Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியாவில் கிடைத்த கசப்பான அனுபவம்

Featured Replies

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஒரு வழியாக லண்டனுக்குச் சென்று திரும்பி வந்து விட்டார்.

அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடந்த வியாழக்கிழமை பிற்பகல் வந்து இறங்கிய போது அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனத் திரண்டு பெரிய வரவேற்புக் கொடுக்கப்பட்டது. லண்டனில் எதையோ பெரிதாகச் சாதித்து விட்டுத் திரும்பியது போன்று வரவேற்பு ஏற்பாடுகள் பலமாக இருந்தன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ எதற்காக லண்டனுக்குச் சென்றாரோ அந்த நோக்கம் நிறைவேறவில்லை. ஏமாற்றத்துடன் திரும்பி வரநேர்ந்தது.

இதை மறைக்கும் விதமாக விமான நிலையத்தில் பெரியளவிலான வரவேற்பு ஏற்பாடுகள் நடந்தன.

பிரித்தானியாவின் புகழ்பெற்ற ஒக்ஸ்போர்ட் யூனியனில் உரையாற்றுவதற்காக கடந்த மாதம் பிரித்தானியாவுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தார் ஜனாதிபதி மஹஜந்த ராஜபக்ஸ. ஆனால், திடீரென அவரது பயணம் ஒத்திவைக்கப்பட்டது. உள்நாட்டில் அதிக வேலைப்பளு இருப்பதால் தான் பயணம் கைவிடப்பட்டதாகக் கூறியது அரசாங்கம். ஆனால், வெளிநாட்டு ஊடகங்களோ பிரித்தானியத் தமிழர் பேரவையின் எச்சரிக்கையினால் தான் பயணம் ரத்துச் செய்யப்பட்டதாக செய்தி வெளியிட்டன.

கடந்த வருடம் இடம்பெற்ற இறுதிப்போரின் போது இடம்பெற்ற போர்க் குற்றங்களுக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும், பிரித்தானியா வரும் போது அவர் கைதாகலாம் என்றும் செய்திகள் வெளியாகின. இதன்காரணமாக இலங்கை அரசுக்கு ஜனாதிபதியின் பிரித்தானியப் பயணம் ஒரு கௌரவப் பிரச்சினையாகவே மாறியது.

இந்தநிலையில் தான் ஒக்ஸ்போர்ட் யூனியனில் கடந்த 2 ஆம் திகதி ஜனாதிபதியின் சிறப்புரையை நிகழ்த்த ஒழுங்கு செய்யப்பட்டது.

ஜனாதிபதி பிரித்தானியா செல்வது அவ்வளவு பாதுகாப்பானதல்ல என்று ஏற்கனவே பல தரப்புகளில் இருந்தும் எச்சரிக்கைகள் விடப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கனிறன். அதையெல்லாம் புறந்தள்ளி விட்டு கடந்த திங்கட்கிழமை லண்டனுக்குப் புறப்பட்டுச் சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு விமானத்தில் இருந்து இறங்க முன்னரே சிக்கல் ஆரம்பித்தது.

ஹீத்ரோ விமான நிலையத்தின் 4 ஆவது நுழைவாயில் விருந்தினர் பகுதியில் கூடியிருந்த நூற்றுக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர். இதன்காரணமாக 5 அவது நுழைவாயில் வழியாக அவர் அழைத்துச் செல்லப்பட்டார். விமான நிலையத்தில் இத்தகைய ஆர்ப்பாட்டம் நடைபெறுவதை தடுப்பதற்கு பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்கிறது இலங்கை அரசாங்கம்.

அதுமட்டுமன்றி, ஒக்ஸ்போர்ட் யூனியனில் சிறப்புரை நடைபெறும் போது பெரும் எண்ணிக்கையான தமிழர்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்துவதற்கும் பிரித்தானிய காவல்துறை அனுமதி அளித்தது. இவையெல்லாம் இலங்கை அரசுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தன.

புலம்பெயர் தமிழர்களின் போராட்டம் பற்றிய எச்சரிக்கைகள் வலுவடைந்து வந்த நிலையில், பொலிஸாருடன் கலந்துரையாடிய ஒக்ஸ்போர்ட் யூனியன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் உரையை ரத்துச் செய்வதாக அறிவித்தது. பாதுகாப்பு காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் ஒக்ஸ்போர்ட் யூனியன் கூறியது.

ஆனால் இலங்கை அரசாங்கமானது இது நிர்ப்பந்தங்களின் பேரில் எடுகப்பட்ட முடிவு என்றும், அதை ஜனாதிபதிக்கு அனுப்பிய தனிப்பட்ட கடிதத்திலும், வெளியிட்ட அறிக்கையிலும் இருந்து தெளிவாகப் புரிந்துகொள்ள முடிவதாகக் கூறியுள்ளது.

பிரித்தானிய அரசுக்கு அல்லது ஒக்ஸ்போர்ட் யூனியனுக்கு அழுத்தம் கொடுக்கும் அளவுக்கு யார் இருக்கின்றனர் என்பது முக்கியமான கேள்வி. ஏனென்றால் இந்த விவகாரத்தில் பிரித்தானிய அரசு தாம் எந்தவகையிலும் சம்பந்தப்படவில்லை என்று கையை விரித்து விட்டது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பிரித்தானியாவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவில்லை. எனவே அவரது கௌரவத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் பிரித்தானிய அரசாங்கம் இருக்கவில்லை. அவருக்கான பாதுகாப்பை மட்டுமே அளிக்க முடிந்தது. இலங்கை அரசாங்கம் தேவையின்றி ஒரு பொறியில் மாட்டிக் கொண்டது என்றே பலரும் இப்போது விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.

