Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெயர் குறிப்பிடாத மறைவிடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒன்பது ஆயிரம் பேருக்கும் நடந்தது என்ன

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெயர் குறிப்பிடாத மறைவிடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒன்பது ஆயிரம் பேருக்கும் நடந்தது என்ன

* Friday, December 10, 2010, 10:40

இந்த அவசரகால விதிகள் மீதான நீடிப்புப் பிரேரணையில் பேசுவதற்கு முன் இந்த சபையில் 18 ஆவது திருத்தச்சட்டம் மீதான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் நடந்த இரண்டு கீழ்த்தரமான நிகழ்வுகளை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.அதாவது ஜெனரல் சரத் பொன்சேகா பேசுவதற்காக சபாநாயகரால் அழைக்கப்பட்டபோது அவர் எழுந்து பேச முற்பட்ட வேளையில் ஆளும் கட்சியைச் சேர்ந்த 11 உறுப்பினர்கள் அவர் முன்னேவந்து மிகவும் கீழ்த்தரமாக உரக்கச் சத்தமிட்டு அவரைப் பேசவிடாது அவர் பேசி முடிக்கும் வரையில் பேசிக்கொண்டிருந்தனர். இதனால் கௌரவ ஜெனரல் சரத் பொன்சேகா அவர்கள் என்ன பேசினார் என்பதைக்கூட எங்களால் கேட்க முடியவில்லை.

இரண்டாவதாக த.தே.கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.ஏ.சுமந்திரன் பேச அழைக்கப்பட்டபோது அவர் முன்னே வந்த சில ஆளுங்கட்சி உறுப்பினர்கள் “கொட்டியா’ “கொட்டியா’ (“புலி’ “புலி’) என்று கூச்சலிட்டு அவரைப் பேசவிடாது இடையூறு செய்தனர். 1956,1958,1977 மற்றும் 1983 ஆம் ஆண்டுகளில் உங்களைச் சார்ந்தவர்கள் தமிழர்களை உயிருடன் பெற்றோல் ஊற்றி எரித்தார்கள். ஏழு மாகாணங்களில் அவர்களுடைய வாழ்வாதரங்கள், இருப்பிடங்கள் அழித்தொழிக்கப்பட்டன. எஞ்சியவர்கள் கப்பலில் ஏற்றப்பட்டு யாழ்ப்பாணத்திற்கும் மட்டக்களப்பிற்கும் அனுப்பப்பட்டனர். ஏனென்றால் யாழ்ப்பாணமும் மட்டக்களப்புமே அந்தநேரத்தில் தமிழர்களுக்கு பாதுகாப்பான இடமென அப்போதைய அரசாங்கம் கருதியது.

1983 ஆம் ஆண்டு இனப்படுகொலையின் பின்னர் தமிழர்களாகிய நாம் எங்களைக் காப்பாற்றுவதற்காக ஆயுதமேந்த நிர்ப்பந்திக்கப்பட்டோம். 1983 ஆம் ஆண்டுக் கலவரம் தான் பிரபாகரனை உருவாக்கியதென்றால் அதனை யாரும் மறுக்க முடியாது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் என்று அழைக்கப்படும் நாங்கள் இந்த சபைக்குள் கௌரவமாக நடந்துகொள்வது மட்டுமன்றி இந்த சபையினுடைய கண்ணியத்தையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். இந்த சபையினுடைய ஒவ்வொரு உறுப்பினரும் எவ்வித இடையூறுமின்றி இங்கு பேசுவதற்கு உரித்துடையவர்கள். கடந்த 18 ஆவது திருத்தச் சட்டமூல விவாதத்தின்போது நடைபெற்ற இச்சம்பவங்களையிட்டு நான் மிகவும் மனம் வருந்துகின்றேன். இனிமேலாவது பாராளுமன்ற உறுப்பினர்களை எந்தவித இடையூறுமின்றி பேசுவதற்கு இடமளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

அவசரகால விதிகளைப் பொறுத்தவரையில் இந்த நாட்டிற்கு இப்போது உண்மையாகவே அவசரகாலச் சட்டவிதிகள் தேவைதானா என்று பிரதமரைப் பார்த்துக் கேட்கின்றேன். ஜனாதிபதியின் சில முக்கிய அமைச்சர்களும் “இலங்கையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டது’ என்று உலகத்திற்கு கூறிக் கொணடிருக்கும் போது அவசரகாலச் சட்ட விதிகளுக்கான தேவைதான் என்ன? கலவரம் ஏதும் ஏற்பட்டு உணவுகூட பரிமாற முடியாத அவசரகாலநிலை உருவாகியிருக்கும்போது மட்டுமே அவசரகால சட்டவிதிகளைக் கொண்டுவர முடியும். ஆனால் தற்போது அவ்வாறான அவசரகால நிலையேதும் இல்லாத வேளையில் இந்த நாட்டை ஆள்வதற்காக ஏன் அவசரகால விதிகள் தேவையென்று அதனை ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்காக பிரதமர் எங்களைக் கேட்டு நிற்கிறார்?

