Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்ட சிறிலங்காவில் சட்டயாப்புக்கான 18-ஆவது திருத்தம்

Featured Replies

ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்ட சிறிலங்காவில் சட்டயாப்புக்கான 18-ஆவது திருத்தம்

அனலை நிதிஸ் ச. குமாரன்

ஜனநாயக கோட்பாடுகளை மதியாது தன்னிச்சையாக தாம் நினைத்த அனைத்திற்கும் செயல்வடிவம் கொடுக்கும் சிங்கள ஆட்சியாளர்கள் ஜனநாயகத்தைப்பற்றி பேச அருகதையற்றவர்கள். ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்த சிங்கள ஆட்சியாளர்கள் இன்று தங்களுக்குள் மோதிக்கொள்ளும் நிலை வந்துள்ளது. சட்டயாப்புக்களை தங்களுக்கு வேண்டியவாறு மாற்றுவதும், தேவைப்பட்டால் அவற்றை மதியாது செயற்படுவதும் சிறிலங்காவில் ஒன்றும் புதிதல்ல. இருந்தாலும் மகிந்த ராஜபக்சாவின் அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டு, இந்த வாரம் சட்டமாக்கப்பட்டுள்ள 18-ஆவது சட்ட திருத்தம் சிங்களக் கட்சிகள் தமக்குள் மோதிக்கொள்ளும் ஒரு நிலையை உருவாக்கியுள்ளது.

18-ஆவது திருத்தம் என்பது தமிழருக்கு எந்த விமோசனத்தையும் கொண்டுவரப்போவது இல்லை. இந்திய-சிறிலங்கா ஒப்பந்தங்களினூடாக மாற்றப்பட்ட 13-ஆவது திருத்தச்சட்டத்தை மதியாது அதை புதைகுழிக்குள் வீசிய சிங்கள இனவெறி அரசு அதன் சாராம்சங்களை எள்ளளவேனும் அமுல்படுத்தவில்லை. தமிழர்களுக்கு 13-ஆவது திருத்தச்சட்டம் மூலமாக எந்த பலனும் கிடைக்கவில்லை. சொல்லப்போனால், இந்த திருத்தசட்டத்தை தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் அடியோடு ஏற்க மறுத்து இது ஒரு கண்துடைப்பு நாடகம் என அறிவித்தார்கள்.

13-ஆவது திருத்தச்சட்டம் ஏதோ பல அதிகாரங்களை தமிழர்களுக்கு அளிக்கின்றது என்பது போன்ற ஒரு பாணியில் சிங்கள ஏகாதிபத்திய கட்சிகள் குரல்கொடுத்தார்கள். இதன்விளைவே, சிங்கள அரசு 17-ஆவது சட்ட திருத்தத்தை கொண்டுவந்தது. மகிந்த அரசோ இந்த சட்டத்தில் கூறப்பட்டிருக்கும் சரத்துக்களை எள்ளளவேனும் மதியாது சர்வாதிகார ஆட்சியை நடாத்தியது.

18-ஆவது திருத்தம் ஜனநாயகத்திற்கு எதிரானது

18-ஆவது திருத்தம் ஜனநாயகத்திற்கு எதிரான ஒரு சட்ட திருத்தம் என்று தான் சொல்லவேண்டும். மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு ஆதரவாக 161 வாக்குகளும், எதிராக 17 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. ஆதரவாக வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவரும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் 8 உறுப்பினர்களும் உள்ளடங்குகின்றனர். இந்த அரசியலமைப்பு திருத்தத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் 10 நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் 7 நாடாளுமன்ற உறுப்பினர்களுமாக மொத்தம் 17 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்துள்ளனர்.

