்கும் நாகாலாந்து விடுதலைப் போராட்டமானாலும், சீனாவிலிருந்து விடுதலை கோரும் திபெத்தியப் போராட்டமானாலும் நமது மொழியும், வரலாறும் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால், நீதிக்கான நமது போராட்டம் ஒன்று தான். மக்கள் இயக்கங்கள் ஒன்றிணைய வேண்டும் என்று அறைகூவல் விடுத்து முடித்தார் திரு. காலிது வாசிம்.

இறுதியாகப் பேசிய திரு.குர்ரம் பர்வேஸ், உள்நாட்டு அடக்குமுறைக்கு எதிரானக் கூட்டமைப்பினர், காஷ்மீரிலிருந்து இந்திய இராணுவத்தை வெளியேற்றக் கோரி 2010, ஆகஸ்ட் 13 ஆம் நாள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கைதாகிய 52 தோழர்களுக்கு காஷ்மீர் மக்களின் சார்பாக நன்றியையும், வாழ்த்துக்களையும் முதலில் தெரிவித்துவிட்டு, இந்திய அரசைக் கண்டித்தார். இலங்கையில் நடக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் காஷ்மீர் மக்களாகிய நாங்கள் மிகக் நுட்பமாகக் கவனித்து வ்ருகின்றோம். எங்களுக்கு எழுச்சியூட்டியப் போராட்டங்களுள் தமிழீழ விடுதலைப் போராட்டமும் ஒன்று. கடந்த ஆண்டு தமிழ் மக்களுக்கு நிகழ்த்தப்பட்ட துயரங்களுக்காக நாங்கள் மிகவும் வருந்துகின்றோம். இலங்கை அரசு ஒரு பிரபாகரனைக் கொன்று விடலாம். ஏன், இன்னும் பல பிரபாகரன்களைக்கூடக் கொன்று குவிக்கலாம். ஆனால் தமிழர்தம் விடுதலை வேட்கையைக் கொல்ல முடியாது.

இது காஷ்மீரிகளுக்கும் பொருந்தும். இந்திய படையினர் காஷ்மீர் மக்களைக் கொன்று குவிக்கலாம். ஆனால், காஷ்மீர் மக்களின் விடுதலை வேட்கையைக் கொல்ல முடியாது. அடிப்படையில் காஷ்மீர் மக்களின் போராட்டம் என்பது இருத்தலின் வெளிப்பாடு. காஷ்மீரிகளோ, தமிழர்களோ இம்மண்ணில் இருக்கும்வரை அவர்தம் விடுதலை வேட்கையும் உயிர்க்கொண்டிருக்கும். ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலை தாகத்தை அழிப்பதற்கு ஒடுக்குமுறையாளர்கள் வெடிகுண்டையோ துப்பாக்கி ரவையையோ இதுவரைக் கண்டுபிடிக்கவில்லை. காஷ்மீரிலும், ஈழத்திலும், உலகெங்கிலும் நடக்கும் மக்கள் புரட்சி வெல்க! என்ற முன்னுரையோடு காஷ்மீரில் நடப்பதை விவரிக்கத் தொடங்கினார்.

அந்த உரை பின்வருமாறு:

ஜம்மு காஷ்மீரில் 1990க‌ளிலிருந்து , 70,000ற்க்கும் அதி:க‌மான‌ பொதும‌க்க‌ள் கொல்ல‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர், 8,000 பேர் காணாமல் போயுள்ள‌ன‌ர். காஷ்மீரில் உள்ள‌ 6,71,000 இராணுவ‌, துணை இராணுவ‌, காவ‌ல் துறையின‌ரின் பெரும் ப‌குதி காஷ்மீரின் ப‌ள்ள‌தாக்கு ப‌குதியில் உள்ள‌ பொதும‌க்க‌ளை க‌ட்டுப‌டுத்துவ‌தில் தான் உள்ள‌தே த‌விர‌ எல்லை பாதுகாப்பில் அல்ல‌. மேலும் இராணுவ‌ம் இன்று க‌ல்வி நிலைய‌ங்க‌ள், ம‌ருத்துவ‌ம‌னைக‌ள், வ‌ணிக‌ வ‌ளாக‌ங்க‌ள், உண‌வ‌க‌ங்க‌ள், விளையாட்டு மைதான‌ங்க‌ள், க‌டைவீதிக‌ள் என‌ எல்லா இட‌ங்க‌ளிலும் நீக்க‌ம‌ற‌ நிறைந்துள்ள‌து.

