Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நவீன தமிழ் இலக்கிய மேதை தருமு சிவராம்

Featured Replies

புதுக்கவிதை முன்னோடிகளுள் முக்கியமான ஒருவராகக் கருதப்படும் தருமு சிவராம், தமிழ்ச் சமூகம் கொண்டாடிப் பெருமிதம் கொள்ளவேண்டிய நவீன கவிஞர்.

இரண்டாயிரம் ஆண்டு பாரம்பரியமிக்க தமிழ் மரபிலக்கிய பரிச்சயமும், உலக இலக்கிய அடிப்படைகளை உள்வாங்கிய பார்வையும், தனக்கே உரிய மேதைத்துவமும் கலந்த இரசவாதத்தில் வெளிப்பட்ட உன்னதப் படைப்பாளி.

"படிமக் கவிஞர்" என்றும், "ஆன்மிகக் கவிஞர்" என்றும் சிறப்பிக்கப்பட்டவர்.

இலங்கையிலுள்ள திரிகோணமலையில், 1939ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி பிறந்தார்.

அறுபதுகளின் இறுதியில் தமிழகத்துக்கு வந்து தமிழ் எழுத்தாளராகவே அறியப்பட்டார்.

- கண்ணாடியுள்ளிருந்து

- கைப்பிடியளவு கடல்

- மேல்நோக்கிய பயணம்

- தமிழின் பின் நவீனத்துவம்

- வானமற்றவெளி

- ஸ்ரீலங்காவின் தேசியத் தற்கொலைகள்

- விமர்சன ஊழல்கள்

- நட்சத்திரவாசிகள்

- இலங்காபுரி இராஜா

- பிரசன்னம்

- காடன் கண்டது

- பாறை

- நீலம்

- கோடரி

- கருடனூர் ரிப்போர்ட்

- சந்திப்பு

- ஆயி

- மீறல்

முதலிய கவிதை, கட்டுரைத் தொகுதிகள், குறு நாவல்கள், சிறுகதைகள் எனப் பல படைப்புகளுக்குச் சொந்தக்காரர்.

ஆங்கிலத்தில் வெளியான "தமிழ்ச் சிறுகதைகள்" என்ற நூலில் இவரின் "சந்திப்பு" சிறுகதை சேர்க்கப்பட்டபோது அந்தக் கதைதான் மிகச் சிறப்பானது என்று "இந்தியன் எக்ஸ்பிரஸின்" புதுதில்லி பதிப்புக் கூறிற்று.

இலங்காபுரி இராஜா - இலங்கைப் பிரச்னையை மையமாக வைத்துப் படைக்கப்பட்ட உருவக நாவல். அர்ஜுனன் கண்ட விஸ்வரூப தரிசனத்துக்கு ஒப்பான ஒரு சத்திய தரிசனம் என்று பாராட்டப்பட்டது.

பிரசன்னம் - இந்தக் குறுநாவலின் தாக்கத்தின் மறுவினைதான் சுந்தர இராமசாமியின் நாவலான "ஜே.ஜே. சில குறிப்புகள்" என்பது.

இரண்டு நாவல்களையும் உள்வாங்கியவர்களுக்கு இது விளங்கும்.

சிவராம் சிறந்த கோட்டோவியரும் கூட. ஆனால், சில வெளிப்பாடுகளை மட்டுமே முன் வைத்தார். இவருள் இருந்த ஓவியனை இவர் பொருட்படுத்தாமைக்குக் காரணம், இவருடைய தீவிரமான தேடல், இலக்கியம் சார்ந்தே இருந்ததுதான்.

நிலையாக ஒரு பெயரைப் பின்பற்றாமல்

- பிரமிள்

- பானுசந்திரன்

- ஒளரூப் சிவராம்

என்று வெவ்வேறு பெயர்களில் எழுதிவந்தார்.

எண்கணிதவியலில் இவருக்கு இருந்த ருசி, தன் பெயரை முன்வைத்து பரிசோதனைகளை நிகழ்த்திப் பார்த்தது.

சி.சு.செல்லப்பாவால் நடத்தப்பட்ட "எழுத்து" பத்திரிகை இயக்கத்தின் மூலம் 1960இல் கவிஞராக அறிமுகமாகி, உக்கிரமான படைப்பு மற்றும் விமர்சன சக்தியாகச் செயல்பட்டார்.