என்னைப் பொறுத்தவரையில் இந்த அவசரகால ஒழுங்குவிதிகள் தமிழர்களை மட்டுமே பாதிப்பதாலும் தமிழ் அரசியல் கைதிகளை தொடர்ந்தும் சிறைச்சாலைகளிலும், முகாம்களிலும் தடுத்து வைத்திருப்பதற்காக மட்டுமே இவ் அரசாங்கத்திற்கு அவசரகால ஒழுங்குவிதிகள் தேவைப்படுகின்றன என்றே கருதுகின்றேன்.பெயர் குறிப்பிடாத மறைவிடத்தில் தடுத்து வைத்திருந்த 9000 பேருக்கும் என்ன நடந்தது. குறைந்த பட்சம் அவர்களுடைய விபரங்களையாவது அவர்களுடைய குடும்பத்தினருக்கு இந்த அரசாங்கத்தினால் வெளிப்படுத்த முடியவில்லை? அதாவது அவர்கள் இருக்கிறார்களா இல்லையா என்றுகூட குடும்பத்தினருக்குத் தெரியவில்லை.

பதினாறாவது கடத்தல் சம்பவமாக இடம்பெற்ற இரண்டு 16 வயதுடைய பெண்பிள்ளைகள் கடந்த 11 ஆம் திகதி கடத்தப்பட்டமை “அவசரகால ஒழுங்குவிதிகள்’ என்ற இப்பிரகடனம் வலுவில் இருந்தபோதே என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். பாலதோட்ட என்ற இடத்தில் இவ்விரண்டு பெண் பிள்ளைகளும் தங்களது ரியூசன் வகுப்பிற்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த போதே இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. அதிர்ஷ்டவசமாக களுத்துறைப் பொலிஸார் இரண்டு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர். கடந்த 13.10.2010 அன்று அருளானந்தம் ஜீவா (வயது 18), செபஸ்ரியாம்பிள்ளை ஜெனிற்றா (வயது 13) ஆகிய இருவரும் செம்பியன் பற்றில் உள்ள தங்கள் வீட்டுக்குச் செல்வதற்காக பஸ் தரிப்பிடத்தில் நின்றபோது கடத்தப்பட்டுள்ளார்கள். செம்பியன் பற்று அமெரிக்க மிஷன் தமிழ்க்கலவன் பாடசாலை மாணவிகளான இவர்கள் வெள்ளைவானில் வந்த நபர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்கள். ஏறக்குறைய மூன்று வாரங்களுக்கு முன்னர் ஒரு நாள் அதிகாலை 4.30 மணியளவில் திருமணமான தமிழ்ப் பெண் ஒருவர் இரண்டு இராணுவத்தினரால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுள்ளார்.

6000 பேர்வரையில் உள்ளடக்கிய ஏறக்குறைய 1200 குடும்பங்கள் சம்பூரிலிருந்து வெளியேற்றப்பட்டு அப்பிரதேசம் உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இந்த 6000 பேரும் கடந்த 5 வருடங்களாக முகாம்களிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த 6000 பேரையும் வெளியேற்றிய பின் 10 ஏக்கர் பரப்புக் கொண்ட பகுதியை உயர்பாதுகாப்பு வலயமாக பிரகடனம் செய்த அரசு அங்கு மக்களை மீளக் குடியமர அனுமதிக்கவில்லை. இதன் விளைவாக நான்கு கிராமங்களில் வாழும் இம் மக்கள் தங்களுடைய சொந்த இடங்களுக்குச் செல்ல முடியாது கஷ்டப்படுகின்றனர். சம்பூர், கூனித்தீவு, சரளைக்குடா, சம்புகனி ஆகிய நான்கு இடங்களில் வசிக்கும் மக்களே சம்பூரிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் என்பதுடன் அவர்கள் மீளச் சென்று தங்கள் இருப்பிடங்களைப் பார்ப்பதற்குக் கூட அனுமதிக்கப்படவில்லை. இந்த 6000 பேர்களையும் மீளச்சென்று அவர்களது சொந்த இடங்களில் குடியமர இவ் அரசாங்கம் எப்போதுதான் அனுமதிக்கும்? ஒருவருடைய சொந்த நிலத்திலிருந்து அவரை வாழவிடாமல் தடுப்பது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும்.