இந்த சட்டம் நடைமுறைக்கு வரும்முன்னர் இருந்த அரசியல் யாப்பு ஒரு தனிநபரான ஜனாதிபதியிடம் எல்லையற்ற அதிகாரங்களை கொடுத்தது. ஏனைய நாடுகளில் உள்ளது போன்ற ஜனாதிபதியின் அதிகாரங்களுக்கு வலுவான சமநிலைத் தடைகள் எதுவும் இருக்கவில்லை. பதவி மோகம் கொண்ட தலைவர்கள், அது ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவர்களாயினும் சரி, சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்களாயினும் சரி, ஜனாதிபதியின் அதிகாரங்களை அதிகரிக்க முற்பட்டார்களே தவிர அதனை குறைக்க எப்பயேனும் முயற்சிக்கவில்லை.

ஆனால், சந்திரிகா குமாரதுங்க ஆட்சிக்காலத்தில் சில குழுக்களின் அழுத்தம் காரணமாக இரண்டு பிரதான கட்சிகளும் சேர்ந்து ஜனாதிபதியின் அதிகாரங்களில் சில கட்டுப்பாடுகளை கொண்டுவரும் வகையில் 17-ஆவது திருத்தத்தினைக் கொண்டுவந்தன. அதன் மூலம் அரசியல் அமைப்புப் பேரவையும் சுதந்திர ஆணைக்குழுக்களும் உருவாக்கப்பட்டன. ஜனாதிபதியின் உயர் நியமனங்களில் அரசியல் அமைப்புப் பேரவை கட்டுப்பாடுகளை உருவாக்கியது. சுதந்திர ஆணைக்குழுக்கள் அரச நிர்வாகம் தொடர்பாக ஜனாதிபதியின் வரம்பு மீறிய அதிகாரங்களில் கட்டுப்பாடுகளை உருவாக்கின. இந்தக் கட்டுபாடுகளை அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா கூட விரும்பவில்லை. இதனால் அரசியல் அமைப்பு பேரவையை உருவாக்கினாலும் சுதந்திர ஆணைக்குழுக்கள் அனைத்தையும் உருவாக்க அவர் முனையவில்லை. அந்த அரசியல் அமைப்புப் பேரவை கூட ரணில் விக்கரமசிங்கே காலத்தில்தான் சில வருடங்கள் இயங்கியிருந்தன.

மகிந்த ராஜபக்ச ஆட்சிப்பீடம் ஏறியதும் அரசியல் அமைப்புப் பேரவையை இயங்கவிடாமல் தடுத்தார். நியமனங்களை அரசியல் யாப்பினை மீறி தானே மேற்கொண்டார். சில ஆணைக்குழுக்களைத் தவிர ஏனைய ஆணைக்குழுக்கள் செயல்படுவதை கிடப்பில் போட்டார். விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் காரணமாக மகிந்தா அரசு சிங்கள மக்களிடம் இருந்து எந்தவொரு எதிர்ப்பையும் இது சம்பந்தமாக சந்திக்கவில்லை. இக்காரணத்தினால் சட்டத்தின் ஆட்சி இல்லாமல் போனது. குடும்பத்தின் மீது அதிகாரம் குவிக்கப்பட்டது. சட்டத்தை மீறி செயற்படக்கூடிய வகையில் பல நெறிமுறைகள் உருவாகின.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் முடிந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு சமாதானம் மீண்டும் திரும்பிவிட்டதாக கூறி பிரச்சாரம் செய்யும் மகிந்த அரசு, போர் நடைபெற்ற வேளையில் எப்படியெல்லாம் சட்டத்தை மீறி செயற்பட்டார்களோ அதனையே தொடர்ந்து பேண மகிந்தா விரும்புகின்றார். ஆக அவருக்கு தேவைப்பட்டது 18-ஆவது திருத்தச்சட்டம்.

18-ஆவது திருத்த யாப்பானது இரண்டு முக்கிய விடயங்களை உள்ளடக்கியது. ஒன்று 17-ஆவது திருத்தத்தில் உள்ள ஜனாதிபதியின் அதிகாரங்களிற்கான கட்டுப்பாடுகளை இல்லாமல் செய்வது. இரண்டாவது இரண்டு தடவைகள் மட்டும் பதவி வகிக்கலாம் என்ற கோட்பாட்டை இல்லாமல் செய்வது.