இவருடைய கவிதைகளில் மிகுந்து காணப்படும் படிம அழகியல் இவரை "படிமக் கவிஞராக" ஆக்கியது.தொடக்கத்தில் தனது கவிதைகளில் ந.பிச்சமூர்த்தியின் உருவத்தை ஏற்ற தருமு சிவராம், உள்ளடக்கத்தில் பாரதி, புதுமைப்பித்தன், தி.சோ.வேணுகோபாலன் ஆகியோரின் உத்வேகத்தையே அடையாளப்படுத்தினார்.

"பெளதீக யதார்த்தத்தை மீறிய நிதர்சனங்களைப் பற்றிய விசாரமயமான பிரமிப்புகளின் வெளிப்பாடுகளே கவிதைகள்'' என்று கூறும் தருமு சிவராம், கவிதையின் இயல்பான தோற்றத்தையும், அதன் மூலசக்தியையும் தன் கவித்துவ தரிசனத்தால் கண்டு சொன்னவர்.

ஆரம்பக் கல்விச் சான்றிதழ்கூட இல்லாத தருமு சிவராம், தமிழின் மாமேதை என்று தி.ஜானகிராமனாலும், உரைநடையின் அதிகபட்ச சாத்தியத்தை நிறைவேற்றியவர் என்று சி.சு.செல்லப்பாவாலும் பாராட்டப்பட்டவர்.

இளம் வயதிலேயே மெளனியின் கதைத் தொகுப்புக்கு இவர் எழுதிய முன்னுரை இன்றுவரையும் மெளனி பற்றி மிகச் சிறந்த கட்டுரைப் பொக்கிஷமாக தனித்திருக்கிறது.

"கவிதைக் கோட்பாடுகளும் பாரதி கலையும்" என்ற தலைப்பில் இவர் எழுதிய கட்டுரை, பாரதியை மதிப்பீடு செய்து வெளிவந்தவைகளில் அபூர்வமானது என்று தமிழ்கூறும் நல்லுலகம் பாராட்டியது.

இவரது ஆங்கிலக் கவிதைகளும், கட்டுரைகளும் புகழ்பெற்றவை. இவரது எழுத்துகளை வெளியிடும் பாக்கியத்தைப் பெறுவதற்காகவே சில பதிப்பகங்களும், பத்திரிகைகளும் தொடங்கப்பட்டன என்பது உண்மை. (உ-ம்) மணி பதிப்பகம், யாத்ரா இதழ்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி இளம் எழுத்தாளர்கள் சங்கத்திலும், கேரளத்தில் உள்ள சம்ஸ்கிருதக் கல்லூரியில் நடந்த தென்மொழிக் கவிஞர்கள் சம்மேளனத்திலும் இவருடைய கட்டுரைகள் வாசிக்கப்பட்டன.

மைசூரிலிருந்து வெளிவரும் ஆங்கிலப் பத்திரிகை இவரது கட்டுரைகளைக் கேட்டுவாங்கிப் பிரசுரித்தது. நியூயார்க் விளக்கு அமைப்பு "புதுமைப்பித்தன்" விருதை இவருக்கு அளித்தது.

தமிழின் மகத்தான படைப்புக்குரல் இவருடையது. தமிழில் கவிதை விமர்சனத்துறை வளரவில்லை என்ற வசை இவரால் ஒழிந்தது. நவீன தமிழ் இலக்கியப் படைப்புகளை, கருத்தாக்க அடிப்படையில் அணுகி, தரநிர்ணயம் செய்வதில் தாட்சண்யம் காட்டாத விமர்சகர் இவர். இவருடைய விமர்சன வீச்சால் நவீன தமிழ் இலக்கிய மதிப்பீடுகளில் மாற்றங்கள் நிகழ்ந்தன.

கவிதைக் கோட்பாடுகள், அடிப்படைகள், உத்திகள் பற்றிப் பல விஷயங்களை ஆழமாகப் பேசும் கட்டுரைகளை சிவராம் படைத்தார். கவிதை நூல்களுக்கு இவர் எழுதிய முன்னுரைகளில்கூட கவிதை பற்றிய ஆழ்ந்த புரிதல்களைக் காணமுடியும். கவிதைகளை அணுகும் முறைகளைக் கற்றுத்தந்த நவீன ஆசான் என்றுகூட இவரைச் சொல்லலாம்.