நிவித்திகல குக்குல தோட்டத்தில் இந்தியத் தொழிலாளர்கள் வீடுகளில் நித்திரையில் இருந்த வேளையில் சிங்களவர்கள் அவர்களுடைய வீடுகளுக்கு தீயிட்டபோது பாதிக்கப்பட்டவர்கள் பற்றைக் காடுகளில் மறைந்தே தங்கள் உயிர்களைக் காப்பாற்றிக் கொண்டனர். இந்தப் பயங்கரத்தால் இன்னும் தங்களது சொந்த இடங்களுக்குச் செல்ல முடியாத நிலையிலேயே இவர்கள் உள்ளனர். இது தொடர்பில் இந்த அரசாங்கம் ஏதாவது நடவடிக்கை எடுக்குமா? பொலிஸார் கூட முறைப்பாடுகளை ஏற்க மறுத்துவிட்டதாகவே தெரிய வருகின்றது.

அண்மையில் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த இராணுவ மேஜர் ஒருவர் ஒரு தமிழ் வர்த்தகரிடம் கப்பம் பெற்றபோது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் பொலிஸாரும் கூடவே நகைக்கடைகளுக்குச் சென்று களவாடப்பட்ட நகைகளைப் பரிசோதிப்பது போல பாசாங்கு செய்து நகைகளை எடுத்துச் செல்கின்றனர்.உலகப் பிரசித்திபெற்ற நெல்சன் மண்டேலா, பேராயர் டுட்டோ ஆகியோர் இலங்கை இனப்பிரச்சினையைப் பற்றிக் கருத்துக் கூறும்போது இது ஒரு சர்வதேசப் பிரச்சினையாகவே உருவெடுத்துள்ளது எனத் தெரிவித்துள்ளனர். சர்வதேச சட்ட நிபுணர்கள் கூட இலங்கையில் அமுலில் இருக்கும் இந்த அவசரகால விதிகளை விமர்சித்துள்ளனர்.

எங்களுக்கு உண்மையிலேயே தேவையானது தகுந்த முறையில் சட்டமும் ஒழுங்கும் நடைமுறைப் படுத்தப்படுதலே ஆகும். ஆனால் அது இப்போது இல்லை. மாறாக தேவையற்ற அவசரகால ஒழுங்கு விதிகளே முக்கிய இடம் வகிக்கின்றது.யாழ்ப்பாணம், திருகோணமலை ஆகிய இடங்களில் படையினரும் படைகளில் இருந்து தப்பியோடியவர்களும் குற்றச் செயல்களில் ஈடுபடும்போது அவர்களைப் பொலிஸார் விசாரிப்பது இல்லை. திருகோணமலையில் 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழ்மக்கள் விடுதலைப் புலிகளைச் சார்ந்த ஒரு குழுவினர் டொமினிக் என்ற நபருடைய வீட்டுக்குச் சென்று அவரைக் கைதுசெய்து கஸ்டம்ஸ் வீதி திருகோணமலையிலுள்ள தங்களது அலுவலகத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர். அதன்பின்னர் டொமினிக் தான் திருகோணமலையில் உள்ள கஸ்டம்ஸ் வீதியில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக தனது மனைவிக்கு தொலைபேசியில் தெரிவித்திருந்தார். இத்தகவல் எனக்குத் தெரிவிக்கப்பட்டதையடுத்து நான் திருகோணமலை பிரதிப் பொலிஸ்மா அதிபரைச் சென்று சந்தித்து இது தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டுமெனக்கூறி கடிதமும் கொடுத்திருந்தேன். ஆனால் இதுவரையில் போதுமான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அடுத்ததாக இராணுவ உளவுப் பிரிவைச் சேர்ந்தவர் என்று சுய அறிமுகம் செய்துகொண்ட மேஜர் மதியழகன் என்ற ஒருவரது நடவடிக்கைகள் பற்றி இந்த சபையில் குறிப்பிட விரும்புகின்றேன். கடந்த யூலை மாதம் நடுப்பகுதியளவில் எழிலன் என்று அழைக்கப்பட்ட சின்னத்துரை சசிதரனுடைய மனைவியும் கிளிநொச்சிக் கச்சேரியில் பணிபுரிபவருமாகிய திருமதி ஆனந்தி தனது கணவரைப் பற்றியும் அவர் இருக்கும் இடம் பற்றியும் அறிந்து கொள்ள உதவுமாறு கோரி எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். எழிலன் என்பவர் இராணுவத்தினரிடம் சரணடைந்ததாகவும் இராணுவத்தால் தடுத்து வைத்து விசாரிக்கப்படுவதாகவும் செய்தி வெளிவந்த தமிழ்ப் பத்திரிகை ஒன்றின் பிரதியையும் அனுப்பியிருந்தார்.

