Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒட்டமாவடியில் சாட்சியம் அளித்தோர்களில் 95 வீதத்தினர் அரச படைகளினால் காணாமல்போனோர் உறவினர்கள்

Featured Replies

செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 12, 2010

ஞாயிற்றுக்கிழமை ஓட்டமாவடி பிரதேசத்தில் சாட்சியங்களைப் பதிவு செய்த ஆணைக்குழு நேற்று ஏறாவூர்பற்று, செங்கலடி பிரதேச செயலகத்தில் சாட்சியங்களைப் பதிவு செய்தது. இங்கு காணாமல்போன, கடத்தப்பட்ட உறவுகளை கண்டுபிடித்துத் தருமாறு சுமார் 700 மகஜர்கள் சமர்ப்பிக்கப்பட்டதுடன் சுமார் 35 பேர் வரை சாட்சியமளித்தனர்.

யுத்தம் முடிவடைந்து அனைவரும் தமது குடும்பத்தினருடன் வாழும் நிலையில் எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்று அறியாமல் தவிக்கின்றோம். தயவுசெய்து எமது கணவன்மாரை, சகோதரர்களை, பிள்ளைகளை மீட்டுத் தாருங்கள் என்று கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவிடம் நேற்று திங்கட்கிழமை பெண்கள் பலர் கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்தனர்.

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமர்வுகளை நடத்திவரும் ஆணைக்குழுவிடமே பெண்கள் பலர் இந்த கோரிக்கையை விடுத்திருக்கின்றனர்.கடந்த சனிக்கிழமை முதல் நேற்று திங்கட்கிழமை வரை கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மட்டக்களப்பில் பல்வேறு தரப்பினர்களிடமிருந்து சாட்சியங்களைப் பதிவு செய்தது. சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் சாட்சியங்களைப் பதிவு செய்த ஆணைக்குழு பின்னர் வவுணதீவு பிரதேசத்தில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதியைப் பார்வையிட்டதுடன், இரவு காத்தான்குடி பள்ளிவாசல் சம்மேளனத்தினையும் சந்தித்துக் கலந்துரையாடியது.

ஞாயிற்றுக்கிழமை ஓட்டமாவடி பிரதேசத்தில் சாட்சியங்களைப் பதிவு செய்த ஆணைக்குழு நேற்று ஏறாவூர்பற்று, செங்கலடி பிரதேச செயலகத்தில் சாட்சியங்களைப் பதிவு செய்தது. இங்கு காணாமல்போன, கடத்தப்பட்ட உறவுகளை கண்டுபிடித்துத் தருமாறு சுமார் 700 மகஜர்கள் சமர்ப்பிக்கப்பட்டதுடன் சுமார் 35 பேர் வரை சாட்சியமளித்தனர்.

அளிக்கப்பட்ட சாட்சியங்களில் பெரும்பாலானவை கடத்தப்பட்ட,காணாமல் போன சம்பவங்களாகக் காணப்பட்டன. செங்கலடிப் பிரதேச செயலகத்திற்குச் சாட்சியமளிக்க வந்தவர்களில் 90 சதவீதமானவர்கள் பெண்களாகவே காணப்பட்டனர். அனைவரும் கணவன்மாரை, பிள்ளைகளை இழந்தவர்களாகக் காணப்பட்டனர்.பதுளை வீதியில் இருந்து சாட்சியமளிக்க வருகைதந்தவர்கள் கறுத்தப்பாலத்தில் வைத்து இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டதாகவும் விடுதலைப்புலிகளின் பிளவின் பின்னர் பிரிந்து வந்த இரு குழுக்களினைச் சேர்ந்தவர்களினாலும் அழைத்துச்செல்லப்பட்டதாகவும் பின்னர் அவர்களது தகவல் தெரியாதுள்ளதாகவும் தாங்கள் தங்களது உறவுகளுடன் வாழவேண்டுமென்றும் அவர்களை மீட்டுத்தாருங்கள் என்றும் கண்ணீர் மல்க கேட்டதை காணமுடிந்தது.தவராசா சந்திராவதி (எல்லை வீதி, ஏறாவூர்) சாட்சியமளிக்கையில்;

எனது மகன் கலைச் செந்தூரன் (14 வயது) தனது நண்பர்களுடன் ஏறாவூரிலுள்ள சாப்பாட்டுக்கடை ஒன்றில் சாப்பிட்டுக்கொண்டு இருந்தபோது மகனையும் ஏனைய இருவரையும் இனந்தெரியாதவர்கள் பிடித்துச் சென்றுள்ளனர்.இந்தச் சம்பவம் 2009.11.25 ஆம் திகதி இடம்பெற்றது. எந்த அமைப்புடனும் எனது மகனுக்கு தொடர்பு இல்லை. இது தொடர்பாக ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடு செய்தேன். எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனது மகனை மீட்டுத்தாருங்கள் என வேண்டுகோள் விடுத்தார்.இதன்போது ஏனைய இரண்டு இளைஞர்களதும் பெற்றோர்களும் அருகாமையில் நின்று தங்களது பிள்ளைகளையும் அப்போது கடத்தியதாக தெரிவித்தார்கள்.