அதிகாரம் இறுகிப்போகக்கூடாது என்பதற்காகவே இரண்டு தடவை மட்டும் பதவி வகிக்கலாம் என்ற ஏற்பாடு கொண்டுவரப்பட்டது. குறிப்பாகச் சொல்லப்போனால், அமெரிக்காவில் ஒருவர் இரண்டு தடைவைகளே ஜனாதிபதியாக வரலாம் அதுவும் மொத்தத்தில் எட்டு வருடங்கள் மட்டுமே அப்பதவியில் இருக்கலாம் என்று சட்டயாப்பினூடாக மட்டுப்படுத்தப்பட்டது. ஆனால், சிறிலங்காவில் இரு தடைவைகளிலும் மொத்தத்தில் 12 ஆண்டுகள் பதவிவகிக்க அரசியல் சட்டதில் இடமுண்டு. ஆனால், 18-ஆவது திருத்தத்தின் மூலம் ஒருவர் இரண்டு தடைவைகளுக்கு மேல் ஜனாதிபதியாக வரலாமென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த 18-ஆவது சட்ட திருத்தமானது ஜனநாயகத்திற்கு ஒவ்வாத ஒரு திருத்தம் என்று தான் மொத்தத்தில் கூறவேண்டும்.

யாருக்கு என்ன பலன்?

18-ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி சிறி கோத்தாவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இருந்து பாதயாத்திரை போன்ற பல போராட்டங்களை முன்னெடுத்ததுஃ முன்னெடுக்கவும் உள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் சிலரின் கருத்தின்படி ரணில் தலைவராக உள்ளவரை ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாடுகள் ஒரு மந்தநிலையிலேயே இருக்கும். அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாடுகளுக்கு வரவேற்பு என்பது குறைவாகவே தான் இருக்கும் காரணம் பல சிங்கள மக்கள் ரணில் தலைமையில் இயங்கும் ஐக்கிய தேசியக் கட்சியை வெறுப்பதாகவேதான் உள்ளது. இப்படியாக ஆதங்கப்படுகின்றார்கள் சில முன்னணி ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள். இதனிடையே, பொது அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து பல போராட்டங்களை அறிவித்துள்ளதுடன் சில போராட்டங்களை ஏற்கனவே நடாத்தியுள்ளார்கள்.

பல சிங்கள மக்கள் குறிப்பாக உயர்வகுப்பு மக்கள் இந்த 18-ஆவது திருத்தச்சட்டத்தினை அடியோடு வெறுக்கின்றார்கள். தமிழர்களோ, சிங்கள தேசத்தினால் அமுல்படுத்தப்படும் சட்டங்களினால் ஒன்றும் அலட்டிக்கொள்ள போவது இல்லை காரணம் தமிழ் தேசத்திற்கு ஒரு சட்டம்இ சிங்கள தேசத்திற்கு வேறுவிதமானதொரு சட்டமாகத்தான் இன்று வரை இருந்து வந்துள்ளது. அது எதிர்காலத்திலும் அப்படியே இருக்கும் என்பது தான் உண்மை.

புதிய 18-ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் 13-ஆவது திருத்தச் சட்டத்தில் வடக்கு - கிழக்கு மக்களுக்கு மாகாண சபை மூலம் வழங்கப்பட்ட சில சலுகைகள் கூட பறிக்கப்பட்டுள்ளன. சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படாதிருந்த பொது நிர்வாகம், காவல்துறைக்கான அதிகாரம் ஆகியன இந்தப் 18-ஆவது திருத்தச் சட்ட மூலம் பறிக்கப்பட்டுள்ளன. இப்படியாக தமிழ்மக்களுக்கு விரோதமான ஒரு சட்டத்தை எதிர்த்து தமிழர்கள் ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை நடத்தவோ அல்லது அவர்கள் தமது எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தவோ முடியாதவாறு அவசரகாலச்சட்டம் குறுக்கே நிற்கின்றது. யாழ்ப்பாணத்தில் இந்தத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகச் சுவரொட்டி ஒட்டிய ஜே.வி.பியினர் கூட காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டனர்.