த‌ற்போதைய‌ நிலையில் இராணுவ‌ம் ம‌ற்றும் துணை இராணுவ‌க் குழுக்க‌ள் துப்பாக்கியால் சுடுத‌ல், சித்த‌ர‌வ‌தை செய்த‌ல், க‌ண்ணிவெடி வைத்த‌ல், கைது செய்த‌ல், ம‌னித‌ கேட‌ய‌மாக‌ ப‌ய‌ன்ப‌டுத்துத‌ல், பாலியல் பலாத்காரம், க‌ட்டாய‌ப‌டுத்தி வேலை வாங்குத‌ல், காணாம‌ல் போக‌ச் செய்த‌ல், கொலை செய்த‌ல் போன்ற‌ எல்லாவ‌கையான‌ வ‌ன்முறைக‌ளையும் ம‌க்க‌ள் மீது ந‌ட‌த்தி வ‌ருகின்ற‌து. இது போன்ற‌ கொடுமைக‌ளை செய்ப‌வ‌ர்க‌ளின் ப‌ட்டிய‌ல் மிக‌ நீண்ட‌ ஒன்று.

ச‌ன‌வ‌ரி 2004 லிருந்து ந‌வ‌ம்ப‌ர் 2008 வ‌ரையிலான‌ கால‌த்தில் ம‌ட்டும்(மும்பை தாக்குத‌லுக்கு முன்ன‌ர் வ‌ரை) 6588 பொதும‌க்க‌ள் கொல்ல‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர். இந்த‌ கால‌க‌ட்ட‌த்தைத் தான் இந்தியாவும், பாகிஸ்தானும் அமைதி காலம் என்றும் தம்பட்டம் அடித்துக்கொண்டன. அமைதி காலம் தவிர்த்த போர் காலங்களில் கொலைகளின் எண்ணிக்கை பெருமளவாக இருக்கும். வேடிக்கையாக, இந்தியாவும்ம், பாகிசுதானும் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த போது, காசுமீரில் 6588 பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். துரதிஷ்டவசமாக, ஜம்மு காசுமீரில் அமைதி பேச்சுவார்த்தை என்பது தணடனை பயமில்லாமல் பொதுமக்களை கொலைசெய்யும் நடைமுறையை மறைப்பதற்கு பயன்படுத்தப்பட்டது. மக்கள் போராட்டங்களுக்கு எதிர்வினையாக அவர்களைக் கொலை செய்வது என்பது போராட்ட வடிவங்கள் மாறினாலும் குறையாமல் தொடர்கின்றது. ஜம்மு காசுமீரில் வாழும் மக்கள் உலக அரசியல்களையும், தங்களைச் சுற்றி நடக்கும் பிராந்திய புவிசார் அரசியலையும் கருத்தில் கொண்டே தங்களது போராட்ட முறைகளைத் தீர்மானிக்கின்றனர். மாறி வரும் உலக சூழலில் பெரும் திரளான பொதுமக்கள் ஒன்று கூடி தங்களை ஒடுக்குகின்ற இந்திய அரசை எதிர்த்து அமைதியான ஆயுதமற்ற போராட்டங்களை நடத்துகின்றனர். ஆனால் அவர்களின் இந்த அமைதி வழி போராட்டத்தை இந்திய அரசு ஆயுதப்படைகளைக் கொண்டு பதிலளிப்பதால், பொதுமக்கள் படுகாயங்கள் அடைவதும், உயிரிழப்பதுவும் மக்களின் வலியை தொடர்ந்து அதிகப்படுத்தி வருகின்றன.