சுந்தரம் பரமேஸ்வரி (பெரிய கொலனிபங்குடாவெளி) சாட்சியமளிக்கையில்; எனது தம்பி சின்னத்தம்பி என அழைக்கப்படும் சுந்தரம் நகுலேஸ்வரன் என்பவரை 2007.12.25 ஆம் திகதி கறுத்தப்பாலத்தில் நிற்கும் சி.ஐ.டி.யினர் மோட்டார் சைக்கிள் மற்றும் ஆட்டோவில் ஜக்கட் போட்டுக்கொண்டு வந்து பிபடித்துச்சென்றதாகவும் பின்னர் அவர்கள் பிடிக்கவில்லை என்று கூறியதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் சாட்சியமளிக்கையில்; வழமையாக செங்கலடி கறுத்தப்பாலத்தில் நிற்பவர்கள் ஒருநாள் என்னுடன் தம்பி வந்த போது விசாரித்தார்கள். அவர்கள் இருவரையும் நன்றாக தெரியும்.பெயரும் தெரியும் என அவர் பெயரையும் குறிப்பிட்டார். பின்னர் வீட்டில் வந்து பிடித்துச்சென்றனர்.பின்னர் அவர்களிடம் போய்க்கேட்டபோது எனக்கு செருப்பைக்கழற்றி அடித்தார்கள்.இப்போது அதில் ஒருவர் இறந்துவிட்டார்.மற்றவர் எங்கு என்று தெரியாது.கூடவந்த ஏனைய இருவரையும் இனந்தெரியாது.கடந்த வருடம் பத்திரிகையில் கடத்தப்பட்டவர்கள் பட்டியலில் எனது தம்பியின் பெயர் வந்தது. மகசின் சிறைச்சாலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.அங்கும் போனோம். அங்கு இல்லை. எனது தம்பியை கண்டு பிடித்துத்தாருங்கள் என்றார்.

சுப்பிரமணியம் மாரிமுத்து (வந்தாறுமூலை) சாட்சியமளிக்கையில்;

எனது மகன் இரத்தின சிகாமணி புண்ணியமூர்த்தி விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து பிளவுபட்டபோது வீட்டுக்கு வந்தார்.அவரது இயக்கப் பெயர் சுடர்ஒளி.அவரை விடுதலைபுலியில் இருந்து குறிப்பிட்ட குழுவினர் தங்களுடன் வருமாறு பல தடவை கேட்டனர்.நாங்கள் மறுத்து விட்டோம். 2007.07.17 ஆம் திகதி வீட்டில் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது கிரானில் அலுவலகம் அமைத்து இருந்த குழு உறுப்பினர் பிடித்துச் சென்றார் எனத் தெரிவித்த அவர் பிடித்துச் சென்றவரின் பெயரை குறிப்பிட்டு அவரை விசாரித்து தனது பிள்ளையை மீட்டுத் தருமாறு கண்ணீர் மல்கி வேண்டுகோள் விடுத்தார்.

கந்தக்குட்டி நவரட்ணராசா (மகிழவெட்டுவான் ஆயித்திய மலை) சாட்சியமளிக்கையில்;

எனது அண்ணன் கந்தக்குட்டி குழந்தை வடிவேலு 1993.03.25 ஆம் திகதி வேளாண்மை வெட்டி நெல் ஏற்றி வந்தபோது செங்கலடி கறுத்தப்பாலத்தில் வைத்து இராணுவம் இறக்கி எடுத்ததாகவும் பின்னர் அவர்களிடம் கேட்டபோது தாங்கள் பிடிக்கவில்லை எனத் தெரிவித்ததாகவும் கூறினார்.அவர் ட்ரக்டரில் வந்த சாரதி. அன்றைய தினமே இராணுவம் அவரை தன்னுடன் வந்தபோதே இறக்கி எடுத்ததாக எமக்கு தெரியப்படுத்தினார். எமது அண்ணாவை கண்டுபிடித்துத் தாருங்கள் என்றார்.