இதேவேளையில் வடக்குக் கிழக்கில் மக்கள் நீண்டகாலமாக வாழ்ந்து வந்த காணிகள் பறிக்கப்பட்டு இராணுவ முகாம்களும் இராணுவக் குடியிருப்புகளும் அமைக்கப்படுகின்றன. இதை எதிர்த்து இந்த மக்கள் போராட்டம் நடாத்தும் ஜனநாயக உரிமையைக் கூட இந்த அவசரகாலச்சட்டம் தடுக்கிறது. ஒட்டுமொத்தத்தில் இந்த அவசரகாலச் சட்டம் காவல்துறை மற்றும் இராணுவ மேலாதிக்கம் நிலவும் ஒரு நிலையை தோற்றுவித்து புனிதமான ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கிறது. இப்படியாக புலம்புகின்றார்கள் தமிழர் தரப்பினர். ஆனால், சிங்கள அரசோ தமிழர்களை போர்மூலம் ஒடுக்கிவிட்டதாக கூறி அவர்களை மென்மேலும் அடிமைகளாக்க இந்த சட்ட திருத்தம் உதவும் என்பது மட்டும் உண்மை.

மகிந்த மற்றும் அவரது குடும்பத்தார் மட்டற்ற மகிழ்ச்சி வெள்ளத்தில் தற்பொழுது மிதக்கின்றார்கள் என்பது மட்டும் உண்மை. இந்த புதிய அரசியல் யாப்பு திருத்தத்தின் மூலம் இவர்களும் இவர்களை சேர்ந்தோருமே நன்மை பெறுவர் என்பது மட்டும் நிஜம். மக்கள் தன்னை ஆதரிக்கும் வரை தான் ஜனாதிபதியாக இருப்பேன் என தம்பட்டம் அடிக்கின்றார் மகிந்தா. எதிர்க்கட்சியினர் வலிமையான வேட்பாளர் ஒருவரை தேடிப்பிடிக்கும் வரை எதிர்காலத்திலும் தானே தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன் என்று கிண்டலுடன் கூறுகின்றார் மகிந்தா.

இந்தவாரம் அலரிமாளிகையில் இடம்பெற்ற பத்திரிகையாளர்கள் மாநாட்டில் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு நளினமாக பதில் கூறிய மகிந்தா, ஒரு பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் கூறியதாவது: மக்களுக்கு தேவையில்லையென்றால் ஜனாதிபதியை அவர்கள் தூக்கி எறிந்து விடுவார்கள். மக்களுக்கு பொறுப்புக்கூறும் வகையிலான ஜனாதிபதியை அவர்களே தெரிவு செய்ய வேண்டும். மக்களோ நாடோ தேவையில்லை என எண்ணி ஜனாதிபதி தனது மனம்போல தான் தோன்றித்தனமாக செயற்படுவாரேயானால் அவர் தேவையில்லையென மக்கள் தீர்மானிப்பார்கள். எனவே, அனைத்தும் மக்கள் கைகளிலேயே தங்கியுள்ளது. அது மாத்திரமன்றி, இரண்டாம் தடவையாக மாத்திரமே ஜனாதிபதி பதவி வகிக்க முடியுமென இருந்தால் அவர் தனது இரண்டாவது பதவிக் காலத்தில் ஏதேச்சாதிகாரத்துடன் நடந்து கொள்ளலாம். மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யபடலாமென்ற வாய்ப்பு இருக்கும் பட்சத்திலேயே அவர் மக்களுக்கு பொறுப்புக்கூறும் விதத்தில் செயற்படுவார். எனவே, இத்திருத்தச் சட்ட மூலம் மக்களுக்கு நன்மைபயப்பதாகவே இருக்கும். இத்திருத்தச் சட்டத்தை தீர்மானிப்பது மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளேயாவர். எனவே, இதற்கு பாராளுமன்றத்தில் பொறுப்புக்கூறும் தன்மை அதிகமாக உள்ளது.