இந்திய அரசு வன்முறை மற்றும் அமைதி வழி போராட்டம் என்ற எந்த வகையில் மக்கள் போராடினாலும் அதை இரும்புக்கரம் கொண்டு அடக்கி வருகின்றது. இதனால் மக்கள் தங்களது அதிருப்தியைக் காட்டுவதற்கான எல்லாக் கதவுகளும் அடைக்கப்படுகின்றன. ஆயுதம் தாங்கிய போராட்ட வழிகளிலிருந்து பெரும் திரளான மக்கள் ஒன்று கூடி ஆயுதம் இல்லாமல் போராடுவதை அரசு அங்கீகரிக்க மறுப்பதுடன் கொடூரமாக ஒடுக்குவது என்பது இந்திய அரசு இந்த பிரச்சனையை எவ்வாறு கையாளுகின்றது என்பதையும் காட்டுகின்றது. தற்பொழுது நடைபெற்று வரும் மக்கள் போராட்டங்கள் இன்றைய அரசின் மீதான கோபம் மட்டுமல்ல, 1989லிருந்து காசுமீர் மக்களை இராணுவம் மற்றும் துணை இராணுவம் மூலம் சிறைபடுத்தி வைத்திருப்பதையும், அதற்கு துணை செய்யும் தொடர்ச்சியான வன்முறையையும்,1947 ஆம் ஆண்டிலிருந்து காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமை கோரும் போராட்டத்தை நசுக்குவதையும் எதிர்ப்பதும் தான். இந்திய அரசு காசுமீர் பிரச்சனைக்கு புதுமையான தீர்வைத் தருவதாக கூறியுள்ளது. ஆனால் கடந்த கால சம்பவங்களை உற்று நோக்கினால், இந்தியாவின் அணுகுமுறை என்பது தீவிர இராணுவாதமாகவே இருந்துள்ளது. அரசியல் ரீதியாக மக்களையோ அல்லது சுதந்திரத்திற்காக போராடும் தலைமையையோ அரசு அணுகியதில்லை. காஷ்மீர் மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் சுயநிர்ணய உரிமை குறித்து அரசு இது வரை பரிசீலத்தது கூட இல்லை.

இந்திய அரசு எல்லா பிரச்சனைகளைப் பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என கூறுகின்றது ஆனால் மக்களின் விருப்பமான சுய நிர்ணய உரிமையை பற்றி மட்டும் பேசுவதே இல்லை.இந்தியாவால் நிர்வகிக்கப்படும் காசுமீர் ஒரு பிரச்சனை(problem) அல்ல, இது ஒரு சச்சரவான(conflict zone) பகுதி. இந்தியா காசுமீரை இராணுவமயப்படுத்துவதன் மூலம் காஷ்மீர் நிலத்தையும், காஷ்மீரில் உள்ள முக்கியப் பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் வளங்களைத் தனது கட்டுக்குள் வைத்துள்ளது. நீதித் துறை, கல்வி நிலையங்கள், ஊடகம் போன்ற ஜனநாயகத் தூண்கள் செயலிழக்க வைத்துள்ளது இந்திய அரசு. இதில் இந்தியாவின் ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே சிறப்பாக பணியாற்றுவதைக் கண்டு இந்தியா பெருமை கொள்ளலாம். அது தான் இந்திய இராணுவம். உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அரசியல் தலைவர்களின் கட்டுப்பாட்டின்படி செயல்படும் இந்திய இராணுவத்தால் தான் காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக நீடிக்கின்றது.இந்தியப் படையினர் இந்துத்துவ தேசியவாதிகளுடன் கைக்கோர்த்துக் கொண்டு, கடந்த மே மாதத்தில் 100 கிராமப் பாதுகாப்பு குழுக்களை உருவாக்கியுள்ளதாக அறிவித்தது போன்ற “சுய பாதுகாப்பு” பிரச்சாரங்களையும், குழுக்களையும் மேற்கொள்வதன் மூலம் இராணுவமயமாக்கலையும், வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்துவதையும் பெருகச்செய்து இப்பிரச்சினைக்கு மதச்சாயம் பூசுகின்றனர்.

குடிமை மற்றும் அரசியல் உரிமைகளைச் சகித்துக்கொள்ளாமை:

காஷ்மீரில் இராணுவ நிர்வாகத்தை உறுதிப்படுத்த ஒரு வழியாகவே மனித உரிமை மீறல்கள் நடத்தப்படுகின்றன. மனித உரிமை மீறல்களைக் கிஞ்சித்தும் சகித்துக் கொள்ளமாட்டோம் என்று இந்திய அரசு திரும்ப திரும்ப உறுதியளித்துள்ளது. ஆனால், “இந்தியாவே வெளியேறு, திரும்பிப் போ” என்றும் ’இந்தியாவே, காஷ்மீரைவிட்டு வெளியேறு’ என்று வீதிகளில் முழங்கும் மக்களை இந்தியப் படைகள் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குவதன் மூலம் அவர்கள் வன்முறையின்றி குடிமைச் சமூகம் தங்கள் வெறுப்பைக் காட்டுவதைத் தான் கிஞ்சித்தும் தாங்க முடியாதவர்களாக இருக்கின்றார் என்பதைப் பார்க்க முடிகின்றது. காஷ்மீர் விடுதலையைக் கோரும் தலைவர்கள் இளைஞர்களிடம் வன்முறையைத் தூண்டுகிறார்கள் என்று ஓமர் அப்துல்லா ஜூன் 24,2010 அன்று சொன்னார். அதைத் தொடர்ந்து, அமைதியானப் போராட்டங்களுக்கு அழைப்புவிடுத்தத் தலைவர்கள் மீது இந்தியப் படைகள் அடக்குமுறையை ஏவினார்கள். துணை இராணுவப் படையால் கொல்லப்பட்டவர்களாகக் அழுதுக் கொண்டு, கோபத்தோடு வீதிகளில் பேரணியாகச் செல்லும் மக்கள் எப்போதும் ஆயுதமேந்தியப் படைகளைக் கொண்டே ஒடுக்கப்படுகின்றார்கள். இந்தியாவின் உள்துறைச் செயலர் திரு.ஜி.கே.பிள்ளை, பாதுகாப்பு படையினரால் சுடப்பட்ட மக்கள் ஊரடங்கு உத்தரவை மீறியதாலும், சோதனைச் சாவடிகளைத் தாக்கியதாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்று சொல்லி சி.ஆர்.பி.எப் மற்றும் காவல்துறையின் வருந்தத்தக்க செயல்களை மன்னிக்கவும், நியாயப்படுத்தவும் செய்கிறார். இது, இந்தியப் படைகள் இந்திய அரசின் உயரதிகாரிகளின் ஆதரவைப் பெற்றிருப்பதையே காட்டுகின்றது. மேலும், இராணுவ ஆட்சியைக் குடிமை சமூகம் எதிர்ப்பதைக் குற்ற நடவடிக்கையாகப் பார்க்கும் இந்திய அரசின் போக்கைச் சுட்டிக்காட்டுகின்றது.

ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகள் மற்றும் இந்தியப் படையினரின் சொல்லும், செயலும் மக்களின் ஒத்துழையாமை இயக்கத்தைப் பயங்கரவாத்திற்கு இணையான தேசத்துரோகமாகக் சித்தரிக்க முயல்வதாகத் தோன்றுகின்றது. அமைதியானப் போரட்டங்களில் பங்குபெறும் ஆண்களையும், பெண்களையும் துப்பாக்கியால் சுடுவதன் மூலம் பாதுகாப்புப் படையினர் அடக்குமுறையை மேற்கொள்கின்றனர். காஷ்மீரில் கல்லெறிவதென்பது கோபத்தை வெளிப்படுத்தும் ஒரு செயல். அதை வன்முறையென்று சொல்கின்றார்கள். அரசியல் ரீதியாகக் கோரிக்கைகளை எழுப்புவதற்கான வழிகள் திட்டமிட்ட முறையில் அடைக்கப்பட்டு, ஒடுக்கப்பட்ட மக்களின் ஆத்திரத்தின் வெளிப்பாடே கல்லெறிதல். ஆதிக்கம் செலுத்துவதற்காக அரசு பயன்படுத்தும் கொடூரமான வழிமுறைகளை கல்லெறிவதோடு ஒப்பிட முடியாது.

விடுதலையைக் கோரும் தலைவர்கள் எண்ணற்ற வீட்டுக் காவலிலும், தடுப்புக் காவலிலும் வைக்கப்பட்டுள்ளார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் போராடுவதைக் கூடத் தடுக்கின்றார்கள். சான்றாக, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஸ்ரீநகர் வந்து, மனித உரிமை மீறல்களை கொஞ்சமும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று மீண்டும் உறுதி அளித்துக் கொண்டிருந்த போது சுமார் நூறு தோழர்களுடன் போராட்டம் நடத்த முனைந்த ஒரு சட்டமன்ற உறுப்பினர் தடுத்து நிறுத்தப்பட்டார். தேர்தல் நடந்த பின், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்களுக்காகப் பேசுவார்கள்; பிறகு, பிரிவினைவாதிகள் தேவையற்றவர்களாக ஆகிவிடுவார்கள் என்று இந்தியப் பிரதமர் 2008 ஆம் ஆண்டு சொன்னார்.