மாணிக்கம் சரஸ்வதி (யூனியன் வீதி கிரான்)சாட்சியமளிக்கையில்;

தனது குடும்பத்தில் இருந்து கணவன் மகன், மகள், மருமகன் ஆகிய நான்கு பேரை இழந்துள்ளதாகவும் மருமகனை கிண்ணையடியில் வைத்து சுட்டுவிட்டதாகவும் ஏனையவர்கள் பற்றித் தகவல் இல்லை. கண்டுபிடித்துத் தாருங்கள் என்றார்.

அவர் தொடர்ந்து சாட்சியமளிக்கையில்;

எனது கணவன் கோபாலப்பிள்ளை 1985 ஆம் ஆண்டு காணாமல் போனார். மகன் வசந்தகுமார் (19 வயது) 1998ஆம் ஆண்டு இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டார்கள். எனது மருமகன் விநாயகம் கமலதாஸன் 2006.04.28ஆம் திகதி கிண்ணையடியில் வைத்து விடுதலைப் புலிகளில் இருந்து பிரிந்த குழுவினரால் (குழுவைக் குறிப்பிட்டார்)சுடப்பட்டார். அதேகுழுவின் உறுப்பினர் ஒருவரால் (பெயரைக் குறிப்பிட்டு) 2007 மார்ச் 7 ஆம் திகதி எனது மகள் கோபாலப்பிள்ளை பாக்கியலெட்சுமி கொழும்பிலிருந்து கடவுச்சீட்டை புதுப்பித்துக் கொண்டு வீடு வந்து இறங்கியதும் அழைத்துச்சென்றனர்.இதுவரை எந்த தகவலும் இல்லை

.எனவே எனது கணவன், மகன், மகளை சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்டு மீட்டுத் தருமாறுகேட்கின்றேன் என கண்ணீர் மல்கியவாறு கேட்டுக்கொண்டார்.

உதயகுமார் கிருஷ்ணகுமாரி (சந்திவெளி) சாட்சியமளிக்கையில்;

2009.05.17ஆம் திகதி வன்னியில் வைத்து ஒரு நாளைக்குள் அனைவரும் வெளியேற வேண்டும் என இராணுவத்தினரால் விடுக்கப்பட்ட அறிவுறுத்தலுக்கமைய நாங்கள் வெளியேறி வந்தபோது எனது கணவனை பிடித்துவிட்டு எங்களை பஸ் மூலம் அனுப்பிவிட்டார்கள். எனது கணவன் பூசா முகாமில் இருப்பதாகத் தெரிவித்தார்கள். அங்கு எனது கணவன் இல்லை. எனது கணவனை கண்டுபிடித்துத் தாருங்கள் என்றார்.

நாகராசா மஞ்சுளாதேவி சாட்சியமளிக்கையில்;

எனது கணவன் அமிர்தலிங்கம் உதயகுமார் (23 வயது) கடந்த 2005/05/04ஆம் திகதி மோட்டார் சைக்களில் வந்த மூன்று பேர் வீட்டில் வைத்து கூட்டிச்சென்றார்கள். சிங்களம் கதைத்தார்கள். தாங்கள் பொலிஸ் எனத் தெரிவித்தார்கள். கொண்டுபோகும்போது கையைக் கட்டியே ஏற்றிச்சென்றார்கள். ஏறாவூர் பொலிஸில் போய் கேட்டபோது தாம் பிடிக்கவில்லை எனவும் தங்களுக்குச் சம்பந்தம் இல்லை எனவும் தெரிவித்தனர். எனது கணவனை கொண்டுசெல்லும்போது எனது இரண்டாவது பிள்ளை பிறந்து 11 நாள். தற்போது நான் எனது பிள்ளைகளை பராமரிக்க முடியாமல் கஷ்டப்படுகிறேன் என்று தெரிவித்து கணவனை மீட்டுத்தருமாறு வேண்டினார்.

எச்.எம். முபின் (207 முனையாளடி வீதி ஏறாவூர்6) சாட்சியமளிக்கையில்;