கட்சி சார்ந்தோ, கொள்கை சார்ந்தோ இயங்காமல் சுயமான கோட்பாடுகளை, பார்வைகளை உருவாக்கிய விமர்சகர் என்று தமிழில் இவரையே குறிப்பிடவேண்டும்.

அமெரிக்கப் புதுத் திறனாய்வு முறையில் ஒன்றாக கவிதையின் ஒவ்வொரு சொல்லையும் நுட்பமாக ஆராய்ந்து, கவிதையை நிறுவும் கட்டுரைகளையும் எழுதினார். கவிதை பற்றிய கட்டுரைகள் அடங்கிய இவரது நூல்கள் தமிழ் இலக்கியத்தில் கவிதை பற்றிய வேத நூலாகப் போற்றப்படவேண்டியவை.

தருமு சிவராம் எந்த ஒரு காலத்திலும், எந்த ஒரு சூழ்நிலையிலும் கலை, இலக்கிய நிறுவனங்களின் வாசற்படிகளில் மழைக்காகக்கூட ஒதுங்கியதில்லை. அதிகாரப் பிரதிநிதிகளுடன் உறவு வைத்துக்கொள்ள விரும்பாத இவருடைய வைராக்கியம் போற்றுதலுக்குரியது. இலக்கியத்துக்காக அளிக்கும் விருதுகளை தமிழகத்தைப் பொறுத்தவரை நுண் இலக்கிய போக்குக்குப் புறம்பானவையாகவே உள்ளது என்று கூறினார்.

ஒரு பேட்டியில், தலித் பற்றி அவரிடம் கேட்டபோது, நீயா - நானா, எனக்கா - உனக்கா? என்றால், "நீ என்றும், உனக்கு என்றும் கொள்ளும் பிரக்ஞையே உன்னதம்" என்று தன் வழியில் நின்று அவர் கூறிய விளக்கம், மேன்மையான மனிதன் குறித்த பொன்மொழியாகும்.

சமரசமற்ற எழுத்துகள் இவருடையவை. இவரை யாராலும் இனம் காண முடியவில்லை.

யோகிராம் சுரத்குமார், ஜே.கிருஷ்ணமூர்த்தியின் அகமனிதன் விடுதலை குறித்த சிந்தனைகளினூடே தன்னை இனம் கண்டவர் சிவராம். இலக்கியத்தைவிட ஆன்மிக வாழ்வுக்கே முக்கியத்துவம் அளித்தவர். ஆனால், தனித்தன்மை இருந்ததால், இலக்கியத்தில் அதைத் தொடர்ந்து பற்றியிருந்தார். வாழ்நாள் முழுவதும் இலக்கியத்தையே உயிர்மூச்சாகக்கொண்டு வாழ்ந்த சிவராம், ஓர் இலக்கிய - ஆன்மிகவாதியாக மிளிர்ந்தார்.

ஓயாத சிந்தனையின் காரணமாக மூளையில் இரத்த அடைப்பு ஏற்பட்டு, உடலின் வலது பக்கம் செயலிழந்து ஒருமாதத்துக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இவர், 1997ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் தேதி காலமானார்.

எந்த இடத்தைச் சார்ந்த எந்தப் படைப்பாளியாலும் நவீன தமிழ் இலக்கிய உன்னதம் குறித்து கவனம் கொள்ளும்போது தருமு சிவராமைத் தவிர்த்துவிடுவது சாத்தியமில்லை என்பதே நவீன தமிழ் இலக்கிய வரலாறாகும்.

சிறகிலிருந்து பிரிந்த

இறகு ஒன்று

காற்றின் தீராப் பக்கங்களில்

ஒரு பறவையின்

வாழ்வை

எழுதிச் செல்கிறது.

இது தருமு சிவராமின் தலைசிறந்த கவிதைகளுள் ஒன்று என்பது மட்டுமல்ல, தமிழின் தலைசிறந்த நவீன கவிதைகளில் ஒன்றும்கூட.

புதுகை.கனகராஜ்

நன்றி:- தினமணி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.