இராணுவம் மற்றும் துணை இராவத்தின் செயல்கள் குறித்து கவனிப்பதும், அதற்கு பொறுப்பேற்கவும் அரசுக்கு அக்கறை இருப்பது போல் தோன்றவில்லை.போராட்டங்களில் பங்கேற்கும் சிறுவர்கள் உள்ளிட்ட மக்களையும், அரசியல் தலைவர்களையும் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்கின்றார்கள். அறிவிக்கப்படாத ஊரடங்கு உத்தரவுகள் பாதுகாப்புப் படையினரை விளைவுகளைப் பற்றி கவலைப்படாமலும், முன்னெச்சரிக்கை அறிவிப்பு இன்றியும் செயல்பட அனுமதிக்கின்றது. அரசியல் தலைவர்களின் அழைப்பை ஏற்று மக்கள் மேற்கொண்ட ஒத்துழையாமை இயக்கத்தை பயங்கரவாதிகளால் தூண்டிவிடப்பட்ட பயங்கரவாத எழுச்சி என்று நவம்பர் 2009 இல் சித்தரித்துப் பேசினார் லெப். ஜெனரல் பி.எஸ். அகர்வால். 2008 மற்றும் 2009 இல் நடந்த அமைதியானப் போராட்டங்களின் போது பாதுகாப்புப் படையினர் மக்கள் திரளை நோக்கிச் சுட்டதால் போராட்டங்கள் மரணத்தை ஏற்படுத்துவதாக மாறிப் போயின. வலைதளத்தில் பதிவு செய்யப்பட்ட எதிர்ப்புகளை ’வலைதளப் பயங்கரவாதம்’ என்று முத்திரைக் குத்தி கண்காணிப்புக்கு உட்படுத்தியுள்ளார்கள்.

தடுப்புக் காவலிலும், கைது செய்யப்பட்டும் இருக்கும் செயல்வீரர்க்ள், வழக்கறிஞர்கள், அறிவுஜீவிகள், காஷ்மீர் விடுதலையைக் கோரும் தலைவர்கள் மற்றும் சிறுவர்களின் முழு எண்ணிக்கை யாரிடமும் இல்லை. காவல்துறையினர் சிறைக்காவலில் இருப்பவர்களிடமும், கைது செய்யப்பட்டிருப்பவர்களின் விடுதலையைக் வேண்டுபவர்களிடமும் லஞ்சம் கேட்பது மற்றும் பலவந்தமாகப் பணம் பறிப்பது முதலிய செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இந்திய அரசு மற்றும் அரசுடைய இராணுவம், துணை இராணுவம் மற்றும் காவல் துறையின் அடக்குமுறையை எதிர்க்கும் குடிமைச் சமூகத்தின் ஒரு சாராரை மிரட்டுவதற்கும், பயமுறுத்துவதற்கும், அடக்குவதற்கும் உறுதி செய்யப்படாத சந்தேகத்தின் அடிப்படையில் தடுப்பு காவல் மற்றும் கைது நடவடிக்கைகள் அதிக எண்ணிக்கையில் மேற்கொள்ளப்படுகின்றன.

சூலை 7, 2010 அன்று ஜம்மு காசுமீர் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் தலைவரும், மனித உரிமை பாதுகாவலருமான வழக்கறிஞர் மியான் குயோம் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். பொதுப் பாதுகாப்புச் சட்டம் என்பது எந்தவித ஆதாரமும் இல்லாமல் ஐயத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்து இரண்டு வருடம் வரை தடுப்பு காவலில் வைக்கமுடியும், மேலும் அரசு நிர்வாகம் ஒருவரின் மூலம் அமைதி மற்றும் ஒழுங்கு குறையும் என கருதினால், இந்த சட்டத்தின் மூலம் அவரைக் கைது செய்து இரண்டு வருடம் தடுப்புக்காவலில் வைக்க முடியும். தனது மனித உரிமை செயல்களுக்காகவும், அதிலும் குறிப்பாகத் தடுப்புக் காவலிலும், காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கவும் சட்டரீதியான ஆலோசனைகள் வழங்கியதாலும், இந்திய அரசை எதிர்த்து போராடுபவர்களுக்காக வாதிடுவதாலும், பொதுப் பாதுகாப்புச் சட்டத்தைத் தவறாக பயன்படுத்துவதை எதிர்த்து வாதிடுவதாலும், இந்திய இராணுவ, துணை இராணுவத்தின் குற்றங்களை விசாரிப்பதனாலும், சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவு தெரிவித்ததாலும், காசுமீர் ஒரு “சச்சரவான நிலப்பகுதி”(disputed territorய்) என அறிவித்ததாலுமே குயோமை கைது செய்துள்ளார்கள். சூலை 18, 2010 அன்று ஜம்மு காசுமீர் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் பொதுச் செயலாளரும், மனித உரிமை பாதுகாவலருமான வழக்கறிஞர் குலாம் நபி சகாகீனும் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறைவில்லாமல் கொல்லப்படும் பொதுமக்கள்:

2010 ச‌ன‌வ‌ரியிலிருந்து ஆக‌த்து வ‌ரையிலான‌ கால‌க‌ட்ட‌த்தில் ம‌ட்டும் 89 பொது ம‌க்க‌ள் கொல்ல‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர். இதில் 71 பேர் இந்திய‌ ஆயுத‌ப்ப‌டையினால் கொல்ல‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர். ஆனால் இன்ன‌மும் எங்க‌ளை(பொது ம‌க்க‌ளை) வ‌ன்முறை செய்வ‌தாக‌வும், இந்திய‌ இராணுவ‌ம் அமைதியின் வ‌டிவ‌ம் என்றும் கூறி வ‌ருகின்ற‌ன‌ர்.

இராணுவ‌ ஆட்சி?

இந்திய‌ அர‌சு த‌ற்பொழுது ந‌டைபெற்று வ‌ரும் போராட்ட‌ங்க‌ளை காசுமீரின் பிர‌ச்ச‌னையாக‌க் க‌ருதவே இல்லை. ஆனால் அதே ச‌ம‌ய‌த்தில் இந்தியாவால் நிர்வகிக்கப்படும் காசுமீரில் இராணுவ‌ம் த‌ன‌து ப‌டைக‌ளை அதிக‌ரித்தும், ப‌ல‌மாக‌ வேரூன்றியும் வ‌ருகின்ற‌து. இந்திய அரசு இராணுவம், துணை இராணுவத்தின் அடக்குமுறை செயல்களைக் கண்டு கொள்ளாமலும் அல்லது கட்டுப்படுத்த முடியாமாலும் உள்ளது.ஒருபுறம் ’காசுமீர் மக்களைப் பாதுகாப்பதற்கே இந்திய இராணுவப்படை’ என்று கூறிக் கொண்டே மறுபுறம் இந்திய அரசின் பாதுகாப்பு நலன்களுக்காகப் பொதுமக்கள் இராணுவத்தால் சுட்டு கொல்லப்படுவதற்கு நியாயம் கற்பிக்கின்றது. எமது “பாதுகாவலர்கள்” வித்தியாசமானவர்கள். அவர்கள் எப்பொழும் எங்களை எதிர்களாகவும், துப்பாக்கி இல்லாத பயங்கரவாதிகளாகப் பார்க்கின்றனர். இந்தியாவைப் பாதுகாப்பதற்கு காசுமீரில் இராணுவ அடக்குமுறை தேவை என்பதாகப் புரிந்து கொள்ளப்படுகின்றது.

பொதுப் பாதுகாப்புச் சட்டம், சச்சரவுப் பகுதி சட்டம், ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் போன்றவை எல்லாம் சர்வதேச மனித உரிமை சட்டங்கள் இராணுவத்திற்கும், துணை இராணுவத்திற்க்கும் ஏற்படுத்தும் தண்டனை பயத்தை சட்டப்பூர்வமாக இல்லாமல் செய்கின்றன. 2009 பிப்ரவரி 26 அன்று பதிவியேற்றப் பின்னர் முதலமைச்சர் அப்துல்லா “ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்” நீக்கப்படும் என அறிவித்தார். இதை ஆயுதப்படை கடுமையாக எதிர்த்தது, மேலும் ஆயுதப்படை, இந்த சட்டத்தை நீக்குவது “பிற்போக்குத்தனமானது” எனவும், “காசுமீர் பள்ளதாக்கில் வாழும் மக்களின் பாதுகாப்பு இதனால் பாதிக்கப்படும்” எனவும், இது பயங்கரவாதத்தை மேலும் ஊக்குவிக்கும் எனவும் கூறியுள்ளது. விடுதலை விரும்பும் தலைவர்களுடன் “சுயாட்சி” பற்றி பேச்சுவார்த்தை நடத்துவதாகவும், “ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்” நீக்கப்படும் என்றும் கடந்தத் தேர்தல் அறிக்கையில் அவர் கூறியிருந்ததாலே அப்துல்லா வெற்றி பெற்றிருந்தார். “ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை” நீக்குவது சட்டபூர்வமாக மட்டுமல்லாமல் அரசியல் பூர்வமாகவும் தண்டனை பயத்தை கொண்டு வரும். “ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை” நீக்குவது மட்டுமல்லாமல் தங்களது பாதுகாப்பும் மேம்படுத்தப்படவேண்டுமென காசுமீரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இறுதியாக:

இந்திய அரசு நிர்வாகத்தாலும், இராணுவத்தினாலும் வன்முறை சோதனைகளை மேற்கொள்ளும் பரிசோதனைக் கூடமாகக் காசுமீர் உள்ளது. காசுமீரில் இராணுவ ஆட்சி நடக்கின்றது என இந்திய அரசும், சர்வதேச சமூகமும் இன்று வரை கூறவே இல்லை. ஜ்ம்மு காசுமீரில் இந்திய அரசு மேற்கொள்ளும் இராணுவமயமாக்கல் “உள்நாட்டு பிரச்சனை” என்று கூறப்படுகின்றது, ஆனால், இந்த பகுதி சர்வேதச சச்சரவு மற்றும் போர் பகுதியின் விதிகளுக்குள் வரவேண்டிய பகுதி. இந்திய அரசின் திட்டமிட்ட மனித உரிமை மீறல்களையும், மனித குலத்திற்கு எதிரானக் குற்றங்களையும் சர்வதேச சமூகமும் கண்டிக்காமல் மௌனியாக இருந்து வருகின்ற‌து. காசுமீர் பிரச்சனையும் மற்ற சர்வதேசப் பிரச்சனைகளை போன்றதே. இதில் சர்வதேச சமூகத்தின் அவசரமான கவனமும், ஒரு முடிவும் தேவை.தற்பொழுது இங்கு ஒரு சர்வதேச மேற்பார்வையாளர்களும் இல்லை. சமூக நீதியின்படி ஒரு சரியான முடிவுக்கு வருவதற்கு எந்த ஒரு முயற்சியும் எடுக்கப்படவில்லை.

சர்வதேச சமூகத்தின் கவனத்திலும், இந்தியா, பாகிசுதான் நாடுகளின் பேச்சுவார்த்தையிலும் காசுமீர் மக்கள் ஒரு தரப்பு என்பது தவறிக் கொண்டே இருக்கின்றது. தற்பொழுது உள்ள நிலை தொடர்ந்து இந்திய அரசு அமைதி வழியில் போராடி வருபவர்களைத் திட்டமிட்டு கடுமையாக அடக்குமானால், அதே பொதுமக்களை மீண்டும் ஆயுதங்களை கையிலெடுக்க நிர்ப்பந்திக்கின்றது என்றே பொருள். இதனால் மீண்டும் வன்முறை சக்கரம் சுழலும்.

நன்றி: தமிழரை காப்போம் ( save tamils)

http://meenakam.com/?p=6246

  • கருத்துக்கள உறவுகள்

நாடுகடந்த கடக்காத அரசுகள்....

ஒட்டு ஒட்டில்லாத குழுக்கள்...

தேசிய தேசியமில்லாத கூட்டமைப்பு...

என்று எல்லோரும் போய் இந்தியாவின் காலில் விழுந்தால்தான் தமிழனுக்கு விடிவு உண்டு

இதை நான் எழுதினால் என்னை துரோகி என்கின்றார்கள். சிலதுகள் அறிவில்லாத முட்டாள் என்கின்றார்கள்.???????

தங்களைபற்றிய உண்மைகளை தாங்களாகவே வந்து எழுதிவிட்டு. எழுதியவைகளுக்கே உரிய பட்டங்களை மட்டும் வாங்க மறுக்கிறார்கள். அந்தளவிற்கு தற்பெருமையற்ற தன்னலமில்லாத சேவகர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.