எனது தந்தை எ. கஜாத்து முகமது (63) வாகன உதிரிப்பாகம் விற்பனை செய்பவர்.2007.11.12 ஆம் திகதி ஏறாவூரில் இருந்து கறுவாக்கேணி சென்றபோது காலை 6.30 மணிக்கு தமிழ் குழுவால் கடத்தப்பட்டார். (குழுவை குறிப்பிட்டு) அவரை கடத்திச் சென்றதை கிரானில் உள்ள அப்பாவின் நண்பர்கள் தெரிவித்தனர். கிரான் சந்தியில் வைத்து கடத்தப்படும்போது 100 மீற்றரில் இராணுவத்தினர் நின்றனர். இரண்டு வாரத்தின் பின் குறிப்பிட்ட குழுவை அடையாளப்படுத்தி தீவுச் சேனையில் வைத்து இருப்பதாக தெரிவித்தனர்.கடவுச்சீட்டை பெற்றுச்சென்றனர். அவரை தெரியும் (பெயரை குறிப்பிட்டு) அவர் ஏறாவூர் பிரதேச சபையில் போட்டியிட்டவர். அவர் அப்பாவை மீட்டுத் தருவதாக குறிப்பிட்டார். மீட்டுத் தந்தால் தேர்தலுக்குரிய செலவை தருவதாக தெரிவித்து இருந்தோம். ஆனால், அப்பாவை மீட்கமுடியவில்லை. ஏறாவூர் பொலிஸிடம் முறைப்பாடு செய்துள்ளோம்.அப்பாவை மீட்கமுடியவில்லை. மரணச் சான்றிதழையாவது பெறமுடியாமல் உள்ளது. மரணப் பதிவு கட்டாயம் வேண்டும். பெற ஏற்பாடு செய்யுங்கள் என்றார்.

இங்கு சுமார் 35 பேர் நேரடியாக சாட்சியமளித்ததுடன், இரகசியமாக சாட்சியங்களும் பதிவு செய்யப்பட்டன.காலை 8.45 மணிமுதல் முற்பகல் 11.30 மணிவரை பகிரங்க சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.சாட்சியமளித்தவர்களுக்கு தாங்கள் முடியுமானவரை தங்களுக்கு நல்ல பதிலை தர முயற்சிப்பதாக ஆணைக்குழு தெரிவித்தது.

Eelanatham

நல்லிணக்க ஆணைக்குழுவானது வெறும் கண்துடைப்பாக அமைந்து விடக்கூடாது:த.தே.கூ

கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாடுகள் வெறுமனே கண்துடைப்பாக அமைந்துவிடக் கூடாது. எதிர்பார்ப்புகளுடன் சாட்சியமளிக்கின்ற மக்களின் மனங்களை வெல்லும் வகையில் அரசாங்கம் நடந்து கொள்வது அவசியமானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. நல்லிணக்க ஆணைக்குழுவினால் வடக்கிலும் கிழக்கிலும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது பெரும்பாலான தமிழ் மக்கள் சாட்சியமளித்த அதேவேளை மனுக்களையும் சமர்ப்பித்துள்ளனர். இது குறித்து கருத்து வெளியிடுகையிலேயே கூட்டமைப்பின் பிரதிச் செயலாளரும் வன்னி மாவட்ட எம்.பியுமான செல்வம் அடைக்கலநாதன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

"இலங்கையைப் பொறுத்தவரையில் இங்கு இதற்கு முன்னரும் பல ஆணைக்குழுக்கள் நிறுவப்பட்டு விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும் அந்த ஆணைக்குழுக்களும் அதன் செயற்பாடுகளும் இறுதியில் புஸ்வாணமானதை நாம் கண்டிருக்கின்றோம். அவ்வாறான ஆணைக்குழுக்களினூடாக மக்களுக்கு தீர்வு கிட்டவில்லை.

இந்நிலையில் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கானது என்ற தொனியில் ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டு விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. யுத்தமும் நிறைவடைந்து மக்களும் இழப்புக்களைச் சந்தித்து நொந்து போயுள்ள நிலையில் தற்போது அமைக்கப்பட்டுள்ள நல்லிணக்க ஆணைக்குழுவில் எமது மக்கள் பெரும் நம்பிக்கையைக் கொண்டுள்ளனர்.

நிவாரணம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் மிகவும் ஆர்வமாக சாட்சியமளித்து வருகின்றனர். எனவே மக்களின் நம்பிக்கைக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் குந்தகம் ஏற்படாத வகையில் இந்த ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் அமைய வேண்டும். இதற்கு அரசாங்கத்தின் ஒத்துழைப்பும் அவசியமானது.

நமது உறவுகளைத் தொலைத்து நிற்கின்றவர்களின் நிலைமைகளை இவ்வாணைக்குழுவும் அரசாங்கமும் புரிந்து கொண்டு செயற்பட வேண்டியது இன்றியமையாததாகும்.

எனவே முன்னர் அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்களைப் போல் அல்லாது தற்போதைய கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் வகையில் அமைய வேண்டும். மாறாக இதுவும் ஒரு கண் துடைப்பாக இருந்து விடக்கூடாது என்பதே தமிழ் தேசியக்கூட்டமைப்பின் எதிர்பார்ப்பாகும்" என்றார்.

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=27785

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.