ஒக்ஸ்போர்ட் யூனியனில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் உரைக்கு ஏற்பாடு செய்திருந்தது யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இலங்கை அரசாங்கமோ இது ஒரு மிகப்பெரிய கௌரவம் என்று பிரசாரம் செய்திருந்தது. அதன்விளைவாகவே ஒக்ஸ்போர்ட் யூனியன் உரையை நிறுத்தியபோது பாரிய அவமானமாக கருதும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும், அரசாங்கத்துக்கும் மட்டுமல்ல முழுநாட்டுக்குமே அவமானம் என்று நாடாளுமன்றத்தில் அமைச்சர்கள் குரல் கொடுத்திருக்கிறார்கள். இந்தநிலை ஏற்படுவதற்கு பிரித்தானியாவுடன் சுமுகமான உறவைப் பேணத் தவறியதும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது. பிரித்தானிய அரசுடன் அண்மைக் காலமாகவே இலங்கை அரசு இராஜதந்திர ரீதியாக மோதி வந்துள்ளது.

அதிலும் அண்மையில் பிரித்தானிய பிரதமர் போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று விடுத்த வேண்டுகோள் இலங்கை அரசை வெறுப்படையச் செய்திருந்தது. சில வாரங்களுக்கு முன்னர் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் பிரித்தானியா சென்று வந்த போதும் அது அவ்வளவு வெற்றிகரமான பயணமாக அமையவில்லை. மொத்தத்தில் பிரித்தானிய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் ஒரு இனம்தெரியாக இடைவெளி இருந்து கொண்டிருந்தது.

அதன் காரணமாகப் பிரித்தானிய அரசு ஜனாபதிதி மஹிந்த ராஜபக்ஸவின் பயணம் தொடர்பான விடயத்தில் அவ்வளவாக அக்கறை காண்பிக்கவில்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தனிப்பட்ட பயணமாகவே பிரித்தானியா சென்றதால் அதுபற்றி அலட்டிக் கொள்ளாமல் ஒதுங்கி நின்று கொண்டது பிரித்தானியா.

லண்டன் விமான நிலையத்தில் மகிந்த ராஜபக்ஸவுக்கு எதிராகப் போராட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டதே ஆச்சரியத்துக்குரியதொரு விடயம் தான். இலங்கைக்கும், பிரித்தானியாவுக்கும் இடையில் அந்த இடைவெளி ஏற்பட்டிருக்காது போனால் இது நடந்திருக்குமா என்பது கேள்விக்குரியதே.

ஒக்ஸ்போர்ட் யூனியனில் மஹிந்த ராஜபக்ஸ உரை நிகழ்த்தும் போது வெளியே நடத்தப்படும் போராட்டங்களைக் கட்டுப்படுத்தவோ அல்லது தடுக்கவோ பிரித்தானிய அரசுக்கு வல்லமை இருக்கவில்லை என்று ஒருபோதும் வாதிட முடியாது.

ஆனால், பிரித்தானியா அந்த விவகாரத்துக்குள் மூக்கை நுழைத்துக் கொள்ள விரும்பவில்லை. ஒருவேளை பிரித்தானிய அரசு இதை விரும்பியிருக்கலாம். இதன் காரணமாக ஒக்ஸ்போர்ட் யூனியன் பொலிஸாரின் ஆலோசனையின் பேரில் உரையை நிறுத்தி விட்டது. இது இலங்கை அரசசாங்கத்துக்கு மோசமானதொரு அனுபவமாக அமைந்து விட்டது.

இதுபோன்றதொரு சங்கடத்தை எந்தவொரு தலைவரும் சந்தித்ததில்லை என்றே கூறலாம்.

ஒக்ஸ்போர்டில் உரை நிகழ்த்துவது மிகப்பெரிய கெளரவம் என்று பிரசாரம் செய்த அரசாங்கம், இப்போது அங்கு உரையாற்றுவதற்கான சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளதாக பிரசாரத்தில் இறங்கியுள்ளது. சுதந்திர ஜனநாயக நாட்டில் சுதந்திரமாக கருத்தை வெளியிட உரிமை இல்லை என்று கூறுகிறது.

இலங்கை அரசாங்கம் வெளிப்படையாகவே பிரித்தானிய அரசின் மீது குறை கூற ஆரம்பித்துள்ளது. நாடாளுமன்றத்தில் இது வெளிப்பட்டது. பிரித்தானியத் தூதரகத்தின் முன்பாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திலும் இது வெளிப்பட்டது.

மொத்தத்தில் இது இலங்கை அரசுக்கு ஒரு மிகப்பெரிய நெருக்கடியான விவகாரமாக மாறியுள்ளது. இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு இப்படியொரு சறுக்கல் ஏற்படும் என்று அவர் கொஞ்சமும் நினைத்திருக்கமாட்டார்.

இந்தச் சறுக்கலை அவர் தவிர்த்திருக்கலாம். அதற்கு நிறையவே வாய்ப்புகள் இருந்தன.

இதனிடையே பிரித்தானியாவில் போர்க்குற்ற வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது மேலும் பலருக்கு பிரித்தானியா பற்றிய கனவுகளை மறக்கச் செய்யும் வகையில் அமைந்துள்ளது.

இறுதிப்போரின் போது போர்க்குற்றங்கள் ஏதும் நடக்கவில்லை என்று நிரூபிக்கும் வரை பிரித்தானியாவுடனான உறவுகள் சீர்செய்யப்படும் வரை- இலங்கை அரசின் முத்த தலைவர்களுக்கும் படை அதிகாரிகள் பலருக்கும் அது ஒரு கசப்பான பூமியாகவே இருக்கப் போகிறது.

-கே.சஞ்சயன்

http://www.tamil.dailymirror.lk/index.php/2010-08-31-14-50-37/12522-2010-12-05-20-27-10.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.