இது தொடர்பில் எழிலன் என்பவர் தொடர்பாகவும் அவர் தற்போது தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இடம் தொடர்பாகவும் விசாரித்து திருமதி ஆனந்தி என்பவரால் எனக்கு அனுப்பப்பட்டிருந்த கடிதத்தின் பிரதியையும் இணைத்து கடந்த யூலை 18 ஆம் திகதி பயங்கரவாத விசாரணைப்பிரிவு பணிப்பாளருக்கு நான் கடிதம் எழுதியிருந்தேன். ஏறக்குறைய ஒன்றரை மாதங்களின் பின் ஒருநாள் காலை நான் சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்தபோது எனக்குத் தொலைபேசி மூலமாக அழைத்த ஒருவர் தான் மேஜர் மதியழகன் என தன்னை சுய அறிமுகம் செய்துகொண்டதுடன் எழிலன் என்பவர் தொடர்பாக நான் பயங்கரவாத விசாரணைப் பிரிவு பணிப்பாளருக்கு அனுப்பிய கடிதம் தனக்குக் கிடைத்துள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

மேலும் எழிலன் என்பவரும் சுதா மாஸ்டர் என்பவரும் தங்களுடன் உள்ளதாகவும் அவர்களை விடுவிப்பதற்கு பணம் கொடுக்க வேண்டுமென தான் எழிலனுடைய மனைவிக்கும் சுதா மாஸ்டருடைய தாயாருக்கும் அறிவித்துள்ளதாகவும் கூறியிருந்தார். திருமதி எழிலனுடைய தொலைபேசி இலக்கத்தை எனக்குத் தந்ததுடன் குறிப்பிட்ட இருவரும் உயிருடன் உள்ளதாக இவர்களுக்கு தெரிவிக்குமாறு என்னையும் கேட்டிருந்தார்.

நான் யாழ்ப்பாணம் செல்லும்போது இச்செய்தியை திருமதி எழிலனுக்கும் சுதா மாஸ்டருடைய தயாருக்கும் தெரிவித்திருந்தேன். அதன் பின்னர் மேஜர் மகியழகன் என்னும் இவர் அடிக்கடி என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டிருந்தார். திருமதி எழிலன் தனது கணவரை தன்னுடன் கதைப்பதற்கு ஏற்பாடு செய்யுமாறு, மேஜர் மதியழகன் என்று சொல்லப்படும் இவரிடம் கூறுமாறு என்னைக் கேட்டிருந்தார். இதன்பின்னர் மேஜர் மதியழகன் என்று சொல்லப்பட்டவர் தொலைபேசியில் அழைத்தபோது இச்செய்தியை அவருக்குத் தெரிவித்திருந்தேன். அப்போது இது தனக்குப் பிரச்சினையாக முடியும் என்றும் தேவையெனின் தான் அவர்களுடன் கதைப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

ஒருநாள் நான் கோப்பாயில் இருந்தபோது இவர் எனக்குத் தொலைபேசியில் அழைத்து தான் சுதா மாஸ்டருடன் இருப்பதாகவும் அவர் என்னுடன் பேச விரும்புவதாகவும் கூறினார். ஐந்து நிமிடங்கள் கழித்து மீண்டும் அதே இலக்கத்தில் இருந்து அழைத்த ஒருவர் தான் சுதா மாஸ்டர் என்றும் தெரியாத ஓர் இடத்தில் தடுத்துவைக்கப்பட்டிருக்கிறேன் என்றும் தனது மனைவியும் பிள்ளைகளும் ஒவ்வொரு மாதமும் தன்னைப் பார்ப்பதற்கு அழைத்து வரப்படுகிறார்கள் என்று கூறியதுடன் தன்னை விடுவிப்பதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு தனது தாயாருக்கும் வெளிநாட்டிலுள்ள சகோதரர்களுக்கும் அறிவிக்குமாறும் என்னைக் கேட்டிருந்தார். மேஜர் மகியழகன் என்று சொல்லப்பட்ட இவருக்குப் பணம் கொடுக்குமாறும் திருமதி எழிலனுக்கோ அல்லது யாருக்குமோ ஒருபோதும் நான் கூறியிருக்கவில்லை.