இன்னொரு பத்திரிகையாளரின் கேள்வி: 18-ஆவது திருத்தம் மூலமாக ஜனாதிபதிக்கு அதீத அதிகாரங்கள் வழங்கப்படுவதுடன், பொலிஸ் பாதுகாப்பு என்பவை தொடர்பிலும் தீர்மானங்களை நிறைவேற்றும் பொறுப்பு அதிகபட்சம் வழங்கப்படுமென கூறப்படுகின்றமை குறித்து, நீங்கள் கூற விரும்புவது என்ன? இதற்கு பதிலளிக்கையில் மகிந்தா கூறியதாவது: அதீத பலம் என்பது என்ன? அதனை யார் கொடுத்தது. ஏற்கனவே, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையில் இவை அனைத்தும் உள்ளன. ஆனால், 18-ஆவது அரசியல் திருத்தத்தின் மூலம் ஜனாதிபதி ஒருவர் பாராளுமன்றத்திற்கு அதிகூடிய பொறுப்புக்களை கூற வேண்டியவராக இருக்கிறார். அத்துடன் மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை பாராளுமன்றத்திற்கு சமுகமளிக்க வேண்டியவராக இருக்கிறார். இவை அனைத்தும் பாராளுமன்றத்தின் ஜனநாயக விழுமியங்களை பாதுகாப்பதாக அமையும்.

இன்னொரு கேள்வி: எத்தனை தடவைகள் ஜனாதிபதியாக வருவதற்கு விரும்புகின்றீர்கள்? இதற்கு பதிலளிக்கையில், மகிந்தா ஏளனமாக கூறியதாவது: நான் எத்தனை தடவை ஜனாதிபதியாக இருக்க வேண்டுமென நீங்கள் விரும்புகிறீர்கள் என பதிலுக்கு கேள்வி எழுப்பியதுடன் அது மக்களைப் பொறுத்த விடயம். மக்கள் என்னை ஆதரிக்கும் வரை நான் ஜனாதிபதியாக இருப்பேன். அது மாத்திரமன்றி, எதிர்க்கட்சியினர் வலிமையான வேட்பாளர் ஒருவரை தேடிப் பிடிக்கும் வரை எதிர்காலத்திலும் நானே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன்.

13-ஆவது அரசியல் சட்டதிருத்தமானது, தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தை மழுங்;கடிக்க செய்யப்பட்ட ஒன்று. குறிப்பாக இந்திய மற்றும் சிறிலங்கா அரசுகளின் சூழ்ச்சியென்றுதான் சொல்லவேண்டும். 17-ஆவது திருத்தம் என்பது வெறும் அரசியல் காய்நகர்த்தலுக்காகவே உருவாக்கப்பட்டது. 18-ஆவது திருத்தம் என்பது தனிநபர் அதிகாரத்தை நிலைநாட்டி தாம் விரும்பியவாறு நாட்டை சர்வாதிகார கோட்பாட்டுடன் வழி நடாத்துவதே அதனின் நோக்கம்.

சிங்கள தேசத்தினால் உருவாக்கப்படும் அரசியல் யாப்புக்களாலையோ அல்லது திருத்தங்களாலையோ தமிழர் தேசத்திற்கு ஒரு விமோசனமும் கிடையாது. இதற்காக தமிழர்கள் அதிகம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என்பதுதான் பொதுவான கருத்து. சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி வலிமையான தலைமையுடன் அரசியல் களம் புகுந்தால் நிச்சயம் மகிந்தாவின் அரசை தோற்கடிக்கலாம். ஆனால், அரசியலில் பலவீனமான ரணிலினால் எவ்வாறான அரசியல் மாற்றத்தை சிறிலங்காவில் உண்டுபண்ண முடியும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

இவ் ஆய்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல்: nithiskumaaran@yahoo.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.