கடந்த ஒக்டோபர் 29 ஆம் திகதி சண்டிலிப்பாயைச் சேர்ந்த என்.பஞ்சாட்சரலிங்கம் என்னும் ஒருவர் என்னிடம் வந்து தனது மைத்துனர் நடராசா நிதர்சன் என்பவரைப் பற்றிக் கதைத்தார். அப்போது வரணியைச் சேர்ந்த இந் நடராசா நிதர்சன் 2008 ஆம் ஆண்டு யூலை 14 ஆம் திகதி ஓமந்தையில் வைத்துப் படையினரால் கைது செய்யப்பட்டிருந்தார் எனத் தெரிவித்ததுடன் அவருடைய விபரங்களை அறிவதற்கு எவ்வாறாயினும் உதவுமாறு கேட்டிருந்தார்.

கடந்த நவம்பர் 3 ஆம் திகதி மேஜர் மதியழகன் என்பவர் எனக்குத் தொலைபேசியில் அழைத்தபோது நான் இந் நடராசா நிதர்சன் தொடர்பாகக் கேட்டிருந்தேன். 5 நிமிடங்கள் கழித்து மீண்டும் தொடர்பு கொண்ட மதியழகன் இந் நிதர்சன் வரணியைச் சேர்ந்தவர் என்றும் தங்களிடம் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார் என்று கூறியதுடன் நிதர்சனுடைய பெற்றோரைத் தன்னுடன் தொடர்பு கொள்ளும்படி என்னைக் கேட்டிருந்தார். இதனையடுத்து நான் என்னிடம் உதவிகோரிவந்த என்.பஞ்சாட்சரலிங்கம் என்பவருக்கு இவற்றைத் தெரிவித்திருந்தேன். உண்மையில் இதுவே நடந்தது.

கடந்த நவம்பர் 5 ஆம் திகதி பஞ்சாட்சரம் வவுனியாவில் இருந்து எனக்குத் தொலைபேசியில் அழைத்து, மேஜர் மதியழகன் என்று சொல்லப்படுபவரால் அனுப்பிவைக்கப்பட்ட ஒரு நபரிடம் தான் ரூபா மூன்றரை இலட்சம் பணம் கொடுத்ததாகவும் அதன்பின் மேஜர் மதியழகன் தன்னை ஏசியதுடன் இது தொடர்பாக பொலிஸாருக்கு அறிவிக்கக்கூடாது எனப் பயமுறுத்தியதுடன் யாழ்ப்பாணம் போகுமாறு கூறியதாகவும் தெரிவித்தார். நான் இது தொடர்பாக உடனடியாக வவுனியாப் பொலிஸாருக்கு தொலைபேசியில் அறிவித்ததுடன், வவுனியாப் பொலிஸுக்குச் சென்று முறைப்பாடு கொடுக்குமாறு பஞ்சாட்சரலிங்கத்தை அறிவுறுத்தியிருந்தேன்.

எனது அறிவுறுத்தலுக்கு அமைய பஞ்சாட்சரலிங்கம் வவுனியாப் பொலிஸில் முறைப்பாடு கொடுத்திருந்தார். தொடர்ந்து நானும் இது தொடர்பில் நடந்தவற்றை விளக்கி வவுனியாப் பொலிசிற்கு வாக்குமூலம் அளித்திருந்தேன்கடந்த நவம்பர் 6 ஆம் திகதி இது தொடர்பாக இராணுவத் தளபதிக்கு ஒரு முறையீட்டுக் கடிதம் அனுப்பியிருந்தேன். ஹன்சாட்டில் உள்ளடக்குவதற்காக அக்கடிதத்தின் பிரதியை இங்கு நான் சமர்ப்பிக்கின்றேன்திருகோணமலை கன்னியாவில் இருக்கும் மாரி அம்மன் கோவிலுக்குச் சொந்தமான சுடு தண்ணீர் கிணறுகள் இருக்கும் இடத்தை திருகோணமலை அரசாங்க அதிபர் ஒரு பௌத்த கோவிலுக்கு தாரைவார்த்துக் கொடுத்துள்ளார்.மேலும் இந்த அவசரகால விதிகளின் தாக்கத்தால் சிறைகளில் வாடும் அப்பாவித் தமிழ் இளைஞர்களை விடுவிக்க வேண்டுமென்று இந்த அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கின்றேன்.

tamilthai.com

இவர்களைப்பற்றிய உண்மை தெரியவேண்டும் என்றால், நாம் எல்லோரும் மார்கழி 15க்கு முன்னர் ஒரு கடிதத்தை ஐ. நா. குழுவுக்கு அனுப்பி வைத்தல் வேண்டும்.

Let us control the controllable!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.